Sunday, May 8, 2016

ராஜாவின் பல பரிமாணம் 22/02/2016

கவுதம் மேனன் ராஜாவுடன் நிகழ்த்திய உரையாடல் முக்கியமான ஒரு ஊடக தருணம். என்னை போன்ற ஆள் இதைவிட சிறப்பான உரையாடலை நிகழ்த்த முடியும் என்றாலும், வேறு எந்த பிரபலமாக இருந்தாலும் அச்சு பிச்சுத்தனமும் அசட்டு மரியாதையும் வெற்று ஜால்ராவும் கலந்து சொதப்பியிருப்பார்கள். 
உரையாடலின் ஒரு இடத்தில், ராஜாவின் எல்லா பாடல்களின் பல்லவியிலும், முதல் இரண்டு வரிகள் ஒரே தளத்திலும், மூன்றாவது வரி முற்றிலும் வேறு ஒரு தளத்திலும் பயணிப்பதை குறிப்பிட்டு கவுதம் கேட்கிறார். உதாரணங்களாக எல்லா பாடல்களுமே இருந்தாலும், அவர் 'சுந்தரி கண்ணால் ஒரு சேதி..' போன்ற பாடலின், "நான் உனை நீங்க மாட்டேன்' என்ற இடத்தை குறிப்பிடுகிறார். ஆனால் இந்த பண்பு பல்லவிக்கு மட்டுமானதல்ல; சரணத்தை எடுத்துக் கொண்டால் அது சுமார் மூன்று - சில பாடல்களில் நான்கு தளங்களாக - ஒவ்வொன்றும் முன்னதற்கு செங்குத்தாகவும், அதே நேரம் வேறுபட்டு ஒலிக்காமல் அதன் தொடர்ச்சியாகவும் இருக்கும் விந்தையை காணலாம். இதெல்லாம் இன்று பால பாடம் என்றாலும், உயர் படிப்புக்கு போகும் முன் இதை பேச வேண்டியுள்ளது.
உதாரணமாக, இளையராஜா சிலாகிக்கும் 'மாலை பொழுதின் மயக்கத்திலே..' என்ற க்ளாசிக் பாட்டையே எடுப்போம். பல்லவியில் வரும் 'மனதில் இருந்தும் வார்த்தைகள் இல்லை' என்ற அடுத்த வரியின் இசையும், அதன் நீட்சியான அனுபல்லவியின் 'இன்பம் சில நாள் துன்பம் சில நாள்' என்ற வரியின் இசையும், இயல்பான தொடர்ச்சியாக அதே தளத்தில் இருப்பதை உணரலாம். சரணத்தில் 'கனவினில் வந்தவர் யாரென கேட்டேன்..' என்ற வரிக்கு இணையான தளத்திலேயே 'கணவர் என்றால் அவர் கனவு முடிந்தபின்..' என்று அழகாக நீண்டு, 'இளமை எல்லாம் வெறும் கனவு மயம்..' என்று அதே தளத்தில் வேறுபட்டு, 'தெளிவும் அறியாது முடிவும் தெரியாது..' என்று பின் இணையாகவே கீழிறங்கி அதே தளத்திலேயே பல்லவியுடன் சேர்கிறது. 
ஒப்பிலா க்ளாசிக்கான 'கண்கள் எங்கே?' பாடலை எடுக்கலாம். 'கால்கள் இங்கே…' என்கிற அனுபல்லவி வரி 'கண்கள் எங்கே' என்ற முதல் வரியுடன் இணைந்து அதே தளத்தின் தொடர்ச்சியாகவே உள்ளது. சரணத்தில் 'மணி கொண்ட கரம் ஒன்று..' என்ற வரியின் அதே தளத்திலேயே, ஆனால் சற்று மேடேறி ' மலர் போன்ற இதழ் ஒன்று..' என்று தொடர்ந்து, பின் 'துணை கொள்ள அவனின்றி தனியாக..' என்று அதே பாதையில் சற்று விலகி, 'துயிலாத பெண்மைக்கு ஏன் இந்த மயக்கம்' என்று எல்லா வரிகளின் இசையும் ஒரே தளத்தில் இருப்பதை கேட்டு அறியலாம். 
இதை குறையாக சொல்லவில்லை; பாடலின் தொடர்ச்சி அப்படி இருப்பதுதான் நியாயம்; அப்படித்தான் பாரம்பரியமாகவும், திரையிசையிலும் எல்லோரும் தந்திருக்கிறார்கள். ஆனால் அந்த நியாய ஒழுங்கை உடைத்து, சிதறலான ஒரு பிரபஞ்ச ஒழுங்கை, ஒரு நான்கு நிமிடப் பாடலில் ராஜா உருவாக்குகிறார். அது குறித்து போகும் முன், இன்னொரு மொக்கை உதாரணத்தை பார்ப்போம். 'என்னவளே..' என்ற ரஹ்மானின் பாடல். 'என்னவளே என்னவளே..' என்ற முதல் வரி, 'எந்த இடம் தொலைத்த இடம்..' 'உந்தன் கால் கொலுசில்..' "காதல் என்றால்.." என்ற அனுபல்லவி " எந்தன் கழுத்துவரை'' என்று முக்கால் நிமிடம் நீளும் பல்லவி முழுக்க, முதல் வரியின் எளிய manipulaltionகளாக இருப்பதை காணலாம். சரணம் இன்னும் எளிமையாக பல்லவியில் இருந்து கூட வேறு தளத்திற்கு போகாத elementary manipulations. பாடல் இனிமையாக இருப்பதும், பலரை கவர்ந்து பிரபலமாவதும் முற்றிலும் வேறு விஷயம். எனக்கு அன்று பிடித்தாலும் இன்று அலுத்து விட்டதால் மொக்கை என்றேன்; மற்றபடி வெறுப்பால் இதை சொல்வதாக நினைப்பவர்களுக்கு மாற்று உதாரணமாக, 'மலர்களே.. மலர்களே..' என்ற பாட்டை சொல்கிறேன். அது மேலே சொன்ன எளிமைப் பண்பிற்கு மாறானதாக, ரஹ்மான் பல்வேறு விளையாட்டுகளை செய்யும் பிரமாதமான பாடலாக உள்ளதை அறியலாம். ஆனால் இவை போன்ற உதாரணங்கள் விதிவிலக்கான சிலதாக இருப்பதுடன், இதற்கு பின்னால் நமக்கு நன்றாக தெரிந்த மெனக்கிட்ட நீண்ட உழைப்பும் உள்ளது. 
ராஜாவின் பாடல்களை எடுத்துக் கொண்டால், கிட்டத்தட்ட எல்லா பாடல்களும் பல்லவிக்குள்ளும், சரணத்திலும் பல ஒன்றுக்கு ஒன்று செங்குத்தான தளங்களில், எந்த நெருடலும் இல்லாத ஒரு மாயத் தொடர்சியுடன் பயணிப்பதை காணலாம். கவுதம் சொன்ன 'சுந்தரி கண்ணால் ஒரு சேதி.." "தென்றல் வந்து தீண்டும் போது..' எல்லாம் ரொம்ப ஆழமான உதாரணங்கள். சும்மாவேனும் ஒரு லேசான உதாரணமாக ஒரு சாதா ரஜினிப் பாடலை எடுப்போம். கிழே உள்ள பாடலில், 'அன்பே நீ என்ன அந்த கண்ணனோ மன்னனோ..' வுடன் சம்பந்தம் இல்லாத தளத்தில், ஆனால் நெருடாத தொடர்பு கொண்டு 'கண்கள் கவர்ந்து நிற்கும்..' என்று அடுத்த வரியில் மாறுகிறது. இது வேறு ஒரு தளம் என்று புரிய வேண்டுமானால், இந்த வரியின் மெட்டில், முற்றிலும் வேறு மாதிரி ஒலிக்கும் ஒரு புதிய பாடலை எழுதிவிட முடியும் என்கிற சாத்தியத்தை பரிசீலித்துப் பார்க்கலாம்; எழுதி அதை மட்டும் பாடிப்பார்த்து, அந்த வரி இல்லாமல் இருக்கும் இந்த பாடலில் இருந்து வேறாக ஒலிப்பதை உணரலாம். சரணத்தில் 'வஞ்சிப்பெண். ஆசை கொள்ளும்…' என்ற வரி, அடுத்த தளத்திற்கு "நீங்காமல் இருப்பேன்…" என்று செல்வதை கூட இயல்பானதாக எடுத்துக் கொள்ளலாம். ஆனால் அதற்கு அடுத்து அதே தளத்தில் அதன் நீட்சியான ஒரு மெட்டுடன் அங்கிருந்து நேராக பல்லவிக்கு போவதுதான் இயல்பு; நாம் அறிந்த நியாயம். ஆனால் சம்பந்தமே இல்லாமல் "ஆசை பெருகுதய்யா..' என்று வேகமாக முற்றிலும் எதிர்பாராமல், முன்னதில் இருந்து செங்குத்தான வேறு ஒரு தளத்திற்கு சென்று அதிர்ச்சி தந்து, அநியாயமாக பல்லவியுடன் இணைவதை காணலாம்.
'தென்றலை தூது விட்டு ஒரு சேதிக்கு காத்திருந்தேன்...' போன்றதான சரணங்களை உதாரணப்படுத்தி இந்த அசாத்திய பயணத்தை இன்னும் பொருத்தமாக விளக்க முடியும்; என்றாலும் இந்த கணத்தில் தோன்றிய லேசான இந்த பாடலை முன்வைத்தும் கூட, இப்பண்பை உதாரணிக்க முடிகிறது. மற்ற அளவிட முடியாத அந்த 'நாலயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஒன்பது' உதாரணங்களில், இந்த விந்தையை தேடி கேட்டு கண்டுபிடித்து களிப்பது அவரவருக்கான இன்பம். 
ராஜாவின் பாடல்களின் முன்னிசையின், இடையிசையின் அமைப்பில் நிகழும், பல்வேறு ஒன்றுக்கு ஒன்று orthogonalஆன தளங்களை இணைக்கும், போகிற போக்கிலான விளையாட்டை பற்றி பேச இது தருணமில்லை. அதைத்தான் பிரபஞ்சக் கூத்து என்று அழைக்கிறேன்.

No comments:

Post a Comment