Sunday, May 8, 2016

மனநிலை

பரிசை நிராகரிக்க இளையராஜாவிற்கு எல்லா உரிமையும் உண்டு. அதற்கு அவர் சொன்ன காரணத்தை யாரும் ஏற்கவேண்டிய அவசியம் இல்லை; எனக்கும் அந்த காரணம் ஏற்பு இல்லை. ஆனாலும் அவர் செய்ததில் கீழ்தரமானதாக எதுவும் இல்லை; தரத்திற்கு எந்த சம்பந்தமும் இல்லாத, அவர் மனதிற்கு பட்டதை அவர் செய்திருக்கிறார். அறிவு விரோத தமிழ் மனநிலை இதற்கு வழக்கம் போல அவரை திட்ட கிளம்புவதில் ஆச்சரியம் இல்லை. அவரது அறச்சீற்றமான 'அறிவிருக்கா?'விற்கு நிகழ்ந்த எதிர்வினையே எவ்வளவு கேவலமானது, சமுகத்தின் மனவக்கிரத்தை காட்டக்கூடியது என்று இங்கே அறிவாளிகள் என்று அறியப்பட்டவர்களுக்கே புரிந்ததில்லை; அதற்கு இது பரவாயில்லைதான்.
கொஞ்ச வருடங்கள் முன்னால் ஜானகி பத்ம பூஷன் விருதை நிராகரித்தார். அதற்கு அவர் சொன்ன காரணமும் ('பாரத் ரதனா அளித்தால் வாங்குவேன்' என்று) பலருக்கு ஏற்பில்லாமல் இருக்கலாம்; சொல்லப்போனால் லதா, ஆஷா, சுசீலா அளவிற்கு மாபாடகியாக ஜானகியை ஏன் கருத முடியாது என்று தகவல் பூர்வமாக என்னால் முன்வைக்க முடியும்; மறுக்கவும் வாய்ப்புண்டு. ஆனாலும் அதுவும் அவருக்கு உரிமையுள்ள ஒரு செயல்தான். இங்கே கவனிக்க வேண்டியது, ஜானகியின் செயலுக்காக மக்கள் அவரை பாராட்டினார்கள்; ஒருவர் கூட திட்டவில்லை. அப்போதே எழுதினேன், ராஜா இதை செய்திருந்தால் தமிழ்நாட்டு அற்பங்கள் எப்படி திட்டித் தீர்த்திருப்பார்கள் என்று. இப்போது அதையே செய்கிறார்கள். இதுதான் இவர்கள் மனநிலையும் தரமும்.

ரசனை 02/05/2016

'மோகமுள்' திரைப்படம் பலருக்கு பிடித்திருந்திருக்கலாம்; ஆனால் மோகமுள்' நாவலை இருபது அருகிலான பருவத்தில் வாசித்து, பின் மீண்டும் மீண்டும் வாசித்துள்ளவர்கள், படம் பார்த்து அவஸ்தைபட்டு, அதன் கொலைபாதகத்தை உணரலாம். தமிழில் தீவிர இலக்கியவாதியாக அறியப்படும் இந்திரா பார்த்தசாரதி, ஹிந்தி மொழிமாற்று சீரியல் போன்ற படத்தை க்ளாசிக் ரேஞ்சிற்கு புகழ்ந்து 'சுபமங்களா'வில் ஒரு விமர்சனம் எழுதியிருப்பார். அது பரவாயில்லை. படத்தில் ஒரே அற்புதமான இசையை பற்றி, 'இசையை அடிநாதமாக திரைக்கதை கொண்ட படத்தில் இசை சிறப்பாக இருந்திருக்கலாம் என்பதை தவிர வேறு குறையில்லை' என்று முடித்திருப்பார். (ஞாபகத்திலிருந்து எழுதுவது.) எனக்கு இந்த தமிழ் இலக்கியவாதிகள் என்ன விதம் என்று என்றுமே வகைப்படுத்த முடிந்ததில்லை

தேர்தல் அமைப்பு -2 24/04/2016

/”அவர் ஜெயிக்க வாய்ப்பில்லையே. ஜெயிக்க வாய்ப்புள்ள வேட்பாளருக்குத்தான் போடுவோம்” என்றார்கள். நான் ”ஐயா,நீங்கள் வாக்களித்தால் அல்லவா அவர் ஜெயிக்க முடியும்?” என்றேன். “இல்லை ,இப்போதிருக்கும் வேட்பாளர் வலிமையானவர் .அவரை தோற்கடிக்கும் அளவுக்கு வலிமையானவருக்கே வாக்களிக்கவேண்டும். நாம் வாக்களிக்கும் வேட்பாளர் ஜெயிக்க வேண்டும் இல்லையென்றால் நமது வாக்கு வீணாகிவிடும்” என்றார்கள்.
ஒருமணிநேரத்துக்கு மேலாக அவர்களிடம் விவாதித்த போதும் கூட நான் நினைப்பதை அவர்கள் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஒரு சிறந்த வேட்பாளருக்கு வாக்களிப்பதுதான் வாக்காளராகிய நமது கடமை. எவ்வளவு கீழ்மகனாக இருந்தாலும் வெற்றி பெறும் ஒரு வாக்காளருக்கு நமது வாக்கை போட்டோம் என்ற நிறைவு நமக்கு ஏற்படவேண்டுமென்பது எந்த வகையிலும் ஜனநாயகத்துக்கு பொருத்தமில்லாத முற்றிலும் அசட்டுத்தனமான நம்பிக்கை. ஆனால் படித்தவர்களிடமும் இது உள்ளது./
ஜெயமோகனின் கட்டுரை வாசித்த உடனே அப்படியே எதிர்வினை செய்தேன். இப்போது சிலர் இதை மேற்கோள் காட்டியதை கண்டு மீண்டும் உடனே இந்த எதிர்வினை. 
ஜெயமோகன் அந்த 'பாமரின்' வாதத்தை அசட்டுத்தனம் என்று சொல்வது மிக விநோதமானது. உண்மையில் ஜெயமோகனும், ஜெயமோகன் சொன்னதை முன்வைப்பவர்களும் பேசுவதுதான் அசட்டுத்தனமானது; அல்லது அசட்டு லட்சியவாதம் கொண்டது. லட்சியவாதத்திற்கு ஒரு கவர்ச்சி இருப்பதால் அது அசட்டுத்தனம் இல்லை என்றாகிவிடாது. "நாம் வாக்களிக்கும் வேட்பாளர் ஜெயிக்க வேண்டும் இல்லையென்றால் நமது வாக்கு வீணாகிவிடும்” என்று சொல்வதுதான் - தேர்தல் நமக்கு தரும் வாய்ப்புகளை கணக்கில் கொண்ட - யதார்த்தத்துடன் நெருங்கிய நடைமுறை வாதமாக உள்ளது. (என் வாதம் அப்படியே இதுவல்ல.) 
தான் நினைக்கும் ஆதர்ச வேட்பாளருக்கு வாக்களிப்பதால், தான் தோற்கடிக்க நினைப்பவர் வெற்றிபெற நேர்ந்துவிடும் என்பதுதான் தேர்தல் கணக்கின் கொடூர யதார்த்தம். தான் தோற்கடிக்க நினைப்பவரை தோற்கடிக்கக் கூடிய வலுவானவர்க்கு அதனால்தான் வாக்களிக்க நினைக்கிறார்கள். பல நேரங்களில், அதுவும் குறிப்பாக இன்றய காலகட்டத்தில் தேர்தலில் வாக்களிப்பது என்பது குறிப்பிட்டவரை (குறிப்பிட்ட கட்சியை) தோற்கடிப்பதைத்தான் நோக்கமாக கொண்டுள்ளது; நாற்பது வருடங்களாக உள்ள தேர்தல் கரிசனம் தோற்கடிப்பதை மையப்படுத்தித்தான் நடக்கிறது. இது ஆரோக்கியமானது என்று சொல்ல வரவில்லை. இந்த தேர்தல் அமைப்பு வாக்காளர்களுக்கு உண்மையாக அளிக்கும் வாய்ப்பும் அதுதான். இந்த தேர்தலிலிலேயே 'லட்சியவாதமாக' யோசிக்கும் பலரின் அணுகுமுறைகளால் ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வரும் பேராபத்திற்குதான் வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது. 
வலுவானவர்களாக தோற்றமளிப்பவர்களை தவிர்த்து, வலுவற்ற நமது லட்சிய வேட்பாளருக்கு அளிக்கும் வாக்கு - தேர்தலின் உண்மையான நோக்கத்தை பொறுத்த மட்டில்- வீணாகவில்லை என்பதற்கு இவர்கள் எந்த உருப்படியான வாதத்தையும் முன்வைக்கவில்லை. ரொம்ப காலமாக சொல்லப்படும் நைந்துபோன ரொமாண்டிக்கான லட்சியவாதத்தை மட்டுமே முன்வைக்கிறார்கள். இதை 70, 80களில் முன்வைத்த துக்ளக் கூட, இப்படி அண்மைய 25 ஆண்டுகளில் பேசுவதில்லை என்பதை கவனிக்க வேண்டும். இந்த லட்சிய வாத்த்தை பொதுவில் பேசும் பலர், அதற்கு நேர்மாறாக திமுகவை தோற்கடிக்க ஜெயலலிதாவுடனோ, விஜயகாந்துடனோ சமரசம் செய்ய தயாராகா இருப்பதையும் கவனிக்க வேண்டும்.
லட்சியவாதத்தை முன்வைத்து பேசுவதில் தவறில்லை. அதற்கான நடைமுறை முகாந்திரம் நாளையோ இன்றோ கூட தோன்றலாம். ஒருவேளை ஜெயமோகனே கூட, 'இன்று நாம் நம் லட்சிய வேட்பளருக்கு வாக்களித்து ஒரு புதிய போக்கை தோற்றுவித்தால், ஒரு இருபது வருடங்களில் உண்மையான மாற்றம் நிகழும்' என்று சொன்னால் அதில் பொருளுண்டு. ஆனால் இருக்கும் சாத்தியங்களை உணர்ந்து நடைமுறைவாதியாக செயல்படுபவரை அசட்டுத்தனம் என்று வர்ணிப்பது அறிவுமல்ல, நாகரிகமும் அல்ல.

தேர்தல் அமைப்பு -1 23/04/2016


பொலமிக்ஸ்-2 07/04/2016

கிண்டலாயினும் பேரறிஞர் என்று என்னை அழைத்ததற்கு நன்றி. நான் என்னை அறிஞனாக, அறிஞனாக மட்டுமே கருதுகிறேன். நண்பரையும் நான் அறிஞராகவே (கிண்டலின்றி) கருதுவதாலேயே எதிர்வினை. 
//எழுதியதை ஒழுங்காகப் படிக்காமல் பக்கம் பக்கமாக எதிர்வினையாற்றுவது சிலருக்கு கை வந்த கலை.//
அறிஞர் நண்பர் எழுதிய ஒரு வரி மட்டுமின்றி, மற்றவர்கள் எழுதியதையும் சேர்த்து பொதுவாக எதிர்வினையாற்றியது அது. இம்முறை நண்பர் எழுதியதை நேரடியாக எதிர்கொண்டு எதிர்வினை ஆற்றினால் போச்சு!
//"தமிழக அரசியலில் யாராவது, ஒரு பார்பனரை நோக்கி 'இவர் புரோகிதம் செய்யப்போகலாம்" என்று இழிவு படுத்தும் நோக்கில் சொல்லியுள்ளார்களா" என்று ஒரு பேரறிஞர் கேட்கிறார். நான் அப்படிக் கேட்கிறார்கள் என்று எங்கே சொல்லியிருக்கிறேன்?//
அப்படி கேட்கிறார்கள் என்று நண்பர் சொன்னதாக சொல்லி நான் எங்கே கேள்வி எழுப்பியுள்ளேன்? வைகோ கலைஞரை சொன்னதை போல, அல்லது அதற்கு இணையான ஒன்றை -சாதிய நோக்கில் பார்பனர்கள் குறித்து - யாரவது சொல்லியுள்ளார்களா, அப்படி சொன்னாலும் அதில் இழிவான சாதிய மதிப்பீடு இருக்கிறதா, இருப்பது சாத்தியமா என்பது நேரடியாக தற்போதய பிரச்சனையுடன் தொடர்புள்ள ஒரு கேள்வி. கலைஞரை சாதித்தொழில் செய்யப்போகச் சொல்லி திட்டுவதைப் போல, ஒரு பிராமண சாதியை சேர்ந்த ஒருவரை திட்டுவதில்லை என்பதையும், அப்படி திட்டினாலும் கூட அதில் இழிவான மதிப்பீடு இல்லை என்பதையும் தான் சுட்டியுள்ளேன். எழுதியதை படித்தாலும், அதன் அடிப்படையான தர்க்கத்தை புரிந்து கொள்ளாமல், எதிராளியை "எழுதியதை ஒழுங்காகப் படிக்காமல் பக்கம் பக்கமாக எதிர்வினையாற்றுவதாக' சொல்வது என்ன வகை கலையோ!
//நான் சொல்வது மிகவும் எளிமையானது. தமிழகத்தில் பிராமணர் ஒருவர் எந்தத் தவறு செய்தாலும் அவரது சாதி குறித்துப் பேசுவது, திட்டுவது மிகவும் சாதாரணமானது. திட்டுபவர்களை யாரும் கண்டிப்பதில்லை. //
முதலில் இந்த கூற்றை நான் முற்றிலுமாக மறுத்துள்ளேனா என்பதை கவனிக்கவும். 'அரசியல் சார்ந்த முத்திரை', 'போலெமிகல் வசை' 'அரசியல் சார்ந்த வெறுப்பு', 'கருத்தை எதிர்கொள்ள முடியாமல் எதிர்வினையாற்றிய வசை', 'ஒத்துவாராதவர்களை எதிர்கொள்ள செய்த முத்திரை குத்தல்'' என்றெல்லாம் எதை பற்றி சொல்லியுள்ளேன்? திட்டுபவர்களை யாருமே கண்டிப்பதில்லை என்பது உண்மையா? எத்தனை பேர்கள் கண்டிக்கிறார்கள், ஏற்கிறார்கள் என்று ஒரு கணக்கு உள்ளதா? என்னளவில் நான் கண்டித்து எழுதியுள்ளேன். சாதிக்கு சம்ப்ந்தமில்லாத ஒரு மேட்டரில் சாதியை இழுத்து பேசுவது கண்டிக்கத் தக்கதுதான். அப்படி ஒரு போக்கு தமிழகத்தில் இருப்பதை ஏற்கிறேன்; எதிர்க்கிறேன். அ.மார்க்ஸ் ராஜன்குறையை, ராமானுஜத்தை திட்டியதை மட்டுமல்ல, பத்ரியை திட்டியதற்கும் என் எதிர்ப்பை தெரிவித்துள்ளேன்; நிறைய பேர்கள் தெரிவித்துள்ளனர். அத்தோடு பக்‌ஷிராஜனையும், ராஜன்குறையையும் 'மெகாலேயிஸ்ட் பார்ப்பனர்' என்று அரவிந்தன் நீலகண்டன் திட்டினாலும் நான் எதிர்க்கிறேன். ஜெயமோகன் தர்க்கம் ஒத்துழைக்காத போது, ராஜன்குறையின் ஜாதியை சுட்டி எதிர்வினையாற்றியதையும் கண்டிக்கிறேன். பெரியாரிஸ்டுகளுக்கு மட்டுமல்ல, இந்துத்வவாதிகளுக்கும், ̀காந்திய'வாதிகளுக்கும் கூட இப்படி கருத்தை பார்ப்பனராக மாற்றும் அணுகுமுறை வசதியாக உள்ளது. ஆனால் பெரியாரிஸ்ட்டுகளை பொறுத்தவரை அது கருத்தியலுடன் ஒத்து அவர்கள் காட்டும் நேர்மை; இந்துத்வவாதிகளுக்கு அது ஹிபாக்ரசி. 
ஆனால் பார்பன அடையாளம், பார்பனிய அரசியல் என்று பேசவே கூடாது என்பது ஏற்கக்கூடியது அல்ல. சோவின் 'எங்கே பிராமணன்?' நூலை இதையெல்லாம் பேசாமல் அலச முடியுமா? ஒரு எக்ஸ்ட்ரீம் உதாரணமாக இதை சொன்னேன். மற்றபடி சமூகத்தில் இருப்பதன் பிரச்சனைகளை சம்ப்ந்தத்துடன் பேசித்தான் ஆகவேண்டும்.
//ஆனால் மற்றச் சாதிகளைச் சார்ந்தவர் தவறுகள் செய்தால் அவர்கள் சாதிகள் அடையாளம் காணப்பட்டு திட்டப்படுவதில்லை. திட்டினாலும் கண்டனங்கள் உடனே வருகின்றன கலைஞர் விஷயத்திலும் அவ்வாறே நடந்தது. அவரது சாதி குறித்துப் பேசக் கூடாது என்று சொல்லப்பட்டது. .///
ஒருவேளை பிராமணர்கள் அளவுக்கு மற்றவர்கள் திட்டப்படவில்லை என்று ஒரு வருத்தம் நண்பருக்கு இருந்தால் அதில் நியாயம், இருக்கலாம். மற்றபடி கடந்த இருபது வருடங்களில் பலரது சாதியும் விலாவாரியாக பேசப்பட்டுள்ளது. தங்கர் பச்சான், கோணங்கி, எஸ்ரா, புதுமைப்பித்தன், பாலா, சசிக்குமார்… எழுதும்போது உடனடியாக வந்த உதாரணங்கள். எந்த ஜாதிக்கு உதாரணம் வேண்டுமானாலும் எடுத்துக் காட்ட முடியும். 
//பேரறிஞர் மேலும் சொல்கிறார் -"சாதிய இழிவு படுத்தலுக்கும், அரசியல் சார்ந்த சாதிய முத்திரைக்கும் வித்தியாசம் தெரியாத மட்டையடி தர்க்கம், ஒரு போலெமிக்ஸ்ஸிற்கு முகாந்திரமான இன்னொரு போலமிக்ஸ் மட்டுமே."
அப்படியா?நாதசுரத்தைப் பற்றிச் சொன்னால் அது சாதிய இழிவு படுத்தல். பூணூலை உருவிக் கொண்டு ஒரு கூட்டம் கிளம்பி விட்டது என்று கருணாந்தி சொன்னால் அது பாராட்டு.//
நான் இரண்டாவதை பாராட்டு என்றா சொல்லியுள்ளேன்? நாதஸ்வரத்தை பற்றியும், உலகின் ஆதித் தொழில் பற்றியும் சாதியமாக பேசுவதும் "பூணுலை உருவிக்கொண்டு ஒரு கூட்டம் கிளம்பி விட்டது என்று சொல்வதும் ஒன்றல்ல என்பதுதான் என் நிலைபாடு. இரண்டையும் எதிர்க்கலாம். ஆனால் இரண்டும் ஒன்றல்ல, இரண்டின் மதிப்பீட்டு சட்டகங்களும் வேறு. 
பார்ப்பனியம் என்று ஒன்று இந்த சமூகத்தில் இல்லை என்றும், அதை பற்றி பேசுபவர்கள் பெரியாரிய லூனாடிக்ஸ் என்று அறிஞர் நினைக்கலாம். ஆனால் பார்ப்பனியம் என்கிற ஒரு மானிட விரோத பண்பும், அது சார்ந்த அரசியலும் இருப்பதாக சிலர் நினைக்கலாம்; அப்படி நினைப்பவர்கள் அதை எதிர்த்து செயல்படும் அரசியலுக்கான ஒரு சாத்தியம் உள்ளது என்பதையாவது அறிஞர் ஏற்கவேண்டும். அந்த அரசியல் நியாயமான பல எதிர்ப்புகளையும் செய்யலாம்; பல தனிப்பட்ட வெறுப்புகளையும் அது சார்ந்த வசைகளையும் - எல்லா எதிர்ப்பு அரசியல்களையும் போலவே - உருவாக்கவும் சாத்தியம் உள்ளது. ""பூணுலை உருவிக்கொண்டு ஒரு கூட்டம் கிளம்பி விட்டது" என்று சொல்வது இந்த இரண்டின் வெளிபாடாகவும் இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம் என்பது என் பார்வை. உதாரணமாக திமுக ஆட்சியின் ஊழலை விமர்சிக்கும் போது அப்படி சொன்னால் அது இரண்டாவதன் வெளிபாடு; கலைஞர் ராமானுஜன் டீவி தொடர் எழுதுவதற்கு ஒரு கூட்டம் திட்டுவதையும், நக்கல் அடிப்பதையும் முன்வைத்து சொன்னால் முதலாவதன் வெளிபாடு. இந்த இரண்டு வகை வெளிபாடுகளும், ஜாதித்தொழிலை முன்வைத்து ஒருவரை திட்டுவதும் நிச்சயம் ஒரே தரமானது அல்ல, அல்ல. 
நேரடியான ஒரு உதாரணம் தருகிறேன். 13 வருடங்கள் முன்பு, திருமாவும் ராமதாசும் இணைந்து அரசியல் செய்து கொண்டிருந்த போது, வலைப்பதிவில் ஒருவர் 'திருமா ராமதாசிற்கு மலம் சுமக்கும் வேலையை செய்வதாக' எழுதினார். கவனிக்கவும் அவர் ராமதாஸ் திருமாவிற்கு செய்வதாக எழுதவில்லை, அப்படி எழுதியிருந்தாலும் அது ராமதாசை இழிவு செய்யாது என்பதுதான் நான் மீண்டும் மீண்டும் வலியுறுத்துவது. என்ன கோபம் வந்தாலும் நண்பர் பக்‌ஷிராஜனையோ, ஜெயலலிதாவையோ யாரும் இப்படி வர்ணிக்கமாட்டார்கள். மிஞ்சிப்போனால் 'பூணுல் வெளிவந்துவிட்டது' என்றுதான் சொல்லமுடியும். பூணுலை பெருமையாக நினைப்பவர்கள் அதில் புண்பட என்ன உள்ளது! பூணுலை துறந்தவர்கள் இதற்கு - ஒரு சாதிய வசையின் அளவிற்கு - புண்படும் முதிர்ச்சியற்றவர்கள் எனில் யார்தான் என்ன செய்ய முடியும்! மற்றபடி திருமாவிற்கு நிகழ்ந்த இழிவுடன் இதை ஒப்பிட முடியுமா? 
//அரசியல் சார்ந்த சாதிய முத்திரையா? அது என்ன?
ஒருவர் செய்த தவறுக்கு அவன் பார்ப்பான், அவன் குலமே இப்படித்தான் செய்யும் என்று சொல்வது சாதிய இழிவு படுத்துதல் என்றுதான் நான் நினைக்கிறேன். இது தமிழகத்தில் திரும்பத் திரும்பச் சொல்லப்பட்டு வருகிறது. இப்படிச் சொல்வது குலத்தொழிலைக் குறித்துச் சொல்வதைப் போலவே இழிவானது என்று நான் கருதுகிறேன்.
இது மட்டுமல்ல. தவறே செய்ய வேண்டிய தேவையில்லை. பார்ப்பனக் குலத்தில் பிறந்ததே தவறு என்கிறார்கள் பெரியாரடியார்கள்.
இது விடுதலையிலிருந்து:"நெருப்பு மட்டும், தான் எந்தப் பொருளுடன் சேர்கிறதோ, அந்தப் பொருளை எரித்து அழித்துவிடும். சேர்ந்தாரைக் கொல்லும் குணம் நெருப்புக்கு இருப்பதனால் அதைச் சேர்ந்தாரைக் கொல்லி என்றார் வள்ளுவர்.
பார்ப்பனர்களின் குணமும் அதுதான் என்பதால்தான் தந்தை பெரியார் பார்ப்பனர்கள் எவ்வளவு முற்போக்கானவர்களாக இருந்தாலும், தன்னுடன் சேர்க்காமலே இறுதிவரை இருந்தார். இதில் தீண்டாமையும் இல்லை, வேறுபாட்டுக் கொள்கையும் இல்லை.!"
இது அரசியல் சார்ந்த சாதி முத்திரையா? அல்லது சாதிய இழிவு படுத்தலா?//
இதில் அரசியல், அரசியல் சார்ந்த சாதிய முத்திரை இருந்தாலும், அதன் விளைவான இனவாதத்தை ஒத்த கருத்து இருப்பதாக தோன்றினாலும், இது சாதிய இழிவு படுத்தல் இல்லை; அரசியல் சார்ந்த முத்திரை என்றும் சுருக்கி விட முடியாது. அதே நேரம் ஏற்கவோ, அங்கீகரிக்கவோ கூடிய கருத்தும் அல்ல. சிக்கலான பல பிரச்சனைகளை கொண்டது என்பது என் கருத்து. நிஜமாகவே விரிவாக பக்கம் பக்கமாக முழு கட்டுரைதான் எழுத வேண்டும். துரதிர்ஷ்டவசமாக இப்போது முடியாது.

போலமிக்ஸ் -1 06/04/2016

எதிர்பார்த்தது போலவே பிராமணர்களை திட்டவில்லையா, பார்பனியம் என்று பேசவில்லையா என்று மட்டையடி லாஜிக்கை ஆரம்பித்து விட்டார்கள். இன்னொரு பக்கம் கிராவிடேஷனல் வேவ்ஸ் பற்றி வியப்பவர்கள், இந்த பக்கம் இப்படி அம்புலிமாமா தர்க்கத்தில் ஜல்லியடிப்பதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை. 
தமிழக அரசியலில் யாராவது, ஒரு பார்பனரை நோக்கி 'இவர் புரோகிதம் செய்யப்போகலாம்" என்று இழிவு படுத்தும் நோக்கில் சொல்லியுள்ளார்களா? சமூகத்தில் வழிபடும் வகையிலான மதிப்பிட்டிற்கு உரிய ஒரு தொழிலை, நீங்கள் வேதம் படிக்க போகலாம் என்று ஒருவேளை யாராவது ஒரு பார்ப்பனரை நோக்கி சொன்னால் அதுவும், மற்றவர்களை அவர்கள் சாதிய தொழிலை செய்யலாம் என்று சொல்வதும் ஒரே மாதிரியானதா? சுய விமர்சனம்தான் கிடையாது, கொஞ்சம் கூடவா லாஜிகலா யோசிக்க மட்டீர்கள்! பார்ப்பனிய அரசியல் என்று குற்றம் சாட்டுவது வேறு; அதுவும் கூட ராமதாசை சாதிய அரசியல் செய்வதாகவும், பலரை தேவர்சாதி அரசியல் செய்வதாகவும், வைகோவை கூட அந்த மாதிரி கொஞ்ச காலம் முன்னாடி சொன்னார்களே. சாதிய அரசியல் செய்வதாக சொல்வதும், சாதிச் சார்பு இருப்பதாக சொல்வதும், சாதித்தொழிலை செய்யப்போகலாம் என்று இழிவாக சொல்வதும் ஒரே தரமானதா? மதிப்பீடு சார்ந்த இழிவுபடுத்தலுக்கும், அரசியல் சார்ந்த முத்திரைக்கும், போலெமிகல் வசைக்கும் வித்தியாசம் தெரியாமல் இவர்கள் மட்டையடிக்கவில்லை; மட்டையடிப்பது வசதியானது என்பதால் மட்டையடித்துக் கொண்டிருக்கிறார்கள். 
சாதியால் பலவும் தீர்மானிக்கப்படும் சமூகத்தில், சாதிய சார்பு பற்றியும் அது சார்ந்த அரசியல் பற்றியும் பேசாமலிருக்க சாத்தியமில்லை. ஆனால் அவை பல நேரங்களில் அரசியல் சார்ந்த வெறுப்பாகவும், கருத்தை எதிர்கொள்ள முடியாமல் எதிர்வினையாற்றிய வசையாகவும், ஒத்துவாராதவர்களை எதிர்கொள்ள செய்த முத்திரை குத்தலாகவும் இருக்க வாய்ப்புகள் உண்டு. அவைகளை இனம் பிரித்து எதிர்கொள்வதும் எதிர்ப்பதும்தான் அறிவு அணுகுமுறை. சாதிய இழிவு படுத்தலுக்கும், அரசியல் சார்ந்த சாதிய முத்திரைக்கும் வித்தியாசம் தெரியாத மட்டையடி தர்க்கம், ஒரு போலெமிக்ஸ்ஸிற்கு முகாந்திரமான இன்னொரு போலமிக்ஸ் மட்டுமே.

கலைஞர் 06/04/2016


நடுநிலை குறித்து -1 04/04/2016

பாசாங்குவது அல்ல நடுநிலை; அறிவு பூர்வமாக அணுகி விமர்சிப்பதும், கறாராக அதை வெளிபடுத்துவதும்தான் நடுநிலை. 2ஜி ஊழலை நியாயப்படுத்தி கழகக் கண்மணி எழுதியதை, இன்னொரு ஸ்பெக்டிரம் ஊழலில் மாட்டி திடீர் திமுகவாக மாறியவர் பகிர்ந்ததை, முதலீட்டிய எதிர்ப்பாளர் - தான் கற்பித்துக் கொண்ட சார்பின் காரணமாக - பகிர்வதுதான் அருவருப்பானது.
தேர்தல் நேரத்தில் திமுகவையே ஆதரித்தாலும் இதை மீள்பதியாமல் இருக்க முடியவில்லை.

உள்முரண் 04/04/2016

'தேவர் மகன்' படத்தின் நாசர் பாத்திரம் பகைமையை தேவர் சமுதாயத்திற்குள்ளேயே வளர்ப்பதன் மூலம், மற்றவர்கள் குறுகிய காலத்திற்கேனும் நிம்மதியாக இருக்கும் வாய்ப்பை தன்னை அறியாமல் அளிக்க முயல்கிறது. நாசர் பாத்திரத்திற்கு எதிராக, ஆனால் கிட்டத்தட்ட அதே ஜாதிப்பெருமிதத்தை நேர்மறையாக கொண்டிருக்கும் கமலின் பாத்திரம், தேவர் சமுதாயத்தின் உள்சண்டையை சமாதானப்படுத்தும் முயற்சிகளின் மூலம் அந்த சமூகத்தை வலுப்படுத்தி, மற்றவர்களின் நிம்மதியை கெடுக்க முயல்கிறது. அந்த வகையில் நாசர்தான் good, கமல்தான் evil.

அசல் + நகலின் கலவை 25/03/2016

ஜெயலலிதா மீதான அடித்தட்டு மக்களில் ஒரு பகுதியினரின், குறிப்பாக பெண்களின் தூய்மையான அன்பு மேலோட்டமான புரிதலுக்கு அப்பாற்பட்டது. நானிருக்கும் அடுக்ககத்தில் வேலை செய்யும் இரு பெண்கள், வெள்ள அனர்த்தத்தில் தீவிரமாக பாதிக்கப்பட்ட பிறகும், அதே மாறா அன்புடன் இருப்பதை அறியாமை என்பதா, ஏதோ ஒன்றின் வடிகால் என்பதா என்று புரியவில்லை. இந்த வெள்ள அழிவிற்கு காரணமே இந்த அரசுதான், வேறு எந்த அரசும் இவ்வளவு மோசமாக நடந்து கொண்டிருக்காது என்று என் கருத்தை விளக்க முயற்சித்தேன். எது சொன்னாலும் அதற்கு ஒரே பதிலாக கருணாநிதியை திட்டிக் கொண்டு இருந்தவர்கள், ஒரு கட்டத்தில் என்னையும் சபிக்க தொடங்க பேச்சை நிறுத்த வேண்டியதாகிவிட்டது. அவர்கள் அப்படி இருப்பது எனக்கு உவப்பாக இல்லையெனினும், அவர்கள் - எம்ஜியார் மீது, அதன் தொடர்சியாக - ஜெயலலிதா மீது வைத்திருக்கும் அன்பில் எந்த போலித்தனமும் கிடையாது.
இன்னொரு தரப்பு இருக்கிறது; இந்த சமுகத்தின் அதிகாரத்தை பெருமளவு நுகர்ந்து கொண்டிருக்கும் தரப்பு. ஒரு பக்கம் ஊழல் குறித்தும், சமூக சீர்கேடுகள் குறித்தும், இன்னும் ஜாதி வெறியில் சிலர் வெட்டிச்சாவது குறித்தும் கூட ரொம்ப தார்மிகமாக கருத்துக்கள் இவர்களுக்கு உண்டு. இந்த கருத்துக்களுக்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாமல் ஜெயலலிதாவை ஆதரிப்பார்கள். இவர்களும் எல்லாவற்றிற்கும் தங்கள் தரப்பின் ஒரே நியாயமாக திமுகவின் சீர்கேடுகளை முன்வைப்பார்கள். ஆனால் அடித்தட்டு மக்களின் உண்மைக்கு நேர் எதிரான அளவு பொய்மை கொண்ட தரப்பு இவர்களுடையது.
மேலே சொன்ன இரண்டு தரப்பினரின் கலைவையாக - முதல் தரப்பின் அறியாமையும், இரண்டாம் தரப்பின் பொய்மையும் உருக்கி சேர்ந்ததுபோல் - விஜய்காந்தை மாற்றத்தின் பிரதிநிதியாக முன்வைப்பவர்கள் எனக்கு தோன்றுகிறார்கள்.

21/02/2016

இருபது ஆண்டுகளுக்கு மேலாக பல தமிழ் தலைவர்களையும், அப்பாவி தமிழ் மக்களையும் நூற்றுக்கணக்கில் கொன்றதுடன், இறுதிப் போரில் ஒளிந்திருந்த சிறுவர்களை கட்டாயமாக பிடித்து கொண்டு போய் அவசர பயிற்சியுடன் சாகக் கொடுத்ததும், எல்லாவற்றிற்கும் உச்சமாக தப்பி ஓடிய மக்களை சுட்டுக் கொன்றதும்.. இவை எல்லாம் மறுக்க முடியாமல் வரலாற்று பதிவுகளாகிவிட்டன. இதில் காலச்சுவடு என்ன முயன்று என்ன புதிய 'அவதூறை' புதிதாக செய்துவிட முடியும் என்று புரியவில்லை. தமிழினி எழுதிய நூலை இன்னமும் படிக்கவில்லை. ஆனால் அவர் எல்லா விதத்திலும் ஒரு சுய விமர்சனம் செய்து கொள்ளவே வாய்ப்பு இருந்திருப்பதாக தோன்றுகிறது. பாசிச அரசியலுக்கு சுய விமர்சனத்தை விட பெரிய தூரோகம் இருக்க முடியாது. நல்லவேளையாக தமிழினி இறந்த பிறகு புத்தகம் வருகிறது; அவர் வாங்க வேண்டிய வசைகளை எல்லாம் காலச்சுவடு பெற்றுக் கொள்கிறது.

10/0302016

விஜயகாந்த் கடந்த சில தேர்தல்களில் பெற்ற வாக்குகள் திமுகவிற்கும் அதிமுகவிற்கும்- இன்னும் சொல்லப்போனால் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு கூட - இருப்பதை போன்ற ஒரு நிலையாகிப்போன ஒரு வாக்கு வங்கி என்று கருத முடியாது. அந்தந்த தேர்தல் அலையிலும், கூட்டணியினாலும் தற்காலிகமாக உருவானவை. அவருக்கு தேவையற்ற ஒரு முக்கியத்துவத்தை முட்டாள்தனமாக இவர்களாகவே உருவாக்கியதோடு, அதிமுகவை எதிர்க்கும் - கொஞ்ச நஞ்சம் மிச்சமிருக்கும் - அரசியல் தார்மிகத்தை இழக்கும் வேலையையும் மக்கள் நலக்கூட்டணியும், திமுகவும் செய்து வந்தனர். ஒரு வகையில் கூட்டு சேர்த்து உருவாக்கப் போகும் ஆபத்து, தலைவலி மற்றும் அவப்பெயரில் இருந்து, திமுகவையும் மக்கள் நலக்கூட்டணியையும் விஜயகாந்த் தன்னையறியாமல் விடுவித்திருக்கிறார்; அவர்களாக முயன்று சம்பாதிக்க நினைத்த துர்பயன்களில் இருந்து, மிக விநோதமாக விஜய்காந்த் அவர்களை ஏமாற்றியதன் மூலம் காப்பாற்றித் தொலைத்திருக்கிறார். 
விஜயகாந்த், மக்கள் நலக்கூட்டணி, திமுக என்று ஓட்டு சிதறுவதால் அதிமுக மீண்டும் வெற்றி பெறும் என்று கருதுவதற்கும் முழுமையான நியாயங்களில்லை. முதலில் விஜயகாந்தை ஒரு அரசியல் சக்தியாக வலுவாக்கி, அதன் பயனாக அதிமுகவை தோற்கடிப்பது என்கிற ஐடியாவே, அசிங்கமான அரசியலில் மிக அசிங்கமான ஒரு அரசியல்; அடுத்து அதிமுக மீண்டும் வருவதை விரும்பாத, ஆனால் தீவிர திமுக எதிர்ப்புணர்வு கொண்ட பலரும் கூட இருக்கக் கூடும்; அவர்களின் வாக்குகள் அதிமுகவிற்கு போகாமல் சிதறக் கூட இதனால் வாய்ப்புண்டு. என் கருத்தில் -திமுக தலைமையே இதை நம்பாவிட்டாலும் கூட- இப்போது திமுக இன்னமும் வலுவாக உள்ளது. மக்கள் நலக்கூட்டணி அதிமுக எதிர்ப்பு வாக்குகளை சிதறடிக்கத்தான் செய்யும். அதற்கு இப்போதைக்கு எதுவும் செய்ய முடியாது

மொழிப்பிரமை 08/032016

எம்.எஸ்.எஸ் பாண்டியனுக்கு அஞ்சலி செலுத்தும் கூட்டம் ஒன்று அவர் மறைந்த சில நாட்களில் சென்னையில் நடந்தது. அழைக்கப்பட்ட விருந்தினர்களான ஓரிருவரை தவிர, முழுவதும் தமிழர்கள் நிறைந்த அரங்கில், ஜெஎன்யுவில் இருந்து வந்திருந்த பாண்டியனின் மாணவர் ஒருவர் "நண்பர்களே, நான் இப்ப ஆங்கிலத்தில பேசப்போறேன்" என்று சொல்லிவிட்டு முழுமையாக ஆங்கிலத்தில் ஒரு உரை நிகழ்த்தினார்; அவர் அதை ஏதோ ஒரு எதிர்ப்பு செயல்பாடாக செய்தது போல இருந்தது. அதாவது பிற்படுத்தப்பட்டவர்கள் கல்வியில் முன்னேற வேண்டும் என்றால், தமிழை பிடித்து தொங்கிக் கொண்டிருக்க கூடாது, ஆங்கிலத்தை தங்கள் மொழியாக கைக்கொள்ள வேண்டும் என்று சொல்ல வருகிறாராம். அந்த கருத்து சரியா தவறா என்பதை இப்போது விவாதிக்கவில்லை; ஆங்கிலத்திலேயே முழுவதும் இயங்கும் கல்வித்துறை ஆளான எனக்கும் உண்மையில் இதில் தெளிவில்லை. ஆனால் தமிழில் மட்டுமே வாசித்து, தமிழில் மட்டுமே விவாதித்து, எதோ தங்களால் முடிந்த அளவு ஒரு அறிவுக் கலாச்சாரத்தை தமிழ் மூலமே உருவாக்கிக் கொண்ட ஒரு கூட்டத்தை நோக்கி, கூடியிருந்த அனைவருக்கும் புரியுமா என்பது ஒரு பொருட்டில்லாமல், ஆங்கிலத்தில் பேசியது தானுணரா ஒரு மூடச்செருக்கு அன்றி வேறில்லை. இதை ஒரு இடதுசாரி பிராமண இளைஞர் செய்திருந்தால் ஏச்சு வாங்கியிருக்க கூடும். கல்வித்துறையில் சாதிக்க ஆங்கிலத்தில் நிபுணத்துவம் கொள்ள முனையும் உற்சாகத்தில் பீடாக்கடைக்காரருடனும் ஆங்கிலத்தில் பேச நேரலாம்; இதை உளவியல்ரீதியாக புரிந்து கொள்ள முயன்றேன். ஜேஎன்யூவில் சக மாணவர்களை பார்த்தும் கூட இப்படி ஒரு நிலைக்கு வந்திருக்கலாம் என்று நினைத்தேன். 
ஆனால் இப்போதய கன்ஹைய்யா குமார் ஊடக காய்ச்சலின் போது பேச்சு என்று எதை பார்த்தாலும் ஹிந்தியில்தான் இருக்கிறது. இவர்களுக்கு எல்லாம் முன்னேற ஆங்கிலம் வேண்டாமா, குறைந்தது அவர்களுக்கு ஆங்கிலம் தெரியுமா, ஒருவேளை தீசிஸை கூட ஹிந்தியில் அளிப்பார்களோ என்றெல்லம் கூட சந்தேகமாக இருக்கிறது. மாணவர்கள்தான் என்றில்லை, ஜேஎன்யூ பேராசிரியர் பேசுகிறார் என்று வீடியோவை க்ளிக்கினால் அவர்களும் ஹிந்தியிலேயே பேசுகிறார். ஒருவேளை பாண்டியனுக்கு திமுக பின்னணி இல்லாமல் இருந்திருந்தால் அந்த மாணவர் "நண்பர்களே நான் இப்ப ஹிந்தியிலே பேசப்போறேன்' என்று சொல்லியிருப்பாரோ என்று தோன்றியது.

நீதியின் ஊழல் 04/03/2016

ஒரு விஷயத்தை புரிந்து கொள்ள கஷ்டமாக இருக்கிறது. அந்த நீதிபதிகள் 'உள்ளாடையை ஏன் துவைக்கவில்லை?', "மீனை ஏன் ஒழுங்காக கழுவி சமைக்கவில்லை' என்று எழுத்து மூலம் எப்படி அவ்வளவு உண்மையாக கேட்கிறார்கள்? கையெழுத்திட்டு அளிக்கும் ஒரு ஆவணத்தில், பொதுவில் தெரிந்தால் அசிங்கமாகிப்போகும் ஒரு மிக அநீதியான நடவடிக்கையை குறிப்பிடுவது குறித்து சிறிய சஞ்சலம் கூட அவர்களுக்கு இல்லை என்பது இதிலிருந்து தெரிகிறது. நாம் அறிந்த கதைகளிலும் நிஜங்களிலும், கீழ்படியாத, ஒத்துவராத அலுவலரை தண்டிக்க பொய் குற்றச்சாட்டு கூறி நடவடிக்கை எடுத்ததாகத்தான் கேள்விப்பட்டிருப்போம்; நீதிபதியின் வீட்டில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் எதையும் பொய்யாக புனையும் சாத்தியங்களும் நிறைய உள்ளதே. புகார் அளித்தோ, மேல் முறையீடு செய்தோ, அந்த நீதிபதி மீது நடவடிக்கை எடுப்பது மட்டுமல்ல, அந்த ஆணையை ரத்து செய்யக்கூட சட்டவழி எட்டாத -அல்லது இல்லாத - நிலையில், வேறு அத்துமீறல் செய்ததாக சொல்லி பொய்யாக குற்றம் சாட்டியிருந்தால், அதை மறுக்கவோ நிறுவவோ, அந்த அப்பாவி பணியாளருக்கு வாய்ப்பும் சக்தியும் இருந்திருக்காது. ஆனாலும் ரொம்ப உண்மையாக உள்ளாடையை துவைக்காததை ஒரு குற்றமாக எழுத்து மூலம் சொல்லி, 'ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது?' என்று கேட்கப்படுகிறது. சட்டத்தை நன்கு அறிந்த நீதிபதி இதை அங்கீகரிக்கப்பட்டதாக கருதுகிறார்; அவ்வாறு கருதுமளவிற்கான அளவுக்கு மீறிய திமிர், ஆள்பவர்களுக்கு கூட இல்லாத இந்த திமிர் நீதி வழங்கும் அதிகாரம் உள்ளவர்களுக்கு நம் அமைப்பு அளிக்கிறது. 
இப்போது இணையம் போன்ற பொதுவெளிக்கு வந்ததால் இப்படி நாறியதே தவிர, தனிப்பட்ட ஒருவர் இதை எதிர்த்து போராடியிருக்க முடியாது. ஆள்பவர்களை விமர்சிப்பதை நமக்கு அடிப்படை உரிமையாக்கியுள்ள அமைப்பு, நீதிமன்ற அவமதிப்பு என்ற பெயரில் விமர்சனமற்ற பாதுகாப்பை இவர்களுக்கு அளிக்கிறது. இங்கே தமிழ் இணையத்தில் எவ்வளவு கிண்டலடித்தாலும், குமாரசாமி மேட்டர் பற்றி ஆங்கில மீடியாவில் எதுவும் பெரிதாக பேசப்படவில்லை; எதோ கூட்டல் பிழை என்று எழுதினார்களே தவிர, அதில் சாத்தியமுள்ள ஊழல் பற்றி எங்கும் விவாதம் நடக்கவில்லை. ஜெயலலிதா செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஊழலை விட பெரிய ஊழல் அல்லவா அவர் விடுவிக்கப்பட்டதை முன்வைத்து பேசப்படவேண்டிய ஊழல். மேல் முறையீட்டில் ஜெயலலிதா தண்டிக்கபட அதற்கான வாய்ப்பு என்று உள்ளது; தண்டிக்கப்படாவிட்டாலும் இத்தனைக் காலமாக விசாரிக்கப்பட்டார் என்பது யதார்த்தம். ஆனால் நீதிமன்ற ஊழல் என்பது விசாரிக்கப்படாதது மட்டுமல்ல, விமர்சிப்பது என்கிற நடவடிக்கைக்கும் அப்பால் உள்ளது.

23/02/2016

மநகூவிற்கு விஜயகாந்த் வந்தால் அவரை கிங் ஆக்குவதாக திருமாவளவன் கூறியதாக ஒரு செய்தி வாசித்தேன். இதற்கு அவர்கள் அதிமுகவுடனேயே கூட்டணி அமைத்து இந்த ஆட்சி தொடரவே வழி வகுக்கலாம். இன்றய அரசியல் சார்ந்த கருத்துதிர்ப்புகளில், விஜயகாந்தை கழக ஆட்சிகளின் சீரழிவிற்கு ஒரு மாற்றாக முன்வைப்பதை போன்ற அரசியல் அடிமுட்டாள்த்தனம் வேறு இருப்பதாக தோன்றவில்லை. 
தேமுதிகவின் வளர்ச்சியை ஜெ தலைமையிலான அதிமுகவை விட ஆபத்தான நிகழ்வாக கருதுகிறேன்; கழக ஆட்சிகளுக்கு எதிராக, இப்போது மக்கள் நலக்கூட்டணியை ஆதரிக்கும் சில அறிஞர்கள், விஜயகாந்தை ஏதோ கழகங்களுக்கு பரவாயில்லை என்பதாக கருதுவது ஒன்றே அவர்களின் அறிவு லட்சணத்தை பறைசாற்றக் கூடியது. இதுவரை அதிகாரத்தில் இல்லாத காரணத்தால் ஊழல், அராஜகம் போன்றவற்றில் ஈடுபட்டு சாதிக்கவில்லை என்பதை மட்டும் எந்த விதத்தில் ஒரு தகுதியாக கருதுகிறார்கள் என்பது புரியவில்லை. இவர்களின் லட்சியமான நல்லாட்சியை தருவதற்கான அடையாளமாக அவர் என்ன தடயங்களை இதுவரை விட்டு வந்திருக்கிறார் என்பதுதான் கவனிக்க வேண்டியது. 
அதிமுகவிற்காவது (குறிப்பாக ஜெயலலிதாவிற்காவது) அரசியல் சார்ந்த வேர்களும், தொடர்சியான உதிர்ப்புகளும் தவிர்க்க முடியாமல் படிந்து விட்டதுண்டு; அதிமுகவை விட அரசியலற்ற ஒரு அமைப்பிற்கு உதாரணமாக தேமுதிகவைத்தான் குறிப்பிட முடியும். இப்போது யோசித்தோமானால் 1991-96 ஜெயா ஆட்சி அதிர்ச்சி தந்தாலும், அதில் உண்மையில் அதிர்ச்சிடைய எதுவுமேயில்லை. அவ்வாறுதான் அந்த ஆட்சி இருந்திருக்க முடியும் என்பதற்கான ஏராளமான தடயங்களைத்தான் அவர் கொள்கை பரப்பு செயலாளராக ஆன நாளில் இருந்து அளிந்து வந்திருக்கிறார். அது தெரிந்து அப்போதும், அதற்கு பின் நேரடியாக வரலாறாகிவிட்ட சாட்சியங்களுக்கு பின்னும், மீண்டும் மீண்டும் ஆட்சியில் அமர்த்த நேர்ந்ததை நினைத்துதான் நாம் அதிர்ச்சி அடைய வேண்டும். சொல்லப்போனால், இப்போது தடயங்களை தேடினால் எம்ஜியாரின் ஆட்சியையும், 70களின் கருணாநிதியின் ஆட்சியையும் நாம் முன்னமே அனுமானித்திருக்கக் கூடிய தடயங்களை வரலாற்றில் வாசிக்கலாம். 
அந்த வகையில் இதுவரையான கழக ஆட்சிகளை விட, குறிப்பாக இன்றய அதிமுக ஆட்சியை விட மிக மோசமான ஊழல்களையும், கேலிக்கூத்துகளையும், சீரழிவு நடவடிக்கைகளையும் அதிகாரத்திற்கு வந்தால் நிகழ்த்துவதற்கான தடயங்களையே விஜயகாந்த் தொடர்ந்து அளித்து வந்திருக்கிறார். அனைவருக்கும் தெரிந்த இந்த பொது அறிவிற்கு ஆதாரப் பட்டியல் தேவையே இல்லை. நேரடி அதிகாரத்திற்கு கூட வரவேண்டாம்; கூட்டணி ஆதரவு நிர்பந்தம் மூலம் அரசை கட்டுப்படுத்தும் அதிகாரத்தை அடைந்தால் கூட பல கேலிக்கூத்துகளை அவர் நிகழ்த்திக் காட்டுவார். இன்றய அரசியல் சூழலில் ஒரு தவிர்க்க இயலா முக்கிய இடத்தை அவர் பிடித்திருப்பது தமிழகத்தை பீடித்த தீமைகளில் ஒன்று. 
இப்போதைக்கு அதிகாரத்தை தேமுதிக கைப்பற்ற வாய்ப்பேயில்லை என்பது நிம்மதி அளிக்கிறது என்றாலும், தேமுதிகவிலிருந்து நம்மை காக்கக் போவது திமுகவோ, மநகூவோ அல்ல. அவர்கள் உண்மையில் தேமுதிகவின் பிம்ப வளர்ச்சிக்கு உதவிக்கொண்டிருக்க, நம்மை தேமுதிக எதிர்காலத்தில் அதிகாரதிற்கு அருகில் வருக்கூடிய ஆபத்தில் இருந்து காப்பற்றக் கூடிய ஒரே சக்தி விஜயகாந்த் மட்டுமே.

ராஜாவின் பல பரிமாணம் 22/02/2016

கவுதம் மேனன் ராஜாவுடன் நிகழ்த்திய உரையாடல் முக்கியமான ஒரு ஊடக தருணம். என்னை போன்ற ஆள் இதைவிட சிறப்பான உரையாடலை நிகழ்த்த முடியும் என்றாலும், வேறு எந்த பிரபலமாக இருந்தாலும் அச்சு பிச்சுத்தனமும் அசட்டு மரியாதையும் வெற்று ஜால்ராவும் கலந்து சொதப்பியிருப்பார்கள். 
உரையாடலின் ஒரு இடத்தில், ராஜாவின் எல்லா பாடல்களின் பல்லவியிலும், முதல் இரண்டு வரிகள் ஒரே தளத்திலும், மூன்றாவது வரி முற்றிலும் வேறு ஒரு தளத்திலும் பயணிப்பதை குறிப்பிட்டு கவுதம் கேட்கிறார். உதாரணங்களாக எல்லா பாடல்களுமே இருந்தாலும், அவர் 'சுந்தரி கண்ணால் ஒரு சேதி..' போன்ற பாடலின், "நான் உனை நீங்க மாட்டேன்' என்ற இடத்தை குறிப்பிடுகிறார். ஆனால் இந்த பண்பு பல்லவிக்கு மட்டுமானதல்ல; சரணத்தை எடுத்துக் கொண்டால் அது சுமார் மூன்று - சில பாடல்களில் நான்கு தளங்களாக - ஒவ்வொன்றும் முன்னதற்கு செங்குத்தாகவும், அதே நேரம் வேறுபட்டு ஒலிக்காமல் அதன் தொடர்ச்சியாகவும் இருக்கும் விந்தையை காணலாம். இதெல்லாம் இன்று பால பாடம் என்றாலும், உயர் படிப்புக்கு போகும் முன் இதை பேச வேண்டியுள்ளது.
உதாரணமாக, இளையராஜா சிலாகிக்கும் 'மாலை பொழுதின் மயக்கத்திலே..' என்ற க்ளாசிக் பாட்டையே எடுப்போம். பல்லவியில் வரும் 'மனதில் இருந்தும் வார்த்தைகள் இல்லை' என்ற அடுத்த வரியின் இசையும், அதன் நீட்சியான அனுபல்லவியின் 'இன்பம் சில நாள் துன்பம் சில நாள்' என்ற வரியின் இசையும், இயல்பான தொடர்ச்சியாக அதே தளத்தில் இருப்பதை உணரலாம். சரணத்தில் 'கனவினில் வந்தவர் யாரென கேட்டேன்..' என்ற வரிக்கு இணையான தளத்திலேயே 'கணவர் என்றால் அவர் கனவு முடிந்தபின்..' என்று அழகாக நீண்டு, 'இளமை எல்லாம் வெறும் கனவு மயம்..' என்று அதே தளத்தில் வேறுபட்டு, 'தெளிவும் அறியாது முடிவும் தெரியாது..' என்று பின் இணையாகவே கீழிறங்கி அதே தளத்திலேயே பல்லவியுடன் சேர்கிறது. 
ஒப்பிலா க்ளாசிக்கான 'கண்கள் எங்கே?' பாடலை எடுக்கலாம். 'கால்கள் இங்கே…' என்கிற அனுபல்லவி வரி 'கண்கள் எங்கே' என்ற முதல் வரியுடன் இணைந்து அதே தளத்தின் தொடர்ச்சியாகவே உள்ளது. சரணத்தில் 'மணி கொண்ட கரம் ஒன்று..' என்ற வரியின் அதே தளத்திலேயே, ஆனால் சற்று மேடேறி ' மலர் போன்ற இதழ் ஒன்று..' என்று தொடர்ந்து, பின் 'துணை கொள்ள அவனின்றி தனியாக..' என்று அதே பாதையில் சற்று விலகி, 'துயிலாத பெண்மைக்கு ஏன் இந்த மயக்கம்' என்று எல்லா வரிகளின் இசையும் ஒரே தளத்தில் இருப்பதை கேட்டு அறியலாம். 
இதை குறையாக சொல்லவில்லை; பாடலின் தொடர்ச்சி அப்படி இருப்பதுதான் நியாயம்; அப்படித்தான் பாரம்பரியமாகவும், திரையிசையிலும் எல்லோரும் தந்திருக்கிறார்கள். ஆனால் அந்த நியாய ஒழுங்கை உடைத்து, சிதறலான ஒரு பிரபஞ்ச ஒழுங்கை, ஒரு நான்கு நிமிடப் பாடலில் ராஜா உருவாக்குகிறார். அது குறித்து போகும் முன், இன்னொரு மொக்கை உதாரணத்தை பார்ப்போம். 'என்னவளே..' என்ற ரஹ்மானின் பாடல். 'என்னவளே என்னவளே..' என்ற முதல் வரி, 'எந்த இடம் தொலைத்த இடம்..' 'உந்தன் கால் கொலுசில்..' "காதல் என்றால்.." என்ற அனுபல்லவி " எந்தன் கழுத்துவரை'' என்று முக்கால் நிமிடம் நீளும் பல்லவி முழுக்க, முதல் வரியின் எளிய manipulaltionகளாக இருப்பதை காணலாம். சரணம் இன்னும் எளிமையாக பல்லவியில் இருந்து கூட வேறு தளத்திற்கு போகாத elementary manipulations. பாடல் இனிமையாக இருப்பதும், பலரை கவர்ந்து பிரபலமாவதும் முற்றிலும் வேறு விஷயம். எனக்கு அன்று பிடித்தாலும் இன்று அலுத்து விட்டதால் மொக்கை என்றேன்; மற்றபடி வெறுப்பால் இதை சொல்வதாக நினைப்பவர்களுக்கு மாற்று உதாரணமாக, 'மலர்களே.. மலர்களே..' என்ற பாட்டை சொல்கிறேன். அது மேலே சொன்ன எளிமைப் பண்பிற்கு மாறானதாக, ரஹ்மான் பல்வேறு விளையாட்டுகளை செய்யும் பிரமாதமான பாடலாக உள்ளதை அறியலாம். ஆனால் இவை போன்ற உதாரணங்கள் விதிவிலக்கான சிலதாக இருப்பதுடன், இதற்கு பின்னால் நமக்கு நன்றாக தெரிந்த மெனக்கிட்ட நீண்ட உழைப்பும் உள்ளது. 
ராஜாவின் பாடல்களை எடுத்துக் கொண்டால், கிட்டத்தட்ட எல்லா பாடல்களும் பல்லவிக்குள்ளும், சரணத்திலும் பல ஒன்றுக்கு ஒன்று செங்குத்தான தளங்களில், எந்த நெருடலும் இல்லாத ஒரு மாயத் தொடர்சியுடன் பயணிப்பதை காணலாம். கவுதம் சொன்ன 'சுந்தரி கண்ணால் ஒரு சேதி.." "தென்றல் வந்து தீண்டும் போது..' எல்லாம் ரொம்ப ஆழமான உதாரணங்கள். சும்மாவேனும் ஒரு லேசான உதாரணமாக ஒரு சாதா ரஜினிப் பாடலை எடுப்போம். கிழே உள்ள பாடலில், 'அன்பே நீ என்ன அந்த கண்ணனோ மன்னனோ..' வுடன் சம்பந்தம் இல்லாத தளத்தில், ஆனால் நெருடாத தொடர்பு கொண்டு 'கண்கள் கவர்ந்து நிற்கும்..' என்று அடுத்த வரியில் மாறுகிறது. இது வேறு ஒரு தளம் என்று புரிய வேண்டுமானால், இந்த வரியின் மெட்டில், முற்றிலும் வேறு மாதிரி ஒலிக்கும் ஒரு புதிய பாடலை எழுதிவிட முடியும் என்கிற சாத்தியத்தை பரிசீலித்துப் பார்க்கலாம்; எழுதி அதை மட்டும் பாடிப்பார்த்து, அந்த வரி இல்லாமல் இருக்கும் இந்த பாடலில் இருந்து வேறாக ஒலிப்பதை உணரலாம். சரணத்தில் 'வஞ்சிப்பெண். ஆசை கொள்ளும்…' என்ற வரி, அடுத்த தளத்திற்கு "நீங்காமல் இருப்பேன்…" என்று செல்வதை கூட இயல்பானதாக எடுத்துக் கொள்ளலாம். ஆனால் அதற்கு அடுத்து அதே தளத்தில் அதன் நீட்சியான ஒரு மெட்டுடன் அங்கிருந்து நேராக பல்லவிக்கு போவதுதான் இயல்பு; நாம் அறிந்த நியாயம். ஆனால் சம்பந்தமே இல்லாமல் "ஆசை பெருகுதய்யா..' என்று வேகமாக முற்றிலும் எதிர்பாராமல், முன்னதில் இருந்து செங்குத்தான வேறு ஒரு தளத்திற்கு சென்று அதிர்ச்சி தந்து, அநியாயமாக பல்லவியுடன் இணைவதை காணலாம்.
'தென்றலை தூது விட்டு ஒரு சேதிக்கு காத்திருந்தேன்...' போன்றதான சரணங்களை உதாரணப்படுத்தி இந்த அசாத்திய பயணத்தை இன்னும் பொருத்தமாக விளக்க முடியும்; என்றாலும் இந்த கணத்தில் தோன்றிய லேசான இந்த பாடலை முன்வைத்தும் கூட, இப்பண்பை உதாரணிக்க முடிகிறது. மற்ற அளவிட முடியாத அந்த 'நாலயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஒன்பது' உதாரணங்களில், இந்த விந்தையை தேடி கேட்டு கண்டுபிடித்து களிப்பது அவரவருக்கான இன்பம். 
ராஜாவின் பாடல்களின் முன்னிசையின், இடையிசையின் அமைப்பில் நிகழும், பல்வேறு ஒன்றுக்கு ஒன்று orthogonalஆன தளங்களை இணைக்கும், போகிற போக்கிலான விளையாட்டை பற்றி பேச இது தருணமில்லை. அதைத்தான் பிரபஞ்சக் கூத்து என்று அழைக்கிறேன்.

ஊழலுக்கு மாற்று 12/02/2016

ஊழலை தவிர்க்க முடியாது, ஊழலை ஏற்றுக் கொள்ளவேண்டும் என்பது என் நிலைபாடல்ல. ஊழலின் வீரியத்தை குறைக்கலாமா, அதன் தளங்களில் குறுக்கிடலாமா, குறிப்பாக அடித்தட்டு மக்களை நேரடியாக பாதிக்கும் அரசாங்க உரிமைகளை பெறுவதில் உள்ள ஊழலை தவிர்ப்பது எப்படி என்பது போன்ற கேள்விகளை கேட்பது அர்த்தமுள்ளது. ஆனால் ஊழல் என்பது நமது சமூக பொருளாதார அமைப்பின் ஒரு விளைபொருள்; அதை ஏதேனும் ஒரு குறிப்பிட்ட கட்சியை ஆட்சியில் அமர்த்தி ஒழிக்க முடியுமா என்று கேட்பது ஆக முட்டாள்த்தனம். திரும்பவும் நிதானமாக சொல்கிறேன், இப்படி அணுகுவதே ஆக முட்டாள்த்தனம். ஆகையால் 'ஊழலை ஒழிக்கவே முடியாதா' என்று கேள்வி கேட்டுவிட்டு, இவர்கள் ஊழல் செய்வார்களா தெரியாது, அவர்கள் நிச்சயம் செய்வார்கள் என்று மொக்கை போடுவதால் பொழுது போவது, கவனம் சிதைவதை தவிர வேறு பயன் இல்லை

மாற்று! 11/02/2016

திமுக அதிமுகவிற்கு மாற்று வேண்டும் என்பதற்கான தர்க்கங்களை தொகுக்க எந்த ஆழ்ந்த சிந்தனையும் தேவையில்லை; அந்துமணி, லென்ஸ்மாமா போன்றவர்கள் கூட வடிவான கட்டுரை ஒன்று எழுதிவிட முடியும். அது காலத்தின் தேவையும் கூட; ஆனால் அதை பற்றி பேசக்கூடிய நிலையிலா நாம் இருக்கிறோம்?
எல்லோருக்கும் தெரிந்த நடுநிலை கருத்துக்களை கொண்டு ஞாநி இத்தனை காலமாக போட்ட மொக்கையையே பத்ரியும் போட்டுள்ளார். மக்கள் நலக்கூட்டணிக்கு ஆதரவு பெருகுவது (அப்படி எல்லாம் தோன்றவில்லை, ஒரு வேளை பெருகினால், அதை) தனித்துப் பார்த்தால் எந்தவிதத்திலும் கேடல்ல; நல்லதும் கூட. ஆனால் இந்திய தேர்தல் அரசியலின் ஆக விபரீதமான கடந்த ஐந்தாண்டு அதிமுக ஆட்சி, இன்னும் அடுத்த ஐந்து வருடத்திற்கு தொடர அது வழிவகுக்குமாயின் அதைவிட ஒரு பெருநாசம் தமிழ்நாட்டிற்கு ஏற்பட வாய்ப்பில்லை. இதுவும் சாதரண பட்டறிவில் தெரிவதுதான். ஆனால் அப்படி ஒரு விஷயத்தை அணுகவே அணுகாமல், 'அதிமுகவா, திமுகாவா என்றால் திமுகாவிற்கு போடுவேன், திமுகவா மக்கள் நலக்கூட்டணியா என்றால் மக்கள் நலத்திற்கு போடுவேன்' என்பது போன்ற முட்டடாள்தனமாக மேதாவிக் கருத்துக்களுக்கு கிடைக்கும் வெளிச்சம் அச்சமூட்டுகிறது. இப்படி எல்லாம் தனித்தனியான கேள்விகளா தேர்தலில் இருக்கிறது? சினிமாக்கவர்ச்சியை விட அதிக நாசத்தை விளைவிக்கக் கூடியது இது போன்று கவர்ச்சியாக தோன்றும் மேலோட்டமான அச்சு பிச்சு கருத்துக்கள். ஏற்கனவே வெள்ள நாசத்தில் ஏற்பட்ட கோபம் மக்களுக்கு தணிந்து விட்டதோ என்று பயமாக இருக்கிறது. பேரழிவிலிருந்து முற்றிலுமான அழிவுக்கு போய்விடுவோமோ என்கிற அபாய நிலையில் தமிழகம் உள்ளது. 2001இல் மதிமுக ஓட்டை பிரித்து அதிமுக ஆட்சிக்கு வந்தது போல், இப்போது இந்த கூட்டணி பிரித்து மீண்டும் நடந்தால் தமிழகத்தை மட்டுமல்ல, அதற்கு காரணமானவர்களையும் எந்த சக்தியும் காப்பாற்றப்போவதில்லை.

எதிர்வினை 04/02/2016

தேசியக்கொடியை எரித்த பையனின் கையை ஒடித்த படத்தை பார்த்தேன். இதையும் ஆதரித்து சிரிப்பவர்கள் இருக்கும் காட்டுமிராண்டி தேசத்தில்தான் வாழ்கிறேன் என்பது தெரியும். அந்த பையன் எதற்கு எதிர்ப்பு தெரிவிக்க எதிர்த்தானோ அதன் நியாயங்கள் இன்னும் வலுவாக்கப்பட்டுள்ளன. போலிசை கண்டிப்பது அபத்தம்; அந்த பையனுக்கு என் அனுதாபங்கள்

தலித் முதல்வர் 02/02/2016

தலைமை என்பது தெளிவாக வரையறை செய்யப்பட்டு விட்ட திமுக அதிமுகவில் தலித் முதல்வராவதை பற்றிய விவாதம் அபத்தமானது; நடைபெறவும் செய்யாது. மக்கள் நலக்கூட்டணியில், இன்னமும் முதல்வர் பெயர் முடிவாகாத நிலையில், முன்னணி தலைவர்களில் யாருமே அதற்கான தகுதியுள்ள பரந்த மக்கள் ஆதரவை பெற்றிராத நிலையில், இப்படி ஒரு விவாதத்தை எழுப்புவதில் தவறில்லை என்பது மட்டுமல்ல, அர்த்தம் பொருந்தியதும் ஆகும். வெற்றி பெறப்போவதில்லை என்கிற நம்பிக்கையிலோ, விவாதித்தால் சண்டை வரும் என்ற பயத்திலோ முதல்வரை முடிவு செய்யாமல் இருக்கலாம்; மற்றபடி முடிவு செய்வதுதானே மக்களிடையே தங்களை முன்வைக்க ஒரு பிரசார பலமாக இருக்க முடியும். பிறர் நல்லகண்ணு போன்ற, திருமா அளவிற்குகூட தனக்கான தனித்த மக்கள் ஆதாரவு இல்லாதவர்களை முன்வைத்து பேசும்போது, தலித் என்ற பெயரில் திருமாவை முன்வைத்து பேசினாலே பிரச்சனை வரும் என்றால், இது ஒரு ஆரோக்கியமான சூழல் என்று கருத முடியாதே. ஒருவேளை தலித் ஒருவரை முதல்வர் வேட்பாளராக முன்வைத்தால், நம் சாதிய சமுகத்தில் அதனாலேயே வெற்றி வாய்ப்பு குறையலாம் என்று கருதலாம்; அதுவும் நம் சூழலின் வக்கிரம்தானே!
அடிப்படையான சமுக நியாயத்தை பேசுவதற்கு சமய சந்தர்ப்ப நிபந்தனை விதிப்பது மேற்தட்டு இங்கிதத்திற்கு இணையானதுதான். ஆகையால் தலித் முதல்வராவது குறித்த விவாதத்தை எப்போது துவக்கினாலும் அதில் எந்த தவறும் இல்லை; ஒருவேளை அவ்வாறான நிபந்தனையை ஒரு சிக்கலான நேரத்தில் -உதாரணமாக ஆட்சி ஏறுமா கவிழுமா போன்ற அசந்தர்ப்பத்தில்- முன்வைப்பதற்கு வேண்டுமானால் உள்நோக்கம் கற்பிக்கலாம். மக்கள் நலக்கூட்டணி என்பது வெற்றி பெற்று ஆட்சி அமைக்கப்போவதில்லை என்பதே கிட்டத்தட்ட நிகழ்தகவு ஒன்றுடன் நடக்கப்போகும் நிலையில், இப்போது இதை விவாதிப்பதை அனுமதிக்காவிட்டால் வேறு எப்போதுதான் விவாதிக்கவும் முயற்சி செய்யவும் நம் சூழல் அனுமதிக்க போகிறது?

தலித் முதல்வராவதை பற்றி விவாதிப்பதை ஒரு சிண்டு முடியும் வேலை என்று அ. மார்க்ஸ் கற்பிப்பார் என்று ஒரு போதும் நான் நினைத்ததில்லை.

திருமா 28/01/2016

இப்போதுதான் தினமலர் "மதுரை பேச்சுக்கு மதுரையிலேயே மனம் வருந்திய திருமா" வீடியோ பார்த்தேன்.
நியாயமாக திருமா இறங்கி வந்து தெரிவித்திருக்கும் வருத்தத்தை உயர் அரசியல் பண்பாக நாம் பாராட்ட வேண்டும். ஆனால் ராமதாசோ விஜய்காந்தோ, வேறு எவரோ எவ்வளவு மோசமாக பேசியிருந்தாலும் அடுத்த நாள் அவர்களாக வருத்தம் தெரிவிக்க மாட்டார்கள், எதிர்வினைகளுக்கு பிறகும் கூட தெரிவிக்க மாட்டார்கள்; அது மட்டுமல்ல மோசமாக பேசப்பட்டவர்களும் எதிர்காலத்தில் அவர்களுடன் உறவாடும்போது அதை நினைவுக்கு கொண்டுவந்து சஞ்சலம் கொள்ளமாட்டார்கள் என்பதை இன்னும் கவனமாக கவனிக்க வேண்டும். தன் பேச்சுக்கு வருந்துவது ஒரு உயர்ந்த நிலை. ஆனால் நம் சாதிய சமூகத்தில் திருமாவிடம் வெளிபடும் அந்த பண்பை பாராட்ட தோன்றவில்லை. அதிலும் அரசியல் பேச்சில், ஒப்பீட்டளவில் பெருந்தவறாக எதுவும் சொல்லியிராத போது தெரிவிக்கும் வருத்தத்தை, பெருந்தன்மைக்குள் மட்டும் அடக்கிப் பார்க்க முடியவில்லை. மேலும் ஊழலில் அவர்கள் கட்டு விரியன், கண்ணாடி விரியன்தான், சாதிவெறியில் அவர்கள் நல்ல பாம்புதான் என்று பொதுவெளியில் யாரவது சொல்லத்தான் வேண்டும்.

எதிர்வினை 28/01/2016

ஒரு கட்டத்தில் திமுகவுடன் உறவில் இருந்தபோதே ராமதாஸ் மிக கேவலமாக கருணாநிதியையே நேரடியாக திட்டியிருக்கிறார். அதற்கு தலைவர்கள் மட்டத்தில் கூட கடுமையான எதிர்வினை செய்யாதது மட்டுமல்ல, சுயமரியாதையின்றி பாமகவின் உறவையும் தொடர்ந்தது; பாமகவுடன் தமிழ் சார்ந்த ஒரு தற்காலிக உறவில் இருந்தும் கூட, கூட்டணியில் இடமின்றி புறக்கணிக்க்கப்பட்டு, 2006 தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் வேறு வழியின்றி அதிமுகவுடன் கூட்டணி வைத்தது. தேர்தலின் தற்காலிக கூட்டணி முடிந்து மீண்டும் திமுக பக்கம் வந்தது. தலித் அரசியலை முழுமூச்சாக முன்னெடுக்காமல், தொடர்ந்து திமுகவின் அங்கம் போலவே திருமா செயல்பட்டார் என்றுதான் அவர்மீது விமர்சனம் வைக்கலாமே ஒழிய, அவர் திமுகவுடனான உறவிற்கு துரோகம் இழைத்ததாக தீவிர கழக கண்மணிகளை தவிர வேறு யாரும் சொல்லமுடியாது. பாமக 2009இல் குத்திவிட்டு, சகோதரியின் காலடியில் விழுந்தது. ஆனாலும் பாமகவை எல்லை மீறி கருணாநிதிகூட விமர்சித்ததில்லை; உண்மையில் தேவையான விமர்சனக் கடுமையை தர்மபுரி சம்பவ காலகட்டங்களில் கூட திமுக காட்டவில்லை என்றுதான் குற்றம் சாட்டமுடியும். 
ஆனால் இன்று திருமா செய்யும் ஒரு சாதரண விமர்சனத்தை இவர்களால் தாங்க முடியவில்லை. என்னத்த கட்டுவிரியன் கண்ணாடி விரியன் உவமை; அதிமுக திமுக இரண்டும் தமிழ்நாட்டை பீடித்து, ஒன்றினால் மற்றொன்று உயிர்த்திருக்கும் நாம் உவமிக்கமுடியாத ராட்சத விஷ உயிரினங்கள்தானே. கடந்த திமுக ஆட்சியிலும், அதற்கு முன்னும், கீழிருந்து மேல் வரை நிறுவனமயமான ஊழலும், தமிழகத்தை வாழ முடியாத இடமாக மாற்றிக்கொண்டிருக்கும் எல்லாவகை சிர்கேடுகளும் எந்த விதத்தில் அதிமுகவை விட குறைவானது என்று (ஏமாற்றாமல்) வாதிட முடியும்? முசோலினி ஹிட்லரை விட கொஞ்சம் குறைவாகத்தான் மக்களை கொன்றார் என்பதை போன்று, அதிமுகவுடன் ஒப்பிட்டுக்கொள்ளும் பெருமைதானே திமுகவினுடையது. இப்பொழுதெல்லாம் வெட்கம் என்கிற பண்பையே தொலைத்து விட்டவர்களுக்குத்தான் தார்மிக கோபம் பொத்துக் கொண்டு வருகிறது. ஆனால் இது தார்மிகமல்ல, அப்பட்டமான சாதிவெறி என்பது நிதானித்தால் அவர்களுக்கே தெரியும்; சில திமுகவினருக்காவது தெரிவது சந்தோஷம்.
அதே நேரம் திமுகவினரின் சாதிவெறி 'விமர்சனங்கள்' பாமகவிற்கான எந்த நியாயத்தையும் தந்துவிடாது; பெண்களை இழிவுபடுத்தும் மனநிலை சமூகத்தில் இயல்பாக வெளிபடுவதால், பெண்களை கடத்தி பாலியல் தொழில் செய்யும் மாஃபியாவை அங்கீகரிக்க முடியாது. 
இத்தனை இருந்தும் இந்த தேர்தலில் திமுகவே வெல்லவேண்டும் என்கிற என் கருத்து கருமாந்திரத்தையும் பதிவு செய்து தொலைக்கிறேன்; விரிவான என் விளக்கம் பிறகு.

வரலாற்றின் அபத்த நகைச்சுவை 26/01/2016


நேரலை 25/01/2016

பத்து வருடங்கள் முன் (என் பெற்றோர்) வீட்டில் சன் ம்யூசிக் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்பாவை பார்க்க வந்து காந்திருந்த நண்பர், 
"அது என்ன லைவ்னு போட்டிருக்கான்… சினிமா பாட்டுல என்ன லைவ் வேண்டி கிடக்கு!" என்றார். 
"பாட்டு லைவ் இல்லை; நிகழ்ச்சில பேசறவங்க இப்ப லைவ்வா பேசறாங்க… ரெகார்டட் நிகழ்ச்சி கிடையாது" என்று விளக்கினேன். 
"இப்படில்லாமா ஏமாத்துவாங்க!" என்றார். இது என்ன லாஜிக், இதில் என்ன ஏமாற்றுவேலை இருக்கிறது என்று நினைத்தாலும், பதில் பேசாமல் புன்னகைத்தேன். 
அண்மையில் Live concert என்று அழைக்கப்பட்ட ஒரு இசை நிகழ்ச்சியை பற்றி கேள்விப்பட்டபோது அப்பாவின் நண்பர் தீர்க்க தரிசன சொல்வாக்கு கொண்டவர் என்று தோன்றியது.

பொங்கல் (எதிர்வினை)

பொங்கல் தமிழ் உணவுதான்; இந்தியாவின் பிற பாகங்களிலும் அதை போலவே பருப்பு, அரிசி, மிளகு, ஜீரகம், நெய் கலந்து வேறு பெயரில் டிஷ் ஏதாவது செய்து உண்டாலும் கூட, பொங்கலை தமிழ் உணவு என்று சொல்லிக் கொள்வதில் எந்த முரண்பாடும் இல்லை. நம் பொங்கலை அவர்கள் எடுத்துக் கொண்டிருக்கலாம்; நாமே கூட கிச்சடியை பொங்கலாக நமக்கேற்ப மாற்றி எடுத்து கொண்டாலும் அதில் தமிழ் தன்மை இல்லை என்றாகிவிடாது. அப்படி எல்லாம் தூய தமிழ்தன்மை தமிழ் மொழிக்கே கிடையாது என்கிற போது, உணவுக்கும் பண்டிகைக்கும் இருக்க வாய்பில்லை. ஒருவேளை இந்துக்கள் மட்டுமே, இன்னும் குறிப்பாக சில ஜாதிகள் மட்டுமே பொங்கல் உண்ணும் பழக்கத்தை வைத்திருந்தாலும் கூட, அதை தமிழ் உணவு என்று சொல்லிக் கொள்வதில் தவறு இல்லை; அதை பொங்கி புசிக்கும் மைய மரபு, மற்றவர்கள் அதை உணவாக அணுக தடை இல்லாத பட்சத்தில் அது தமிழர்க்கான பொது உணவுதான். பொங்கலில் ஹலால் பிரச்சனை கூட இல்லை. 
பொங்கல் பண்டிகை குறிப்பிட்ட கடவுளை முன்னிறுத்தாமல், சூரியனையும் விவசாயத்தையும் முன்னிறுத்துவதால், அதில் நரகாகாசூரன் கிருஷ்ணன் போன்ற பிரச்சனைகள் இல்லாததால், ஒரு ஆதி பழங்குடித்தன்மை அதற்கு இருப்பதால் அதை தமிழர்களின் மதம் தாண்டிய பண்டிகை என்று கொள்ளலாம் என்று தோன்றுகிறது. கொண்டாடுபவர் ஒவ்வொருவரும் கொண்டிருக்கும் கூறுகளை ஆராய்வதை விட, அதை யார் விரும்பினாலும் தங்களுக்கு ஏற்ப ஒரு தமிழர் பண்டிகையாக தகவமைத்துக் கொள்வதற்கான சாத்தியங்களை ஆராய்வதுதான் சரியான அணுகுமுறையாக இருக்க முடியும். அந்த வகையில் விதண்டாவாதமாக பொங்கலை பற்றி நிறைய சொல்லலாம்; எதைப்பற்றியும் சொல்லலாம். பண்டிகைகளின் தேவைகளை அங்கீகரித்து ஆக்கபூர்வமாக சிந்தித்து பொங்கலை உண்மையான தமிழ்ப்பொது பண்டிகையாகவும் மாற்றிக் கொள்ளலாம். எல்லா பண்டிகையையும் கூட இப்படி அணுகலாம் என்றாலும், பொங்கலிடம் அதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம்.

தோழர்களும் அறிவும் 18/01/2016

நேற்றய பதிவு ஒன்றில் நான் ஆதாரமின்றி கம்யூனிஸ்டுகளை முட்டாள்கள் என்று முன்முடிவுடன் சொன்னதாக வாசகர் ஒருவர் வருத்தப்பட்டார். (பத்து லைக்கு வாங்கும் உனக்கு யாரடா வாசகர் என்று கேட்கக்கூடாது; நானே கூட எனக்கு ஒரு சிறந்த வாசகன்தான்.) வாசகர் சொன்னது சரிதான்; உண்மையில் நான் எதையுமே வாசிக்காமல் - தோழர்கள் அப்படி அறிவோடு என்னத்த எழுதிவிடப்போகிறார்கள் என்கிற அசாத்திய நம்பிக்கையில்தான் - அப்படி எழுதினேன். இப்போது என் நம்பிக்கைக்கான ஆதாரத்தை தரும் வகையில் இந்த பதிவை ஜாலியாக எழுதத்தொடங்குகிறேன். (ஜாலியாக தொடங்கினாலும் இடையில் சீரியசாக திட்டும் மோடுக்கு போகும் வாய்ப்புகள் நிறையவே உள்ளது.)
அ.மார்க்ஸ் மற்றும் குமரேசன் அசாக் எழுதிய இரண்டு பதிவுகளை எடுத்துக் கொள்வோம். அ.மார்க்ஸ் என்ன சொல்கிறார். தோழர் ஐ.மா. பா நல்லவர் வல்லவர், அடித்தள சமூகத்தை சேர்ந்தவர். அவரை 
/இளையராஜா மரியாதைக் குறைவாக அவதூறு செய்துள்ளது முறையற்றது.... ஐ மா பாவை அறிந்தவர்களால் மன்னிக்க இயலாதது…./ 
அதாவது இளையராஜா அவதூறு செய்துள்ளாரா, அவர் சொன்னது உண்மையா பொய்யா என்கிற பேச்சே கிடையாது. 'மூச்… தோழரை பத்தி யாரும் பேசப்படாது" என்று மட்டும் சொல்கிறார். குமரேசன் வளவளவென எழுதிய நீண்ட பதிவில் ஒரு வரியில் சின்னதாக பதில் சொல்கிறார்.
அவதூறு என்பது என்ன? அறியப்பட்ட ஒருவரை பற்றி, பொய்யாகவும் மோசமாகவும் சொல்வதை அவதூறு எனலாம். பொய் + மோசம் இரண்டும் கூட்டுச் சேரவேண்டும். ஒருவரை பற்றி பொய்யாகவோ நிஜமாகவோ, நல்ல விஷயத்தையோ அவ்வளவு மோசமில்லாத விஷயத்தையோ சொன்னால், அல்லது நிஜமாக இருக்கும் பட்சத்தில் என்னத்த சொன்னாலும் அதை அவதூறு என்று சொல்லமுடியாது. 
இப்போது ராஜா சொன்ன விஷயம் என்ன? நாங்க இன்ன தோழரை நம்பிப் போய், ̀அறை வாடகைக்கு தரும்படி கேட்டோம்', ̀அவர் கட்சியிடம் கேட்டுவிட்டுத்தான் தரமுடியும் என்று சொல்லி வாடகைக்கு தரவில்லை', ̀ஏழைகளுக்கான கட்சி என்கிற நம்பிக்கை போய்விட்டது' என்பது. இதில் நம்பிக்கை போய்விட்டது என்று சொல்வது அன்று ராஜாவிற்கு ஏற்பட்ட ஒரு தனிப்பட்ட மனப்பதிவு; அந்த உரிமை அனைவருக்கும் உண்டு; மற்றவர்கள் வேறு மாதிரி முடிவுக்கு வரலாம். தகவலாக அவர் சொல்வது அறை வாடகைக்கு கேட்டோம், தரவில்லை என்பது. கவனிக்கவும் இந்த தகவல் பொய் என்று ஒருவர் -வசைபாடிய இத்தனை பேரில் ஒருவர் கூட- மறுக்கவில்லை; சும்மாவேனும் கூட அவர்களுக்கு மறுக்கத் தோன்றவில்லை. 
அ. மார்க்சுக்கு தகவல், தர்க்கம், ஆதாரம் இதை முன்வைத்து பேசுவது என்றுமே பொருட்டில்லை; தோழருக்கு குடமிளகாய் பிடிக்கும் என்று சம்பந்தமில்லாததை அடுத்து பேசுவது அவர் பாணி. குமரேசனும் இளையராஜா சொன்ன தகவலை மறுக்கவில்லை; பொய் என்று சொல்லவில்லை. ஆனால் தோழர் வாடகைக்கு வீடு தராததற்கு ஒரு காரணத்தை சொல்கிறார். அதையும் மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் எஸ்.ஏ. பெருமாள்தெரிவித்ததாக சொல்கிறார். அந்த காரணம் ராஜாவுக்கு தெரியாமல் இருக்கலாம் என்று அவரே சொல்கிறார். அதாவது அவர் வாதப்படியே ராஜா பொய் சொல்லவில்லை, புரியாமல் ஏதோ சொல்லியிருக்கிறார். இதற்குத்தான் இவர்களுக்கு இவ்வளவு ஆத்திரம்.
அடுத்து புரியாமல் சொன்னதிலும் மோசமாக ஏதாவது இருக்கிறதா என்று பார்த்தல் விஷயம் ஒரு சப்பை மேட்டர். ஒருவர் ஊழல் செய்வதாகவோ, கையப்பிடிச்சு இழுத்ததாகவோ சொல்வது (அது பொய்யாக இருக்கும் பட்சத்தில்) அவதூறு. தன் சொந்த வீட்டை வாடகைக்கு தரமாட்டேன் என்று சொன்னதாக சொன்னதில் -அதுவும் அந்த தகவல் உண்மையாக இருக்கும் படசத்தில் - என்னப்பா அவதூறு இருக்கிறது? உங்களுக்கு எல்லாம் கொஞ்சம் கூடவா மூளை இல்லை! 
சரி, மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் எஸ்.ஏ. பெருமாள் தெரிவித்ததாக குமரேசன் சொல்லும் காரணத்தை கவனிப்போம். 
/கட்சிக்கு ஏற்கெனவே விடப்பட்டிருந்த பின்னணியில், திடீரென சொத்து தொடர்பாக அவருடைய அண்ணன் குடும்பத்திற்கும் ஐ.மா.பா. குடும்பத்திற்கும் இடையே சிக்கல் ஏற்பட்டு, வழக்கு நீதிமன்றம் சென்றுவிட்டது என்று தெரிவிக்கிறார் மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் எஸ்.ஏ. பெருமாள். ஆகவே ஐ.மா.பா. அறையை வாடகைக்கு விட முடிந்திருக்காது என்பதை எவரும் ஊகிக்கலாம்/ 
சொத்துத் தகறாறு ஆகி கோர்ட்டில் இருக்கும்போது கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் அங்கே தொடர்ந்து இயங்கலாம், இவர்களுக்கு ஒரு அறையை வாடகைக்கு விட முடியாது என்கிற குழப்பமான நடைமுறை சிக்கலை நான் ஏற்றுத் தொலைக்கிறேன். ஆனால் அந்த காரணத்தையே வெளிப்படையாக சொல்வதில் தோழருக்கு என்ன பிரச்சனையோ? 'கட்சியிடம் கேட்கவேண்டும்' என்று ஏன் சொன்னார்? சொன்ன காரணத்தை கேள்வி கேட்காமல் ஏற்பதன்றி, இப்படி லாஜிக்கலாக கேள்வி கேட்டுக்கொள்வது கம்யூனிஸ்டுகளுக்கு ஒவ்வாது என்பதை தவிர வேறு பதில் எதுவும் இதற்கு கிடையாது. 
ஆக ஒரு சப்பை மேட்டரை, அதுவும் பொய்யில்லாத ஒரு விஷயத்தை சொன்னதற்குத்தான் கும்பலாக இவர்கள் வசைபாடிக்கொண்டு இருக்கிறார்கள். தோழர்களை பற்றி உண்மையை சொன்னால் கூட அதற்கு பெயர் அவதூறு; அவர்கள் மற்றவர்களை என்ன கேவலமாக பேசினாலும் அது அவர்களின் அரசியல் உரிமை. இதே மார்க்ஸ் எவ்வளவு பேர்களை பற்றி ஆதரமின்றி அவதூறு செய்திருக்கிறார். ̀மார்க்ஸ் செருப்பாலடித்தால் கூட வாங்கிக் கொள்வேன்' என்று சொன்ன ராஜன்குறையை, தனக்கு ஒத்துவராமல் பேசிய காரணத்திற்காக 'தொகாடியா ரேஞ்சிற்கு பேசுவதாக' மார்க்ஸ் சொல்லவில்லையா! நீண்டகாலம் பழகிய நண்பரை -கருத்து ஒத்துவராததால் - பார்பன சூழ்ச்சி செய்வதாக சொல்லவில்லையா!
அந்த பேட்டியை பார்க்கும் பாமரனுக்கும் புரியும், ராஜா சாதாரணமாக அன்று தன் வாழ்வில் ஏற்பட்ட மனப்பதிவுகளை முன்வைக்கிறார் என்பது; இந்த பேட்டி மட்டுமல்ல எல்லா இடங்களிலும் தன் மனப்பதிவுகளை மிகுந்த நேர்மையுடன், துல்லியமான தொடர்ந்த கன்சிஸ்டன்சியுடன், எதை பற்றியும் யாரை பற்றியும் கவலைப்படாமல் முன்வைத்து வருகிறார். அதை நாம் ஏற்பதும் மறுப்பதும் வேறு. ஆனால் அதை அற்பத்தனமாக புரிந்து கொண்டு, பொதுப்புத்தியின் முட்டாள்தனத்துடன் எதிர்வினை செய்வதைத்தான் தமிழ் சமுகம் செய்து வருகிறது. ஒரு மூத்த இசைக்கலைஞரை தான் அவமானப்படுத்தி விட்டதாக ராஜா வாக்குமூலம் தருவதும், வருந்துவதும் இந்த நேர்மையின் வெளிபாடே! அதையும் இந்த அற்பர்கள் திரிக்கிறார்கள். 
இவர்களுக்கு என்ன பிரச்சனை? கவனிக்க வேண்டும். தொடர்ந்து ராஜா ரசிகர்கள் தொட்டா சிணுங்கிகளாக எதிர்வினை செய்வதாக சொல்கிறார்கள். இளையராஜா மீது அவதூறுகளும், வெறுப்புகளும், வசைகளும், பொய்களும், முன்முடிவுகளும், அபத்தமான கூற்றுகளும், முட்டாள்தனமான தீர்ப்புகளும் ஆயிரம் பக்க புத்தகம் எழுதும் அளவிற்கு தமிழ் சூழலில் புழங்குகிறது. ராஜா மீது மதிப்பும் அபிமானமும் கொண்டவன் இதற்கு எதிர்வினை செய்யாவிட்டால்தான் இயல்புக்கு மாறானது. மாறாக இந்த உதாரணத்தில் நடந்தது என்ன? ஒரு சப்பை மேட்டருக்கு, அதுவும் நடந்த ஒரு சம்பவத்தை போகிற போக்கில் சொன்னதற்கு இவ்வளவு வெறுப்பை கக்குகிறார்கள். யார் தொட்டாற்சிணுங்கிகள்? யாரிடம் பிம்ப வழிபாடு உள்ளது? யாருக்கு மனநோய்? 
இந்த மனநோயின் உளவியல் என்ன? எளிய பின்னணியை கொண்ட ராஜா இப்படி ஒரு உயர் ஆளுமையாக பேசுவதுதான் இவர்களுக்கு பிரச்சனை; இந்த உதாரணத்தில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு நன்றியுள்ள பணிவை எதிர்பார்க்கிறார்கள். 
தோழரின் பதிவில் இன்னும் ஜாலியான விஷயங்களை பார்ப்போம். /இந்தப் பின்னணிகள் இளையராஜாவுக்கு அப்போது (இப்போதும்) தெரிந்திருக்காதுதான். ஆனாலும் இப்படிப் பேசுவது ஏன்?/ என்னப்பா லாஜிக்? பின்னணி தெரிந்து பேசும்போதுதானே 'இப்படி பேசுவது ஏன்' என்று கேட்கவேண்டும்; தெரியாமல் இருக்கும்போது வேறு எப்படித்தான் பேசமுடியும்? 
தோழர் இப்படி பதிவை ஆரம்பிக்கிறார். /“அறிவிருக்கா...” கேள்வியால் பலரையும் முகம் சுளிக்கவைத்த இசைஞானி,/ கவனிக்க வேண்டும். ஒரு வெள்ள நிவாரண பணி பற்றி பேசிக்கொண்டிருக்கும் இடத்தில், 'இந்த மனிதாபிமானம் தற்காலிகமாக இருக்க கூடாது, நிரந்தரமாக இருக்க வேண்டும்' என்று ராஜா சொன்ன மறுநொடி 'பீப் சாங் பத்தி என்ன நினைக்கறீங்க?' என்று கேட்ட பொறுக்கி பத்திரிகையாளனை பார்த்து ஒரு கம்யூனிஸ்ட் தோழர் முகம் சுளிக்கவில்லை.;அறிவிருக்கா என்று தார்மிக கோபம் கொண்டு கேட்டதற்குதான் முகம் சுளிக்கிறார். ஞாநி தொடங்கி டி என் கோபாலன் குமரேசன் வரை எல்லாரின் தர்க்கமும் எப்படி சாக்கடையில் இருந்து வருகிறது! 
அடுத்த ஜோக் /கம்யூனிஸ்ட்டுகளைக் குறைகூறினால் பலருக்கும் பிடிக்கும், “அறிவிருக்கா” எனக் கேட்டதன் கோபத்தை அது தணிக்கும் என்று கணக்குப் போட்டார் போலும்!/ நான் ஏதோ சும்மா தோழர்களை முட்டாள்கள் என்று சொன்னதாக நினைத்தவர்களுக்கு இந்த அற்புதமான தர்க்கம் சமர்ப்பணம்.
அ.மார்க்சின் பதிவு https://www.facebook.com/marx.anthonisamy/posts/979772082095516
குமரேசன் பதிவு https://www.facebook.com/theekathirasak/posts/10205763431705994

கலைஞரின் ராமானுஜர் 09/01/2016

கலைஞரின் ராமானுஜரை நான் பார்க்கவில்லை. எனக்கு மந்திரி குமாரிக்கு பிறகான கலைஞரின் எழுத்தாக்கங்கள் சுவாரசியம் கொண்டதில்லை (அரசியல் பேச்சை ரசித்ததுண்டு); ராமானுஜரையும் என் கலை இலக்கிய பார்வையில் ரசித்திருக்க மாட்டேன் என்றுதான் நினைக்கிறேன். ஆனால் கலைஞர் ராமானுஜர் என்று ஒரு தொலைக்காட்சித் தொடரை எழுதினார் என்கிற நிஜம் வரலாற்றுக்கும் சமுகத்திற்கும் முக்கியம். அவரது அரசியலுக்கு இயைந்து அவர் ஒருவேளை திரித்திருந்தாலும் கூட, அவர் ராமானுஜர் பற்றி தான் நல்லதாக கருதுவதைத்தான் சொல்லியிருப்பார். அந்த வகையில் தனது நாத்திகம் சார்ந்த வறட்டு அரசியல் நேருக்கு எதிராக அவர் செயல்படுகிறார். இதை சமரசமாக பார்க்கமுடியாது; தீபாவளி மேட்டரில் கூட சமரசம் செய்யாத அவருக்கு, இப்படி ஒரு சமரசம் தேவையுமில்லை; அப்படியே சமரசமாக இருந்தாலும், அதை பார்ப்பன மற்றும் இந்துத்வ மனம் ரசிக்கக்கூட இல்லை. இதை சமரசம் என்பதை விட அரசியல் இறுக்கத்திற்கு எதிரான நெகிழ்வு என்றுதான் கொள்ள வேண்டும். துரதிர்ஷ்டவசமாக கலைஞரின் இந்த நெகிழ்வின் மீது திராவிட கருத்தியலுக்கு எதிரானவர்கள் வெறுப்பை கக்கினர். நெகிழ்வின்றி அமையா அரசியல் புரியாத சில 'பகுத்தறிவு' பற்றாளர்களும், இதற்கும் அவர் வீட்டில் வேதம் ஒலித்ததற்கும் இப்போது திட்டுகிறார்கள். ராமானுஜர் தொடர் எழுதியதை போன்றே, கலைஞரின் தொடரை திருமலா டீவி ஒளிபரப்புவதும் வரலாற்று சமூக முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு.

மொழிக்கொள்கை!

நண்பர் பிரதாப் தீவிர இந்தி எதிர்ப்பாளர். இந்தி எதிர்பாளராக இருந்தும் கூட அவர் இன்னமும் இந்தி கற்றுக்கொள்ளவில்லை; அவ்வளவு தூரம் தன் கருத்துக்கு நேர்மையானவர்! இந்தளவு தன் கருத்துக்கு நேர்மையாக அவர் இருக்க முக்கிய காரணம், அவருக்கு இன்னமும் வட இந்தியாவில் போஸ்டிங் ஆகவில்லை என்பதுதான். இவ்வாறாக இந்தி இன்னமும் கற்றுக் கொள்ளாத காரணத்தால், இந்தியாவில் தொடர்பு மொழி ஆங்கிலமாகவே இருக்க வேண்டும் என்கிற இன்னொரு தீவிர கொள்கையையும் கொண்டவர்; தனது இன்னொரு கொள்கைக்கும் நடைமுறையிலும் மிகவும் நேர்மையாக இருப்பார். உதாரணமாக முன் பின் தெரியாத நபர் யாரைக் கண்டாலும் அவர் தொடர்பு மொழியில்தான் பேசுவார். அவர் சென்னையிலேயே இருப்பதால், அதிலும் குறிப்பாக தமிழர்களிடையிலேயே பெரும்பாலும் பேசுவதால், அவர்களும் அவருக்கு தொடர்பு மொழியான ஆங்கிலத்திலேயே பதில் சொல்லி சந்தோஷத்தை அளித்து வந்தனர். இதுவரை எந்த பிரச்சனையும் வந்ததில்லை. 
நேற்று நண்பர் ஃபோரம் மாலில் சூப்பார் மார்கெட்டுனுள் நுழையப் போனார்; பீகாரில் இருந்து வந்த செகூரிடியான தரம் வீர் அவரை தடுத்தான். 
"வாட்ஸ் த ப்ராப்ளம்?" என்றார் தொடர்பு மொழியில்.
தரம்வீர் பள்ளிக்கு சென்று மும்மொழி திட்டத்தில் இரு மொழிகள் பயின்றிருந்தாலும், பீஹாரில் வாழ்ந்ததால் ஆங்கிலம் மட்டும் மண்டையில் ஏறவில்லை. "ஸாப்.. ஆப்கா பேக் யஹாம் ரக்கியே!" என்றான். 
ஹிந்தியை கேட்டதும் கோபம் மண்டைக்கு ஏறிய பிரதாப், "டோண்ட்..டோண்ட் டாக் இன் ஹிந்தி! திஸ் ஈஸ் டமில்நாடு. டாக் இன் அவர் கனெக்டிங் லாங்வேஜ்" என்றார். 
தரம் வீர் பயந்து, "டீக் ஹை சாப், ஆப் பேக் இதர்.." 
பிரதாப் "திரும்ப திரும்ப இந்தியில பேசறே நீ.." என்கிற வசனத்தை ஆங்கிலத்தில் திரும்ப திரும்ப பேசும் நிலைக்கு ஆளானார். 
தரம் வீர் மேலும் பேச, "திஸ் ஈஸ் டமில்நாடு.. டாக் இன் இங்க்லீஷ் ஐ ஸே" என்று உச்சத்தில் கத்த, என்ன இருந்தாலும் மானஸ்தனான தரம்வீர் கடுப்பாகி "அரே பெஹ்ன் ..த், ஏ இங்கிலேண்ட் ஹை க்யா? இதர் இந்தி மேம் பாத் நஹி கரேங்கே தோ இங்க்லேண்டு மேன் கரேங்கே க்யா?" என்று கேட்டிருக்கிறான். 
கோபமடைந்த பிரதாப் கடையினுள் சென்று மேலதிகாரியிடம் "நான் யார் தெரியுமா?" என்கிற ரீதியில் (தொடர்பு மொழியில்தான்) சண்டை போட, அதற்குள் அங்கு வந்த பிரதாப்பின் சகாக்கள் ஹில்டனும், மரியோனும் அவருக்கு ஆதரவாக சேர்ந்து கொண்டனர். (இருவரும் கூட தீவிர இந்தி எதிர்பாளர்கள்தானாம்.) அவர்களும் கொள்கைக்கு ஏற்ப தொடர்பு மொழியிலேயே அந்த மேலதிகாரியிடம் நடந்த அக்கிரமத்தை தட்டி கேட்டனர். மேலதிகாரி மன்னிப்பு கேட்டார். "நோ… நோ… திஸ் ஃபெல்லொ ஷுட் அபாலஜைஸ்!" என்றார் ப்ரதாப். 
சவுந்திர பாண்டியன் என்ற பெயரை சட்டைப் பைக்கு மேல் பொறித்திருந்த அந்த அதிகாரி, தரம் வீரை இந்தியில் திட்டித் தீர்த்தார்; அவர்களிடம் மன்னிப்பு கேட்கச் சொன்னார். 
வேலையை விட வேறு எதையும் பெரிதாக எண்ணாத தரம் வீர் "மாஃப் தீஜியே" என்று உடனே உருக்கமாக மன்னிப்பு கேட்டான். 
சவுந்தர பாண்டியன் பதறி, "ஸாரி போலோ!" என்றார். 
"ஸாரி சாப்" என்றான் தரம் வீர். 
எல்லாம் முடிந்தபின், பிரச்சனையின் இடையில் வந்திருந்த நான் தரம் வீரிடம் "என்ன ப்ரதர் ப்ராப்ளம்?" என்றேன்.
"தெரியலை சார், பேக் உள்ளே வைங்கோன்னேன். அவ்ளோதான்… அதுக்கு இத்தனை பண்ணிட்டார்" என்றான் சோர்வுடன்.
(முழுவதும் கற்பனையல்ல; கொஞ்சம் கற்பனை கலந்தது.)

அறிவு விரோதத்தின் விவஸ்தை (28/12/2015)