Saturday, March 20, 2010

துளியுரைகள்-6 (டாடாவின் ஈடு இணையற்ற கொள்ளை).

(இந்திய முதாலாளித்துவ வரலாற்றில் டாடாவின் கொள்ள பற்றிய குறிப்புகளாக நான் இட்ட ட்விட்கள் கீழே.)

4:51 PM Sep 20th, 2008
சென்ற நூற்றண்டின் ஈடு இணையற்ற மிக பெரிய கொள்ளையாக இஸ்ரேலின் நிலத்திருட்டை தகவல்களுடன் படம் காட்டி இணையத்தில் யாரோ விளக்கியிருந்தார்கள்.


4:54 PM Sep 20th, 2008
இந்தியாவில் சென்ற நூற்றாண்டின் ஈடு இணையற்ற மிக பெரிய கொள்ளையாக டாடா கும்பல் இது வரை நடத்தி வருவது எனக்கு தெரிகிறது - ஆனால் இது வெளிப்படையானது அல்ல
.
6:36 PM Sep 20th, 2008
டாடா தொடர்ந்த அரசுகள் மூலம் அடித்ததையும், அதற்கு கையாண்ட முறைகள், பெற்ற சலுகைகளை கேபிடலிஸ பொருளாதார நிபுணர் கூட நியாயப்படுத்த மாட்டார்

6:40 PM Sep 20th, 2008
விவசாயிகளிடம் நேரடியாக பேரம் பேசி, சந்தை விலைக்கு அதிகம், உரியவர்க்கு லஞ்சம் கொடுத்து, தொழில் மூலம் கொள்ளை லாபம் ஈட்டுவது கேபிடலிஸம்

6:44 PM Sep 20th, 2008
அரசாங்கமே அடிமாட்டு விலைக்கு பிடுங்கி தருவதில், தொழில் செய்து கொழித்து, அதே நேரம் நேர்மையாக தொழில் செய்வதாய் பேரும் புகழும் பெறுவது டாடாயிஸம்

9:19 PM Sep 20th, 2008
இந்திய முதலாளித்துவத்தில் அதிகமாய் கலச்சாரங்களை அழித்தவர்கள், அயோக்கியத்தனங்கள் செய்தவர்கள், அரசு வன்முறையை பயன்படுத்தியவர்கள் டாடாதான் என்று தோன்றியது

9:21 PM Sep 20th, 2008
கேபிடலிசத்தை மனித இனம் வந்தடைந்த சமூக வடிவங்களிலேயே மீக்கொடுரமானது (extremely ruthless) என்று நினைக்கிறேன். டாடா முதலாளித்துவ இயல்புகளையும் மிஞ்சி, மீதமிருக்கும் நியாயங்களையும் விழுங்கி விட்டதாக தோன்றுகிறது.

11:39 PM Sep 20th, 2008
விளக்கம்: கலாச்சாரத்தை அழிப்பது என்று நான் சொன்னது டீ எஸ்டேட்டை வைத்து அல்ல; ஒரிசாவிலும், ஜார்கண்டிலும் நடப்பதை.

11:41 PM Sep 20th, 2008
ஒரு உதாரணமாய் migrating labourஆக அங்கிருந்த பெரும் மக்கள் கூட்டம் மாற்றப்பட்டிருப்பதை; அதற்கு பின் டாடாவும், டாடாவின் கையாளாக செயல்படும் அரசாங்கமும் இருப்பதை அறியலாம்.

11:47 PM Sep 20th, 2008
Nottingham என்ற இங்கிலாந்து நகரத்தின் கீழே இருந்த நிலக்கறி , அந்த நகரவாழ்க்கையழகுக்கு எந்த பங்கமும் இல்லாமல் தோண்டி எடுக்கப்பட்டிருக்கிறது

11:48 PM Sep 20th, 2008
இந்தியாவிலும் பிரிடீஷ் இந்தகைய miningஇல் (உண்மையான பொருளில்) ஈடுபட்டிருக்கிறார்கள். கீழே தோண்டிஎடுத்து அதை மணலால் நிரப்பி, மேலே விவசாயத்தை தொடர்வது என்று.

11:50 PM Sep 20th, 2008
எனக்கு கிடைத்த தகவலின் படி டாடாதான் முழுமையாய் அந்த பகுதியையே நாசப்படுத்தும் open mining என்பதை துவங்கினார்கள்; டெல்லி மாஃபியா அனுமதித்தது.

Friday, March 19, 2010

துளியுரைகள்-5.

5:06 PM Sep 12th, 2008
LHC சோதனை பற்றி DC யின் வந்த கருத்துக்களில், 'உலகம் அழியுமென ஒரிசா கோவிலில் சரணடைந்தவர்களினுடையதை விட, ஐஐடி மாணவர்களினுடையது முட்டாள்தனமாக பட்டது

11:06 AM Sep 13th, 2008
நேற்று 'அட்டகுறிக்கி' என்ற கிராமத்தில் IAF `சும்மா' பாம் போட்டிருக்கிறது. இது விபத்துதானா என்று செய்திகளில் உறுதிப்படுத்த IAFஇடம் தகவல் இன்னும் இல்லை

11:09 AM Sep 13th, 2008
8.45க்கு பதில் 8.00 மணிக்கு பாம் போட்டிருந்தால் பல பள்ளி சிறார்கள் உயிரிழந்திருப்பார்கள் என்கிறார்கள்

(இதற்கு பிறகு இந்த நிகழ்வு குறித்து செய்திகள் எதுவும் இல்லை.)

11:12 AM Sep 13th, 2008
விபரீதமாக நிகழ்ந்து மீண்டும் மீண்டும் இப்படி நடந்தால் சாலை மறியல், கண்டனங்கள், பிரதமருக்கு கலைஞரின் கடிதம் என்று பரபரப்பாகி பின் அடங்கும்.

11:15 AM Sep 13th, 2008
பின் நம் மீனவர்களை இந்தியா சிங்களப்படையை அமர்த்தி போட்டுத் தள்ளும் (மௌனம் சம்மதம்!) யதார்த்தம் போல இதையும் ஏற்றுகொண்டு அலுவலை கவனிக்கலாம்.

1:46 PM Sep 14th, 2008
அறிவியல் இயற்கையை புரிந்து கொள்ளும் (புரிதலை வெளிப்படுத்தும்) சட்டகம் அனுமானங்கள் கொண்டது; நடைமுறையில் முழுமையான (பொருளில்) கறார்தனம் கொண்டது அல்ல

1:46 PM Sep 14th, 2008
சில சந்தர்ப்பங்களில் அறிவியலை முன்வைத்த அதிகாரம் கலந்த ஆணவமான 'தெளிவை'விட, மூடநம்பிக்கை ஆபத்து இல்லாதது என்பது என் கருத்து

1:49 PM Sep 14th, 2008
தங்கள் சட்டகத்தில் தெளிவின் பாற்பட்டு முழுமையாய் சிலரின் அறிவிற்கு சரியாக இருந்தும், 90% மக்கள் (முட்டாள்தனமாக கூட) பயப்பட்டால் இந்த சோதனைக்கு அறம் சார்ந்து உரிமை இல்லை என்று நினைக்கிறேன்.

1:50 PM Sep 14th, 2008
' இந்த பாழும் உலகம் போனால் போய் தொலையட்டுமே' என்று எனக்கும் பலமுறை தோன்றுவதுதான்; எல்லோருக்கும் சேர்ந்து முடிவெடுக்க முடியுமா எனபது வேறு விஷயம்

7:25 PM Sep 14th, 2008
http://tinyurl.com/5tse7e கவர்ந்த உருவகம் "நெகிழ்ச்சியான ஒரு சமூக அமைப்பில் உள்ளுறை முரண்பாடுகள் சமூகச் சக்கரத்தை முன்னிழுக்கும் உராய்தல் சக்தியாகின்றன."

11:13 PM Sep 17th, 2008
'ஊத்திகினு கடிச்சுக்கலாம்..' ப்ிறகு 'வாழைமீனுக்கும்.." என்றொரு வரிசையில் 'நாக்க மூக்க' வரலாற்று முக்கியத்துவமாக எனக்கு தெரிகிறது

9:54 PM Sep 19th, 2008
ஒருவகையில் 'ராஜபார்வை'தான் 'மொழி'யாக உருமாறியிருக்கிறது. ராஜபார்வை ஒடாததன்/இன்று மொழி ஹிட்டானதன் பின்னணிகள் + விளைவுகள் +காலமாற்றம் பேசவேண்டியவைகளாக இருக்கிறது.

Wednesday, March 17, 2010

துளியுரைகள்-4.

11:51 PM Sep 3rd, 2008
மலைப்பாதையில் நிறுத்தத்தில் அவன் இறங்கிய 8 வது நிமிடத்தில் விபத்து நடந்து எல்லோரும் காலி. 'நான் இறங்கிருக்க கூடாது' என்று நினைக்கிறான். ஏன்?

1:29 PM Sep 5th, 2008
'சுப்பிரமணிய புரத்'தில் 'சிறு பொன் மணி' பாடல் துண்டு ஒரு முக்கியமான பாத்திரத்தை வகிக்கிறது என்ற என் யூக முடிவை படம் பார்த்த இரு நண்பர்கள் ஆமோதிக்கிறார்கள்

1:30 PM Sep 5th, 2008
பெல் பாட்டம், ஜாரி என்று obviousஆன சமாச்சாரங்களை பற்றி எல்லாம் 'ஆழமாய்' பேசி விமர்சிக்கும் சாருவிற்கு இந்த பாடலின் முடிச்சு தென்படவில்லை.

1:36 PM Sep 5th, 2008
20 ஆண்டுகள் கழித்து ராஜாவின் இசை வேறு ஒரு இடத்தில் முற்றிலும் வேறு பட்டு இயங்குவது புரியவில்லை. அய்யோ பாவம்!

1:57 AM Sep 7th, 2008
துப்புரவு தொழிலாளர்களை நிரந்தரப்படுத்துவதை சாதனை பட்டியலில் மாயவதி அடுக்குவது தலித் அரசியலுக்கான மிக பெரிய துரோகம் என்று நினைக்கிறேன்.

1:01 AM Sep 8th, 2008
முந்நாள் underworld donஆக இருந்த முத்தப்பா ராய், திருந்தி real estate businessஉம், ஜெய் கர்நாடகா அமைப்பையும் நடத்தி வருகிறார்

1:04 AM Sep 8th, 2008
ஹோகனேகல் பிரச்சனையில் கூட நாராயண கௌடா, வட்டாள் நாகராஜுடம் ஒப்பிடும்படி 5000 பேருடன் கலாட்டாவில் கலந்துகொண்டவர்

1:06 AM Sep 8th, 2008
பல வருஷங்களாய் 'கற்றது தமிழ்' எடுக்க முடியாமல் அலைந்த ராம், முத்தப்பா ராயின் ஃப்ண்டிங்கில்தான் எடுக்க முடிந்ததாம்.

1:09 AM Sep 8th, 2008
முன்னாள் டான் மற்றும் தமிழர்களுக்கெதிரான கன்னட தேசிய அரசியல் நடத்துபவர் பணத்தில் 'கற்றது தமிழ்' எடுத்த தார்மீகம் பற்றி எழுதவரவில்லை
.
1:10 AM Sep 8th, 2008
இந்த தமிழ் சினிமா வியாபாரம் எவ்வளவு விநோதமாக இருக்கிறது என்று மட்டும் சொல்ல வந்தேன்.

Tuesday, March 16, 2010

காலி செய்த இளையராஜா.

டிஎம்மெஸ்ஸை ஓய்த்து கட்டியது இளையராஜா என்று ஒரு கருத்து பரவாலாக நிலவுகிறது. பெயரிலி கூட இந்த காரணத்தினாலேயே ராஜா மீது ஒரு கோபம் இருந்ததாக ஒருமுறை சொல்லியிருந்த நினைவு. இந்த நம்பிக்கைகளில் நியாயம் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை. இளயராஜா வருவதற்கு முன்னமேயே எம்.எஸ்.வி. பல புதியவர்களை அறிமுகம் செய்து, டிஎம்மெஸ்ஸின் ஆதிக்கத்தை வெகுவாக குறைத்திருந்தார். அன்றய திரையிசை இருப்பில் மிக முக்கியம் வாய்ந்த எம்ஜியார் பாடல்களிலேயே, ஜெயசந்திரன் வரை பலர் அறிமுகமாகியிருந்தார்கள். மேலும் இளயராஜா முன்வைத்த இசை முற்றிலும் புதியது; அதற்கு டிஎம்மெஸ் பொருந்தமாட்டார்; அன்றிருந்த மற்றவர்களே அதிகம் பொருந்தினார்கள். டிஎம்மெஸ்ஸிற்கும், ராஜாவுக்கும் உரசல் இருந்திருந்தால் கூட, ராஜா திட்டம் போட்டு வாய்ப்பு தராமல் ஓய்த்து கட்டுவதற்கு யதார்த்தத்தில் எதுவுமில்லை; ராஜாவின் இசைக்கு டிஎம்மெஸ் பயன் பட்டிருக்க மாட்டார் என்றுதான் எனக்கு தோன்றுகிறது.

ராஜா டிஎம்மெஸ்ஸை ஓய்த்து கட்டினார் என்று சொல்ல முடியாவிட்டாலும், இன்னொரு பொருளில், டிஎம்மெஸ்ஸை தமிழ் பொது ரசனையில் அந்நியப்படுத்தினார் என்று எனக்கு தோன்றுகிறது. அது இளையராஜா சுயநினைவுடனோ, வலிந்து திட்டமிட்டோ செய்தது அல்ல. வரலாற்றின் போக்கில், ஒன்றின் இருப்பு இன்னொற்றை பாதிக்கும், ரசனையின் தவிர்க்கவியலாத அழகியல் கட்டமைப்பு பின்னல்களால் நிகழ்ந்தவை. டிஎம்மெஸ் ஏற்கனவே பொக்கிஷங்களை தமிழர்களுக்கு தந்து விட்டார். காலகாலத்துக்கும் போற்ற வேண்டியவைகளை அளித்த பிறகு, அவர் புதிதாக இளையராஜாவின் தோன்றுதலுக்கு பிறகு செய்ய எதுவுமில்லை. ஆதலால் ஓய்த்து கட்டுவதற்கு, டிஎம்மெஸ் பாடாத எதிர்கால பாடல்களில் எதுவுமில்லை. அவர் பாடிய பாடல்களை நினைவில் கொண்டு போற்றி கொண்டாட வேண்டிய, எதிர்கால தமிழர்களின் அழகியல் ரசனையை முற்றிலும் எதிராக மாற்றியதன் மூலம்தான் இந்த ஓய்த்து கட்டுதல் நடக்கிறது என்று எனக்கு தோன்றுகிறது.

உதாரணமாக ஹிந்தி திரையிசையை எடுத்துக் கொண்டால் அதற்கு ஒரு இயல்பான தொடர்ச்சி இருக்கிறது. 80, 90, 2000 தலைமுறையை சேர்ந்தவர்களால் கூட எந்த உறுத்தலும் வருத்தலும் இன்றி, பழைய ஹிந்தி பாடல்களில் தங்களை அடையாளம் கண்டு கொள்ளும் வகையில் உள்ளது. இன்றய ஹிந்தி பாடல்களை கேட்பவருக்கு 40லிருந்து 70 வரையான பாடல்களில் அந்நியமாக எதுவும் ஹிந்தியில் இல்லை. தமிழில் திரையிசையின் தொடக்கத்திலிருந்து இளயராஜா நுழையும் காலம் வரை இயல்பான ஒரு தொடர்ச்சி இருப்பதும், இளையராஜா முற்றிலும் புதிய (ஆனால் தமிழ் மண்ணில் வேர்கொண்ட) இசையுடன் நுழைவதை காணலாம். இளயராஜாவிற்கு பின்னான இசை, ராஜாவின் அளித்த இசையின் இயல்பான தொடர்சியாகவும் இருக்கிறது. ராஜாவின் இந்த திடீர் செங்குத்து பாய்ச்சலில் தமிழ் பொதுரசனையை குழப்பி விட்டுருப்பதாக தோன்றுகிறது.

ராஜாவின் இசையில் அடையாளம் கண்டு இசை கேட்க துவங்கியவர்களுக்கு எல்லாம் அதற்கு முந்தய இசை முற்றிலும் அந்நியமாகிவிட்டது என்று சொல்லவரவில்லை. இதற்கான மாற்று உதாரணமாக பலருடன் நானும் உண்டு. (ஆனால் இரண்டுக்குமான வித்தியாசமான உணர்வுகளை தெளிவாக உணர முடியும்.) தமிழ் சமூகத்தின் பொது ரசனை என்பது ராஜாவின் இசையால் புதிய மாற்றத்திற்கு வந்தது. அது பழைய ரசனையை அந்நியப்படுத்தியது என்று தோன்றுகிறது. இவ்வாறே 80களுக்கு பிறகு நவீனமான தமிழ் சமுதாயம் இன்றளவும் டிஎம்மெஸ்ஸை கொண்டாடமலிருக்க இளயராஜா ஒரு முக்கிய காரணமாகிறார். இந்த வகையில் ராஜா டிஎம்மெஸ்ஸை ஓய்த்து கட்டினார் என்பது மட்டுமல்ல, தமிழ் ரசனையில் குழப்பத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்துகிறார் என்று எனக்கு தோன்றுகிறது.

(இதெல்லாம் எதிர்மறையாக எழுதவில்லை, தமிழ் திரையிசையை வளமாக்கும் நல்ல விஷயமாகத்தான் நான் பார்கிறேன்.)

Monday, March 15, 2010

நாஞ்சில்-ஜெயமோகன்-மாடுகள்-ஜீன்கள்.

நேற்றய 'கேணி' கூட்டத்தில், நாஞ்சில் நாடன் மொழியின் ஆளுகைகளை விரித்து பேசிய போது, குறிப்பிட்ட மொழியை தாய் மொழியாய் கொண்டவருக்கு குறிப்பிட்ட முக அமைப்பு ஏற்பட்டு விடுவதாக குறிப்பிட்டார். முக அமைப்பை பார்த்தே அவர் பெங்காலியா, மராட்டியா, தமிழா தெலுங்கா என்று சொல்ல கூடியதை பற்றி சொன்னார். ஆய்வாளர் ஒருவர், குறிப்பிட்ட மொழியை காலம் காலமாக பரம்பரையாக ஒலிப்பதால், அதற்கேற்ப முக அமைப்பு ஏற்பட்டு விடுவதாக அறிவியல் பூர்வமான கட்டுரை ஒன்றை எழுதியிருந்ததாக சொன்னார். எனக்கு இந்த அறிவியல் பூர்வமான விஷயம் உண்மையாக இருக்க வாய்ப்பிருப்பதாகவும், அதே நேரம் முழு உண்மையாக இருக்க முடியாது என்ற நம்பிக்கையும் உள்ளது.


நாஞ்சில் சொன்ன தகவல் எனக்கு Mark Kac எழுதிய (ஹெர்மான் வெய்ல் தொடங்கிய) "Can we hear the shape of a drum?" கேள்வியை நினைவுக்கு கொண்டு வந்தது. (நான் அறிவியல் சம்பந்தமாக எழுத நினைக்கும் விஷயத்தில் இதுவும் ஒன்று. ஆர்வமுள்ளவர்கள் இணையத்தில் தேடினால் முழு தகவல்களும் கிடைக்கும்.) இந்த கேள்விக்கான பதில் 'முடியும், ஆனால் முழுவதும் முடியாது' என்பதாக வே இருக்கிறது. நாஞ்சில் குண்ட்ஸான விஞ்ஞானம் கலந்து சொல்வதற்கு பின்னும் பதில் இப்படியே இருக்கும் என்று பட்சி சொல்கிறது.

இதை தொடர்ந்து நாஞ்சில், ஜெயமோகன் 'கோயம்புத்தூரிலிருந்து கேரளாவிற்கு கசாப்பு செய்ய மாடுகள் கூட்டமாக கொண்டு செல்லப்படுவதை' முன்வைத்து எழுதிய புனைகதை ஒன்றை குறிப்பிட்டார். நான் கதையை படித்ததில்லை. நாஞ்சில் நாடன் கதை சொன்னபடி, ஜெயமோகனின் கதையில், கசாப்பு செய்யும் பழக்கம் நின்று போய் பல ஆண்டுகள் ஆகிய பின்னும், இந்த கசாப்பு செய்யும் விஷயம் மாடுகளின் ஜீன்களில் கலந்து, மாடுகள் பால் வற்றி உழைக்கவியலாமல் (மனிதனுக்கு) பயனற்று போன பருவத்தில், தாங்களே கசாப்புக்கு தங்களை ஒப்புவிக்கும் பழக்கமாக, கசாப்பு செய்யும் குறிப்பிட்ட இடத்திற்கு செல்வதாக கதை செல்வதாக குறிப்பிட்டார். இந்த கதை விவரிப்பை உருவகமாக கொண்டு, தனிப்பட்ட வாசிப்பை நிகழ்த்தி, கட்டுடைக்கும் நோக்கம் எனக்கு இல்லை. குறிப்பாக கதையை படிக்காமல் அதையெல்லாம் செய்யக்கூடாது என்று நினைக்கிறேன். ஆனால் என் கேள்வி வேறு.

மாடுகளின் ஜீன்களில் கசாப்புக்கு தானே ஒப்புவிக்கும் பண்பு கலந்திருக்குமா, அல்லது கசாப்புக்கு இழுத்து செல்லப்படுவதன் எச்சரிக்கை அதிர்வு கலந்திருக்குமா என்பது. கசாப்புக்கு ஓட்டி செல்லப்படும் மாடு அதை உணரும் தருணத்தில் (அது ஒரு தொடர்ந்த process ஆயினும்) முன்வந்து ஒப்புவிக்குமா, அல்லது ஏதாவது வகையில் எதிர்ப்பு தெரிவிக்குமா? அப்படியெனில் ஜீனில் எந்த செய்தி, எந்த குணமாக கலந்திருக்கும்?

துளியுரைகள்-3.

2:31 PM Aug 30th, 2008
http://tinyurl.com/5aymbd அருந்ததி மேல் மிகுந்த அன்பும், அவரது அபுனைவு எழுத்தின் மீது மிகுந்த மதிப்பும் உள்ளதால் அவரது புது புனைவை, ரவி ஶ்ரீனிவாஸ் போல் 'பாடாவதி' என்று சொல்ல முடியவில்லை.

1:21 AM Aug 31st, 2008
http://www.shobasakthi.com/shobasakthi/?p=176 வெகு நாட்களுக்கு பிறகு அ.மார்க்ஸின் மிக அருமையான கட்டுரையை படித்தேன்

1:45 AM Aug 31st, 2008
தமிழச்சி தங்கபாண்டியன் என்பவரின் முகம் அவரது 'கவிதை'யை விட பரிச்சயமாகிவிட்டது. முதலில் புத்தகச் சந்தை போஸ்டர்களில்..போஸ்டர்களில்.. 'வார்த்தை'யில், தீராநதியில்..

1:46 AM Aug 31st, 2008
தமிழச்சியின் ஓரிரண்டு கவிதையை பார்த்தது எங்கே என்று நினைவில்லை; நமக்கு ஒத்து வராது; ஆனால் முகம் எல்லா இடங்களிலும் பார்க்க பிடித்திருக்கிறது.

11:06 AM Aug 31st, 2008
'அன்பே சிவம்' படத்தில் 'சேதி' சொல்லி கூத்து நடத்தும் வீதி கம்யூனிஸ்டுகள் (சிவப்பிற்கு பதில்) ஏன் கருப்பு அணிந்திருக்கிறார்கள்?

8:31 PM Aug 31st, 2008
இன்று சென்னையில் மராத்தானாம். நல்ல விஷயத்திற்கென நினைக்கிறேன். ஆனால் நம்ம ஊரில் பெரும் பிரச்சனை தராமல் நடத்த இயலாத இதெல்லாம் தேவைதானா?

8:35 PM Aug 31st, 2008
இப்போதுதான் உறைக்கிறது. சென்னையில் இந்த ஊர்வலம் என்று ஒன்று விஷயம் தொல்லை தருவது நின்று விட்டது போல!

(குறிப்பு: பிறகு ஒரு வருடம் கழித்து விஜய்காந்தின் ஊர்வலம் சென்னையை ஸ்தம்பிக்க வைத்ததை கண்டேன். இடையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்கள்.)

8:58 PM Aug 31st, 2008
'மோடிக்கு விசா மறுப்பு' என்று செய்தி வருவதில் ஒரு அரசியல் முக்கியத்துவம் இருப்பதால், மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

9:04 PM Sep 1st, 2008
ராவணா சீதையை தரமாட்டியா?' ̀ராக்ஷஸா, ராணியை தரமாட்டியா?'வாக மாறியதற்கு என்ன இந்துத்வா தலையீடு என்று தெரியவில்லை

9:08 PM Sep 1st, 2008
ஆனால் `கென்யா ஜெயித்த' dairy milk விளம்பரம் மிக திறமையாக தேசியவாதத்தை நக்கல் செய்கிறது. இன்னும் எதிர்ப்பே வராதது ஆச்சரியம்!

9:09 PM Sep 1st, 2008
ஆனால் கென்யா தவிர வேறு எந்த நாடு ஜெயித்திருந்தாலும் களேபரமாயிருக்கும்.

80களின் மந்தம்.

(கீழே பதிவில் இருக்கும் கருத்துக்கள் நான் உறுதியுடன் நம்பி ஆதரவாக வாதம் செய்யக்கூடிய கருத்துக்கள் அல்ல; பரிசீலனை செய்து கருதுகோள்களாக வளர்தெடுக்கும் நோக்கில் எழுதப்பட்டுள்ளன. )

தமிழகத்தின் எண்பதுகள் நவீன மாற்றங்களின் ஒரு இடை நிறுத்தமாக, பல விதங்களில் ஒரு குழப்பம் கொண்ட ரெண்டும் கெட்டான் நிலைமையில் இருந்ததாக தோன்றுகிறது. 80களின் பல மோஸ்தர்கள் மாறு வேஷத்தில் கூட, எதிர்கால தமிழ் வாழ்வில் இனி என்றும் குறிக்கீடு செய்யாது என்று நினைக்கிறேன்.

80 களின் முக்கிய பிரச்சனையாக தோன்றுவது படித்த, ஓரளவு படித்த பல இளைஞர்களின் 'வேலையில்லா திண்டாட்டம்'. இன்று வறுமையும், வறியவர்களின் வாழ்க்கை போராட்டமும் இன்னமும் தீவிரமானாலும், இந்த குறிப்பிட்ட பொருள் கொண்ட 'வேலையில்லா திண்டாட்டம்' என்பது இன்று இல்லாமலாகிவிட்டது என்றுதான் சொல்லவேண்டும். +2படித்து விட்டு வேலையே கிடைக்கவில்லை என்று இன்று யாராவது சொன்னால், சோம்பேறியாக அல்லது விவரம் தெரியாதவராக இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. 80களின் வாழ்க்கையை திரைக்காவியமாக்கிய 'சுப்பிரமணியபுரம்' கதையின் பிண்ணணியில், இந்த வேலையில்லா பிரச்சனை இருப்பதை காணலாம் (வெளிப்படையாக கதையில் பேசப்படாவிடினும்). 80, 90கள் இளைஞர்களின் முக்கிய அன்றாட வழக்கமாக இருப்பது, தெருவில் ஏதாவது ஒரு நண்பர்கள் சந்திக்கும் இடத்தில் கூடி சும்மா நிற்பது. அந்த இடத்திற்கு எந்த நேரத்தில் போனாலும் சும்மா இருக்கும் செட் நண்பன் யாரையாவது சந்திக்கலாம். சிகரெட் பழக்கம் உள்ளவர்கள், இல்லாதவர்கள் என்று சிலர் 35 வயது வரை கூட தெருவுக்கு தெரு சும்மா நிற்பார்கள். நடுத்தர வர்க்க இளைஞர்களின் இந்த சும்மா நிற்கும் பழக்கம் இன்று மிகவும் குறைந்து விட்டது அல்லது இல்லாமலாகிவிட்டது.

தமிழ் சினிமாவை எடுப்போம். 80களின் தொடக்கத்தில் புதிய மாற்றங்களும், புதிய முயற்சிகளும் தொடங்க, இன்னொரு புறம் தமிழ் சினிமாவின் பாரம்பரிய பொது அம்சங்களானவற்றில் சில கால இடைவெளியில் ஒருவித மந்த நிலை நீடிப்பதை காணலாம். தமிழ் சினிமா மாறிக்கொண்டிருந்தது. நாடக பாணியை விட்டு யதார்த்ததை படம் பிடிக்க கிளம்பியது. ஸ்டூடியோவை விட்டு கிராமத்திற்கு பாரதிராஜா கொண்டு சேர்த்திருந்தார். ஆனால் அவர் ஒரு பக்கம் தீவிர யதார்தத்தையும் ஒன்னொரு பக்கம் அசட்டு யதார்த்ததையும் கலந்து பதிவு செய்தார். சினிமா யதார்த்தம் என்பது யதார்த்ததை 'இன்னும் யதார்த்தமாக' படம் பிடிக்கும் தன்மை கொண்டதாக மாறிக்கொண்டிருந்த போதும், தமிழ் சினிமா தனது பாரம்பரிய தொடர்ச்சியாக கொண்ட பாடலிசையையும், காமெடியையும் உதற முடியவில்லை. அவைகளும் இந்த சினிமா யதார்த்தத்திற்கு ஏற்ப மாறுதலாகி கொண்டிருந்தது. இவ்வாறான ஒரு மாற்றத்தின் விளிம்பில் ஒரு நெருக்கடி நிலை உருவாவதை காணலாம்.

மௌனியின் 'சாவில் பிறந்த சிருஷ்டி' கதையின் தொன்மத்தை போல், திரையிசையின் நெருக்கடி பிறக்கும் முன்பே அதை இல்லாமலாக்கி, இளையராஜா தனது கற்பனையால் எங்கோ கொண்டு சென்றுவிட்டார்.

தமிழ் சினிமாவின் இன்னொரு முக்கிய அம்சமான காமெடியில் ஏற்பட்ட நெருக்கடியில் மந்த நிலை கொஞ்ச காலம் நீடித்ததை உணரலாம். ஒய்.ஜி.மகேந்திரன், குண்டு கல்யாணம், பிந்து கோஷ் என்று தமிழ் சினிமா பொது ரசனைக்கு ஒவ்வாத அசட்டு காமெடியன்கள் மையத்திற்கு வந்தார்கள். 80களின் மத்தியில் கவுண்டமணி, பின் கவுண்டமணி + செந்தில் இந்த வெளியை கைப்பற்றி காமெடியை வேறு தளத்திற்கு கொண்டு சென்று, இந்த மந்த நெருக்கடி சமாளிக்கப்பட்டது. ஆனால் மற்ற விஷயங்களில் இந்த நெருக்கடி தொடர்ந்தது.

பாடல்காட்சிகளும் குறிப்பாக டான்ஸும் மிக பரிதாபமான ஒரு நிலையை 80களில் அடைந்ததை, மதியம் டீவியில் ஏதாவது ஒரு சினிமாவை பார்த்து தெரிந்து கொள்ளலாம். தமிழ் சினிமாவின் நடிப்பு என்பது (அவா ஊதினா இவா வருவா) அசட்டுத்தனத்தை கடந்து வருவதற்கு முன்னமேயே, ஆடல் பாடல் என்பது மிகுந்த வளர்ச்சி கண்டிருந்தது. தொடர்ந்து இசையும், ஆடல் என்பதும் எந்த காலகட்டத்திலும் சோடை போனதில்லை. ஆனால் 80களின் பாடல்களில் மட்டும் இசைக்கு எந்த தொடர்பும் இல்லாத டான்ஸ் பதிவாகியிருப்பதை உணரலாம். கதையின் நாயகி ஒரு பரத நாட்டிய ஆட்டக்காரியாக இருந்தாலும் கூட மிக கேவலமான ஒரு டான்ஸ் போதும் என்கிற நிலை இருந்தது. (உதாரணம்: காதல் ஓவியம்). கமலஹாசன், ஆனந்த் பாபுவின் சுமாரான ஆட்டம் மிகையாக புகழப்பட்டது (சலங்கை ஒலி வேறு விஷயம்.) இன்றய டீவி சேனல் ரியலிடி ஷோக்களில் ஆரம்ப சுற்றில் இருப்பவர் காட்டும் திறமையில் சிலதை கூட 80களில் யாரும் காட்டியதில்லை. (ஆனால் ஆடல் என்பது மிக தீவிரமான ஒன்றாக தமிழ் சினிமாவிற்கே வெளியே இருந்தது.) இவ்வாறாக நீடித்த இந்த நெருக்கடி 90களில் சமாளிக்கப்பட்டு பிரபுதேவா போன்றவர்களால் வேறு தளத்திற்கு சென்றது.

Sunday, March 14, 2010

'கேணி'யில் நாஞ்சில் நாடன்.

இன்றய ' ̀கேணி' கூட்டத்தில் நாஞ்சில் நாடனின் பேச்சு என்னளவில் மிக சிறப்பாக, பயனுள்ளதாக இருந்தது. நான் சற்று தாமதமாக பேச்சினிடையில் சென்றேன். தலைப்பு மொழியை முன்வைத்த ஒன்றாக இருக்கலாம். தமிழ் மொழி என்றில்லாது, பொதுவாக மொழி என்பதன் வளம், அதன் செயல்பாடு குறித்து பேசினார். மிக பரந்த தளத்தில் மொழி சார்ந்த, தமிழ் சார்ந்த பல தகவகல்களுடன் அவர் பேசியதை என்னால் பதிவு செய்ய இயலாது.

அகராதிகளின் முக்கியத்துவம், இன்னும் பலவகை அகராதி+நிகண்டுகளின் தேவை, எழுத்தாளர் அதை பயில வேண்டிய அவசியம் என்பதை அவர் பார்வையில் விளக்குவதாக இருந்தது. பேச்சு வழக்கு, இலக்கியம், செவ்வியல் சார்ந்த தமிழின் பல பரிமாணம் கொண்ட வளம் அழிவதை உணர முடிந்தது. செய்ய வேண்டிய காரியங்கள் இருக்க செம்மொழி மாநாடு நடத்தும் போலித்தனத்த என்ன சொல்லி சாடுவது என்று தெரியவில்லை.

வேறு ஒருவர் நீளமா..க பேசியதன் இடையில் வெகுஜன எழுத்து என்பதன் தேவையும், நியாயமும் பற்றிய (எனது பார்வை சார்ந்த உண்மையான) கருத்தை நான் முன்வைத்தது, அந்த இடத்தில் தேவையற்றது என்று சொல்லிய பிறகு உணர்ந்தேன்.

பயனுள்ள கூட்டம்.ஞாநியும் அவரை சார்ந்தவர்களும் முக்கியமான ஒரு வேலையை, அர்பணிப்புடன் எந்த எதிர்பார்ப்பும் இன்றி செய்கிறார்கள். பங்கு பெற்று, பயனும் பெறுவது நாம் அவர்களின் நல்ல நோக்கத்தை அங்கீகரிப்பதாக இருக்கும் என்று தோன்றுகிறது.

Saturday, March 13, 2010

ஊழலும் தமிழகமும்.

தமிழ்நாட்டின் பல விதமான சீர்கேடுகளை சகிக்கவியலாமல், தமிழ்நாட்டை விட்டு வெளியேறியதாக, வெங்கட்சுவாமிநாதன் தொடர்ந்து பல கட்டுரைகளில் பேட்டிகளில் சொல்லி வந்திருக்கிறார். இந்த தொடர்சியில் மீண்டும் தமிழ் நாட்டுக்கு வந்தபின் ஒரு ரேஷன் கார்டு பெறுவதில் எதிர்கொண்ட ஊழல் சார்ந்த பிரச்சனைகளை முன்வைத்து திண்ணையில் எழுதியிருந்தார். அந்த கட்டுரையை முன்வைத்து நான் இட்ட ட்விட்களை சேர்த்து மாற்றி இங்கே குட்டி பதிவாக்குகிறேன்.

தமிழ்நாட்டை விட லஞ்ச லாவண்யம் ஒரிசாவில் குறைவு என்று வேசா சொன்னால், அதை அவர் மனைவி கூட மனதாரா நம்புவாரா என்று எனக்கு சந்தேகமாக இருக்கிறது. ஒரிசாவின் ஊழல் சிக்கல்கள் எனக்கு சரியாக தெரியாது. ஆனால் உத்தர பிரதேசத்தின் சிக்கல்கள் தமிழ்நாட்டைவிட அதிகம் மட்டுமில்லாமல் அவமதிப்பும், சில இடங்களில் வன்முறையும் கொண்டது என்றறிவேன். திராவிட இயக்க ஆட்சிகள் மீதான தீராத வெறுப்பு இல்லாவிடின் இந்த விஷயம் எளிதில் புரியும்.

லாஞ்சா லாவண்யத்தை விட ஒரிசாவில் எதிர்கொள்ள வேண்டிய அப்பட்டமான பிரச்சனை ஜாதி வெறி. ஒரு ஒரிசா பல்கலை கழகத்தில் இரண்டு மாதங்கள் தங்கியிருந்ததே எனக்கு தாங்கவில்லை. ஒருவேளை இன்னும் நான் கால் வைக்காத குஜராத்தை விட மேலாக இருக்கலாம். `Mandal deserves sandals' என்கிற சுவர் வாசகங்களுடன் பல்கலை கழகம் வரவேற்றது. பல்கலை கழகத்தில் (வேலைக்காரர்கள் தவிர) டிபார்ட்மெண்டில் சந்தித்த அத்தனை பேரும் பார்பனர்கள். ஜாதியின் இருக்கத்தை/ஒழுங்கை நகர் முழுவதும் உணரலாம்.

இந்தியாவிலிருந்து வெளியே சில ஆண்டுகள் வாழ நேர்ந்த போது லஞ்சம், மூன்றாம் உலகம் என்ற வாழ்நிலையுடன் அதற்கு இருக்கும் உறவு, நமது சாதிய அமைப்புடன் அதற்கு இருக்கும் உறவு என்று நிறைய யோசித்திருக்கிறேன். அதை பற்றி விரிவாக எழுத வேண்டும். ஆனால் தமிழ்நாட்டில் எதிர்கொள்ளும் (குறிப்பாக எளிய மக்கள் எதிர்கொள்ளும்) ஊழலை எந்த வகையிலும் நியாயப்படுத்தவியலாது. அதன் மீதான கோபம் என்னை இந்தியன் படத்திற்கு கூட ஆதரவாக்குகிறதுதான்.

இந்தியன் படத்தை பற்றி ஒரு விர்மர்சனம் வந்தது. அரசியல்வாதிகள், உயரதிகாரிகளின் ஊழலை பற்றி படம் பேசாமல் சாதாரண ஊழல்களை பற்றி படம் பேசுவதாக சொன்னார்கள். விமர்சனம் வைத்தவர்கள் ஒரு விஷயத்தை தவற விட்டு விட்டார்கள். முன்னேறிய நாடுகள் என்று சொல்லப்படும் நாடுகளிலும் அரசியல்வாதிகளின், உயரதிகாரிகளின் ஊழல் என்பது யதார்த்தமாக உள்ள ஒரு விஷயம்தான். அங்கே இல்லாமல் நம் நாட்டில் இருக்கும் விஷயம் சாதாரன அரசு ஊழியர்கள் தங்கள் கடமையாக செய்ய வேண்டிய வேலைகளுக்கு கூட வாங்கும் லஞ்சமும், அதற்கான கறாரான வழிமுறைகளும். இதுதான் உண்மையில் ஏழை எளிய மக்களின் அன்றாட வாழ்வை பாதிப்பதாகவும், வாழ்வதையே ஒரு போராட்டமாக மாற்றுவதாக உள்ளது. இந்த பிரச்சனையை முன்வைத்து நிகழ்வதுதான் இந்தியன் திரைப்படத்தின் கதை.

ஆகையால் நான் ஏதோ ஒரு கட்டத்தில், வேறு காரணங்களுக்காக லஞ்சத்தையும் ஊழலையும் சகஜமாக்கி கொண்டு போவதை ஆதரிக்கவில்லை. ஜாதி சார்ந்த வேறு அரசியல்களை முன்வைத்து ஊழலின் தீவிரத்தை உணர்ந்து கொள்வதை மழுங்கடிப்பதிலும் ஒப்புதல் இல்லை.

ஆனால் மூன்றாம் உலகம் என்ற சூழலில், வேறு பல பாதிப்புகளின் நிர்பந்தங்களால், ஊழல் என்பது ஒரு தவிர்க்க முடியாத சமூக யதார்த்தம் என்றாகி போகிற நிலையில், லஞ்சம் வாங்கும் உரிமையை சாதிகளுக்குள் ஒருவகையில் திமுக ஜனநாயகப்படுத்தியுள்ளதாக சொல்வேன். அக்கிரகாரத்தில் மற்றவர்கள் வீடுவாங்க தொடங்கிய பிறகு தமிழ்நாட்டை விட்டு வெளியேறியவர்களுக்கு இதெல்லாம் விளங்க கூடிய விஷயமில்லை.

துளியுரைகள்-2.

2:37 PM Jul 22nd, 2008
தசாவதாரம் `கல்லை மட்டும் கண்டால்..' இரண்டுமுறை டீவியில் பார்த்தேன். (இப்போது காண நேர்ந்தால் சேனல் மாற்றிவிடுவேன்.)


6:03 PM Jul 23rd, 2008
பாடலின் பிரச்சனை கச்சாவாக, மசாலாவாக, ஒரு வறலாற்று வன்முறையை காட்சிப் படுத்துவது அல்ல; அதை பாடலாக நமது கூடத்திற்குள் கொண்டுவருவது

9:47 AM Aug 5th, 2008
மனுஷ்யபுத்திரன் ரஜினி பற்றி எழுதியிருந்ததை படித்தேன். அவர் எழுதியுள்ள அபத்தங்களில் ஒரு உதாரணம் ̀தொடர்ந்து சினிமாக்காரர்களின் அடையாள அரசியல் இரண்டு மாநில மக்களுக்கும் இடையே பகைமை தீயை வளர்த்து வருகிறது'

9:52 AM Aug 5th, 2008
ஒரு ஹிந்திப்படத்தை தமிழகத்தின் ஒரே ஒரு தியேட்டரில் ஒரு நாள் தடை செய்தால் இந்திய ஊடகம் என்னவெல்லாம் தலையங்க ஃபிலிம் காட்டும்? உதாரணம்: ராஜ்தாக்கரே பிரச்சனை. கர்நாடகாவில் நடப்பது பற்றி எவனாவது வாய் திறக்கிறானா?

12:13 AM Aug 14th, 2008
இரவி டீவியில் வரும் (எவ்வளவு தூரம் மக்கள் கேனமாகக்கூடும் என்ற) சுவாரசியங்களில் சில-எனர்ஜி வைத்தியம், ̀எண்ணியல் சித்தர்', சிவராஜ் தாத்தா.

12:17 AM Aug 14th, 2008
சிவாராஜின் வெகுளி பேச்சு தவிர மற்றவை வ.கட்டிய புருடா! மனிதர்களை புரிந்துகொள்ளும் நோக்கில், போரடிக்கும் கேப்பில் பார்ப்பதுண்டு..

12:18 AM Aug 14th, 2008
இதில் ராஜராஜன் என்று ஒரு பேர்வழி, ̀பெயரியல் பேராசான் என்று தனக்கும், வாய்க்கு வந்தபடி மற்றவர்களுக்கும் பெயர் வைத்து கலாய்கிறார்.

12:21 AM Aug 14th, 2008
ராஜேந்தர் இந்தாளால் விஜய ராஜேந்தரானது விஷயமல்ல. இந்தாள் விளம்பரத்தில் எல்லாம் திருமா சிரித்துக் கொண்டிருப்பதை சொல்லத்தான் இவ்வளவும்.

3:12 PM Aug 18th, 2008
ஸோல்ஜெனிஸ்தின் பற்றி திண்ணையில் நரேந்திரன் என்பவர் எழுதியிருக்கிறார். எனது ஆழமான சந்தேகம் இந்தாள் Gulag Archipelagoவின் அட்டையை யாவது பார்திருப்பாரா என்று

3:13 PM Aug 18th, 2008
மஞ்சுளா நவனீதன் என்பவர் ரொம்ப நாள் முன்பு காரல் பாப்பரை பற்றி எழுதியதை விட இது கொஞ்சம் மேலோ என்று தோன்றுகிறது

Thursday, March 11, 2010

துளியுரைகள்-1.

எனது பழைய ட்விட்களை ஒரு வசதிக்காக (எடிட் செய்தபின்) இங்கே அவ்வப்போது எடுத்து சேமிக்கிறேன். மற்றவர்களும் வாசிக்கலாம்.

4:18 PM Jun 26th, 2008
பாமரனின் ராஜாவுக்கான `ப.க.'வை படித்தேன். வழக்கமான மொக்கை. இதில் இந்தியிசை ஆதிக்கத்தை தார்பூசாமல் வெற்றியதாக ராஜாவுக்கு பாராட்டு. என்ன உளரல்!

6:40 PM Jun 26th, 2008
காலம் கழிந்து சொல்வது! தாமதமாகவேனும் பாமகவை கழட்டி விட்டது திமுகவிற்கு மிகவும் நல்லது. திமுகவின் நலன் பற்றி கவலைப்படுகிறவன் என்ற முறையில்.

8:37 PM Jun 26th, 2008
விஜய் டீவியில் மதுரை. சீரியலுக்கே உரிய ஜவ்வு இருந்தாலும், கதையில் எதுவுமே இல்லாவிட்டாலும் கூட.. வசனம் அதுதான் தமிழ் நாடக சினிமாவின் உயிர்நாடி.

9:27 PM Jun 26th, 2008
வெளிப்படையாக குறிப்பிடாவிட்டாலும், `மதுரை'யில் வருவது தேவர் அடையாளம்தான் என்பது தெளிவு. ஆனால் தேவர் ஜாதி பெருமையும், வன்முறையும் கொண்டாடப்படவில்லை

9:28 PM Jun 26th, 2008
ஆனால் தேவர் வாழ்வு கொண்டாடப்பட்டுள்ளது. இப்படி தேவர் அடையாளம் பொதிவாக அமைவது சிலருக்கு பிரச்சனையாக தெரிகிறது. எனக்கு அப்படி தோன்றவில்லை.

9:32 PM Jun 26th, 2008
பிராமண ஜாதி உட்பட எல்லா அடையாளங்களும் (உம்: திஜா) விமர்சனமின்றி புனையப்படலாம். ஆனால் அந்த விமர்சனமின்மை மிக கவனமாக கையாளப்பட்டிருக்க வேண்டும்

9:35 PM Jun 26th, 2008
மதுரை (விமர்சனம் எதுவுமின்றி) , தேவர் சாதி சார்ந்த வாழ்வை கவனமாக கொண்டாடும் உதாரண பிரதியாக எனக்கு தெரிகிறது

9:19 AM Jun 27th, 2008
ஸ்ரீகாந்தின் மதியிறுக்கம் பற்றிய கட்டுரையை நேற்றிரவு படித்தேன். தொடர்ந்த பதிவுகளாக எழுதிய போது, வழக்கமான காணாமல் போதலில் தவறிட்டது

9:23 AM Jun 27th, 2008
மயிலாடுதுறை சிவா ஒருமுறை சொன்னதால் மீனாட்சியின் கட்டுரையை அறிந்தேன். ஆழமும் உணர்வும் கொண்ட கட்டுரை. டெக்னிகலாக இருந்தும் கண்ணீர் வந்துவிட்டது

12:32 PM Jun 27th, 2008
`ஒண்ணு சொன்னா தப்பா நினைக்க கூடாது' என்று பேச்சை துவங்குவதன் பின்னுள்ள வன்முறையை ஒரு கவுண்டமணி செந்தில் வசனம் முதலில் சிந்திக்க தூண்டியது


12:58 PM Jun 27th, 2008
"அண்ணே, ஒண்ணு சொன்னா தப்பா நினைக்க மாட்டீங்களே!" "டேய், நான் தப்பா நினைக்காத மாதிரி நீ சொல்லுடா நாயே!"

12:35 PM Jun 27th, 2008
தப்பாக நினைக்க கூடியது என தெரியும் என்பதால்தான் இந்த பீடிகை.; ஒரு நாசுக்கு தடையை உண்டாக்கி எதிராளி எதிர்வினையாற்றாமல் பார்த்துக் கொள்கிறது

12:51 PM Jun 27th, 2008
பல சாதிய வக்காலத்துக்கள் இப்படி துவங்குவதை பார்க்க முடியும். நான் அவதானித்து இதற்கு பொருத்தமான எதிர்வினையை உரியவரிடம் கண்டதில்லை; அசடு வழிதலை மட்டுமே!

Tuesday, March 9, 2010

'Disgrace'

disgrace திரைப்படம் குறித்த 2 விமர்சனங்களை இன்று படித்தேன். ஒன்று எஸ். ராவினுடையது, மற்றது ராஜசுந்தராஜனுடையது. இரண்டுமே சிறந்த நுட்பமான விமர்சன பார்வைகளை கொண்டது; வாசிக்க சுவராசியமாக இருந்ததாகவே கருதுகிறேன். சற்று வேறு வகையில் தோன்றும் சில கருத்துக்கள் மட்டும் இங்கு. இருவரது விமர்சனங்களிலும் சில தகவல் பிழைகள் இருப்பதாக எனக்கு படுகிறது. (உதாரணமாக, 1. எஸ்ரா சொல்வது போல லூசி மீதான பாலியல் வல்லுறவு பேராசியர் டேவிட்டின் கண்ணெதிரே நடைபெறவில்லை. இது முக்கியமான ஒரு முடிச்சு என்பதாகவே நான் கருதுகிறேன். படத்திலும் இதை வலியுறுத்தி இரண்டு இடங்களில் வசனங்கள் வருகிறது; 2. ராஜசுந்தர்ராஜன் சொல்வது போல மெலனி என்ற மாணவி கருப்பின பெண்மணி கிடையாது; கலப்பின பெண்மணி. அவள் நடிக்கும் ஒரு பகடி நாடத்தில் `here comes the coffee' என்று ஒரு வசனம் வருகிறது.)

எஸ்ராவின் விமர்சனம் என்னை சற்று ஆச்சர்யத்திலாழ்தியது. 'கசக்கும் காமம்' என்ற தலைப்பில் பாலியல் சார்ந்த பிரச்சனைகளை கையாளும் திரைப்படமாக அவர் வாசித்திருப்பது. அத்தோடு ஆப்பிரிக்க குற்றவுலகம் சார்ந்த புறச்சூழலை கதைப்பின்னணியாக மட்டும் கொண்டிருப்பதாக அவர் சொல்வதாக தோன்றுகிறது. படம் முடிந்தவுடன், விவாதத்தை துவக்கிய பைத்தியக்காரன் இதை காமம் சார்ந்த பிரச்சனைகளை அணுகும் படமாக பார்க்க முடியுமா என்று கேட்டார். என் கருத்தாக அப்படி பார்க்க முடியாது என்றேன். பாலியல் தொடர்பான பிரச்சனைகளை படம் தீவிரமாக அணுகினாலும் படத்தின் பிரச்சனைகள் கருப்பின, வெள்ளையின கலாச்சாரங்களின், நியாயங்களின், மதிப்பீடுகளின், சுதந்திரம் போன்ற கருத்தாக்கங்களின் முரண்களும், மோதல்களுமாகவே இருப்பதாக எனக்கு பட்டது.

அதே நேரம் படம் வெள்ளையர்களின் வன்முறை பற்றி காட்சிப்படுத்தாமல் கதை பேசுகிறது என்பது என் கருத்து. குறிப்பாக எஸ்ரா "அதே நேரம் கறுப்பர்களை விட வெள்ளையர்களே அதிகம் வன்முறையால் பாதிக்கபடுகிறார்கள் என்று கூட்ஸி சுட்டிக்காட்டுகிறாரோ என்ற உள்அரசியலும் புரிகிறது. படம் முழுவதும் கறுப்பர்கள் வன்முறையின் அடையாளங்கள் போலவும் வெள்ளைக்கார்கள் சமாதானப்புறாக்கள் போலவும் சித்திரிக்கபடுகிறார்கள். அது தான் படத்தின் முக்கிய உறுத்தல்." என்பது போல என்னால் பார்க்க முடியவில்லை. தென்னாப்பிரிக்க பின் apartheid படங்களை அது குறித்த (ஏதோ) ஒரு அரசியல் கூற்றாக பார்க்காமல் இருக்கவியலாது என்றே தோன்றுகிறது. படம் மிக subtle ஆக அதை அணுகியிருக்கிறது என்பது என் கருத்து.

ராஜசுந்தர்ராஜன் பேராசிரியர் டேவிட் மாணவி மெலானியை வேட்டையாடியதாக கதைசொல்கிறார். அது சரியான வார்த்தையாக எனக்கு தோன்றவில்லை. நேரடியான பொருளில் அவர் செய்தது ரேப் எனப்படும் பாலியல் வன்முறை அல்ல. ஒப்புதலுடந்தான் அது நடந்தது என்று ஒருவர் வாதம் செய்யும் சாத்தியமுடைய ஒரு செயல்தான். அதே நேரம் அந்த மூன்று கருப்பிளைஞர்கள் செய்தது நேரடியான பொருளில் கூட்டு பாலியல் வல்லுறவு. இவ்வாறு சொல்வதன்- அதற்கு பின்னான ஜனநாயம், ஒப்புதல் என்ற வார்த்தைகளின்-முரண்களை படம் பார்பவர்களின் உள் விவாதத்திற்கு விடுவதாக எனக்கு தோன்றுகிறது.

படம் இவ்வாறாக பல கேள்விகளை நம்முள் விவாதமாக்குகிறது. இது குறித்து விரிவாக எழுத விரும்புகிறேன் என்றால் அது என்னை நானே செய்துகொள்ளும் நக்கலாகிவிடும். எனினும் விருப்பம் யதார்த்தமானால் நல்லது; ஆகாவிட்டால் இங்கே மீண்டும் ஒரு குட்டி பதிவை குறிப்புகளாக எழுதுவேன்.

Sunday, March 7, 2010

வெள்ளை இனவெறியும், தமிழர்களும்.

என் பையனுக்கு நான் ஏற்படுத்தி தரும் சுவாரசிய பொழுதுப்போக்குகளில் ஒன்று நோக்கமற்ற புறநகர் ரயில் பயணம். டிக்கெட் வாங்கும்போது 'பீச் ஒரு ரிடர்ன், வேளச்சேரி ஒரு ரிடர்ன்' என்று இரண்டு முனைகளுக்கும் எடுப்பதை கவுண்டரில் இருக்கும் ஆசாமி விநோதமாக பார்பார்.

இன்றய பயணத்தில் எதிரே உட்கார்ந்திருந்த பெண்மணி, செய்திதாளை கையில் வைத்துக் கொண்டு, கணவர் போன்ற ஒருவரிடம் செய்திகளை (ஏனோ) விளக்கி கொண்டிருந்தார். ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் தாக்கப்படும் பிண்ணணியில், கடைசியாக 3 வயது குழந்தை இறந்த செய்தி; பெண்மணி அந்த செய்தியை முன்னால் வைத்து கொண்டு, ஆஸ்திரேலியாவில் வெள்ளை இன வெறியால் தமிழர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதாக கதையாக சொல்லிக்கொண்டிருந்தார். அந்த குழந்தையையும் முன்வைத்து இப்போது கடைசியாக ஒரு 3 வயது தமிழ் குழந்தை கொல்லப்பட்டுள்ளதாகவும் சொல்லிகொண்டிருந்தார். நான் ஆச்சர்யத்தில் கவனிக்க தொடங்கினேன். (அவர் கையில் இருந்த செய்திதாளில் வட இந்திய முகம் கொண்ட குழந்தையின் படமும், பெயர் குருஷன் சிங் என்றிருப்பதையும் பிறகு கவனித்தேன்.) சுமார் 10 நிமிடங்கள் இதுவரை தாக்கப்பட்ட முன் கதைகளில் இயல்பான கற்பனை சேர்த்தும், சில இடங்களில் மிகையாகவும், வட இந்தியர்களை மட்டும் தமிழர்களாக பதிலிட்டு கதை சொல்லிக்கொண்டிருந்தார். இரண்டு முறை, 'தமிழர்கள்தான் என்றி நிச்சயமா தெரியுமா?' என்று கேட்டு, இடையீடு செய்ய நினைத்து செய்யவில்லை. தமிழர்கள் தாக்கப்படுவதாக கதை கற்பித்து கொள்வதில் நமக்கிருக்கும் உளவியலின் பகுதியாக இதை எப்படி புரிவது என்று யோசித்து கொண்டிருந்தேன்.

அவர் பேசுவதை நிறுத்திவிட்டது போன்ற இடைவெளி விழுந்த போது 'இலங்கைல தமிழர்கள் ஆயிரக்கணக்கில கொல்லப்பட்டது பத்தி நீங்க என்ன நினைக்கறீங்க?" என்று கேட்டேன். அந்த பெண்மணி என் திடீர் கேள்வில் திடுக்கிட்டு, சற்று முறைத்து விட்டு, வேறு பக்கம் திரும்பி அமைதியானார். கணவனும் என்னை முறைத்தான்.