Monday, March 18, 2013

அறச்சீற்றச் சந்தை நிலவரம்.


ஞாநி பாலாவின் 'பரதேசி'யை முன்வைத்து எழுதியதற்கு எதிர்வினையாக, ஜெயமோகன் ஞாநியை துவத்து அலசியிருப்பதை வாசித்தேன். ஜெமோ எழுதியது சரியா என்று ஆராய்வதிலும், ஞாநி பக்கம் நியாயம் என்று ஏதாவது இருந்தால் கூட அதை எழுதுவதிலும் எனக்கு ஆர்வமில்லை. ஆனால் இந்த விஷயத்தில் ஜெமோவின் இவ்வளவு தீவிர ஆத்திரத்திற்கான நியாயமும் பின்னணியும் என்ன என்பதுதான் கேள்வி.

இசை குறித்து எதுவுமே தெரியாமல், இசை சார்ந்த எந்த அறிவும் இல்லாமல், இளையராஜாவை பற்றி அவ்வளவு மோசமாக, பொய்யாக, நேர்மையின்றி மீண்டும் எழுதி, அதற்கான எதிர்வினைகளை யோக்கியத்துடன் எதிர்கொள்ளாததை விட என்ன ஸ்டாலினிச வேலையை இப்போது ஞாநி செய்துவிட்டார்? அவ்வளவு பெரிய கலைஞனை, மனச்சங்கடம் கிஞ்சுத்தும் இன்றி, 'அற்மான மனிதன்' என்று திட்டியதை விட, என்ன பெரிய போல்பாட்டிச காரியம் இப்போது ஆற்றியிருக்கிறார்? ஞாநியின் அந்த அறிவு ஊழலை, கலைப்படுகொலையை .. ஃபாலசி  பாரடாக்ஸ் என்று என்னன்னவோ வார்த்தைகளால் நியாயப்படுத்திவிட்டு, இப்போது பாலாவிற்காக மட்டும்  இத்தனை ஆத்திரம் ஜெமோவிற்கு ஏனோ? ஜெமோ அப்போது முன்வைத்த வாதம் உளரல் என்று பிய்த்து முன்வைத்திருக்கிறேன்; எதிர்கொண்டால் விவாதிக்கவும் நான் தயார்.   இந்த முறையும் ஞாநியின் மொண்ணைத்தனம் வழக்கம்போல வெளிபட்டாலும், இப்போது பாலா மீது விமர்சனம் வைக்க ஞாநிக்கு சில நியாயங்கள் உண்டு; அவை வேறு சிலரும் சொல்லும் விமர்சனங்கள்தான். அதை இன்னொருவர் ஏற்பதும் வேறுபடுவதும் சாத்தியம்; ஆனால் ஞாநி தர்க்கமே இல்லாமல் வெற்றாக பாலாவை விமர்சிக்கவில்லை. ஆனால்  ராஜா விஷயத்தில் ஞாநிக்கு தர்க்க நியாயம் என்று எதுவும் இருக்கவில்லை; அறிவு சூனியம் நிறைந்த, நேர்மையின்மை ஆதாரபூர்வமாக நிறுவப்பட்ட மன வக்கிரம் மட்டுமே இருந்தது. (இதை ஏற்கனவே விளக்கியுள்ளதால் மீண்டும் விளக்க முனையவில்லை.) அப்போது அதை கருத்தாக்க தலைசுற்றலில் நியாயப்படுத்திய ஜெமோவிற்கு, இப்போது அறச்சிற்றம் பிரவகிக்கிறது.

ஆகையால் அன்பர்களே தர்மாத்திரமும், விமர்சன நுணுக்கமும், பாராட்டும் பரந்த மனமும், வார்த்தை விளம்பரமளிக்கும் மனச்சாய்வும்  தன்னிச்சையான அறவுணர்வால் அறிவு நேர்மையால் கலைப்பற்றால் உந்தப்பட்டு வருவதாக தெரியவில்லை. எப்படி உந்தப்படுகிறது என்கிற பின்னணியை, எல்லாம் ஒய்ந்த வயதான காலத்தில் அவர்களாகவே நேர்மையாக விளக்கினால்தான் நமக்கு முழுசாக புரியும். அதுவரை ஊகத்தில்தான் அடிக்க முடியும். அதை அவதூறு என்று எதிர்கொண்டு முன்னே செல்வது சம்பிரதாயம்.