Sunday, December 5, 2010

மழையின் இசை.

பத்து வருடங்களுக்கு முன்பு அலகாபாதில் கழிக்க நேர்ந்த ஒன்றரை வருடம், பல தனிப்பட்ட காரணங்களால் மறக்க முடியாதது. பின் பனிக்காலம் அல்லது வசந்த காலம் என்று சரியாக பிரிக்க முடியாத ஃபிப்ரவரியில், கங்கையும், யமுனையும் வற்றிய சங்கம நிலப்பரப்பில், 'மாக்மேளா' ஒவ்வொரு வருடமும் அலகாபாதில் நடைபெறும். (12 வருடங்களுக்கு ஒருமுறை இதுவே கும்பமேளாவாகும். நான் கிளம்பி வந்த அடுத்த வருடம் கடந்த கும்பமேளா நடந்தது).

அந்த காலகட்டத்தில் கொண்டிருந்த மூர்க்கமான இந்துமத எதிர்ப்பின் பக்கவிளைவாக அலகாபாதின் வசந்த மேளாவில் நான் தீவிர கவனம் செலுத்தாமல், பல முக்கிய அனுபவங்களை இழந்திருக்கிறேன் என்று இப்போது தோன்றுகிறது. ஆனாலும் மாக்மேளாவின் ஒரு மாலையில் பிஸ்மில்லாகானின் கச்சேரிக்கு சென்றேன்; எண்பதுகளின் இறுதியில் இருந்த அந்த மேதை, நள்ளிரவு வரை தன் பரிவாரங்களுடன், பெரும் கூட்டத்தை கட்டிபோட்டு வாசித்த இசை மேடைக்கு பின்னால் நதியில் படகு வெளிச்சங்கள்; சாகும் தருவாயிலும் மறக்க முடியாத இசை காட்சி அனுபவம் அது.

அந்த அனுபவத்தின் நிழல் உங்களுக்கும் கிடைக்க, வரும் ஃபிப்ரவரி அலகாபாத் போய், பிஸ்மில்லாகானின் சீடர் யாராவது வாசிக்கும் இரவு ஒன்று உங்களுக்கு வாய்க்க அல்லாவையும், ராமரையும் வேண்டிக்கொள்வதை தவிர வேறு வழியில்லை. (உஸ்தாத் பிஸ்மில்லாகான் 2006இல் மறைந்தார்.) அதற்கு எந்த வாய்ப்புமே இல்லாதவர்கள் இங்கே சென்று பிருந்தாபனி சாரங்கை பனாரஸ் கங்கையின் காட்சியுடன் கேட்டு களித்து ஆறுதல் கொள்ளவும்.

இன்று சென்னையில் தொடர்மழையும், காற்றும்; வீட்டில் ஜன்னல் வழியாக அனுபவிக்கவும், சூடாக பஜ்ஜி செய்து சாப்பிடவும் ஏற்றது. வேலை இருப்பவர்களுக்கு மழை அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது. மழை தரும் நடுத்தர வாழ்வு கஷ்டங்களை சின்ன வயதில் அனுபவித்திருக்கிறேன். ஏழை மக்களுக்கு அது தரும் வாழ்க்கைப் போராட்டம், கேள்வி ஞானத்தை வாசிப்பு அனுபவமாக மாற்றிய வகையில்தான் தெரியும். இதன் சில தீவிர காட்சிகள் டூமிங் குப்பத்திலும், திருச்சி ஶ்ரீரங்கத்தில் காணக் கிடைத்திருக்கிறது.

பல மக்களின் இருப்பையும், வாழ்க்கையையும் கேள்விக்குறியாக்கும் மழையை, எல்லாவித பாதுகாப்புடன் ரசிப்பது, சிலருக்கு குற்ற உணர்வு தரும் இருத்தல் முரண். ஆதவன் தீட்சண்யா மழையை பற்றி கவிதை எழுதியவனை திட்டி எழுதிய கவிதை ஒன்றை பலர் வாசித்திருக்கலாம். ஆதவன் ரொம்ப நேர்மையும், நியாயமும் கலந்துதான் தன் கோபத்தை காட்டியிருக்கிறார். ஆனால் பிரசனை என்னவெனில் வீட்டில் உட்கார்ந்து மழையை ரசிப்பவன், ஆதவன் திட்டுவாரே என்று வேறு ஒரு முற்போக்கு கவிதை எழுதினால் அது நேர்மையாகுமா? அல்லது தன் இருப்புக்கும் உறவுக்கும் அப்பால் வாழும் மக்களை நினைத்து கண்ணெதிரே உள்ள காட்சியை ரசிக்க மாட்டேன் என்று கற்பித்து கொள்ள முடியுமா?

என்னை பொறுத்த வரை நம்சமூகத்தில் சம்பளம் வாங்குவதும், வாழ்வதும், ஒரு அங்கத்தினனாக இருப்பதும் கூட பெரும் குற்றம்தான். தற்கொலை செய்யாமல் அதை விதியாக ஏற்றுகொண்ட நிலையில், மழையை ரசிப்பதில் எல்லாம் முற்போக்கு போலி முகமுடி அணியமுடியாது. மேலும் வாழ்வின் போராட்டத்தின் நடுவே, ரசிப்பதற்கான அழகு ஒன்றை, புயல் நேரத்து மழை கொண்டிருப்பதனால்தான், மீனவ குப்பத்திலிருந்து அலையை வேடிக்கை பார்க்க சிலர் இன்று கடற்கரைக்கு வந்திருந்ததாக தோன்றியது.

இன்று மதியம் காரை எடுத்துக் கொண்டு குடும்பத்துடன் மெரினா கடற்கரைக்கு சென்றேன். மழை தூறலாக மாறிய ஒரு இருபது நிமிடங்களுக்கு அலைகளை பார்த்து விட்டு வந்தோம். கொண்டு சென்ற குடை எதிர்பக்கம் குவிந்து அதன் வாழ்பயனற்ற சாமானாகி போனது. புயலின் போதான கடலை திரைக்காட்சியில்தான் பார்த்திருக்கிறேன். ஒரு கேமெரா காட்சியில் அடக்க இயலாத, அப்படி ஆர்பரித்த கடலை இன்றுதான் வாழ்க்கையில் பார்த்தேன். பித்து பிடித்து சுழன்று சுழன்று கூத்தாடிய கடல்; சிலே பல்கலைகழகத்தில் ஒரு மதியத்தில் சில மாணவர்கள் ஆடிக்காட்டிய ஒரு ஆட்டம் சில நொடிகளுக்கு நினைவுக்கு வந்தது. தூறல் பலமான பின்பு காருக்கு திரும்பினோம்.

காரில் பிஸ்மில்லாகானை ஓடவிட்டேன். எதிரே கடலின் ஆர்பரிப்பு, மழை, பாதுகாப்பான காரின் வெது வெதுப்பில், பிஸ்மில்லா சாஹிபின் தோடி, பிம்பலாஸி, மால்கௌன்ஸ், பிருந்தாபனி சாரங்க.. பின் கிளம்பி பட்டின பாக்கம், ஃபோர் ஷோர் எஸ்டேட் கடற்கரை சாலையில் வண்டியை நிறுத்தி, மிக அருகில் தெரிந்த கடலின் அலைத்தாண்டவத்தின் எதிரே, மீண்டும் பிஸ்மில்லாகான் ஒருமணி நேரம் எங்களுக்காக வாசித்தார். அந்த அலகாபாத் இரவு அனுபவத்திற்கு பிறகு வாழ்வில் மறக்கப் போகாத அனுபவம் இன்று.

அன்றய பின்பனிக்கால குளிருடன், கங்கை/யமுனையின் அமைதியுடன், விழாக்கால ஈடுபாட்டுடன், படகு வெளிச்சத்தின் காட்சியுடன் பிஸ்மில்லாக்கானின் இசை இயைந்து இருந்தது. இன்று கார் கண்ணாடியின் ஊடாக தெரிந்த ஊழித் தாண்டவம் ஆடும் அலைகள், யாருமற்ற பட்டினப்பாக்கம் மீன் மார்க்கெட், குப்பை தொட்டி, மழையின் சத்தம் அனைத்துடன் முரணான இசைவை கொண்டிருந்தது முற்றிலும் புதிய அனுபவமாக இருந்தது. வேறு இசையை கேட்டு கொண்டிருந்திருக்கலாம் என்கிற உணர்வை தூண்டவில்லை.

Saturday, November 6, 2010

KOMA

இந்த விழாவில் பார்த்த சிறந்த படங்களில் ஒன்று இது. மற்ற படங்கள் பார்த்த கண்ணயற்சிக்கு பிறகு, கடைசியாக பார்த்ததால், நிறைவாக படத்தை உள்வாங்கினேன் என்று சொல்லமுடியாது. வாய்ப்பு கிடைத்தால், தனியாக உட்கார்ந்து காட்சி காட்சியாக மீண்டும் பார்க்க விரும்புகிறேன்.

கதையை தெரிந்து கொள்வது (இன்னும் சரியாக சொன்னால் படத்தை பார்ப்பது) விமர்சனத்தை வாசிக்க அவசியம்; ஒருவகையில் சரியாக கதையை சொல்வது கூட இந்த படத்தை பொறுத்தவரை ஒரு விமர்சனம்தான். அழகான, அமைதியான, ஓவியம் போன்று காட்சியளிக்கும் நீர்ப்பரப்பின் கீழ் ஓடும், அமளி நீரோட்டம் போன்ற வாழ்க்கை பற்றியது கதை.

ஹன்ஸ் ஒரு டாக்சி ஓட்டுனர். 'Taxi' என்று போட்ட காரில் அலைவதை தவிர, வேறு வழியில் இந்த தகவலை படத்தில் அறிய வாய்ப்பில்லை. படம் முழுவதும் ஒரு சவாரி கூட ஏற்றுவதில்லை. வெளிப்பார்வைக்கு ஹன்ஸின் வாழ்க்கை எல்லா ஐரோப்பிய நடுத்தர வாழ்க்கை போலவே அழகாகவும், அமைதியாகவும் இருக்கிறது. ஒரு டாக்ஸி ஓட்டுனரும் வாழக்கூடிய வளமான ஐரோப்பிய வாழ்க்கை; அன்பு கொண்ட, குடும்ப பிடிப்புள்ள மனைவி; ஹன்ஸின் 50வது பிறந்த நாள் விழாவிற்கான ஏற்பாடுகளை அவன் மனைவி மும்முரமாக செய்வதில் படம் தொடங்குகிறது. ஹன்ஸின் பையன் சில ஒத்தாசைகளை அம்மாவிற்கு அரைகுறையாக செய்கிறான். நண்பன் ரிச்சியை பார்க்க போவதிலேயே அவன் ஆர்வம் இருக்கிறது. அப்பாவின் 50ஆவது பிறந்த நாள் அன்றும், வீட்டில் இல்லாமல் ரிச்சியை பார்க்க போவதை அம்மா கடிந்து கொள்கிறாள்.

அவனும், ரிச்சியும் அமர்ந்து மடிக்கணிணியில் இணைய போர்னோ தளங்களுக்கு சென்று பார்கின்றனர். பாத்ரூமில் ஒரு வயதான பெண் ஆடையை களைந்து நிர்வாணமாகிறாள்; குளிக்கும் தொட்டியில் அவள் இறங்க, சாடிஸ பாணியில்அடித்து துன்புறுத்தும், Sado-Masochist வீடியோ காட்சிகள், திரையில் வந்து போகிறது. இப்போதும், பின்னால் வரும் காட்சிகளிலும், அடிக்கும் நபரின் முகம் காட்டப்படுவதில்லை.

பிறந்த நாள் விழா மெள்ள சூடு பிடிக்கிறது. ஐரோப்பிய கொண்டாட்ட கலாச்சாரத்தை காண்பிக்கும் ஒரு பார்ட்டி; ஜோக் அடிக்கிறார்கள். ஒருவர் அகார்டியன் வாசித்தபடியே வருகிறார்; நாடக பாணியில் பாடியபடி வந்து கலந்து கொள்கிறார்; சிரிக்கிறார்கள். பானங்கள், பேச்சுக்கள் என்று விருந்து மும்முரமாக நடக்க, விருந்தின் முக்கிய நபர் மட்டும் வரவில்லை.

ஹன்ஸ் விருந்தை புறக்கணித்து, டாக்சியை நதிக்கரையில் நிறுத்தி, புகைத்து கொண்டே இருக்கிறான். எங்கோ காட்டுக்குள் போகிறான்; போய்கொண்டே இருக்கிறான். மனைவி அவனை அழைக்க மீண்டும், மீண்டும் முயற்சித்தும் தொடர்பு கிடைப்பதில்லை. அவளுக்கு மிகவும் தர்ம சங்கடமாகிறது.

ஐரோப்பிய பண்பின்படி, யாரும் தவறாக எடுத்து கொண்டதாக வெளி காட்டிக் கொள்ளாமல் அவளை தேற்றுகின்றனர். தங்கள் சம்பாஷணைகளை இயல்பாக தொடர்கின்றனர். 'நிச்சயம் வந்துவிடுவான்' என்கிறார்கள். வெகு நேரமாகி, ஹன்ஸ் வரப்போவதில்லை என்று உறுதியான பின், மனைவி ஹன்சிற்கு அலைபேசியில் செய்தியை பதிவு செய்கிறாள். எல்லோரும் அலைபேசியை நோக்கி 'ஹாப்பி பெர்த்டே டூ யூ' பாடுகிறார்கள். கேக் விநியோகம் நடக்கிறது.

இடையில் ஹன்சின் மகனும் விருந்தில் கலந்து கொள்கிறார்கள். ரிச்சி அந்த சாடோ மசாக்கிச போர்னோ சிடியை அளிக்க,'ஓ.. தட் பிட்ச்' என்று வாங்கி கொள்கிறான். விருந்தின் போக்கில், அந்த போர்னோ சிடியை மறதியாக மேஜையில் வைக்கிறான். ஹன்சின் மனைவி, அதை ஹன்சிற்கான மகனின் பிறந்த நாள் பரிசு என்று தவறாக எண்ணி, வண்ண தாளில் சுற்றி மற்ற பரிசுகளுடன் வைக்கிறாள். ஹன்ஸ் காட்டில் அலைந்து, மீண்டும் நதிக்கரையில் அமர்ந்து புகைத்து தனக்குள் சிந்தித்தபடி, பதிவான பிறந்த நாள் செய்தியை பிறகு நிதானமாக கேட்கிறான். எல்லாம் முடிந்து இரவில் வீடு திரும்புகிறான்.

வீடு விருந்து முடிந்த குழப்பத்தில் இருக்கிறது. ஈக்கள் மொய்க்கும் கேக்கை எடுத்து பாதி சாப்பிடுகிறான்; மீதமிருக்கும் வொயினை குடிக்கிறான்; குளிக்கிறான்; பியர் சாப்பிடுகிறான்; பரிசு பொருட்களை ஒவ்வொன்றாக பார்க்கிறான். மகன் பெயர்போட்டு வைக்கப்பட்டிருந்த பலான சிடியையும் பார்கிறான். சாடோ மஸாக்கிஸ காட்சிகள் திரையில் வந்து போகின்றன. சோபாவில் தூங்கி கொண்டிருக்கும் மகனையே பார்த்துக் கொண்டிருக்கிறான். அவன் விழித்து பார்த்ததும், கன்னத்தில் அறைகிறான். மகன் அதே போல அப்பாவை திருப்பி அறைந்துவிட்டு போகிறான்.

ஹன்ஸ் தனது அறைக்கு சென்று, படத்தில் ஆரம்ப காட்சி ஒன்றில் செய்வது போல், மேல் தளத்தில் துளை போடுகிறான். இந்த முறை தூக்கு கயிறு போல நாடாவை வைத்து செய்து, கழுத்தை சுற்றி நிதானமாக அளவெடுக்கிறான். ஆனால் அவன் தற்கொலை செய்து கொள்வதில்லை. மறுநாள் டாக்சியை எங்கோ நகருக்கு வெளியே நிறுத்தி புகைக்கிறான். கார் கண்ணாடியில் தாடியை மழிக்கிறான். பின் பாலியல் தொழிலாளி ஒருத்தியை தேடி போகிறான்.

பாலியல் தொழிலாளியிடம் 'வேறு எதுவும் தேவையில்லை, சும்மா பேசிக்கொண்டிருந்தால் போதும்' என்கிறான். பொதுவாக வசனமே இல்லாமல் காட்சிகளாக கடந்து வந்த படத்தில், நீண்ட வசனம் கொண்ட காட்சி இது. ஹன்ஸ் ஓரிரு வார்த்தைகளில் மட்டும் விசாரிக்க, அந்த பாலியல் தொழிலாளி மட்டும், ஹன்ஸ் விசாரித்த ஜெர்ட்ரூட் என்ற இன்னொரு பாலியல் தொழிலாளி பற்றி, நீளமாக உணர்ச்சிகளுடன் பேசிக் கொண்டிருக்கிறாள். இந்த காட்சிகளில் பார்ப்பவர் கதையில் ஊன்றி, புத்திசாலித்தனமாக, படத்தில் இதுவரை காட்டப்பட்டு வந்த சாடோ மசாக்கிச காட்சிகளில் நடித்த பெண்ணை பற்றித்தான் அவள் பேசுகிறாள் என்பதையும், அந்த காட்சியில் நடித்தவன் ஹன்ஸ்தான் என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். படத்தில் நேரடியாக சொல்லப்படாத இந்த தகவலை புரிந்து கொள்ளவில்லையெனில் மொத்த படமும் சிக்கலாகிவிடும்.

ஸாடோ மசாக்கிச படக்காட்சிகளுக்காக மாறி மாறி கம்பால் அடிக்கப்பட்ட அந்த பெண்மணியின் இப்போதய நிலையை பற்றி அவள் விவரிக்கிறாள். கிட்டதட்ட ஒரு பிணம் போல, சுற்றி நடக்கும் எதை பற்றிய சுயநினைவும் இல்லாமல், நெருங்கிய தோழியான தன்னைகூட அடையாளம் தெரியாமல் இருப்பதை சொல்கிறாள். இந்த நிலைமைக்கு அவளை கொண்டு வந்த அந்த மனிதனை கண்டபடி திட்டுகிறாள். இப்படி எப்படி நடக்கிறது என்று தன்னால் புரிந்து கொள்ள முடியாததை சொல்கிறாள்.

அந்த நீண்ட காட்சிக்கு பிறகு, ஜெர்ட்ரூட் இருக்கும் மருத்துவமனைக்கு ஹன்ஸ் செல்கிறான். சக்கர நாற்காலியில், காற்றாட ஒரு பணியாளனால் வெளியில் அழைத்து வரப்பட்டிருந்த அவளை பார்கிறான். பின்னணி இசையற்ற இந்த நீண்ட காட்சிகளில் அவன் உணர்ச்சி எதையும் வெளிப்படையாக காட்டவில்லை. அடுத்த காட்சியில் ஜெர்ட்ரூடுடன் ஒரு அபார்ட்மெண்டில் ஹன்ஸ் இருக்கிறான். அவளை அவன் தன்னுடன் அழைத்து வந்துவிட்டது தெரிகிறது. எப்படி அழைத்து வந்தான் என்று சொல்லப் படவில்லை. உயிர் மட்டும் இருக்கும் நடைபிணம் போன்ற அவளுக்கு, ஹன்ஸ் பல் தேய்த்துவிட்டு, குளிப்பாட்டி, சாப்பாடு ஊட்டி எல்லாம் செய்துவிடுகிறான். நிர்வாணமாக படுக்கையில் இருக்கும் அவளுடன், ஹன்ஸும் நிர்வாணமாகி உறவு கொள்கிறான். மிக நீண்டு பல நிமிடங்களுக்கு, பின்னணி இசையும், பேச்சும் இல்லாமல் காண்பிக்கப்படும் காட்சி. அவசரம் காட்டாமல் மிக மென்மையாக அவளை கையாண்டு, அவள் மேல் படர்கிறான். ஒரு கட்டத்தில் அவள் கைகளும் செயல்பட்டு, அவனை அணைத்துக் கொள்கிறது. படம் முடிகிறது.

ஐரோப்பாவில் வாழ நேர்ந்தவர்கள், அங்குள்ள வாழ்க்கைமுறையின் ஒரு குறிப்பிட்ட தன்மையை அவதானித்திருக்கலாம். மேல் பார்வைக்கு எல்லாம் ஒழுங்குடன் காட்சியளிக்கும்; சற்று விலக்கி, உள் நுழைந்து பார்த்தால், நோய்காரணியாக எதையாவது காணமுடியும். மிக வடிவாக பேப்பர்கள் ஒட்டபட்ட ஒரு அறையில், ஒரு பேப்பரை விலக்கி, பின்னால் உள்ள சுவரில் நீங்கள் பூஞ்சக் காளானை காண்பது போன்றது. ஐரோப்பிய நவீன வாழ்க்கையில், பூஞ்சம் பிடித்த சுவரை சுத்தப்படுத்துவதை விட, ஒரு அழகான பேப்பரை ஒட்டி அதை எளிதாக மறைப்பதை விரும்புவார்கள்.

ஹன்ஸ் தன்னை சுற்றி உள்ள மக்களால் மதிக்கப்படும் ஒரு நடுத்தர குடும்பத்தினன். ஐம்பதாவது பிறந்த நாளுக்கு அவனை வாழ்த்த, சுற்றி இருப்பவர்கள் திரண்டு வருகிறார்கள். அவனை நேசிக்கும், அவன் அருகாமையை விரும்பும் அமைதியான மனைவி. ஐரோப்பிய வாழ்க்கையின் மேலோட்டமான அழகையும், பண்பையும், மகிழ்ச்சியையும் படத்தின் ஆரம்ப காட்சிகளில் வரும் பிறந்த நாள் விருந்து காட்டுகிறது. அந்த ஐரோப்பிய வாழ்வின் பின்னால் இருக்கும் பிரச்சனை ஹன்ஸினுடையது மட்டுமல்ல.

மிக மோசமாக பாலியல் தொழிலாளியை, கேமெரா முன்னால் சாடிச முறையில் அடித்து துன்புறுத்தும் ஹன்ஸ், சமூகத்தில் இருந்து எந்த விதத்திலும் பிறழ்ந்தவனாக படத்தில் காட்டப்படவில்லை. அந்த பிறந்த நாள் விருந்தில் வரும் அனைவரையும் போல இயல்பான ஒரு சமூக உறுப்பினன். ஹன்ஸை எந்த இடத்திலும் கொடூரமானவனாக, அவனிடம் அதீத கொடூரம் வெளிபடுவதற்கான அறுகுறியாக எதுவும் காட்டப்படவில்லை. அதே நேரம் அவன் எந்த இடத்திலும், ஒரு பெண்ணை நடைபிணமாக மாற்றியதற்கு, தான் துன்புறும் குற்ற உணர்சியையும் படத்தில் வெளிகாட்டவில்லை; எல்லாவற்றையும் அமைதியாகவே செய்கிறான். பாதிக்கப்பட்ட அந்த பெண்ணும் ஒப்புகொண்டே அந்த நிஜ காட்சிகளில் நடிக்கிறாள். ஒரு மசாக்கிஸ்டாக தன் மீதான அடிகளை அவள் இன்பமாக அனுபவித்ததாகவே, அவள் தோழியான அந்த பாலியல் தொழிலாளியும் சொல்கிறாள். ஹன்ஸ் அந்த பலான காட்சிகளில் நடித்ததன் பின்னணி எதுவும் படத்தில் சொல்லப்படவில்லை.

மகன் எதிர்கால ஹன்சாக மாறக்கூடிய சாத்தியத்தை அறிந்தபின், அவன் தன்னால் ரணமாக்கப்பட்டு, இன்பம் துய்த்து, நடைபிணமாக்கப் பட்டவளை தேடி செல்கிறான். நிதானமாக தற்கொலைக்கு உத்திரத்தில் துளை போடுபவன், எப்போது அந்த முடிவை மாற்றிகொள்கிறான் என்பது தெளிவாக இல்லை.

ஜெர்ட்ரூடை அவன் கவனித்து கொள்ளும் காட்சிகள் கவித்துவமானவை. அவள் உதட்டோரத்தில் ஒட்டியிருப்பதை விரலால் எடுத்து உண்கிறான். உறவு கொள்ளும் போது, உறவுக்கான வேகம் எதுவுமின்றி மிக மெதுவாக படர்கிறான். அவள் அவனை அணைத்து கொள்வது, அவனை அடையாளம் கண்டு கொண்டதன் அறிகுறியாக தெரிகிறது. சாடிஸ இன்பத்தின் வன்மையுடன் உறவு கொண்டவன், அதே பெண்ணுடன் அதற்கு நேர்மாறான மென்மையுடன் படர்கிறான். இந்த மாற்றத்திற்கான சம்பவங்கள், மனமாற்றத்திற்கான தர்க்கம், மனம் மாறிய வாழ்க்கை திருப்பம் என்று எதுவும் படத்தில் முன்வைக்கப்படவில்லை. இரண்டு செய்கைகளும் ஒரே மனிதன் இயல்பாக அமைதியாக வெளிபடுத்துவதாகவே எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது. ஐரோப்பிய சமூகத்தின் முரணான இரண்டு முகங்களை அது குறிப்பதாக படுகிறது.

படத்தில் பின்னணி இசை கிட்டதட்ட கிடையாது அல்லது முழுவதும் கிடையாது என்று நினைக்கிறேன். காட்டில் ஹன்ஸ் செல்லும்போது, மருத்துவமனை வளாகத்தில் ஜெர்ட்ரூடை சந்திக்கும் நீண்ட காட்சியில், உறவு கொள்ளும் இறுதி காட்சியில்.. என்று உணர்ச்சி கொந்தளிப்பாக இருக்க வேண்டிய பல இடங்களில் பின்னணி இசை நம் வாசிப்பில் உட்புகுவது இல்லை. எந்த வித உணர்ச்சியும், காட்சி யதார்த்தத்தை மீறி நம்மிடம் தூண்டப்படுவதில்லை. அந்த யதார்த்தம் சில இந்திய கலைப்படங்கள் போல் மொண்ணை யதார்த்தமாக இல்லை என்பதுதான் கவனிக்க வேண்டியது.

இந்த படத்தை பார்க்கும் போது நினைவுக்கு வந்த Blue Velvet திரைப்படம் பற்றி பிறகு எழுத வேண்டும்.

Friday, November 5, 2010

என் பேட்டி.

தமிழ் பேப்பர் கேட்டதற்கு இணங்க முதன் முதலாக நான் அளித்த பேட்டியயை இங்கு வாசிக்கலாம். பேட்டி கொடுக்கும் அளவிற்கு என்ன செய்திருக்கிறேன் என்கிற கேள்வி எழுந்தால் அது நியாயமே. எனக்கும் அந்த சந்தேகம் பலமாக இருக்கிறது.

Sunday, October 31, 2010

DRAUBEN AM SEE

இந்த விழாவில் பார்த்த முக்கிய படங்களில் ஒன்று இது. நான்குபேர் கொண்ட சந்தோஷமும் அமைதியுமான குடும்பத்தில், கணவன் திடீரென வேலை இழப்பதால் வரும் குழப்பங்கள்; 14 வருடங்களாக வேலைக்கு போகாத மனைவி வேலை கிடைத்து, கணவனுக்கு பதில் போக தொடங்கும் போது, பொறுப்பு நிலையும், அதன் மூலம் அதிகார சமநிலையும் மாறுவதால் வரும் சிக்கல்கள்; இவ்வாறாக குடும்ப சிக்கல்களை சித்தரிப்பதாக கதையை வாசித்து இந்த படத்தை பார்க்கலாம்.

நான் படத்தின் மையப்பாத்திரமான மகள் ஜெஸிகாவின் இருத்தல் பிரச்சனை சார்ந்த படமாக பார்த்தேன். ஜெஸிகாவின் குரலில் படம் முழுவதும் விஞ்ஞானம்/மனிதவியல் சார்ந்த தத்துவத்தனமான தகவல்கள் தரப்பட்டு கொண்டே இருக்கின்றன. மீன்கள் முட்டையிடுவதோடு சரி, தங்கள் குழந்தைகளை அதற்கு பின் பார்ப்பதில்லை, பார்த்தால் அடையாளம் காணவும் முடியாது; big bang நிகழ்ந்த போது சத்தமே இல்லை (சத்தம் எப்படி இருக்க முடியும் என்பது என் சந்தேகம்); பல பழங்குடிகளின் நமக்கு விநோதமாக தோன்றும் பல பழக்க வழக்கங்கள் (இறந்தவருக்கு துணையாக செல்ல, சிலர் தற்கொலை செய்து கொள்வது); இவ்வாறு பல தகவல்கள் கதை நிகழ்வுகளுக்கு இடையில்வந்து, கதையுடன் தொடர்பு படுத்த நம்மை தூண்டுகின்றன.

குடும்பத்தில் குழப்பமும் கசப்பும் மெள்ள தோன்ற, ஜெஸிகா பக்கத்து வீட்டில் புதிதாக குடிவருபவனுடன் நெருங்கி பழகுகிறாள். ஒரு இரவு முழுவதும் அவனுடன் பைக்கில் சுத்துகிறாள். தந்தை அவளை ஜாக்கிரதையாக, பாதுகாப்பாக இருக்க சொல்கிறான்.

வேலைக்கு போகும் அம்மா ஜோக்குகள் பல சொல்பவனுடன் பொதுவெளியிலும் நெருக்கமாகிறாள். கணவன் கிதார் வாசித்து, இயல்பில்லாமல் விநோதமாக பல பேசி, பெரிதாக சிரித்து, பாத்ரூமில் ஷேவ் செய்து, மிளகு பல தூவிய மிளகாய் இடையில் வைத்த பான் சாப்பிட்டு தன் மன அழுத்தத்தை போக்கிகொள்ள முயல்கிறான். ஜெஸிகா இந்த குழப்பங்களை சமாளிக்கும் பாலமாக இருக்க முயல்கிறாள்.

குழப்பங்களுடன் செல்லும் குடும்ப வாழ்க்கையில், யாரும் இல்லாத போது மனைவி ஒரு குழந்தையை பெற்று, அழும் சத்தம் கேட்கும் முன் அதை கொன்று, வீடு முழுக்க ரத்தமாக இருக்கும் நிலையில், ஜெஸிகாவும் தந்தையும் வீடு திரும்புகிறார்கள். யாருடைய குழந்தை என்கிற சந்தேகமும் அவனுக்கு உண்டு. கணவன் ரத்தத்தை கழுவுகிறான். ஜெஸிகாவிடம் 'இந்த விஷயத்தை வீட்டின் உள்ளேயும் விவாதிக்க கூடாது, வெளியே யாருடனும் பேசக்கூடாது' என்கிறான். இங்த சம்பவத்திற்கு பிறகு ஜெஸிகாவிற்கு அந்த குடும்பத்தில் இருப்பது பெரும் பிரச்சனையாகிறது.

ஜெஸிகா மணிக்கட்டை அறுத்து சிலமுறை குளியலறையில் தற்கொலை செய்துகொள்ள முயல்கிறாள். சிறு பிணக்கின் விளைவாக எதிர்வீட்டு காதலன் கழண்டுகொள்கிறான்.

ஒரு நாள் சைக்கிளில் இறக்கத்தில் வரும்போது, பறப்பது போல் கைகளை விரித்து கண்களை மூடிக்கொண்டு வேகமாக வருகிறாள். விபத்து நிகழ்ந்து மண்டையில் அடிபட்டு மயக்கமாகிறாள். ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்ட மயக்கமான ஜெஸிக்காவுடன், அம்மாவும் அப்பாவும் போக பயப்படுகிறார்கள். ஜெஸிகாவின் தங்கை அவளுடன் சென்று, தான் மட்டும் முழுவதுமாக அவளை பார்த்து கொள்கிறாள். 'ஏன் இப்படி செய்தாய்?' என்று கேட்கிறாள். 'நான் பறக்க முயற்சி செய்தேன்' என்கிறாள் ஜெஸிகா. 'உன்னால் பறக்க முடியாது' என்கிறாள். காதலன் வந்து அவளை பார்கிறான். ஹெல்மெட் ஒன்றை பரிசளிக்கிறான்.

சிகிச்சை முடிந்து, வீட்டிற்கு வந்த பிறகு, ஒரு நாள் வேறு அறைகளில் ஜெஸிகாவை காணாமல் பதறி, அம்மா அவளை பாத்ரூமில் கண்டு, கையை அறுத்து கொண்டாளா என்று தேடுகிறாள். இனி அந்த வீட்டில் இருக்க முடியாது என்று ஜெஸிகா முடிவெடுக்கிறாள். அப்பா நீளமாக பேசி தடுத்ததை, வற்புறுத்தியதை மீறி தங்கையுடன் தனியாக குடியேறுகிறாள். இருவரின் பாய்ஃப்ரெண்டுகளும் உதவுகிறார்கள். இருவரும் தங்கள் வாழ்விடத்தை உருவாக்க முயல்கிறார்கள். அப்பா குடியேற்றத்திற்கு உதவ முன்வருவதை, பிறவகைகளில் உறவை பேண முயல்வதையெல்லாம் ஜெஸிக நிராகரிக்கிறாள். கதவை, ஜன்னல்களை மூடி அவனை வெளியே நின்று அழவைக்கிறாள். தொடர்ந்து புகைத்தபடி அவன் செய்த தொலைப்பேசி அழைப்புகளை எடுக்காமல் தவிக்க விடுகிறாள்.

குடும்ப குழப்பங்கள் பற்றியதாக அல்லாமல், பெற்றோர்களுக்கும் மகள்களுக்குமான உறவு முரண்களை, தங்கள் சுயநலம் அதில் ஏற்படுத்தும் சிக்கல்கள் பற்றியதாகவே என்னால் திரைப்படத்தை பார்க்க முடிகிறது. குடும்ப சமனை நிலை நிறுத்த பாடுபடும் ஜெஸிகா ஏன் ஒரு கட்டத்தில் வெளியேறுகிறாள்? பெற்றோர்களின் பாசம், அக்கறை, பொறுப்பு என்பது மீறி, அந்த உறவு சுயநலன்களிலான சார்ந்திருத்தலாகவும், அதிகாரமாகவும் குழப்பமடைகிறது. நம் சூழலில், பல கூறுகளால் உருவான பெற்றோர்களின் அதிகாரத்திற்கு, பிள்ளைகள் வாழ்நாள் முழுவதற்குமான விலையை பின்னாளில் தருவதை காணலாம். ஜெஸிகா அந்த விலை தருவதை மறுத்தும், வீட்டின் சூழலை மேலும் சகிக்க இயலாமலும் வெளியேறுகிறாள். இன்னும் படத்தை முன்வைத்து குடும்ப உறவுகள் மட்டுமின்றி, குடும்ப அமைப்பு பற்றியும் பலவிதங்களில் யோசிக்கலாம்.

Sweaty Beards.

(திரைப்பட விழாவில் பார்த்த சுமார் பத்து படங்களுக்கு இங்கே குறு விமர்சனம் எழுதலாம் என்று இருக்கிறேன். பார்க்கலாம்.)

'Experimental movie' என்று Synopsisஇல் போட்டிருந்தார்கள். புனைவிலும், திரையிலும் என்னென்னவோ பரிசோதனைகள் பற்றி கேள்விப்பட்ட பின்பு, அப்படி எந்த புது சோதனை முயற்சியையும் இந்த படத்தில் காணமுடியவில்லை.

கிபி 900களில் நிகழும் கதை. பேண்ட் சட்டை போட்ட ஒரு நவீன கதை சொல்லியையும் கதையில் கலந்துவிட்டிருந்தார்கள். அவனும் ஒரு வாள்குத்து வாங்கிகொண்டு, வயிற்றில் இறங்கி, முதுகில் வெளிவந்தததுடன் கதையாடிக் கொண்டிருந்தான். இதன் மூலம் கதைக்கு புது பரிமாணம் எதுவும் கிடைத்ததாக தெரியவில்லை. நிறய நுட்பமான வன்முறை, தீமை/நண்மை பிரச்சனை, நிறைய காமெடி;

பல விஷயங்களை கிண்டலடிக்கிறார்கள் என்றும், அடிக்கிறார்களோ என்றும் தோன்றுகிறது; எதை என்று பிடிபடவில்லை. ('தமிழ் படம்' மாதிரி) சம்பந்த பட்ட பிரதிகளை ஒருவேளை தெரிந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அந்த வகையில் பழம்/புது பாத்திரங்களை கலப்பதில் சோதனை ஏதாவது இருக்கலாம்; என் அறிவு/அனுபவ நிறைவின்மையால் அவைகளை உள்வாங்க முடியவில்லையோ என்னவோ.

இந்த கதையை மட்டும் தனியாக எடுத்துக் கொண்டால், ஓரிரு இடங்களில் சிரித்ததை தவிர, வேறு விதங்களில் தேறாததாக, சாதாரண மொக்கையாக இருந்தது. bizarreஆன அதீத வன்முறை காட்சிகள் (யதார்த்ததை மீறியதாக இருப்பதால்) ரசிக்கலாம். விஷம் தடவிய வாளால் கீறப்பட்டு, ஒரு பெரும் பரப்பளவிற்கு சுற்றி துள்ளி குதித்து துடித்து இறப்பது; கடைசி காட்சியில், தன் தந்தையை கொன்ற கொலைகாரனை, (அசட்டு) ஹீரோ மார்பில் வெட்ட, ரத்தம் ஊற்றாக புறப்பட்டு, பின் மழையாக கொட்டுகிறது. ரத்த மழையில் நனைந்தபடி நாயகன்-நாயகி முத்தத்தில் ஆழ்கிறார்கள்.

அநாகரிகத்தை கண்டித்தல்.

பொதுவெளியில் (தனக்கு முன்பின் தெரியாத) அடுத்தவர் சுதந்திரத்தை மதிப்பதை, தமிழர்கள் கற்றுகொள்ளவில்லை என்பதற்கு பல உதாரணங்கள் உண்டு; அடுக்கிக் கொண்டே போகலாம். நம் சூழலை பொறுத்தவரை, நவீன வசதிகள் நம் சுதந்திரத்தை அதிகரிக்கும் அதே நேரத்தில், மற்றவர்கள் சுதந்திரத்தில் எந்த கவலையும் இல்லாமல் குறுக்கிடக்கூடியது. இதற்கான உடனடி உதாரணம் அலைபேசி. பல ஐரோப்பிய நாடுகளில், ஜப்பானில் அலைபேசியை பொது இடங்களில் பயன்படுத்துவதில் ஒரு கவனம் இருக்கும். அரங்கில் நுழைந்தவுடன் முதல் வேலையாக மௌனநிலையில் அலைபேசியை ஆழ்த்துவதை காணலாம். நம் ஊரில் ரயிலில் இரவில் பயணிக்கும் போது, நம் ஆழ்ந்த தூக்கத்தை பற்றி எந்த கவலையும் கொள்ளாமல், பக்கத்து பெர்த்தில் அலைபேசி அலறி, அவர் 'ஹலோ' என்று தொடங்கி, (அந்த காலத்தில் எஸ்டிடியில் சத்தமாக பேசவேண்டும் என்கிற பிரஞ்ஞை மிக )கத்தி கொண்டே இருப்பது சர்வ சாதாரண அனுபவம்.

கடந்த 4 நாட்களாக ஃபிலிம் சேம்பரில் நடந்த திரைப்படவிழாவில் அலைபேசி சத்தங்கள் செய்த அக்கிரமங்கள் கொஞ்ச நஞ்சம் அல்ல. அலை பேசியை அணைத்து வைக்கச் சொல்லி ஒருவர் கேட்டும் தொடர்ந்து ரிங்..ங்கி கொண்டிருந்தது.

சனிக்கிழமை திரைப்பட ஓட்டத்தின் நடுவே ஒருவருக்கு அலைபேசி அழைப்பு. திரைப்படத்தின் பின்னணி இசை, வசனங்களை மீறி சுமார் 5 வரிசை தள்ளியிருந்த எனக்கு எல்லாம் தெளிவாக கேட்கும் வண்ணம் பதிலளித்து கொண்டிருந்தார். ஓரிருவருடன் நானும் திரும்பி 'வெளியே போய் பேசுங்க' என்றேன். அவர் கவனிக்காமல், திரைப்படத்தின் சத்தம் அவரின் உரையாடலுக்கு தொந்தரவாக இருந்ததோ என்னவோ, இன்னும் சத்தமாக தொடர்ந்தார். பிறகு தொடர்ந்தது கூட்டத்தின் அர்ர்சனை. 'டேய் ..வெளியே போய் பேசுடா' என்று ஒரு சத்தம். இன்னும் தொடர்ந்து சில வசவு வார்த்தைகள். அவர் 'அப்புறம் பேசறேன்' என்று மீண்டும் பேசும் சத்தம் கேட்க, 'டேய் ..ஒன்ன செருப்பாலையே அடிபேண்டா' என்று மறு ஒலி.

உண்மையில் அவரின் அலைபேசி சம்பாஷணையை விட இந்த சத்தங்கள் இன்னும் திரைப்படம் பார்பதற்கு இடைஞ்சலானது. பலர் தீவிரமான கவனத்துடன் படம் பார்க்கும் போது, அலைபேசிய ஆசாமி செய்தது அநாகரிகம்தான். ஆனால் அதற்கு நடந்த எதிர்வினை நம் மக்கள் பொதுவெளியில் கொண்டிருக்கும் பொறுமையின்மையை காட்டுவதாகவே தோன்றியது. கத்தியவர்களுக்கு தங்களின் வசவு வார்த்தைகள், திரைப்படம் பார்ப்பவர்களின் கவனத்தை இன்னமும் குலைக்கும் என்றும் தோன்றவில்லை. சாலையில், போக்குவரத்து நெரிசலில் காட்டும் பொறுமையின்மைதான் அந்த அலைபேசியவரின் அநாகரிகத்தை கண்டிக்கும் போது வெளிப்பட்டதாக தோன்றியது. இதே நபர்கள் பல நேரங்களில் -ஒரு கையெழுத்து வாங்க, ரேஷன் கார்டுக்கான வரிசையில், ஒரு மந்திரிக்காக நெடுநேரமாக நிறுத்தப்பட்ட போக்குவரத்து நெரிசலில் பொறுமை காட்டுவதை காணலாம். ஆனால் தனக்கு பழக்க மில்லாத சாதரண அடுத்த நபரிடம் இல்லாத பொறுமையின்மையே இங்கு வெளிபட்டதாக தோன்றியது. (பிறகுதான் கவனித்தேன் அலைபேசிய நபருக்கு வயது 50-60 இருக்கலாம்.) அந்த நபர் அலைபேசியது, அதற்கான மக்களின் எதிர்வினை இரண்டும் நம் சமூக நோயின் ஒரு வெளிபாடாகவே எனக்கு பட்டது.

Sunday, August 8, 2010

கோப்பையிலே குடியிருப்பு.

'கேணியில்' ஷாஜியின் உரையும், பின்விவாதமும் சுவாரசியமாக இருந்தது. முன்தீர்மானிக்கப் பட்ட வலுவான கருத்துக்களை நம்மில் பலர் வந்தடைந்திருக்கும் நிலையில், கருத்து மாற்றம் என்பது ஒரு குறிப்பிட்ட உரையை கேட்ட பின்பு நிகழ்வது என்பதற்கான சாத்தியம் மிகக்குறைவே. ஆனால் முரண்படும் கருத்துக்களை கேட்பது என்பது மாற்றத்திற்காக என்று இருக்க முடியாது. வந்தடைந்த கருத்துக்களை தனக்குள் விவாதித்து கொள்வதற்கும், புதுபித்து கொள்வதற்கும்தான். அந்த வகையில் ஷாஜி உரையாற்றிய கூட்டம் பலருக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று தோன்றுகிறது. அந்தவகையிலான பயன்கள் பற்றியன்றி, நிரடலாக இருக்கும் விஷயங்கள் பற்றி மட்டுமே இங்கே பதிகிறேன். இதை மனதில் வைத்து வாசிக்கவும்.

பல முறை 'உலகின் மூலையில் சின்ன ஒரு இடத்தில் இருக்கிறோம்; நமக்கு பழகிப்போன விஷயங்களை மட்டும் உலகின் உன்னதங்களாக கருதக்கூடாது; உலகின் எட்டுதிக்கிலிருந்தும் கலைத்தாகம் கொண்டு பருகவேண்டும்.' என்கிற கருத்தை வலியுறுத்தினார். அவ்வாறு பருகிக்கொண்டிருப்பவர்களுக்கு இதை திரும்ப திரும்ப கேட்க சற்று எரிச்சலாக இருந்திருக்கும் என்றாலும், தேவையான ஒரு நினைவுபடுத்தலாக இதை கொள்ளலாம். ஆனால் லோக்கல் கலைகளின் அருமையை உணரமுடியாத தன் குறைகளுக்கான சால்ஜாப்பாக இதை சொல்லிவிடகூடாது என்பதுதான் பிரச்சனை. இதற்கு ஒரு உதாரணமாக ஷாஜி பொருந்துவாரா என்கிற கேள்விக்குள் இறங்கவில்லை. ஆனால் சாருவை விட இதற்கு பொருத்தமான உதாரணம் வேறு உண்டா? அந்த வகை உதாரணங்களின் உதார்களை, உலக கலைத்தாகமாக பார்க்கும் அபத்தத்தை ஷாஜி செய்கிறாரா என்பதுதான் தெரியவில்லை.

ஷாஜியின் சில புரிதல்கள் மிகவும் மேலோட்டமானவை என்பது என் கருத்து. உதாரணமாக சலீல் சௌத்ரியின் பாணியை இளையராஜா கைகொள்வதாக சொல்வது. அதற்கு அவர் முன்வைக்கும் ஒரே வாதம், நாட்டிசையையும், மேற்கத்திய இசையையும் சலில்தா இளையராஜாவிற்கு முன்பே கலவை செய்தது. இளையராஜா திரை இசையாக செய்தது எதுவும் கலவை (fusion) அல்ல என்கிற ஆதார அறிவுதான் இளயராஜாவின் இசையை புரிந்து கொள்ள தேவையான ஆரம்ப படி என்பது என் கருத்து. அந்தவகையில் இளையராஜா அளித்த இசைக்கு-உதாரணமாக 'செந்துரபூவே' பாடலுக்கு அதற்கு முன் எந்த முன்னோடி இசையும் கிடையாது, ஷாஜியின் இந்த கூற்று மிக மேலோட்டமான புரிதலை மேதாவித்தனம் என்று நம்பும் தன்மை கொண்டது என்பது என் கருத்து.

நௌஷாத், எம்.எஸ்.வி. இருவரில் யாரையோ ஒருவரை 'லோகிளாஸ் ம்யூசிக் டைரக்டர்' என்றார். நான் அது குறித்த சந்தேகத்தை கேட்டும் எனக்கு தெளிவாகவில்லை. இருவரில் யாரை சொல்லியிருந்தாலும் அது ஒரு அதிரடி அபத்தம் என்பது மட்டுமே என் கருத்து. முகேஷ் ஸ்ருதி இல்லாமல் பாடக்கூடியவர் என்கிற 'தகவலை' வேறு ஒரு விஷயத்தை பற்றி விளக்க முற்படும் போது சொன்னார். (அந்த வேறு விஷயம் வேறு. அதை பற்றி இங்கு பேசவில்லை.) எனக்கு மிக அதிர்ச்சியாக இருந்தது. உதாரணம் தரமுடியுமா என்று கேட்ட போது குறிப்பாக இன்ன பாடலில் விலகியிருக்கிறது என்று சொல்லவில்லை. பொதுவாக சொன்னார். நான் மீண்டும் குறிப்பாக கேட்டபின்பும் எதையும் குறிப்பிட்டு சொல்லவில்லை. சுருதி என்றால் என்ன என்று அடுத்த கேள்வியை நான் கேட்க வேண்டியிருந்திருக்கும். முகேஷ் குரலின் ஒரு குறிப்பிட்ட (தனி)தன்மையை ஸ்ருதியின்மை என்று சொல்ல முடியும் என்று எனக்கு தோன்றவில்லை. இன்னொரு உதாரணமாக இளையராஜா பற்றி கூட சிலர் அவ்வாறு சொல்வது உண்டு. நானும் ஒருமுறை 'மெட்டி ஒலி காற்றோடு..' பாடலை ராஜா சுருதியே இல்லாமல் பாடி அருமையானதாக்கிவிட்டதாக எழுதியிருக்கிறேன். அந்த குறிப்பிட்ட பாடும்தன்மையை ஸ்ருதிவிலகல், ஸ்ருதியின்மை என்று சொல்ல முடியும் என்று எனக்கு இப்போது தோன்றவில்லை. பழகிபோன சட்டகத்தில் தொடர்ந்து சிந்திக்க கூடாது என்று தான் பலமுறை சொன்னதை ஷாஜி நடைமுறைபடுத்த வேண்டும் என்று சொல்ல தோன்றியது.

இதை விட எல்லாம் ஒரு அபத்தம் இளையராஜா நாயின் குரைப்பிலும் சங்கீதம் உண்டு என்று சொன்னது குறித்து பேசியது. இசை என்பது பண்பட்ட ஒலி மட்டுமே, எல்லா ஒலியும் சங்கீதம் என்று தன்னால் ஏற்கமுடியாது என்று சொன்னார். ஞாநியும் நாய்ஸுக்கும், சவுண்டிற்கும் வித்தியாசம் உள்ளது பற்றி விளக்கினார். எல்லா ஒலியும் சங்கீதம் என்று யாரும் எங்கும் சொன்னதாக தெரியவில்லை. எல்லா ஒலியிலும் சங்கீதம் உண்டு என்றுதான் சொன்னது உண்டு. நாயின் குரைப்பை பதிவு செய்தால் அது சங்கீதம் ஆகிவிடும் என்றோ, ஒரு வடிவேலு காமெடியில் சொன்னது போல் எல்லா இடத்திலும் இசையை காண்பதோ அல்ல. இசையின் புனிதத்தை உடைக்கும், எல்லாவற்றிலும் இசையை தேடி அடையாளம் காணும் மனநிலை குறித்தது அது. இன்று இளயராஜாவை சனாதனத்தை இசைத்ததாக சொல்வதற்கு எதிர் உதாரணமாக உள்ளது அவரது கூற்று. நாயின் குரைப்பிலும் இசையை கண்டு அறிவது ஒரு உன்னத மனநிலை. இசையின் மேதை ஏன் அவ்வாறு சொன்னார் என்று கொஞ்ச யோசித்தால் ஏதேனும் புலப்படகூடும். மேலோட்டமாக புரிதல் வந்த பின், பண்பட்ட ஒலி மட்டுமே இசை என்று ஒரு வாக்கியம் அமைத்த உடன் இசை சூட்சுமம் அகப்பட்டதாக நினைத்தால், ராஜா சொன்ன இசை ரகசியம் புலப்பட வாய்பில்லை. மனதை திறந்து வைக்க வேண்டியதை பலமுறை வலியுறுத்திய ஷாஜிதான் கோப்பையை காலியாக வைக்க வேண்டும்.

'பாப் டைலான்' குப்பை என்று ராஜா எப்போது சொன்னார் என்பதை மேற்கோள் காட்ட முடியுமா என்று கேட்கலாமா என யோசித்து, அபஸ்வரம் வேண்டாம் என்று கைவிட்டேன். தமிழில் திரையிசை பற்றிய விமர்சனம் இல்லை என்றார். ஞாநியும் அதற்கான அணுகுமுறைகளை ஷாஜி உருவாக்குவதாக குறிப்பிட்டார். எனக்கு என்ன அணுகுமுறை என்பது சரியாக விளங்கவில்லை. ஆனால், தமிழ் பத்திரிகைகளில் இல்லாவிட்டாலும், திரையிசை பற்றிய பல விமர்சனங்கள் இணையத்தில் தீவிரமான அளவில் உள்ளதாகவே எனக்கு தோன்றுகிறது. அதில் பல போதாமைகள் இருக்கலாம். ஆனால் அதே போன்ற பல பிரச்சனைகள் ஷாஜியின் விமர்சனங்களிலும் உண்டு என்பதே என் கருத்து.

Thursday, July 1, 2010

பிச்சைக்காரர்களின் சென்னை.

'பிச்சைக்காரர்கள் இல்லாத சென்னை' தொடர்பான சென்னை மாநகராட்சியின் நடவடிக்கைகள் குறித்து, அ.மார்க்ஸ் பங்களிப்பில் உண்மை அறியப்பெற்று, லும்பினி தளத்தில் வெளியாகியுள்ள அறிக்கை முக்கியமானது. இப்படி ஒரு நடவடிக்கை உண்மையான தீவிரத்துடன் எடுக்கப்பட்டு, பிச்சைக்காரர்களை இல்லாமலாக்குவது என்ற நோக்கத்தையும் உண்மையிலேயே அது நிறைவேற்றுமானால், அதை ஒரு இன அழிப்பு (ethnic cleansing) என்கிற வகையில்தான் பார்க்க முடியும். கேட்கவோ பிரதிநிதிக்கவோ யாரும் இல்லாத அதிகாரமற்ற மக்கள் மீதான பெரும் வன்முறையாகத்தான் இது முடியும். மனித உரிமைகள் பற்றிய அறிவும் சுய உணர்வும் ஊட்டப்பட்டிராத, சாதிய மனோபாவமும் கொண்ட பணியாளர்களை எல்லா தளங்களில் கொண்ட, நம் அரசினால் மேற்கொள்ளப் படும் இப்படிப்பட்ட ஒரு பணி, நாய்களை இல்லாமலாக்கும் அதே மனநிலையுடனேயே நிகழ வாய்ப்பிருக்கிறது.

ஆனால் நாய்களை ஒழிக்கும் பணியையும் நமது அரசு துல்லியமாக நிகழ்த்தவில்லை என்கிற யதார்த்தம்தான், இப்படி ஒரு இன அழிப்பு பணி அதன் உண்மையான பொருளில் இங்கே நிகழாது என்று தோன்றுகிறது. நமது அரசு பணியாளர்களின் செயல்திறனின்மையோ, ஒளிந்து கொண்டிருக்கும் 'மூன்றாம் உலகத்து' மனிதாபிமானமோ கூட இது முழுமையாக நடைபெறாமல் போக காரணமாக அமையலாம். பிச்சைக்காரர்களை இல்லாமலாக்கும் பணி துவங்கப்பெற்று, அறிக்கையில் விவரிக்கப்பட்டது போன்ற மனித உரிமை மீறல்களுடன் சில நாட்கள் தொடர்ந்து, மேலும் சில நடைமுறை போலிஸ் சார்ந்த வன்முறைகளுடன் இது கைவிடப்பட கூடும் என்று நினைக்கிறேன். அது எப்படி நிகழ்ந்தாலும் இதை எதிர்ப்பதும், இதற்கு எதிராக பேசுவதும் முக்கியமானது. அதை இந்த அறிக்கையை தயாரித்தவர்கள் செய்ய தொடங்கியிருப்பது நல்ல விஷயம்.

பிச்சை தொழிலை அழிக்க அரசு உண்மையில் எடுக்க வேண்டிய துரித நடவடிக்கை வேறு; திட்டமிட்டு பிச்சைக்கார்களை உருவாக்கி பணியிலிட்டு, அதை ஒரு தொழில்களமாக மாற்றி, சுரண்டி கொண்டிருக்கும் மாஃபியாக்கள் மீது நடவடிக்கை எடுப்பது. இந்த மாஃபியாவோ ஆளுங்கட்சி, எதிர்கட்சி தொடங்கி அரசு மற்றும் தன்னார்வ நிறுவனங்களுடன் தொடர்புகளை பேணும் பின்னலை கொண்டது. இதை அழிக்கும் நடவடிக்கையில் இறங்கவோ, தொடரவோ நிச்சயமாக அரசு முன்வராது. ஆகையால் பிச்சைக்காரர்களை ஒழிப்பது என்பது அரசு நமக்களிக்கும் யதார்த்தத்தின் படியே சாத்தியமில்லை. சாத்தியமில்லாத ஒன்றை இவர்கள் செய்யதொடங்கி, சாத்தியமாக்கப் போவது மற்ற விளிம்பு நிலை மனிதர்கள் மீதான வன்முறையை மட்டுமே.

இந்த அறிக்கையின் ஒரு வரி முக்கியமானது.

/எனினும் பிச்சைக்காரர்களை ஒழித்துக்கட்டப்பட வேண்டியவர்களாக பொதுமக்கள் கருதவில்லை என்பதற்கு நமது கோயில்கள் மற்றும் புனிதத்தலங்களில் குவிந்துள்ள பிச்சைக்காரர்களே சான்று./

இங்கே புனித தலங்கள் என்று சர்ச் மசூதிகளை குறிப்பிடுகிறார்கள் என்று நினைக்கிறேன். ஒரு பக்கம் சாதியம் சார்ந்த உயர்வு தாழ்வை நம்பும் அழுகிய மனநிலை கொண்ட நம்மக்களின் இன்னொரு நெகிழ்வான பக்கத்தை இந்த வரி சொல்வதாக நான் நினைக்கிறேன். இந்த இழையில் மேலும் சிந்தனையை வளர்த்தெடுத்தால் நம் சமூகத்தின் சிக்கலான ஒரு முடிச்சை புரிந்து கொள்ள முடியலாம் என்று எனக்கு தோன்றுகிறது.

கடைசியாக உறுத்துகிற ஒரு விஷயத்தை சொல்ல வேண்டும். அ.மார்க்ஸ் இப்போது இந்த வன்முறையை எதிர்த்த ஒரு சரியான நிலைபாட்டிலும், நடவடிக்கையிலும் இருப்பது நல்ல விஷயம். ஆனால் ஜெயமோகனுக்கு எதிரான ஒரு எதிர்வினையில், அ.மார்க்ஸ் 'பாகிஸ்தானில் பிச்சைக்காரர்களே இல்லை' என்று ஒரு போடு போட்டதை எப்படி விளங்கிக் கொள்ள வேண்டும் என்று புரியவில்லை. அ.மார்க்சின் அந்த தகவல் பிழையானது என்பதும், பாகிஸ்தான் நாடே மற்ற நாடுகளிடம் ஒரு ஒட்டு மொத்த பிச்சைக்காரன் தான் என்பதும், ஐரோப்ப்பாவின் முக்கிய நகரங்களின் பிச்சைக்காரர்களின் பெரும் விழுக்காடு பாகிஸ்தானின் பங்களிப்பு என்பதும் முற்றிலும் வேறு விஷயம். அதை பற்றி பேசுவது இங்கே நோக்கமல்ல. உண்மையிலேயே ஒரு நாடு பிச்சைக்காரர்களை ஒழித்திருந்தால், அதுவும் பாகிஸ்தான்/இந்தியா போன்ற ஒரு நாடு ஒழித்திருந்தால் (அல்லது இல்லாத ஒரு தோற்றத்தை ஏதோ ஒரு வகையில் உருவாக்கியிருந்தால்), அது பெரும் வன்முறையின் பின்னணியிலே நிகழ்ந்திருக்கும் என்பதை, அ.மார்க்ஸ் போன்ற பலவகை அனுபவங்கள் கொண்ட அறிஞருக்கு எப்படி சுய உணர்வில் உதைக்காமல் போயிற்று என்று வியப்பாக உள்ளது. இவ்வாறாக சில சந்தர்ப்பங்களில் தான் எடுக்கும் சரியான நிலைபாடுகளை வேறு சந்தர்ப்பங்களில் சொதப்புபவராக அ.மார்க்ஸ் இருப்பதை எந்த மாதிரி எடுத்துக் கொள்வது என்று குழப்பமாகத்தான் இருக்கிறது.

இவை இப்படியிருக்க நமது அரசால் பிச்சைக்காரர்களை, குறிப்பாக அதன் பின்னணியில் உள்ள மாஃபியாவை சிறு அளவில் கூட ஒழிக்க முடியாது. ஒழிக்க மனமும் கிடையாது. அது ஊழலை ஒழிப்பது போல சிக்கலானது. இந்த நிலைமையில் இப்படி ஒரு நடவடிக்கை நம் சமுதாயத்தின் தினநிகழ்வான விளிம்பு மக்கள் மீதான உதிரி வன்முறையாக மட்டுமிருந்து கிடப்பிற்கு போகும், ஒன்று சேர்த்து இறுக்கப்பட்ட ஒரு பெரும் வன்முறையாக உருவெடுக்காது என்று நம்புவோமாக. அவ்வாறு உருவாகாமல் தடுப்பதும், உதிரி வன்முறைகளையும் எதிர்த்து குரல் கொடுப்பதும் மனித உரிமை குறித்து கவலை கொண்டவர்களின் கடமை.

Monday, June 14, 2010

எதிர் பொதுப்புத்தி

விழுப்புரம் பேரணி அருகில், தண்டவாளத்தை வெடிவைத்து தகர்த்து திட்டமிடப்பட்ட விபத்து, பலரது காலத்தினாலான இடையீடுகளால், 10 அடிகளில் தவிர்க்கப்பட்டது என்பது நாம் அறியும் செய்தி. செய்தியை உண்மையாக எடுத்துக் கொண்டால் ஒரு மிகப் பெரிய மனித அவலம் தவிர்க்கப்பட்டிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. ராஜபக்ஷே வருகையையும், இந்தியா வரவேற்றதையும் கண்டிப்பதற்காக இதை திட்டமிட்டதாக, விபத்து நடந்த இடத்தில் துண்டறிக்கைகள் மூலம் 'பிரபாகரனின் தம்பிகள்' என்ற அமைப்பு உரிமை கோருவதாக துணைசெய்தி. 'தமிழ் ஷாவினிஸம்' என்கிற ஒற்றை வார்த்தை மூலம் தமிழ் சார்ந்த எல்லா பிரச்சனைகளையும் மொத்தமாக அணுகுவதை குலதர்மம் போல கடைபிடிக்கும் ஆங்கில/வட இந்திய ஊடகங்கள், இந்த முறையும் அப்படியே இந்த பிரச்சனையையும் கடந்து போவது, அவர்கள் சாத்தானாக்கும் 'தமிழ் ஷோவினிஸத்திற்கு' மேலும் சில நியாயங்களை சேர்ப்பதை தவிர வேறு எதையும் செய்யப்போவதில்லை. அவர்களை பற்றி எதுவும் இங்கே பேசப்போவதில்லை. மற்றபடி செய்தி குறித்து பொதுமக்களின் பொதுபுத்தியில் வழக்கம் போல கேள்விகள் எதுவும் இல்லை.

பொதுபுத்தியையும், அரசு விதைக்கும் தகவல்களையும் எதிர்கொள்பவர்கள் எழுப்பும் கேள்விகள்தான் வழக்கத்திற்கு மாறாக எனக்கு பீதி கலந்த நெருடல்களாக உள்ளன. ஒரு தரப்பில் இந்த மொத்த விவகாரமும் இந்திய உளவுத்துறையின் சதியாக இருக்கலாம் என்கிறார்கள். (அப்படி இல்லை என்று சொல்லும் துணிவு இல்லாத அதே நேரத்தில் இப்படி ஒரு சந்தேகம் கொள்ள வைக்கும் ஆதாரமும் எதுவும் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.) அடுத்ததாக இலங்கை உளவு துறையின் சதியாக இருக்கலாம் என்கிறது இன்னொரு தரப்பு. (இது ரொம்ப தமாஷ். இலங்கை உளவுதுறை இப்படி செய்வது சாத்தியமா என்ற கடினமான கேள்வியைவிட எளிதான பதில், செய்ய வேண்டிய தேவையே இல்லை என்பது. இந்திய உளவுத்துறையிடம் தொடர்பு கொண்டாலே போதுமானது.) இன்னொரு தரப்பு மாவோயிஸ்டுகள் போன்ற வேறு யாராவது செய்துவிட்டு 'பிரபாகரனின் தம்பி'கள் மீது பழியை திருப்பிவிட நினைத்திருக்கலாம் என்கிறார்கள். (இந்த தரப்புதான் இருப்பதிலேயே விசித்திரமானது.)

இந்திய உளவுத்துறை எந்த நாடகத்தையும் நிகழ்த்திக் காட்டக்கூடியதுதான். ஆனால் அப்படித்தான் என்று உறுதியாக கருத, இதுவரை பல ரத்த ஆறுகள் ஓடிய போதெல்லாம் ஏதாவது ஒரு அரசு எதிர்ப்பு வாதத்தை சொல்லி சொல்லி அதையெல்லாம் நியாயப்படுத்தியவர்களை தவிர மற்றவர்களால் முடியாது. நிச்சயமாக சில விடலை பையன்கள் இந்த வகையில் தங்கள் கோபத்தை காட்டியிருக்கவே வாய்ப்புகள் அதிகம் உள்ளது. ஒரு பெரு விபத்து நடக்கும் இடத்தில் காற்றில் பறந்துவிடும் துண்டறிக்கைகளை போடுவார்களா என்று கேட்பது புத்திசாலித்தனமான கேள்வியாக தெரியும் அளவிற்கு, பழைய வரலாறுகளை அறிந்தவர்களுக்கு விவேகமான கேள்வியாக தெரியாது. ஒரு விபத்தை நடத்தி ஆயிரக்கணக்கில் மக்களை கொன்று அதன் மூலம் ஒரு அரசுக்கு நிர்பந்தத்தை ஏற்படுத்த முடியும் என்று முட்டாள்தனமாக நம்புபவர்கள், அதைவிட முட்டாள்தனமாக எந்த விதத்தில் வேண்டுமானால் நடந்து கொள்வார்கள் என்றுதான் தோன்றுகிறது. இதுவரையான போராளி வரலாறுகளில், குறிப்பாக தமிழ்நாட்டு தமிழ்தேசிய வன்முறையாளர்கள் இதைவிட மகா முட்டாள்தனங்களை செய்திருக்கிறார்கள். தமிழ் நாட்டில் அடக்குமுறையை அவிழ்த்து விடுவதற்காக உளவுத்துறை இப்படி ஒரு நாடகத்தை அரங்கேற்றியிருக்கும் என்பது எதிர்தரப்பு உருவாக்கும் வெறும் வார்த்தைகள் மட்டுமே கொண்ட தர்க்கம்தானே தவிர, அதற்கு ஆதாரம் எதுவுமில்லை. பாராளுமன்றத்தின் மீது நடந்த தாக்குதலே ரா செய்த வேலைதான் என்று, எந்த ஆதாரமும் இன்றி, தீவிரமாக நம்பும் அறிவுஜீவிகளையே சந்தித்துள்ளேன். அதற்கு இணையான இன்னொரு கேன்சர் வளர்ச்சிதான் இது. ஒரு அமைப்பு நாசவேலை செய்வதன் நோக்கம் அந்த வேலையால் விளைவிறும் நாசம் அல்ல; அதன் மூலம் பொறுப்பேற்று ஒரு செய்தியை சொல்ல விரும்புவதே. இதில் ஒரு அமைப்பு செய்துவிட்டு பெயரை மற்ற அமைப்புக்கு தரும் லாஜிக்கும் புரியவில்லை. சீமான் போன்றவர்கள் புளுகி தர்கிப்பதை எல்லாம் நாம் குப்பையில்தான் போடவேண்டும். எந்த கதையாடலினாலும் விவரித்துவிட முடியாத துன்பங்களை அனுபவித்து தப்பியோடிய தமிழ் மக்களையே போரின் இறுதியில் புலிகள் சுட தயங்கவில்லை. 'சிங்கள அப்பாவி மக்ககளைகூட கொல்லாதவரின் தம்பிகள் இப்படி செய்வார்களா?' என்று லாஜிக் போடுகிறார் சீமான். (புலிகள் மக்களை சுட்டதை நான் எந்த விதத்திலும் சிங்கள அரசின் தாக்குதலுடன் ஒப்பிடவில்லை. அதை ஒரு காரணமாக சொல்லி வேறு எதையும் நியாயப்படுத்தவில்லை. சீமானின் புளுகு தர்க்கத்தை மட்டுமே உடைக்கிறேன். )

துண்டறிக்கைகள் என்பதை முன்வைத்து, ஊடகங்கள் சொல்வதை அப்படியே கேள்விகேட்காமல், பொது புத்தியுடன் இசைந்து நாமும் ஒப்புகொள்ள வேண்டும் என்று நான் சொல்லவரவில்லை. இங்கே சந்தேகங்கள் ஒரு எதிர்பிரச்சாரமாக மட்டுமே உள்ளது. பொதுபுத்தியின் நேரெதிரான தன்மை கொண்ட இன்னொரு பொதுபுத்தியாகவே இந்த சந்தேகங்கள் நம்பிக்கைகளாக மாற்றப்படுகின்றன. அரசின் அடக்குமுறை என்பதை எதிர்க்க வேண்டும். ஆனால் இந்த எதிர்பிரச்சாரத்தால் நல்லது எதுவும் நடக்க வாய்பில்லை. இப்படி ஒரு தாக்குதலை 'பிரபாகரனின் தம்பிகளே' நடத்தியுள்ளதற்கே மிகுந்த வாய்ப்புகள் உள்ளன. அப்படி உண்மை இருந்தால் இதனால் ஈழத்தமிழர்களுக்கும் பத்து பைசா பிரயோஜனம் இல்லை; தமிழ்நாட்டு தமிழர்களுக்கும் இது பெருந்துன்பத்தை தவிர வேறு எதையும் கொண்டுவராது. இந்த நிலையில் இந்த செயலை அங்கீகரிக்கும் தன்மை கொண்ட எல்லா வாதங்களும் தமிழகத நலனிற்கு ஆபத்தானவை மட்டுமே.

இந்திய தேசிய கட்டமைப்பிற்குள், அந்த அமைப்பை பயன்படுத்திக் கொள்ளும் அணுகுமுறைகளும், இயக்கங்களும், செயல்பாடுகளுமே நமக்கு இன்றய தேவை. இலங்கையை போல் அல்லமால் அதற்கான ஒரு இடமும் சாத்தியங்களும் இங்கே இருக்கிறது. இது நியாயம் சம்பந்தப்பட்ட பிரச்சனையில்லை; சாத்தியங்கள், அழிவுகள், கொடுக்கப்போகும் விலைகள் சம்பந்தப்பட்ட பிரச்சனை. ஒரு இணை அரசு, இணை ராணுவம் கொண்டு ஈழத்திலேயே சாதிக்க முடியாத நிலையில், அப்பாவி தமிழ்நாட்டு தமிழ்மக்களுக்கான நாசத்தையும், அதன் பின் தொடரும் அரச வன்முறையையும் தவிர வேறு எதையும் இது போன்ற செயல்கள் தமிழகத்திற்கு கொண்டுவரப்போவதில்லை. இந்நிலையில் நடக்கும் இந்த எதிர்பொதுப்புத்தி சார்ந்த பிரசாரங்கள் எதிர்கால விபரீதங்களை அறியாத மிக ஆபத்தானது.

Friday, June 11, 2010

வைதீகபாப்பானும், லௌகீக பாப்பானும்..

உடனடியாகவும் சுருக்கமாகவும் கருத்தை பதிவு மட்டும் செய்ய ட்விட்டரை 2 வருடங்களுக்கு மேல் பயன்படுத்தி வருகிறேன். ஆனால் ட்விட்டரில் 140 எழுத்துக்களில் கருத்து சொல்வதும், எதிர்வினை வந்து விவாதிப்பதும் பல தவறான அர்த்தங்களை தருவதுடன், விவாதம் திசை திரும்பவும் வழிவகுக்கிறது. விரிவாக கருத்துக்களை பதியும்போது மட்டும் விவாதம் ஆரோக்கியமான திசையில்தான் செல்லும் என்பதல்ல; வடிவ பிரச்சனையால் திசை திரும்ப வேண்டாமே என்பதுதான். ராஜன்குறை லும்பினியில் எழுதியுள்ள கட்டுரையை முன்வைத்தும், ஷோபாசக்தி பயன்படுத்திய வைதிக/லௌகிக பாப்பான் பிரயோகம் பற்றியும் எனது கருத்தை (எழுத்து எண்ணிக்கையின் கட்டுபாடு இல்லாமல்) சுருக்கமாக இங்கே தெளிவுபடுத்த விழைகிறேன். சற்று நீளமாக செல்வதால் ராஜன் கட்டுரையை முன்வைத்த கருத்துக்களை அடுத்த இரண்டு நாட்களில் பதிகிறேன். சோபாசக்தியின் கருத்துக்கள் பற்றி மட்டும் இங்கே. இனி பின்னணி கதை.

மேற்கோள்களாக சோபாசக்தியின் பழைய ட்விட்கள் கீழே.

/அழைப்பிதழ் இல்லாமல் உள்ளே விடமாட்டார்களாம். 'லேட்'டாப் போனால் கதவு திறக்கமாட்டார்களாம்./

/பஞ்சகச்சம், மடிசார், பூணூல் போன்ற 'டிரெஸ் கோட்' உள்ளதா எனத் தெரியவில்லை./

/வைதீகப் பார்ப்பானைவிட லெளகீகப் பார்ப்பானே டேஞ்சர் என்பார் பெரியார். கார்ப்பரேட் முதலாளிகளிடம் சிக்கிச் சீரழிகிறாயடி என் இலக்கியத் தாயே!/

மேலே உள்ள ஷோபாவின் துளியுரைகள், அண்மையில் 'கிழக்கு பதிப்பகம்' நடத்திய இந்திரா பார்த்தசாரதியின் புத்தக வெளியீட்டு விழாவின் கட்டுப்பாடுகளை பற்றியது என்று, பிறகு ஷோபாசக்தி தகவல் சொன்னபின் அறிந்தேன். ஷோபாவின் ட்வீட்களை முன்வைத்த என் கருத்துக்களை, பார்பனியம் குறித்து உத்தேசித்திருக்கும் ஒரு பதிவில் எழுத நினைத்திருந்தேன். அதற்கு முன் கிண்டலாக ஒரு ட்விட்டிலும், ராஜன்குறையின் கட்டுரையை முன்வைத்த ட்வீட்களில் ஒருமுறையும் எழுதியிருந்தேன். நேற்று நான் எழுதிய ட்விட் கீழே.

/அ.மா, ஞாநியை 'சோ'வாக சாராம்ச படுத்தியது, ஷோபாவின் லௌகீக பாப்பான், வைதிக பாப்பான் சூத்திரம் பற்றி ராஜன் கருத்துரைப்பார் என்று தோன்றவில்லை./

இதற்கு எதிர்வினையாக ஷோபாசக்தி எழுதியவை கீழே.

/"வெள்ளாடு வாய்வைத்த செடியும் வெள்ளாளன் கால் வைத்த படியும் உருப்படாது" என்ற சொல்லாடல் தன்னை வெள்ளாளனாய் உணருபவனை மட்டுமே தொந்தரவு செய்யும்./

/ஆதிக்க சாதியொன்றில் பிறந்தவனுக்கு சொந்தச் சாதித் துரோகமே முதலாவது சமூகக் கடமை./

/'வைதிக/ லெளகீக பார்ப்பான்' என்ற பெரியாரின் சொல்லாடலும் தன்னைப் பார்ப்பானாக உணருபவனையே தொந்தரவு செய்யும்./

/இந்தச் சொல்லாடல்களில் 'அரசியல் நேர்' பார்ப்பதா இல்லை சொல்பவனின் தரப்பைப் புரிந்து கொள்வதா முக்கியம்?/

இனி வருவது என் பதில்.

முதலில் கோப உந்துதலில் முத்திரை குத்துவது போன்றவை ஒரு தரப்பின் வாதங்களாக உருமாறிவிட முடியாது என்பதை, இந்த முத்திரை குத்தல்களால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள ஷோபாசக்தி ஏதோ ஒருவகையில் புரிந்துகொண்டால்தான் மேலே பேசமுடியும். ஷோபாசக்தியுடன் பல மாறுபாடுகள் இருந்தாலும் அவரது அரசியல் நேர்மை மற்றும் கடப்பாடு குறித்து எனக்கு சந்தேகங்கள் கிடையாது. அதே போன்ற நியாயத்துடன் என் தரப்பை புரிந்து கொள்பவர்களுடன் மட்டுமே உரையாட முடியும். மற்றபடி விவாதிப்பது சண்டைகள் போடுவதன் தேவைகளை அந்தந்த சந்தர்ப்பங்களில்தான் தீர்மானிக்க முடியும். இன்னதை விமர்சித்தால் இந்த மாதிரி உணர்வதாக அர்த்தம், இப்படி உணர்வதாக அர்த்தம் கொண்டால் இன்ன முத்திரை என்கிற தொனி மட்டுமே ஷோபாசக்தியின் ட்விட்களில் உள்ளது. நான் உணர்ந்தவரை பொருட்படுத்தக்கூடிய வாதம் எதுவுமில்லை.

அது எப்படி இருப்பினும் வைதீக பார்பான்/லௌகீக பார்பான் என்கிற சொல்லாடல்கள் என்னை தொந்தரவு செய்யாது என்று ஷோபாசக்திக்கு மிக நன்றாக தெரியும். ஷோபாசக்தியிடம் தனிப்பட்டு பேசும் பொழுது மட்டுமின்றி, என் எழுத்தில் இந்த வார்த்தைகளை இணையத்தில் பயன்படுத்தியிருக்கிறேன். அது குறித்த நினைவாற்றல் இங்கே பயன்படாது என்று மட்டுமே ஷோபாசக்தி அதை மறந்திருக்கிறார். குறிப்பாக பெரியாரின் சொல்லாடல் எனக்கு எந்த தொந்தரவையும் தரவில்லை. அது முழுக்க நான் ஏற்கும்/புரிந்து கொள்ளும்/ விரிவாக விளக்கக் கூடிய ஒரு கருத்து. இங்கே என் விமர்சனம் ஷோபா அதை எடுத்தாள்வது குறித்து மட்டும். விமரசிப்பதன் காரணமும் அரசியல் நேராக இருக்கவேண்டும் என்பதோ, பார்பனராக இருந்தாலும் முத்திரைகள் நியாயமாக பொருந்த வேண்டும் என்பதோ அல்ல. நான் வைதிக/லௌகீக பார்பனியம் என்கிற கருத்தாக்கங்களை, சமூகத்தில் அது நிலவுவதை ஏற்கிறேன்; எதிர்கிறேன். சும்மா தான் கடுப்பான ஒரு தருணத்தில் அதை பயன்படுத்துவதின் பிரச்சனைகள் புரிந்து மட்டுமே இங்கே விமர்சிக்கிறேன். (இது தவிர 'வெள்ளாளன் மேஞ்ச இடம் வெட்ட வெளி' போன்று 'பாம்பையும் பாப்பானையும்..' போன்ற வழக்குகளோ கூட எனக்கு பிரச்சனையில்லை. சமூகத்தில் இத்தகைய வழக்குகளின் பின்னுள்ள நியாயங்களை என் பழைய பதிவின் பின்னூட்டங்களில் எழுதியிருக்கிறேன்.)

பெரியார் ஆழ்ந்த பொருளுடனேயே 'வைதீக பாப்பானை நம்பினாலும், லௌகீக பாப்பானை நம்பாதே' என்றதாக நான் கருதுகிறேன். (இதை பழைமைவாத பார்பனியத்தைவிட நவபார்ப்பனியம் மிகுந்த ஆபத்தானது என்று நான் குறிக்க விரும்புகிறேன்.) பெரியார் சொன்ன பல விஷயங்கள் அவர் இயங்கிய போக்கில் உதிர்ந்தவை. அவற்றில் பல முரண்படுகளும் உள்ளன. இந்த முரண்பாடுகளே அவைகளை அந்தந்த சந்தர்பங்களுடன் பொருத்தி அர்த்தம் கொள்ள நம்மை நிரபந்திக்கின்றன; பெரியாரிசம் என்று கருத்தியல் எதையும் சாராம்சபடுத்த முடியாத ஆரோக்கியமான நிலையையும் கொண்டுள்ளது. இந்த நிலையில் தனக்கு ஒத்துவராத சந்தர்பங்களில் எல்லாம் இந்த லௌகீக பாப்பான்/ வைதிக பாப்பானை ஒரு சூத்திரமாக பயன்படுத்துவதையே விமர்சிக்கிறேன். கண்ணகி சிலை விஷயத்தில் தொடங்கி கருணாநிதி எதிர்ப்புவரை ஞாநியை இந்த சூத்திரம் கொண்டு தாக்கியதை ஒரு உதாரணமாக சொல்லலாம். (என் பார்வையில் பழைமைவாத பார்பனியத்திற்கு நயம் உதாரணம் வேண்டுமெனில் வேளுக்குடி கிருஷ்ணனை சொல்லிகொள்ளலாம். லோக் பரித்திரன் போன்ற முயற்சிகள். இட ஒதுக்கீட்டிற்கு எதிரான வாதங்களை முன்வைக்கும், பரப்பும் அனைவரும், தமிழ் இணையத்தின் ஒரு குறிப்பிட்ட மக்களை நவபார்பனியத்தின் உதாரணமாக சொல்லலாம். 'சோ'வை பழைமைவாதமா நவபார்பனியமா என்று பிரிப்பது கஷ்டம். ஆனால் நவபார்பனிய கருத்துக்களின் மிக பரந்த அளவில் பரப்பிய காரணத்தினாலேயே அவருக்கு முக்கியத்துவம்.)

ஷோபாசக்தியின் ட்விட்கள் அதை விட வீக். அழைப்பிதழ் இல்லாமல் அனுமதிக்காமை, லேட்டாக வந்தால் கதவு திறக்காமை போன்ற நடைமுறைகள் எனக்கு ஏற்புடையது அல்ல. ஏற்காததால் அப்படி கட்டுபாடுகள் கொண்ட ஒரு விழாவிற்கு நான் ஒருநாளும் போக மாட்டேன். அவ்வளவுதான். ஒருபடி மேலே போய் அதை விமர்சித்து கூட எழுதலாம், எதிர்ப்பை கூட தெரிவிக்கலாம். (அதுவே நேர்முக தேர்விற்கு என்றால் போய்தான் ஆகவேண்டும் என்றாலும் எனக்கு அந்த சத்திய சோதனை வரவில்லை.) ஆனால் இதில் என்ன லௌகீக பார்பனியம் உள்ளது என்று ஷோபாசக்திதான் விளக்க வேண்டும். இதனால் சமூகத்திற்கு என்ன டேஞ்சர், இது எந்த விதத்தில் சாதிய அமைப்பை நியாயப்படுத்துகிறது என்றும் ஜல்லியில்லாமல் விளக்க வேண்டும். அவர் விளக்கிய பின்பு இதை பற்றி நான் பேசுவேன். ஆனால் ஷோபா மூன்று ட்விட்களில் தனக்கு தானே அதீதமாக முரண்படுகிறார். பஞ்சகச்சம், மடிசார் டிர்ஸ் கோட் உண்டா என்று வினவுகிறார். பஞ்சகச்சமும், மடிசாரும் லௌகீக பார்பனியத்தின் அடையாளமா? லௌகீக பார்பனியம் குறித்த ஷோபாவின் புரிதல் என்ன? சென்னையில் ஒரு எலீட் பாரில் இருக்கும் (உண்மையில் நம் தன்மானத்தையும் அரசியலையும் சோதிக்கும்) கட்டுப்பாடுகளையும் ஷோபா லௌகீக பார்பனியம் என்பாரா?

இதெல்லாம் விளக்க வேண்டிய அவசியமில்லை, சொல்பவனின் தரப்பை ஆராயக்கூடாது அனுபவித்து புரிந்து கொள்வதுதான் இது போன்ற சந்தர்ப்பங்களில் முக்கியம் என்று சொல்லிவிட்டால் போதும் என்று நினைக்கிறார். அப்படியே எடுத்து கொண்டாலும், அது என்ன தரப்பு என்பதை பொறுத்தே முக்கியத்துவம் அமையும் என்று நான் நினைக்கிறேன். உதாரணமாக மதிவண்ணன் 'உள்ஒதுக்கீட்டை குலைக்க நினைக்கும் பார்பன பாம்புகள்' என்று ஒரு குறு நூலை வெளியிட்டிருக்கிறார். அதில் ரொம்ப கறாராக விவாதம் செய்வதை விட அவர் தரப்பு வாதத்தை புரிவதுதான் முக்கியம் என்று நினைக்கிறேன். எதிர் உதாரணமாக, ஈழப்பிரச்சனை சார்ந்து தான் விமர்சிக்கப்பட்டதை/தாக்கப்பட்டதை எதிர்கொள்ள, சம்பந்தமில்லாமல் தன் சாதி அடையாளத்தை ஆதவன் தீட்சண்யா ஆயுதமாக்குகிறார். இந்த அழுகுணி ஆட்டம் எதிர்க்கப்பட வேண்டியது என்று நினைக்கிறேன். ஷோபாசக்தி போகிற போக்கில் தான் கடுப்பான ஒரு விஷத்திற்காக ஒரு முக்கிய கருத்தாக்கத்தை தவறாக பயன்படுத்துகிறார். அது விமர்சிக்க வேண்டியது என்று நினைக்கிறேன். இந்த உதாரணங்கள் என் நிலைபட்டை விளக்கக் கூடும்.

மீண்டும் சொல்வதானால் நானும் பயன்படுத்தும் (எல்லாவித) 'பாப்பான்' என்கிற வார்த்தை என்னை தொந்தரவு செய்ய சிறிய சாத்தியக்கூறு கூட இல்லை. ஆனால் இன்றய சூழலில் என் போன்றவனிடம் உரையாடுவது to சண்டைபோடுவது மட்டுமில்லாது, விஜய் டீவி 'நீயா நானா' போன்ற பொதுக்களத்தில் கூட வாதங்களை முன்வைக்க வேண்டிய காலம். (விஜய் டீவின்னா விஜய் டீவி மட்டுமில்லை.) போராளிக்கு ஆள் எடுக்கும் சோதனை போன்று, இன்ன வார்த்தை இன்ன மாதிரி டிஸ்டர்ப் செய்கிறதா என்கிற டெஸ்ட் செய்தபின் தீர்மானிப்பது போன்றவை யதார்த்தம் சார்ந்த அரசியலுக்கு உதவாது. சாத்தியமற்ற அரசியலையே, தேர்ந்தெடுத்து நடைமுறை படுத்திகொள்ள ஷோபாசக்தி தீவிரமாக விரும்புவதாக பதில் சொல்ல நினைத்தால் நான் பரிந்துரைக்க எதுவுமில்லை. இறுதியாக, 'சொந்த சாதிக்கு துரோகம் செய்வது' என்கிற கருத்தக்கத்தை முன்வைத்து, ஒரு அறிவு விவாதத்தில் அடிப்படை கேள்விகளை கூட எழுப்பக்கூடாது என்று நிபந்தனை விதிப்பது, நம்மை அரசியல் வன்முறைக்கு இட்டு செல்லும் அணுகுமுறையின் ஒரு பரிமாணத்தின் நடைமுறை உதாரரணம். ஷோபாசக்தி மேலே பேசினால் நானும் மேல் விளக்கங்கள் தருவேன்.

Tuesday, May 25, 2010

நாடு கடந்த தமிழீழ அரசு.

நாடு கடந்த தமிழீழ அரசு குறித்த ஷோபாசக்தியின் கட்டுரை மீது எனக்கு விமர்சனங்கள் உண்டு. அதை இங்கே ஒரு குட்டி பதிவாக வரும் நாட்களில் எழுதலாம் என்று நினைத்திருந்தேன். முதலில் இலங்கையில், ஈழத்தில் தீவிரமாக எத்தனையோ நடப்பதும், அதை கேள்வி கேட்க நாதியில்லாமல் இருக்கும் கொடூர யதார்த்தத்தில் (நடந்ததை கேட்பது வேறு) நாடு கடந்த அரசு என்ற 'வேடிக்கையை' விமர்சிப்பதை முதற்கரிசனமாக ஷோபாசக்தி கொள்வதே எனக்கு மிகவும் பிரச்சனைக்குரியது. ஆனால்    'உங்களின் அரசியல் விருப்புகளிற்கு ஈழத்து மக்களை நீங்கள் பலிகொடுக்க முடியாது. எதிர்கால ஈழத் தமிழர் அரசியல் இயங்குதிசை அவர்களால் மட்டுமே தீர்மானிக்கப்படும். உறுதுணை மட்டுமே உங்களது வேலை.' என்ற அளவில் சோபாவை ஏற்பதாக ட்விட்டரில் எழுதியிருந்தேன். இதை தொடர்ந்து பெயரிலி எழுதிய ட்விட்களில் உள்ள பல கருத்துக்களை நான் ஏற்கிறேன். சொல்ல போனால் அடிப்படையில் கிட்டதட்ட முழுவதுமே எனக்கு உடன்பாடு உண்டு. ஆனால் நான் முன்வைக்கும் மொழி மாறியிருக்கும். வேறு சில விஷயங்களை சொல்லியிருப்பேன்.

இவை இப்படியிருக்க நாடு கடந்த அரசு குறித்து எனக்கு பெரிய நம்பிக்கைகள் எதுவும் இல்லை. ஆனால் இப்படி ஒரு அரசியலை தொடர்ந்து உயிர்ப்புடன் வைத்திருப்பது தேவை என்றே நினைக்கிறேன். இது அரசியல் அல்ல, அரசியல் என்பது இடது சாரித்தனமாக (சாதிய எதிர்ப்பு, பாசிச எதிர்ப்பு எல்லாமே இதில் சேர்த்தி) பேசுவது மட்டுமே என்று ஷோபா வலியுறுத்துவது போல் நான் கருதவில்லை. சோபாசக்தி கேடாக, கேவலமாக நினைக்கும் முதலாளித்துவ ஏகாதிப்பத்திய அரசாங்கத்திடம் மனு சமர்ப்பிப்பது கூட தேவை, சோபா அ.மார்க்ஸ் போன்றவர்கள் முன்வைக்கும் அரசியலை விட நடைமுறைக்கு யதார்த்தத்திற்கு தேவையானது என்று நினைக்கிறேன் - அதில் சிலரது சுயநலன், ஊழல் என்பன இருந்தாலும். நாடுகடந்த அரசு என்பதை சாக்காக வைத்து அடக்கு முறையை இலங்கை அரசு தர்க்கப்படுத்தி அவிழ்த்துவிடும் என்பது ஒரு ஏற்கத்தக்க வாதமாக எனக்கு தோன்றவில்லை. தற்சமய இலங்கை அரசு ஈராக் தாக்குதலின் போதான அமேரிக்க திமிரை விட அதிக திமிருடன் இயங்கி வருகிறது. அமேரிக்கா ஐநா அங்கீகாரத்துடன்தான் ஈராக் மீது படையெடுக்க விரும்பியது. அங்கீகாரம் கிடைக்காவிட்டால் அங்கீகாரம் தேவையில்லை என்பதை உலகுக்கு உணர்த்தும் வாய்ப்பாக அதை எடுத்துக் கொண்டு தான் நினைத்ததை நிறைவேற்றியது. இலங்கையும் அதே நிலையில்தான் உள்ளது. தமிழ் மக்களின் அரசியல் சார்ந்து இலங்கைக்கு எந்த அழுத்தமும் தர வாய்பில்லாத, எந்த நியாய அங்கீகாரமும் தேவையில்லாத நிலையில்தான் உள்ளது. ஆகையால் ஷோபாசக்தியின் கட்டுரையில் உள்ள ஒரே முக்கிய பாயிண்டான இந்த *புதிய* அடக்குமுறை வரும் என்ற வாதமும் எனக்கு சரியாக படவில்லை.

பெயரிலி எழுதிய ட்விட்களை அவர் ஒரு பதிவாக விரிவாக எழுத வேண்டும் என்பது என் வேண்டுகோள். அதை செய்வாரா என்பது தெரியாததால் அவரது ட்விட்களை ஒன்று சேர்த்து கீழே பதிகிறேன். இனி இதாலிக்கில் வருவது பெயரிலி எழுதியது என்பதை நினைவில் வைத்து வாசிக்கவும். அப்படியே வெட்டி ஒன்றுஇ சேர்த்து ஒட்டியது மட்டும் என் வேலை. இதில் அவருக்கு ஆட்சேபம் இருக்கும் பட்சத்தில் நீக்கிவிடுவேன்.

சோபா போன்றவர்களும் இன்னும் பலரும் பொதுவாக இதனைச் சொல்லிவிட்டுப்போகின்றார்கள். ஆனால், அதற்கான இவர்களது செயற்றிட்டம் என்ன? ஈழத்தமிழரின் அரசியல் இயங்குதிசை அவர்களாலேதான் தீர்மானிக்கப்படும். உண்மை. ஆனால், இன்றைக்கு அவர்களின் நிலைமையும் வருமானமும் என்ன? உல்லாசப்பிரயாணத்துறையிலே வரவீட்டுதலா? அவர்களின் குடியிருப்புகளிலே நடக்கும் சிங்களக்குடியேற்றங்களுக்கு யார் குரல்கொடுப்பது?

ஸ்ரீலங்கா அரசின் செயல்களையெல்லாம் புலிகளிலே போட்டுவிட்டு, சிங்கள, முஸ்லீம் மக்களோடு ஆரத்தழுவுவோம் என்று சொன்னால், கைதட்டி வரவேற்கப் பலரிருக்கின்றனர். இந்தியர்கள், மார்க்ஸியர்கள், தலித்தியவாதிகள், உதிரிகள்,மாற்றுக்கட்சிகளென்று சொல்லிக்கொள்கின்றவர்கள்.   
சொல்லப்போனால், இலங்கையிலே இனப்பிரச்சனைக்குக் காரணமே விடுதலைப்புலிகள்தான் என்று கையைக் கழுவிவிட்டுப்போக எல்லோருக்கும் வசதியாகிவிட்டது :-(

நாடுகடந்த அரசு என்பதிலே எனக்கு உடன்பாடு பெரிதுமில்லை - அது விடுதலைப்புலிகளின் எச்சமாக ஷோசபோல ஆங்கிலச்செவ்விகளிலே தனக்கான போராளிவிம்பத்தை உருவாக்கிக்காட்டிக்கொள்ளும் ஆட்களுக்கும் எடுத்ததற்கெல்லாம் பாசிசம் பினாமி சியோனிசம் என்று அரசியல்நடைமுறைப்பாதிப்பு எதுவும் இல்லாமலே கதறும் ஸ்ரீரங்கன், ரயாகரன் போன்றோருக்கு வாய்ப்பந்தல்போட வசதிப்படுவதாலே. ஆனால், குறைந்தளவு அகிலம் தழுவிய ஓர் அழுத்தத்தை இலங்கை அரசுக்கு ைக்கின்றோமென்ற திட்டமேனும் அவர்களிடமிருக்கின்றது. ஷோபாவுக்கும் லும்பினி அ. மார்க்ஸுக்கும் ஸ்ரீரங்கனுக்கும் ரயாகரனுக்கும் என்ன திட்டம்?   

நாடுகடந்த அரசு என்ற தலைப்பினை பாலஸ்தீனம், செச்சினியா, தென்சூடான் போன்றவற்றின் அடிப்படையிலே அவர்கள் பேசும் குரலுக்காக அமைத்தனர் எனமுடியாதா? பாலஸ்தீனியருக்கு என்றால் சரி, ஈழத்தமிழருக்கென்றால் இவர்களுக்கு ஆயிரம் கேள்விகள். நாடுகடந்த அரசு என்றில்லாமல் ஈழப்பாட்டாளிகளின் கூட்டாளிகள் என்று தலைப்பினைப் போட்டுவிட்டு இருந்தால், ஈழத்திலே இருப்பவர்களுக்கு எல்லாப்பிரச்சனையும் தீர்ந்துவிட்டதாக அர்த்தப்படுமா? இப்படியாக அமுக்கிவிட்டுத் தாமும் பேட்டிகளும் போஸுகளும் பதிவுகளும் மட்டும் போட்டுக்கொண்டிருந்தால், இவர்களுக்கும் அ. முத்துலிங்கத்துக்கும் என்ன வித்தியாசம்? போய் groundviews முதல் கொஞ்சம் அரசியலிலே நிதானம் நிற்க எழுத முயலும் இடங்களிலேகூடப்பாருங்கள். status quo..

  
விடுதலைப்புலிகள் என்ற பயங்கரவாதிகள் ஒழிந்துவிட்டார்கள். இனியேனும், ஸ்ரீலங்கா அரசு என்ற புள்ளியிலேதான் தொடங்கமுடியும் - ஓரிரு விதிவிலக்கு. முஸ்லீங்களைக் கொன்றார்கள் என்று "வன்னிப்"புலிகளையே இன்னும் காட்டும் இவர்களுக்கு அந்நேரத்திலே விரல்காட்டிய "கருணா"ப்புலிகளைப் பத்திரமாகக் கொழும்பிலே கொண்டுபோய்ச்சேர்க்கமுடிகின்றது. டக்ளஸ் தேவானந்தாவுடன் எதுவரை பௌஸருக்கு எதுவிதமான அரசியற்றொடுப்பும் இல்லையென்று மனிதாபிமானம் முன்னிட்ட செவ்வியை அவருக்குக் கொடுத்த ஷோபாசக்தி சொல்வாரா? செய்த தவறுகளையும் ஏன் ஸ்ரீலங்கா, இந்தியஅரசுகள் இழைத்த குற்றங்களையும் விடுதலைப்புலிகள்மீது தள்ளிவிடுவது இவர்களுக்கும் விடுதலைப்புலிகளின் முன்னாள் ஆதரவாளர்களும் இந்நாள் திடீர்மனிதக்காவலர்களுக்கும் வசதி.

கொல்லப்பட்ட அப்பாவிமுஸ்லீங்கள், அப்பாவிச்சிங்களவர்கள் என்று உருகும் இவர்களிலே ஒருவருமே இந்த அப்பாவிகளிலே எத்தனைபேர் ஸ்ரீலங்கா இராணுவத்தின் மேற்பார்வையின் கீழே இயங்கிய 'ஜிகாத்', ஊர்காவற்படையினர், தமிழர்தாய்நிலத்திலே குடியேற்றப்பட்ட பழைய சிறைக்கைதிகள் என்பதைப் பேசுவதில்லை. இஸ்லாமிய அடிப்படைவாதம், இந்துத்துவவாதிகளுக்கு எவ்விதத்திலும் குறைந்ததில்லை. ஒன்றை ஆதரித்து மற்றைதைமட்டும் தேர்ந்தெடுத்து எதிர்க்கும் அ. மார்க்ஸின் சீடர்களிடம் லும்பினி ஞானத்தை எதிர்பார்க்கமுடியாது லும்பன் தனத்தைத்தான் எதிர்பார்க்கமுடியும்.

ண்டும் கேட்கிறேன்; நாடுகடந்த அரசினை எதற்காக எதிர்க்கின்றார்கள்? உருத்திரகுமாரன் அதிலே இருக்கின்றார் என்பதற்காகமட்டுமேதானா? வேறேதும் வலிதான காரணமுண்டா? நாடுகடந்த அரசினைப் பேசுகின்றவர்கள் ஈழத்திலே இண்றைக்கு இருக்கும் நிலையிலே தமிழ்மக்களுக்கு உதவக்கூடாதென்றார்களா? அவர்களின் இன்றைய துயரங்களைப் பேசக்கூடாது; ஆயுதம் வாங்கி அனுப்புகிறோம்; வீட்டுக்கொரு பிள்ளையைத் தாருங்கள் என்றா சொன்னார்கள்? எதற்காக எதிர்க்கின்றார்கள்? அரசும் இந்திய அரசும் தருகின்றதையே ஏற்றுக்கொண்டு அவர்கள் வாழ்வதே அவர்களுக்கான அரசியலாகட்டும். 1948-->1968--> என்று பின்னோர் இண்டிபாட்டா இருபதாண்டுகளின் பின்னாலே, எமது கதை, கவிதை, கார்ல்மார்க்ஸின் விதைவிந்துபரவியது எவரிடம் எப்படி கட்டுரைகள், போஸுகள், பேட்டிகளுக்குப் பங்கம் வராமல் வந்தாலே போதுமானதென்பதாகவா? குறைந்தபட்சம், விடுதலைப்புலிகள் கயமைத்தனம் கொண்டவர்களென்றாலும் இவர்கள்மாதிரியாகப் பங்கம் இல்லாது அரசியல் பேசும் வசதியோடு இருக்கவில்லையே? ஈழத்தமிழர்களையே தீர்மானிக்கவிடுங்கள்; விடுங்கள் என்று சொல்கின்றவர்களுக்கு இவர்கள் இன்றைக்கு என்னசெய்தார்கள்? என்னசெய்தாய் என என்னிடம் கேட்டால், நான் சொல்லப்போவதில்லை; அதனாலே, அவர்களும் சொல்லவேண்டுமென நானும் வற்புறுத்தப்போவதில்லை.

  
ஈழம் என்பதே சாதிமான்யாழ்ப்பாணிகளுக்கு நேர்ந்த தரப்படுத்தலின் விளைவான பழிவாங்குதலே என யாழ்ப்பாணம் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களிலே நடந்த தமிழரின்பூர்வீகபிரதேசங்கள் பறிபோதலையெல்லாம் கண்டுகொள்ளாமலே விட்டுவிட்டு ஆதவன் தீட்சண்யாபோன்றவர்களுக்குப் படம் காட்டிய தலித்தியவாதிகள் இவர்களுக்கும் சாதிமான்யாழ்ப்பாணிகளுக்கும் ஸ்ரீலங்கா அரசுக்கும் என்ன வேறுபாடு? அவரவர் அவரவருக்கான போராட்டங்களைத் தேர்ந்துகாட்டுகிறார்கள். ஆக வேலைவாய்ப்புகள்மட்டுமே இத்தனைநாட்களும் தமிழர்களுக்குகான முக்கியபிரச்சனையென்றால் சொல்ல ஏதுமில்லை. சீனாவும் இந்தியாவும் முதலீட்டு வேலை வாய்ப்புகளை உருவாக்கினாலென்ன, எவர் வடகிழக்கிலே வேலைவாய்ப்பினை உருவாக்கினாலென்ன, அதிலே வடகிழக்கிலேயிருக்கும் தமிழர்களுக்கு எத்துணை வாய்ப்பு என்பது முக்கியமானது; தவிர, இந்தவேலைவாய்ப்பு எந்தளவுக்கு அரசியல்ரீதியான ஈழத்தமிழர்களின் (சரி உங்களின் ஸ்ரீலங்கா தமிழர்களின்) எதிர்காலத்தினை நிச்சயப்படுத்தும்? "பொடியளெல்லாம் இயக்கத்துக்குப் போறங்களெண்டு தியேட்டரில புளூபிலிம் காட்டி, இரவின்மடியில் போட்டுத் திசைதிருப்பவேணும்" என்ற ஏதாவதிலே இப்போதைக்கு ஈடுபடச்செய்யும் வழிமுறைகளாகவே முடிந்துவிடுவதுபோதுமா? அரசியல்ரீதியான ஒரு முன்னெடுப்பு அவசியமேயில்லையா?

நான் சொல்லவருவதெல்லாம் இதுதான்; எல்லாவற்றுக்கும் பிரபாகரனையும் உருத்திரகுமாரையும் பூச்சாண்டி காட்டிக்கொண்டிருப்பது வெறுமனே எமது தப்புதலே. எனது கருத்தெல்லாம் ஸ்ரீலங்கா அரசினைச் ுட்டுவிரல்நுனியிலே வைத்திருக்க ஏதாவதொரு அகிலம் பரவிய அமைப்பு ஓரளவு திட்டத்துடன் அவசியமென்பதுமட்டுமே. அது நாடுகடந்த அரசானாலுஞ்சரி; நாடு கனன்ற ஆலானுஞ் சரி. காஸ்பர்ராஜும் பா.ராகவனும் டைனோவும் லக்கிலுக்கும் இன்னபிற தமிழகத்தலைவர்களும் அதைச் செய்யப்போவதில்லை என்பதே பரபரப்பு யதார்த்தம்; ஆங்! ஷோபாசக்தி, அ. மார்க்ஸ், தலித்திய, பெண்ணிய, புண்ணிய, மண்ணிய, என்னிய ஏனைய பிறவுங்கூட ;-)

Monday, May 17, 2010

சுய முரணும், அறிவு நேர்மையும்.

சந்தனமுல்லை அவர்கள் எழுதிய, இஸ்லாமிய பெண்கள் சுயமாக சம்பாதிப்பதற்கு எதிரான பத்வா ஒன்றை பற்றி பேசும் பதிவொன்றை முன்வைத்து, நண்பர் சுகுணா திவாகர் எழுதிய பதிவை படித்து உடனடியாக கீழுள்ள கருத்துக்களை ட்விட்டியிருந்தேன்.

// சந்தனமுல்லை பதிவை முன்வைத்த சுகுணாவின் பதிவு முழு உளறலன்றி வேறில்லை. சுய முரண்பாட்டை அறிந்தும் தெரியாமல் நடிப்பவர்களுக்கு விளக்கமுடியாது. 8:36 PM May 15th via web

அமா மற்றும் அவர் சிஷ்யர்கள்+தார்மீக ஆதரவாளர்களுக்கு சில விஷயங்களில் குறைந்த பட்ச அறிவு+நேர்மையுடன் இயங்க இயலாது என்பது வெளிப்படை.
8:37 PM May 15th via web

இவர்கள் ஆதர்சமான பெரியாரிடம் இந்த நேர்மையின்மை கிடையாது, அவர் வாதங்கள் வெளிப்படையான அறிவு நேர்மை கொண்டது. இதுதான் புரியாதது+ஆச்சரியமானது. 8:40 PM May 15th via web

ஒருவேளை பெரியாரை தாண்டி சிந்திக்கும் பின்பெரியாரிசம் இதுதானோ?
8:41 PM May 15th via web//


நான் எழுதியது ஒரு உடனடி துளி எதிர்வினை. மேலே சொன்னவற்றின் அடிப்படை பார்வையில் மாற்றமில்லை என்றாலும், சற்று நேரம் கழித்து எழுதியிருந்தால் கடுமை குறைவான வேறு வார்த்தைகளில் என் விமர்சனத்தை சொல்லியிருக்க கூடும்.

இதில் நான் குறிப்பிட்டுள்ள 'சுயமுரண்' என்பதை தன்னால் கண்டுகொள்ள முடியவில்லை என்று நண்பர் அனாதை என்னிடம் மேல் விளக்கம் கேட்டுள்ளதற்கு பதிலாக இந்த பதிவு எழுதப்படுகிறது. டிவிட்டரில் எழுத நினைத்த பதிலையே இங்கே அளிப்பதால் பதிவு கருத்து துண்டுகளாக இருக்க வாய்ப்புண்டு, முதலில் சுயமுரண் என்று நான் குறிப்பிடுவதன் விளக்கம்.

ஒரு அரசியல் சட்டகம் என்பதை நாம் ஏற்றுகொண்டால், சமூக பிரச்சனைகளை அணுக/எதிர்க்க/ஆதரிக்க நாம் கொள்ளும் முன் அனுமானங்கள் என்று சில உண்டு. இந்த முன் அனுமானங்களை இடத்திற்கு ஏற்ப மாற்றிக் கொள்வதையும், பிரச்சனைகளின் நுட்பத்திற்கு ஏற்ப அல்லாமல் நிறத்திற்கு ஏற்ப வேறு படுவதையும், முன் அனுமானங்களை கொண்டு தீர்மானிக்கப்படும் தர்க்கம் சந்தர்ப்பத்திற்கு ஏற்ப மாறு படுவதையும் சுயமுரண் என்று சொல்லலாம். இது மற்ற சட்டகத்துடனான முரண் அல்ல; தன் சட்டகத்துனுள்ளேயே, தானே குண்டக்க மண்டக்க முரண்படுவது. முன் அனுமானங்கள் மூலம் தீர்மானிக்கப்பட்டு குறிப்பிட்ட (குறைந்த பட்சம்) இரு பிரச்சனைகளில் எழுத்தின்/எதிர்ப்பின் தீவிரம், முற்றிலும் மாறுபடுவதை சுயமுரண் என்று இந்த சந்தர்ப்பத்தில் மேலுள்ள ட்விட்களில் குறிக்கிறேன்.

சமூகம், மதம், இதர ஆண்களால் தீர்மானிக்கப்படும் நிறுவனங்கள் பெண்கள் மீது செலுத்தும் அதிகாரம், மற்றும் பெண்களின் செயலை/இருப்பை கட்டுப்படுத்துவது குறித்த சுகுணாவின் கருத்துக்களை முன் அனுமானங்கள் என்று இங்கே சொல்லலாம். அவை என்ன கருத்துக்கள் என்று விளக்க வேண்டியதில்லை. இப்போது இரண்டு பிரச்சனைகளை எடுத்துக் கொள்ளலாம். முதலாவது அண்மையில் லீனா எழுதிய கவிதையை முன்வைத்து நடந்த பிரச்சனைகள். இதில் லீனாவின் கவிதை எழுதும் உரிமை மட்டுமில்லாது, அதையும் தாண்டி சுகுணா அளித்த ஆதரவு பதிவாகியுள்ளது. இரண்டாவது மேலே குறிப்பிட்டுள்ள ஃபத்வா பிரச்சனை. இந்த இரண்டில் ஒன்றில் சுகுணா கலகவாதியாகவும்,எல்லையற்ற சுதந்திரம் கொண்ட மனித விடுதலையை ஆதரிப்பவராகவும் இருக்கிறார். இன்னொன்றில் வழவழ கொழகொழக்கிறார். இதைத்தான் சுயமுரண் என்று குறிப்பிட்டுள்ளேன். என்ன சொல்ல வந்தேன் என்பதை இதற்கு மேல் விளக்க தேவையில்லை என்று நினைக்கிறேன்.

பெரியாரை நான் இழுத்தது சுய முரண் பற்றி பேசும் போது அல்ல, அறிவு நேர்மை என்பதை பற்றி பேசும் போது. சுய முரண் என்பதே இல்லாமல் அரசியல்ரீதியாக இயங்குவது சாத்தியமல்ல; வாழ்வது நிச்சயமாக சாத்தியம் அல்ல. இந்த இடத்தில் முதல் பிரச்சனை இந்த சுய முரணின் தீவிரம்; அடுத்தது சுயமுரணை சமாளிப்பது அல்லது மழுப்புவது.

மார்க்சிய திருவுருக்கள், மார்க்சிய கருத்தியல்களை பாலியல் சொல்லாடல்களுடன் கலந்த கவிதை என்று ஒன்றை சமைப்பதற்கான உரிமை என்பது நானும் ஆதரிக்கும் ஒரு விஷயம். ஆனல் இது நாம் முதன்மையாக கரிசனம் கொள்வதற்கான ஆதார உரிமை அல்ல. மாறாக பொருளீட்டுவது என்பது ஆதார உரிமை. தன் இருப்பையும், சுதந்திரத்தையும் குறைந்த பட்ச அளவில் தக்கவைக்க தேவையான அடிப்படை உரிமை. இந்த இரண்டு பிரச்சனைகளில் சுகுணாவின் கரிசனமும் தீவிரமும் நேர்மாறான தலைகீழ் விகிதத்தில் உள்ளது. அடுத்து அறிவு நேர்மை என்பதை சுயமுரண் என்று எதுவுமே இல்லாமல் இயங்குவது என்று நான் குறிப்பிடவில்லை. சுயமுரண் என்று இருப்பதை acknowledge செய்து வெளிப்படையாக ஒப்புகொள்வதையே அறிவு நேர்மை என்கிறேன். பெரியார் இஸ்லாத்தையும் சில சந்தர்ப்பங்களில் தீவிரமாக விமர்சித்தார். ஆனால் அவர் இஸ்லாத்துடன் பொதிவான உறவு கொண்ட சந்தர்பங்களில் தனது சுய முரண்கள் குறித்து மிகுந்த சுய உணர்வடன் இருந்ததையும், அதை வெளிப்படையாக முன்வைக்கும் நேர்மையும் அவரிடம் இருந்ததை காணலாம்.

இந்த பிரச்சனை குறித்து நான் கருத்து கூற ஒரே காரணம் சமூக யதார்த்தத்தில் மத கண்காணிப்பில் நடந்து வரும் மாற்றங்கள். கடந்த 10 ஆண்டுகளில் உலக வஹாபிய பாதிப்பில் தமிழ் இஸ்லாமிய சூழலில் நடக்கும் மாற்றங்கள், பெண்கள் மீதான புதிய கண்காணிப்புகள், கட்டுப்பாடுகள். இவை எங்கோ உலக மூலையில் நடப்பவை அல்ல, நம் கண் எதிரே தமிழ் சூழலில் சமூக புழக்கத்தில் காணக்கூடிய விஷயங்கள் இவை. இது குறித்த அக்கறையிலேயே என் நிலைபாட்டை குறைந்த பட்சமாக பதிவு செய்ய ட்விட்டினேன்.

இவைகள் ஒரு பிரச்சனையே அல்ல; இந்த பிரச்சனைகளை விட முதலீட்டியமும், தமிழ் தேசியமும்தான் இன்றய ஒரே பிரச்சனை என்று சிலர் நினைக்கலாம். தாராளமாக நினைக்கட்டும். முக்கியமில்லாத பிரச்சனைகள் குறித்து -குறிப்பாக மத அடக்குமுறைகளுக்கு ஆதரவாக வாவது குறைந்த பட்சமாக - கருத்து சொல்லாமலாவது இவர்கள் இருக்கும் வரை பிரச்சனையில்லை. அ.மார்க்ஸ் போன்றவர்கள் இஸ்லாமிய மத அடிப்படைவாதத்திற்கு தார்மீக நியாயங்களை கட்டமைத்து வழங்குவார். ராஜன்குறை போன்றவர்கள் அதற்கு நடைமுறை அரசியல் என்று ஒரு நியாயம் வழங்குவார்கள். அ.மார்க்ஸை அப்படியே நகலெடுக்கும் நடையிலேயே சுகுணாவின் பதிவும் எழுதப்பட்டுள்ளது. குறைந்த பட்சம் விமர்சன பூர்வமான கேள்விகளை எழுப்பவாவது வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

இறுதியாக நாம் வெளியில் இருந்து கொண்டு (இஸ்லாமியராக இல்லாமல்) இஸ்லாத்தை விமர்சிப்பதன் சிக்கல்களை முன்வைத்து நான் பல முறை கருத்து சொல்லியுள்ளேன். மீண்டும் அதை பதிவு செய்யலாம். ஆனால் இங்கே அந்த கேள்வி பொருத்தமில்லாதது. வெளியில் இருந்து பேசுவதில் பிரச்சனை என்றூ தோன்றினால் பேசாமலாவது இருக்க வேண்டும். தீவிர பிரச்சனைகளில் மத அடிப்படைவாதத்திற்கு வக்கலத்தாக இவர்கள் பேசுவதுதான் பிரச்சனை, அதற்குதான் விமர்சனமே தவிர 'அல்லாமல் பேசுவதில்' உள்ள பிரச்சனைகள் வேறு விஷயம். (என் கருத்தை சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில், உள்ளிருந்து எதிர்ப்பும், போராட்டமும் யதார்த்தத்தில் இல்லாத, வர வாய்பில்லாத நிலையில் வெளியிருந்து பேசவாவது வேண்டும். அதாவது பேச மட்டுமாவது செய்ய வேண்டும்.)

சுகுணாவின் பதிவை விட முக்கியமாக கொள்ள வேண்டிய அரசியல் பிரச்சனைகள் உண்டு. ஆனால் இந்த விஷயத்தை பற்றிய என் நிலைபாட்டை வெளிப்படுத்துவது எனக்கு முக்கியமானது. அதனால் சின்னதாக ட்விட்டரில் எழுதினேன். அனாதை கேட்டுகொண்ட காரணத்தால் இந்த பதிவை எழுதினேன். சுகுணாவின் மேற்படி பதிவை வழவழ கொழகொழத்தல் என்று சொன்னது குறித்து எதுவும் விளக்கம் தரவில்லை. அதை சுகுணா என்னை கேட்டுகொண்டால் (அல்லது தேவையான எதிர்வினயைை வைத்தால்) மட்டும் செய்வேன்.

Tuesday, April 27, 2010

துளியுரைகள்-9.


 இந்திய-சிங்களப் படைகள் இணைந்து கண்காணிக்க, இனி வரும் மீனவர் மீதான தாக்குதலில் இந்தியாவுக்கும் பங்கு உண்டு என்று நேரடியாக எடுக்து கொள்ளலாம் ... 12:58 PM Oct 4th, 2008

(பாரா தொட்டு சென்றதை போல) கீ போர்டும் ஆர்கனும் தமிழ் சினிமா திரையிசையின் சாபம். சகித்து சகஜமாக்கிக் கொள்ளும் அளவிற்கு ரஹ்மான் பழக்கப்படுத்திவிட்டார் ... 1:37 PM Oct 6th, 2008

ஒரு மாதம் முன்னால் கூட வெறும் வாய்சவடால் என்றுதான் தோன்றியது; இப்போது உண்மையிலேயே பிரபாகரனையே கூட பிடித்துவிடுவார்கள் போல இருக்கிறது ... 1:00 PM Oct 7th, 2008

ஈழப்போர் இந்த விதத்தில் முடிவுக்கு வந்தால் இதை விட மோசமான நெருக்கடியை தமிழினம் அடையமுடியாது; ஒட்டுமொத்தமாய் விரட்டப்பட கூட நேரலாம். ... 1:02 PM Oct 7th, 2008

தமிழ்நாட்டு மீனவனை கொல்வதை கூட கேட்க வக்கில்லாத மாநிலஅரசு, உடந்தையாக இந்தியா; ஈழத்தமிழனுக்கு புலியின் இருப்பை தவிர வேறு நாதி இருப்பதாக தெரியவில்லை ... 1:10 PM Oct 7th, 2008

இன்றய நாதியற்ற சூழலை அடைய மற்ற எல்லாரையும் விட புலிகளின் பங்கே மன்னிக்க முடியாததாக இருக்கிறது என்பது வேறு விஷயம் ... 1:19 PM Oct 7th, 2008

இந்த சாரு என்ற முட்டாள் என்ன எழவிற்கு தனக்கு வராத, தெரியாத, குறைந்தபட்ச அறிவு கூட இல்லாத விஷயங்களை பற்றி எழுதுகிறார்! உதாரணமாய் அரசியல், இசை ... 10:55 PM Oct 8th, 2008

சாருவின் எழுத்திற்கு முக்கியத்துவம் உண்டு; அதற்கே படிக்க போகிறேன். ஆனால் ஏதோ அத்துமீறல், கலகம், குடி, யோனி என்று எழுதிவிட்டு போக வேண்டியதுதானே! ... 10:57 PM Oct 8th, 2008

சிரஞ்சீவியின் அரசியல் பிரவேசம் பற்றிய பதிவின் முதல் பத்தியை படித்துவிட்டு எழுதுகிறேன்; என்ன ஒரு முட்டாள்தனம்! ... 10:58 PM Oct 8th, 2008

இந்தியாவில் தமிழ்நாட்டைபோல அரசியல் உணர்வும், அரசியல் சார்ந்த விவாதமும் உள்ள மாநிலம் வேறு கிடையாது;வங்காளம்/கேரளம் விஷயம் வேறு. இந்த அடிப்படை கூட தெரியாமல் பல முட்டாள்கள் ஆங்கிலத்தில் பத்தி எழுதலாம்; லொக்கல் முட்டாளுக்கு அந்த அவசியம் என்ன?! ... 11:01 PM Oct 8th, 2008

சாரு சிரஞ்சீவி பற்றிய அரைவேக்காடு கட்டுரையை எழுதியிருப்பது கலாகௌமுதியில்; 'காட்டிகொடுப்பதாக' ஜேமோவை திட்டிய ஆசாமிதான், மலையாள அரகன்ஸ் குறித்த பிரஞ்ஞையில்லாமல், தமிழ்நாட்டு மக்களை அரசியல் உணர்வற்றவர்களாக சொல்லி கட்டுரையை தொடங்குகிறது ... 6:44 PM Oct 17th, 2008

இன்னொரு கேஸ் இந்த தமிழவன்; வலம்புரி ஜான் எப்படி ஒரு அறிவாளி, திராவிட இயக்கம் அதை எப்படி நாசமாக்கியது என்பதற்கு ஆதரமில்லாமல் http://is.gd/4inE ... 12:21 PM Oct 18th, 2008

திராவிட இயக்கம் இன்றி ஜானை யாருக்கு தெரிந்திருக்கும்? வலம்புரி போன்ற ஆளுமைக்கான இடம் வேறு ஏது? தமிழவன் படித்தது எல்லாம் எங்கே போகிறது? ... 12:23 PM Oct 18th, 2008

அதாவது இலக்கிய சான்னித்தியம் இல்லையென தமிழவன் கருதும் ஒருவருக்கு, திராவிட இயக்கமன்றி சிறு பத்திரிகை வெளியில் எப்படி இருப்பு சாத்தியமாகியிருக்கும்? ... 12:28 PM Oct 18th, 2008

சரோஜா = மொக்கை + bizarre! யுவனின் இசை -எட்டுத்திசைலிருந்தும் இறக்கிய தேவையற்ற காரேமூரே பிண்ணணி. படம் சிலருக்கு பிடித்திருந்ததை புரிந்து கொள்ள முயல்கிறேன் ... 6:43 PM Oct 9th, 2008


'பொய் சொல்லபோறோம்' பார்த்தேன்; பிரம்மாதம்! சரோஜா என்ற மட்டசரக்கின் ஹேங் ஓவர் தீர்ந்தது. மலையாள தழுவல் இல்லை என நம்புகிறேன் ... 9:45 PM Oct 10th, 2008

என் பார்வையில் ஒரிஜினலான 'கோல்மாலை' விட தழுவலான தில்லுமுல்லு பல மடங்கு பிரமாதம்; அந்த ஒப்புமை குறித்து தெரியாவிட்டாலும், ஒரு திரைப்படம் தழுவப்பட்டாலும் மீண்டும் பிறப்பதாகவே நான் கருதுவதால், 'பொய் சொல்லப்போறோம்' அதனளவில் சிறந்த ஒரு படம் என்றே நினைக்கிறேன் ... 10:56 PM Oct 10th, 2008

சன்னில் செய்தி. *இந்திய கடலெல்லைக்குள்* மீனவர் மீது இலங்கை கடற்படை பயங்கர தாக்குதல்; இந்தியப்படை கூட ரோந்துக்கு சென்றதா என்று தெரியவில்லை ... 7:05 PM Oct 9th, 2008

கத்தியால் குத்தி காயத்தில் உப்பு வைத்து அனுப்பினார்களாம்! புலி என்று நினைத்துதான் இப்படி செய்ததாக ஷீலா தீகஷிட் பத்ரியிடம் சொல்லி அனுப்பலாம் ... 7:08 PM Oct 9th, 2008


தமிழின் ஒரேயொரு மாஎழுத்தாளரின் அடுத்த நாவல் 12பாகங்களில் மொத்தம் 12000பக்கங்களில் என்று அரசல் புரசல். உலகில் 12000பக்க நாவல் வந்துள்ளதா? ... 8:00 PM Oct 13th, 2008

@arulselvan (எழுதிய) அவரே 36000 பக்கங்களில் விமர்சனம் எழுதும் திறமையும், உழைப்பும், துணிவும், மடமையும் கொண்டவர் ... 12:08 AM Oct 15th, 2008 from web in reply to arulselvan

ஹரன் பிரசன்னாவுடன் பேசிய போது இந்த வதந்தி 'சரியான தகவல்' இல்லை என்றார்; ஆனால் எனக்கு கிடைத்து பூசாரியிடமிருந்து, ஒரு கை மாறி இரண்டாம் கை தகவலாக. ... 11:31 PM Oct 14th, 2008

எனது இந்தியா' பதிவின் தொடர்சிகளை படித்து மனதார சொல்றேன். ஜெயமோகனின் எழுத்துக்களை போல கயமை நிறைந்தது வேறு இருக்க முடியாது. இதை சொல்லும் நான் இஸ்லாமிய அடிப்படைவாதம், ஸெகூலர் அரசியல் சார்ந்த வன்முறைகளை விமர்சிக்கிறேன்; இந்து(இந்திய) சமுதாயத்தின் பண்மைதன்மை பற்றிய சில கருத்துக்களையும் ஏற்கிறேன்; ஜெயமோகனின் புனைவுத்திறனையும், உழைப்புயும் கூட மதிக்கிறேன். இத்தனையும் சொல்லிவிட்டு, பலவிதங்களில் பலர் சொல்லி அலுத்தது என்றாலும், ஜெமோவின் எழுத்து போல விஷத்தன்மை கொண்டது வேறில்லை என்றும் சொல்கிறேன். 9:58 PM Oct 15th, 2008

ஜெயமோகனை படித்து வரும் கோபத்தை எழுத்தில் உடனடியாய் காட்டிவிடுவது நலம்; குறிப்பாக ஜேமோவை தொடர்ந்து நிதனமாய் படிக்க அது மிக உதவும் ... 10:41 PM Oct 15th, 2008


விஜயகாந்தின் அலைமோதிய கூட்டம் கடற்கரை பக்க சென்னையை இன்று ஸ்தம்பித்தது என்றால் மிகையில்லை; காசு கொடுத்து இந்த லட்சக் கூட்டத்தை நிகழ்த்தியிருக்க இயலாது ... 12:26 AM Oct 19th, 2008

பத்து வருடத்தில் விஜயகாந்த் உண்மையிலேயே ஆட்சிக்கு வருவாரோ என்று பயமாயிருக்கிறது; வேறு பயங்களிருந்தாலும் இது தமிழகம் பற்றிய முக்கிய பயம் ... 2:04 AM Oct 19th, 2008

Zக்காரியா மீதிருந்த அபிமானத்தாலும், வீட்டிற்கு பக்கத்தில் என்பதாலும் சாருவின் ஜீரோ டிகிரி வாசிப்பு கூட்டத்திற்கு சென்றேன்; நல்ல விஸ்கியும், சில நட்புகளும் கிட்டின ... 12:15 AM Oct 19th, 2008

அச்சு பிச்சு கேள்விகள்(நானும்), எதிர்வினைகள். குறிப்பிடும் நிகழ்வு-Zக்காரியாவுடன் பேசியது உட்பட-எதுவுமில்லை; Subversionஇன் பரிமாணம் இதுதான் என்பதால் 'fuck it' என்பதை தவிர சொல்ல வேறு இல்லை ... 12:59 AM Oct 19th, 2008

(சில தொடர் ட்வீட்கள் ஒன்று சேர்க்கப்பட்டுள்ளன.)

Saturday, April 24, 2010

துளியுரைகள்-8

சன் டீவியில் 'பள்ளிக்கூடம்'. பார்ப்பதை தொடர இயலும் ஒரு 'நல்ல' மலையாளப் படம் போல போய்கொண்டிருக்கிறது. 'ரோஸ்மேரி'பாடலின் கான்செப்ட் மட்டும் புரியவில்லை ... 6:09 PM Sep 27th, 2008

'அழகி' போல இன்னொரு திரைப்படத்தை தங்கர் எப்போது தருவார் என்று ஏங்கிக் கொண்டிருந்தேன். பள்ளிக்கூடம் அப்படி இருக்குமோ வென்று தோன்று வகையில் போய்கொண்டிருக்கிறது ... 6:19 PM Sep 27th, 2008

என்ன எழவுக்கு இளயராஜா இந்த படங்களுக்கு இசையமைப்பதில்லை என்று தெரியவில்லை. 6:57 PM Sep 27th, 2008


கோர்ட் சீனில் ஸ்நேகா சாட்சி சொல்லும்போது பின்னால் பெரியார் படம்! இவங்க அரசியல் விசுவாசத்திற்கு அளவேயில்லையா?! அல்லது இது மீகற்பனையா? ... 8:18 PM Sep 27th, 2008

பார்த்தாகி விட்டது; 'அழகி' போன்ற ஒரு கிளாசிக்குடன் ஒப்பிட முடியாது. ஆனால் யாருடைய கவனத்தையும் இந்த படம் ஏன் ஈர்க்கவேயில்லை? ... 8:28 PM Sep 27th, 2008

String theoryஇல் ஆராய்சி செய்யும் நண்பன் ஒருவன் சொன்ன விஷயம்: TIFR conference ஒன்றில் இழை கோட்பாட்டில் தலையாய பங்களிப்பு செய்த அறிவியலாளரிடம் நிருபர் 'Stephen Hawkingஐ பார்பதற்காக இந்தியா வந்தீர்களா? ' என்று கேட்டாராம். ... 2:02 PM Sep 29th, 2008

ஹாக்கிங்காவது யதார்த்தத்தில் அறிவியலாளர்; அறிவியலில் பங்களிப்புகள் உண்டு. நம்மூரில் அப்துல் கலாமை தலை சிறந்த விஞ்ஞானியாக, விஞ்ஞானியாகும் லட்சியத்திற்கான திருவுருவாக்கியிருக்கிறார்கள் ... 2:50 PM Sep 29th, 2008

Gazaவில் செத்தவர் செய்தியை தினமும் படிப்பது போல், இப்போது தமிழ் மீனவர்களை சிங்களப்படை சுட்டு கொல்வதை சாதாரணமாக படித்துவிட்டு அலுவலை கவனிக்கும் நிலமை ... 4:32 PM Sep 29th, 2008

இலங்கை கடற்படையை கண்டித்து போராட்டம் நடத்துக்கிறார்களாம்! மெண்டலா? போராட வேண்டியது இந்தியாவை எதிர்த்து! ... 4:35 PM Sep 29th, 2008

உலகத்தில் எந்த இனத்திற்கு இது நடந்தாலும் கிளர்ந்து எழவும், உலகின் கவனத்தை கவரும் வகையில் செயல்படவும் கூட்டம் இருக்கும் ... 4:37 PM Sep 29th, 2008

தமிழ்நாட்டில் சுரணையற்று இருப்பது அல்ல விசயம்; திசை திருப்புவதும், கொலைகாரரகளுக்கு வக்காலத்து வாங்குவதும், பேசுபவனை தேசத்துரோகி ஆக்குவதும்! ... 4:41 PM Sep 29th, 2008

புலிகள்தான் மீனவர்களை சுடுவதாக ஒரு நாடகத்தை நிகழ்வேற்றியதையும், அதை துக்ளக் துவங்கி வலைப்பதிவு வரை பிரச்சாரம் செய்ததையும் மறக்க முடியுமா? ... 4:43 PM Sep 29th, 2008

நம் மீனவர்கள் ட்ராலரில் மீன் பிடித்து, அதனால் ஈழத்தமிழ் மீனவர்கள் பாதிப்பதால்தான் இந்த கொலைகள் நடப்பதாக ஒரு மலப்புழு என் பதிவிற்கு பதிலாக தொடர்பதிவுகள் எழுதி, அதற்கு ஜால்ராவாக கூட்டமாக பின்னூட்டம் வந்ததையும் மறக்க முடியுமா? ... 4:47 PM Sep 29th, 2008

@snapjudge என் பார்வையில் 'பொலிடிகலி இன்கரெக்ட்' என்று எதுவும் (not correct உண்டு) இல்லை; அது ரவி ஶ்ரீனிவாசின் அச்சு பிச்சு கான்செப்ட் ... 9:47 PM Sep 29th, 2008 from web in reply to snapjudge

'Political correctness'இன் ஆபாசத்திற்கு அண்மைய உதாரணம் 'கற்றது தமிழ்'. இன்னொரு உதாரணம் வேலு பிரபாகரனின் ' புரட்சிக்காரன்' ... 9:49 PM Sep 29th, 2008

'பொலிடிகலி கரெக்ட்னெஸ் கொண்ட அதே நேரம் கலையாகவும் மாறிய உதாரணம் 'அன்பேசிவம்'; அண்மைய உதாரணம் 'கல்லூரி' ... 9:51 PM Sep 29th, 2008

'தமிழ் பேச்சு, எங்கள் மூச்சு' விஜய் நிகழ்ச்சியை ஐந்து முறை முயற்சித்தும் (வெள்ளாள பரப்புரையால் ஏறும் ரத்த அழுத்தத்தில்) பார்க்க இயலவில்லை. ... 10:08 PM Sep 29th, 2008

விரிவாக அறிவுபூர்வமாக எழுத தேவை உள்ள விஷயங்களை 'விரிவஞ்சி நிறுத்தி'க்கொள்ளும் ரவி ஶ்ரீனிவாஸ், மொக்கைகளை மட்டும் விரிவாக தருவதேனோ! ... 6:49 PM Oct 2nd, 2008

Monday, April 19, 2010

இறுதியாக சில.

நடந்து முடிந்த கருத்து சுதந்திர பிரச்சனை, கண்டனம், கலாட்டா குறித்து எனக்கு மிக சிக்கலான முறையில் பலர் மீதும் பலவகையான விமர்சன கருத்துக்கள் இருந்தாலும், இதையெல்லாம் வேலை மெனக்கிட்டு பதிவு செய்யவேண்டியது முக்கியமாக தோன்றவில்லை. சில முடிச்சுகளை மட்டும் இங்கே பதிகிறேன்.

அதற்கு முன் சம்பிரதாயமாக சில. லீனாவின் கவிதை எந்த வித தகுதியும் இல்லாமல் ஒரு அதிகப்படியான முக்கியத்துவத்தையும் விளம்பரத்தையும் அடைந்துள்ளது. இப்போதாவது நேரடியாக சொல்வதென்றால் கவிதை என்ற அளவில் அதை ஒரு குப்பையாகவே கருதுகிறேன். மீண்டும் சொல்கிறேன், ஆபாசம் என்ற பார்வையில் அல்ல. பா.விஜயின் கவிதையை குப்பை என்று ஏன் சொல்வேனோ அதை ஒத்த காரணங்களால் சொல்கிறேன். அதை உலக கலக ரேஞ்சுக்கு இட்டு சென்றதில் வினவு குழுவினரின் பங்கு மறுக்கவியலாதது. அதே நேரம் வினவில் வெளிபட்ட ஆணாதிக்க எதிர்வினைகள், பெண் என்பதாலேயே அவர்கள் இன்னமும் காட்டும் பிடிவாதம், அடிக்கவும் தயாராக இருந்ததை வெளிப்படையாக ஒப்புக்கொள்வது, சமூக மதிப்பிடுகளை இந்துத்வ இயக்கங்களை போலவே இவர்களும் பயன்படுத்துவது, தர்க்கப்படுத்துவது ... இவை அனைத்தையும் எதிர்க்கிறேன். அவர்களிடம் ஏதோ ஒரு நேர்மை வெளிப்படுவதாக கருதி கூட ஆதரிக்க முடியாது. அந்த நேர்மையை நான் இன்னமும் ஆபத்தானதாக கருதுகிறேன் -போல்பாட்டிடம் வெளிபட்ட நேர்மையை போன்றது. இதைவிட நான் ஹிபாக்கரசியையே மேலானதாக கருதுவேன்.

நாகம்மையை 'தேவிடியா' என்று காங்கிரஸ் தெருவில் எழுதியதை பெரியார் எதிர்கொண்டது போல எதிர்கொள்ள வேண்டும் என்று இவர்கள் பேசுவது இருக்கும் பல அபத்த தர்க்கங்களில் ஒரு உதாரணம். சமூக மதிப்பிடுகளை ஆயுத மாக்குவதுதான் பிரச்சனையே ஒழிய, அதை எதிர்த்தாலோ எதிர்வினை செய்தாலோ, அந்த மதிப்பீடுகள் சார்ந்து செய்வதாக கொள்ள முடியாது. என்ன இருந்தாலும் பெரியாருக்கு ஆண் என்ற வசதியும் சுதந்திரமும் இருந்ததையும், அவ்வளவு எளிதில் அதை புரியாதவர்களுக்கு விளக்க முடியாது. மதிப்பிடுகள் ஆணாதிக்கமாக இருக்கும் யதார்த்தத்தில் அதை பயன்படுத்துவதும், நிராகரிப்பதுவும் இரண்டுமே ஆணுக்குதான் சாதகமானது. இன்னொரு பார்வையில் பெண்ணீயம் பேசுவதும், எதிர்ப்பதும் இரண்டுமே வேறு வேறு தளங்களில் ஆண்களுக்கு சாதகமானதே. இது பெரியாருக்கும் பொருந்தும்; எனக்கும் பொருந்தும். ஆணாதிக்க மதிப்பீடுகளை நிராகரிப்பதாலும், பெண்ணியம் பேசுவதாலும் ஆண் எதிர்கொள்ளும் தாக்குதல்கள் மிஞ்சி போனால் மனைவியை, அம்மாவை உதாரணம் காட்டுவதற்கு மேல் எதுவுமில்லை. அதை எதிர்கொள்ளும் உரம் உள்ளவர்களுக்கு அது பிரச்சனையில்லை. ஆனால் அந்த அம்மாவிற்கும், மனைவிக்கும் அது அத்தனை எளிய பிரச்சனையில்லை. இதையெல்லாம் போல்பாட்டின் பொலிடிகலி கரெக்ட்னெஸ்ஸை சுய பிரஞ்ஞையாக கொண்டவர்களிடம் விளக்க முடியாது.

இவை இப்படியிருக்க NDTV-Hindu செய்த பதிவையும், அதில் லீனாவும், அ,மாவும் அளித்த சிறு பேட்டியை மோசமான ஒன்றாக கருதுகிறேன். ஒரு ஜனநாயக அடிப்படையில் எதிர்கருத்தாக எதையும் சின்னதாக அவர்கள் பதிவு செய்யவில்லை. குறைந்த படசம் (ஹுசேன் சரஸ்வதியை நங்காவாக வரைந்தார் என்பது போல கூட அல்லாமல்) எதிர்ப்பு வந்த லீனாவின் கவிதையை பற்றி எந்த தகவலையும் தராமல் ஒருதலை பட்சமான செய்தி அது. லீனா (காரல்)மார்க்சையும், லெனினையும் metaphoricalஆக பயன்படுத்தியதாக மட்டும் விடுகிறார். மெடாஃபாரிக்கலாக பயன்படுத்தியது மார்க்ஸ் லெனினையா, யோனி, விந்து, புணர்தல் போன்றவற்றையா? தமிழ்நாட்டில் ஏதோ கலாச்சார பாசிசம் தலை விரித்தாடுவதாக சொல்வதெல்லாம் தன் கோபத்தை ஒட்டுமொத்த சமூகத்தின் மீது கொட்டும் விஷம் மட்டுமே. மற்ற இந்திய மாநிலங்களைவிட தமிழகம் இன்னமும் ஆரோக்கியமாக இருப்பதாகவே நான் கருதுகிறேன். NDTV தமிழ்நாட்டை ஒரு பாசிச பூமியாக காட்டும் நோக்கத்துடன் இந்த செய்திக்கு முக்கியத்துவம் தருவது லீனாவிற்கு பிரச்சனையாக இல்லாதது குறித்து நான் கவலைப்படவில்லை, அ.மார்க்ஸும் துணை போவதுதான் எனக்கு பிரச்சனை. இறுதிவரை ஈழப்போரில் zero civilian casualties நிகழ்ந்ததாக இந்து ஊடக கும்பல் சொல்லி வந்ததை விட அயோக்கியத்தனமும், பாசிசமும் வேறு கிடையாது. அ.மார்க்ஸ் கூட்டத்தில் செய்த பிரச்சனையை, ஈழப்பிரச்சனையில் தங்கள் கையாலாகாத்தனத்திற்கு அவர்கள் தேடிக்கொள்ளும் வடிகாலாக கூட கருதலாம். இப்படி சொல்லி அதை நியாயப்படுதவில்லை. ஆனால் அது பாசிசம் அல்ல. ஒரு பெரும் இனப்படுகொலையை நியாயப்படுத்துவதும், அதை மறுப்பதும்தான் பாசிசம். அதை விட மனிதநேயத்தில் அக்கறையுள்ளவர்கள் முக்கியமாக கொள்ளவேண்டிய விஷயம் வேறு கிடையாது.

அ.மார்க்ஸ் லயோலாவில் நடந்ததையும், கண்டன ஒன்று கூடலில் நடந்ததையும் தமிழ் சேனல் ஒன்றிலோ, அல்லது தமிழ் சூழலில் வேறு எங்கிலோ பகிர்ந்தால் நான் பிரச்சனையாக பார்க்க மாட்டேன். தமிழ்நாட்டில் யாரோ ஒரு புருசன் பொண்டாட்டியை அடிப்பதை கூட தமிழ்பாசிசமாக மாற்றும் கூட்டத்தின் பிரச்சரத்திற்கு ஒத்து ஊதியிருக்க வேண்டாம். ஒருவேளை அதுதான் அ.மார்க்சின் நோக்கம் என்றால் வேறு எதுவும் சொல்வதற்கு இல்லை.

Sunday, April 18, 2010

கடித்து எலி சாதல்.

சிறுவயதின் ஒரு மழைக்கால ஈரத்தில் மிதித்ததில், தேள் ஒன்று மிகையழுத்தம் கொண்ட மின்னதிர்ச்சி தாக்குதலாக கொட்டி, நடக்க இயலாமல், அழுகையும் வலியுமாக, மருத்துவ சிகிச்சையுடன் இரண்டு நாட்கள் தொடர்ந்தது. பாம்பு கடித்தால் சாகக்கூடிய வாய்ப்பு உண்டு என்றாலும், வலியனுபவத்தில் பாம்புக்கடி தேள்கடி போல கொடூரமாக இருக்காதாம். அவ்வளவு தீவிரமான தேள்கடி அனுபவத்தை சிறுவயதில் பெற்றும், அதில் சுவாரசியமாக சொல்ல எதுவும் இல்லை என்பது கொஞ்சம் வருத்தமானதுதான். பின், துவக்க தொண்ணூறுகளில், பெங்களூரில் நான் இருந்த கல்வி நிலையம் ஒன்றில் நட்டுவாக்களி என்ற பெரிய சைஸ் தேள்கள் மானாங்கன்னியாய் அலைந்தும் ஒரு முறை கூட கடி வாங்க நேர்ந்ததில்லை. (கடி வாங்கியிருந்தால் அந்த தீவிர அனுபவத்தையும் இங்கே பகிர்ந்து கொண்டிருக்க கூடிய சாத்தியம் மிக குறைவு. ஏனெனில் நான் அறிந்தவரை நட்டுவாக்களி கடித்தால், அந்த வனாந்திரத்தில் போய் சேருவதற்குதான் வாய்ப்பு அதிகம். ஆனால் நட்டுவாக்களி தேள்களை போல் பொதுவாக போட்டுதள்ளுவதில்லை. அதன் பிடிமானம் சரியாக இருக்காத காரணத்தால், பிடித்து வாலால் அடித்து கொட்டுவதில் அதற்கு சிக்கல்கள் உண்டு.)

தூத்துக்குடியில் வாழ்ந்த இறுதி எண்பதுகளில் கஞ்சா பழக்கம் எனக்கு அறிமுகமாகி, பின் 13 வருடங்களுக்கு தொற்றிக் கொண்டிருந்தது. கடவுள் நம்பிக்கையிலிருந்து வெளிவந்திருந்த அந்த கட்டத்தில், சிவமூலிகை என்றழைக்கப்படும் கஞ்சாவை புகைப்பதற்காகவே சிவன் கோவிலுக்கு செல்வதுண்டு. பிரதட்சணமாக வந்து கொண்டிருக்கும் ஆண்களுக்கும் பெண்களுக்கும், குறிப்பிட்ட இடத்தை ஆக்கிரமித்திருக்கும் பலமான கஞ்சா மணம் தினப்படி சுவாசத்தில் கலந்து பழக்கமாகியிருக்க வேண்டும். குறைந்த பட்சம் பீடி புகைப்பதாகவாவது தோற்றமளிக்கும் அந்த கஞ்சா புகைக்கும் காட்சியை கண்டு கொள்ளமாட்டார்கள். நாங்களும் யாராவது கடக்கும்போது கைகளுக்கிடையில் மறைக்கும் மரியாதையை செய்வதுண்டு. பிரச்சனை யாரும் செய்ததில்லை. கோவில் பணியாளர்கள், கோவில் வாசலை வசிப்பிடமாக கொண்டவர்கள் என்று பலரும் புகைக்கும் குழுவில் அடக்கம். ஒரு இளைய பட்டரும் சில சந்தர்ப்பங்களில் ஓரிரு இழுப்பு இழுத்துவிட்டு செல்வதுண்டு. சிவன் கோவில் பிரகாரம் கஞ்சா புகைப்பதனால் மட்டும் வித்தியாசப்படவில்லை. இன்னமும் சமூக வெளியில் அங்கீகாரம் பெற்றிராததனால், காதலை கள்ளத்தனமாக வைத்திருக்க வேண்டிய கட்டாயம் இருந்ததால், காதலர்கள் கூடுவதற்கு தேவையான மாலை இருட்டையும் அது அளித்தது. நகரில் பல இடங்களில் நெருக்கடி ஏற்படும் சில சீசன்களில் கள்ளசாராயமும் கிடைக்கும்; வாங்கி சிவன் கோவில் மூலை சுவரில் ஒண்ணுக்கு அடிப்பது போன்று நடித்தபடி, அந்த சில நிமிடங்களில் குடித்துவிட்டு சுவருக்கு பின்னால் எரிந்துவிட வேண்டும்.

ஒரு முன்பகல் வேளையில், கிடைத்த ஒரு நயம் சரக்கின் போதையுடன், மூடியிருந்த சன்னதிகளின் படிகளில் சாய்ந்து பேசிக்கொண்டிருந்தோம். சின்னதாக இடுப்பில் அரிப்பு, சிறிது நேரத்தில் மெல்லிய கடுப்பாக மாறியது. எறும்பு என்று நினைத்து பார்காமலேயே தட்டிவிட்டு பேச்சை தொடர்ந்தேன். ஒரு கால இடைவெளியில் கடுப்பு கவனத்தை கட்டாயமாக ஈர்க்கும் வலுவை அடைந்ததால் எழுந்துவிட்டு பார்த்தேன். ஒரு குட்டி தேள். ஒருமுறைக்கு மேல் கடித்திருக்க கூடும். தேள் என்று அறிந்தவுடன் கடுப்பின் காட்டம் உணரத் தொடங்கியது; ஆனாலும் வலி பெருசாக இல்லை. என்ன செய்வது என்று ஐடியா இல்லை. தேள் குட்டிக்கு என்னை கடித்ததில் போதையேறிவிட்டது போலும், அசையாமல் கிட்டதட்ட மயங்கிய நிலையிலிருந்தது. "அது செத்துரும்" என்றான் கஞ்சா தோழன் உறுதியாக. செத்ததா என்று பொறுத்திருந்து ஆராயாமல், தேளை வேறு எதுவும் செய்யாமல் நகர்ந்தோம். கடித்த இடத்தில் சுண்ணாம்பு வாங்கி தடவலாமா என்ற யோசனையையும் செயல்படுத்தாமல், வேறு இடத்தில் உட்கார்ந்து இன்னொரு பீடி போட தொடங்கினோம். கடுப்பு சற்று தொடர்ந்தாலும், அரைமணி நேரம் சற்று வியர்த்து விஷம் உடலோடு செமித்துவிட்டது. கஞ்சா சித்தனாக இருந்தபோது இப்படி தேள்களிடம் கூட கலங்கியிராதவனை, நடுத்தர குடும்ப வாழ்க்கையில் செட்டிலான பின் அல்ப எலிக்கடி அலைக்கழித்தது.

ஒன்றரை வருடம் முன்பு சாந்தோமில் வாழ்ந்த வீட்டின் தரையில் தூங்கி கொண்டிருந்த ஒரு இரவில், இடது கை நடுவிரலை தேர்ந்தெடுத்து எலி ஒன்று கடித்தது. முந்தய நாள் இரவிலேயே அது காது பக்கம் கத்திரி போட முயன்றதை பிறகே ஊகித்து அறிந்துணர்ந்தேன். விழித்து பார்த்ததில் கடித்த இடத்தில் துளி ரத்தம். எழுந்து சோப் போட்டு கழுவி விட்டு தூங்கிவிட்டேன். மறுநாள் டாக்டரிடம் போயே ஆகவேண்டும் என்று துணைவி வற்புறுத்தியதில், அருகில் இருந்த குழந்தைகளுக்கான டாக்டரிடம் சென்று, டெடனஸ் ஊசி, கையில் கட்டு, ஆண்டிபயாடிக் மாத்திரைகளும் எடுத்துக் கொண்டேன். ஒரு எலிக்கடிக்கு தேவைக்கு அதிகமாக பாதுகாப்பு சிகிச்சை செய்துகொண்டுவிட்டதாக எனக்கு தோன்றியது. ஆனால் மறுநாள் வேலையிடத்தில் பெங்காலி நண்பன் தீர்த்தோ 'இது இப்படி எளிதாக எடுத்துக் கொள்ள கூடிய சாதாரணம் விஷயம் அல்ல' என்றான். 'ஆண்டிபயாடிக் போதாது, எலியிடம் ராபீஸ் இருக்கலாம்' என்றான். இதை சொல்லிவிட்டு கல்கத்தாவில் தான் சந்தித்த, முதலிலேயே கவனிக்கப்படாமல் பிரச்சனை முற்றிய ராபீஸ் நோயாளிகளை பற்றி சொல்லத்தொடங்கினான். அவை எல்லாம் நாய்கடி உதாரணங்கள் என்றாலும், வாய் உள்ள எல்லா மிருகத்திற்கும் பொருந்தும் என்றான். எனக்கு நான் எலி போல ஒடி, கத்தி சாக நேரிடுமே என்று பயம் வரும் அளவில் விரிவாக பல கேஸ்களை பேசினான். ஜெமினி படத்தில் கலாபவன் மணி ஜெயிலில் விக்ரமுடன் சண்டையிடும் கட்டத்தில் எலியாக மிமிக்ரி உருவெடுத்து நடித்த காட்சிகள் மனதில் வந்து போனது.

அவனே சென்னையில் ரேபீஸ்க்கு சிகிச்சையளிக்கும் மருத்துவமனைகளை இணையத்தில் தேடி, தொலைபேசி விசாரித்தான். வாக்சின் பெயர்களை அவனே சொல்லி விசாரித்தது மருத்துவமனை பணியாளர்களுக்கு விளங்கவில்லை. நாய் கடிக்கு உள்ள அதே வாக்சின்தான் எலிக்கடிக்குமா என்ற என் சந்தேகத்தை அவன் பொருட்படுத்தவில்லை. இப்போழுதெல்லாம் மருத்துவம் முன்னேறிவிட்டது, ஒரே ஒரு ஷாட் போதும் என்றான். எலிக்கடி, அதற்கான ரேபிஸ் வாக்சின் தங்களிடம் இருக்கிறதா என்று தொலைபேசி எதிர்முனையில் தெளிவான பதில் இல்லை.

தொடர்ந்த செமினாரில் மற்ற கலிக்களிடம் விஷயம் சென்றது. செமினாரில் பேசவேண்டிய விஷயத்தை தொடங்காமல் எல்லோரும் என் எலிக்கடி குறித்து தெளிவில்லாமல் கொஞ்ச நேரம் பேசினார்கள். ஒரு விஞ்ஞானி நண்பர் சுண்டெலி என்கிற வகையாக இருந்தால் ஆபத்து எதுவும் இருக்க வாய்பில்லை, மற்ற எலிகள் மட்டுமே ரேபிஸ் இருக்க வாய்புள்ளது என்றார். அவர் அந்த தகவலை எங்கிருந்து பெற்றர் என்பதை குறிப்பிடவில்லை. ரேபிஸ் கிருமி கலந்த ரத்தமே என் உடலில் ஒடுவதான உணர்வு என்னையறியாமல் தொற்றியிருந்தது. என் எச்சிலை முழுங்கவே தயக்கமாக இருந்தது. அந்த எலி எங்காவது இறந்து கிடக்கிறதா என்று கவனிக்க வேண்டும் என்றான் தீர்த்தோ. எனக்கு சுஜாதா எழுதிய 'குதிரை கிச்சாமி' என்ற கதை நினைவுக்கு வந்தது. ஒருவழியாக செமினார் தொடங்கி முடிந்தபின் மீண்டும் இதை பற்றி அவர்களே பேசினார்கள். நான் உடனே கடிபட்ட இடத்தை கழுவிவிட்டதை சொன்னேன்; அது போதாது என்றார்கள். ஏற்கனவே டாக்டரிடம் போய் வந்ததை சொன்னேன்; ஒரு பீடியாட்ரிக்ஸ் டாக்டருக்கு எலிக்கடி குறித்து தெரிய வேண்டிய அவசியம் இல்லை என்றார் நண்பர். டாக்டர் என்பவர் ஏற்கனவே தன் அனுபவத்தில் இருக்கும் உதாரணங்களை கொண்டு இயங்குபவர், ஏற்கனவே ஒரு எலிக்கடி கேஸை அவர் எதிர்கொண்டிருந்தால் ஒழிய அவரை நம்ப தகுந்த காரணம் இல்லை என்றார். நான் இன்னொரு டாக்டரை பார்க்க வேண்டிய அவசியத்தை சொன்னார்கள். அந்த இன்னொரு டாக்டருக்கு எலிக்கடி சிகிச்சை செய்த அனுபவம் இருக்கிறதா என்று எப்படி அறிவது என்ற கேள்வியை நான் கேட்கவில்லை.

என்னுடன் மருத்துவமனைக்கு வந்தே தீருவதாக இருந்த தீர்த்தோவை ஒருவழியாக தவிர்த்து, வீட்டிற்கு வந்து துணைவியிடம் எல்லாவற்றையும் சொன்னவுடன் கலவரம் வீட்டிலும் பற்றிகொண்டுவிட்டது. இஸபெல் மருத்துமனையில் மீண்டும் எலிக்கடி குறித்து (எந்த வார்ட் என்று) ஏற்படகூடிய எல்லா குழப்பங்களையும் குழம்பி, ஒருவழியாக அங்கிருந்த ட்யூட்டி டாக்டரிடமே அனுப்பினார்கள். அவர் ரேபிஸ் நாய்மூலம் மட்டுமே பரவும், எலி பூனை போன்ற விலங்குகளால் ஆபத்து எதுவும் இல்லை. நான் அடுத்த நாளே எடுத்து கொண்ட சிகிச்சை போதுமானது என்றார். ஆனால் எலி வீட்டில் எங்காவது சிறுநீர் கழித்திருந்தால் அதன் மூலம் லெப்டோஸ்பைரசிஸ் வர வாய்புள்ளது, அதுவும் எலி கடிப்பதன் மூலம் வராது என்று சொன்னார். மழைக்காலத்தில், பழமையான அந்த வீடு பல இடங்களில் ஈரமாகியிருந்த அந்த பருவத்தில், எலி மூத்திரத்தை நான் எப்படி அடையாளம் காண்பது?

ஆனால் மறூநாள் மீண்டும் தீர்த்தோ புதிய சந்தேகங்களையும் கிலிகளையும் கிளப்பினான். எனக்கு வேறு ஒரு நண்பனின் நினைவு வந்தது. (எல்லாவற்றையும் எதிர்மறையாகவே பேசும் மிகுந்த அவநம்பிக்கையாளன் அவன்; அவனிடம், அனில் கும்ளே 10 விக்கட்டையும் எடுத்த வரலாற்று நிகழ்வை சொன்னபோது , உடனடியாக 'He can't do it again' என்றான்.) ஒருவழியாக ஒரு மூத்த பேராசிரியர் கிண்டியிலிருக்கும் கிங்க்ஸ் இன்ஸ்டிடியூட்டிற்கு போன் செய்து அதன் தலைமை பொறுப்பாளரிடம் பேசி, ஏற்கனவே இஸபெல் மருத்துவமனை டாக்டர் சொன்னதையே அவரும் சொல்வதை உறுதி செய்து சொன்னார். ஆனால் மனமூலையில் சந்தேகம் மிதமிருக்கும் வகையில் தீர்த்தோ கிலியாக்கியிருந்தான். அதற்கு பிறகு நான்கு மாதங்கள் கழித்தும் எனக்கு ஒன்றுமே நிகழாததால் அந்த எலியிடம் ரேபிஸ் கிருமி இருந்திருக்க வாய்ப்பு இல்லை என்று அதிநிச்சயமாக முடிவு செய்துகொண்டேன்.

கஞ்சா பழக்கம் எனக்கு தொடர்ந்திருந்து, தேளும் பாம்பும் கஞ்சா கிராக்கியை கடித்தால் செத்து போகும் என்கிற மரபான நம்பிக்கையின் படி எலி செத்துபோவதாக புனைந்தால், இந்த பதிவு எப்படி உருமாறியிருக்கும் என்று என் யோசனைக்கும் உங்கள் வாசிப்புக்கும் விடுகிறேன்.

Friday, April 16, 2010

துளியுரைகள்-7

Congrats Mamta-இப்போதைக்கு! CPI(M)ஐ கவிழ்த்து ஆட்சியை பிடிக்கும் லட்சியத்தை அடையாவிட்டாலும், மார்சிஸ்டுகள் சாதிக்கவெ இயலாததை சாதித்ததற்காக! 1:41 AM Sep 25th, 2008

டாடாவின் வெளியேற்றம், எந்த வித வெற்றியுமாக கருத இயலாவிட்டாலும், நிச்சயமாக தோற்கப்போகும் போராட்டத்தில் ஒரு வறலாற்று நிகழ்வு ... 1:48 AM Sep 25th, 2008

தமிழ்நாட்டு கோர்ட்டுகள் தமிழிலும் புழங்கவேண்டுமென்றதை தமிழ்வெறியாக ஆங்கில ஊடகங்களில் சித்தரித்தார்கள். இனி உச்ச நீதி மன்றத்தில் ஹிந்தியில்தான் தீர்பளிக்கவே விருக்கிறார்களாம் ... 10:14 AM Sep 25th, 2008

பிகாரில் வெள்ள நிவாரண முகாம்களில் அம்மாக்கள் தங்கள் குழந்தைகளை 200ரூபாய்க்கு விற்கிறார்களாம்-இன்றய DC
முதல் பக்க செய்தி. 10:17 AM Sep 25th, 2008

மீண்டும் கவனிக்கணும், ராஜ்தாக்கரேக்கு தொடரும் கண்டனங்களில் 1 விழுக்காடாவது கன்னட வெறி அரசியலின் அத்துமீறல்களுக்கு எப்போதாவது வந்திருக்கிறதா? ... 10:31 AM Sep 25th, 2008

புகைப்பழக்கம்முள்ளவனுக்கு புகைப்பதென்பது பல நேரங்களில் உந்துதலும், தேவையும், தாகமும் இல்லாத போதும், இயல்புக்கு எதிராகவும் நிகழ்கிறது; ... 2:27 AM Sep 27th, 2008

புகை பழக்கத்திலிருந்து விடுதலையடைய அன்றய எல்லா சிகெரெட்டையும் தொலைக்க வேண்டும்; மிக கடினமான அந்த சாகசத்திற்கு பின் 0க்கு திரும்ப ஒரு இழுப்பு போதும் ... 2:32 AM Sep 27th, 2008

பல வருடங்கள் புகை பழக்கத்தில் கழித்து, விட்டு விடுதலயாகி, பின் புகைக்காதன் உண்மை சுகத்தை உணர ஆண்டுகள் ஆகும்; பின் திரும்ப பழைய நிலைக்கு வர வாழ்வில் எல்லாம் தோற்றவனுக்கு கூட மனசு வராதென நினைக்கிறேன் ... 2:36 AM Sep 27th, 2008

நான் புகைப்பதை தொலைத்து 5வருடங்களாகிறது; இப்போதும் சிகெரட் மணம் கவர்ந்திழுக்கிறது; passive smoking மிகவும் பிடிக்கிறது ... 2:56 AM Sep 27th, 2008

மாதங்களுக்கு இடையில் ஒரு தம் யாரிடமாவது வாங்கி இழுப்பதுமுண்டு. ஆனால் புகைக்காததன் அமைதியை இழக்காமலிருப்பதில் மிகவும் கவனமாக இருக்கிறேன் ... 2:57 AM Sep 27th, 2008

@anathai புகைப்பதை முன்வைத்து எழுதிய குறிப்புகள் புகைத்தலை மட்டும் குறிப்பவை அல்ல! ... 8:45 AM Sep 28th, 2008 from web in reply to anathai

Wednesday, April 14, 2010

இடியட்டும் கோபி கிருஷ்ணனும்.

பைத்தியக்காரனின் பதிவில், சென்றதற்கு முந்தய ஞாயிறு திரையிடப்பட்ட 'இடியட்' திரைப்படம் குறித்த ராஜசுந்தரராஜனின் பார்வையாக பதிவு ஒன்று வெளியாகியுள்ளது. பதிவில் நான் சற்றும் எதிர்பாராமல், (ஒருவேளை ஆழ்மனதில் மிகவும் எதிர்நோக்கியிருந்த), கோபி கிருஷ்ணனின் பெயரை அவர் குறிப்பிட்டிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தாஸ்தேயெவ்ஸ்கியின் நாவலை நான் படித்ததில்லை (18 வருடங்களாக கைவசம் இருந்தும்). குரோசவாவின் படத்தில் இடியட்டான கமெதா, தாயெகோ நசுவின் கண்களை தான் ஏற்கனவே எங்கோ சந்தித்தித்திருப்பதாக சொல்லி வருவான். பின் ஒரு கட்டத்தில் அதை நினைவுபடுத்துவான். எனக்கு படம் முழுவதும் அதற்கிணையான உணர்வுடன், கமெதா கதாபாத்திரத்தை எங்கோ ஏற்கனவே சந்தித்து உரையாடியிருப்பதான உள்ளுணர்வு. படம் முடிந்து அன்றிரவு தூங்கும் வரை அந்த உணர்வு தொடர்ந்தது. யாரை அந்த கதாபாத்திரம் நினைவு படுத்தியது என்று நினைவை துருவி விடை காண முடியவில்லை. சற்று முன்னர் ராஜசுந்தர்ராஜனின் பதிவில் கோபி கிருஷ்ணன் பெயரை வாசித்ததும் மின்னதிர்வு தாக்கிய உணர்வு. ஆழ்மனதில் இடியட் கதாபாத்திரம் கோபி கிருஷ்ணனை பல வருடங்கள் முன்பு சந்தித்த நினைவை தூண்டி, பழக்கமான ஒரு உணர்வால் அன்று அலைபாய வைத்ததா என்று இப்போதும் உறுதியாக சொல்ல முடியவில்லை. ஆனால் இந்த பதிவை சற்று முன்னர் படித்த பின்பு அதை உறுதியாக நம்ப தொடங்கியிருக்கிறேன்.

10 ஆண்டுகளுக்கு முன்பு திருநெல்வேலியில் நடந்த ஒரு இலக்கிய கூட்டத்தில் கோபி கிருஷ்ணனை சந்தித்தேன். சாரு தனது வழக்கமான கலக நாடகங்களில் ஒன்றை நடத்தி முடிவுக்கு வந்த கூட்டம். சாருவிற்கு (எதிர்)தூண்டுதலாக துவக்கத்திலிருந்து லஷ்மி மணிவண்ணன் கலகி கொண்டிருந்தார். மதிய இடைவேளையில் கொஞ்ச நேரத்திற்கு கோபி கிருஷ்ணனை எதிரில் வைத்து தாறுமாறான கேள்விகளை லஷ்மி கேட்டுக்கொண்டிருந்தார். தர்க்கபூர்வமாகவோ, விமர்சன பூர்வமாகவோ அல்லாமல், 'தெருவில் இப்படி ஒவ்வொரு பேப்பரா பொறுக்கி வாழ்க்கையின் பொருளை கண்டடைய முடியுமா? .. டேபிள் டென்னிஸ் எல்லாம் ஒரு புனைவா?' என்று சலம்பல் பூர்வமாக கேட்டுக்கொண்டிருந்தார். அவற்றை இடியட் பட நாயகனின் சாந்தம் கொண்ட முகத்துடன் எடுத்து பதில்களை 'அப்படி எல்லாம் இல்லை' என்பது போல் ஓரிரு வார்த்தைகளில் கோபி சொல்லிகொண்டிருந்தார். கோபப்படுத்தவே சாத்தியமில்லாத மனிதராக அவர் தெரிந்தார். மறுநாள் முகமது சஃபி சேவியர்ஸ் காலேஜ் விடுதியில் தங்கியிருந்த கோபியை பார்க்க என்னையும் அழைத்து சென்றார். விரிவாக பேசினோம் என்று சொல்லமுடியாது. லஷ்மி மணிவண்ணன் நக்கல் செய்ததில் அவர் புண்பட்டாரா, தப்பா ஒண்ணும் எடுக்கலையே என்று சஃபி கேட்டார். முகம் முழுவதும் தெளிவான அடையாளமாக பரவிய மெல்லிய சஞ்சீவ புன்னகையுடன் "நான் எதையும் தப்பா எடுக்கலை.. தப்பா எடுக்கற மாதிரி அவர் எதுவும் பேசலை.." என்று மட்டும் சொன்னார். என் போதை பழக்கத்லிருந்து வெளி வந்து, இயல்பான வாழ்கைக்கு உதவ அப்போது ஆண்டி டிப்ரசண்ட் மாத்திரைகள் சாப்பிட்டு கொண்டிருந்தேன். ஆண்டி டிப்ரசன் மாத்திரைகள் இன்றி வாழமுடியாத நிலையில் அவர் இருந்ததாக சொன்னார். அது குறித்து பேசிக்கொண்டிருந்தோம். பேசிய விஷயங்கள் எதுவும் முக்கியமானது இல்லையெனினும், தீவிர பிரச்சனைகளால் பரிசுத்தமான ஒரு மனதுடன் பேசும் உணர்வு ஏற்பட்டது. அப்போது பதிந்து விட்ட அவரின் பாவங்களையே இடியட் படத்தில் என் உள்ளுணர்வு உறுத்தி நினைவு படுத்தியதாக ராஜ சுந்தரராஜனின் பதிவை படித்த பின் கற்பித்து நம்ப விரும்புகிறேன்.

Monday, April 5, 2010

தெளிவு.

அ. தேவதாசனின் பேட்டியை ஷோபாசக்தியின் வலைப்பதிவில் வாசித்தேன். சாதியொழிப்பை முன்வைத்து பேசும் விஷயங்களில் பிரச்சனைகொள்ள எனக்கு எதுவும் இல்லை. கீழே உள்ள மேற்கோள்கள் - இவை வெளிப்படுவதன் சூழல், அதற்கான நியாயங்கள், பின்னணியிலுள்ள சிந்தனை குழப்பங்கள், அரசியல் பழக்க வழக்கங்கள் - இவற்றை புரிந்து கொள்ளும் சவாலில் என் சிந்தனையை தூண்டி விட்டுள்ளது என்பதை பதிவு செய்வதற்காக இந்த பதிவு. என் வாசிப்பை சவாலாக்கும் மேற்கோள்களை கீழே 1,2 .. என்று வரிசை படுத்தியுள்ளேன். வரிசையினுள் மேற்கோள்கள் ஒன்றை ஒன்றை ஒப்பிட்டு கொள்ள அதற்குள் (i), (ii) .. என்று உள்வரிசை படுத்தியுள்ளேன்.


1. அய்க்கிய தேசியக் கட்சி பச்சையான முதலாளியக் கட்சி என்பது நீங்கள் அறிந்ததே. அய்க்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் இடதுசாரியம் பேசும் முதலாளியக் கட்சிகளின் கூட்டுத்தான். எனினும் அய்க்கிய தேசியக்கட்சியின் வேட்பாளர் வெற்றி பெறுவது நாட்டுக்கு மிகப்பெரும் தீமையையும் ராஜபக்சவின் வெற்றி மிதமான தீமையையும் கொண்டுவரும் என்ற நிலைப்பாட்டிலிருந்தே நாங்கள் ராஜபக்சவிற்கு வாக்களிக்கச் சொன்னோம்.


2.(i) நாங்கள் ஒருபோதும் யுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்ததில்லை. நாங்கள் யுத்த நிறுத்தத்தையும் போரைப் பேச்சுவார்த்தைகளின் முலம் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்பதையுமே வலியுறுத்தினோம். மகிந்த அரசின் படுகொலைகளையும் மனிதவுரிமை மீறல்களையும் நாங்கள் நியாயப்படுத்தவுமில்லை.

(ii) ஒரு இலங்கைக் குடிமகனாக இலங்கையின் இறையாண்மையில் அக்கறையுள்ளவனாக மகிந்தவின் அரசை விமர்சிப்பது என்பது வேறு. ஆனால் மனிதவுரிமை என்ற பெயரிலும் அரசு சாரா நிறுவனங்கள் என்ற பெயரிலும் மேற்கு ஏகா திபத்தியங்களின் விருப்புகளிற்காகச் செயற்படுவது வேறு என்பதையும் நீங்கள் கவனிக்க வேண்டும்.

(iii) மேற்கு நாடுகளின் எதிர்ப்பாளனாக இருக்கும் மகிந்த ராஜபக்ச மீது மனிதவுரிமை மீறல் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி அவரை மேற்கு நாடுகளிற்குப் பணிய வைக்கும் முயற்சியையே இந்த அமைப்புகள் செய்து வருகின்றன.3. (i) நீங்கள் எதை எதிர்பார்க்கிறீர்கள்? இந்த உலகமயமாக்கல் சூழலில் ஒரு சே குவேராவிற்காக நீங்கள் வேண்டுமானால் காத்திருக்கலாம், ஆனால் நான் நடப்பு நிலவரங்களிலிருந்துதான் பேசுவேன்.

(ii) இப்போது இலங்கை மேற்கு ஏகாதிபத்திய நாடுகளை எதிர்க்கும் மூன்றாமுலக நாடுகளின் அணியிலிருக்கிறது. சீனா, இந்தியா, வியட்நாம், லிபியா, ரஷ்யா, கியூபா, வெனிசுலா, பாலஸ்தீனம் இருக்கும் அணியில் இலங்கை இருக்கிறது.

(iii) ஆனால் இந்த அதிகாரப் பகிர்வு என்பது சிங்கள முதலாளிகளிடமிருந்து தமிழ் முதலாளிகளுக்கு மாற்றிக்கொடுக்கப்படும் அதிகாரக் கையளிப்பாக இருக்கக் கூடாது. ....... தீவின் ஒடுக்கப்படும் மக்கள் அனைவருக்கும் அதிகாரம் பரவலாக்கம் செய்யப்படும் வகையில் ஒரு அரசியல் சாசனம் உருவாக்கப்பட வேண்டும்.

(iv) ஆனால் நான் நடப்பு நிலவரங்களிலிருந்துதான் பேசுவேன்.


(4) கிழக்கு வெறுமனே தமிழ் மக்களின் பூமி மட்டுமல்ல. மூவின மக்களும் வாழ்ந்துவரும் பூமி. அவர்கள் தனித்திருப்பதா அல்லது வடக்கோடு சேர்வதா மேற்கோடு சேர்வதா என்பதெல்லாம் அந்த மக்கள் தீர்மானிக்க வேண்டியது.

Saturday, March 20, 2010

துளியுரைகள்-6 (டாடாவின் ஈடு இணையற்ற கொள்ளை).

(இந்திய முதாலாளித்துவ வரலாற்றில் டாடாவின் கொள்ள பற்றிய குறிப்புகளாக நான் இட்ட ட்விட்கள் கீழே.)

4:51 PM Sep 20th, 2008
சென்ற நூற்றண்டின் ஈடு இணையற்ற மிக பெரிய கொள்ளையாக இஸ்ரேலின் நிலத்திருட்டை தகவல்களுடன் படம் காட்டி இணையத்தில் யாரோ விளக்கியிருந்தார்கள்.


4:54 PM Sep 20th, 2008
இந்தியாவில் சென்ற நூற்றாண்டின் ஈடு இணையற்ற மிக பெரிய கொள்ளையாக டாடா கும்பல் இது வரை நடத்தி வருவது எனக்கு தெரிகிறது - ஆனால் இது வெளிப்படையானது அல்ல
.
6:36 PM Sep 20th, 2008
டாடா தொடர்ந்த அரசுகள் மூலம் அடித்ததையும், அதற்கு கையாண்ட முறைகள், பெற்ற சலுகைகளை கேபிடலிஸ பொருளாதார நிபுணர் கூட நியாயப்படுத்த மாட்டார்

6:40 PM Sep 20th, 2008
விவசாயிகளிடம் நேரடியாக பேரம் பேசி, சந்தை விலைக்கு அதிகம், உரியவர்க்கு லஞ்சம் கொடுத்து, தொழில் மூலம் கொள்ளை லாபம் ஈட்டுவது கேபிடலிஸம்

6:44 PM Sep 20th, 2008
அரசாங்கமே அடிமாட்டு விலைக்கு பிடுங்கி தருவதில், தொழில் செய்து கொழித்து, அதே நேரம் நேர்மையாக தொழில் செய்வதாய் பேரும் புகழும் பெறுவது டாடாயிஸம்

9:19 PM Sep 20th, 2008
இந்திய முதலாளித்துவத்தில் அதிகமாய் கலச்சாரங்களை அழித்தவர்கள், அயோக்கியத்தனங்கள் செய்தவர்கள், அரசு வன்முறையை பயன்படுத்தியவர்கள் டாடாதான் என்று தோன்றியது

9:21 PM Sep 20th, 2008
கேபிடலிசத்தை மனித இனம் வந்தடைந்த சமூக வடிவங்களிலேயே மீக்கொடுரமானது (extremely ruthless) என்று நினைக்கிறேன். டாடா முதலாளித்துவ இயல்புகளையும் மிஞ்சி, மீதமிருக்கும் நியாயங்களையும் விழுங்கி விட்டதாக தோன்றுகிறது.

11:39 PM Sep 20th, 2008
விளக்கம்: கலாச்சாரத்தை அழிப்பது என்று நான் சொன்னது டீ எஸ்டேட்டை வைத்து அல்ல; ஒரிசாவிலும், ஜார்கண்டிலும் நடப்பதை.

11:41 PM Sep 20th, 2008
ஒரு உதாரணமாய் migrating labourஆக அங்கிருந்த பெரும் மக்கள் கூட்டம் மாற்றப்பட்டிருப்பதை; அதற்கு பின் டாடாவும், டாடாவின் கையாளாக செயல்படும் அரசாங்கமும் இருப்பதை அறியலாம்.

11:47 PM Sep 20th, 2008
Nottingham என்ற இங்கிலாந்து நகரத்தின் கீழே இருந்த நிலக்கறி , அந்த நகரவாழ்க்கையழகுக்கு எந்த பங்கமும் இல்லாமல் தோண்டி எடுக்கப்பட்டிருக்கிறது

11:48 PM Sep 20th, 2008
இந்தியாவிலும் பிரிடீஷ் இந்தகைய miningஇல் (உண்மையான பொருளில்) ஈடுபட்டிருக்கிறார்கள். கீழே தோண்டிஎடுத்து அதை மணலால் நிரப்பி, மேலே விவசாயத்தை தொடர்வது என்று.

11:50 PM Sep 20th, 2008
எனக்கு கிடைத்த தகவலின் படி டாடாதான் முழுமையாய் அந்த பகுதியையே நாசப்படுத்தும் open mining என்பதை துவங்கினார்கள்; டெல்லி மாஃபியா அனுமதித்தது.

Friday, March 19, 2010

துளியுரைகள்-5.

5:06 PM Sep 12th, 2008
LHC சோதனை பற்றி DC யின் வந்த கருத்துக்களில், 'உலகம் அழியுமென ஒரிசா கோவிலில் சரணடைந்தவர்களினுடையதை விட, ஐஐடி மாணவர்களினுடையது முட்டாள்தனமாக பட்டது

11:06 AM Sep 13th, 2008
நேற்று 'அட்டகுறிக்கி' என்ற கிராமத்தில் IAF `சும்மா' பாம் போட்டிருக்கிறது. இது விபத்துதானா என்று செய்திகளில் உறுதிப்படுத்த IAFஇடம் தகவல் இன்னும் இல்லை

11:09 AM Sep 13th, 2008
8.45க்கு பதில் 8.00 மணிக்கு பாம் போட்டிருந்தால் பல பள்ளி சிறார்கள் உயிரிழந்திருப்பார்கள் என்கிறார்கள்

(இதற்கு பிறகு இந்த நிகழ்வு குறித்து செய்திகள் எதுவும் இல்லை.)

11:12 AM Sep 13th, 2008
விபரீதமாக நிகழ்ந்து மீண்டும் மீண்டும் இப்படி நடந்தால் சாலை மறியல், கண்டனங்கள், பிரதமருக்கு கலைஞரின் கடிதம் என்று பரபரப்பாகி பின் அடங்கும்.

11:15 AM Sep 13th, 2008
பின் நம் மீனவர்களை இந்தியா சிங்களப்படையை அமர்த்தி போட்டுத் தள்ளும் (மௌனம் சம்மதம்!) யதார்த்தம் போல இதையும் ஏற்றுகொண்டு அலுவலை கவனிக்கலாம்.

1:46 PM Sep 14th, 2008
அறிவியல் இயற்கையை புரிந்து கொள்ளும் (புரிதலை வெளிப்படுத்தும்) சட்டகம் அனுமானங்கள் கொண்டது; நடைமுறையில் முழுமையான (பொருளில்) கறார்தனம் கொண்டது அல்ல

1:46 PM Sep 14th, 2008
சில சந்தர்ப்பங்களில் அறிவியலை முன்வைத்த அதிகாரம் கலந்த ஆணவமான 'தெளிவை'விட, மூடநம்பிக்கை ஆபத்து இல்லாதது என்பது என் கருத்து

1:49 PM Sep 14th, 2008
தங்கள் சட்டகத்தில் தெளிவின் பாற்பட்டு முழுமையாய் சிலரின் அறிவிற்கு சரியாக இருந்தும், 90% மக்கள் (முட்டாள்தனமாக கூட) பயப்பட்டால் இந்த சோதனைக்கு அறம் சார்ந்து உரிமை இல்லை என்று நினைக்கிறேன்.

1:50 PM Sep 14th, 2008
' இந்த பாழும் உலகம் போனால் போய் தொலையட்டுமே' என்று எனக்கும் பலமுறை தோன்றுவதுதான்; எல்லோருக்கும் சேர்ந்து முடிவெடுக்க முடியுமா எனபது வேறு விஷயம்

7:25 PM Sep 14th, 2008
http://tinyurl.com/5tse7e கவர்ந்த உருவகம் "நெகிழ்ச்சியான ஒரு சமூக அமைப்பில் உள்ளுறை முரண்பாடுகள் சமூகச் சக்கரத்தை முன்னிழுக்கும் உராய்தல் சக்தியாகின்றன."

11:13 PM Sep 17th, 2008
'ஊத்திகினு கடிச்சுக்கலாம்..' ப்ிறகு 'வாழைமீனுக்கும்.." என்றொரு வரிசையில் 'நாக்க மூக்க' வரலாற்று முக்கியத்துவமாக எனக்கு தெரிகிறது

9:54 PM Sep 19th, 2008
ஒருவகையில் 'ராஜபார்வை'தான் 'மொழி'யாக உருமாறியிருக்கிறது. ராஜபார்வை ஒடாததன்/இன்று மொழி ஹிட்டானதன் பின்னணிகள் + விளைவுகள் +காலமாற்றம் பேசவேண்டியவைகளாக இருக்கிறது.

Wednesday, March 17, 2010

துளியுரைகள்-4.

11:51 PM Sep 3rd, 2008
மலைப்பாதையில் நிறுத்தத்தில் அவன் இறங்கிய 8 வது நிமிடத்தில் விபத்து நடந்து எல்லோரும் காலி. 'நான் இறங்கிருக்க கூடாது' என்று நினைக்கிறான். ஏன்?

1:29 PM Sep 5th, 2008
'சுப்பிரமணிய புரத்'தில் 'சிறு பொன் மணி' பாடல் துண்டு ஒரு முக்கியமான பாத்திரத்தை வகிக்கிறது என்ற என் யூக முடிவை படம் பார்த்த இரு நண்பர்கள் ஆமோதிக்கிறார்கள்

1:30 PM Sep 5th, 2008
பெல் பாட்டம், ஜாரி என்று obviousஆன சமாச்சாரங்களை பற்றி எல்லாம் 'ஆழமாய்' பேசி விமர்சிக்கும் சாருவிற்கு இந்த பாடலின் முடிச்சு தென்படவில்லை.

1:36 PM Sep 5th, 2008
20 ஆண்டுகள் கழித்து ராஜாவின் இசை வேறு ஒரு இடத்தில் முற்றிலும் வேறு பட்டு இயங்குவது புரியவில்லை. அய்யோ பாவம்!

1:57 AM Sep 7th, 2008
துப்புரவு தொழிலாளர்களை நிரந்தரப்படுத்துவதை சாதனை பட்டியலில் மாயவதி அடுக்குவது தலித் அரசியலுக்கான மிக பெரிய துரோகம் என்று நினைக்கிறேன்.

1:01 AM Sep 8th, 2008
முந்நாள் underworld donஆக இருந்த முத்தப்பா ராய், திருந்தி real estate businessஉம், ஜெய் கர்நாடகா அமைப்பையும் நடத்தி வருகிறார்

1:04 AM Sep 8th, 2008
ஹோகனேகல் பிரச்சனையில் கூட நாராயண கௌடா, வட்டாள் நாகராஜுடம் ஒப்பிடும்படி 5000 பேருடன் கலாட்டாவில் கலந்துகொண்டவர்

1:06 AM Sep 8th, 2008
பல வருஷங்களாய் 'கற்றது தமிழ்' எடுக்க முடியாமல் அலைந்த ராம், முத்தப்பா ராயின் ஃப்ண்டிங்கில்தான் எடுக்க முடிந்ததாம்.

1:09 AM Sep 8th, 2008
முன்னாள் டான் மற்றும் தமிழர்களுக்கெதிரான கன்னட தேசிய அரசியல் நடத்துபவர் பணத்தில் 'கற்றது தமிழ்' எடுத்த தார்மீகம் பற்றி எழுதவரவில்லை
.
1:10 AM Sep 8th, 2008
இந்த தமிழ் சினிமா வியாபாரம் எவ்வளவு விநோதமாக இருக்கிறது என்று மட்டும் சொல்ல வந்தேன்.

Tuesday, March 16, 2010

காலி செய்த இளையராஜா.

டிஎம்மெஸ்ஸை ஓய்த்து கட்டியது இளையராஜா என்று ஒரு கருத்து பரவாலாக நிலவுகிறது. பெயரிலி கூட இந்த காரணத்தினாலேயே ராஜா மீது ஒரு கோபம் இருந்ததாக ஒருமுறை சொல்லியிருந்த நினைவு. இந்த நம்பிக்கைகளில் நியாயம் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை. இளயராஜா வருவதற்கு முன்னமேயே எம்.எஸ்.வி. பல புதியவர்களை அறிமுகம் செய்து, டிஎம்மெஸ்ஸின் ஆதிக்கத்தை வெகுவாக குறைத்திருந்தார். அன்றய திரையிசை இருப்பில் மிக முக்கியம் வாய்ந்த எம்ஜியார் பாடல்களிலேயே, ஜெயசந்திரன் வரை பலர் அறிமுகமாகியிருந்தார்கள். மேலும் இளயராஜா முன்வைத்த இசை முற்றிலும் புதியது; அதற்கு டிஎம்மெஸ் பொருந்தமாட்டார்; அன்றிருந்த மற்றவர்களே அதிகம் பொருந்தினார்கள். டிஎம்மெஸ்ஸிற்கும், ராஜாவுக்கும் உரசல் இருந்திருந்தால் கூட, ராஜா திட்டம் போட்டு வாய்ப்பு தராமல் ஓய்த்து கட்டுவதற்கு யதார்த்தத்தில் எதுவுமில்லை; ராஜாவின் இசைக்கு டிஎம்மெஸ் பயன் பட்டிருக்க மாட்டார் என்றுதான் எனக்கு தோன்றுகிறது.

ராஜா டிஎம்மெஸ்ஸை ஓய்த்து கட்டினார் என்று சொல்ல முடியாவிட்டாலும், இன்னொரு பொருளில், டிஎம்மெஸ்ஸை தமிழ் பொது ரசனையில் அந்நியப்படுத்தினார் என்று எனக்கு தோன்றுகிறது. அது இளையராஜா சுயநினைவுடனோ, வலிந்து திட்டமிட்டோ செய்தது அல்ல. வரலாற்றின் போக்கில், ஒன்றின் இருப்பு இன்னொற்றை பாதிக்கும், ரசனையின் தவிர்க்கவியலாத அழகியல் கட்டமைப்பு பின்னல்களால் நிகழ்ந்தவை. டிஎம்மெஸ் ஏற்கனவே பொக்கிஷங்களை தமிழர்களுக்கு தந்து விட்டார். காலகாலத்துக்கும் போற்ற வேண்டியவைகளை அளித்த பிறகு, அவர் புதிதாக இளையராஜாவின் தோன்றுதலுக்கு பிறகு செய்ய எதுவுமில்லை. ஆதலால் ஓய்த்து கட்டுவதற்கு, டிஎம்மெஸ் பாடாத எதிர்கால பாடல்களில் எதுவுமில்லை. அவர் பாடிய பாடல்களை நினைவில் கொண்டு போற்றி கொண்டாட வேண்டிய, எதிர்கால தமிழர்களின் அழகியல் ரசனையை முற்றிலும் எதிராக மாற்றியதன் மூலம்தான் இந்த ஓய்த்து கட்டுதல் நடக்கிறது என்று எனக்கு தோன்றுகிறது.

உதாரணமாக ஹிந்தி திரையிசையை எடுத்துக் கொண்டால் அதற்கு ஒரு இயல்பான தொடர்ச்சி இருக்கிறது. 80, 90, 2000 தலைமுறையை சேர்ந்தவர்களால் கூட எந்த உறுத்தலும் வருத்தலும் இன்றி, பழைய ஹிந்தி பாடல்களில் தங்களை அடையாளம் கண்டு கொள்ளும் வகையில் உள்ளது. இன்றய ஹிந்தி பாடல்களை கேட்பவருக்கு 40லிருந்து 70 வரையான பாடல்களில் அந்நியமாக எதுவும் ஹிந்தியில் இல்லை. தமிழில் திரையிசையின் தொடக்கத்திலிருந்து இளயராஜா நுழையும் காலம் வரை இயல்பான ஒரு தொடர்ச்சி இருப்பதும், இளையராஜா முற்றிலும் புதிய (ஆனால் தமிழ் மண்ணில் வேர்கொண்ட) இசையுடன் நுழைவதை காணலாம். இளயராஜாவிற்கு பின்னான இசை, ராஜாவின் அளித்த இசையின் இயல்பான தொடர்சியாகவும் இருக்கிறது. ராஜாவின் இந்த திடீர் செங்குத்து பாய்ச்சலில் தமிழ் பொதுரசனையை குழப்பி விட்டுருப்பதாக தோன்றுகிறது.

ராஜாவின் இசையில் அடையாளம் கண்டு இசை கேட்க துவங்கியவர்களுக்கு எல்லாம் அதற்கு முந்தய இசை முற்றிலும் அந்நியமாகிவிட்டது என்று சொல்லவரவில்லை. இதற்கான மாற்று உதாரணமாக பலருடன் நானும் உண்டு. (ஆனால் இரண்டுக்குமான வித்தியாசமான உணர்வுகளை தெளிவாக உணர முடியும்.) தமிழ் சமூகத்தின் பொது ரசனை என்பது ராஜாவின் இசையால் புதிய மாற்றத்திற்கு வந்தது. அது பழைய ரசனையை அந்நியப்படுத்தியது என்று தோன்றுகிறது. இவ்வாறே 80களுக்கு பிறகு நவீனமான தமிழ் சமுதாயம் இன்றளவும் டிஎம்மெஸ்ஸை கொண்டாடமலிருக்க இளயராஜா ஒரு முக்கிய காரணமாகிறார். இந்த வகையில் ராஜா டிஎம்மெஸ்ஸை ஓய்த்து கட்டினார் என்பது மட்டுமல்ல, தமிழ் ரசனையில் குழப்பத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்துகிறார் என்று எனக்கு தோன்றுகிறது.

(இதெல்லாம் எதிர்மறையாக எழுதவில்லை, தமிழ் திரையிசையை வளமாக்கும் நல்ல விஷயமாகத்தான் நான் பார்கிறேன்.)

Monday, March 15, 2010

நாஞ்சில்-ஜெயமோகன்-மாடுகள்-ஜீன்கள்.

நேற்றய 'கேணி' கூட்டத்தில், நாஞ்சில் நாடன் மொழியின் ஆளுகைகளை விரித்து பேசிய போது, குறிப்பிட்ட மொழியை தாய் மொழியாய் கொண்டவருக்கு குறிப்பிட்ட முக அமைப்பு ஏற்பட்டு விடுவதாக குறிப்பிட்டார். முக அமைப்பை பார்த்தே அவர் பெங்காலியா, மராட்டியா, தமிழா தெலுங்கா என்று சொல்ல கூடியதை பற்றி சொன்னார். ஆய்வாளர் ஒருவர், குறிப்பிட்ட மொழியை காலம் காலமாக பரம்பரையாக ஒலிப்பதால், அதற்கேற்ப முக அமைப்பு ஏற்பட்டு விடுவதாக அறிவியல் பூர்வமான கட்டுரை ஒன்றை எழுதியிருந்ததாக சொன்னார். எனக்கு இந்த அறிவியல் பூர்வமான விஷயம் உண்மையாக இருக்க வாய்ப்பிருப்பதாகவும், அதே நேரம் முழு உண்மையாக இருக்க முடியாது என்ற நம்பிக்கையும் உள்ளது.


நாஞ்சில் சொன்ன தகவல் எனக்கு Mark Kac எழுதிய (ஹெர்மான் வெய்ல் தொடங்கிய) "Can we hear the shape of a drum?" கேள்வியை நினைவுக்கு கொண்டு வந்தது. (நான் அறிவியல் சம்பந்தமாக எழுத நினைக்கும் விஷயத்தில் இதுவும் ஒன்று. ஆர்வமுள்ளவர்கள் இணையத்தில் தேடினால் முழு தகவல்களும் கிடைக்கும்.) இந்த கேள்விக்கான பதில் 'முடியும், ஆனால் முழுவதும் முடியாது' என்பதாக வே இருக்கிறது. நாஞ்சில் குண்ட்ஸான விஞ்ஞானம் கலந்து சொல்வதற்கு பின்னும் பதில் இப்படியே இருக்கும் என்று பட்சி சொல்கிறது.

இதை தொடர்ந்து நாஞ்சில், ஜெயமோகன் 'கோயம்புத்தூரிலிருந்து கேரளாவிற்கு கசாப்பு செய்ய மாடுகள் கூட்டமாக கொண்டு செல்லப்படுவதை' முன்வைத்து எழுதிய புனைகதை ஒன்றை குறிப்பிட்டார். நான் கதையை படித்ததில்லை. நாஞ்சில் நாடன் கதை சொன்னபடி, ஜெயமோகனின் கதையில், கசாப்பு செய்யும் பழக்கம் நின்று போய் பல ஆண்டுகள் ஆகிய பின்னும், இந்த கசாப்பு செய்யும் விஷயம் மாடுகளின் ஜீன்களில் கலந்து, மாடுகள் பால் வற்றி உழைக்கவியலாமல் (மனிதனுக்கு) பயனற்று போன பருவத்தில், தாங்களே கசாப்புக்கு தங்களை ஒப்புவிக்கும் பழக்கமாக, கசாப்பு செய்யும் குறிப்பிட்ட இடத்திற்கு செல்வதாக கதை செல்வதாக குறிப்பிட்டார். இந்த கதை விவரிப்பை உருவகமாக கொண்டு, தனிப்பட்ட வாசிப்பை நிகழ்த்தி, கட்டுடைக்கும் நோக்கம் எனக்கு இல்லை. குறிப்பாக கதையை படிக்காமல் அதையெல்லாம் செய்யக்கூடாது என்று நினைக்கிறேன். ஆனால் என் கேள்வி வேறு.

மாடுகளின் ஜீன்களில் கசாப்புக்கு தானே ஒப்புவிக்கும் பண்பு கலந்திருக்குமா, அல்லது கசாப்புக்கு இழுத்து செல்லப்படுவதன் எச்சரிக்கை அதிர்வு கலந்திருக்குமா என்பது. கசாப்புக்கு ஓட்டி செல்லப்படும் மாடு அதை உணரும் தருணத்தில் (அது ஒரு தொடர்ந்த process ஆயினும்) முன்வந்து ஒப்புவிக்குமா, அல்லது ஏதாவது வகையில் எதிர்ப்பு தெரிவிக்குமா? அப்படியெனில் ஜீனில் எந்த செய்தி, எந்த குணமாக கலந்திருக்கும்?