Monday, June 14, 2010

எதிர் பொதுப்புத்தி

விழுப்புரம் பேரணி அருகில், தண்டவாளத்தை வெடிவைத்து தகர்த்து திட்டமிடப்பட்ட விபத்து, பலரது காலத்தினாலான இடையீடுகளால், 10 அடிகளில் தவிர்க்கப்பட்டது என்பது நாம் அறியும் செய்தி. செய்தியை உண்மையாக எடுத்துக் கொண்டால் ஒரு மிகப் பெரிய மனித அவலம் தவிர்க்கப்பட்டிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. ராஜபக்ஷே வருகையையும், இந்தியா வரவேற்றதையும் கண்டிப்பதற்காக இதை திட்டமிட்டதாக, விபத்து நடந்த இடத்தில் துண்டறிக்கைகள் மூலம் 'பிரபாகரனின் தம்பிகள்' என்ற அமைப்பு உரிமை கோருவதாக துணைசெய்தி. 'தமிழ் ஷாவினிஸம்' என்கிற ஒற்றை வார்த்தை மூலம் தமிழ் சார்ந்த எல்லா பிரச்சனைகளையும் மொத்தமாக அணுகுவதை குலதர்மம் போல கடைபிடிக்கும் ஆங்கில/வட இந்திய ஊடகங்கள், இந்த முறையும் அப்படியே இந்த பிரச்சனையையும் கடந்து போவது, அவர்கள் சாத்தானாக்கும் 'தமிழ் ஷோவினிஸத்திற்கு' மேலும் சில நியாயங்களை சேர்ப்பதை தவிர வேறு எதையும் செய்யப்போவதில்லை. அவர்களை பற்றி எதுவும் இங்கே பேசப்போவதில்லை. மற்றபடி செய்தி குறித்து பொதுமக்களின் பொதுபுத்தியில் வழக்கம் போல கேள்விகள் எதுவும் இல்லை.

பொதுபுத்தியையும், அரசு விதைக்கும் தகவல்களையும் எதிர்கொள்பவர்கள் எழுப்பும் கேள்விகள்தான் வழக்கத்திற்கு மாறாக எனக்கு பீதி கலந்த நெருடல்களாக உள்ளன. ஒரு தரப்பில் இந்த மொத்த விவகாரமும் இந்திய உளவுத்துறையின் சதியாக இருக்கலாம் என்கிறார்கள். (அப்படி இல்லை என்று சொல்லும் துணிவு இல்லாத அதே நேரத்தில் இப்படி ஒரு சந்தேகம் கொள்ள வைக்கும் ஆதாரமும் எதுவும் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.) அடுத்ததாக இலங்கை உளவு துறையின் சதியாக இருக்கலாம் என்கிறது இன்னொரு தரப்பு. (இது ரொம்ப தமாஷ். இலங்கை உளவுதுறை இப்படி செய்வது சாத்தியமா என்ற கடினமான கேள்வியைவிட எளிதான பதில், செய்ய வேண்டிய தேவையே இல்லை என்பது. இந்திய உளவுத்துறையிடம் தொடர்பு கொண்டாலே போதுமானது.) இன்னொரு தரப்பு மாவோயிஸ்டுகள் போன்ற வேறு யாராவது செய்துவிட்டு 'பிரபாகரனின் தம்பி'கள் மீது பழியை திருப்பிவிட நினைத்திருக்கலாம் என்கிறார்கள். (இந்த தரப்புதான் இருப்பதிலேயே விசித்திரமானது.)

இந்திய உளவுத்துறை எந்த நாடகத்தையும் நிகழ்த்திக் காட்டக்கூடியதுதான். ஆனால் அப்படித்தான் என்று உறுதியாக கருத, இதுவரை பல ரத்த ஆறுகள் ஓடிய போதெல்லாம் ஏதாவது ஒரு அரசு எதிர்ப்பு வாதத்தை சொல்லி சொல்லி அதையெல்லாம் நியாயப்படுத்தியவர்களை தவிர மற்றவர்களால் முடியாது. நிச்சயமாக சில விடலை பையன்கள் இந்த வகையில் தங்கள் கோபத்தை காட்டியிருக்கவே வாய்ப்புகள் அதிகம் உள்ளது. ஒரு பெரு விபத்து நடக்கும் இடத்தில் காற்றில் பறந்துவிடும் துண்டறிக்கைகளை போடுவார்களா என்று கேட்பது புத்திசாலித்தனமான கேள்வியாக தெரியும் அளவிற்கு, பழைய வரலாறுகளை அறிந்தவர்களுக்கு விவேகமான கேள்வியாக தெரியாது. ஒரு விபத்தை நடத்தி ஆயிரக்கணக்கில் மக்களை கொன்று அதன் மூலம் ஒரு அரசுக்கு நிர்பந்தத்தை ஏற்படுத்த முடியும் என்று முட்டாள்தனமாக நம்புபவர்கள், அதைவிட முட்டாள்தனமாக எந்த விதத்தில் வேண்டுமானால் நடந்து கொள்வார்கள் என்றுதான் தோன்றுகிறது. இதுவரையான போராளி வரலாறுகளில், குறிப்பாக தமிழ்நாட்டு தமிழ்தேசிய வன்முறையாளர்கள் இதைவிட மகா முட்டாள்தனங்களை செய்திருக்கிறார்கள். தமிழ் நாட்டில் அடக்குமுறையை அவிழ்த்து விடுவதற்காக உளவுத்துறை இப்படி ஒரு நாடகத்தை அரங்கேற்றியிருக்கும் என்பது எதிர்தரப்பு உருவாக்கும் வெறும் வார்த்தைகள் மட்டுமே கொண்ட தர்க்கம்தானே தவிர, அதற்கு ஆதாரம் எதுவுமில்லை. பாராளுமன்றத்தின் மீது நடந்த தாக்குதலே ரா செய்த வேலைதான் என்று, எந்த ஆதாரமும் இன்றி, தீவிரமாக நம்பும் அறிவுஜீவிகளையே சந்தித்துள்ளேன். அதற்கு இணையான இன்னொரு கேன்சர் வளர்ச்சிதான் இது. ஒரு அமைப்பு நாசவேலை செய்வதன் நோக்கம் அந்த வேலையால் விளைவிறும் நாசம் அல்ல; அதன் மூலம் பொறுப்பேற்று ஒரு செய்தியை சொல்ல விரும்புவதே. இதில் ஒரு அமைப்பு செய்துவிட்டு பெயரை மற்ற அமைப்புக்கு தரும் லாஜிக்கும் புரியவில்லை. சீமான் போன்றவர்கள் புளுகி தர்கிப்பதை எல்லாம் நாம் குப்பையில்தான் போடவேண்டும். எந்த கதையாடலினாலும் விவரித்துவிட முடியாத துன்பங்களை அனுபவித்து தப்பியோடிய தமிழ் மக்களையே போரின் இறுதியில் புலிகள் சுட தயங்கவில்லை. 'சிங்கள அப்பாவி மக்ககளைகூட கொல்லாதவரின் தம்பிகள் இப்படி செய்வார்களா?' என்று லாஜிக் போடுகிறார் சீமான். (புலிகள் மக்களை சுட்டதை நான் எந்த விதத்திலும் சிங்கள அரசின் தாக்குதலுடன் ஒப்பிடவில்லை. அதை ஒரு காரணமாக சொல்லி வேறு எதையும் நியாயப்படுத்தவில்லை. சீமானின் புளுகு தர்க்கத்தை மட்டுமே உடைக்கிறேன். )

துண்டறிக்கைகள் என்பதை முன்வைத்து, ஊடகங்கள் சொல்வதை அப்படியே கேள்விகேட்காமல், பொது புத்தியுடன் இசைந்து நாமும் ஒப்புகொள்ள வேண்டும் என்று நான் சொல்லவரவில்லை. இங்கே சந்தேகங்கள் ஒரு எதிர்பிரச்சாரமாக மட்டுமே உள்ளது. பொதுபுத்தியின் நேரெதிரான தன்மை கொண்ட இன்னொரு பொதுபுத்தியாகவே இந்த சந்தேகங்கள் நம்பிக்கைகளாக மாற்றப்படுகின்றன. அரசின் அடக்குமுறை என்பதை எதிர்க்க வேண்டும். ஆனால் இந்த எதிர்பிரச்சாரத்தால் நல்லது எதுவும் நடக்க வாய்பில்லை. இப்படி ஒரு தாக்குதலை 'பிரபாகரனின் தம்பிகளே' நடத்தியுள்ளதற்கே மிகுந்த வாய்ப்புகள் உள்ளன. அப்படி உண்மை இருந்தால் இதனால் ஈழத்தமிழர்களுக்கும் பத்து பைசா பிரயோஜனம் இல்லை; தமிழ்நாட்டு தமிழர்களுக்கும் இது பெருந்துன்பத்தை தவிர வேறு எதையும் கொண்டுவராது. இந்த நிலையில் இந்த செயலை அங்கீகரிக்கும் தன்மை கொண்ட எல்லா வாதங்களும் தமிழகத நலனிற்கு ஆபத்தானவை மட்டுமே.

இந்திய தேசிய கட்டமைப்பிற்குள், அந்த அமைப்பை பயன்படுத்திக் கொள்ளும் அணுகுமுறைகளும், இயக்கங்களும், செயல்பாடுகளுமே நமக்கு இன்றய தேவை. இலங்கையை போல் அல்லமால் அதற்கான ஒரு இடமும் சாத்தியங்களும் இங்கே இருக்கிறது. இது நியாயம் சம்பந்தப்பட்ட பிரச்சனையில்லை; சாத்தியங்கள், அழிவுகள், கொடுக்கப்போகும் விலைகள் சம்பந்தப்பட்ட பிரச்சனை. ஒரு இணை அரசு, இணை ராணுவம் கொண்டு ஈழத்திலேயே சாதிக்க முடியாத நிலையில், அப்பாவி தமிழ்நாட்டு தமிழ்மக்களுக்கான நாசத்தையும், அதன் பின் தொடரும் அரச வன்முறையையும் தவிர வேறு எதையும் இது போன்ற செயல்கள் தமிழகத்திற்கு கொண்டுவரப்போவதில்லை. இந்நிலையில் நடக்கும் இந்த எதிர்பொதுப்புத்தி சார்ந்த பிரசாரங்கள் எதிர்கால விபரீதங்களை அறியாத மிக ஆபத்தானது.

2 comments:

 1. //இந்த செயலை அங்கீகரிக்கும் தன்மை கொண்ட எல்லா வாதங்களும்// புளுகு தர்கித்த சீமான்கூட இதை அங்கீகரிக்கவில்லை.
  //இப்படி ஒரு தாக்குதலை 'பிரபாகரனின் தம்பிகளே' நடத்தியுள்ளதற்கே மிகுந்த வாய்ப்புகள் உள்ளன.// எதை வைத்து சொல்கிறீர்கள். நம்பகத்தன்மை மிகுந்த தமிழக போலீஸ்காரர்கள் மற்றும் மீடியாக்களின் அறிக்கைகளின் பேரிலா.

  சில கேள்விகள் http://tinypaste.com/a282f

  இப்படியோ அல்லது அப்படியோ முடிவெடுக்க நிறைய தகவல்கள் தேவைப்படுகின்றன. யாரும் தரப்போவதில்லை.

  ReplyDelete
 2. பத்திரிகை செய்திகள் சில கொயிஞ்சாமிகளால் அவர்களது புரிதலில் எழுதப்படுகிறது. அதில் ஒன்றிற்கும் இன்னொன்றிற்கும் முரண் இருப்பதற்கு பல காரணங்கள் இருக்கலாம். முரண்களை வைத்து நாம் எந்த முடிவிற்கும் வர இயலாது.

  பின்னால் ஏன் வெடித்தார்கள், முன்னால் வெடித்திருக்கலாமே என்பதற்கு பல காரணங்கள் இருந்திருக்கலாம். அந்த ரயிலை கவிழ்பது நோக்கமாக இல்லாமல் அடுத்து வருவதை தடம்புரள வைப்பதாக இருக்கலாம்; அல்லது எதிர்ப்பை மட்டும் தெரிவிக்க, தங்களது செயல் குறித்த சாத்தியத்தை உணர்த்த வெறும் தண்டவாளத்தை மட்டும் பெயர்ப்பதே கூட நோக்கமாக இருந்திருக்கலாம். குறிப்பிட்ட வகையில் நடக்க அந்த கால நேர சூழலில், சுற்றுப்புர பாதிப்பில் என்ன காரணம் வேண்டுமானாலும் இருக்கலாம்.

  இது போன்ற சில நெருடல்களை எதிர்பிரச்சாரமாக மாற்ற முடியுமா என்பது கேள்வி. அதை விட முக்கியமானது இதனால் தமிழகத்திற்கு என்ன விளைய போகிறது. மற்ற இடங்களில் என்ன விளைந்தது என்பது.

  ReplyDelete