பத்து வருடங்களுக்கு முன்பு அலகாபாதில் கழிக்க நேர்ந்த ஒன்றரை வருடம், பல தனிப்பட்ட காரணங்களால் மறக்க முடியாதது. பின் பனிக்காலம் அல்லது வசந்த காலம் என்று சரியாக பிரிக்க முடியாத ஃபிப்ரவரியில், கங்கையும், யமுனையும் வற்றிய சங்கம நிலப்பரப்பில், 'மாக்மேளா' ஒவ்வொரு வருடமும் அலகாபாதில் நடைபெறும். (12 வருடங்களுக்கு ஒருமுறை இதுவே கும்பமேளாவாகும். நான் கிளம்பி வந்த அடுத்த வருடம் கடந்த கும்பமேளா நடந்தது).
அந்த காலகட்டத்தில் கொண்டிருந்த மூர்க்கமான இந்துமத எதிர்ப்பின் பக்கவிளைவாக அலகாபாதின் வசந்த மேளாவில் நான் தீவிர கவனம் செலுத்தாமல், பல முக்கிய அனுபவங்களை இழந்திருக்கிறேன் என்று இப்போது தோன்றுகிறது. ஆனாலும் மாக்மேளாவின் ஒரு மாலையில் பிஸ்மில்லாகானின் கச்சேரிக்கு சென்றேன்; எண்பதுகளின் இறுதியில் இருந்த அந்த மேதை, நள்ளிரவு வரை தன் பரிவாரங்களுடன், பெரும் கூட்டத்தை கட்டிபோட்டு வாசித்த இசை மேடைக்கு பின்னால் நதியில் படகு வெளிச்சங்கள்; சாகும் தருவாயிலும் மறக்க முடியாத இசை காட்சி அனுபவம் அது.
அந்த அனுபவத்தின் நிழல் உங்களுக்கும் கிடைக்க, வரும் ஃபிப்ரவரி அலகாபாத் போய், பிஸ்மில்லாகானின் சீடர் யாராவது வாசிக்கும் இரவு ஒன்று உங்களுக்கு வாய்க்க அல்லாவையும், ராமரையும் வேண்டிக்கொள்வதை தவிர வேறு வழியில்லை. (உஸ்தாத் பிஸ்மில்லாகான் 2006இல் மறைந்தார்.) அதற்கு எந்த வாய்ப்புமே இல்லாதவர்கள் இங்கே சென்று பிருந்தாபனி சாரங்கை பனாரஸ் கங்கையின் காட்சியுடன் கேட்டு களித்து ஆறுதல் கொள்ளவும்.
இன்று சென்னையில் தொடர்மழையும், காற்றும்; வீட்டில் ஜன்னல் வழியாக அனுபவிக்கவும், சூடாக பஜ்ஜி செய்து சாப்பிடவும் ஏற்றது. வேலை இருப்பவர்களுக்கு மழை அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது. மழை தரும் நடுத்தர வாழ்வு கஷ்டங்களை சின்ன வயதில் அனுபவித்திருக்கிறேன். ஏழை மக்களுக்கு அது தரும் வாழ்க்கைப் போராட்டம், கேள்வி ஞானத்தை வாசிப்பு அனுபவமாக மாற்றிய வகையில்தான் தெரியும். இதன் சில தீவிர காட்சிகள் டூமிங் குப்பத்திலும், திருச்சி ஶ்ரீரங்கத்தில் காணக் கிடைத்திருக்கிறது.
பல மக்களின் இருப்பையும், வாழ்க்கையையும் கேள்விக்குறியாக்கும் மழையை, எல்லாவித பாதுகாப்புடன் ரசிப்பது, சிலருக்கு குற்ற உணர்வு தரும் இருத்தல் முரண். ஆதவன் தீட்சண்யா மழையை பற்றி கவிதை எழுதியவனை திட்டி எழுதிய கவிதை ஒன்றை பலர் வாசித்திருக்கலாம். ஆதவன் ரொம்ப நேர்மையும், நியாயமும் கலந்துதான் தன் கோபத்தை காட்டியிருக்கிறார். ஆனால் பிரசனை என்னவெனில் வீட்டில் உட்கார்ந்து மழையை ரசிப்பவன், ஆதவன் திட்டுவாரே என்று வேறு ஒரு முற்போக்கு கவிதை எழுதினால் அது நேர்மையாகுமா? அல்லது தன் இருப்புக்கும் உறவுக்கும் அப்பால் வாழும் மக்களை நினைத்து கண்ணெதிரே உள்ள காட்சியை ரசிக்க மாட்டேன் என்று கற்பித்து கொள்ள முடியுமா?
என்னை பொறுத்த வரை நம்சமூகத்தில் சம்பளம் வாங்குவதும், வாழ்வதும், ஒரு அங்கத்தினனாக இருப்பதும் கூட பெரும் குற்றம்தான். தற்கொலை செய்யாமல் அதை விதியாக ஏற்றுகொண்ட நிலையில், மழையை ரசிப்பதில் எல்லாம் முற்போக்கு போலி முகமுடி அணியமுடியாது. மேலும் வாழ்வின் போராட்டத்தின் நடுவே, ரசிப்பதற்கான அழகு ஒன்றை, புயல் நேரத்து மழை கொண்டிருப்பதனால்தான், மீனவ குப்பத்திலிருந்து அலையை வேடிக்கை பார்க்க சிலர் இன்று கடற்கரைக்கு வந்திருந்ததாக தோன்றியது.
இன்று மதியம் காரை எடுத்துக் கொண்டு குடும்பத்துடன் மெரினா கடற்கரைக்கு சென்றேன். மழை தூறலாக மாறிய ஒரு இருபது நிமிடங்களுக்கு அலைகளை பார்த்து விட்டு வந்தோம். கொண்டு சென்ற குடை எதிர்பக்கம் குவிந்து அதன் வாழ்பயனற்ற சாமானாகி போனது. புயலின் போதான கடலை திரைக்காட்சியில்தான் பார்த்திருக்கிறேன். ஒரு கேமெரா காட்சியில் அடக்க இயலாத, அப்படி ஆர்பரித்த கடலை இன்றுதான் வாழ்க்கையில் பார்த்தேன். பித்து பிடித்து சுழன்று சுழன்று கூத்தாடிய கடல்; சிலே பல்கலைகழகத்தில் ஒரு மதியத்தில் சில மாணவர்கள் ஆடிக்காட்டிய ஒரு ஆட்டம் சில நொடிகளுக்கு நினைவுக்கு வந்தது. தூறல் பலமான பின்பு காருக்கு திரும்பினோம்.
காரில் பிஸ்மில்லாகானை ஓடவிட்டேன். எதிரே கடலின் ஆர்பரிப்பு, மழை, பாதுகாப்பான காரின் வெது வெதுப்பில், பிஸ்மில்லா சாஹிபின் தோடி, பிம்பலாஸி, மால்கௌன்ஸ், பிருந்தாபனி சாரங்க.. பின் கிளம்பி பட்டின பாக்கம், ஃபோர் ஷோர் எஸ்டேட் கடற்கரை சாலையில் வண்டியை நிறுத்தி, மிக அருகில் தெரிந்த கடலின் அலைத்தாண்டவத்தின் எதிரே, மீண்டும் பிஸ்மில்லாகான் ஒருமணி நேரம் எங்களுக்காக வாசித்தார். அந்த அலகாபாத் இரவு அனுபவத்திற்கு பிறகு வாழ்வில் மறக்கப் போகாத அனுபவம் இன்று.
அன்றய பின்பனிக்கால குளிருடன், கங்கை/யமுனையின் அமைதியுடன், விழாக்கால ஈடுபாட்டுடன், படகு வெளிச்சத்தின் காட்சியுடன் பிஸ்மில்லாக்கானின் இசை இயைந்து இருந்தது. இன்று கார் கண்ணாடியின் ஊடாக தெரிந்த ஊழித் தாண்டவம் ஆடும் அலைகள், யாருமற்ற பட்டினப்பாக்கம் மீன் மார்க்கெட், குப்பை தொட்டி, மழையின் சத்தம் அனைத்துடன் முரணான இசைவை கொண்டிருந்தது முற்றிலும் புதிய அனுபவமாக இருந்தது. வேறு இசையை கேட்டு கொண்டிருந்திருக்கலாம் என்கிற உணர்வை தூண்டவில்லை.
Sunday, December 5, 2010
Subscribe to:
Posts (Atom)