Sunday, October 31, 2010

DRAUBEN AM SEE

இந்த விழாவில் பார்த்த முக்கிய படங்களில் ஒன்று இது. நான்குபேர் கொண்ட சந்தோஷமும் அமைதியுமான குடும்பத்தில், கணவன் திடீரென வேலை இழப்பதால் வரும் குழப்பங்கள்; 14 வருடங்களாக வேலைக்கு போகாத மனைவி வேலை கிடைத்து, கணவனுக்கு பதில் போக தொடங்கும் போது, பொறுப்பு நிலையும், அதன் மூலம் அதிகார சமநிலையும் மாறுவதால் வரும் சிக்கல்கள்; இவ்வாறாக குடும்ப சிக்கல்களை சித்தரிப்பதாக கதையை வாசித்து இந்த படத்தை பார்க்கலாம்.

நான் படத்தின் மையப்பாத்திரமான மகள் ஜெஸிகாவின் இருத்தல் பிரச்சனை சார்ந்த படமாக பார்த்தேன். ஜெஸிகாவின் குரலில் படம் முழுவதும் விஞ்ஞானம்/மனிதவியல் சார்ந்த தத்துவத்தனமான தகவல்கள் தரப்பட்டு கொண்டே இருக்கின்றன. மீன்கள் முட்டையிடுவதோடு சரி, தங்கள் குழந்தைகளை அதற்கு பின் பார்ப்பதில்லை, பார்த்தால் அடையாளம் காணவும் முடியாது; big bang நிகழ்ந்த போது சத்தமே இல்லை (சத்தம் எப்படி இருக்க முடியும் என்பது என் சந்தேகம்); பல பழங்குடிகளின் நமக்கு விநோதமாக தோன்றும் பல பழக்க வழக்கங்கள் (இறந்தவருக்கு துணையாக செல்ல, சிலர் தற்கொலை செய்து கொள்வது); இவ்வாறு பல தகவல்கள் கதை நிகழ்வுகளுக்கு இடையில்வந்து, கதையுடன் தொடர்பு படுத்த நம்மை தூண்டுகின்றன.

குடும்பத்தில் குழப்பமும் கசப்பும் மெள்ள தோன்ற, ஜெஸிகா பக்கத்து வீட்டில் புதிதாக குடிவருபவனுடன் நெருங்கி பழகுகிறாள். ஒரு இரவு முழுவதும் அவனுடன் பைக்கில் சுத்துகிறாள். தந்தை அவளை ஜாக்கிரதையாக, பாதுகாப்பாக இருக்க சொல்கிறான்.

வேலைக்கு போகும் அம்மா ஜோக்குகள் பல சொல்பவனுடன் பொதுவெளியிலும் நெருக்கமாகிறாள். கணவன் கிதார் வாசித்து, இயல்பில்லாமல் விநோதமாக பல பேசி, பெரிதாக சிரித்து, பாத்ரூமில் ஷேவ் செய்து, மிளகு பல தூவிய மிளகாய் இடையில் வைத்த பான் சாப்பிட்டு தன் மன அழுத்தத்தை போக்கிகொள்ள முயல்கிறான். ஜெஸிகா இந்த குழப்பங்களை சமாளிக்கும் பாலமாக இருக்க முயல்கிறாள்.

குழப்பங்களுடன் செல்லும் குடும்ப வாழ்க்கையில், யாரும் இல்லாத போது மனைவி ஒரு குழந்தையை பெற்று, அழும் சத்தம் கேட்கும் முன் அதை கொன்று, வீடு முழுக்க ரத்தமாக இருக்கும் நிலையில், ஜெஸிகாவும் தந்தையும் வீடு திரும்புகிறார்கள். யாருடைய குழந்தை என்கிற சந்தேகமும் அவனுக்கு உண்டு. கணவன் ரத்தத்தை கழுவுகிறான். ஜெஸிகாவிடம் 'இந்த விஷயத்தை வீட்டின் உள்ளேயும் விவாதிக்க கூடாது, வெளியே யாருடனும் பேசக்கூடாது' என்கிறான். இங்த சம்பவத்திற்கு பிறகு ஜெஸிகாவிற்கு அந்த குடும்பத்தில் இருப்பது பெரும் பிரச்சனையாகிறது.

ஜெஸிகா மணிக்கட்டை அறுத்து சிலமுறை குளியலறையில் தற்கொலை செய்துகொள்ள முயல்கிறாள். சிறு பிணக்கின் விளைவாக எதிர்வீட்டு காதலன் கழண்டுகொள்கிறான்.

ஒரு நாள் சைக்கிளில் இறக்கத்தில் வரும்போது, பறப்பது போல் கைகளை விரித்து கண்களை மூடிக்கொண்டு வேகமாக வருகிறாள். விபத்து நிகழ்ந்து மண்டையில் அடிபட்டு மயக்கமாகிறாள். ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்ட மயக்கமான ஜெஸிக்காவுடன், அம்மாவும் அப்பாவும் போக பயப்படுகிறார்கள். ஜெஸிகாவின் தங்கை அவளுடன் சென்று, தான் மட்டும் முழுவதுமாக அவளை பார்த்து கொள்கிறாள். 'ஏன் இப்படி செய்தாய்?' என்று கேட்கிறாள். 'நான் பறக்க முயற்சி செய்தேன்' என்கிறாள் ஜெஸிகா. 'உன்னால் பறக்க முடியாது' என்கிறாள். காதலன் வந்து அவளை பார்கிறான். ஹெல்மெட் ஒன்றை பரிசளிக்கிறான்.

சிகிச்சை முடிந்து, வீட்டிற்கு வந்த பிறகு, ஒரு நாள் வேறு அறைகளில் ஜெஸிகாவை காணாமல் பதறி, அம்மா அவளை பாத்ரூமில் கண்டு, கையை அறுத்து கொண்டாளா என்று தேடுகிறாள். இனி அந்த வீட்டில் இருக்க முடியாது என்று ஜெஸிகா முடிவெடுக்கிறாள். அப்பா நீளமாக பேசி தடுத்ததை, வற்புறுத்தியதை மீறி தங்கையுடன் தனியாக குடியேறுகிறாள். இருவரின் பாய்ஃப்ரெண்டுகளும் உதவுகிறார்கள். இருவரும் தங்கள் வாழ்விடத்தை உருவாக்க முயல்கிறார்கள். அப்பா குடியேற்றத்திற்கு உதவ முன்வருவதை, பிறவகைகளில் உறவை பேண முயல்வதையெல்லாம் ஜெஸிக நிராகரிக்கிறாள். கதவை, ஜன்னல்களை மூடி அவனை வெளியே நின்று அழவைக்கிறாள். தொடர்ந்து புகைத்தபடி அவன் செய்த தொலைப்பேசி அழைப்புகளை எடுக்காமல் தவிக்க விடுகிறாள்.

குடும்ப குழப்பங்கள் பற்றியதாக அல்லாமல், பெற்றோர்களுக்கும் மகள்களுக்குமான உறவு முரண்களை, தங்கள் சுயநலம் அதில் ஏற்படுத்தும் சிக்கல்கள் பற்றியதாகவே என்னால் திரைப்படத்தை பார்க்க முடிகிறது. குடும்ப சமனை நிலை நிறுத்த பாடுபடும் ஜெஸிகா ஏன் ஒரு கட்டத்தில் வெளியேறுகிறாள்? பெற்றோர்களின் பாசம், அக்கறை, பொறுப்பு என்பது மீறி, அந்த உறவு சுயநலன்களிலான சார்ந்திருத்தலாகவும், அதிகாரமாகவும் குழப்பமடைகிறது. நம் சூழலில், பல கூறுகளால் உருவான பெற்றோர்களின் அதிகாரத்திற்கு, பிள்ளைகள் வாழ்நாள் முழுவதற்குமான விலையை பின்னாளில் தருவதை காணலாம். ஜெஸிகா அந்த விலை தருவதை மறுத்தும், வீட்டின் சூழலை மேலும் சகிக்க இயலாமலும் வெளியேறுகிறாள். இன்னும் படத்தை முன்வைத்து குடும்ப உறவுகள் மட்டுமின்றி, குடும்ப அமைப்பு பற்றியும் பலவிதங்களில் யோசிக்கலாம்.

Sweaty Beards.

(திரைப்பட விழாவில் பார்த்த சுமார் பத்து படங்களுக்கு இங்கே குறு விமர்சனம் எழுதலாம் என்று இருக்கிறேன். பார்க்கலாம்.)

'Experimental movie' என்று Synopsisஇல் போட்டிருந்தார்கள். புனைவிலும், திரையிலும் என்னென்னவோ பரிசோதனைகள் பற்றி கேள்விப்பட்ட பின்பு, அப்படி எந்த புது சோதனை முயற்சியையும் இந்த படத்தில் காணமுடியவில்லை.

கிபி 900களில் நிகழும் கதை. பேண்ட் சட்டை போட்ட ஒரு நவீன கதை சொல்லியையும் கதையில் கலந்துவிட்டிருந்தார்கள். அவனும் ஒரு வாள்குத்து வாங்கிகொண்டு, வயிற்றில் இறங்கி, முதுகில் வெளிவந்தததுடன் கதையாடிக் கொண்டிருந்தான். இதன் மூலம் கதைக்கு புது பரிமாணம் எதுவும் கிடைத்ததாக தெரியவில்லை. நிறய நுட்பமான வன்முறை, தீமை/நண்மை பிரச்சனை, நிறைய காமெடி;

பல விஷயங்களை கிண்டலடிக்கிறார்கள் என்றும், அடிக்கிறார்களோ என்றும் தோன்றுகிறது; எதை என்று பிடிபடவில்லை. ('தமிழ் படம்' மாதிரி) சம்பந்த பட்ட பிரதிகளை ஒருவேளை தெரிந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அந்த வகையில் பழம்/புது பாத்திரங்களை கலப்பதில் சோதனை ஏதாவது இருக்கலாம்; என் அறிவு/அனுபவ நிறைவின்மையால் அவைகளை உள்வாங்க முடியவில்லையோ என்னவோ.

இந்த கதையை மட்டும் தனியாக எடுத்துக் கொண்டால், ஓரிரு இடங்களில் சிரித்ததை தவிர, வேறு விதங்களில் தேறாததாக, சாதாரண மொக்கையாக இருந்தது. bizarreஆன அதீத வன்முறை காட்சிகள் (யதார்த்ததை மீறியதாக இருப்பதால்) ரசிக்கலாம். விஷம் தடவிய வாளால் கீறப்பட்டு, ஒரு பெரும் பரப்பளவிற்கு சுற்றி துள்ளி குதித்து துடித்து இறப்பது; கடைசி காட்சியில், தன் தந்தையை கொன்ற கொலைகாரனை, (அசட்டு) ஹீரோ மார்பில் வெட்ட, ரத்தம் ஊற்றாக புறப்பட்டு, பின் மழையாக கொட்டுகிறது. ரத்த மழையில் நனைந்தபடி நாயகன்-நாயகி முத்தத்தில் ஆழ்கிறார்கள்.

அநாகரிகத்தை கண்டித்தல்.

பொதுவெளியில் (தனக்கு முன்பின் தெரியாத) அடுத்தவர் சுதந்திரத்தை மதிப்பதை, தமிழர்கள் கற்றுகொள்ளவில்லை என்பதற்கு பல உதாரணங்கள் உண்டு; அடுக்கிக் கொண்டே போகலாம். நம் சூழலை பொறுத்தவரை, நவீன வசதிகள் நம் சுதந்திரத்தை அதிகரிக்கும் அதே நேரத்தில், மற்றவர்கள் சுதந்திரத்தில் எந்த கவலையும் இல்லாமல் குறுக்கிடக்கூடியது. இதற்கான உடனடி உதாரணம் அலைபேசி. பல ஐரோப்பிய நாடுகளில், ஜப்பானில் அலைபேசியை பொது இடங்களில் பயன்படுத்துவதில் ஒரு கவனம் இருக்கும். அரங்கில் நுழைந்தவுடன் முதல் வேலையாக மௌனநிலையில் அலைபேசியை ஆழ்த்துவதை காணலாம். நம் ஊரில் ரயிலில் இரவில் பயணிக்கும் போது, நம் ஆழ்ந்த தூக்கத்தை பற்றி எந்த கவலையும் கொள்ளாமல், பக்கத்து பெர்த்தில் அலைபேசி அலறி, அவர் 'ஹலோ' என்று தொடங்கி, (அந்த காலத்தில் எஸ்டிடியில் சத்தமாக பேசவேண்டும் என்கிற பிரஞ்ஞை மிக )கத்தி கொண்டே இருப்பது சர்வ சாதாரண அனுபவம்.

கடந்த 4 நாட்களாக ஃபிலிம் சேம்பரில் நடந்த திரைப்படவிழாவில் அலைபேசி சத்தங்கள் செய்த அக்கிரமங்கள் கொஞ்ச நஞ்சம் அல்ல. அலை பேசியை அணைத்து வைக்கச் சொல்லி ஒருவர் கேட்டும் தொடர்ந்து ரிங்..ங்கி கொண்டிருந்தது.

சனிக்கிழமை திரைப்பட ஓட்டத்தின் நடுவே ஒருவருக்கு அலைபேசி அழைப்பு. திரைப்படத்தின் பின்னணி இசை, வசனங்களை மீறி சுமார் 5 வரிசை தள்ளியிருந்த எனக்கு எல்லாம் தெளிவாக கேட்கும் வண்ணம் பதிலளித்து கொண்டிருந்தார். ஓரிருவருடன் நானும் திரும்பி 'வெளியே போய் பேசுங்க' என்றேன். அவர் கவனிக்காமல், திரைப்படத்தின் சத்தம் அவரின் உரையாடலுக்கு தொந்தரவாக இருந்ததோ என்னவோ, இன்னும் சத்தமாக தொடர்ந்தார். பிறகு தொடர்ந்தது கூட்டத்தின் அர்ர்சனை. 'டேய் ..வெளியே போய் பேசுடா' என்று ஒரு சத்தம். இன்னும் தொடர்ந்து சில வசவு வார்த்தைகள். அவர் 'அப்புறம் பேசறேன்' என்று மீண்டும் பேசும் சத்தம் கேட்க, 'டேய் ..ஒன்ன செருப்பாலையே அடிபேண்டா' என்று மறு ஒலி.

உண்மையில் அவரின் அலைபேசி சம்பாஷணையை விட இந்த சத்தங்கள் இன்னும் திரைப்படம் பார்பதற்கு இடைஞ்சலானது. பலர் தீவிரமான கவனத்துடன் படம் பார்க்கும் போது, அலைபேசிய ஆசாமி செய்தது அநாகரிகம்தான். ஆனால் அதற்கு நடந்த எதிர்வினை நம் மக்கள் பொதுவெளியில் கொண்டிருக்கும் பொறுமையின்மையை காட்டுவதாகவே தோன்றியது. கத்தியவர்களுக்கு தங்களின் வசவு வார்த்தைகள், திரைப்படம் பார்ப்பவர்களின் கவனத்தை இன்னமும் குலைக்கும் என்றும் தோன்றவில்லை. சாலையில், போக்குவரத்து நெரிசலில் காட்டும் பொறுமையின்மைதான் அந்த அலைபேசியவரின் அநாகரிகத்தை கண்டிக்கும் போது வெளிப்பட்டதாக தோன்றியது. இதே நபர்கள் பல நேரங்களில் -ஒரு கையெழுத்து வாங்க, ரேஷன் கார்டுக்கான வரிசையில், ஒரு மந்திரிக்காக நெடுநேரமாக நிறுத்தப்பட்ட போக்குவரத்து நெரிசலில் பொறுமை காட்டுவதை காணலாம். ஆனால் தனக்கு பழக்க மில்லாத சாதரண அடுத்த நபரிடம் இல்லாத பொறுமையின்மையே இங்கு வெளிபட்டதாக தோன்றியது. (பிறகுதான் கவனித்தேன் அலைபேசிய நபருக்கு வயது 50-60 இருக்கலாம்.) அந்த நபர் அலைபேசியது, அதற்கான மக்களின் எதிர்வினை இரண்டும் நம் சமூக நோயின் ஒரு வெளிபாடாகவே எனக்கு பட்டது.