Sunday, October 31, 2010

அநாகரிகத்தை கண்டித்தல்.

பொதுவெளியில் (தனக்கு முன்பின் தெரியாத) அடுத்தவர் சுதந்திரத்தை மதிப்பதை, தமிழர்கள் கற்றுகொள்ளவில்லை என்பதற்கு பல உதாரணங்கள் உண்டு; அடுக்கிக் கொண்டே போகலாம். நம் சூழலை பொறுத்தவரை, நவீன வசதிகள் நம் சுதந்திரத்தை அதிகரிக்கும் அதே நேரத்தில், மற்றவர்கள் சுதந்திரத்தில் எந்த கவலையும் இல்லாமல் குறுக்கிடக்கூடியது. இதற்கான உடனடி உதாரணம் அலைபேசி. பல ஐரோப்பிய நாடுகளில், ஜப்பானில் அலைபேசியை பொது இடங்களில் பயன்படுத்துவதில் ஒரு கவனம் இருக்கும். அரங்கில் நுழைந்தவுடன் முதல் வேலையாக மௌனநிலையில் அலைபேசியை ஆழ்த்துவதை காணலாம். நம் ஊரில் ரயிலில் இரவில் பயணிக்கும் போது, நம் ஆழ்ந்த தூக்கத்தை பற்றி எந்த கவலையும் கொள்ளாமல், பக்கத்து பெர்த்தில் அலைபேசி அலறி, அவர் 'ஹலோ' என்று தொடங்கி, (அந்த காலத்தில் எஸ்டிடியில் சத்தமாக பேசவேண்டும் என்கிற பிரஞ்ஞை மிக )கத்தி கொண்டே இருப்பது சர்வ சாதாரண அனுபவம்.

கடந்த 4 நாட்களாக ஃபிலிம் சேம்பரில் நடந்த திரைப்படவிழாவில் அலைபேசி சத்தங்கள் செய்த அக்கிரமங்கள் கொஞ்ச நஞ்சம் அல்ல. அலை பேசியை அணைத்து வைக்கச் சொல்லி ஒருவர் கேட்டும் தொடர்ந்து ரிங்..ங்கி கொண்டிருந்தது.

சனிக்கிழமை திரைப்பட ஓட்டத்தின் நடுவே ஒருவருக்கு அலைபேசி அழைப்பு. திரைப்படத்தின் பின்னணி இசை, வசனங்களை மீறி சுமார் 5 வரிசை தள்ளியிருந்த எனக்கு எல்லாம் தெளிவாக கேட்கும் வண்ணம் பதிலளித்து கொண்டிருந்தார். ஓரிருவருடன் நானும் திரும்பி 'வெளியே போய் பேசுங்க' என்றேன். அவர் கவனிக்காமல், திரைப்படத்தின் சத்தம் அவரின் உரையாடலுக்கு தொந்தரவாக இருந்ததோ என்னவோ, இன்னும் சத்தமாக தொடர்ந்தார். பிறகு தொடர்ந்தது கூட்டத்தின் அர்ர்சனை. 'டேய் ..வெளியே போய் பேசுடா' என்று ஒரு சத்தம். இன்னும் தொடர்ந்து சில வசவு வார்த்தைகள். அவர் 'அப்புறம் பேசறேன்' என்று மீண்டும் பேசும் சத்தம் கேட்க, 'டேய் ..ஒன்ன செருப்பாலையே அடிபேண்டா' என்று மறு ஒலி.

உண்மையில் அவரின் அலைபேசி சம்பாஷணையை விட இந்த சத்தங்கள் இன்னும் திரைப்படம் பார்பதற்கு இடைஞ்சலானது. பலர் தீவிரமான கவனத்துடன் படம் பார்க்கும் போது, அலைபேசிய ஆசாமி செய்தது அநாகரிகம்தான். ஆனால் அதற்கு நடந்த எதிர்வினை நம் மக்கள் பொதுவெளியில் கொண்டிருக்கும் பொறுமையின்மையை காட்டுவதாகவே தோன்றியது. கத்தியவர்களுக்கு தங்களின் வசவு வார்த்தைகள், திரைப்படம் பார்ப்பவர்களின் கவனத்தை இன்னமும் குலைக்கும் என்றும் தோன்றவில்லை. சாலையில், போக்குவரத்து நெரிசலில் காட்டும் பொறுமையின்மைதான் அந்த அலைபேசியவரின் அநாகரிகத்தை கண்டிக்கும் போது வெளிப்பட்டதாக தோன்றியது. இதே நபர்கள் பல நேரங்களில் -ஒரு கையெழுத்து வாங்க, ரேஷன் கார்டுக்கான வரிசையில், ஒரு மந்திரிக்காக நெடுநேரமாக நிறுத்தப்பட்ட போக்குவரத்து நெரிசலில் பொறுமை காட்டுவதை காணலாம். ஆனால் தனக்கு பழக்க மில்லாத சாதரண அடுத்த நபரிடம் இல்லாத பொறுமையின்மையே இங்கு வெளிபட்டதாக தோன்றியது. (பிறகுதான் கவனித்தேன் அலைபேசிய நபருக்கு வயது 50-60 இருக்கலாம்.) அந்த நபர் அலைபேசியது, அதற்கான மக்களின் எதிர்வினை இரண்டும் நம் சமூக நோயின் ஒரு வெளிபாடாகவே எனக்கு பட்டது.

2 comments:

 1. சற்று உள்நோக்கினால் ஒரு விடயம் புரியும். அந்த திரை படம் அவருக்கு அவ்வளவு ஈர்ப்பு தர வில்லை என்பதே.
  இதே ஒரு பாட்சா, மூன்றாம் பிறை, சுப்ரமணியபுரம், சலங்கை ஒலி படம் பார்க்கு௦ பொழுது, கைபேசி அழைப்பு வந்து இருந்தால் கண்டிப்பாக அழைப்பை துண்டித்து இருப்பார்.

  ஒரு அறுவை படத்தை பார்க்கச் செய்த கோபம், தனக்கு ஏற்பட்ட இம்சை போன்ற எரிச்சலால் இந்த படத்தை மற்றவர்களும் ரசிக்க கூடாது என்ற மனோபாவம் .

  ஆயிரத்தில் ஒருவன் (கார்த்தி ரீமாசென்) படம் நான் திரை அரங்கில் பார்த்த பொழுது, இடைவேளைக்கு பிறகு எல்லாரும் கைபேசி பெசிகொன்ன்டே , ஏதோ தங்கள் வீட்டில் இருப்பது போலே இயல்பாய் இருந்து தங்கள் மன வருத்தத்தை மாற்றினர்.

  ReplyDelete
 2. ராம்ஜி, நீங்கள் சொல்லும் நோக்கிலும் யோசித்து பார்க்கிறேன்.

  ReplyDelete