Tuesday, March 16, 2010

காலி செய்த இளையராஜா.

டிஎம்மெஸ்ஸை ஓய்த்து கட்டியது இளையராஜா என்று ஒரு கருத்து பரவாலாக நிலவுகிறது. பெயரிலி கூட இந்த காரணத்தினாலேயே ராஜா மீது ஒரு கோபம் இருந்ததாக ஒருமுறை சொல்லியிருந்த நினைவு. இந்த நம்பிக்கைகளில் நியாயம் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை. இளயராஜா வருவதற்கு முன்னமேயே எம்.எஸ்.வி. பல புதியவர்களை அறிமுகம் செய்து, டிஎம்மெஸ்ஸின் ஆதிக்கத்தை வெகுவாக குறைத்திருந்தார். அன்றய திரையிசை இருப்பில் மிக முக்கியம் வாய்ந்த எம்ஜியார் பாடல்களிலேயே, ஜெயசந்திரன் வரை பலர் அறிமுகமாகியிருந்தார்கள். மேலும் இளயராஜா முன்வைத்த இசை முற்றிலும் புதியது; அதற்கு டிஎம்மெஸ் பொருந்தமாட்டார்; அன்றிருந்த மற்றவர்களே அதிகம் பொருந்தினார்கள். டிஎம்மெஸ்ஸிற்கும், ராஜாவுக்கும் உரசல் இருந்திருந்தால் கூட, ராஜா திட்டம் போட்டு வாய்ப்பு தராமல் ஓய்த்து கட்டுவதற்கு யதார்த்தத்தில் எதுவுமில்லை; ராஜாவின் இசைக்கு டிஎம்மெஸ் பயன் பட்டிருக்க மாட்டார் என்றுதான் எனக்கு தோன்றுகிறது.

ராஜா டிஎம்மெஸ்ஸை ஓய்த்து கட்டினார் என்று சொல்ல முடியாவிட்டாலும், இன்னொரு பொருளில், டிஎம்மெஸ்ஸை தமிழ் பொது ரசனையில் அந்நியப்படுத்தினார் என்று எனக்கு தோன்றுகிறது. அது இளையராஜா சுயநினைவுடனோ, வலிந்து திட்டமிட்டோ செய்தது அல்ல. வரலாற்றின் போக்கில், ஒன்றின் இருப்பு இன்னொற்றை பாதிக்கும், ரசனையின் தவிர்க்கவியலாத அழகியல் கட்டமைப்பு பின்னல்களால் நிகழ்ந்தவை. டிஎம்மெஸ் ஏற்கனவே பொக்கிஷங்களை தமிழர்களுக்கு தந்து விட்டார். காலகாலத்துக்கும் போற்ற வேண்டியவைகளை அளித்த பிறகு, அவர் புதிதாக இளையராஜாவின் தோன்றுதலுக்கு பிறகு செய்ய எதுவுமில்லை. ஆதலால் ஓய்த்து கட்டுவதற்கு, டிஎம்மெஸ் பாடாத எதிர்கால பாடல்களில் எதுவுமில்லை. அவர் பாடிய பாடல்களை நினைவில் கொண்டு போற்றி கொண்டாட வேண்டிய, எதிர்கால தமிழர்களின் அழகியல் ரசனையை முற்றிலும் எதிராக மாற்றியதன் மூலம்தான் இந்த ஓய்த்து கட்டுதல் நடக்கிறது என்று எனக்கு தோன்றுகிறது.

உதாரணமாக ஹிந்தி திரையிசையை எடுத்துக் கொண்டால் அதற்கு ஒரு இயல்பான தொடர்ச்சி இருக்கிறது. 80, 90, 2000 தலைமுறையை சேர்ந்தவர்களால் கூட எந்த உறுத்தலும் வருத்தலும் இன்றி, பழைய ஹிந்தி பாடல்களில் தங்களை அடையாளம் கண்டு கொள்ளும் வகையில் உள்ளது. இன்றய ஹிந்தி பாடல்களை கேட்பவருக்கு 40லிருந்து 70 வரையான பாடல்களில் அந்நியமாக எதுவும் ஹிந்தியில் இல்லை. தமிழில் திரையிசையின் தொடக்கத்திலிருந்து இளயராஜா நுழையும் காலம் வரை இயல்பான ஒரு தொடர்ச்சி இருப்பதும், இளையராஜா முற்றிலும் புதிய (ஆனால் தமிழ் மண்ணில் வேர்கொண்ட) இசையுடன் நுழைவதை காணலாம். இளயராஜாவிற்கு பின்னான இசை, ராஜாவின் அளித்த இசையின் இயல்பான தொடர்சியாகவும் இருக்கிறது. ராஜாவின் இந்த திடீர் செங்குத்து பாய்ச்சலில் தமிழ் பொதுரசனையை குழப்பி விட்டுருப்பதாக தோன்றுகிறது.

ராஜாவின் இசையில் அடையாளம் கண்டு இசை கேட்க துவங்கியவர்களுக்கு எல்லாம் அதற்கு முந்தய இசை முற்றிலும் அந்நியமாகிவிட்டது என்று சொல்லவரவில்லை. இதற்கான மாற்று உதாரணமாக பலருடன் நானும் உண்டு. (ஆனால் இரண்டுக்குமான வித்தியாசமான உணர்வுகளை தெளிவாக உணர முடியும்.) தமிழ் சமூகத்தின் பொது ரசனை என்பது ராஜாவின் இசையால் புதிய மாற்றத்திற்கு வந்தது. அது பழைய ரசனையை அந்நியப்படுத்தியது என்று தோன்றுகிறது. இவ்வாறே 80களுக்கு பிறகு நவீனமான தமிழ் சமுதாயம் இன்றளவும் டிஎம்மெஸ்ஸை கொண்டாடமலிருக்க இளயராஜா ஒரு முக்கிய காரணமாகிறார். இந்த வகையில் ராஜா டிஎம்மெஸ்ஸை ஓய்த்து கட்டினார் என்பது மட்டுமல்ல, தமிழ் ரசனையில் குழப்பத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்துகிறார் என்று எனக்கு தோன்றுகிறது.

(இதெல்லாம் எதிர்மறையாக எழுதவில்லை, தமிழ் திரையிசையை வளமாக்கும் நல்ல விஷயமாகத்தான் நான் பார்கிறேன்.)

14 comments:

 1. இது காலமாற்றத்தல் வந்த நிகழ்வு, இதற்கு ராஜா எப்படி காரணமாவார்
  அப்படி ராஜாதான் அவரை தவிர்த்தார் என்றல் மற்ற இசையமைப்பாளர்கள் ஏன் அவரை அதிகமாக பயன்படுத்தவில்லை?? இப்பொழுது SPB அதிகம் பாடுவதில்லை அதற்கு ரஹ்மான் தான் காரணம் என்று ஏன் யாரும் சொல்வதில்லை???????

  ReplyDelete
 2. அன்புள்ள மணி, முதல் பத்தியை படியுங்கள்.

  ReplyDelete
 3. கமல்ஹாசன் அவதானித்ததை போல கவிதையில் பாரதி கொண்டு வந்த மாற்றத்தை போல ராஜா திரையிசையில் கொண்டு வந்தார். எப்படி தமிழ் கவிதை என்பது பாரதிக்கு முந்தய பின் பாரதிக்கு பின் என்று என்று நம்மால் உணரப்படுகிறதோ அதை போல ராஜாவின் இசையும்... ஆகவேதான் அவர் ஒரு ஜீனியஸ்...though calling someone a genius has become a casual thing , if we look at the definition of the word we can understand why raaja alone is fit to be called as one...

  ReplyDelete
 4. ரஹ்மானும் அதே மாதிரி தமிழ் ரசனையில் குழப்பத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்துகிறார் என்றுதான் தோன்றுகிறது. ஆனால் அவரது இசைக்கு மண்ணின் மணம் இல்லை என்று நினைக்கிறேன் (குறைந்த பட்சம் தமிழ் திரை இசை பாடல்களை பொறுத்த மட்டிலும்) ஆச்சரியமாக ஹிந்தி பாடல்களில் அவர் இது வரையிலான இசையின் ஒரு நவீன தொடர்ச்சியாகத்தான் இருக்கிறார்..என்னுடைய கருத்து ராஜாவை ரஹ்மான் காலி செய்தார் என்பதுதான் ஆனால் அது தற்காலிகமானது... ராஜாவின் ஆளுமை மீன்டெழக்கூடிய வல்லமை வாய்ந்தது ... ஒரு செவ்வியல் தன்மை (நன்றி ஜெமோ :) உடையது...

  ReplyDelete
 5. ஒரு குறிப்பிட்ட அர்த்தத்தில் ராஜாவை ரஹ்மான் தாண்டி சென்றார்; ராஜாவை காலி செய்யவில்லை (நான் மேலே குறிப்பிட்டுள்ள பொருளில்) காலி செய்ய முடியாது என்பதே என் கருத்து.

  ReplyDelete
 6. \\அன்புள்ள மணி, முதல் பத்தியை படியுங்கள்.// நான் உங்களை குறிப்பிடவில்லை தவறாக நினைப்பவர்களைதான் குறிப்பிடேன்... \\ இதை பாருங்கள் http://manakkann.blogspot.com/2010/03/blog-post_16.html

  ReplyDelete
 7. Vasanth,

  You have a very good point there. While in some respect Raja is an extension of the Indian film music tradition, in certain aspects he has moved in a very different direction. He has set such high benchmarks that it becomes difficult for someone who grasps his music to demand anything less. Personally I feel that though Rahman dethroned Raja from a commercial angle, the early Rahman is more an extension of MSV. If you look at only his tunes from his early films, the effect of MSV can be perceived. (In many TV programs in Telugu channels, SPB has pointed out to many songs of Rahman which have the influence of MSV.) My very personal opinion is that Rahman musically did not set a benchmark which is very different from people like MSV. He got in more of the western music and combined it with MSV type tuning to very good effect. Somehow when I listen to him very keenly I do not find the precision that I find in Raja.

  I am still wondering how song after song Raja can be so precise and stick to his aesthetics. After listening to him I keep demanding the same musicality from every MD past and present and I get that in older MD to some extent but the overall consistency of Raja is something which I never get from any MD . Quite a sweeping statement no doubt but I say this as someone who listens to film music in as many languages as possible.

  ReplyDelete
 8. நீங்கள் ரஹ்மானை MSVஇன் நீட்சியாக சொல்வதன் பொருளை நான் விளங்கி கொள்கிறேன் (ஏற்கிறேன்). நான் இன்னொரு பொருளில் ரஹ்மானையும், யுவன் உட்பட்ட மற்றவர்களையும் ராஜாவின் நீட்சியாக பார்க்கிறேன்.

  ReplyDelete
 9. Vasanth,

  I agree with you to certain extent that Rahman and the others can be seen as an extension of Raja. I would rather prefer to say that Raja prepared the ground for the coming of the later music directors like Rahman. Raja had introduced lot of world music in his songs and so it was easy to accept the music of Rahman. Raja, the master craftsman that he is, hid his experiments very well, integrating them fully into the film songs that he did. The trend later changed to explicitly showing these foreign influences.

  One major change I see now is that the reach of music across the breadth of the state or across age groups is not the same as it was in the days of MSV and Raja. I know for sure that Rahman, Harris, Yuvan attract the youngsters a lot, sell a lot of CDs but whether they are able to impress the middle aged guys or above is still a question mark. The same remains about the reach beyond the urban centers. In essence, the music today is clearly targeted towards urban youngsters in India and abroad. Very rare to find a song like 'kangal irandal' which cuts across all barriers and impresses all the sections. If get one such song in a year you can consider yourself lucky :)

  In that sense, Raja was probably the last music director in Tamil films who consistently reached everywhere.

  ReplyDelete
 10. சுரேஷ், உங்கள் இரண்டு பின்னூட்டங்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 11. ரஹ்மான் MSV யின் நீட்சியா? இதை பலரும் சொல்ல கேட்டிருக்கிறேன் என்றாலும் என்னால் உணர முடிந்ததில்லை... பாடலுக்கு ஊடாக வரும் இசையீடுகள் ராஜாவினால் ஒரு கட்டமைப்பு உருவாக்கம் பெற்றன பல் வேறு உத்திகளும் சோதனை முறைகளும் அவரால் செய்யப்பட்டன என்னால் ஒரு விஷயம் உறுதியாக சொல்லமுடியும் என்றால் MSV யின் எந்த இடையீட்டு இசையும் அந்த அமைப்பை கொண்டிருக்கவில்லை என்பதுதான்... ராஜாவே அதை தான்தான் இந்த்திய திரையிசையில் கொண்டு வந்ததாக சொல்லியிருக்கிறார் ( ஆனால் சலீல் சௌத்ரியின் இசை இதற்கான முன்னோடி தன்மை கொண்டிருந்தது என்பதை உணர்ந்திருக்கிறேன்) ரஹ்மான் செய்தது அந்த கட்டமைப்பை குலைத்ததுதான் என்று தோன்றுகிறது... பலரும் இதனால் தான் ரஹமான் பாடல்கள் கேட்க கேட்க தான் பிடிக்கும் என்று சொல்கிறார்கள்... ரஹ்மான் உண்மையாக கொண்டு வந்த மாற்றம் என்ன? அவர் ஒரு சிறந்த ஒலியமைப்பு நிபுணர் என்று சுருக்குவதில் எனக்கு உடன்பாடு இல்லை... அவர் ஒரு கால கட்டத்தை பிரதிபலிதிருக்கிறார்... அது உலகமயாக்கலின் ஒரு உபரி விளைவு எனத்தோன்றுகிறது... (ரொம்ப ஓவரா இருக்குன்னு நினைக்கிறேன் :)

  ReplyDelete
 12. நான் ரஹ்மானை ராஜாவின் அளித்த திரையிசையின் நீட்சி என்றுதான் சொல்ல விரும்புகிறேன். MSVக்கும் ரஹ்மானுக்குமான தொடர்பு, ஒற்றுமை என்பதாக நானும் நினைப்பதை இப்போதைக்கு எழுத்தில் சொல்ல இயலவில்லை. குண்ட்ஸாக சில கீழே.

  MSV இன் பாடல்களும் சரி, ரஹாமனின் பாடல்களும் சரி படக்கதை மற்றும் காட்சியை மிகவும் சார்ந்தது; (ராஜாவின் இசை காட்சியை மீறியவை, பொதுவாக அதை காட்சியாக்குவத்கு இயக்குனருக்கு கஷ்டம், பல நேரங்களில் சாத்தியமில்லை.) இரண்டும் மேல்லிசை என்ற அளவிலேயே முழுமை கொண்டவை; (ராஜாவின் இசை மெல்லிசையாக இருக்க வேண்டிய கட்டாயத்தில் பெரும் இசை துண்டுகளால் கோர்க்கப்பட்டவை. ) இரண்டிலும் தாளத்தின் முக்கியத்துவம் திரையிசை என்ற அளவில் வெளிப்படையாக தெரியும். படல் முழுவதும் அதன் தொடர்சி உண்டு. (ராஜா சிட்டெரும்பு பாடலை கூட பல ராகங்கள் கலந்து அதன் தாள தொடர்ச்சியில் இருந்து விலகியவர்). இப்படி நிறைய சொல்லத் தோன்றுகிறது. இன்னும் பல உண்டு. வரிகளாக அதை எப்படி சொல்வது என்று யோசிக்க வேண்டும்.

  ReplyDelete
 13. அப்போ, டி எம் எஸ் ராஜா பாட கூப்பிட்ட பொழுது வராமல் அவமானப்படுத்தினார் அதனால் ராஜா அவரை ஒதுக்கினார்...என்று எல்லாம் நண்பர்கள் பேசிக்கொண்டது எல்லாம் சும்மாவா?

  ReplyDelete
 14. அது உண்மையா பொய்யா என்று எப்படி நிச்சயமா சொல்ல முடியும், உண்மையாகவும் இருக்கலாம். எஸ்பிபி-இளையராஜாவை முன்வைத்தும் கதைகள் உண்டு. எஸ்பிபியை ஓய்த்து கட்ட முணைந்ததாகவும்.

  ReplyDelete