Sunday, March 7, 2010

வெள்ளை இனவெறியும், தமிழர்களும்.

என் பையனுக்கு நான் ஏற்படுத்தி தரும் சுவாரசிய பொழுதுப்போக்குகளில் ஒன்று நோக்கமற்ற புறநகர் ரயில் பயணம். டிக்கெட் வாங்கும்போது 'பீச் ஒரு ரிடர்ன், வேளச்சேரி ஒரு ரிடர்ன்' என்று இரண்டு முனைகளுக்கும் எடுப்பதை கவுண்டரில் இருக்கும் ஆசாமி விநோதமாக பார்பார்.

இன்றய பயணத்தில் எதிரே உட்கார்ந்திருந்த பெண்மணி, செய்திதாளை கையில் வைத்துக் கொண்டு, கணவர் போன்ற ஒருவரிடம் செய்திகளை (ஏனோ) விளக்கி கொண்டிருந்தார். ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் தாக்கப்படும் பிண்ணணியில், கடைசியாக 3 வயது குழந்தை இறந்த செய்தி; பெண்மணி அந்த செய்தியை முன்னால் வைத்து கொண்டு, ஆஸ்திரேலியாவில் வெள்ளை இன வெறியால் தமிழர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதாக கதையாக சொல்லிக்கொண்டிருந்தார். அந்த குழந்தையையும் முன்வைத்து இப்போது கடைசியாக ஒரு 3 வயது தமிழ் குழந்தை கொல்லப்பட்டுள்ளதாகவும் சொல்லிகொண்டிருந்தார். நான் ஆச்சர்யத்தில் கவனிக்க தொடங்கினேன். (அவர் கையில் இருந்த செய்திதாளில் வட இந்திய முகம் கொண்ட குழந்தையின் படமும், பெயர் குருஷன் சிங் என்றிருப்பதையும் பிறகு கவனித்தேன்.) சுமார் 10 நிமிடங்கள் இதுவரை தாக்கப்பட்ட முன் கதைகளில் இயல்பான கற்பனை சேர்த்தும், சில இடங்களில் மிகையாகவும், வட இந்தியர்களை மட்டும் தமிழர்களாக பதிலிட்டு கதை சொல்லிக்கொண்டிருந்தார். இரண்டு முறை, 'தமிழர்கள்தான் என்றி நிச்சயமா தெரியுமா?' என்று கேட்டு, இடையீடு செய்ய நினைத்து செய்யவில்லை. தமிழர்கள் தாக்கப்படுவதாக கதை கற்பித்து கொள்வதில் நமக்கிருக்கும் உளவியலின் பகுதியாக இதை எப்படி புரிவது என்று யோசித்து கொண்டிருந்தேன்.

அவர் பேசுவதை நிறுத்திவிட்டது போன்ற இடைவெளி விழுந்த போது 'இலங்கைல தமிழர்கள் ஆயிரக்கணக்கில கொல்லப்பட்டது பத்தி நீங்க என்ன நினைக்கறீங்க?" என்று கேட்டேன். அந்த பெண்மணி என் திடீர் கேள்வில் திடுக்கிட்டு, சற்று முறைத்து விட்டு, வேறு பக்கம் திரும்பி அமைதியானார். கணவனும் என்னை முறைத்தான்.

1 comment:

  1. இது போன்ற அனுபவங்கள் எனக்கும் நிறைய ஏற்பட்டுள்ளது... ஒரு முறை அடையார் சிடி கடையில் படங்கள் தெரிவு செய்து கொண்டிருந்த போது கேட்ட உரையாடல் இங்கே...
    ஒரு சாயங்கால வேலையில் கடையில் வேலை செய்த சின்ன பையன் மற்றும் அவனுக்கு தெரிந்த சில பேர்கள் பேசும்போது கேட்டது...
    கடையில் இளையராஜாவின் 90 களை சேர்ந்த ஒரு கிராமிய பாடல் சத்தமாக ஒலித்துக்கொண்டிருக்கிறது....
    இளையராஜா பாட்ட எப்ப வேனா கேக்கலாம் ரஹ்மான் பாட்டு மாதிரி இல்ல.. அது எல்லாம் கொஞ்ச நாள் வந்த புதுசுல மட்டும்தான் நல்லா இருக்கும் இந்த பாட்ட கேளுங்க.. இப்ப கேட்டாலும் நல்லா இருக்கு...
    ஆமாம்..
    அவரு லண்டன்ல போய் மியூசிக் போட்ருக்காரு... அங்க இருக்க ராணிக்கு இவர் பாட்டு மட்டும்தாம் புடிச்சதாம் (may be referring symphony)...ஆனா ரஹ்மான் போல இவர் என் பேர் வாங்க முடியல..
    ஏன்...அவர் கருப்புத்தமிழர் அதுனாலதான்... மத்தவங்க எல்லாம் ஒதுககுறதுக்கு காரணம் அதுதான்...
    ( நான் சந்தோஷமடைகிறேன் இந்த புது விளக்கத்தை கேட்டு)
    மற்றவர் : இல்ல நான் கேள்வி பட்டேன் அவரு சனாவமே? (சுருக்கியிருக்கிறேன்)
    கடைப்பையன்: இல்ல அவர் பனா (மறுபடியும்...)... இருந்தா என்ன... அவர் மாதிரி மியூசிக் போட யாரால முடியும்?....
    நான் விதிர்த்து போய் அந்த இடத்தை விட்டு வெளியேறுகிறேன்.....

    ReplyDelete