Sunday, April 18, 2010

கடித்து எலி சாதல்.

சிறுவயதின் ஒரு மழைக்கால ஈரத்தில் மிதித்ததில், தேள் ஒன்று மிகையழுத்தம் கொண்ட மின்னதிர்ச்சி தாக்குதலாக கொட்டி, நடக்க இயலாமல், அழுகையும் வலியுமாக, மருத்துவ சிகிச்சையுடன் இரண்டு நாட்கள் தொடர்ந்தது. பாம்பு கடித்தால் சாகக்கூடிய வாய்ப்பு உண்டு என்றாலும், வலியனுபவத்தில் பாம்புக்கடி தேள்கடி போல கொடூரமாக இருக்காதாம். அவ்வளவு தீவிரமான தேள்கடி அனுபவத்தை சிறுவயதில் பெற்றும், அதில் சுவாரசியமாக சொல்ல எதுவும் இல்லை என்பது கொஞ்சம் வருத்தமானதுதான். பின், துவக்க தொண்ணூறுகளில், பெங்களூரில் நான் இருந்த கல்வி நிலையம் ஒன்றில் நட்டுவாக்களி என்ற பெரிய சைஸ் தேள்கள் மானாங்கன்னியாய் அலைந்தும் ஒரு முறை கூட கடி வாங்க நேர்ந்ததில்லை. (கடி வாங்கியிருந்தால் அந்த தீவிர அனுபவத்தையும் இங்கே பகிர்ந்து கொண்டிருக்க கூடிய சாத்தியம் மிக குறைவு. ஏனெனில் நான் அறிந்தவரை நட்டுவாக்களி கடித்தால், அந்த வனாந்திரத்தில் போய் சேருவதற்குதான் வாய்ப்பு அதிகம். ஆனால் நட்டுவாக்களி தேள்களை போல் பொதுவாக போட்டுதள்ளுவதில்லை. அதன் பிடிமானம் சரியாக இருக்காத காரணத்தால், பிடித்து வாலால் அடித்து கொட்டுவதில் அதற்கு சிக்கல்கள் உண்டு.)

தூத்துக்குடியில் வாழ்ந்த இறுதி எண்பதுகளில் கஞ்சா பழக்கம் எனக்கு அறிமுகமாகி, பின் 13 வருடங்களுக்கு தொற்றிக் கொண்டிருந்தது. கடவுள் நம்பிக்கையிலிருந்து வெளிவந்திருந்த அந்த கட்டத்தில், சிவமூலிகை என்றழைக்கப்படும் கஞ்சாவை புகைப்பதற்காகவே சிவன் கோவிலுக்கு செல்வதுண்டு. பிரதட்சணமாக வந்து கொண்டிருக்கும் ஆண்களுக்கும் பெண்களுக்கும், குறிப்பிட்ட இடத்தை ஆக்கிரமித்திருக்கும் பலமான கஞ்சா மணம் தினப்படி சுவாசத்தில் கலந்து பழக்கமாகியிருக்க வேண்டும். குறைந்த பட்சம் பீடி புகைப்பதாகவாவது தோற்றமளிக்கும் அந்த கஞ்சா புகைக்கும் காட்சியை கண்டு கொள்ளமாட்டார்கள். நாங்களும் யாராவது கடக்கும்போது கைகளுக்கிடையில் மறைக்கும் மரியாதையை செய்வதுண்டு. பிரச்சனை யாரும் செய்ததில்லை. கோவில் பணியாளர்கள், கோவில் வாசலை வசிப்பிடமாக கொண்டவர்கள் என்று பலரும் புகைக்கும் குழுவில் அடக்கம். ஒரு இளைய பட்டரும் சில சந்தர்ப்பங்களில் ஓரிரு இழுப்பு இழுத்துவிட்டு செல்வதுண்டு. சிவன் கோவில் பிரகாரம் கஞ்சா புகைப்பதனால் மட்டும் வித்தியாசப்படவில்லை. இன்னமும் சமூக வெளியில் அங்கீகாரம் பெற்றிராததனால், காதலை கள்ளத்தனமாக வைத்திருக்க வேண்டிய கட்டாயம் இருந்ததால், காதலர்கள் கூடுவதற்கு தேவையான மாலை இருட்டையும் அது அளித்தது. நகரில் பல இடங்களில் நெருக்கடி ஏற்படும் சில சீசன்களில் கள்ளசாராயமும் கிடைக்கும்; வாங்கி சிவன் கோவில் மூலை சுவரில் ஒண்ணுக்கு அடிப்பது போன்று நடித்தபடி, அந்த சில நிமிடங்களில் குடித்துவிட்டு சுவருக்கு பின்னால் எரிந்துவிட வேண்டும்.

ஒரு முன்பகல் வேளையில், கிடைத்த ஒரு நயம் சரக்கின் போதையுடன், மூடியிருந்த சன்னதிகளின் படிகளில் சாய்ந்து பேசிக்கொண்டிருந்தோம். சின்னதாக இடுப்பில் அரிப்பு, சிறிது நேரத்தில் மெல்லிய கடுப்பாக மாறியது. எறும்பு என்று நினைத்து பார்காமலேயே தட்டிவிட்டு பேச்சை தொடர்ந்தேன். ஒரு கால இடைவெளியில் கடுப்பு கவனத்தை கட்டாயமாக ஈர்க்கும் வலுவை அடைந்ததால் எழுந்துவிட்டு பார்த்தேன். ஒரு குட்டி தேள். ஒருமுறைக்கு மேல் கடித்திருக்க கூடும். தேள் என்று அறிந்தவுடன் கடுப்பின் காட்டம் உணரத் தொடங்கியது; ஆனாலும் வலி பெருசாக இல்லை. என்ன செய்வது என்று ஐடியா இல்லை. தேள் குட்டிக்கு என்னை கடித்ததில் போதையேறிவிட்டது போலும், அசையாமல் கிட்டதட்ட மயங்கிய நிலையிலிருந்தது. "அது செத்துரும்" என்றான் கஞ்சா தோழன் உறுதியாக. செத்ததா என்று பொறுத்திருந்து ஆராயாமல், தேளை வேறு எதுவும் செய்யாமல் நகர்ந்தோம். கடித்த இடத்தில் சுண்ணாம்பு வாங்கி தடவலாமா என்ற யோசனையையும் செயல்படுத்தாமல், வேறு இடத்தில் உட்கார்ந்து இன்னொரு பீடி போட தொடங்கினோம். கடுப்பு சற்று தொடர்ந்தாலும், அரைமணி நேரம் சற்று வியர்த்து விஷம் உடலோடு செமித்துவிட்டது. கஞ்சா சித்தனாக இருந்தபோது இப்படி தேள்களிடம் கூட கலங்கியிராதவனை, நடுத்தர குடும்ப வாழ்க்கையில் செட்டிலான பின் அல்ப எலிக்கடி அலைக்கழித்தது.

ஒன்றரை வருடம் முன்பு சாந்தோமில் வாழ்ந்த வீட்டின் தரையில் தூங்கி கொண்டிருந்த ஒரு இரவில், இடது கை நடுவிரலை தேர்ந்தெடுத்து எலி ஒன்று கடித்தது. முந்தய நாள் இரவிலேயே அது காது பக்கம் கத்திரி போட முயன்றதை பிறகே ஊகித்து அறிந்துணர்ந்தேன். விழித்து பார்த்ததில் கடித்த இடத்தில் துளி ரத்தம். எழுந்து சோப் போட்டு கழுவி விட்டு தூங்கிவிட்டேன். மறுநாள் டாக்டரிடம் போயே ஆகவேண்டும் என்று துணைவி வற்புறுத்தியதில், அருகில் இருந்த குழந்தைகளுக்கான டாக்டரிடம் சென்று, டெடனஸ் ஊசி, கையில் கட்டு, ஆண்டிபயாடிக் மாத்திரைகளும் எடுத்துக் கொண்டேன். ஒரு எலிக்கடிக்கு தேவைக்கு அதிகமாக பாதுகாப்பு சிகிச்சை செய்துகொண்டுவிட்டதாக எனக்கு தோன்றியது. ஆனால் மறுநாள் வேலையிடத்தில் பெங்காலி நண்பன் தீர்த்தோ 'இது இப்படி எளிதாக எடுத்துக் கொள்ள கூடிய சாதாரணம் விஷயம் அல்ல' என்றான். 'ஆண்டிபயாடிக் போதாது, எலியிடம் ராபீஸ் இருக்கலாம்' என்றான். இதை சொல்லிவிட்டு கல்கத்தாவில் தான் சந்தித்த, முதலிலேயே கவனிக்கப்படாமல் பிரச்சனை முற்றிய ராபீஸ் நோயாளிகளை பற்றி சொல்லத்தொடங்கினான். அவை எல்லாம் நாய்கடி உதாரணங்கள் என்றாலும், வாய் உள்ள எல்லா மிருகத்திற்கும் பொருந்தும் என்றான். எனக்கு நான் எலி போல ஒடி, கத்தி சாக நேரிடுமே என்று பயம் வரும் அளவில் விரிவாக பல கேஸ்களை பேசினான். ஜெமினி படத்தில் கலாபவன் மணி ஜெயிலில் விக்ரமுடன் சண்டையிடும் கட்டத்தில் எலியாக மிமிக்ரி உருவெடுத்து நடித்த காட்சிகள் மனதில் வந்து போனது.

அவனே சென்னையில் ரேபீஸ்க்கு சிகிச்சையளிக்கும் மருத்துவமனைகளை இணையத்தில் தேடி, தொலைபேசி விசாரித்தான். வாக்சின் பெயர்களை அவனே சொல்லி விசாரித்தது மருத்துவமனை பணியாளர்களுக்கு விளங்கவில்லை. நாய் கடிக்கு உள்ள அதே வாக்சின்தான் எலிக்கடிக்குமா என்ற என் சந்தேகத்தை அவன் பொருட்படுத்தவில்லை. இப்போழுதெல்லாம் மருத்துவம் முன்னேறிவிட்டது, ஒரே ஒரு ஷாட் போதும் என்றான். எலிக்கடி, அதற்கான ரேபிஸ் வாக்சின் தங்களிடம் இருக்கிறதா என்று தொலைபேசி எதிர்முனையில் தெளிவான பதில் இல்லை.

தொடர்ந்த செமினாரில் மற்ற கலிக்களிடம் விஷயம் சென்றது. செமினாரில் பேசவேண்டிய விஷயத்தை தொடங்காமல் எல்லோரும் என் எலிக்கடி குறித்து தெளிவில்லாமல் கொஞ்ச நேரம் பேசினார்கள். ஒரு விஞ்ஞானி நண்பர் சுண்டெலி என்கிற வகையாக இருந்தால் ஆபத்து எதுவும் இருக்க வாய்பில்லை, மற்ற எலிகள் மட்டுமே ரேபிஸ் இருக்க வாய்புள்ளது என்றார். அவர் அந்த தகவலை எங்கிருந்து பெற்றர் என்பதை குறிப்பிடவில்லை. ரேபிஸ் கிருமி கலந்த ரத்தமே என் உடலில் ஒடுவதான உணர்வு என்னையறியாமல் தொற்றியிருந்தது. என் எச்சிலை முழுங்கவே தயக்கமாக இருந்தது. அந்த எலி எங்காவது இறந்து கிடக்கிறதா என்று கவனிக்க வேண்டும் என்றான் தீர்த்தோ. எனக்கு சுஜாதா எழுதிய 'குதிரை கிச்சாமி' என்ற கதை நினைவுக்கு வந்தது. ஒருவழியாக செமினார் தொடங்கி முடிந்தபின் மீண்டும் இதை பற்றி அவர்களே பேசினார்கள். நான் உடனே கடிபட்ட இடத்தை கழுவிவிட்டதை சொன்னேன்; அது போதாது என்றார்கள். ஏற்கனவே டாக்டரிடம் போய் வந்ததை சொன்னேன்; ஒரு பீடியாட்ரிக்ஸ் டாக்டருக்கு எலிக்கடி குறித்து தெரிய வேண்டிய அவசியம் இல்லை என்றார் நண்பர். டாக்டர் என்பவர் ஏற்கனவே தன் அனுபவத்தில் இருக்கும் உதாரணங்களை கொண்டு இயங்குபவர், ஏற்கனவே ஒரு எலிக்கடி கேஸை அவர் எதிர்கொண்டிருந்தால் ஒழிய அவரை நம்ப தகுந்த காரணம் இல்லை என்றார். நான் இன்னொரு டாக்டரை பார்க்க வேண்டிய அவசியத்தை சொன்னார்கள். அந்த இன்னொரு டாக்டருக்கு எலிக்கடி சிகிச்சை செய்த அனுபவம் இருக்கிறதா என்று எப்படி அறிவது என்ற கேள்வியை நான் கேட்கவில்லை.

என்னுடன் மருத்துவமனைக்கு வந்தே தீருவதாக இருந்த தீர்த்தோவை ஒருவழியாக தவிர்த்து, வீட்டிற்கு வந்து துணைவியிடம் எல்லாவற்றையும் சொன்னவுடன் கலவரம் வீட்டிலும் பற்றிகொண்டுவிட்டது. இஸபெல் மருத்துமனையில் மீண்டும் எலிக்கடி குறித்து (எந்த வார்ட் என்று) ஏற்படகூடிய எல்லா குழப்பங்களையும் குழம்பி, ஒருவழியாக அங்கிருந்த ட்யூட்டி டாக்டரிடமே அனுப்பினார்கள். அவர் ரேபிஸ் நாய்மூலம் மட்டுமே பரவும், எலி பூனை போன்ற விலங்குகளால் ஆபத்து எதுவும் இல்லை. நான் அடுத்த நாளே எடுத்து கொண்ட சிகிச்சை போதுமானது என்றார். ஆனால் எலி வீட்டில் எங்காவது சிறுநீர் கழித்திருந்தால் அதன் மூலம் லெப்டோஸ்பைரசிஸ் வர வாய்புள்ளது, அதுவும் எலி கடிப்பதன் மூலம் வராது என்று சொன்னார். மழைக்காலத்தில், பழமையான அந்த வீடு பல இடங்களில் ஈரமாகியிருந்த அந்த பருவத்தில், எலி மூத்திரத்தை நான் எப்படி அடையாளம் காண்பது?

ஆனால் மறூநாள் மீண்டும் தீர்த்தோ புதிய சந்தேகங்களையும் கிலிகளையும் கிளப்பினான். எனக்கு வேறு ஒரு நண்பனின் நினைவு வந்தது. (எல்லாவற்றையும் எதிர்மறையாகவே பேசும் மிகுந்த அவநம்பிக்கையாளன் அவன்; அவனிடம், அனில் கும்ளே 10 விக்கட்டையும் எடுத்த வரலாற்று நிகழ்வை சொன்னபோது , உடனடியாக 'He can't do it again' என்றான்.) ஒருவழியாக ஒரு மூத்த பேராசிரியர் கிண்டியிலிருக்கும் கிங்க்ஸ் இன்ஸ்டிடியூட்டிற்கு போன் செய்து அதன் தலைமை பொறுப்பாளரிடம் பேசி, ஏற்கனவே இஸபெல் மருத்துவமனை டாக்டர் சொன்னதையே அவரும் சொல்வதை உறுதி செய்து சொன்னார். ஆனால் மனமூலையில் சந்தேகம் மிதமிருக்கும் வகையில் தீர்த்தோ கிலியாக்கியிருந்தான். அதற்கு பிறகு நான்கு மாதங்கள் கழித்தும் எனக்கு ஒன்றுமே நிகழாததால் அந்த எலியிடம் ரேபிஸ் கிருமி இருந்திருக்க வாய்ப்பு இல்லை என்று அதிநிச்சயமாக முடிவு செய்துகொண்டேன்.

கஞ்சா பழக்கம் எனக்கு தொடர்ந்திருந்து, தேளும் பாம்பும் கஞ்சா கிராக்கியை கடித்தால் செத்து போகும் என்கிற மரபான நம்பிக்கையின் படி எலி செத்துபோவதாக புனைந்தால், இந்த பதிவு எப்படி உருமாறியிருக்கும் என்று என் யோசனைக்கும் உங்கள் வாசிப்புக்கும் விடுகிறேன்.

8 comments:

 1. சுவராசியமான கட்டுரை ரோசா. ஒரு வகையில் நவீன மருத்துவம், முன்னெப்போதையும் விட, நம்மை மிகவும் பாதுகாப்பற்ற ஒரு சூழ்நிலையிலேயே தொடர்ந்து தக்கவைத்திருப்பதாகவே தோன்றுகிறது. பிணிகள் குறித்த பல்வேறு தகவல்கள் (பெரும்பாலும் புள்ளிவிபரங்கள் போன்ற துணுக்குகள் - அறிவு அல்ல) நமக்குத் (மருத்துவர்களையும் சேர்த்துத்தான்) தெரியுமென நினைக்கிறோம். அதற்கு உங்கள் பெங்காலி அலுவலக நண்பர் ஒரு சிறந்த உதாரணம்.
  ஒருவேளை இப்போதெல்லாம் எனக்கு நவீன மருத்துவம் (அறிவியல்) குறித்த சந்தேகங்கள் அதிகமானதால் கூட உங்கள் கட்டுரை அத்தகைய பொருள் படும்படி அமைந்திருப்பதாக நான் கருதுவதற்கு இடமுண்டு.

  ReplyDelete
 2. நவீன மருத்துவம் செய்த சாதனைகளை நாம் ஒதுக்க முடியாது. குறிப்பாக சாவு, அதிலும் குழந்தை சாவு என்பது நடைமுறையாக இருந்த நிலையை முற்றிலும் மாற்றியது. அதே நேரம் நீங்கள் சொல்லும் எல்லா பிரச்சனைகளும் உண்டு. அதை மருத்துவம் முற்றிலும் முதலீட்டியம் சார்ந்து இயங்குவதானால் நிகழ்வதாக நினைக்கிறேன். இது குறித்து எனக்குள்ள சில கருத்துக்களையும், இன்னும் சில மருத்துவ அனுபவங்களையும் எழுதும் நோக்கம் உண்டு. பின்னூட்டத்திற்கு நன்றி.

  ReplyDelete
 3. அடப்பாவி! முதல்வரி ஒரு புரட்சிப்போஸ்ரரோடு போட்டிருக்கவேண்டிய தடாலடிப்பின்னவீனத்துத்தோழர்ப்பதிவல்லவா? இப்பிடியா, கஞ்சா அடிச்சேன்; தேளை மிதித்தேன் என்பதாகத் தமிழிலக்கிய உலகத்துள்ளே எழுதுவது :-(

  ReplyDelete
 4. பெயரிலி, பின் நவீனத்துவ கலகர்களை அவ்வளவு எளிதாக நம்பி புரட்சியில் இறங்க முடியாது. அவர்கள் செய்தால் சப்வெர்ஷன்; என்னை மாதிரி ஆளை பிரச்சனை என்று வந்தால் கஞ்சா கிராக்கி என்று திட்டவும் தயங்க மாட்டாரகள்!

  ReplyDelete
 5. Roza, Did you receive my second comment?

  ReplyDelete
 6. //Did you receive my second comment?//

  இல்லை. மின்னஞ்சல், மற்றும் பிளாகர் கணக்கு இரண்டையும் பார்த்துவிட்டேன். நீங்கள் எழுதி இரண்டாவது பின்னூட்டம் எதையும் நான் பார்க்கவிலை. (பார்த்து தவறாக நீக்கவும் இல்லை.) ஆச்சரியமாக இருக்கிறது.

  ReplyDelete
 7. கொஞ்சம் சாவகாசமா திருப்பி எழுதி அனுப்புகிறேன். நான் அதை எனது கணினியில் சேமிக்கவில்லை. ஆயினும், நீங்கள் எழுதிய கட்டுரைக்கு எனது பின்னூட்டம் வேறு கோணத்தை (தேவையற்ற) அளிக்கிறது என்ற எண்ணமும் எனக்கு உள்ளது.

  ReplyDelete
 8. உங்கள் பின்னூட்டத்தை நிதானமாக (கட்டாயமாக) எழுதுங்கள். ஆனால் தொலைந்து போன மாயம்தான் எனக்கு புரியவில்லை. (உங்கள் இணைய இணைப்பில் ஏதாவது பிரச்சனை?)

  வேறு யாருக்கும் இப்படி நடந்திருக்கிறதா என்று தெரியவில்லை.

  ReplyDelete