Monday, December 14, 2015

கடமை

சென்னையில் பாதி இடங்களில் நீர் இன்னமும் வடியாமல் இருப்பதாக வாசிக்கிறேன். ஆனால் நான் இன்று சுற்றிய இடங்கள், நான்கு நாட்கள் முன்னால் நீர் சூழ்ந்திருந்தது என்கிற யதார்த்தம் கெட்ட கனவாகி, டெசிபல் நாராசத்துடனான போக்குவரத்துடன், சிரித்து பேசிக்கொண்டிருக்கும் மனிதர்களுடன், கடைகள் என்றைக்குமான பரபரப்புடனிருக்க இயங்கிக் கொண்டிருந்தது; இது ஒரு பக்கம் ஆசுவாசாசத்தை அளித்தாலும், இன்னொரு பக்கம் கவலையை தந்தது. இந்த அனர்த்தம் புவி சூடேற்றம் தொடங்கி, நீர்நிலை மேலாண்மை வரையான விவாதத்தை பொதுக்களத்தில் பெரிதாக கிளப்பும் என்று சிலர் நம்பினார்கள்; ஆனால் இந்த விரைவான இயல்பு திரும்பல், பழையபடி அதை வெட்டிப்பேச்சுகளாக ஒதுக்கி, அடுத்த பேரழிவுவரை தற்போதய பேரழிவுக்கான காரணச் செயல்களையே எந்த உறுத்தலும் இன்றி தொடரும் நிலைக்கு திரும்பியாகி விட்டதோ என்று நினைக்க வைக்கிறது.
நான்கு நாட்கள் முன்னால் படகில் மட்டுமே சென்று கொண்டிருந்த பகுதிகளில், ஏதோ ஆபத்தற்ற ஒரு மழை பெய்தது போன்ற சகதியும் ஈரமும் சில இடங்களில் மட்டும் இருந்தன. உதாரணமாக வேளச்சேரி ராம்நகரில் குப்பைகள் குவிந்து கிடக்கும் காட்சிகள் கூட இன்றி, நண்பர் மிதிக்க இருந்த பாம்பு சர்வ சாதாரணமாக ஒரு அடுக்ககத்தினுள் நுழைந்த நிகழ்வு தவிர, வேறு தடயங்கள் இன்றி இருந்தன.
ஆனால் தண்ணீர் நீங்கிய மற்ற பல இடங்களில் எல்லாவகை குப்பைகளும் நீக்கமற குவிந்து கிடப்பது அனர்த்தம் நடந்திருப்பதை தெரிவிக்கிறது. இயல்பு வாழ்க்கைக்கு மீண்டாலும் இந்த குப்பைகளின் இருப்பும், அதன் விளைவாகப்போகும் நோய்கள் குறித்த பயமும் மக்களிடையே உள்ளது. குப்பைகளை அப்புறப்படுத்தும் வேலையை அரசு துரிதமாக செய்ய வேண்டும் என்பது ஒருவகையில் நியாயமான எதிர்பார்ப்புதான். ஆனால் இந்த எதிர்பார்ப்பை அரசு அப்படியே நிறைவேற்றுவது என்பது என்ன? துப்புரவை தொழிலாக கொள்ள நேர்ந்த, அவ்வாறு சமுகத்தால் நிர்பந்திக்கப்பட்ட குறிப்பிட்ட இன மக்களை கொண்ட துப்புரவு தொழிலாளர்களை பணியிலிறக்கி செயல்படுத்துவது. இந்த அனர்த்தத்தில் எல்லோரையும் விட அதிக பாதிப்புகளை கொண்ட மக்கள், அதிகமாக இழப்பை சந்தித்த மக்கள், தங்கள் இடத்தை விட்டு இங்கு வந்து சுத்தப்படுத்தும் வேலையை செய்யப்போகிறார்கள். தவ்ஹீத் ஜமாத் போன்ற அமைப்பினர் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டும், மேலும் ஈடுபட போவதாக அறிவித்தும் இருப்பதும் மரியாதைக்கும் பாராட்டுக்கும் உரியது. ஆனால் நடுதர உயர்தர வகுப்பினர் இருப்பிடங்களை அரசோ, அல்லது வெளியில் இருந்து வரும் தன்னார்வலர்களோ சுத்தப்படுத்தி நிலைமையை இயல்பாக்கினால், இந்த அனர்த்தத்தில் எந்த பாடமும் பொறுப்பும் யாருக்கும் விளையப்போவதில்லை.
சென்னை மாநகராட்சி இணை ஆணையர் தூப்புரவு வேலைக்கான தன்னார்வலர்களுக்கு விடுத்திருந்த அழைப்பை கண்டேன். நல்ல விஷயம் என்றாலும், குறிப்பிட்ட தன்னார்வலர்களுக்கு உபகரணங்களை வழங்கி சென்னை முழுவதும் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபடுத்துவதை விட, அந்தந்த பகுதி மக்களை, அவர்கள் பகுதிகளை அவர்களே சுத்தப்படுத்த நிர்பந்திக்க வேண்டும். குறிப்பாக நடுதர மற்றும் உயர் வகுப்பினர் வாழும் பகுதிகளில், சுகாதாரக்கேடுகளை விளக்கி, அவர்களே இந்த வேலையில் ஈடுபடுவதை நிர்பந்திக்க வேண்டும். மழைநீர் வெளியில் அடித்து கொண்டு வந்ததை விட, வீட்டினுள் நாசமான பொருட்களே வெளியில் எறியப்பட்டு, தெரு குப்பை மேடுகளால் நிரப்பியுள்ளன. உரிய உபகரணங்கள் கொண்டு சுத்தம் செய்வது என்பது சில மணி நேரத்தில் பழகி நிபுணராகிவிடக்கூடிய ஒரு வேலை. இந்த சந்தர்ப்பத்திலாவது அதை அனைவரும் செய்ய வேண்டும். குறிப்பிட்ட வேலைகளை சாதிய கடமையாக்கியுள்ள சமுகத்தில், சமூக பராமரிப்பில் அனைவரும் தம்தம் கடமையை செய்யவேண்டும் என்கிற உணர்வை இந்த சந்தர்ப்பத்திலாவது ஏற்படுத்த வேண்டும்.

No comments:

Post a Comment