Tuesday, December 29, 2015

கணிஞர்-விவாதம்-முடிவுரை

முடிவுரை: முதலில் மணிவண்ணன் நினைப்பது போல் அவர் காயின் செய்த ஒரு வார்த்தையை திருடுவது எனக்கு நோக்கமல்ல; எவ்வித உணர்வு வயப்பட்ட ஓட்டுதலும் எனக்கு அந்த வார்த்தையின் மீது மட்டுமல்ல, கணிதம் மீதே கிடையாது. தமிழில் நவீன கணிதம் குறித்து யாரும் எழுதப்போகிறார்களா என்பதே சந்தேகம்; குறிப்பாக நான் எழுதும் சூழல் அமையுமா என்பது தெரியாது. பத்ரி பதிவில் வாசித்த போது கவர்ச்சியாக பிடித்தமாக இருந்ததால் எடுத்து பலுக்க முனைந்தேன்; முன்மொழிந்தேன்; அவ்வளவே. மற்றபடி நான் எங்காவது வாசித்திருக்கலாம்; மனதில் பதியும்படி இணையத்தில் பத்திரிகைகளில் வெகுஜன புழக்கத்தில் கண்டதில்லை. சண்டை போட்டு அவ்வார்த்தையை அபகரிக்கும் ஆசையெல்லாம் நிச்சயம் இல்லை. இரண்டாம் முறை எழுதியதும் அறிவுவிவாதத்திற்கான் அழைப்பே அன்றி, ஈகோ சார்ந்த சண்டைக்காக அல்ல.
ஏன் அந்த வார்த்தையை நாடினேன் என்பது வேறு எதற்காவது பயன்படலாம் என்பதால் இந்த பதிவில் சொல்கிறேன். கவிஞன் போன்ற ஒரு படைப்பூக்கத்தன்மையை, கணிஞன் என்ற வார்த்தை உணர்த்துவதால்தான் அதை நாடினேன். அதற்கு கணிதம் படைப்பூக்க வெளி -ஒரு creative space- என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
நிரல் எழுதுபவர்களுக்குத்தான் கணிஞர் என்பது பொருந்தும், கணிதவியலளர்களுக்கு அது பொருந்தாது, ஏனெனில் நிரல் எழுதுவது கலை, கணிதம் கலையல்ல என்றெல்லாம் மணி சொல்வது கொஞ்சம் கூட ஏற்கமுடியாதவை; மாற்றி வாதிடவே அதிக சாத்தியமுள்ளவை. கலை என்பது என்னவென்பது எளிதாக வரையறுக்கக் கூடியதல்ல; வரையறுப்பதில் அழகியல் சிக்கல் மட்டுமின்றி அரசியல் சிக்கலும் உள்ளது. இது குறித்த தூய்மைவாதங்களை அரசியல்ரீதியாக எதிர்ப்பவனான நான், கணிதம் கலை, நிரல் எழுதுவது கலையல்ல என்று சொல்லமாட்டேன். ஆனால் சில தீவிர வித்தியாசங்கள் படைப்பூக்கரீதியில் இரண்டிற்கும் இருப்பது தெளிவு. ஒரு ஓவியர் கலைஞர், கட் அவுட் வரைபவர் கலைஞரல்ல என்று சொல்வது பிரச்சனைக்குரியதுதான். ஆயினும் இரண்டிற்கும் தீவிர வித்தியாசம் இருக்கிறது. பானை செய்வதும் நிச்சயம் கலைதான்; சிற்பம் வடிப்பது அதைவிட படைப்ப்பூக்கம் கொண்டதாக சிலரால் நம்பப்படுகிறது. ஒரு நவீன ஓவியம் இன்னமும் படைப்புதன்மை கொண்டதாக நினைக்கிறார்கள். சினிமாப்பாடல் பாடும் எஸ்பிபி ஒரு கலைஞர்தான்; இளையராஜாவைத்தான் இசைஞர் என்பார்கள். மொசார்டின் படைப்பூக்கம், பிக்காசோவின் படைப்பூக்கம் நிச்சயம் தமுஎச பாடலில் உள்ள படைப்பூக்கத்தில் இருந்து வேறுபட்டதுதான்.
அதே போல் கணினியில் நிரல் எழுதுவது கலையல்ல என்று சொல்ல மாட்டேன்; ஆனால் கணிதத்தில் புதிய தேற்றத்தை உருவாக்கி நிறுவுவது போன்ற ஒரு படைப்பூக்க செயல் அல்ல. கலை என்பது அழகியலாலும், படைப்பூக்கத்தாலும் நிர்ணயிக்கப்படுவதே அன்றி அது தர்க்க பூர்வமானதா, பலவகை வாசிப்புகள் சாத்தியமா என்பதால் அல்ல. கிறுக்கி வைத்தால் அல்லது உளறினால் கூட பல நூறு வாசிப்புகள் உருவாகலாம். சினிமாவிற்கு பாட்டெழுதுவதும் கலைதான். ஆனால் நவீன இலக்கியத்தில் கவிதை என்று குறிப்பது வேறு. அந்த வகையில் பாடலாசிரியனை சிலர் கவிஞன் என மாட்டார்கள். கவிஞன் என்ற சொல்லுக்கு இணைவாக, கணிதத்தில் படைப்பவரை விளிக்க, கணிஞன் என்ற வார்த்தை பொருத்தமானது என்று -மற்ற வில்லங்கங்கள் அதில் இருப்பது சுத்தமாக தெரியாததால் - நினைத்தேன்.
அருள் கணிஞர் என்பது கணிதம் தரும் அர்த்தத்தை குறுக்குவதாக சொல்வதை நான் ஏற்கனவே ஏற்றுக் கொண்டேன். அது தமிழின் பிரச்சனை. அவரும் கணிஞர் என்ற வார்த்தையை கணினி விஞ்ஞானிக்கு மட்டுமே பொருந்துவதாக சொல்கிறார். மணிவண்ணன் குறிப்பிடுவது போல் கணினி நிரல் எழுதுபவர்களுக்கும், கணினி பொறியாளர்களுக்கும் அவர் அதை பொருத்தவில்லை. இதையே நானும் சொன்னேன். ஆனால் கணிதவியலாளர்க்கு பொருந்தாது என்பதற்கான காரணம், ஏற்கனவே கணினியாளர்களுக்கு பலுக்கிவிட்டதை தவிர வேறு ஏதும் புலப்படவில்லை.
கணிதவியலாளரை எண்ணர் என்பது எந்த விதத்திலும் பொருத்தமானது அல்ல. number theoryயை எண்ணியல் எனலாம்; ஆனால் ராமானுஜனைக்கூட எண்ணர் என்று கூற முடியாது; ஏனெனில் எண்வெளியின் சாத்தியக்கூறுகளை அவரது பங்களிப்புகள் தாண்டியது. (மேலும் ராமானுஜனை மட்டும் வைத்து கணிதத்தை பேசுவது தமிழர் தலைவிதி; கணிதத்தின் தலைவிதியல்ல.) நிச்சயமாக (கணினியியல் உட்பட்ட) பெருங்கடலாக இருக்கும் கணிதத்தை எண் கொண்டு குறிக்கலாகாது. அடுத்து கணிதர் என்பதில் உள்ள பிரச்சனை அது வானியலாளர்களையும், வான்சோதிடர்களையும் குறிப்பதாலா என்றால், சந்தேகமின்றி அதுதான் காரணம் என்று தெளிவாக சொல்லியுள்ளேனே. ஒரு கலைச்சொல்லாக மட்டுமின்றி, சமூகத்திலேயே கணிதர் பஞ்சாங்கம் பார்ப்பவருக்கான பெயராக புழங்குவதால்தான் இந்த பிரச்சனை. நவீன கணிதத்தை ஆங்கிலத்திலும் பிரஞ்ச்சிலும் mathematics என்பது போல் இத்தகைய குழப்பமின்றி தமிழில் கையாள முடியாததுதான் பிரச்சனை.
logic என்பதற்கு அளவையியல் என்று தமிழ் சிறுபத்திரிகைகளில் -குறிப்பாக நிகழ்-  பயன்படுத்தியுள்ளதை அறிவேன். எனக்கு அதை பல காரணங்களால் ஏற்கமுடியவில்லை. தர்க்கம் என்ற சொல்லே மேலானது. ஆயினும் இப்போதைக்கு கணிதம் என்பதே mathற்கு பொருத்தமானது, கணிஞர் ஏற்கனவே பலுக்கப்பட்டு விட்டதால், கணிதவியலாளர் என்பதே mathematicianற்கு வாய்க்கப்பெற்றது என்று ஏற்றுக்கொள்கிறேன். ஆமென்!

No comments:

Post a Comment