Saturday, December 19, 2015

நம்பிக்கையும் மனித நேசமும்

/மனிதநேயம் வரவைக்க தான் இறைவன் இந்த பேரிடரை ஏவியிருக்கிறார்ன்னு உமாஷங்கர் IAS சொல்லியிருந்தா , இங்க இருக்க யோக்கிய சிகாமணிகள் என்ன பேசியிருப்பாங்கன்னு நல்லா தெரியுமே:)/ என்று ஒருவர் எழுதியிருந்ததை சற்று முன் பார்த்தேன். மனுஷ்யபுத்திரன் உட்பட பல அறிவாளிகள் இந்த கேள்வியை கேட்டுள்ளதால், இதை எதிர்கொண்டு பதில் சொல்வோமே என்று இந்த பதிவு.
முதலில் இந்த கருத்து கந்தசாமிகளின் -அதிலும் ஃபேஸ்புக் கருத்து கந்தசாமிகளின் - பிரச்சனை என்னவெனில், மிக மேலோட்டமாக, ஒரு தர்க்கம் என்பது போல தோன்றும் ஒன்று மனதில் பட்டதும் அதை ஒரு கருத்தாக மாற்றிவிடுவது; குறைந்த பட்சமாக அந்த தர்க்கம் உதாரணத்துடன் பொருந்துகிறதா என்று பரிசீலிக்கும் பொறுமையும் பயிற்சியும் கிடையாது என்பதுதான். உமா ஷங்கர் ஒருபோதும் /மனிதநேயம் வரவைக்க தான் இறைவன் இந்த பேரிடரை ஏவியிருக்கிறார் / என்று சொல்லமாட்டார்; சொல்லவில்லை. ஏசு மீதான நம்பிக்கையின்மையால் நடந்ததாகத்தான் சொல்கிறார். இது மற்ற மதத்தினரை கோபமுற செய்வதில் ஆச்சரியம் இல்லை. ஆனால் விஷயம் என்னவென்றால் ஒரு நம்பிக்கையாளனாக, அவரது நம்பிக்கைக்கு முழு நேர்மையுடன் அவர் அவ்வாறுதான் சொல்லமுடியும். ஆனால் அந்த நேர்மை மத நல்லிணக்கத்திற்கு விரோதமானது; அந்த வகையில் அது மானுட விடுதலைக்கு விரோதமானது.
இதேபோல காஃபிர்களுக்கு கிடைத்த தண்டனை, ஒரு பாலுறவினர் மிகுந்ததால் ஏற்பட்டது, சங்கராச்சாரியாரை அவமதித்ததால் நடந்தது என்று எது சொன்னாலும் அது மானுட விரோதமானது என்ற முடிவுக்கு அதனதன் தர்க்கத்தில் நாம் வரலாம்.
இளையராஜாவும் ஒரு நம்பிக்கையாளர்தான்; எல்லா நம்பிக்கையளனும் இயற்கையின் செயலை கடவுள் செயலாகத்தான் கற்பிக்க வேண்டியுள்ளது; ஆனால் அவர் இந்துப் பன்மை மரபில் வந்த நம்பிக்கையாளர் என்பதால், அவர் மற்ற நம்பிக்கையை முன்வைத்து, குறைந்த பட்சம் கடவுள் நம்பிக்கை இல்லாத நாத்திகர்களால் இந்த பேரழிவு நிகழ்ந்ததாக கூட சொல்லவில்லை. மனிததன்மை இல்லாததால், நமக்கு மனித தன்மையை வரவழைக்க நமக்கு ஆண்டவன் இந்த தண்டனை அளித்ததாக கூறுகிறார். கவனிக்க வேண்டும், அவர் மற்றவர்களுக்கு அளித்த தண்டனையாக இதை சொல்லவில்லை; தன்னையும் சேர்த்து தனக்கும் கிடைத்த தண்டனையாக சொல்கிறார். இன்று வெளிபட்ட மனிதாபிமானத்தை முன்வைத்து -தானும் மனிதாபிமானத்தை காட்ட நேர்ந்ததை -இந்த பேரழிவின் நண்மையாக கற்பித்து, இந்த நோக்கத்தில் இறைவன் அளித்த தண்டனையாக சொல்கிறார்.  ஒரு நம்பிக்கையாளனாக  இளையராஜா சொல்வதை நான் கொஞ்சம் கூட ஏற்கவில்லை. அவரது இசையும், இசை சார்ந்த கருத்துரைப்புகளும் மட்டும்தான் எனக்கு முக்கியம். என்றாலும் அவரது இந்த கருத்து உதிர்ப்பு எந்த வகையிலும் மானுட விரோததன்மை கொண்டது அல்ல, மாறாக மனித நேயம் சார்ந்தது என்பதுதான் என் பார்வை.
மற்றபடி புவி சூடேற்றத்தினாலும், நீர்நிலைகளின் உணர்வை மதிக்காததாலும், சரியான வடிகால் ஏற்பாடு செய்யாததாலும், இதற்கெல்லாம் மேலாக இந்த அரசின் மடத்தனத்தாலும் இது நிகழ்ந்தது என்பது என் கருத்து. எனது இந்த கருத்தை இசையமைப்பாளரான இளையராஜா அதே போல அச்சுபிசகாமல் சொல்லித்தான் ஆகவேண்டும் என்று, அறிவாளியாக தன்னை கற்பித்துக் கொண்ட சில முட்டாள்கள் கருதுவது போல, நான் நினைக்கவில்லை. அவர் எதை நமக்கு இதுவரை அளித்துள்ளாரோ அதுவே தமிழகத்தின் தகுதி மீறீயது.

No comments:

Post a Comment