Monday, December 14, 2015

16, நவம்பர்

பாரிசுக்காக அழுகிறவர்கள் ஏன் பெய்ரூட்டை பற்றி பேசவில்லை என்று உலகத்தை பார்த்து கேட்பது நியாயம். என்னை பார்த்து 'நீ ஏன் இதுக்கு மட்டும் போட்டோக்கு பெயிண்ட் அடிச்சிருக்கே' என்று 20 வருஷ பழக்கமான நண்பன் கேட்டா புதுசா என்னத்தை சொல்ல? நம்ம சரக்கை சமயம் பார்த்து நம்ம பக்கமே திருப்பினால், நீட்டி முழக்கி பதில் தர முடியாது. இதில் 2008 மும்பையுடன் தார்மிகமாக நின்று யாரோ ஈமெயில் அனுப்பியபோது, ஈழ அவலத்தை சுட்டி குதர்க்கமாக நான் பேசியதையும் முன்வைத்து கேள்வி. உலகத்துக்கு ஆயிரம் ஹிபாக்ரசி இருக்கலாம்; நம்ம தர்க்கம் ரொம்ப எளிமையானது.
பதினேழு வயதில் சிக்கன் முதன் முதலாக சாப்பிட தொடங்கிய போதும், பின் ஆடு, மாடு, மீன், பன்னி என்று தொடர்ந்து, வாய்ப்பு கிடைத்த போது பல்லி, முதலை தின்ற போதும் எந்த அறப்பிரச்சனையும் ஏற்படவில்லை; தவிர்க்க சாத்தியமுள்ளது என்றாலும் உணவின் தேர்வையும், உயிரினங்கள் மீதான அபிமானத்தையும் குழப்பிக் கொண்டதில்லை. ஆனால் முயல் கறியை எதிர்கொண்டபோது (முதன் மூன்று முறைகளாக) உண்ண மனம் வரவில்லை; உண்ணவில்லை. மற்ற பிராணிகளுக்கு இல்லாத சலுகை முயலுக்கு மட்டும் ஏன்?
தர்க்க உதாரணத்தை உவமை போல அப்படியே ஒப்பிட்டு கொள்ளக் கூடாது. ஃபிரான்ஸ் கனவு தேசம் மட்டுமல்ல; காதலிக்கும் தேசம்! பாரிஸ் மீதான தாக்குதல் அவர்களிடம் காதலிக்க கற்றுக் கொண்ட சுதந்திரம், கலை, சகோதரத்துவம். பண்மைத்துவம், அறிவு எல்லாவற்றின் மீதான தாக்குதல். மற்ற செய்திகள் பாதிப்பவை; அல்லது அன்றாட பாதிப்பில் பழகி அலுத்துவிட்டவை. இது தனிப்பட்டு உணரும் வார்த்தையில் அடங்கா வலி.

No comments:

Post a Comment