Monday, December 14, 2015

எதிர்வினை

(7, ஜனவரி அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது)

(நாளை எழுதலாம் என்று இருந்தேன்; தூக்கம் வராததால் இப்பொழுதே;
Badri Seshadri பதிவில் என் பின்னூட்டங்களை பார்க்கவும்.)
பிஜேபி ஆட்சிக்கு வரும்போதெல்லாம் திகிலூட்டும் பல கூத்துக்கள் அரங்கேறும்; ஒப்பீட்டளவில் அவற்றில் ஆபத்து குறைந்ததாக பண்டைய இந்தியாவில் இன்றய நவீன அறிவியல் அறிவுக்கூறுகளை கண்டுபிடிக்கும் அகழ்வாராய்ச்சிகளை சொல்லலாம். 1999இல் அசோக் சென் என்ற (பத்ரிக்கு பிடித்த மாதிரி சொல்லவேண்டுமானல் உலகத்தரத்தில்) முக்கியத்துவம் வாய்ந்த அறிவியலாளருக்கு ஏதோ ஒரு பரிசு வழங்கும் விழாவில் முரளி மனோகர் ஜோஷி ̀ஏற்கனவே வேதங்களிலும் உபநிதஷத்களிலும் சொல்லப்பட்டவைகளைதான் இன்றய விஞ்ஞானிகள் மறு கண்டுப்பிடிப்பு செய்வதாக சொன்னார். மேடையில் இருந்த அசோக் சென் எதிர்வினையாக ஒரு வார்த்தை சொல்லாதது (அல்லது சொல்லி பதிவாகாதது) பற்றி அன்று ரொம்ப புலம்பிக்கொண்டிருந்தேன். இன்று இது போன்றவைகள் குறித்த பெரிதாக கவலைப்பட ஏதுமில்லை என்று தோன்றுகிறது. யாரும் இந்த காமெடிகளை சீரியசாக எடுக்க போவதில்லை. பண்டைய இந்தியாவின் நியா யமான பங்களிப்புகளையும் பீலா என்று புறம்தள்ளவே இந்த மிகைப்படுத்தல்கள் உதவும் என்று அவர்களுக்கு புரியவில்லை. ஆகையால் உண்மையான தேசாபிமானம் கொண்டவர்கள் இந்த காமெடி மிகைப்படுத்தல்களைத்தான் எதிர்க்க வேண்டும். அந்த வகையில் பி.ஏ.கிருஷ்ணன் தமிழ் இந்துவில் எழுதியுள்ள கட்டுரை சரியான எதிர்வினை. அதே போன்ற நவீன மனதுடன் இந்திய அறிவியல் மீதான கரிசனத்துடன் பத்ரியும் பதிவு எழுதியுள்ளார். ஆனால் அவர் தன் எல்லைக்குள் நிற்காமல் பல தடாலடி தீர்ப்புகளையும் தீர்வுகளையும் தருகிறார், அதை நம் ஃபேஸ்புக் பொதுஜனங்களும் அறிஞர்களும் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை கண்டபின் இந்த பதிவு.
பத்ரியின் இந்த பதிவும் அதற்கு வந்த நூற்றுக்கு மேற்பட்ட லைக்குகளையும் பார்த்து ̀என்ன மாதிரி சூழலில் வாழ்கிறோம்' என்றுதான் அங்கலாய்க்க தோன்றுகிறது. கணிதம் அறிவியல் துறைகளுக்கு வெளியே வேறு தளத்தில் செயல்படும் ஒருவர் ஒரு பதிவில் கடந்த நூறு ஆண்டுகால இந்திய அறிவியல் கணித சாதனைகள் பற்றி பல தீர்ப்புகளை சொல்லி, நம் கலிதீர சில யோசனைகளையும் முன்வைக்கிறார். யார் வேண்டுமானாலும் எதை பற்றி வேண்டுமானாலும் சிந்தித்து முடிவுக்கு வந்து அதை முன்வைக்கலாம். ஆனால் முடிவுக்கு வந்த விதத்தை ஏதேனும் ஒரு வகையில் விளக்க வேண்டும். அப்படி சொல்லாமல் தீர்ப்பு வழங்க வேண்டுமெனில் அவர் அந்த குறிப்பிட்ட துறையில் ஒரு வல்லுனர் என்று நிறுவி இருக்கவேண்டும். குறிப்பாக அந்த துறை சா ர்ந்த ஒருவர் ̀இந்த முடிவுகளுக்கு எப்படி வந்தீர்கள்?; என்று கேள்வி எழுப்பினால் பதில் சொல்ல வேண்டிய கடமை உள்ளது. ̀ஜல்லியடிக்கிறார்' என்று நான் குறிப்பிட்ட பிறகும் பத்ரியின் பதிவிற்கு சுமார் எண்பது லைக்குகள் விழுந்திருக்கலாம். பத்ரி பதில் சொல்லப்போகிறாரா அல்லது செலிபிரிடி வழக்கமாக ஏராளமான பின்னூட்டங்களுக்கு நடுவில் உள்ள அர்த்தபூர்வமான ஒரு கேள்வியை கண்டுகொள்ளாமல் நகர்ந்துவிடப்போகிறாரா என்று தெரியவில்லை. 7 மணி நேரம் ஆகிவிட்டதால் இதற்கு மேல் காத்திருக்காமல் என் கருத்தை பதிந்துவிட்டு வேறு வேலைக்கு செல்கிறேன்.
பத்ரியின் தற்போதய சார்புகள், எதிர்கால உதிர்ப்புகள் இந்துத்வத்துடன் என்ன தொடர்பு கொண்டிருந்தாலும் அவர் ஒரு பழைமைவாதி கிடையாது. அதனால்தான் பழம் பெருமை பேசுவதில் அர்த்தமில்லை, நவீன வளர்ச்சிகளுக்கேற்ப அறிவை புதுப்பித்துக்கொண்டு நாம் உலக தரத்திற்கு உயர முயற்சிக்க வேண்டும் என்கிறார். சரியான அணுகுமுறைதான். அத்தோடு நின்றிருக்கலாம்; ஆனல் தனக்கு தெரியாத இந்திய அறிவியல் கணிதத்துறைகளில் உலகத்தரத்தில் எந்த சாதனையும் நிகழவில்லை என்கிறார்; அது மட்டுமல்ல சாதனை நிகழ சாத்தியமே இல்லை என்றும் சொல்கிறார். கடந்த மூன்று நூற்றாண்டுகளில் ஐரோப்பிய தரத்திலான ஒரே கணித விற்பன்னர் ஸ்ரீனிவாச ராமானுஜன் ஒருவரே என்கிறார். ஐரோப்பிய தரத்திலான ஆராய்ச்சியாளர்களை உருவாக்க ̀புதுமையான, நவீனமான கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களைப் பணம் படைத்த தனி நபர்கள் உருவாக்கவேண்டும்' என்கிறார். இதுதான் அவர் தீர்வு. அவர் தீர்ப்புகளை விட தீர்வுகள் இன்னும் பலத்த அதிர்ச்சியை தருகிறது. கேள்வி கேட்காமல் 160 பேர் லைக் செய்கிறார்கள். நாளை ஜெயமோகன் இதை மேற்கோள் காட்டி பதிவு போட்டால் கூட ஆச்சர்யம் வராது.
கணிதம், அறிவியல் என்று பத்ரி பேசுவது தியரிடிகலான விஷயங்கள்தான் என்று தெரிகிறது. CERNஇல் இருப்பது போன்ற ஆய்வுகூடம் எதுவும் அதற்கு தேவையில்லை. இதற்கு தேவை முக்கிய புத்தகங்களும், ஆய்வு இதழ்களும் உள்ள நூலகம், உட்கார்ந்து வேலைசெய்ய நாற்காலி மேஜையுடன் அலுவலக அறைகள் கொண்ட கட்டிடம், கணினிகள், மிக முக்கியமாக ஆராய்சியாளர்களுக்கு சம்பளம். இது ஏற்கனவே பத்துக்கும் மேற்பட்ட ஐஐடிகளில், IMSc, HRI, TIFR, IISc, ISIக்களில் ஏற்கனவே உள்ளதே. புதிதாக ஒரு பணக்காரர் செய்யப்போவது என்ன? என்ன லாபத்திற்காக ஒரு பணக்காரர் பற்பல கோடிகள் செலவாகும் இந்த வேலையை அறிவியல் கணித கண்டுபிடிப்புகள் நிகழவேண்டும் என்ற அக்கரையில் செய்யப்போகிறார்? (மாணவர்கள் பேராசியர்களுக்கு ஒரு மாதசம்பளம் மட்டும் ஒரு கோடிக்கு மேல் போகும்). நிதி உதவி மட்டும் செய்ய வேண்டும் என்றால் அதைத்தான் ஏற்கனவே டாடா, இன்ஃபாசிஸ் தொடங்கி ஸ்பிக்வரை செய்துள்ளனரே. இதில் எதை அரசு நிறுவனம் சாராமல் ஒரு பணக்காரர் புதிதாக என்னத்தை செய்து அறிவியலை உய்விக்க யோசனை தருகிறார் என்று தியரிடிகலாகவும் பிராக்டிகலாகவும் எதுவும் புரியவில்லை.
அடுத்து உலகத்தரமான ஆராய்ச்சி என்று எதை கற்பனை செய்து வைத்திருக்கிறார் என்று தெரியவில்லை. (விரல் விட்டு எண்ணகூடியதானாலும்) இந்தியாவின் கணித அறிவியல் நிறுவனங்களில் நிகழும் ஆய்வுகள் உலகத்தரமானவைதான். ராமானுஜன் போன்ற பெரும் மேதை எப்பொழுதாவது நூற்றாண்டுக்கு ஒருமுறைதான் தோன்றமுடியும். உலகத்தரம் எனப்படும் ஐரோப்பிய அமேரிக்க ஆய்வாளர்கள், சாதனை புரிந்தவர்கள் எல்லாம் கூட ராமானுஜன் தரத்தில் இல்லவும் இல்லை. மற்றபடி தற்போது உலகத்தரமாக பங்களிப்பை செய்தவர்களாக ஒரு நூறு ஆய்வாளர்களாவது கணிதத்தில் மட்டும் இந்தியாவில் இருப்பார்கள். அறிவியலில் இன்னும் சில மடங்கு இருப்பார்கள். கடந்த ஒரு நூற்றாண்டில் எனக்கு சரியாக கணக்கு சொல்ல வராவிட்டாலும் இதைவிட இன்னும் ஒரு மடங்கு நிச்சயம் இருக்கும். பலர் இங்கு தொடங்கி வெளிநாட்டில் குடியேறி இருக்கலாம்; வெளிநாட்டில் ஆராய்ச்சி தொடங்கி இங்கே வேலையுடன் குடியேறி இருக்கலாம். எல்லாவற்றையும் இந்திய பங்களிப்பாகத்தான் கருத வேண்டும். இதை எழுதிக்கொண்டிருக்கும் என் பங்களிப்புகளும் உலகத்தரமானவைதான். உலகத்தரமான ஆய்வு இதழ்களில் வெளிவருபவைகளை உலகத்தரமானவை எனறுதான் சொல்ல முடியும். எதை வைத்து இங்கே உலகத்தரமான ஆய்வு வேலைகள் குறிப்பாக கணிதத்தில் நிகழவில்லை என்று நினைக்கிறார் என்று புரியவில்லை. இங்கே நாம் உருவாக்கும் மாணவர்கள் வெளிநாட்டிற்கு மேலதிக ஆராய்ச்சிகளுக்கு செல்வது வழமைதான். ஜப்பான் போன்ற நாடுகளிலும் யாரும் உள்ளூரில் குதிரை ஓட்டிக்கொண்டிருப்பதில்லை. (நம்மூரில் இருந்து செல்ல லௌகிக காரணங்களும் இருக்கலாம்.) ஆகையால் பத்ரி சொன்ன அத்தனையும் முழுமையாக தவறான தகவல்கள்.
ஆனால் எண்ணிக்கையில் தரமான ஆய்வாளர்கள் முன்னேறிய நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் -அதுவும் நம் மக்கள் தொகைக்கு- மிகக்குறைவு என்பது உண்மைதான் (பத்ரி சொல்வது மிக மிகைப்படுத்துதல் என்று மட்டுமே சொல்கிறேன்). அதன் அடிப்படை பிரச்சனை நமது பல்கலை கழகங்கள் எந்த ஆய்வும் நடைபெறாத ஒப்புக்கு சப்பாணியாக இருப்பதுதான். இது ஏன் என்பது என் பார்வையில் மிக சிக்கலான பிரச்சனை. பல்கலைகழகங்களின் உதவாக்கரை நிலைகளுக்கு கல்வி நிறுவன விதிகள், அமைப்புகள், அரசியல் தலையீடுகள், உள்ளரசியல்கள், நமது சமூகத்தின் சாதிய அமைப்பு ஆகிய பலவற்றிற்கும் பங்கு உள்ளதாக நினைக்கிறேன். இதை இப்போதைக்கு சரி செய்வதை பற்றிய ஒரு திறந்த உரையாடலை கூட நிகழ்த்த முடியும் எனக்கு தோன்றவில்லை. அது குறித்து வேறு சந்தர்ப்பத்தில்தான் பேசவேண்டும்.
இதனோடு ஒப்பிடக்கூடிய இன்னொரு விஷயமும் உண்டு. நியூட்டனுக்கு சில நூறு வருடங்கள் முன்னால் கேரளாவில் கால்குலஸ் சார்ந்த (வேறுவகை) அறிவு இருந்தது என்பது இன்று ஒப்புக்கொள்ளப்பட்ட விஷயம். ஆனால் அது ஏன் இந்தியாவில் ஒரு கல்விப்புலமாக பரவவும் இல்லை, காலப்போக்கில் பல்வேறு கணித கருத்தாக்கங்களாக வளரவும் இல்லை என்பது முக்கியமான கேள்வி. குறிப்பிட்ட மக்கள் மட்டும் குறிப்பிட்ட வேலையை செய்த நம் சாதிய அமைப்பு அதற்கு ஒரு காரணம் என்பது எளிமையான விடை (கடினமான விடையாக வேறு ஏதாவது கூட இருக்கலாம்)யாக தோன்றுகிறது. ஒரு தொடர்ச்சியான பார்ம்பரியம் இங்கே இல்லாதன் காரணங்களுக்கும், நம் பல்கலை கழகங்கள் வெத்தாக இருப்பதற்கும் கூட தொடர்பிருக்கலாம். இந்த பிரச்சனைகள் குறித்து புரிந்துகொள்ள முயற்சிப்பதும் நம் பல்கலைகழகங்களை ஆய்வுக்குரிய இடமாக மாற்ற முயல்வவதும்தான் தீர்வாகமுடியும். யாரோ சில பணக்காரர்கள் (இன்னொரு) ஆராய்ச்சி நிறுவனம் தொடங்கி இதை தீர்க்க முடியாது.
பின் குறிப்பு: வசந்த கந்தசாமி போன்ற திறமையாளர்களை ஒதுக்கும் பார்பனிய சூழல்தான் கணிதம் அறிவியல் வளராததற்கு காரணம் என்று ஒருவர் பின்னூட்டியிருந்தார். பலமுறை சொன்னதை மீண்டும் சொல்கிறேன். பர்ப்பனிய அரசியல் சார்ந்த பிரச்சனை ஐஐடிகளில் மிக தூக்கலாகவும், மற்ற இடங்களில் ஓரளவும் இருக்கிறது என்பதுதான் என் கருத்து. ஆனால் வசந்த கந்தசாமி போலியானவர்.அவரது பக்களிப்புகளுக்கு ஆய்வுலகில் குப்பைகளுக்கான மதிப்பு மட்டுமே உள்ளது. அவர் உண்மையில் தன்னை மாபெரும் கணித மேதை என்று சொல்லி பெரியாரிஸ்டுகளையும் சாதி எதிர்ப்பாளர்களையும்தான் ஏமாற்றி வருகிறார்.

No comments:

Post a Comment