Monday, December 14, 2015

எல்லாவற்றிற்கும் நன்றி!

2012ற்கு பிறகு சிறப்பான வருடம் இது. 'நீதானே என் பொன் வசந்தம்', 'மேகா', 'நாடி துடிக்குதடி' போன்ற உச்சங்களுடன், இளையராஜாவின் இந்த புதிய அவதார அலையில் திளைப்பது, எல்லொருக்குமான கொடுப்பினையாக இருந்தும், சிலருக்கு மட்டும் வாய்த்திருக்கும் அதிர்ஷ்டமாக இருக்கிறது. மற்றவர்களுக்காக இதில் வருத்தப்பட ஏதுமில்லை என்ற மனநிலைக்கு வந்து ரொம்ப நாளாகிவிட்டது.
எண்பதுகளின் பிரபஞ்சக் கூத்தை, இரண்டாயிரத்திற்கு பிறகுதான் ஓரளவாவது புரிந்து வியக்க முடிந்தது. வியப்பதற்கான தேவையான கால இடைவெளி மற்றவர்களால் ஏற்பட்டதை குறிப்பிட வேண்டும். பிரபஞ்ச கூத்தாடுவதிலிருந்து விலகி, genreக்கு கட்டுப்படவில்லையெனினும், genre உடன் ஓரளவிற்கு இயைந்து தொண்ணூறுகளில் தரத் தொடங்கினார். 'நீபோவ'விற்கு பிறகு தனக்குத்தானே வரையறுத்துக்கொண்டு அதில் தங்கிவிட்டார்.
இந்த வருடம் 'ஸ்வப்பனம்' ஆல்பத்தில் தொடங்கியது. அது ஒன்றே ஒரு முழு வருடம் தினமும் கேட்பதற்கு போதும்; ஆறு மாதங்களுக்கு என் காரில் தொடர்ந்து ஒடியது. இத்தனைக்கும் நாட்டிய நாடகத்தின் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே சிடிக்கு வந்தது. இதனிடையில் மைத்ரி, ஷமிதாப், மேலும் டூரிங் டாக்கீஸ் என்ற மொக்கைப் படத்தில் அத்தனை அற்புதங்கள்.
இதுவரை அவர் அளித்து வந்ததற்கும், அளித்துக் கொண்டிருப்பதற்கும் எந்த சம்பந்தமும் இல்லாத தளத்தில் மைத்ரியின் இசை. அதிலும் 'சந்த்ரானேனு சந்தா..' என்ன ஒரு பாட்டு! /நாம் உள்ளே உள்ளதையெல்லாம் தொடர்ந்து உருக்கி, பல நாள் உருகுதலில் நேரும் அகச்சிற்பம் எழும்பி ஆகாச புறவெளியில் பறப்பது!/ சிறு வயதிற்கு பிறகு பாடல் வரிகளை எழுதி வைத்துக் கொண்டு பாடி பாடி பழகினேன்.
அதற்கு பிறகு, டிரெண்டு என்பது ஏற்கனவே போடப்பட்ட ரோடு அல்ல, தனக்கு மட்டும் தனித்துவமான ராஜபாட்டை என்று, தீவிர ராஜா ரசிகர்கள் பலரின் செண்டிமெண்டுகளை எல்லாம் அராஜகமாக தாக்கி எறிந்து, நம்ம சுரேஷ் சொன்ன மாதிரி ஒரு அனார்கிஸ்டாக பரிணமித்த ஷமிதாப் இசை; எங்கிருந்தோ சுட்டுப் போடும் இன்றய இசையமைபாளர்களால் சுட்டு போட்டாலும் 'தப்பட்' போன்ற ஒன்றை தரமுடியாது. அதிலும் கூட ஒரு க்ளாசிக்காக 70களின் ஹிந்தி இசை பாணி கொண்டு எழுதி, தன் கையெழுத்தில் இரண்டாயிரத்தின் நவீனமாக்கிய 'பிட்லி ஸி பாத்தேன்'.
வந்ததும் போனதும் தெரியாத டூரிங் டாக்கிஸில் நான்கு அற்புதமான பாடல்கள். 'காத்திருந்தேன் உன்னை கண்டுகொண்டேன்..' கேட்டுக்கொண்டே உயிரை விடலாம். பா டல்வரிகளால் மலினமாக்கப்பட்டாலும், இதயத்தை அறுக்கும் இசை கொண்ட 'உயிரே உன்னை.." (மேகாவின் 'ஜீவனே' போலவே). எண்பதுகளின் ராஜா எங்கும் போய்விடவில்லை என்று நிறுவும் "சுட்டிப் பெண்ணே'. இந்த அற்புதங்கள் பெரும்பான்மையின் காதுகளை எட்டக்கூட செய்யாமல் வந்து போயிருக்கிறது.
இதற்கு நடுவில் இவை எல்லாவற்றையும் தோற்கடிக்கும் செவ்வியல் இசை கொண்ட ருத்ரமாதேவி. இதெல்லாம் இந்த பத்து மாதங்களில் நமக்கு கிடைத்த அற்புதங்கள். வருடத்திற்கு ஐம்பது படங்கள் என்ற கணக்குடன் ஒப்பிட்டால் இதெல்லாம் ஒன்றுமில்லை எனினும், இன்றைக்கும் இப்படி வாய்க்கிறது என்பதுதான். கிடைத்த இடைவெளியில் கேட்காத பழைய பாடல்களை, பின்னணி இசைகளை கேட்கலாம் என்றால், திடீர் ஜாக்பாட்டாக ஒரே படத்தில் எட்டு பாடல்கள்; தன் நாற்பது வருட பயணத்தை தானே பகடி செய்யும் வகையில், அதிலிருந்து விலகிய பின்நவீன கோலங்கள். எட்டின் சிக்கலான அமைப்பை புரிந்து பழகவே இன்னும் இரண்டு வாரங்கள் வேண்டும் போலிருக்கிறது. கனுலு கலனு என்ற பாடலை தவிர மற்ற எல்லாம் வழக்கமான ரசனையால் அடையாளம் காணமுடியாதவை. இப்போது ஐந்து முறை கேட்டவரை ஒவ்வொரு முறையும் ஒவ்வொன்றிலும் புதிதாக தென்படுகிறது. இதை பற்றி பேச இன்னும் ஒரு மாதமாவது ஆகும்.
புகழ்வது, வியப்பது என்பதெல்லாம் கூட க்ளிஷே ஆகி போய்விட்ட நிலையில் என்னத்தை சொல்வது என்று புரியவில்லை. எதுவும் சொல்ல வேண்டாம், இந்த முட்டாள்தனமான உலகில், எல்லா அபத்தங்களுக்கும் இடையில், நடுவே நமக்கான அர்த்தத்தை தந்ததற்கு நன்றி மட்டும் சொல்ல முடிகிறது.

No comments:

Post a Comment