Monday, December 14, 2015

வட்டமான வட்டம்

ஜெயமோகன் தேசதச்சனின் கவிதைகளை முன்வைத்து எழுதிய இரண்டு கட்டுரைகளில், இரண்டாவதை முதலில் வாசித்தேன். அக்கட்டுரையை விமர்சனபூர்வமாக அணுகக்கூடிய அளவிற்கான பரந்த தத்துவ வாசிப்பை இன்னமும் நான் அடையாததால், மிகுந்த வாசக உவகையுடன் மட்டும் வாசித்தேன்; அந்த உவகையின் போக்கில், தொடர்ந்து முதல் கட்டுரையை வாசிக்க தொடங்கி இரண்டாவது பாராவில் தடுக்கி நிற்க வேண்டியதாகி விட்டது.
ஒரு கட்டுரையினிடையில் ஒரு அற்ப பிழையை கண்டுபிடித்து அதை மொத்தமாக நிராகரிக்கும் போக்கை நான் ஏற்கவில்லை; எதிர்க்கிறேன். ஒரு கட்டுரையை எதிர்கொண்டு விமர்சிப்பது என்பது கட்டுரையின் நிராகரிக்க முடியாமல் இருக்கும் பகுதியை எதிர்கொள்வதுதான். என்றாலும் போகிற போக்கில் உதிர்க்கப்படும் ஒரு அபத்தமான கருத்து, கவனிக்கப்படாமல் போகும் பட்சத்தில், பின்னர் அதே அபத்தத்தை மேலும் பலர் சொல்வதுடன், செய்வதுடன், மேற்கோள் காட்டும் விபத்துக்களும் நிகழ்வதால், கீழுள்ள குறிப்பிட்ட வரிகளுக்கு மட்டும் என் எதிர்வினை.
/கால் சகன் அதை இப்படி சொல்கிறார். ’ஒரு மாபெரும் ஓவியத்தின் மூலையில் மிகச்சிறிய தெளிவற்ற கிறுக்கலாக அதை எழுதியவனுடைய கையெழுத்து இருப்பது போல மிக சிக்கலான ஊடுபாவுகள் கொண்ட இப்பிரஞ்சக் கட்டமைப்பின் உள்ளே பிரபஞ்ச சிற்பியின் கையெழுத்தாக ஒன்று உள்ளது. அது π (பை) 22/7. விண்மீன்களின் சுழற்சியையும், கோள்களின் ஓடு பாதைகளையும், திசைகளென்றான வளைவுகளையும் தீர்மானிக்கும் வட்டம் என்ற அமைப்பின் ரகசியம் அது./
கார்ச் சாகனின் 'காண்டாக்ட்' நாவலை நான் இன்னமும் படிக்கவில்லை; ஆனால் இந்த குறிப்பிட்ட மேட்டரை ஒரு நண்பர் சொல்லக் கேட்டிருக்கிறேன். நாவலை வாசிக்காதவன், வாசித்தவர்களின் வாசிப்பை விமர்சிப்பது அபத்தம் மற்றும் அநாகரிகம் என்றாலும் இப்போது வேறு வழியே இல்லை.
"விண்மீன்களின் சுழற்சியையும், கோள்களின் ஓடு பாதைகளையும், திசைகளென்றான வளைவுகளையும் தீர்மானிக்கும் வட்டம் என்ற அமைப்பின்.." என்று சொல்வது எனக்கு விளங்கவில்லை; கார்ல் சாகன் இப்படி ஒரு சாதா மேட்டரை கவித்துவ தத்துவமாக சொல்லும் தமிழ் சூழல் அச்சுபிச்சு வரியை எழுதியிருப்பார் என்று தோன்றவில்லை. தெளிவாகப் புரியும் "பிரபஞ்ச சிற்பியின் கையெழுத்தாக ஒன்று உள்ளது. அது π (பை) 22/7" என்பதை மட்டும் கவனிக்கிறேன்.
பை என்பதன் மதிப்பு 22/7 என்று எழுதுவதன் மூலம் ஜெயமோகனுக்கு கார்ல் சாகன் சொன்ன மேட்டர் சுத்தமாக புரியவில்லை என்று தெரிகிறது; கணித மேட்டர் மட்டுமின்றி சாகன் சொல்லும் தத்துவ மேட்டரையும் அவர் மிகவும் தப்பாக முன்வைக்கிறார். முதலில் ̀பை'யின் மதிப்பு 22/7 அல்ல; பிரபஞ்ச சிற்பியின் கையெழுத்தாக கார்ல் சாகன் நாவலில் சொல்வதும் பை என்ற ̀வட்டத்தின் ரகசிய'மும் அல்ல.
கணிக்கும் வசதிக்காக பை என்பது 22/7 என்று பள்ளிகளில் (சில ஆசிரியர்களும் புரியாமல்) சொல்லிக்கொடுக்கிறார்களே தவிர, அதன் மதிப்பு முழுமையாக நமக்கு தெரியாது; ஒரு நாளும் தெரிந்து கொள்ள முடியாதது. ஏனெனில் periodic ஒழுங்கற்ற தசாம்ச புள்ளிகளை கொண்ட irrational எண் அது. பை 22/7 அல்ல என்பதும், அது irrational என்பதும் சாகன் சொல்லவரும் விஷயத்திற்கு மிக மிக முக்கியமானது. ஆகையால் சாகன் சொன்னதற்கு சம்பந்தமில்லாத ஒரு அபத்தத்தை ஜெமோ பேசுகிறார் என்று குறிப்பிட்டுவிட்டு, சாகன் நாவலில் பேசும் விஷயத்திற்கு வருவோம்.
என் ஞாபகம் சரியாக இருக்கும் என்றால் ஒரு ̀சொல்வனம்' கட்டுரையில் Aravindan Neelakandan இதை பற்றி கீழ்கண்டவாறு பேசுகிறார். பிரபஞ்சத்தில் உயிரினங்களை கொண்ட பற்பல நாகரிகங்கள் எப்படி எப்படி பரிணமித்திருந்தாலும், அவற்றினிடையே பொதுவாக ஒன்று இருந்தாக வேண்டும்; அது கணிதம். உதாரணமாக இந்த பிரபஞ்ச வெளியில் எங்கு எந்த வட்டத்தை எடுத்து அதன் சுற்றளவை ஆரத்தால் வகுத்தாலும் நமக்கு கிடைக்கும் மதிப்பு ஒரு மாறிலி; இந்த கணித விதி பிரபஞ்சம் முழுமைக்கும் பொதுவானது. (இந்த விதியால் வரையறுக்கப்படும் மாறிலிதான் பை; பை ஒரு irraational எண் என்பது பின்னர் கணிதபூர்வமாக நிறுவப்படும் ஒரு தேற்றம்.) இதைத்தான் சாகன் நாவல் மூலம் சொல்லும் செய்தியாக சொல்வதாக அரவிந்தன் சொல்கிறார் (என்று வாசித்த என் கிட்டத்தட்ட நினைவு). ஜெயமோகனைப் போல அரவிந்தன் நீலகண்டன் அபத்தமாக தவறாக எதுவும் சொல்லவில்லை என்றாலும் கார்ல் சாகன் சொல்வதும், சொல்வதாக நான் கருதுவதும் வேறு.
வட்டம் என்கிற வடிவத்தின் மூலம் பை என்கிற மாறிலி எண் நமக்கு மேற்கண்டவாறு கிடைக்கிறது. நாவலின் கதாப்பாத்திரம் பை என்கிற trancedental எண், பிரபஞ்ச ரகசியமான ஒரு மறை செய்தியை சொல்வதாக நினைக்கிறாள். நாவலின் இறுதியில், பையின் தாசாம்ச புள்ளிகளை பல்வேறுவிதமாக ஆராயும் போது, மீண்டும் வட்ட வடிவத்தை அதனுள் அவள் கண்டைவதை அந்த செய்தியாக சாகன் சொல்கிறார். பையின் மதிப்பை 11இன் தசாம்ச புள்ளிகளாக அமைக்கும் போது, அதில் வரும் பூஜ்யங்களிலும், ஒன்று என்ற எண்ணிக்கையினுள்ளும் வட்டத்தை எப்படி அவள் கண்டடைகிறாள் என்று நான் விளக்கினால் நிறைய மக்களுக்கு அது மொக்கையாக மாறும். விஷயம் என்னவெனில் வட்டம் என்ற ஜியோமிதி வடிவத்தினுள் பை என்ற எண்ணையும், பை என்ற எண்ணின் கணித அமைப்பினுள் வட்டத்தையும் காணுவதையே, பிரபஞ்சப் பயணம் போன்ற தேடல்கள் தேவையின்றி, ஒரு அறையினுள் உட்கார்ந்து நாம் அடையக்கூடிய பிரபஞ்ச செய்தியாக நாவல் சொல்கிறது.
இதை நாவலை படிக்காத நான் சொல்வது அதிகப்பிரசங்கித்தனமும், துரதிர்ஷ்டமும் ஆகும் என்றாலும் மேலே சொன்னது போல் வேறு வழியில்லை; நாவலை நாளையே நான் வாசித்து எதிர்கொள்ளும் அளவிற்கு, என் இந்த இந்த பதிவிற்கு எதிர்வினை வைத்து, அறிவுபூர்வமாக யார் provoke செய்தாலும் மகிழ்வேன்.

No comments:

Post a Comment