Thursday, December 24, 2015

அறிவுக்கசடுகள்

அறிவிருக்கா' மேட்டர் ஒரு செய்தியாக கவனிக்கக் கூட தேவையில்லாத ஒரு சம்பவம். தன்னிடம் சமய சந்தர்ப்பம் தெரியாமல் கேட்கப்பட்ட, தனக்கு எரிச்சலூட்டுய கேள்விக்கு, அந்த கணத்தின் உணர்ச்சியில், ஒரு பிரபலம் எதிர்வினை செய்தது குறித்து, பலவித கருத்துக்கள் கந்தசாமிகளுக்கு இருக்கத்தான் செய்யும்; இப்படி பண்ணிருக்கலாம் என்று ஆளாளுக்கு மனதில் தோன்றுவதை விவாதிப்பது போன்ற ஒரு மூட அறட்டைத்தனம் கிடையாது; அதை மீறி பெரிதாக கருத்துச் சொல்லவும் முரண்படவும் அதில் எதுவுமே இல்லை. அதிலும் ஒரு பேரழிவு நடந்து ஓரிரு வாரங்கள் கூட ஆகாத நிலையில், சாதாரணமாக கடந்து போக வேண்டியதை, ஒரு சமுகப்பிரச்சனையாக பேசுவதை போன்ற ஆபாசம் வேறில்லை. இப்படி நினைத்தாலும், இந்த விஷயம் பற்றி மேலும் எழுத எனக்கும் ரொம்பவே அலுப்பாகவும் அறுவையாகவும் இருந்தாலும், ஒரு விஷயத்தை கவனிக்கோணும்; மற்றவர்கள் எழுதுவதும், அதில் காணும் அறிவீனங்கள், ஆபாசங்கள், கயமைத்தனங்களுக்கு எதிர்வினையாகவே - இளையராஜாவை பாதுகாக்க வேண்டிய பொக்கிஷம் என்று நினைக்கும் ஒருவன் என்ற முறையில் - மீண்டும் மீண்டும் எழுத வேண்டியதாகிறது.
மிக ஆபாசமான முறையில் தாக்கப்பட்டதையும், ஒரு மேதையை ஒருமையில் திட்டி எழுதப்பட்ட வசைப்பதிவுகளும், புனையப்பட்ட ஆபாசக்கதைகளும், முட்டாள்தனமான தர்க்கங்களையும் விட்டுவிடலாம்; அவைகள் சமுகத்தின் அழுகிய பகுதிகள். ஆனால் சமுக அக்கறை கொண்டு எழுதிவரும் கருத்தாளர்கள் யாராவது -அதிலும் அரசியல் காரணங்களால் மட்டும் இளையராஜாவை விமர்சித்து வருவதாக சொல்லிக் கொண்டிருக்கும் யாராவது - இந்த சமூக ஆபாசத்திற்கு எதிராக, இளையராஜாவின் நியாயத்தை ஆதரித்து பேசுவார்கள் என்று மிக மிக முட்டாள்தனமாக எதிர்பார்த்தேன்.
தீவிர தார்மிகம்/ கலகம்/எதிர்ப்பரசியல் என்கிற பாவனையுடனான சுயநல பொறுக்கித்தனத்தின் முழுமையடைந்த முகம் சாருநிவேதிதா; அந்தாளை கணக்கிலேயே சேர்க்கவில்லை. அரவிந்தன் கன்னையன் போன்ற, தலைவீங்கிய சூப்பர் குமாஸ்தாக்களையும் கணக்கில் கொள்ளவில்லை. என்னதான் ஞாநியை முட்டாளாக நான் நினைத்தாலும், இந்த சந்தர்ப்பத்தில் நேர்மையான ஒரு நிலைபாட்டை எடுப்பாரோ என்று ஒரு நப்பாசை கொண்டிருந்தேன். அந்த ( முழு) வீடியோவை பார்க்கும் யாருக்கும் எளிதில் அந்த பையனின் ஆபாச குறும்பு புலப்படும். ஒரு ஆசிரியனை நக்கல் செய்யும் பொறுக்கி மாணவனது போன்ற - திட்டினாலும் கோபப்படாத - ஒரு ஏளன புன்னகை முகத்தில். ஞாநி போன்றவர்கள் அதை ஆதரிக்கும், அல்லது பீப் பாடல் ஒரு கலகம் என்று நினைக்கும் ஆசாமிகள் அல்ல; பழைமைவாத ஒழுக்க மதீப்பீடு கொண்டிருக்கும் அவர், குறைந்தது வெள்ள நிவாரணத்தில் வெளிப்பட்ட மனிதாபிமானம் பற்றி பேசி முடித்த அடுத்த நொடி, அந்த கேள்வி கேட்டதை ஒரு அசந்தர்ப்பம் என்று நினைக்கும் முடிவிற்குதான் அவரை போன்றவர்கள் இயல்பாக வந்திருக்க வே ண்டும்; ஆனால் வெளிப்பட்டதோ இந்த சந்தர்ப்பத்தையும் பயன்படுத்திக் கொள்ளும் அற்பத்தனம்; இவ்வாறான ஆழ்ந்த வெறுப்பு மனநிலையில் இருப்பவர், ரசிக மனப்பான்மை பற்றி (எந்த ஒரு அறட்டையாளனும் சொல்லிவிடக்கூடிய) அச்சு பிச்சு சாதாக்கருத்தை கூறுகிறார். டி என் கோபலன் என்பரோ அதைவிட மூளைக்கசடு வழிகிறார். ஜெமோ யாரையாவது திட்டினால் பத்தி எழுதும் பலர், இப்போது காட்டுவதற்கு பெயர்தான் கள்ள மௌனம்.
இத்தகைய சூழலில் புழங்கத்தான் வேண்டுமா என்ற அவநம்பிக்கை முன் எப்போதும் இல்லாத அளவு இப்போது தோன்றுகிறது.

No comments:

Post a Comment