Monday, December 14, 2015

பேரழிவும் அரசியலும்

இந்த பேரழிவிற்கு அதிமுக அரசு மட்டும் காரணமல்ல, திமுகவும் பங்களித்திருக்கிறது என்கிறார்கள். இவ்வாறு சொல்வதில் நியாயம் நிறையவே இருக்கிறது என்றாலும், எவ்வகை அரசியலின் வியாக்யானமாக இந்த வாதம் வெளிபடுகிறது என்பது முக்கியம். தேர்தல் அரசியலின் ஆக விபரீதமான விளைவாக, இப்போது இந்த அனர்த்தத்தின் மூலம் நிறுவப்பட்டுவிட்ட ஜெயலலிதா தலைமையிலான அரசை, இன்னமும் ஏதாவது சொல்லி காக்க வேண்டிய, ஒரு பொய்மை அரசியலின் அவசியம்தான் இன்றய வக்கிரம்; 2005இல் பாராட்டியது போல், இப்போதய அரசை எந்த சாக்கு சொல்லியும் பாரட்ட முடியாத நிலையில், பிழைத்து வர எந்த சாத்தியமும் இல்லாமல் ஒழிய வேண்டியதை, தங்களை அறிஞர்களாக கற்பித்துக் கொண்டவர்கள் 'ரெண்டு பேரும் ஒண்ணு, அறியாதார் வாயில் மண்ணு' என்று காக்க முனைவதைத்தான் எதிர்க்க வேண்டியுள்ளது.
நூறு ஆண்டுகளின் பெருமழை பெய்ததற்கு, புவி சூடேற்றத்தின் விளைவான பருவ மாற்றம்தான் காரணம் என்று கொண்டால், கார் வைத்திருக்கும் விமானத்தில் சென்ற ஏசியில் உட்கார்ந்த நான் கூட ஒருவகையில் காரணிதான். அந்தவகை அறிவு விவாதங்களை நிதானமான நேரத்திற்கு தள்ளிவிட்டு, கண்ணெதிரே நடந்ததை அணுகும் போது, எந்த சந்தேகமும் இல்லாமல் இது தமிழகத்தை ஆளும் அதிமுக அரசு செய்துள்ள படுகொலை; திட்டமிட்டு செய்யாவிடினும், திட்டமிடாததால் நடந்த படுகொலை; நிகழ்த்திய பேரழிவு.
அதிமுக ஆதரவு நிலையில் இல்லாவிட்டாலும், குன்ஹாவின் தீர்ப்பு வெளிவந்த போது நான் சந்தோஷப்படவில்லை. யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், நியாயம் எவ்வகையில் இருந்தாலும், அதிமுக அரசே இங்கே தொடர வேண்டிய தலைவிதியான நிலையில், ஜெயலலிதா ஜெயிலுக்கு போவது இங்கே முற்றிலும் செயலின்மையை உருவாக்கும், அது தமிழகத்திற்கு நண்மை பயக்கப் போவதில்லை என்ற கருத்தையே டிவிட்டரில் எழுதினேன். நாமறிந்த அறியாத பல காரணங்களினால், ஜெயிலில் இருந்து வெளியே வந்த பின்னரும் அதே செயலின்மை தொடர்கிறது. பொதுவெளியில் தோன்றுவதை கூட தவிர்க்கும் ஒரு முதல்வரை இந்திய வரலாற்றில் எங்காவது பார்த்திருக்க முடியுமா? எம்ஜியார் நோயாவாய் பட்டு அமேரிக்காவில் இருந்தபோது கூட, முடிவெடுக்க இப்படி அண்ணாந்து காத்திருக்கும் ஒரு செயலற்ற அரசு இருந்ததில்லை.
கடந்த வாரம் வரலாறு காணாத மழை பெய்தது உண்மை; ஆனால் பெருமழை பெய்யப்போவதை மூன்று நாட்கள் முன்னமே அறியப்பெற்றும், முழுமையாக நிரம்பிய ஏரியை அதன் போக்கில் அப்படியே பராமரித்து, பெருமழை பெய்யத் தொடங்கிய பின்னும் காலம் தாழ்த்தி, எந்த முன்னெச்சரிக்கையும் முன்னேற்பாடுகளும் இன்றி, வெளியான அளவு இன்னமும் தெளிவில்லாத ஒரு பெரும் கொள்ளளவில் நீரை திறந்து விட்டு, எந்த அவகாசமும் இல்லாத மக்கள் சாவையும் பேரழிவையும் சந்திக்க நேர்ந்தற்கு எந்த சமாதானமும் கிடையாது. சொந்தமாக தீர்மானத்தை எந்த தளத்திலும் எடுத்து நிறைவேற்ற முடியாமல், 'அம்மா அவர்களின் ஆணைக்கு இணங்க' என்று சொல்லக் காத்திருந்த நிர்வாகமே இந்த நிலைக்கு காரணம். கருணாநிதி ஆட்சியில் துரைமுருகனோ அல்லது அதிகாரிகளோ கூட ஆணைக்கு இப்படி காத்திருக்க மாட்டார்கள். ஒரு பேரழிவு நிலை கொண்டிருந்த நிலையில் அதிரடியாக களத்தில் இறங்க வேண்டிய ராணுவம், பல மணி நேரங்களுக்கு சும்மா காக்க வைக்கப்பட்ட செய்தியும் வந்துள்ளது. பேரழிவிற்கு பின் அதிமுக ரவுடிகள் நிகழ்த்திய அராஜகங்கள் வீடியோ ஆதாரங்களுடன் பதிவாகி விட்டது. திமுக யோக்கியமான கட்சியாக இல்லாவிட்டாலும், இந்த பேரழிவிற்கு வரலாற்றுரீதியில் அவர்களுக்கும் பொறுப்பு உண்டு எனினும், இப்போதய அதிமுக அரசை போன்ற ஒரு மாபெரும் குற்றவாளி அல்ல அது; எல்லா ஊழல் கட்சிகளையும் போன்ற சமக்குற்றவாளி. அதிகாரிகள் பணியாளர்கள் அளவில் தமிழகத்தில் திறமையாளர்களுக்கான பஞ்சமே இல்லை; அரசதிகார அளவில் முறையான முடிவுகளை காலம் கடக்கும் முன் நிச்சயம் திமுக போன்ற ஒரு ஆட்சி எடுத்து, நடந்த அழிவுகளின் தீவிர அளவுகளை நிச்சயம் குறைத்திருக்கும். இதுவரை இந்தியாவில் ஆண்ட எந்த மோசமான கட்சியையும் விட மோசமாக அதிமுக நடந்து கொண்டிருக்கிறது. எல்லா மட்டத்திலும் அரசியல் பேசும் தமிழ் நாட்டில் எப்படி இப்படி ஒரு பேரவலம் நடக்க நாம் அனுமதித்தோம் என்று சொந்த அரசியலின் சுயமைய சார்புகளை அவிழ்த்துவிட்டு யோசிக்க வேண்டிய தருணம் இது.
நேரடியாக கணித பூர்வமாக நிறுவ முடியாவிட்டாலும், கணிக்கும் எல்லா ஆதரங்களும், நவீன மனித வாழ்க்கை விளைவிக்கும், தொடரும் பருவ நிலை மாற்றத்தை இந்த பெருமழைக்கான காரணமாக்குகிறது. பருவ மாற்றம் மேற்கையும் பாதித்தாலும், அதற்கான தீர்வை நோக்கி இன்னும் பல பேரழிவுகள் நிகழும் வரை- ஒருவேளை நிகழ்ந்த பிறகும் கூட - முதலீட்டிய சமுதாயம் அனுமதிக்கப் போவதில்லை; ஒருவகையில் பேரழிவுகள் முதலீட்டியத்திற்கு பெரும் வாய்ப்புகள். வால் ஸ்டீர்ட் தண்ணீரில் மறைந்தால் கூட, கார்பன் டை ஆக்சைடு உருவாக்கம் எவ்வளவு அவசியமானது என்று அமேரிக்க தேர்தலில் போட்டியிடும் ஒருவரே கூட தர்க்கித்து கொண்டிருப்பார். அந்தவகையில் அழிவை நோக்கி நாம் நகர்வதை தடுக்கும் சாத்தியம் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தெரியவில்லை.
திராவிட ஆட்சி இல்லாமல் தேசிய ஆட்சி தமிழகத்தில் நடந்தாலும், நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப் பட்டிருக்கும். நீர்நிலைகளை, இயற்கையை நாசமாக்காத வளர்ச்சி பக்கத்து மானிலங்களிலும் நடைபெறவில்லை; வளர்ச்சி என்பதே அவ்வாறுதான் கற்பிக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் கடந்த பத்தாண்டுகளில், தமிழகம் போன்று ஊழலும் கொள்ளையடிப்பும் இயற்கை சீரழிவிற்கு துணைபோன அளவும் வேகமும் மற்ற இடங்களில் இல்லை என்பதுதான் என்னுடைய மனப்பதிவும். திமுகவின் கடந்த ஆட்சி பெரும் ஊழலும், சட்டவிரோதமான அக்கிரமிப்புகளும், வரலாறு காணாத மணல் மாஃபியா சீரழிவுகளும் கொண்டதுதான். இதனாலேயே பதவி இழந்து, தன்னை விட சீரழிவான ஒரு ஆட்சியை பதிவிக்கு கொண்டு வந்ததிலும் திமுகவிற்கு பங்குள்ளதை மறக்க முடியாது. இதற்காக நாம் திமுக திட்டவும் எதிர்க்கவும் செய்யும்போது, அதைவிட மோசமான ஒன்றிற்கு எந்த நியாயமும் கற்பித்து விடக் கூடாது; அஷ்டே!
ஜெயலலிதாவை துதிபாடும் செயல்பாட்டை தவிர இங்கு எதுவுமே நடைபெறும் தோற்றம் இல்லையே. தேர்தல் நெருங்கும் சமயத்தில் கூட, ஒரு ஆளுங்கட்சி பேரிடரில் பாதிக்கப்பட்ட மக்களிடமும், அதற்கு உதவும் தன்னார்வலர்களிடமும் இவ்வளவு அராஜகமாக எப்படி நடந்து கொள்கிறது? சிம்பு ரசிகர் மன்றம் நினைத்தால் கூட மக்களுக்கு உதவும் சாத்தியம் உண்டு; அதிமுக என்ன முயன்றாலும் - நிவாரண நிதி அளிப்பதை தவிர- எந்த நிவாரண பணியையும் செய்யமுடியாது. ஏனெனில் அது கொள்ளையை மட்டுமே கொள்கையாக கொண்ட தலைமையையும், அதே சுயலாபத்திற்காக தலைமையை துதிபாடுவதையே கடமையாக அடிமைப்பட்ட, அரசியல் முற்றிலுமற்ற ஒரு கூட்டம். ஒருகையில் திமுகவும் தனது அரசியலில் இருந்து விலகிய, லாபத்தை நோக்காக கொண்ட ஒரு கார்பரேட் நிறுவனம் போல மாறிவிட்ட ஒன்றுதான்; ஆனால் இன்றைக்கும், தீவிர அரசியலை தர்க்கத்துடன் பேசுபவர்களையும், அறிவு விவாதத்தில் ஒரு தரப்பாக நிலைபாடு கொண்டவர்களையும் கொண்டது திமுக; மாறாக கல்வியற்ற அறியாமையும், எலீட் மக்களின் பொய்மையும், நடுநிலைகளின் சாதுர்யமுமே அதிமுக ஆதரவாக உள்ளது. இந்த தரப்பை திமுகவை விட குறைந்த தீமை என்று ஆட்சியில் அமர்த்திய சாதூர்யத்தின் பலன்தான் தற்போதய பேரழிவு.
திமுக இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பலனடைய நினைப்பதாக சொல்கிறார்கள். இந்த சந்தர்ப்பத்தை கூட அவர்கள் பயன்படுத்தி குற்றம் சொல்லவில்லையெனில் அவர்கள் எதற்காக திமுகவினராக இருக்க வேண்டும்; பேசாமல் நடுநிலை அதிமுக அரசியலையே செய்யலாமே. இவ்வளவு மோசமான விபரீதமான அரசை, அரசியல் உணர்வும் கல்வியறிவும் கொண்ட தமிழகத்தில், நாம் எப்படி அதிகாரத்தில் ஏற்றினோம் என்று தீவிரமாக பரிசீலனை செய்யவேண்டிய கட்டத்தில் உள்ளோம். அதனால் திமுக பயனடைந்தால், இருக்கும் பேராபத்தான நிலையை விட அது பெரிய ஆபத்து இல்லை; மேலும் தேர்தல் அரசியலில் இது நியாயமானதும் கூட. என் பயம் எல்லாம் சன் டீவி போன்றவைகளின் மிகை விளம்பர பாணி பிரச்சாரத்தினால் அதிமுக மீதான வெறுப்பு தணிந்துவிடுமோ என்பதுதான்.

No comments:

Post a Comment