Friday, December 18, 2015

இசையர்த்தம்

பிரதியின் ஒரு வரியை உரைநடையாக வாசித்து அர்த்தம் கற்பிப்பதில், வாசிப்பவருக்கும், சூழலுக்கும், அவரது மொழிக்கிடங்கிற்கும், ஆழ்மனதிற்கும் இன்னும் பலவற்றிற்கும் தொடர்பு இருப்பதை, ரோலண்ட் பர்த்தின் ஒரு வரியை கூட வாசித்திராத பலரும் கேள்விப்பட்டிருப்பர். இப்படியிருக்க, இசையில் உட்கார்ந்த ஒரு பாடல்வரி, அர்த்தத்தை பின்னுக்கு தள்ளி, உணர்வை முன்நிலைப் படுத்தும் போது, பாடல்வரியின் இயக்கம் மிக மிக இன்னமும் சிக்கலாகின்றது. எழுதி வாசித்தால் ஒரு அர்த்தமும் இல்லாத பாடல்வரி, கேட்கும்போது பெரும் கிளர்ச்சியை தூண்டுவதும், சாதரணத் தோற்றமளிக்கும் வரி, வடிகாலாக்கும் அழுகையை பீறிட வைப்பதும் இந்த சிக்கலான இயக்கத்தின் சில வெளிபாடுகள். இதை தத்துவரீதியாக சுயம்புவாக சிந்தித்து தான் வந்தடைந்ததை விளக்கத்தான் இளையராஜா, அர்த்தரீதியாக சாதரணமாக இருக்கும் ஒரு வரி இசையின் மூலமாக பேரர்த்தம் பெறுவதாக சொல்லவருகிறார். அதற்கு அவர் எடுத்தாண்ட 'தாமரை மலரில் மனதினை எடுத்து தனியே வைத்திருந்தேன்' என்பது துரதிர்ஷ்டவசமாக ஒரு தவறான உதாரணம். தன்னளவிலேயே அது மிகவும் கவித்துவமான வரி என்பதை அவரால் அணுகமுடியவில்லை; ஆனால் இசையில் அவ்வரி வேறு உணர்வுத் தளத்திற்கு எடுத்துச் செல்லப்படுவதை அவர் விளக்கினாலும், அவர் பேச வந்த விஷயத்திற்கு பொருத்தமில்லாத உதாரணமாகிறது. பொருத்தமான பல உதாரணங்கள் அவரது இசையில் நிறைந்து இருந்தாலும், தன்னை பற்றி தானே பேசுவதன் பிரச்சனையால் அவரால் அந்த உதாரணங்களை எடுத்தாள முடியவில்லை.
உதாரணமாக இப்போது நான் கேட்டுக் கொண்டிருக்கும், "மாலை செவ்வானம் உன் கோலம்தானோ… வானம் .. அது நாளும்… எழுதும் ஓவியம்.. உன்னெழில் ஆகுமோ… நாளை பூமாலை என் தோளில் ஆடும்.. அன்பும்… தமிழ் பண்பும்… தலைவன் உன்னிடம் என்னையே தந்தது.." மெனெக்கிடாமல் எதேச்சையாக எடுத்ததால், வாசிக்கும் போது கொஞ்சம் அர்த்தமளித்தாலும் மிக மிக சாதாரண அற்பமான வரிகள். ஆனால் வரிகளின் அர்த்த அபத்தம், எந்த பிரச்சனையையும் இடையூறையும் செய்யாமல், பெரும் கிளர்ச்சியை கேட்பவனுக்கு அளிக்கிறது; இசையின் முலமாக ஒரு அர்த்தப் பரிமாணத்தை அடைகிறது. (எல்லோருக்கும்னு சொல்ல வரலை; யாருக்கு அளிக்கிறதோ அவர்களுடன் மட்டுமே இந்த பதிவு உரையாட விழைகிறது.) அல்லது 'காலங்கள்.. மழைக்காலங்கள்' என்ற பாடலை எடுக்கலாம்; நேரடியாக எழுதி வாசித்தால் பாதிக்கு மேல் சுத்த நான்சென்சாக தெரியும் வரிகள். அதை கண்ணதாசன் எழுதியுள்ளார் என்பதை நினைவில் கொண்டு அணுகும்போது, இசைக்காக பேரர்த்தம் பொருந்தி அந்த வரிகள் எழுதப்பட்டுள்ளதை உணரலாம்.
மிக முக்கிய உதாரணமாக பினவரும் வரிகளை உரைநடையாக வாசியுங்கள் "வாழ்நாளெல்லாம் உன்னோடுதான் வாழ்ந்தாலே போதும்; வாழ்வென்பதின் பாவங்களை நான் காண வேண்டும். நாளும் பல நன்மை… காணும் எழில் பெண்மை… பூவை வைத்த பூவாசம்… கோதை கொண்ட உன் நேசம்… தென்றல் சுகம் தான் வீசும் தேடாமல் சேராதோ" இந்த பாட்டை கேட்டிராதவர் வாசித்தால் என்ன ஒரு அர்தக்கோர்வையற்ற, அர்த்தம் வந்தாலும் சாதாரணமான வரிகள். ஆனால் இந்த பாட்டை கேட்டுக்கொண்டு சாகத்தயாராக இருக்கும் ஜீவன்கள் ஒரு லட்சத்திற்கு மேல் இருக்கும் என்பது என் எண்ணம். மிகச்சாதாரண வார்த்தைகள் இசையில் உட்காரும்போது, மொத்த மானுட சோகத்தையும், சோகத்தின் பேருவகையையும் உருவாக்குகிறது. இது போல உதாரணங்கள் இளையராஜா பாடல்களில் பஞ்சமே இல்லை. ஆயிரம் பக்க தடிமனில் புத்தகம் எழுதலாம்.
மகுடேஸ்வரனின் இந்த பதிவு குறித்து, அவர் அழுததற்கு 'பாடல்வரிகளும், மெட்டும் காரணமல்ல அழுகையை அடக்கி வைத்த செயல்தான் காரணம்' என்று ஒரு கருத்து கந்தசாமி விமர்சகர் எழுதியதை வேறு இடத்தில் பார்க்க நேர்ந்தது. இப்போது சந்தித்து வரும் தமிழ் சமுகத்தின் அறிவுக்கு எதிரான தொற்று மனநோய் எபிடெமிக்கினிடையில், தீங்கற்றதாக புன்னகையை மட்டுமே அக்கருத்து வரவழைத்தது என்றாலும், அதற்கு ஒரு நேர்மறை பயனாக நமக்கு தோன்றியதை பதிவு செய்வோமே என்று…

No comments:

Post a Comment