Monday, December 14, 2015

எதிர்வினை (8 ஜனவரி, FB)



பிரான்சில் இனவாதம் இல்லவே இல்லை என்று சொன்னால் நகைப்பிற்குரியது; ஆனால் நான் புரிந்துகொண்டவரை அரசின் கொள்கைகளும், சட்டங்களும் இனவாததிற்கு எதிரானது. என் புரிதலில் ஃபேர் அண்ட் லவ்லி விளம்பரத்தை இனவாதத்தை தூண்டுவதாக ஃபிரான்சில் வழக்கு தொடுக்க முடியும்; இது ஒரு சாத்தியக்கூறு மட்டுமல்ல, இந்தியாவில் எந்த உறுத்தலும் இன்றி வெளிவரும் ஃபேர் அண்ட் லவ்லி (மேலும் பல) விளம்பரங்களுக்கு அடுத்த நாளே ஃப்ரான்சில் நிச்சயம் எதிர்ப்பு கிளம்பும் என்பதுதான் ஒரு வருடம் அங்கு வாழ்ந்த என் மனப்பதிவு. ஒரு பத்திரிகை கார்டூன் இனவாதமாக உள்ளது எனில் அதற்கு நிச்சயமாக வழக்கு தொடுக்க முடியும். இந்த கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள கார்டூன்கள் ஒவ்வொன்றும் இனவாதம் அல்ல என்று வாதிடக்கூடிய வாய்ப்புகள் உள்ளன. மேலும் பல நேரங்களில் ஒரு கார்ட்டூன் உருவாவது ஏதோ ஒன்றின் எதிர்வினையாக. ஒருவரின் மத நம்பிக்கையை மதிக்காவிட்டால் அது இனவாதம் என்று ஒருவர் வாதிடலாம்; சுதத்திரவாத சமுதாயத்தில் புண்படுத்த -குறிப்பாக ஒரு எதிர்வினையாக நக்கல் அடிக்க- உரிமை உண்டு என்று இன்னொருவர் சொல்லலாம். ராமர் படத்தை செருப்பால் அடித்தவர் மேல் மிகுந்த மரியாதை உள்ள நான் இரண்டாவது நிலைபாட்டைத்தான் எடுப்பேன்; இடத்துக்கும் சூழலுக்கும் ஏற்ப என் நிலைபாட்டையும் தர்க்கத்தை மாற்ற மாட்டேன்.
ஒவ்வொரு முறை இப்படி ஒரு காட்டுமிராண்டித்தனம் நடக்கும்போதும் தவறின் வேர் வேறு எங்கோ இருப்பதாக கிளம்புகிறார்கள். இந்த நிகழ்வு ஒட்டுமொத்த இஸ்லாமியர்களுக்கு எதிரான மனநிலையை அடைவதை எதிர்ப்பது வேறு; ஏதோ ஒரு வகையில் கொல்லப்பட்டவர்களை நடந்ததற்கு காரணமாக்குவது வேறு. பிரச்சனை இருக்கிறது என்று தெள்ள தெளிவாக தெரிந்தும், எல்லாவற்றையும் போல இஸ்லாத்தின் பிரச்சனைகளை பேசுவதை பொலிடிகல் கரெக்ட்னெஸ் கொண்டு தடை செய்ய முனைவது முஸ்லீம்களுக்கு எந்த நண்மையும் செய்ய போவதில்லை; ஏற்கனவே ஏராளமான தீமைகளைத்தான் செய்துள்ளது. இஸ்ரேலின் அட்டூழியங்களிற்கு, அமேரிக்க அராஜகங்களுக்கு மற்றும் இந்துத்வத்திற்கு எதிராக கொண்டிருக்கும் தொடர் நிலைபாட்டை இப்படி சொல்வதன் மூலமே உறுதிபடுத்த முடியும் என்று நினைக்கிறேன். நான் கேள்விப்படும் வரை Charlie Hebdo இனவாததிற்கு எதிரான நிலைபாடு கொண்டதாகவே அறிகிறேன். வெளிப்படையான நிலைபாட்டை வேஷம் என்று சொன்னால் மேலே உரையாட ஏதுமில்லை.

No comments:

Post a Comment