Monday, March 15, 2010

80களின் மந்தம்.

(கீழே பதிவில் இருக்கும் கருத்துக்கள் நான் உறுதியுடன் நம்பி ஆதரவாக வாதம் செய்யக்கூடிய கருத்துக்கள் அல்ல; பரிசீலனை செய்து கருதுகோள்களாக வளர்தெடுக்கும் நோக்கில் எழுதப்பட்டுள்ளன. )

தமிழகத்தின் எண்பதுகள் நவீன மாற்றங்களின் ஒரு இடை நிறுத்தமாக, பல விதங்களில் ஒரு குழப்பம் கொண்ட ரெண்டும் கெட்டான் நிலைமையில் இருந்ததாக தோன்றுகிறது. 80களின் பல மோஸ்தர்கள் மாறு வேஷத்தில் கூட, எதிர்கால தமிழ் வாழ்வில் இனி என்றும் குறிக்கீடு செய்யாது என்று நினைக்கிறேன்.

80 களின் முக்கிய பிரச்சனையாக தோன்றுவது படித்த, ஓரளவு படித்த பல இளைஞர்களின் 'வேலையில்லா திண்டாட்டம்'. இன்று வறுமையும், வறியவர்களின் வாழ்க்கை போராட்டமும் இன்னமும் தீவிரமானாலும், இந்த குறிப்பிட்ட பொருள் கொண்ட 'வேலையில்லா திண்டாட்டம்' என்பது இன்று இல்லாமலாகிவிட்டது என்றுதான் சொல்லவேண்டும். +2படித்து விட்டு வேலையே கிடைக்கவில்லை என்று இன்று யாராவது சொன்னால், சோம்பேறியாக அல்லது விவரம் தெரியாதவராக இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. 80களின் வாழ்க்கையை திரைக்காவியமாக்கிய 'சுப்பிரமணியபுரம்' கதையின் பிண்ணணியில், இந்த வேலையில்லா பிரச்சனை இருப்பதை காணலாம் (வெளிப்படையாக கதையில் பேசப்படாவிடினும்). 80, 90கள் இளைஞர்களின் முக்கிய அன்றாட வழக்கமாக இருப்பது, தெருவில் ஏதாவது ஒரு நண்பர்கள் சந்திக்கும் இடத்தில் கூடி சும்மா நிற்பது. அந்த இடத்திற்கு எந்த நேரத்தில் போனாலும் சும்மா இருக்கும் செட் நண்பன் யாரையாவது சந்திக்கலாம். சிகரெட் பழக்கம் உள்ளவர்கள், இல்லாதவர்கள் என்று சிலர் 35 வயது வரை கூட தெருவுக்கு தெரு சும்மா நிற்பார்கள். நடுத்தர வர்க்க இளைஞர்களின் இந்த சும்மா நிற்கும் பழக்கம் இன்று மிகவும் குறைந்து விட்டது அல்லது இல்லாமலாகிவிட்டது.

தமிழ் சினிமாவை எடுப்போம். 80களின் தொடக்கத்தில் புதிய மாற்றங்களும், புதிய முயற்சிகளும் தொடங்க, இன்னொரு புறம் தமிழ் சினிமாவின் பாரம்பரிய பொது அம்சங்களானவற்றில் சில கால இடைவெளியில் ஒருவித மந்த நிலை நீடிப்பதை காணலாம். தமிழ் சினிமா மாறிக்கொண்டிருந்தது. நாடக பாணியை விட்டு யதார்த்ததை படம் பிடிக்க கிளம்பியது. ஸ்டூடியோவை விட்டு கிராமத்திற்கு பாரதிராஜா கொண்டு சேர்த்திருந்தார். ஆனால் அவர் ஒரு பக்கம் தீவிர யதார்தத்தையும் ஒன்னொரு பக்கம் அசட்டு யதார்த்ததையும் கலந்து பதிவு செய்தார். சினிமா யதார்த்தம் என்பது யதார்த்ததை 'இன்னும் யதார்த்தமாக' படம் பிடிக்கும் தன்மை கொண்டதாக மாறிக்கொண்டிருந்த போதும், தமிழ் சினிமா தனது பாரம்பரிய தொடர்ச்சியாக கொண்ட பாடலிசையையும், காமெடியையும் உதற முடியவில்லை. அவைகளும் இந்த சினிமா யதார்த்தத்திற்கு ஏற்ப மாறுதலாகி கொண்டிருந்தது. இவ்வாறான ஒரு மாற்றத்தின் விளிம்பில் ஒரு நெருக்கடி நிலை உருவாவதை காணலாம்.

மௌனியின் 'சாவில் பிறந்த சிருஷ்டி' கதையின் தொன்மத்தை போல், திரையிசையின் நெருக்கடி பிறக்கும் முன்பே அதை இல்லாமலாக்கி, இளையராஜா தனது கற்பனையால் எங்கோ கொண்டு சென்றுவிட்டார்.

தமிழ் சினிமாவின் இன்னொரு முக்கிய அம்சமான காமெடியில் ஏற்பட்ட நெருக்கடியில் மந்த நிலை கொஞ்ச காலம் நீடித்ததை உணரலாம். ஒய்.ஜி.மகேந்திரன், குண்டு கல்யாணம், பிந்து கோஷ் என்று தமிழ் சினிமா பொது ரசனைக்கு ஒவ்வாத அசட்டு காமெடியன்கள் மையத்திற்கு வந்தார்கள். 80களின் மத்தியில் கவுண்டமணி, பின் கவுண்டமணி + செந்தில் இந்த வெளியை கைப்பற்றி காமெடியை வேறு தளத்திற்கு கொண்டு சென்று, இந்த மந்த நெருக்கடி சமாளிக்கப்பட்டது. ஆனால் மற்ற விஷயங்களில் இந்த நெருக்கடி தொடர்ந்தது.

பாடல்காட்சிகளும் குறிப்பாக டான்ஸும் மிக பரிதாபமான ஒரு நிலையை 80களில் அடைந்ததை, மதியம் டீவியில் ஏதாவது ஒரு சினிமாவை பார்த்து தெரிந்து கொள்ளலாம். தமிழ் சினிமாவின் நடிப்பு என்பது (அவா ஊதினா இவா வருவா) அசட்டுத்தனத்தை கடந்து வருவதற்கு முன்னமேயே, ஆடல் பாடல் என்பது மிகுந்த வளர்ச்சி கண்டிருந்தது. தொடர்ந்து இசையும், ஆடல் என்பதும் எந்த காலகட்டத்திலும் சோடை போனதில்லை. ஆனால் 80களின் பாடல்களில் மட்டும் இசைக்கு எந்த தொடர்பும் இல்லாத டான்ஸ் பதிவாகியிருப்பதை உணரலாம். கதையின் நாயகி ஒரு பரத நாட்டிய ஆட்டக்காரியாக இருந்தாலும் கூட மிக கேவலமான ஒரு டான்ஸ் போதும் என்கிற நிலை இருந்தது. (உதாரணம்: காதல் ஓவியம்). கமலஹாசன், ஆனந்த் பாபுவின் சுமாரான ஆட்டம் மிகையாக புகழப்பட்டது (சலங்கை ஒலி வேறு விஷயம்.) இன்றய டீவி சேனல் ரியலிடி ஷோக்களில் ஆரம்ப சுற்றில் இருப்பவர் காட்டும் திறமையில் சிலதை கூட 80களில் யாரும் காட்டியதில்லை. (ஆனால் ஆடல் என்பது மிக தீவிரமான ஒன்றாக தமிழ் சினிமாவிற்கே வெளியே இருந்தது.) இவ்வாறாக நீடித்த இந்த நெருக்கடி 90களில் சமாளிக்கப்பட்டு பிரபுதேவா போன்றவர்களால் வேறு தளத்திற்கு சென்றது.

15 comments:

 1. வெகுவாக வேறுபடுகிறேன் என்பதை மட்டும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். 80 கள் தமிழகதிற்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் விழிப்படைய கடைசி வாய்ப்பாக இருந்த ஆண்டுகள்... மறுபடி அப்படி ஒரு வாய்ப்பு இனிமேல் எப்போதும் வராது என்ற வகையில் மட்டும் வித்தியாசமான ஒரு பத்தாண்டுகள் .. last decade of innocence...people ரேஅல்லி (particularly youngsters) believed in the possibility of change... இன்று மாற்றம் என்பதை நம்புவதே பைதியக்காரத்தனமாகி விட்டது... ஒரு வகையில் இடதுசாரி அரசியலின் கவர்ச்சி 80 களோடு முடிந்துவிட்டது போல தோன்றுகிறது .....

  ReplyDelete
 2. என்ன வேறுபடுகிறீர்கள் என்று புரியவில்லையே. நான் சொல்வதுடன் ஒத்துப்போவதாகத்தானே இருக்கிறது.

  ReplyDelete
 3. வெகுவாக ஒத்துப் போகிறேன் என்று மாற்றி விடலாம்... ஏதோ ஒரு குழப்பம்.... 80 களை நான் அரசியில் ரீதியாக மட்டும் பார்ப்பது கூட குழப்பத்திற்கு காரணமாக இருக்கலாம்

  ReplyDelete
 4. //வெகுவாக ஒத்துப் போகிறேன்// அப்படித்தான் எனக்கும் தோன்றுகிறது. உங்கள் பின்னூட்டத்தின் இரண்டாவது வரியிலிருந்து நான் எதனுடனும் முரண்படவில்லை.

  ReplyDelete
 5. வசந்த்,
  80களில் ஒரு இனம்புரியாத innocence வாழ்க்கையின் எல்லாத்தளங்களிளும் ஊடுருவியிருந்தது. நான் கல்லூரியில் படித்த காலங்களில் (86 வரை) எல்லா மாணவர்களிடம் ஒரு அரசியல் பார்வை இருந்தது.குறிப்பாக திராவிட மற்றும் இடது சாரி சிந்தனைகள். இடது சாரி சிந்தனைகளுக்கு அடிப்படை 70ன் பின்பகுதியிலும் 80ன் முற்பகுதியிலும் தமிழகத்தில் நக்சல்பாரிகளின் வீழ்ச்சி.( பாலன்,கோதண்டராமன் தர்மபுரி வால்ட்டர் தேவாரத்தின் encounter etc...). அப்போது எம்.ஜி.யார். ஆட்சியின் கோமாளித்தனத்திற்கு மாற்றாக கருணாநிதியை ஆதரித்தவர்களும் உண்டு. இளையராஜா உச்சியில் இருந்த காலக்கட்டம். தெரு முனையில் நண்பர்களோடு 1/3 டீ, 1/2 கருப்பு வில்ஸ், (திருட்டு தம்) தாவணி போட்ட பெண்களை சைட் அடித்துக்கொண்டு " அவள் கால் பட்ட மண்ணை ஏலம் போடலாம்" என்ற வரியை இளையராஜா பின்ணனி இசை இல்லாமல் கடிதம் கொடுத்தது. K.S. Raja வின் குரலில் பாத்திமா ஜீவல்லரஸ் வழங்கும் பாட்டுக்கு பாட்டை சிலோன் ரேடியோவில் கேட்டது. BBC ல் வால்வ் வானொலியில் west INDIES( இப்போது இருக்கும் டீமோடு நினைத்துப்பார்த்தல் கண்ணீர் வருகிறது) vs australia மேட்ச்சை gim maxwell குரலில் கேட்ட கமண்டரி. வேலை மற்றும் carrierயை பற்றி அதிகமாக அலட்டிக்கொள்ளாத மனோபாவம்.( பொறியியல் கல்லூரிகள் அதிகமாக இல்லை, தமிழகமெங்கும் கலைக்கல்லூரிகள் அதிகம்) ஜென்சி, கிருஷ்ண சந்தர்,கோவை முரளி,மலேசியா வாசு,ரமேஷ் போன்றவர்களின் குரலோடு ராஜாவின் பிரமிப்பூட்டும் வயலினும் பியனோவுடும் உலாவிய காலம். மாதவி ( எங்கே இந்த அழகு!!), ராதா, ரூபா,சுமலதா, ரதி( இந்த அழகி நடித்த படங்களில் மட்டும் ராஜாவின் இசை பிரத்தேயகமாக இருப்பது ஒரு புதிர்தான்) மற்றும் ரவீந்தர்,விஜயன், நம்மோடு உரையாடிய காலம்.83 உலககோப்பை, 85ல் champion trophy, கபில்,விஸ்வநாத்,சந்திப்பட்டேல்,அமர்நாத், ரிச்சர்ட்ஸ், லாய்டு,ஹொல்டிங்,கோவர்,ஜாகிர் அப்பாஸ்,இம்ரான், சாப்பல்,லில்லி,ஹேட்லி, பவ்லோ ரோசி,ஜொசிமார்,சாக்ரடீஸ்,டாலி தாம்ஸ்சன்,செபாஸ்டியின் கோ,சோட்டா மேயர், போன்றவர்கள் கோலாச்சிய காலம். எஸ்.வி.ஆரின் existentialism மற்றும் தமிழவனின் அமைப்பியல் புத்தகங்கள் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்திய காலம். குடிப்பதும்/காஃபி ஷாப் போவதும்/பிஸ்ஸா சாப்பிடாத காலக்கட்டம். மேலும் குறைந்த‌ வாரப்பத்திரிகைகள்/நாளிதழ்கள்/அதிக சிறுபத்திரிக்கைகள்/தொலைக்காட்சியும் அதிக சாமியார்கள் இல்லாத காலக்கட்டம். oh..what a wonderful era without any excreasence...

  ReplyDelete
 6. வாசு, சுவாரசியாமான பின்னூட்டத்திற்கு நன்றி. பேசவும், எழுதவும் 80களை பற்றி ஏராளமாக இருக்கிறது. சில புள்ளிகளை மட்டும் நான் தொட விரும்பினேன். 80கள் பல விதங்களில் முக்கியமானது. கவி தொட்டு சென்றது போல அது நான் தவறவிட்ட கடைசி சான்ஸ் கூட. இன்று அழிவு என்பது தவிர்க்கவே முடியாத ஒரு நிலைக்கு நாம் சென்று விட்டோம். தவிர்பதற்கான கடைசி வாய்ப்பு 80களில் இருந்ததாக தோன்றுகிறது.

  ReplyDelete
 7. //80களில் ஒரு இனம்புரியாத innocence வாழ்க்கையின் எல்லாத்தளங்களிளும் ஊடுருவியிருந்தது.//

  80களில் ஒரு இனம்புரியாத innocence என் வாழ்க்கையின் எல்லாத்தளங்களிளும் ஊடுருவியிருந்தது.

  FTFY.

  ReplyDelete
 8. ஶ்ரீகாந்த், எனக்கு என்னவோ 80களின் பொதுப்பண்பாக இனம் புரியாத innocence என்பது இருப்பதாக தோன்றுகிறது. ( தனிப்பட்ட நம் வாழ்க்கை மட்டும் அல்லாமல்).

  ReplyDelete
 9. வசந்த்,
  நான் போன் மறுமொழியில் 80களில் இளைஞர்களின் ரசனை,மனோபாவம் மற்றும் அவர்களின் வாழ்க்கையை கோடிட்டுதான் காட்டினேன். இதை 90 மற்றும் 2000களில் உள்ள இளைஞர்களின் வாழ்நிலையோடு ஒப்பிட்டால் நான் சொன்ன innocence என்பதின் ஆழம் புரியும். The end of innocence era started in early eighties. அதாவது வேறு பார்வையில் சொன்னால் 1991ல் வந்த தாராளாயமாதலுக்குப் பிறகு நுகர்வோர் கலாச்சாரம் ஆழமாக வேறுன்றி ஆழமான,நுட்பமான, ரசனையான innocence வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி விழுந்தது. இங்கு 1991ல் தாராளயமாதம் வருவதற்கு முன்னெச்செரிக்கையாக உலக அரசியலில் சில நிகழ்வுகள் நடைந்தேரின. உ.ம். சோவியத் ரஷ்யா உடைவு, பெர்லின் சுவர் உடைப்பு. மற்றும் அமெரிக்கா/பிரிட்டன் IMF, WORLD BANk போன்றவர்களோடு கைகோர்த்து 3ம் உலக நாடுகளை மிரட்டியது.ஆக 90 களிருந்து நாம் பார்ப்பது அதீத உற்பத்தி பெருக்கம் மற்றும் பொருட்களின் ஆதிக்கம்.இதைத்தான் போனமறு மொழியில் excresceance என்று குறிப்பிட்டேன்.பொருட்களின் ஆதிக்கத்தில் சிக்குண்டு தப்பிக்க மார்ககமற்று இருக்கிறார்கள் 80களின் innocence அனுபவித்த உங்களையும் என்னையும் போன்றவர்கள்.

  ReplyDelete
 10. /The end of innocence era started in early eighties. /

  முழுவதும் ஏற்கிறேன்!
  இதே மாதிரி ஒரு கருத்தைத்தான் ஶ்ரீகாந்திற்கு பதிலாகவும் சொல்ல விரும்பினேன்.

  ReplyDelete
 11. ரோஸா, இங்கு நெருக்கடி என்பது சரியான வார்தையாக இருக்காதோ என்று எனக்குத் தோன்றுகிறது.80களில் தமிழ் சினிமா காமெடி சொல்லிக்கொள்ளும்படி இல்லை. ஆனால் நடனம் என்பது 70களை விட 80களில் மேம்பட்டிருந்தது. 50களில் இருந்தே ஆடல் என்பது மிக தீவிரமான ஒன்றாக தமிழ் சினிமாவிற்கே வெளியே இருந்தது என்பதால் சினிமா நடனத்தை சினிமாவுடன் மட்டுமே ஒப்பிடுவது சரியாக இருக்கும் என்பது என்னுடைய அபிப்பிராயம்.

  ReplyDelete
 12. நெருக்கடி என்பதை விட ஒரு பொருத்தமான வார்த்தை கிடைக்காததால் பயன்படுத்துகிறேன். எந்த பொருளில் பயன்படுத்துகிறேன் என்று முடிந்தவரை சொல்லியிருக்கிறேன். இது கலை ஒன்று தொடர்ந்து உயிர்த்திருந்து, அதை துய்ப்பவர்கள் பரிணமித்து அந்த கலையும் அதற்கு ஏற்ப பரிணமித்து நவீனமாக வேண்டியதன் கட்டாயத்தில் எழும் ஒரு பிரச்சனையை நெருக்கடி என்கிறேன்.

  ReplyDelete
 13. ரோசா, முதலில் மீண்டும் நீங்கள் பதிவு எழுத (தொடர்ச்சியாக) ஆரம்பித்ததிற்கு நன்றிகள். ஏதோ ஒரு புதிய உத்வேகத்துடன் எழுதுகிறீர்கள் போலிருக்கிறது. கண்முடித் திறப்பதற்குள் தூவானத்தில் இத்தனை பதிவுகள்!!

  எண்பதுகளில் நான் பதின்ம வயதுகளில் இருந்தேன். சரியாக எண்பது முடிந்து தொண்ணூறு ஆரம்பிக்கும்போதுதான் கல்லூரிக்குச் சென்றேன். மேலும் 80- நடுப்பகுதியில் மதுரையை விட்டு கிராமும் அல்லாத நகரமும் அல்லாத பணகுடிக்கு வந்துவிட்டதால் என்னிடம் தர்க்கபூர்வமான பதில் இல்லை. ஆயினும் என்னால் உங்கள் பதிவுடன் உடன்படமுடிகிறது. காரணம் nostalgia வையும் தாண்டிய ஒரு அகவயமான எண்ணம் என்பதுகளைப் பற்றி என்னிடமும் உண்டு. எங்கள் வீட்டில் தொலைக்காட்சிப்பெட்டி வந்தது எண்பதுகளின் இறுதியில்தான். பல தமிழ் நடுத்தரவர்க்கக் குடும்பங்களிலும் இக்கால கட்டங்களில்தான் வந்திருக்கவேண்டும். தொ.கா. பெட்டி நம் நுண்ணுணர்வை அழிப்பதற்கு ஒரு முக்கியமான காரணம். கிரிக்கெட்டும் இதன் உடன்விளைவாகவே நான் காண்கிறேன். என் கண்முன்னாலேயே பணகுடியின் அனுமன் நதி வளர்ச்சி என்ற பெயரில் சாக்கடையாக மாறியதன் அவலம் நடந்தேறியது. எண்பதுகளின் நடுப்பகுதியில் ஏற்பட்ட வறட்சி இதை வேகப்படுத்திர்று என்றால் மிகையில்லை. ஆற்றுத் தண்ணீர் குடித்தும், கபடி, ஓவியம், மணியாவ்வியம் விளையாடியும் (விளையாட்டின் பெயர் மறந்துவிட்டது) கழித்திருந்த ஆறு கடைசியில் குண்டி கழுவக்கூட லாயக்கில்லாத தண்ணீர் ஓடும் சாக்கடையாகி விட்டது. பால் ஐசும், கேக்கும் வாங்கித்தரச் சொல்லி வீட்டில் கெஞ்சிய நிலைமை மாறி தொண்ணுறுகளில் இவைகள் நினைத்த நேரத்தில் கிடைக்கும் தின்பண்டங்கலாகிவிட்டன. 80- களில் அம்மா செய்யும் கோதுமை அப்பமும், விளக்குமாத்துக் குச்சியின் புளி உருண்டையில் நான் சீனி தடவிச சாப்பிடும் பண்டமுமே நான் விரும்பிச் சாப்பிடுபவையாயாக இருந்தன. இன்னும் இதுபோன்ற எத்தனையோ எண்ணெங்கள்.

  ReplyDelete
 14. 80 களில் தமிழ்க் காலாச்சராம் என்ற புத்தகம் - ராஜ் கவுதமன் எழுதியது (நினைவிலிருந்து எழுதுகிறேன்). படித்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.

  ReplyDelete
 15. அன்புள்ள தங்கவேல், பின்னூட்டங்களுக்கு நன்றி. ராஜ் கௌதமனின் அந்த புத்தகத்தை 10 வருடங்கள் முன்னால் பாதி வாசித்திருக்கிறேன்.

  ReplyDelete