Saturday, January 21, 2017

மண்ணாந்தையியல்

எதிர்வினை செய்தே நேரம் தொலைகிறது என்றுதான் ஃபேஸ்புக்கில் இருந்து முற்றிலும் வெளியேறினேன்; ஆனால் குடிப்பழக்கத்தில் இருந்து வெளிவந்தவன் எதேச்சையாக டாஸ்மாக் போனால் காராபூந்தியா சாப்பிடமுடியும்!

https://www.facebook.com/rajan.k.krishnan/posts/10211948906907393?pnref=story


அறிவுபூர்வமாக பெரிய பெரிய சமாச்சாரத்தை எல்லாம் எடுத்துக்காட்டி விட்டு, சாதாரண காமன்சென்சை தவறவிட்டு எழுதுவதை ஒரு அறிஞர் பழக்கமாகவே மாற்றிக்கொண்டு, ராஜன்குறை அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். இப்போது “தி.மு.க-வின் ரயில் மறியல் போராட்டம் ஏன் இந்த தன்னெழுச்சிப் போராட்டம் போன்றே முக்கியமானது' என்பது. இதை சாதரணமாக தனது தர்க்க நிலைபாட்டில் இருந்து புரியும்படி சொன்னால், எதிர்த்து வாதம் செய்வார்களோ என்கிற சந்தேகத்தில், தெல்யூஸ், விக்டர் டர்னர் சொசைடாஸ் என்று பெரிய ஆட்களை எல்லாம் இழுத்து சொல்லும் விஷயம் என்னவெனில், திரும்பவும் அரசியல் கட்சிகளின் போராட்டம் இந்த தன்னெழுச்சி போராட்டம் போலவே முக்கியமானது என்கிற விஷயத்தை மொட்டையாகத்தானே. வாசகர்கள் தேடிப்போய் படித்து சரிபார்த்து தெளியும் சாத்தியம் இல்லாத சில பெயர்களை சொல்வதன் மூலம் அதை எப்படி மேலும் தெளிவு படுத்துகிறார்?

விஷயம் என்னவெனில் ஒரு மிக பெரிய போராட்ட எழுச்சி சிறிதும் வன்முறையின்றி, இனி வரும் போராட்டங்களுக்கு எல்லாம் முன்னுதாரணமாக மக்களுக்கு மிக மிக குறைந்த அளவில் தொந்தரவுகளை தரும் வகையில் நிகழ்ந்துள்ளது. உதாரணமாக முழு OMRஐ ஆக்கிரமித்தவர்கள் அதன் ஒரு பக்கம் போக்குவரத்தை அனுமதித்து மற்ற பக்கத்தை மட்டும் ஆக்கிரமிக்கின்றனர். போராட்டக்காரர்களிலேயே பலர் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துகின்றனர். மக்களுக்கு உதவுகின்றனர். ஆனால் திமுக பக்கவாட்டில் போராட ஆரம்பித்த உடனேயே ரயிலை மறித்து மிக தீவிர பிரச்சனைகளை பொதுமக்களுக்கு ஏற்படுத்துகிறது. இதுதான் விமர்சனம். எந்த வகையில் சாலையில் நடந்த இந்த போராட்டத்துடன் இந்த ரயில் மறியலும் முக்கியம் என்று அறிவுநேர்மையுடன் எதிர்கொண்டு பேசியிருக்க வேண்டும். ஆனால் சம்பந்தமில்லாமல் தெல்யூஸ் என்று சில பெயர்களை இழுத்து ஜல்லியடிக்கிறார். இதை தொடர்ந்து செய்துகொண்டேயிருக்கிறார். தொடர்ந்து ஒரு நூறு பேர்கள் அதை லைக் செய்துகொண்டும் இருக்கிறார்கள். இந்த மண்ணாந்தை சூழலில் இருந்து வெளியேறுவதை தவிர வேறு எதை என்னை போன்ற ஆள் செய்யமுடியும்!

Sunday, May 8, 2016

மனநிலை

பரிசை நிராகரிக்க இளையராஜாவிற்கு எல்லா உரிமையும் உண்டு. அதற்கு அவர் சொன்ன காரணத்தை யாரும் ஏற்கவேண்டிய அவசியம் இல்லை; எனக்கும் அந்த காரணம் ஏற்பு இல்லை. ஆனாலும் அவர் செய்ததில் கீழ்தரமானதாக எதுவும் இல்லை; தரத்திற்கு எந்த சம்பந்தமும் இல்லாத, அவர் மனதிற்கு பட்டதை அவர் செய்திருக்கிறார். அறிவு விரோத தமிழ் மனநிலை இதற்கு வழக்கம் போல அவரை திட்ட கிளம்புவதில் ஆச்சரியம் இல்லை. அவரது அறச்சீற்றமான 'அறிவிருக்கா?'விற்கு நிகழ்ந்த எதிர்வினையே எவ்வளவு கேவலமானது, சமுகத்தின் மனவக்கிரத்தை காட்டக்கூடியது என்று இங்கே அறிவாளிகள் என்று அறியப்பட்டவர்களுக்கே புரிந்ததில்லை; அதற்கு இது பரவாயில்லைதான்.
கொஞ்ச வருடங்கள் முன்னால் ஜானகி பத்ம பூஷன் விருதை நிராகரித்தார். அதற்கு அவர் சொன்ன காரணமும் ('பாரத் ரதனா அளித்தால் வாங்குவேன்' என்று) பலருக்கு ஏற்பில்லாமல் இருக்கலாம்; சொல்லப்போனால் லதா, ஆஷா, சுசீலா அளவிற்கு மாபாடகியாக ஜானகியை ஏன் கருத முடியாது என்று தகவல் பூர்வமாக என்னால் முன்வைக்க முடியும்; மறுக்கவும் வாய்ப்புண்டு. ஆனாலும் அதுவும் அவருக்கு உரிமையுள்ள ஒரு செயல்தான். இங்கே கவனிக்க வேண்டியது, ஜானகியின் செயலுக்காக மக்கள் அவரை பாராட்டினார்கள்; ஒருவர் கூட திட்டவில்லை. அப்போதே எழுதினேன், ராஜா இதை செய்திருந்தால் தமிழ்நாட்டு அற்பங்கள் எப்படி திட்டித் தீர்த்திருப்பார்கள் என்று. இப்போது அதையே செய்கிறார்கள். இதுதான் இவர்கள் மனநிலையும் தரமும்.

ரசனை 02/05/2016

'மோகமுள்' திரைப்படம் பலருக்கு பிடித்திருந்திருக்கலாம்; ஆனால் மோகமுள்' நாவலை இருபது அருகிலான பருவத்தில் வாசித்து, பின் மீண்டும் மீண்டும் வாசித்துள்ளவர்கள், படம் பார்த்து அவஸ்தைபட்டு, அதன் கொலைபாதகத்தை உணரலாம். தமிழில் தீவிர இலக்கியவாதியாக அறியப்படும் இந்திரா பார்த்தசாரதி, ஹிந்தி மொழிமாற்று சீரியல் போன்ற படத்தை க்ளாசிக் ரேஞ்சிற்கு புகழ்ந்து 'சுபமங்களா'வில் ஒரு விமர்சனம் எழுதியிருப்பார். அது பரவாயில்லை. படத்தில் ஒரே அற்புதமான இசையை பற்றி, 'இசையை அடிநாதமாக திரைக்கதை கொண்ட படத்தில் இசை சிறப்பாக இருந்திருக்கலாம் என்பதை தவிர வேறு குறையில்லை' என்று முடித்திருப்பார். (ஞாபகத்திலிருந்து எழுதுவது.) எனக்கு இந்த தமிழ் இலக்கியவாதிகள் என்ன விதம் என்று என்றுமே வகைப்படுத்த முடிந்ததில்லை

தேர்தல் அமைப்பு -2 24/04/2016

/”அவர் ஜெயிக்க வாய்ப்பில்லையே. ஜெயிக்க வாய்ப்புள்ள வேட்பாளருக்குத்தான் போடுவோம்” என்றார்கள். நான் ”ஐயா,நீங்கள் வாக்களித்தால் அல்லவா அவர் ஜெயிக்க முடியும்?” என்றேன். “இல்லை ,இப்போதிருக்கும் வேட்பாளர் வலிமையானவர் .அவரை தோற்கடிக்கும் அளவுக்கு வலிமையானவருக்கே வாக்களிக்கவேண்டும். நாம் வாக்களிக்கும் வேட்பாளர் ஜெயிக்க வேண்டும் இல்லையென்றால் நமது வாக்கு வீணாகிவிடும்” என்றார்கள்.
ஒருமணிநேரத்துக்கு மேலாக அவர்களிடம் விவாதித்த போதும் கூட நான் நினைப்பதை அவர்கள் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஒரு சிறந்த வேட்பாளருக்கு வாக்களிப்பதுதான் வாக்காளராகிய நமது கடமை. எவ்வளவு கீழ்மகனாக இருந்தாலும் வெற்றி பெறும் ஒரு வாக்காளருக்கு நமது வாக்கை போட்டோம் என்ற நிறைவு நமக்கு ஏற்படவேண்டுமென்பது எந்த வகையிலும் ஜனநாயகத்துக்கு பொருத்தமில்லாத முற்றிலும் அசட்டுத்தனமான நம்பிக்கை. ஆனால் படித்தவர்களிடமும் இது உள்ளது./
ஜெயமோகனின் கட்டுரை வாசித்த உடனே அப்படியே எதிர்வினை செய்தேன். இப்போது சிலர் இதை மேற்கோள் காட்டியதை கண்டு மீண்டும் உடனே இந்த எதிர்வினை. 
ஜெயமோகன் அந்த 'பாமரின்' வாதத்தை அசட்டுத்தனம் என்று சொல்வது மிக விநோதமானது. உண்மையில் ஜெயமோகனும், ஜெயமோகன் சொன்னதை முன்வைப்பவர்களும் பேசுவதுதான் அசட்டுத்தனமானது; அல்லது அசட்டு லட்சியவாதம் கொண்டது. லட்சியவாதத்திற்கு ஒரு கவர்ச்சி இருப்பதால் அது அசட்டுத்தனம் இல்லை என்றாகிவிடாது. "நாம் வாக்களிக்கும் வேட்பாளர் ஜெயிக்க வேண்டும் இல்லையென்றால் நமது வாக்கு வீணாகிவிடும்” என்று சொல்வதுதான் - தேர்தல் நமக்கு தரும் வாய்ப்புகளை கணக்கில் கொண்ட - யதார்த்தத்துடன் நெருங்கிய நடைமுறை வாதமாக உள்ளது. (என் வாதம் அப்படியே இதுவல்ல.) 
தான் நினைக்கும் ஆதர்ச வேட்பாளருக்கு வாக்களிப்பதால், தான் தோற்கடிக்க நினைப்பவர் வெற்றிபெற நேர்ந்துவிடும் என்பதுதான் தேர்தல் கணக்கின் கொடூர யதார்த்தம். தான் தோற்கடிக்க நினைப்பவரை தோற்கடிக்கக் கூடிய வலுவானவர்க்கு அதனால்தான் வாக்களிக்க நினைக்கிறார்கள். பல நேரங்களில், அதுவும் குறிப்பாக இன்றய காலகட்டத்தில் தேர்தலில் வாக்களிப்பது என்பது குறிப்பிட்டவரை (குறிப்பிட்ட கட்சியை) தோற்கடிப்பதைத்தான் நோக்கமாக கொண்டுள்ளது; நாற்பது வருடங்களாக உள்ள தேர்தல் கரிசனம் தோற்கடிப்பதை மையப்படுத்தித்தான் நடக்கிறது. இது ஆரோக்கியமானது என்று சொல்ல வரவில்லை. இந்த தேர்தல் அமைப்பு வாக்காளர்களுக்கு உண்மையாக அளிக்கும் வாய்ப்பும் அதுதான். இந்த தேர்தலிலிலேயே 'லட்சியவாதமாக' யோசிக்கும் பலரின் அணுகுமுறைகளால் ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வரும் பேராபத்திற்குதான் வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது. 
வலுவானவர்களாக தோற்றமளிப்பவர்களை தவிர்த்து, வலுவற்ற நமது லட்சிய வேட்பாளருக்கு அளிக்கும் வாக்கு - தேர்தலின் உண்மையான நோக்கத்தை பொறுத்த மட்டில்- வீணாகவில்லை என்பதற்கு இவர்கள் எந்த உருப்படியான வாதத்தையும் முன்வைக்கவில்லை. ரொம்ப காலமாக சொல்லப்படும் நைந்துபோன ரொமாண்டிக்கான லட்சியவாதத்தை மட்டுமே முன்வைக்கிறார்கள். இதை 70, 80களில் முன்வைத்த துக்ளக் கூட, இப்படி அண்மைய 25 ஆண்டுகளில் பேசுவதில்லை என்பதை கவனிக்க வேண்டும். இந்த லட்சிய வாத்த்தை பொதுவில் பேசும் பலர், அதற்கு நேர்மாறாக திமுகவை தோற்கடிக்க ஜெயலலிதாவுடனோ, விஜயகாந்துடனோ சமரசம் செய்ய தயாராகா இருப்பதையும் கவனிக்க வேண்டும்.
லட்சியவாதத்தை முன்வைத்து பேசுவதில் தவறில்லை. அதற்கான நடைமுறை முகாந்திரம் நாளையோ இன்றோ கூட தோன்றலாம். ஒருவேளை ஜெயமோகனே கூட, 'இன்று நாம் நம் லட்சிய வேட்பளருக்கு வாக்களித்து ஒரு புதிய போக்கை தோற்றுவித்தால், ஒரு இருபது வருடங்களில் உண்மையான மாற்றம் நிகழும்' என்று சொன்னால் அதில் பொருளுண்டு. ஆனால் இருக்கும் சாத்தியங்களை உணர்ந்து நடைமுறைவாதியாக செயல்படுபவரை அசட்டுத்தனம் என்று வர்ணிப்பது அறிவுமல்ல, நாகரிகமும் அல்ல.

தேர்தல் அமைப்பு -1 23/04/2016


பொலமிக்ஸ்-2 07/04/2016

கிண்டலாயினும் பேரறிஞர் என்று என்னை அழைத்ததற்கு நன்றி. நான் என்னை அறிஞனாக, அறிஞனாக மட்டுமே கருதுகிறேன். நண்பரையும் நான் அறிஞராகவே (கிண்டலின்றி) கருதுவதாலேயே எதிர்வினை. 
//எழுதியதை ஒழுங்காகப் படிக்காமல் பக்கம் பக்கமாக எதிர்வினையாற்றுவது சிலருக்கு கை வந்த கலை.//
அறிஞர் நண்பர் எழுதிய ஒரு வரி மட்டுமின்றி, மற்றவர்கள் எழுதியதையும் சேர்த்து பொதுவாக எதிர்வினையாற்றியது அது. இம்முறை நண்பர் எழுதியதை நேரடியாக எதிர்கொண்டு எதிர்வினை ஆற்றினால் போச்சு!
//"தமிழக அரசியலில் யாராவது, ஒரு பார்பனரை நோக்கி 'இவர் புரோகிதம் செய்யப்போகலாம்" என்று இழிவு படுத்தும் நோக்கில் சொல்லியுள்ளார்களா" என்று ஒரு பேரறிஞர் கேட்கிறார். நான் அப்படிக் கேட்கிறார்கள் என்று எங்கே சொல்லியிருக்கிறேன்?//
அப்படி கேட்கிறார்கள் என்று நண்பர் சொன்னதாக சொல்லி நான் எங்கே கேள்வி எழுப்பியுள்ளேன்? வைகோ கலைஞரை சொன்னதை போல, அல்லது அதற்கு இணையான ஒன்றை -சாதிய நோக்கில் பார்பனர்கள் குறித்து - யாரவது சொல்லியுள்ளார்களா, அப்படி சொன்னாலும் அதில் இழிவான சாதிய மதிப்பீடு இருக்கிறதா, இருப்பது சாத்தியமா என்பது நேரடியாக தற்போதய பிரச்சனையுடன் தொடர்புள்ள ஒரு கேள்வி. கலைஞரை சாதித்தொழில் செய்யப்போகச் சொல்லி திட்டுவதைப் போல, ஒரு பிராமண சாதியை சேர்ந்த ஒருவரை திட்டுவதில்லை என்பதையும், அப்படி திட்டினாலும் கூட அதில் இழிவான மதிப்பீடு இல்லை என்பதையும் தான் சுட்டியுள்ளேன். எழுதியதை படித்தாலும், அதன் அடிப்படையான தர்க்கத்தை புரிந்து கொள்ளாமல், எதிராளியை "எழுதியதை ஒழுங்காகப் படிக்காமல் பக்கம் பக்கமாக எதிர்வினையாற்றுவதாக' சொல்வது என்ன வகை கலையோ!
//நான் சொல்வது மிகவும் எளிமையானது. தமிழகத்தில் பிராமணர் ஒருவர் எந்தத் தவறு செய்தாலும் அவரது சாதி குறித்துப் பேசுவது, திட்டுவது மிகவும் சாதாரணமானது. திட்டுபவர்களை யாரும் கண்டிப்பதில்லை. //
முதலில் இந்த கூற்றை நான் முற்றிலுமாக மறுத்துள்ளேனா என்பதை கவனிக்கவும். 'அரசியல் சார்ந்த முத்திரை', 'போலெமிகல் வசை' 'அரசியல் சார்ந்த வெறுப்பு', 'கருத்தை எதிர்கொள்ள முடியாமல் எதிர்வினையாற்றிய வசை', 'ஒத்துவாராதவர்களை எதிர்கொள்ள செய்த முத்திரை குத்தல்'' என்றெல்லாம் எதை பற்றி சொல்லியுள்ளேன்? திட்டுபவர்களை யாருமே கண்டிப்பதில்லை என்பது உண்மையா? எத்தனை பேர்கள் கண்டிக்கிறார்கள், ஏற்கிறார்கள் என்று ஒரு கணக்கு உள்ளதா? என்னளவில் நான் கண்டித்து எழுதியுள்ளேன். சாதிக்கு சம்ப்ந்தமில்லாத ஒரு மேட்டரில் சாதியை இழுத்து பேசுவது கண்டிக்கத் தக்கதுதான். அப்படி ஒரு போக்கு தமிழகத்தில் இருப்பதை ஏற்கிறேன்; எதிர்க்கிறேன். அ.மார்க்ஸ் ராஜன்குறையை, ராமானுஜத்தை திட்டியதை மட்டுமல்ல, பத்ரியை திட்டியதற்கும் என் எதிர்ப்பை தெரிவித்துள்ளேன்; நிறைய பேர்கள் தெரிவித்துள்ளனர். அத்தோடு பக்‌ஷிராஜனையும், ராஜன்குறையையும் 'மெகாலேயிஸ்ட் பார்ப்பனர்' என்று அரவிந்தன் நீலகண்டன் திட்டினாலும் நான் எதிர்க்கிறேன். ஜெயமோகன் தர்க்கம் ஒத்துழைக்காத போது, ராஜன்குறையின் ஜாதியை சுட்டி எதிர்வினையாற்றியதையும் கண்டிக்கிறேன். பெரியாரிஸ்டுகளுக்கு மட்டுமல்ல, இந்துத்வவாதிகளுக்கும், ̀காந்திய'வாதிகளுக்கும் கூட இப்படி கருத்தை பார்ப்பனராக மாற்றும் அணுகுமுறை வசதியாக உள்ளது. ஆனால் பெரியாரிஸ்ட்டுகளை பொறுத்தவரை அது கருத்தியலுடன் ஒத்து அவர்கள் காட்டும் நேர்மை; இந்துத்வவாதிகளுக்கு அது ஹிபாக்ரசி. 
ஆனால் பார்பன அடையாளம், பார்பனிய அரசியல் என்று பேசவே கூடாது என்பது ஏற்கக்கூடியது அல்ல. சோவின் 'எங்கே பிராமணன்?' நூலை இதையெல்லாம் பேசாமல் அலச முடியுமா? ஒரு எக்ஸ்ட்ரீம் உதாரணமாக இதை சொன்னேன். மற்றபடி சமூகத்தில் இருப்பதன் பிரச்சனைகளை சம்ப்ந்தத்துடன் பேசித்தான் ஆகவேண்டும்.
//ஆனால் மற்றச் சாதிகளைச் சார்ந்தவர் தவறுகள் செய்தால் அவர்கள் சாதிகள் அடையாளம் காணப்பட்டு திட்டப்படுவதில்லை. திட்டினாலும் கண்டனங்கள் உடனே வருகின்றன கலைஞர் விஷயத்திலும் அவ்வாறே நடந்தது. அவரது சாதி குறித்துப் பேசக் கூடாது என்று சொல்லப்பட்டது. .///
ஒருவேளை பிராமணர்கள் அளவுக்கு மற்றவர்கள் திட்டப்படவில்லை என்று ஒரு வருத்தம் நண்பருக்கு இருந்தால் அதில் நியாயம், இருக்கலாம். மற்றபடி கடந்த இருபது வருடங்களில் பலரது சாதியும் விலாவாரியாக பேசப்பட்டுள்ளது. தங்கர் பச்சான், கோணங்கி, எஸ்ரா, புதுமைப்பித்தன், பாலா, சசிக்குமார்… எழுதும்போது உடனடியாக வந்த உதாரணங்கள். எந்த ஜாதிக்கு உதாரணம் வேண்டுமானாலும் எடுத்துக் காட்ட முடியும். 
//பேரறிஞர் மேலும் சொல்கிறார் -"சாதிய இழிவு படுத்தலுக்கும், அரசியல் சார்ந்த சாதிய முத்திரைக்கும் வித்தியாசம் தெரியாத மட்டையடி தர்க்கம், ஒரு போலெமிக்ஸ்ஸிற்கு முகாந்திரமான இன்னொரு போலமிக்ஸ் மட்டுமே."
அப்படியா?நாதசுரத்தைப் பற்றிச் சொன்னால் அது சாதிய இழிவு படுத்தல். பூணூலை உருவிக் கொண்டு ஒரு கூட்டம் கிளம்பி விட்டது என்று கருணாந்தி சொன்னால் அது பாராட்டு.//
நான் இரண்டாவதை பாராட்டு என்றா சொல்லியுள்ளேன்? நாதஸ்வரத்தை பற்றியும், உலகின் ஆதித் தொழில் பற்றியும் சாதியமாக பேசுவதும் "பூணுலை உருவிக்கொண்டு ஒரு கூட்டம் கிளம்பி விட்டது என்று சொல்வதும் ஒன்றல்ல என்பதுதான் என் நிலைபாடு. இரண்டையும் எதிர்க்கலாம். ஆனால் இரண்டும் ஒன்றல்ல, இரண்டின் மதிப்பீட்டு சட்டகங்களும் வேறு. 
பார்ப்பனியம் என்று ஒன்று இந்த சமூகத்தில் இல்லை என்றும், அதை பற்றி பேசுபவர்கள் பெரியாரிய லூனாடிக்ஸ் என்று அறிஞர் நினைக்கலாம். ஆனால் பார்ப்பனியம் என்கிற ஒரு மானிட விரோத பண்பும், அது சார்ந்த அரசியலும் இருப்பதாக சிலர் நினைக்கலாம்; அப்படி நினைப்பவர்கள் அதை எதிர்த்து செயல்படும் அரசியலுக்கான ஒரு சாத்தியம் உள்ளது என்பதையாவது அறிஞர் ஏற்கவேண்டும். அந்த அரசியல் நியாயமான பல எதிர்ப்புகளையும் செய்யலாம்; பல தனிப்பட்ட வெறுப்புகளையும் அது சார்ந்த வசைகளையும் - எல்லா எதிர்ப்பு அரசியல்களையும் போலவே - உருவாக்கவும் சாத்தியம் உள்ளது. ""பூணுலை உருவிக்கொண்டு ஒரு கூட்டம் கிளம்பி விட்டது" என்று சொல்வது இந்த இரண்டின் வெளிபாடாகவும் இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம் என்பது என் பார்வை. உதாரணமாக திமுக ஆட்சியின் ஊழலை விமர்சிக்கும் போது அப்படி சொன்னால் அது இரண்டாவதன் வெளிபாடு; கலைஞர் ராமானுஜன் டீவி தொடர் எழுதுவதற்கு ஒரு கூட்டம் திட்டுவதையும், நக்கல் அடிப்பதையும் முன்வைத்து சொன்னால் முதலாவதன் வெளிபாடு. இந்த இரண்டு வகை வெளிபாடுகளும், ஜாதித்தொழிலை முன்வைத்து ஒருவரை திட்டுவதும் நிச்சயம் ஒரே தரமானது அல்ல, அல்ல. 
நேரடியான ஒரு உதாரணம் தருகிறேன். 13 வருடங்கள் முன்பு, திருமாவும் ராமதாசும் இணைந்து அரசியல் செய்து கொண்டிருந்த போது, வலைப்பதிவில் ஒருவர் 'திருமா ராமதாசிற்கு மலம் சுமக்கும் வேலையை செய்வதாக' எழுதினார். கவனிக்கவும் அவர் ராமதாஸ் திருமாவிற்கு செய்வதாக எழுதவில்லை, அப்படி எழுதியிருந்தாலும் அது ராமதாசை இழிவு செய்யாது என்பதுதான் நான் மீண்டும் மீண்டும் வலியுறுத்துவது. என்ன கோபம் வந்தாலும் நண்பர் பக்‌ஷிராஜனையோ, ஜெயலலிதாவையோ யாரும் இப்படி வர்ணிக்கமாட்டார்கள். மிஞ்சிப்போனால் 'பூணுல் வெளிவந்துவிட்டது' என்றுதான் சொல்லமுடியும். பூணுலை பெருமையாக நினைப்பவர்கள் அதில் புண்பட என்ன உள்ளது! பூணுலை துறந்தவர்கள் இதற்கு - ஒரு சாதிய வசையின் அளவிற்கு - புண்படும் முதிர்ச்சியற்றவர்கள் எனில் யார்தான் என்ன செய்ய முடியும்! மற்றபடி திருமாவிற்கு நிகழ்ந்த இழிவுடன் இதை ஒப்பிட முடியுமா? 
//அரசியல் சார்ந்த சாதிய முத்திரையா? அது என்ன?
ஒருவர் செய்த தவறுக்கு அவன் பார்ப்பான், அவன் குலமே இப்படித்தான் செய்யும் என்று சொல்வது சாதிய இழிவு படுத்துதல் என்றுதான் நான் நினைக்கிறேன். இது தமிழகத்தில் திரும்பத் திரும்பச் சொல்லப்பட்டு வருகிறது. இப்படிச் சொல்வது குலத்தொழிலைக் குறித்துச் சொல்வதைப் போலவே இழிவானது என்று நான் கருதுகிறேன்.
இது மட்டுமல்ல. தவறே செய்ய வேண்டிய தேவையில்லை. பார்ப்பனக் குலத்தில் பிறந்ததே தவறு என்கிறார்கள் பெரியாரடியார்கள்.
இது விடுதலையிலிருந்து:"நெருப்பு மட்டும், தான் எந்தப் பொருளுடன் சேர்கிறதோ, அந்தப் பொருளை எரித்து அழித்துவிடும். சேர்ந்தாரைக் கொல்லும் குணம் நெருப்புக்கு இருப்பதனால் அதைச் சேர்ந்தாரைக் கொல்லி என்றார் வள்ளுவர்.
பார்ப்பனர்களின் குணமும் அதுதான் என்பதால்தான் தந்தை பெரியார் பார்ப்பனர்கள் எவ்வளவு முற்போக்கானவர்களாக இருந்தாலும், தன்னுடன் சேர்க்காமலே இறுதிவரை இருந்தார். இதில் தீண்டாமையும் இல்லை, வேறுபாட்டுக் கொள்கையும் இல்லை.!"
இது அரசியல் சார்ந்த சாதி முத்திரையா? அல்லது சாதிய இழிவு படுத்தலா?//
இதில் அரசியல், அரசியல் சார்ந்த சாதிய முத்திரை இருந்தாலும், அதன் விளைவான இனவாதத்தை ஒத்த கருத்து இருப்பதாக தோன்றினாலும், இது சாதிய இழிவு படுத்தல் இல்லை; அரசியல் சார்ந்த முத்திரை என்றும் சுருக்கி விட முடியாது. அதே நேரம் ஏற்கவோ, அங்கீகரிக்கவோ கூடிய கருத்தும் அல்ல. சிக்கலான பல பிரச்சனைகளை கொண்டது என்பது என் கருத்து. நிஜமாகவே விரிவாக பக்கம் பக்கமாக முழு கட்டுரைதான் எழுத வேண்டும். துரதிர்ஷ்டவசமாக இப்போது முடியாது.

போலமிக்ஸ் -1 06/04/2016

எதிர்பார்த்தது போலவே பிராமணர்களை திட்டவில்லையா, பார்பனியம் என்று பேசவில்லையா என்று மட்டையடி லாஜிக்கை ஆரம்பித்து விட்டார்கள். இன்னொரு பக்கம் கிராவிடேஷனல் வேவ்ஸ் பற்றி வியப்பவர்கள், இந்த பக்கம் இப்படி அம்புலிமாமா தர்க்கத்தில் ஜல்லியடிப்பதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை. 
தமிழக அரசியலில் யாராவது, ஒரு பார்பனரை நோக்கி 'இவர் புரோகிதம் செய்யப்போகலாம்" என்று இழிவு படுத்தும் நோக்கில் சொல்லியுள்ளார்களா? சமூகத்தில் வழிபடும் வகையிலான மதிப்பிட்டிற்கு உரிய ஒரு தொழிலை, நீங்கள் வேதம் படிக்க போகலாம் என்று ஒருவேளை யாராவது ஒரு பார்ப்பனரை நோக்கி சொன்னால் அதுவும், மற்றவர்களை அவர்கள் சாதிய தொழிலை செய்யலாம் என்று சொல்வதும் ஒரே மாதிரியானதா? சுய விமர்சனம்தான் கிடையாது, கொஞ்சம் கூடவா லாஜிகலா யோசிக்க மட்டீர்கள்! பார்ப்பனிய அரசியல் என்று குற்றம் சாட்டுவது வேறு; அதுவும் கூட ராமதாசை சாதிய அரசியல் செய்வதாகவும், பலரை தேவர்சாதி அரசியல் செய்வதாகவும், வைகோவை கூட அந்த மாதிரி கொஞ்ச காலம் முன்னாடி சொன்னார்களே. சாதிய அரசியல் செய்வதாக சொல்வதும், சாதிச் சார்பு இருப்பதாக சொல்வதும், சாதித்தொழிலை செய்யப்போகலாம் என்று இழிவாக சொல்வதும் ஒரே தரமானதா? மதிப்பீடு சார்ந்த இழிவுபடுத்தலுக்கும், அரசியல் சார்ந்த முத்திரைக்கும், போலெமிகல் வசைக்கும் வித்தியாசம் தெரியாமல் இவர்கள் மட்டையடிக்கவில்லை; மட்டையடிப்பது வசதியானது என்பதால் மட்டையடித்துக் கொண்டிருக்கிறார்கள். 
சாதியால் பலவும் தீர்மானிக்கப்படும் சமூகத்தில், சாதிய சார்பு பற்றியும் அது சார்ந்த அரசியல் பற்றியும் பேசாமலிருக்க சாத்தியமில்லை. ஆனால் அவை பல நேரங்களில் அரசியல் சார்ந்த வெறுப்பாகவும், கருத்தை எதிர்கொள்ள முடியாமல் எதிர்வினையாற்றிய வசையாகவும், ஒத்துவாராதவர்களை எதிர்கொள்ள செய்த முத்திரை குத்தலாகவும் இருக்க வாய்ப்புகள் உண்டு. அவைகளை இனம் பிரித்து எதிர்கொள்வதும் எதிர்ப்பதும்தான் அறிவு அணுகுமுறை. சாதிய இழிவு படுத்தலுக்கும், அரசியல் சார்ந்த சாதிய முத்திரைக்கும் வித்தியாசம் தெரியாத மட்டையடி தர்க்கம், ஒரு போலெமிக்ஸ்ஸிற்கு முகாந்திரமான இன்னொரு போலமிக்ஸ் மட்டுமே.

கலைஞர் 06/04/2016


நடுநிலை குறித்து -1 04/04/2016

பாசாங்குவது அல்ல நடுநிலை; அறிவு பூர்வமாக அணுகி விமர்சிப்பதும், கறாராக அதை வெளிபடுத்துவதும்தான் நடுநிலை. 2ஜி ஊழலை நியாயப்படுத்தி கழகக் கண்மணி எழுதியதை, இன்னொரு ஸ்பெக்டிரம் ஊழலில் மாட்டி திடீர் திமுகவாக மாறியவர் பகிர்ந்ததை, முதலீட்டிய எதிர்ப்பாளர் - தான் கற்பித்துக் கொண்ட சார்பின் காரணமாக - பகிர்வதுதான் அருவருப்பானது.
தேர்தல் நேரத்தில் திமுகவையே ஆதரித்தாலும் இதை மீள்பதியாமல் இருக்க முடியவில்லை.

உள்முரண் 04/04/2016

'தேவர் மகன்' படத்தின் நாசர் பாத்திரம் பகைமையை தேவர் சமுதாயத்திற்குள்ளேயே வளர்ப்பதன் மூலம், மற்றவர்கள் குறுகிய காலத்திற்கேனும் நிம்மதியாக இருக்கும் வாய்ப்பை தன்னை அறியாமல் அளிக்க முயல்கிறது. நாசர் பாத்திரத்திற்கு எதிராக, ஆனால் கிட்டத்தட்ட அதே ஜாதிப்பெருமிதத்தை நேர்மறையாக கொண்டிருக்கும் கமலின் பாத்திரம், தேவர் சமுதாயத்தின் உள்சண்டையை சமாதானப்படுத்தும் முயற்சிகளின் மூலம் அந்த சமூகத்தை வலுப்படுத்தி, மற்றவர்களின் நிம்மதியை கெடுக்க முயல்கிறது. அந்த வகையில் நாசர்தான் good, கமல்தான் evil.

அசல் + நகலின் கலவை 25/03/2016

ஜெயலலிதா மீதான அடித்தட்டு மக்களில் ஒரு பகுதியினரின், குறிப்பாக பெண்களின் தூய்மையான அன்பு மேலோட்டமான புரிதலுக்கு அப்பாற்பட்டது. நானிருக்கும் அடுக்ககத்தில் வேலை செய்யும் இரு பெண்கள், வெள்ள அனர்த்தத்தில் தீவிரமாக பாதிக்கப்பட்ட பிறகும், அதே மாறா அன்புடன் இருப்பதை அறியாமை என்பதா, ஏதோ ஒன்றின் வடிகால் என்பதா என்று புரியவில்லை. இந்த வெள்ள அழிவிற்கு காரணமே இந்த அரசுதான், வேறு எந்த அரசும் இவ்வளவு மோசமாக நடந்து கொண்டிருக்காது என்று என் கருத்தை விளக்க முயற்சித்தேன். எது சொன்னாலும் அதற்கு ஒரே பதிலாக கருணாநிதியை திட்டிக் கொண்டு இருந்தவர்கள், ஒரு கட்டத்தில் என்னையும் சபிக்க தொடங்க பேச்சை நிறுத்த வேண்டியதாகிவிட்டது. அவர்கள் அப்படி இருப்பது எனக்கு உவப்பாக இல்லையெனினும், அவர்கள் - எம்ஜியார் மீது, அதன் தொடர்சியாக - ஜெயலலிதா மீது வைத்திருக்கும் அன்பில் எந்த போலித்தனமும் கிடையாது.
இன்னொரு தரப்பு இருக்கிறது; இந்த சமுகத்தின் அதிகாரத்தை பெருமளவு நுகர்ந்து கொண்டிருக்கும் தரப்பு. ஒரு பக்கம் ஊழல் குறித்தும், சமூக சீர்கேடுகள் குறித்தும், இன்னும் ஜாதி வெறியில் சிலர் வெட்டிச்சாவது குறித்தும் கூட ரொம்ப தார்மிகமாக கருத்துக்கள் இவர்களுக்கு உண்டு. இந்த கருத்துக்களுக்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாமல் ஜெயலலிதாவை ஆதரிப்பார்கள். இவர்களும் எல்லாவற்றிற்கும் தங்கள் தரப்பின் ஒரே நியாயமாக திமுகவின் சீர்கேடுகளை முன்வைப்பார்கள். ஆனால் அடித்தட்டு மக்களின் உண்மைக்கு நேர் எதிரான அளவு பொய்மை கொண்ட தரப்பு இவர்களுடையது.
மேலே சொன்ன இரண்டு தரப்பினரின் கலைவையாக - முதல் தரப்பின் அறியாமையும், இரண்டாம் தரப்பின் பொய்மையும் உருக்கி சேர்ந்ததுபோல் - விஜய்காந்தை மாற்றத்தின் பிரதிநிதியாக முன்வைப்பவர்கள் எனக்கு தோன்றுகிறார்கள்.