Monday, December 14, 2015

ஆய்வுக்கட்டுரை

(எதிர்வினை 14 நவம்பர்)

எல்லா பக்கத்திலிருந்தும் மேற்கோள்களை உருவி, முரண்பாடுகளை கலவையாக்கி, ரொம்ப சிதறலான சமாச்சாரத்தை டீல் செய்வது போல் குழப்பப் பாவனை செய்து, மேலோட்டமான ஒரு விஷயத்தை அரைகுறையா சொன்னா அற்புதமான ஆத்ரோபாலஜி மற்றும் கலாச்சார ஆய்வுக் கட்டுரை எழுதிவிடலாம் என்று தெரிகிறது; விதிவிலக்கா சிலது நிச்சயம் இருக்கும்.

2, நவம்பர் FB

தமிழக அரசு பாடகர் கோவனை தேசத்துரோக வழக்கில் கைது செய்திருப்பதை எந்த வகை ஜனநாயக நெறிகளை பேசுபவரானாலும் கண்டிக்காமல் இருக்க முடியாது; ஜனநாயக நெறிகளை சந்தர்ப்பத்திற்கும் தங்கள் அரசியலுக்கும் ஏற்ப வளைத்துக் கொள்பவர்களும், தக்காளி சட்னி -ரத்தம் லாஜிக் கொண்டவர்களும் மட்டுமே நியாயப்படுத்த முடியும். பயம் காரணமாகவோ, வேறு அரசியல் கணக்குகள் காரணமாகவோ பலர் வெளிப்படையாக கண்டிக்காமலும் இருக்காலம். கண்டனத்தை அமைதியான முறையில் பொதுக்களத்தில் தெரிவித்தால் கூட, எதேச்சதிகாரத்தை அரசு பிரயோகிக்கும் என்கிற யதார்த்தம்தான் நிலவுகிறது. இத்தனை நியாயங்கள் இருந்தாலும், எந்த வித வன்முறையையும் பிரயோகிக்க தயங்காத அரசின் காவல் துறையை எதிர்கொள்ளும் போராட்டக் களத்திற்கு, போராட்டம் சாத்வீகமாக இருக்கப் போவதில்லை என்ற நிலையில், குழந்தைகளை அழைத்துச் செல்வது எவ்வித போராட்ட அறமும் அற்றது.

ஞாநி மீது மை!

(22, அக்டோபர் FB)  

ஞாநியை ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில்  ̀பாப்பான்' என்று திட்டி கருத்தியல் மையடித்தவர்கள், இப்போது துலமாக மையடிக்கப் போவதாக சொன்ன செயலை கண்டிப்பது சுவாரசியமாக உள்ளது. தன்னை பெரியாரிஸ்ட் என்று சொல்லிக் கொள்பவரின் மனதின் உள்ளே 'சோதான் அமர்ந்து இருக்கிறார்' என்று சொல்வதை விட, ஒரு சிவசேனாக்காரன் பூசப்போகும் கருப்பு மை என்ன கறையை அவர் மீது சேர்க்கப் போகிறது? 'இந்துத்வ வாதிகளை விட ஆபத்தான் ஆள் இந்த ஞாநிதான்' என்றும், 'முற்போக்கு வேஷமிடும் ஒரு ஆரெஸ்ஸெஸ்காரர்' என்றும் ஞாநியை திட்டியதைவிடவா பெரிய கறையை சிவசேனா மையடித்து உருவாக்கிவிட முடியும்! மற்றவர்களாவது ஏதோ அரசியல் காரணங்களுக்காக ஞாநி மீது கருத்தியல் மை அடித்தார்கள். எந்த அரசியல் உள்ளடக்கமும் இல்லாமல், தமிழகத்தின் போற்றவேண்டிய பொக்கிஷத்தின் மீது கருத்தியல் மை அடிப்பதில் ஞாநி எவ்வளவு தாழ்ந்துபோகக் கூடியவர் என்பதற்கும் உதாரணங்கள் ஒன்று இரண்டு என்ற எண்ணிக்கையில் இல்லை. அவரது வாதங்களுக்கு எதிரான அசைக்க முடியாத ஆதரங்களை காட்டிய பிறகும் கிஞ்சித்தும் வெட்கமின்றி அவர் காட்டிய பிடிவாதமும், உண்மை ஞானிகளை மேலும் மேலும் மூர்க்கமாக செய்த அவதூறுகளை எந்த சந்தர்ப்பத்திலும் மறப்பதில்லை

ஆனாலும் ஞாநியை பார்பனிய சிந்தனை கொண்டவராக நான் நினைக்கவில்லை; இந்துத்வத்தையும் சமரசமின்றி எதிர்க்கக் கூடியவராகத்தான் அவரை காண்கிறேன். மொண்ணைத்தனமும், முட்ட்டாள்தனமும் கொண்ட அவரது சிந்தனையால் அறிவுலகத்திற்கும், அரசியல் உலகிற்கும் எந்த பயனும் இருப்பதாக நான் கருதாவிட்டாலும், சிவசேனை என்ற இந்துத்வ லும்பன் அமைப்பு விடுக்கும் மிரட்டலை வன்மையாக இந்த சந்தர்ப்பத்தில் கண்டிக்கிறேன். அவரது மூர்க்கத்தனத்தையும் முட்டாள்தனத்தையும் கண்டித்ததை அன்றி, அவர் மீது கருத்தியல் மை அடிக்காத, அவ்வாறு கும்பலாக சிலர் அடித்தபோது -குறிப்பாக அந்த வாணிமகால் சுவிசேஷக் கூட்டத்திற்கு- எதிர்ப்பு தெரிவித்த எனக்கு, இந்த சந்தர்ப்பத்தில் சிவசேனையை கண்டிக்க தார்மிக உரிமையும் இருப்பதையும் உணர்ந்து கண்டிக்கிறேன்.

பொய் செய்தி குறித்த பொய்ப்புலம்பல்கள் (11 அக்டோபர் FB)

இணையத்தில் தலித் மீது தாக்குதல் நடந்ததாக ஒரு போலி வீடியோ வெளியாகி, அதை நம்பி பலர் கொந்தளித்ததில் எந்த தவறும் போலித்தனமும் இல்லை. தலித் மீது அனுதினம் ஒரு தாக்குதல் நடக்கிறது. இந்த வீடியோ பொய்யாக இருந்தாலும், இந்த சமூக மனம் அழுகிப்போன, சாதிய நாற்றம் பிடித்த, அறமற்றது என்பது நிதர்சனம். இதற்கு ஆயிரக்கணக்கில் உதாரணங்கள் உள்ளது. தலித் ஒருவர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்வது என்பது எவ்வளவு கடினமானது என்பதை ஒரு சதவிகிதம் அறிந்தவர் கூட வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் நியாயத்தை உணருவர். இந்த விவகாரத்திலும் தலித் செய்த புகார் கணக்கில் கொள்ளப்படாததும் அதனாலேயே அவர்கள் இப்படி ஒரு போராட்டத்தில் இறங்கினார்கள் என்பதும் ஒரு பேசவேண்டிய அம்சம்தான். போலியானது என்பது என்ன என்றால், இந்த ஒரு வீடியோ பொய்யான காரணத்தால், ஏதோ இந்தியா சமூகம் பற்றி அபாண்டமாக எதோ கூறிவிட்டதாக எழும்பும் புலம்பல்தான். கொஞ்சம் கூட வெட்கமும், குற்றவுணர்வும் அற்ற பொய்ப் புலம்பல்.

கலாம் (6, ஆகஸ்ட FB)

அரசியலுக்கு அப்பால், அறிவுப்புல திருவுருவாய் கலாமிற்கு வெகுஜன தளத்தில் நிகழ்ந்த உணர்வு பூர்வமான அஞ்சலி, அவரை அறிவுப்புலம் சார்ந்தவராக ஏற்காதவர்கள் புரிவதற்கு கடினமானது . கலாமின் கல்வி சார்ந்த பிம்பம் மட்டுமின்றி, அவரது ஊழலற்ற பிம்பமும் இந்த அஞ்சலிக் கொண்டாட்டத்திற்கு காரணமாகின்றது. அதே நேரம் வெகுஜனம் எந்த ஒழுங்கிற்கும் ஒத்துவராத, ஊழலுடன் முழு சமரசம் செய்துகொண்ட தன் உளவியலுக்கு இந்த கொண்டாட்டத்தை வடிகாலாக்கிக் கொள்வதாகவும் தோன்றுகிறது.

மதுவிலக்கும் ஹிபாக்ரசியும் (6 ஆகஸ்ட் FB)

பெருங்குடிகாரர்களாக இருந்தவர்கள் மனம் மாறியோ மாறாமலோ மது விலக்கிற்கு ஆதரவாக பேசுவதில் எந்த ஹிபாக்ரசியும் இல்லை. குறைந்த பட்சமாக இன்றய டாஸ்மாக் சீரழிவை பற்றி கவலை யார் கொண்டாலும் அது முழுக்க சமூக அக்கறை சார்ந்தது.
ஒரு காலத்தில் மதுவிலக்கை விலக்கி மதுவை அறிமுகப்படுத்திய அரசியல்வாதி, இன்றய காலத்திற்கு ஏற்ப, மதுவிலக்கிற்கு ஆதரவான நிலை எடுப்பதிலும் எந்த தார்மீகம் சார்ந்த முரணும் இல்லை. மதுத்தடையின் எதிர்மறை அம்சங்களுக்கு எதிராக அரசே ஆபத்தற்ற மதுவை அளிப்பது அன்று ஒரு சரியான செயல்பாடாக இருந்திருக்கலாம். இன்று நோய் முற்றிய நிலையில் ஒரு அதிர்ச்சி வைத்தியமாக (படிப்படியான) முழுமையான மது விலக்கு தற்காலிகமாகவேனும் தேவைப்படலாம். இதைவிடயெல்லாம் உளறல் கலைஞர் குடும்பத்தில் யாரோவும், ராமதாஸ் பேரனும் தண்ணியடிப்பதையும் ஒரு மேட்டராக பேசுவது.
மொத்த முரண்களில் விநோதமாக இருப்பது, மது சார்ந்த தொழில் வருவாய் கொண்டவர்கள் மதுவிலக்கு அரசியல் செய்வது; இவர்கள் அரசியல் லாபத்திற்காக பொய்யான அரசியல் செய்வதாக சொல்லலாம்; அல்லது அரசியல் வாழ்க்கை முரண்களால் ஆனது என்பது போன்ற சால்ஜாப்பிற்குள்ளும் வரலாம். ஆனால் ஒரு க்ளைமாக்ஸ் கட்டத்திற்கு வந்துவிட்ட மது விலக்கு சார்ந்த போராட்டம், சில பாதிப்புகளை மது விற்பனையில் விளைவிக்குமானால், இவர்களுக்கு அதனால் தொழில் சார்ந்த பாதிப்புதானே நிகழும்? அப்படி இருக்கையில் தங்கள் தனிப்பட்ட லாபத்திற்கு எதிரான ஒரு அரசியலை, அரசியல் லாபத்திற்காக அவர்கள் கையெலெடுக்கும் இந்த ஹிபாக்ரசி கொஞ்சம் விநோதமானதுதான்.
ஆனால் அப்பட்டமான ஹிபாக்ரசி என்பது இணைய ̀சோ'வினிஸ்டுகள்தான். டாஸ்மாக் கலச்சாரத்தை கீழானதாக கருதும் பார்வையை கொண்டிருந்து, மது விலக்கிற்கு ஆதரவாக கருத்து நிலையும் கொண்டு, டாஸ்மாக்கிற்கு எதிரான போராட்டம் முக்கிய கட்டத்தில் இருக்கும்போது, எதோ தங்கள் சொத்து பறிபோவது போல் பரபரப்புடன் இந்த போராட்டத்திற்கு எதிராக இவர்கள் எழுதி வருவது மட்டுமே கலப்படமற்ற அப்பட்டமான ஹிபாக்ரசியாக எனக்கு தெரிகிறது. ஜெ ஆதரவால் டாஸ்மாக் ஆதரவாளர்களாக மாறிப்போனவர்கள், நேரடியாக அப்படி கருத்து நிலை எடுக்க முடியாத பிரச்சனையால், தங்கள் ஹிபாக்ரசியை மறைக்க, ஊரில் உள்ள விநோதமான ஹிபாக்ரசி பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள்

எதிர்வினை 21, ஜூலை, FB

சென்னையில் ஒரு இசை நிகழ்ச்சி நடத்துவதன் மூலம் -அரங்க வாடகை, கலைஞர்களின் சம்பளம் என்று கொடுத்த பின் - ஒரு படத்திற்கு இசையமைப்பதில் வரும் வருவாயில் ஒரு பகுதி கூட வர சாத்தியமில்லை. இன்றும் வருஷத்திற்கு ஐந்திலிருந்து பத்து படங்களுக்கு இளையராஜா இசையமைக்கிறார். இளையராஜா ஐந்தாயிரத்திற்கு மேல் பாடல்களை இயற்றியுள்ளார். தனது ஒரு இசை நிகழ்ச்சியில் ஐம்பது பாட்ல்கள் பாடினால் அதிகம். ஆக அவரது பாடல்களை ரிபீட் செய்யாமலேயே நூறு நிகழ்ச்சிகள் நடத்தலாம். ரிபீட் செய்தாலும் அவரது நிகழ்ச்சிகளை மீண்டும் மீண்டும் காண ரசிகர்கள் இருக்கிறார்கள். இதுவரையான அவரது நிகழ்ச்சிகளுக்கு பத்தாயிரத்துக்கு குறையாமல் ரசிகர்கள் கூடியுள்ளனர். வேறு யாரும் இசை நிகழ்ழ்சிகளை நடத்தி இவ்வளவு பெரிய கூட்டத்தை கூட்டியுள்ளதாக தெரியவில்லை. இந்நிலையில் எம் எஸ்வி பாடல்களை தான் பாடி காசு சம்பாதிக்க வேண்டிய அவசியமே இளையாராஜாவிற்கு கிடையாது என்பது மடையனின் மடையனாக அறிவுநிலை கொண்டவர்களுக்கும் புரியும். ஆனால் தமிழ்சூழலில் பலர் - அவர்களுக்கு அறிவு இல்லை என்றில்லை; ஜீனில் கோளாறா, பிறப்பில் கோளாறா, சாதி பித்தமா நானறியேன் - ஏதோ இந்த நிகழ்வை வைத்து காசு சம்பாதிக்க போவதாக காலையில் இருந்து எழுதிவருகிறார்கள். ட்விட்டரில் இருக்கும் பொறுக்கிகள் சொந்த நலனுக்காக பொண்டாட்டியையும் அம்மாவையும் பற்றி எதையும் எழுதும் தன்மை கொண்டவர்கள்; அவர்கள் அதை எழுதியதில் எந்த ஆச்சரியமும் இல்லை. அப்படி எல்லாம் இல்லாமல் உண்மையிலேயே தன்னளவுல் ஒரு நேர்மை கொண்டவர் (அதாவது intellectual honesty என்ற அறிவு நேர்மை அல்ல, காசுக்காக விலைபோகாதது போன்ற நேர்மை) என்று நினைக்கும் ஞாநியும் இப்போது எழுதியுள்ளார். இந்த மனுசனுக்கு என்ன பிரச்சனை, இந்தாள் வெறும் முட்டாள் மட்டும்தானா, அரசியல் நேர் சார்ந்த மடத்தனமா, அல்லது ஆழமனதில் மறைந்திருக்கும் சாதி வெறியா, கருத்து சீசோஃபெர்னியா மாதிரி ஏதாவது ஒரு நோயா எதுவென்று நானறியேன். ஆனால் மீண்டும் மீண்டும் இந்த மடையன் எழுதி வருவது தமிழ் சமூகத்தில் பெரும் தீங்கை, அறிவுக்கு எதிரான ஒரு போக்கை உருவாக்கி வருகிறது. ஏற்கனவே இந்தாளின் பிழைகளை சுட்டியாகிவிட்டது; அதை எதிர்கொள்ளும் அறிவு நேர்மையை சிறிதேனும் கண்டதில்லை. இந்தாளை இன்னும் திட்டுவதற்கு பொருத்தமான வார்த்தைகளே மொழி சார்ந்த உலகில் இல்லை. விஷயம் என்னெவெனில் இந்த நிகழ்ச்சி மூலம் வரும் பணம் எம்மெஸ்வி பெயர் கொண்ட டிரஸ்டிற்கு செல்லும் என்பதுதான். இந்த தகவல் தெரிந்தவுடன் ஒரு ஈடில்லா கலைஞன் மீது சேற்றை வாரி இறைத்ததற்கு மன்னிப்பு கேட்பார்கள் என்று முட்டாள்தனமாக நானும் எதிர்பார்த்தேன். அதற்கு பிறகு இன்னும் திமிராக பேசுகிறார்கள். இது போன்ற அற்பங்களுக்கும், இந்த கேடான போக்கிற்கும் ஆதரவாகவே அறிவுஜீவிகளாக நான் நம்பியவர்களும் இருக்கிறார்கள். இந்த கேவலத்தை கண்டிக்காத தமிழ் சூழலில் இயங்குவதற்காக மட்டுமல்ல பிறந்ததற்காகவும் வெட்கப்படுகிறேன்.

FB ஏப்ரல் 8

இஸ்லாம் பற்றி பத்ரி சேஷாத்ரியோ, அரவிந்தன் நீலகண்டனோ, இஸ்லாம் பற்றி எதையுமே வாசிக்காத ஒருவர் கூட பாசிடிவாக ஒரு ஃபேஸ்புக் பதிவு போட்டால், இஸ்லாமியர்கள் கூட்டமாக அதை லைக் செய்வார்கள். ஒருமுறை (இஸ்லாமியத்தை விமர்சிக்கும், மோடியை ஆதரிக்கும்) சின்னக்கருப்பன் என்ற எழுத்தாளர் இஸ்லாம் பற்றி நல்லதாக எழுதிய போது, திண்ணையில் அதற்கு மகிழ்ந்து பாராட்டை முஸ்லீம்கள் தெரிவித்திருந்தனர்; இன்னும் ஏராளமான உதாரணங்கள் உண்டு. இளையராஜாவை திட்டும் ஒருவர், எங்காவது ராஜாவை பாராட்டினால் கூட ராஜா ரசிகர்கள் சிலர் அதை லைக் செய்வார்கள். இது சாதாரண மனித இயல்பு.
எத்தனையோ கரணங்களுக்காக கருணாநிதியை திட்டுவதை புரிந்து கொள்ளமுடியும். கலைஞரின் ̀ராமானுஜர்' இன்னும் வெளிவரக்கூட இல்லை; அவர் நிச்சயமாக ராமனுஜரை பற்றி இழிவாக எதையும் எழுதப்போவதில்லை; பாசிடிவாகத்தான் எழுதப்போகிறார் என்று முன்னோட்டத்திலேயே தெரிகிறது. அதற்குள் எத்தனை வெறுப்புகள்! இப்படி தனக்கு பிடித்ததை பற்றி, தனக்கு பிடிக்காதவன் எழுதுகிறான் என்கிற ஒரே காரணத்திற்காகவே, வாசிக்காமலே வெறுக்கும் மக்கள் கூட்டம் வேறு எங்கும் இருக்குமா என்று தெரியவில்லை.
கலைஞரின் ராமானுஜர் பற்றி எனக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை; ̀மந்திரி குமாரி'க்கு பிறகு நான் கலைஞர் எழுத்தை ரசிப்பதும் இல்லை. வெகுஜன பார்வையாளர்களுக்கு ராமனுஜரை பற்றி ஒரு ஆழமான க்ளசிக்கை உருவாக்க எந்த தேவையும் இல்லை; கவிதை என்று நினைத்து ஆபாசமான அடுக்கு வார்த்தைகளில் வாலி எழுதுவதை விட எவரும் எழுதி ஏதேனும் ஒரு நியாயத்தை செய்ய முடியும் என்பது என் எண்ணம்; வாலியை விமர்சிக்காதவர்கள், இன்னும் காணவே கிடைக்காத ஒன்றை பற்றி எத்தனை வெறுப்புடன் கிண்டலும் கேலியுமாக எழுதிக் கொண்டே இருக்கிறா ர்கள். ஒரு நூற்றாண்டு காலமாய் தங்களை எந்த சுயவிமர்சனமும் செய்துகொள்ளாத கூட்டம் ஆங்கில நாளிதழ்களில் தங்கள் மீதான விசாரணைகளை கற்பித்து ஒப்பாரி வைத்து வருகிறது.

எதிர்வினை (8 ஜனவரி, FB)



பிரான்சில் இனவாதம் இல்லவே இல்லை என்று சொன்னால் நகைப்பிற்குரியது; ஆனால் நான் புரிந்துகொண்டவரை அரசின் கொள்கைகளும், சட்டங்களும் இனவாததிற்கு எதிரானது. என் புரிதலில் ஃபேர் அண்ட் லவ்லி விளம்பரத்தை இனவாதத்தை தூண்டுவதாக ஃபிரான்சில் வழக்கு தொடுக்க முடியும்; இது ஒரு சாத்தியக்கூறு மட்டுமல்ல, இந்தியாவில் எந்த உறுத்தலும் இன்றி வெளிவரும் ஃபேர் அண்ட் லவ்லி (மேலும் பல) விளம்பரங்களுக்கு அடுத்த நாளே ஃப்ரான்சில் நிச்சயம் எதிர்ப்பு கிளம்பும் என்பதுதான் ஒரு வருடம் அங்கு வாழ்ந்த என் மனப்பதிவு. ஒரு பத்திரிகை கார்டூன் இனவாதமாக உள்ளது எனில் அதற்கு நிச்சயமாக வழக்கு தொடுக்க முடியும். இந்த கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள கார்டூன்கள் ஒவ்வொன்றும் இனவாதம் அல்ல என்று வாதிடக்கூடிய வாய்ப்புகள் உள்ளன. மேலும் பல நேரங்களில் ஒரு கார்ட்டூன் உருவாவது ஏதோ ஒன்றின் எதிர்வினையாக. ஒருவரின் மத நம்பிக்கையை மதிக்காவிட்டால் அது இனவாதம் என்று ஒருவர் வாதிடலாம்; சுதத்திரவாத சமுதாயத்தில் புண்படுத்த -குறிப்பாக ஒரு எதிர்வினையாக நக்கல் அடிக்க- உரிமை உண்டு என்று இன்னொருவர் சொல்லலாம். ராமர் படத்தை செருப்பால் அடித்தவர் மேல் மிகுந்த மரியாதை உள்ள நான் இரண்டாவது நிலைபாட்டைத்தான் எடுப்பேன்; இடத்துக்கும் சூழலுக்கும் ஏற்ப என் நிலைபாட்டையும் தர்க்கத்தை மாற்ற மாட்டேன்.
ஒவ்வொரு முறை இப்படி ஒரு காட்டுமிராண்டித்தனம் நடக்கும்போதும் தவறின் வேர் வேறு எங்கோ இருப்பதாக கிளம்புகிறார்கள். இந்த நிகழ்வு ஒட்டுமொத்த இஸ்லாமியர்களுக்கு எதிரான மனநிலையை அடைவதை எதிர்ப்பது வேறு; ஏதோ ஒரு வகையில் கொல்லப்பட்டவர்களை நடந்ததற்கு காரணமாக்குவது வேறு. பிரச்சனை இருக்கிறது என்று தெள்ள தெளிவாக தெரிந்தும், எல்லாவற்றையும் போல இஸ்லாத்தின் பிரச்சனைகளை பேசுவதை பொலிடிகல் கரெக்ட்னெஸ் கொண்டு தடை செய்ய முனைவது முஸ்லீம்களுக்கு எந்த நண்மையும் செய்ய போவதில்லை; ஏற்கனவே ஏராளமான தீமைகளைத்தான் செய்துள்ளது. இஸ்ரேலின் அட்டூழியங்களிற்கு, அமேரிக்க அராஜகங்களுக்கு மற்றும் இந்துத்வத்திற்கு எதிராக கொண்டிருக்கும் தொடர் நிலைபாட்டை இப்படி சொல்வதன் மூலமே உறுதிபடுத்த முடியும் என்று நினைக்கிறேன். நான் கேள்விப்படும் வரை Charlie Hebdo இனவாததிற்கு எதிரான நிலைபாடு கொண்டதாகவே அறிகிறேன். வெளிப்படையான நிலைபாட்டை வேஷம் என்று சொன்னால் மேலே உரையாட ஏதுமில்லை.

எதிர்வினை

(7, ஜனவரி அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது)

(நாளை எழுதலாம் என்று இருந்தேன்; தூக்கம் வராததால் இப்பொழுதே;
Badri Seshadri பதிவில் என் பின்னூட்டங்களை பார்க்கவும்.)
பிஜேபி ஆட்சிக்கு வரும்போதெல்லாம் திகிலூட்டும் பல கூத்துக்கள் அரங்கேறும்; ஒப்பீட்டளவில் அவற்றில் ஆபத்து குறைந்ததாக பண்டைய இந்தியாவில் இன்றய நவீன அறிவியல் அறிவுக்கூறுகளை கண்டுபிடிக்கும் அகழ்வாராய்ச்சிகளை சொல்லலாம். 1999இல் அசோக் சென் என்ற (பத்ரிக்கு பிடித்த மாதிரி சொல்லவேண்டுமானல் உலகத்தரத்தில்) முக்கியத்துவம் வாய்ந்த அறிவியலாளருக்கு ஏதோ ஒரு பரிசு வழங்கும் விழாவில் முரளி மனோகர் ஜோஷி ̀ஏற்கனவே வேதங்களிலும் உபநிதஷத்களிலும் சொல்லப்பட்டவைகளைதான் இன்றய விஞ்ஞானிகள் மறு கண்டுப்பிடிப்பு செய்வதாக சொன்னார். மேடையில் இருந்த அசோக் சென் எதிர்வினையாக ஒரு வார்த்தை சொல்லாதது (அல்லது சொல்லி பதிவாகாதது) பற்றி அன்று ரொம்ப புலம்பிக்கொண்டிருந்தேன். இன்று இது போன்றவைகள் குறித்த பெரிதாக கவலைப்பட ஏதுமில்லை என்று தோன்றுகிறது. யாரும் இந்த காமெடிகளை சீரியசாக எடுக்க போவதில்லை. பண்டைய இந்தியாவின் நியா யமான பங்களிப்புகளையும் பீலா என்று புறம்தள்ளவே இந்த மிகைப்படுத்தல்கள் உதவும் என்று அவர்களுக்கு புரியவில்லை. ஆகையால் உண்மையான தேசாபிமானம் கொண்டவர்கள் இந்த காமெடி மிகைப்படுத்தல்களைத்தான் எதிர்க்க வேண்டும். அந்த வகையில் பி.ஏ.கிருஷ்ணன் தமிழ் இந்துவில் எழுதியுள்ள கட்டுரை சரியான எதிர்வினை. அதே போன்ற நவீன மனதுடன் இந்திய அறிவியல் மீதான கரிசனத்துடன் பத்ரியும் பதிவு எழுதியுள்ளார். ஆனால் அவர் தன் எல்லைக்குள் நிற்காமல் பல தடாலடி தீர்ப்புகளையும் தீர்வுகளையும் தருகிறார், அதை நம் ஃபேஸ்புக் பொதுஜனங்களும் அறிஞர்களும் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை கண்டபின் இந்த பதிவு.
பத்ரியின் இந்த பதிவும் அதற்கு வந்த நூற்றுக்கு மேற்பட்ட லைக்குகளையும் பார்த்து ̀என்ன மாதிரி சூழலில் வாழ்கிறோம்' என்றுதான் அங்கலாய்க்க தோன்றுகிறது. கணிதம் அறிவியல் துறைகளுக்கு வெளியே வேறு தளத்தில் செயல்படும் ஒருவர் ஒரு பதிவில் கடந்த நூறு ஆண்டுகால இந்திய அறிவியல் கணித சாதனைகள் பற்றி பல தீர்ப்புகளை சொல்லி, நம் கலிதீர சில யோசனைகளையும் முன்வைக்கிறார். யார் வேண்டுமானாலும் எதை பற்றி வேண்டுமானாலும் சிந்தித்து முடிவுக்கு வந்து அதை முன்வைக்கலாம். ஆனால் முடிவுக்கு வந்த விதத்தை ஏதேனும் ஒரு வகையில் விளக்க வேண்டும். அப்படி சொல்லாமல் தீர்ப்பு வழங்க வேண்டுமெனில் அவர் அந்த குறிப்பிட்ட துறையில் ஒரு வல்லுனர் என்று நிறுவி இருக்கவேண்டும். குறிப்பாக அந்த துறை சா ர்ந்த ஒருவர் ̀இந்த முடிவுகளுக்கு எப்படி வந்தீர்கள்?; என்று கேள்வி எழுப்பினால் பதில் சொல்ல வேண்டிய கடமை உள்ளது. ̀ஜல்லியடிக்கிறார்' என்று நான் குறிப்பிட்ட பிறகும் பத்ரியின் பதிவிற்கு சுமார் எண்பது லைக்குகள் விழுந்திருக்கலாம். பத்ரி பதில் சொல்லப்போகிறாரா அல்லது செலிபிரிடி வழக்கமாக ஏராளமான பின்னூட்டங்களுக்கு நடுவில் உள்ள அர்த்தபூர்வமான ஒரு கேள்வியை கண்டுகொள்ளாமல் நகர்ந்துவிடப்போகிறாரா என்று தெரியவில்லை. 7 மணி நேரம் ஆகிவிட்டதால் இதற்கு மேல் காத்திருக்காமல் என் கருத்தை பதிந்துவிட்டு வேறு வேலைக்கு செல்கிறேன்.
பத்ரியின் தற்போதய சார்புகள், எதிர்கால உதிர்ப்புகள் இந்துத்வத்துடன் என்ன தொடர்பு கொண்டிருந்தாலும் அவர் ஒரு பழைமைவாதி கிடையாது. அதனால்தான் பழம் பெருமை பேசுவதில் அர்த்தமில்லை, நவீன வளர்ச்சிகளுக்கேற்ப அறிவை புதுப்பித்துக்கொண்டு நாம் உலக தரத்திற்கு உயர முயற்சிக்க வேண்டும் என்கிறார். சரியான அணுகுமுறைதான். அத்தோடு நின்றிருக்கலாம்; ஆனல் தனக்கு தெரியாத இந்திய அறிவியல் கணிதத்துறைகளில் உலகத்தரத்தில் எந்த சாதனையும் நிகழவில்லை என்கிறார்; அது மட்டுமல்ல சாதனை நிகழ சாத்தியமே இல்லை என்றும் சொல்கிறார். கடந்த மூன்று நூற்றாண்டுகளில் ஐரோப்பிய தரத்திலான ஒரே கணித விற்பன்னர் ஸ்ரீனிவாச ராமானுஜன் ஒருவரே என்கிறார். ஐரோப்பிய தரத்திலான ஆராய்ச்சியாளர்களை உருவாக்க ̀புதுமையான, நவீனமான கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களைப் பணம் படைத்த தனி நபர்கள் உருவாக்கவேண்டும்' என்கிறார். இதுதான் அவர் தீர்வு. அவர் தீர்ப்புகளை விட தீர்வுகள் இன்னும் பலத்த அதிர்ச்சியை தருகிறது. கேள்வி கேட்காமல் 160 பேர் லைக் செய்கிறார்கள். நாளை ஜெயமோகன் இதை மேற்கோள் காட்டி பதிவு போட்டால் கூட ஆச்சர்யம் வராது.
கணிதம், அறிவியல் என்று பத்ரி பேசுவது தியரிடிகலான விஷயங்கள்தான் என்று தெரிகிறது. CERNஇல் இருப்பது போன்ற ஆய்வுகூடம் எதுவும் அதற்கு தேவையில்லை. இதற்கு தேவை முக்கிய புத்தகங்களும், ஆய்வு இதழ்களும் உள்ள நூலகம், உட்கார்ந்து வேலைசெய்ய நாற்காலி மேஜையுடன் அலுவலக அறைகள் கொண்ட கட்டிடம், கணினிகள், மிக முக்கியமாக ஆராய்சியாளர்களுக்கு சம்பளம். இது ஏற்கனவே பத்துக்கும் மேற்பட்ட ஐஐடிகளில், IMSc, HRI, TIFR, IISc, ISIக்களில் ஏற்கனவே உள்ளதே. புதிதாக ஒரு பணக்காரர் செய்யப்போவது என்ன? என்ன லாபத்திற்காக ஒரு பணக்காரர் பற்பல கோடிகள் செலவாகும் இந்த வேலையை அறிவியல் கணித கண்டுபிடிப்புகள் நிகழவேண்டும் என்ற அக்கரையில் செய்யப்போகிறார்? (மாணவர்கள் பேராசியர்களுக்கு ஒரு மாதசம்பளம் மட்டும் ஒரு கோடிக்கு மேல் போகும்). நிதி உதவி மட்டும் செய்ய வேண்டும் என்றால் அதைத்தான் ஏற்கனவே டாடா, இன்ஃபாசிஸ் தொடங்கி ஸ்பிக்வரை செய்துள்ளனரே. இதில் எதை அரசு நிறுவனம் சாராமல் ஒரு பணக்காரர் புதிதாக என்னத்தை செய்து அறிவியலை உய்விக்க யோசனை தருகிறார் என்று தியரிடிகலாகவும் பிராக்டிகலாகவும் எதுவும் புரியவில்லை.
அடுத்து உலகத்தரமான ஆராய்ச்சி என்று எதை கற்பனை செய்து வைத்திருக்கிறார் என்று தெரியவில்லை. (விரல் விட்டு எண்ணகூடியதானாலும்) இந்தியாவின் கணித அறிவியல் நிறுவனங்களில் நிகழும் ஆய்வுகள் உலகத்தரமானவைதான். ராமானுஜன் போன்ற பெரும் மேதை எப்பொழுதாவது நூற்றாண்டுக்கு ஒருமுறைதான் தோன்றமுடியும். உலகத்தரம் எனப்படும் ஐரோப்பிய அமேரிக்க ஆய்வாளர்கள், சாதனை புரிந்தவர்கள் எல்லாம் கூட ராமானுஜன் தரத்தில் இல்லவும் இல்லை. மற்றபடி தற்போது உலகத்தரமாக பங்களிப்பை செய்தவர்களாக ஒரு நூறு ஆய்வாளர்களாவது கணிதத்தில் மட்டும் இந்தியாவில் இருப்பார்கள். அறிவியலில் இன்னும் சில மடங்கு இருப்பார்கள். கடந்த ஒரு நூற்றாண்டில் எனக்கு சரியாக கணக்கு சொல்ல வராவிட்டாலும் இதைவிட இன்னும் ஒரு மடங்கு நிச்சயம் இருக்கும். பலர் இங்கு தொடங்கி வெளிநாட்டில் குடியேறி இருக்கலாம்; வெளிநாட்டில் ஆராய்ச்சி தொடங்கி இங்கே வேலையுடன் குடியேறி இருக்கலாம். எல்லாவற்றையும் இந்திய பங்களிப்பாகத்தான் கருத வேண்டும். இதை எழுதிக்கொண்டிருக்கும் என் பங்களிப்புகளும் உலகத்தரமானவைதான். உலகத்தரமான ஆய்வு இதழ்களில் வெளிவருபவைகளை உலகத்தரமானவை எனறுதான் சொல்ல முடியும். எதை வைத்து இங்கே உலகத்தரமான ஆய்வு வேலைகள் குறிப்பாக கணிதத்தில் நிகழவில்லை என்று நினைக்கிறார் என்று புரியவில்லை. இங்கே நாம் உருவாக்கும் மாணவர்கள் வெளிநாட்டிற்கு மேலதிக ஆராய்ச்சிகளுக்கு செல்வது வழமைதான். ஜப்பான் போன்ற நாடுகளிலும் யாரும் உள்ளூரில் குதிரை ஓட்டிக்கொண்டிருப்பதில்லை. (நம்மூரில் இருந்து செல்ல லௌகிக காரணங்களும் இருக்கலாம்.) ஆகையால் பத்ரி சொன்ன அத்தனையும் முழுமையாக தவறான தகவல்கள்.
ஆனால் எண்ணிக்கையில் தரமான ஆய்வாளர்கள் முன்னேறிய நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் -அதுவும் நம் மக்கள் தொகைக்கு- மிகக்குறைவு என்பது உண்மைதான் (பத்ரி சொல்வது மிக மிகைப்படுத்துதல் என்று மட்டுமே சொல்கிறேன்). அதன் அடிப்படை பிரச்சனை நமது பல்கலை கழகங்கள் எந்த ஆய்வும் நடைபெறாத ஒப்புக்கு சப்பாணியாக இருப்பதுதான். இது ஏன் என்பது என் பார்வையில் மிக சிக்கலான பிரச்சனை. பல்கலைகழகங்களின் உதவாக்கரை நிலைகளுக்கு கல்வி நிறுவன விதிகள், அமைப்புகள், அரசியல் தலையீடுகள், உள்ளரசியல்கள், நமது சமூகத்தின் சாதிய அமைப்பு ஆகிய பலவற்றிற்கும் பங்கு உள்ளதாக நினைக்கிறேன். இதை இப்போதைக்கு சரி செய்வதை பற்றிய ஒரு திறந்த உரையாடலை கூட நிகழ்த்த முடியும் எனக்கு தோன்றவில்லை. அது குறித்து வேறு சந்தர்ப்பத்தில்தான் பேசவேண்டும்.
இதனோடு ஒப்பிடக்கூடிய இன்னொரு விஷயமும் உண்டு. நியூட்டனுக்கு சில நூறு வருடங்கள் முன்னால் கேரளாவில் கால்குலஸ் சார்ந்த (வேறுவகை) அறிவு இருந்தது என்பது இன்று ஒப்புக்கொள்ளப்பட்ட விஷயம். ஆனால் அது ஏன் இந்தியாவில் ஒரு கல்விப்புலமாக பரவவும் இல்லை, காலப்போக்கில் பல்வேறு கணித கருத்தாக்கங்களாக வளரவும் இல்லை என்பது முக்கியமான கேள்வி. குறிப்பிட்ட மக்கள் மட்டும் குறிப்பிட்ட வேலையை செய்த நம் சாதிய அமைப்பு அதற்கு ஒரு காரணம் என்பது எளிமையான விடை (கடினமான விடையாக வேறு ஏதாவது கூட இருக்கலாம்)யாக தோன்றுகிறது. ஒரு தொடர்ச்சியான பார்ம்பரியம் இங்கே இல்லாதன் காரணங்களுக்கும், நம் பல்கலை கழகங்கள் வெத்தாக இருப்பதற்கும் கூட தொடர்பிருக்கலாம். இந்த பிரச்சனைகள் குறித்து புரிந்துகொள்ள முயற்சிப்பதும் நம் பல்கலைகழகங்களை ஆய்வுக்குரிய இடமாக மாற்ற முயல்வவதும்தான் தீர்வாகமுடியும். யாரோ சில பணக்காரர்கள் (இன்னொரு) ஆராய்ச்சி நிறுவனம் தொடங்கி இதை தீர்க்க முடியாது.
பின் குறிப்பு: வசந்த கந்தசாமி போன்ற திறமையாளர்களை ஒதுக்கும் பார்பனிய சூழல்தான் கணிதம் அறிவியல் வளராததற்கு காரணம் என்று ஒருவர் பின்னூட்டியிருந்தார். பலமுறை சொன்னதை மீண்டும் சொல்கிறேன். பர்ப்பனிய அரசியல் சார்ந்த பிரச்சனை ஐஐடிகளில் மிக தூக்கலாகவும், மற்ற இடங்களில் ஓரளவும் இருக்கிறது என்பதுதான் என் கருத்து. ஆனால் வசந்த கந்தசாமி போலியானவர்.அவரது பக்களிப்புகளுக்கு ஆய்வுலகில் குப்பைகளுக்கான மதிப்பு மட்டுமே உள்ளது. அவர் உண்மையில் தன்னை மாபெரும் கணித மேதை என்று சொல்லி பெரியாரிஸ்டுகளையும் சாதி எதிர்ப்பாளர்களையும்தான் ஏமாற்றி வருகிறார்.

Monday, July 27, 2015

மூட ஊற்று!

எம்மெஸ்வி ரசிகர்கள் என்று சொல்லிகொள்பவர்களின் உள்ளத்தில் ராஜா மீது இவ்வளவு வெறுப்பு இருக்கும் என்று நான் உண்மையிலேயே எதிர்பார்த்திருக்கவில்லை. கடவுளால் புதிதாக படைக்கப்பட்ட காட்டாறு வழியில் உள்ளதையெல்லாம் தன்மயமாக்கி இழுத்துச் செல்வது போல், ராஜா ஆக்ரமித்துக் கொண்டிருந்த என் சிறுவயது காலத்தில், குழந்தைத்தனம் பொருந்திய பெரியவர்களின் சண்டையை பார்த்ததற்கு மேல் வெறுப்பை நான் எதிர்கொண்டதில்லை. ரஹ்மான் X ராஜா என்ற முரண் புரிதலுக்கு உட்பட்டது. ரஜினி X கமல் என்ற முரண் கூட வரலாற்றில் மழுங்கி போன நிலையில், ராஜா X எம்மெஸ்வி என்ற முரண் இன்று தீவிரமாக இருக்காது என்று நினைத்தேன்.

ஞாநி போன்ற அரசியல் கழிவுகள் பற்ற வைத்தது என்றாலும், மூன்று நாட்களாக ஒரு எம்மெஸ்வி குழுவில் வாசித்ததும் எதிர்வினை வைத்ததும் (நம்ம விடுவோமா!) மனதில் ஏற்படுத்திய தொந்தரவுகளும் முக்கிய பாடம். எம்மெஸ்வி பற்றிய ஒரு முக்கியமான வரலாற்று நிகழ்வை அசிங்கப்படுத்திக் கொண்டிருப்பதை, நான் பலமுறை எடுத்துச் சொன்ன பிறகும் அவர்கள் யாரும் உணர்ந்ததாக தெரியவில்லை. வெறுப்பைப் போன்ற மூடத்தனத்தின் ஊற்று வேறு உண்டோ! இப்போதும் - காசு பிரச்சனை பற்றி பேச இனி எதுவுமே இல்லாதாதால்- ஜேம்ஸ் வசந்தன் தன் அண்மைக்கால பிரச்சனைகளால் வன்மமாக போடும் நிலைத்தகவலை பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். உலகில் எங்காவது ஒரு ரசிகர் கூட்டம், தன் ரசனைக்கான ஆதர்ச பிம்பம் குறித்த நிகழ்ச்சி ஒன்று மோசமாக இருக்கிறது என்று சொல்லும் மதிப்புரையை ஆர்வமாக பகிர்ந்து கொண்டிருக்குமா? இதுதான் வெறுப்பின் அழிவுபூர்வமான முட்டாள்தனம். நான் ஒரு ராஜா ரசிகன் என்பதை தூர வைத்துவிட்டு, ஒரு சமூக அவாதானிப்பாளனாக எனக்கு இது ரொம்ப முக்கியமானதாகவும் சுவாரசியமாகவும் உள்ளது. 

இதில் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் உண்டு. ரொம்ப காலமாக கீரல் விழுந்த ரெகார்டாக ஒரு விஷயத்தை புத்திசாலி கிளிப்பிள்ளைகள் சொல்லி வருகிறார்கள். இளையராஜா மீது இன்று பலர் வன்மமாக எழுதுவதற்கு ராஜா ரசிகர்கள்தான் காரணம்; இவர்கள் ராஜாவை தவிர மற்றவர்களை மட்டமாக நினைப்பதாலும், இவர்களின் வாய் நீளத்தாலும்தான் ராஜாவை எல்லோரும் திட்டுகிறார்கள் என்பது. இதை ஒரு பேச்சுக்கு உண்மை என்று எடுத்துக் கொள்வோம். ராஜா ரசிகர்களின் செயல்களுக்கு எதிர்வினையாக அறிவு மழுங்கியவன்தான் ராஜாவை திட்டுவான்; அறிவு உள்ளவன் மிஞ்சிப்போனால் ராஜா ரசிகர்களை மட்டுமே திட்டுவான். சரி, அறிவு மழுங்கியவர்கள் அல்ல நாம் கவனிக்க வேண்டியது. எம்மெஸ்வி ரசிகர்கள் ராஜாவை பற்றி கும்பலாக அவ்வளவு வன்மமாக -தங்கள் ஆதர்ச பிம்பமான எம்மெஸ்விக்கு அஞ்சலி செலுத்தி, வசூலித்த கட்டணத்தை எம்மெஸ்வி குடும்பத்திற்கு அளிக்கப் போவதற்காக - திட்டிக் கொண்டிருக்கும் போது, ராஜா ரசிகர்கள் வருத்தத்துடன் பதில் சொன்னார்களே ஒழிய, ஒருவர் கூட எம்மெஸ்வி பற்றி குறைவாக ஒரு சொல் சொல்லவில்லை. திரும்ப திரும்ப எம்மெஸ்வி மீது ராஜா வைத்துள்ள மதிப்பை பற்றிதான் பேசினார்கள். ஆகையால் ரசிகர்கள் வாய் நீண்டால் ரசிக்கப்படும் திருஉரு அவமதிக்கப்பட வேண்டும் என்ற அவசியமே இல்லை.