Thursday, January 31, 2013

அரசியல் அடிப்படைவாதம்.


தேசியவாதிகளானாலும் மதவாதிகளானாலும், அவர்கள் தங்கள் பிரதான எதிரிகளை விட அதிகமாக வெறுப்பது, தங்கள் அடையாளத்தை கொண்ட, ஆனால்  அடையாள அரசியலில் இருந்து விலகி ஒலிப்பவர்களையே; இவர்கள் பொதுவாக 'துரோகிகள்' என்று அடையாளப் படுத்தப்படுகிறார்கள். துரோகிகள் என்று ஒரு அடையாளம் இவ்வாறே எப்போதும் கற்பிக்கப்படுகிறது என்று நான் சொல்லவரவில்லை. சுயநலன்களுக்காகவும், வேறு கோபங்களினாலும் அரசியலை காட்டிகொடுப்பவர்கள் உண்டு.  அவ்வாறானவர்களை துரோகிகள் என்று அழைக்கத் தொடங்கி, பின் விலகி ஒலிக்கும் எல்லா குரல்களையும் துரோகி என்று கற்பிக்கும் நடைமுறையே எல்லா அடையாள அரசியலிலும் தொடர்கிறது.

எதிரிகளின் தாக்குதல் அடையாள அரசியலை மேலும் பலப்படுத்துகிறது; எதிரியை எதிர்கொள்வதே அரசியலின் முக்கிய செயல்பாடாக இருப்பதால், எதிரியின் இருப்பு அடையாள அரசியலுக்கு முக்கியமாகிறது. ஆனால் உள்ளிருந்து விலகி ஒலிக்கும் மிதவாதியின் குரல், அடையாள அரசியலின் தீவிரத்தை கேள்விக்கு உட்படுத்துகிறது. தாங்கள் முன்வைக்கும் தீவிரமான அரசியல் நிலையை தங்களின் ஒட்டுமொத்த கூட்டமும் பேண வேண்டும் என்று அடிப்படைவாதிகள் நினைக்கிறார்கள்; அவ்வாறு பேணுவதே கூட்டத்தின் இயல்பாக இருப்பதற்கு, இந்த விலகி ஒலிக்கும் குரல்கள் பெரும் இடைஞ்சலாக இருக்கிறது. திவிரவாத அடிப்படைவாதிகள் இதன் காரணமாகவே மிதவாதிகளையும் மாற்று பார்வை கொண்டவர்களையும் எதிரிகளை விட மோசமாக வெறுக்கின்றனர். இதற்கான உதாரணங்களை எல்லா அடையாள அரசியலிலும் தட்டுப்பாடின்றி காணலாம்.

தற்போதுள்ள சந்தர்ப்பத்தில் மனுஷ்யபுத்திரன் அப்படிப்பட்ட மிதவாத குரலை ஒலிக்கிறார். இஸ்லாம் என்ற பெயரில் நடக்கும் நடைமுறைகள் அனைத்திற்கும், நியாங்களையும், வக்காலத்துக்களையும், சாக்குபோக்குகளையும் சொல்லி, விமர்சனமின்றி அதரிக்கும் மனநிலையை மட்டுமே முஸ்லீம்களிடம் விரும்பும் அடிப்படைவாதிகளுக்கு அவர் பெரும் கோபத்தை விளைவிக்கிறார். இதன் ஒரு வெளிபாடே ஜெய்னுலாபிதீனின் மிருகத்தனமாக தாக்குதல்.

சுமார் 8 ஆண்டுகளுக்கு முன் தொலைகாட்சியில் 'இஸ்லாம் இனிய மார்க்கம்'  நிகழ்ச்சியை மிகவும் ரசித்து நான் பார்த்த காலம்;  'மற்ற மதத்தவர்களை அழைத்து, அவர்களின் அடையாளங்களுடன் அமரவைத்து, அவர்களின் கேள்விகளுக்கு இப்படி நிதானமாக பதில் சொல்லும் ஜனநாயகம் இந்து மதத்தில் சாத்தியம் இல்லை' என்று அந்த  நிகழ்ச்சியை முன்வைத்து என் அம்மாவிடன் வாதிட்டிருக்கிறேன். அதே ஆள் இன்னொரு சந்தர்ப்பத்தில் தன்னை எப்படி வெளிபடுத்துகிறார் என்பதை இன்று பார்த்து வருகிறோம்.

அடையாள அரசியலை விட மோசமான விசித்திரமாக  வெளிபடுவது அரசியலுக்கான அரசியல். அ.மார்க்ஸ், சுகுமாரன் போன்றவர்கள் தங்கள் அடையாளத்திற்காக இஸ்லாமிய அடிப்படைவாத அரசியலை ஆதரிக்கவில்லை; அரசியல் சார்ந்து வந்தடைந்த நிலைபாடுகளின் தொடர்ச்சியாக ஆதரிக்கிறார்கள்.

முஸ்லீம்கள் மீதான முன்முடிவுகளும், முன் நம்பிக்கைகளும், வெறுப்பு சார்ந்த சொல்லாடல்களும் நம் சமூகத்தில் எப்போதும் உண்டு. அண்மைக்கால நிலவரங்களால் அது வேறு பரிமாணத்தை எட்டியுள்ளதும் ஒரு யதார்த்தம்தான். அந்த யதார்த்ததின் வெளிபாடாக பொதுவான ஒரு  இஸ்லாமியருக்கு இருக்கும் அச்சுறுத்தலும், ஒதுக்கமும், பாதுகாப்பின்மையும், மனித உரிமை சார்ந்த அரசியலை விழுமியமாக பேணும் அனைவரும் கவலைகொண்டு எதிர்க்கவேண்டிய ஒன்று. அவ்வாறான எதிர்ப்பை கொண்ட அரசியல்,  நடைமுறையில் அவ்வறான அச்சுறுத்தல் நிகழ்வதை எதிர்ப்பதாகவும், முன்முடிவுகளை விமர்சித்து இயங்குவதாகவும் நிச்சயம் செயல்படவேண்டும். அந்த வேலையை அ.மார்க்சும் சுகுமாரனும் செயல்பாடாக கொண்டுள்ளதை, மனித உரிமை அரசியலை கொண்ட அனைவரும்  ஆதரிப்பது என்ற நிலையில் நிச்சயம் இருக்கவேண்டும்.

மாறாக, இஸ்லாமிய வெறுப்பை எதிர்க்கும் அரசியல் என்பது, இஸ்லாமிய அடிப்படைவாதத்தை நியாயப்படுத்துவதிலோ, அடைப்படைவாதத்தின் எல்லா வெளிபாடுகளையும் ஏதோ ஒரு அட்டு தர்க்கத்தை சொல்லி நியாயப்படுத்துவதிலோ  இருக்க முடியாது. ரிசானாவின் அநியாயமான கொலையை முன்வைத்து, என்னத்த  சொல்ல வருகிறார் என்றே யாருக்கும் புரியாமல் அ.மார்க்ஸ் எழுதிய பதிவை வாசித்து ஏற்பட்ட குமட்டலுணர்வு கொஞ்ச நஞ்சமல்ல. இதில் இவர் வெளிப்படையான மரண தண்டனை எதிர்ப்பு நிலைபாட்டிலிருந்து ஏதாவது சொல்வார், மனுஷ்யபுத்திரன் மீதான தாக்குதலை கண்டிப்பார் என்ற எதிர்பார்ப்பு, இலங்கை அரசிடம் தமிழர்களுக்கான சுயநிர்ணய உரிமையை எதிர்ப்பார்ப்பதைவிட குறைவான நிகழ்தகவு கொண்டது.

'விஸ்வரூபம்' பிரச்சனையிலும் தான் இதுவரை எடுத்து வந்துள்ள நிலைபாடுகளுடன் எந்த இயைவும் இல்லாமல், நிபந்தனையற்ற இஸ்லாமிய அரசியல் ஆதரவு என்ற நிலையிலேயே உள்ளார். விஸ்ரூபம் படத்தின் மீது (பார்த்தவர்கள் பார்க்காதவர்களின்) முக்கிய விமர்சனம்தான் என்ன? தாலிபான்கள் பற்றிய (யதார்த்தமான) சித்தரிப்பு முஸ்லீம்கள் பற்றி குறிப்பிட்ட ஒரு எதிர்பிம்பத்தை பார்ப்பவர்களிடம் ஏற்படுத்தும் என்பதுதான். அப்படி ஒன்று நேரவே நேராது என்று நிச்சயமாக சொல்லமுடியாதுதான். ஆனால் இப்போதய எதிர்ப்புகளினாலும், அரசியல்களினாலும் ஏற்படாத எந்த முன்முடிவை படம் பொதுப்புத்தியில் ஏற்படுத்தியிருக்க போகிறது என்கிற சாதரண சிந்தனை கூட இவர்களிடம் இல்லை. ஏனெனில் இவர்களுக்கு பொதுப்புத்தி மீதான பாதிப்பை விட தாங்கள் பேணும் அரசியல்தான் முக்கியம்.

இந்த சூழலில் மனுஷ்யபுத்திரன் போன்றவர்கள் 'விஸ்வரூப' தடைக்கு எதிராக பேசுவது முக்கியமான மாற்று உதாரணமாகும். இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கு அவர் உண்டாக்கும் எரிச்சலைப் போலவே,  அ.மார்க்ஸ், சுகுமாரன் போன்றவர்களுக்கும் எரிச்சலை உண்டாக்குகிறார். இந்துத்வ அரசியலை தீவிரமாக எதிர்க்கும், சமீபத்தில் சின்மயி விவகாரத்தில் கூட பார்பன ஆதிக்கத்திற்கு எதிராக பேசிய, இஸ்லாமிய அடையாளத்தை கொண்ட  மனுஷ்யபுத்திரனை, கூசாமல் 'இந்துத்வ குரல்' என்கிறார்கள். அதாவது இஸ்லாமிய அடையாளத்துடன், இஸ்லாமியர்கள் மீதான கரிசனத்துடன்  தாராளவாத குரல் ஒலிக்க முடியாது என்கிற முன்முடிவு இவர்களிடமும் வெளிபடுகிறது.

அப்துல் கலாமை இந்துத்வவாதி என்று திட்டினார்கள். அவர் பாஜகவால் ஜனாதிபதியாக்கப்பட்டார்; குஜராத் படுகொலைகளின் போது வாய்மூடி இருந்தார்; அணுகுண்டு வெடித்தார்; இன்னும் பலவகைகளில் இந்திய நவீன  தேசிய அரசியலுக்கு உறுதுணையாக இருந்தார். (ஆனாலும் அவரை இந்துத்வா என்று அடையாளப்படுத்த முடியாது என்று நான் நினைத்தாலும்) அவரை இந்துத்வா என்று சொல்வதிலாவது நியாயமுண்டு. இந்துத்வ அரசியலையும், இந்திய தேசிய வெறி அரசியலையும் எதிர்க்கும் மனுஷ்யபுத்திரனையும் இவர்கள் இந்துத்வா என்கிறார்கள். மத அடிப்படைவாதத்தை போன்ற அரசியல் அடிப்படைவாதம் இது; அடையாளம் சார்ந்து தங்களைப்போலவே ஒலிக்க வேண்டியதாக கருதும் ஒரு குரல், விலகி ஒலிப்பதை ஏற்காத அரசியல் அடிப்படைவாதம். தமிழ் சூழலில் பின்நவீனத்துவம் வழங்கிய அரசியல் கொடையாகத்தான் இதை பார்க்கலாம்.

Thursday, November 8, 2012

வரலாற்றாறு.

(ட்விட்டர் விவாதத்தினிடையில் எழுதியது)


ரஹ்மான் நேரடியாக இளையராஜாவிடம் என்ன கற்றார், பெற்றார் என்பது தெளிவில்லை; அது குறித்த விவரிப்பை அவர் நேர்மையாக முன்வைப்பார் என்று எனக்கு தோன்றவில்லை. ஒருவேளை ரஹ்மான் ராஜாவுடன் பணியாற்றியிருக்கவே இல்லையென்றே வைத்துகொண்டாலும்கூட, ராஜாவின் 16 வருட பயணமின்றி ரஹ்மானின் இசை தோன்ற வாய்ப்பில்லை. ராஜாவின் பாணியை ரஹ்மான் பின் பற்றினார் என்று சொல்லவரவில்லை (ஒரளவு சிலவற்றை பின்பற்றினார் எனினும், பின்பற்றுவது சாத்தியமில்லை என்பது வேறு விஷயம்). ரஹ்மான் தந்த இசையை 80கள் இசையின் நாம் முற்றிலும் விளங்கிகொள்ளகூடிய இயல்பான பரிணாம மாற்றமாகவே பார்க்கமுடியும் (வளர்ச்சி என்று நான் இங்கு வேண்டுமென்றே சொல்ல விரும்பவில்லை). ரஹ்மான் தனக்கே தனித்துவமான பல சோதனைகளையும் புதுமைகளையும் செய்தார். அவை முன்னதின் தொடர்ச்சியாகயே நிகழ்ந்தது . மாறாக ராஜா செய்தது குவாண்டம் இயற்பியலின் தோற்றம் போன்ற ஒரு புரட்சி; அது அதற்கு முன்னான தமிழ் திரையிசையின் தொடர்ச்சியயாவும், தொடர்பறுந்த பாய்ச்சலாகவும் ஒரே நேரத்தில் நிகழ்ந்தது. இதை பற்றியெல்லாம் விரிவாக பேசலாம். இதை புரிந்துகொண்டவர்கள் ஏற்றுக்கொண்டவர்களுடன் மட்டுமே இப்போதைக்கு பேச விழைகிறேன். 

இங்கே கவனிக்க வேண்டியது ராஜா தொடர்ந்து தனக்கு முந்தய இசை முன்னோர்களை தெளிவான வார்த்தைகளில் அக்னாலெட்ஜ் செய்துள்ளது. ஜீகே வெங்கடேஷை குரு என்கிறார்; எமெஸ்வியும் ராமமூர்த்தியும் துப்பிய எச்சிலாக தன் இசையை சொல்கிறார். இது மட்டுமில்லாது தன்னுடய எல்லா உந்துதல்களையும், நம்மால் எளிதில் கண்டுபிடிக்க இயலாத பல உந்துதல்களையும் நேர்மையாக முன்வைத்திருக்கிறார். மாறாக ரஹ்மான் திரையிசையில் தான் ஏறி நிற்கும் தோள்களையும் தூண்களையும் முறையாக அக்னாலெட்ஜ் செய்து நானறியேன். ஏதோ அங்கொன்று இங்கொன்றாக சம்பிரதாயமாக சொன்னது மட்டுமே. 

ரஹ்மான் புயலாக நுழைந்து, பூகம்பமாக புகழ் பெற்ற பின், ஒரு குமுதம் பேட்டியில் தனக்கு பிடித்த தன்னை பாதித்த இசையமைப்பாளர்களாக எம்மெஸ்வியையும் டி.ராஜேந்தரையும் குறிப்பிட்டார். அதை வாசித்து அன்று கொதிப்படைந்தேன். (இந்த தகவலை அண்மையில் ராஜேந்தர் சொல்லியிருப்பார்; பலர் ராஜேந்தர் உடான்ஸ் விடுவதாக எடுத்து கிண்டலடித்திருப்பார்கள். ஆனால் ரஹ்மான் சொன்னதான செய்தி உண்மை.) இந்நிலையில் நேரடியாக ராஜாவுடன் பணியாற்றியதன் மூலம் பெற்றதை எல்லாம் ரஹ்மான் ஒருநாளும் நேர்மையாக முன்வைக்க போவதில்லை. 

ராஜாவின் செல்வாக்கை ஒழிக்க பாலசந்தர் மணிரத்தினம் போன்றவர்களால் ரஹ்மான் உருவாக்கப்பட்டதான கதை இன்று நமக்கு தெரியும். அது அப்படியே உண்மையெனில் அன்று ரஹ்மானுக்கு ஒரு தொழில் சார்ந்த நிர்பந்தம் இருந்திருக்க கூடும். ஆனால் அதற்கு பின்னும் அவர் வெற்று உபசார வார்த்தைகளை தவிர பெரிதாக பேசியதாக தெரியவில்லை; தெரிந்தால் மகிழ்வேன்.

Tuesday, May 1, 2012

ஞானத்தின் மடத்தனம்.

நேர்மையற்ற குதர்க்க புத்தியை தர்க்க அடைப்படையாக கொண்டு, தனக்கு மட்டுமே சாத்தியமாகக் கூடிய மடத்தனத்தை, ஏதோ ரொம்ப தர்மாவேசம் போல ஞாநி முன்வைப்பது இது முதல் தடவை அல்ல. திருவாசகம் வெளிவந்த போதே கேனத்தனமான பல கேள்விகளை, அரசியல் ஆவேசமாக முன்வைத்தவர்தான். இந்திய இசைச்சூழலில் யாருக்கும் சாத்த்தியம் ஆகாத சாதனையை நிகழ்த்திய மேதையை 'அரசு பணத்தை திருடினார்' என்று எந்த லாஜிக்கும் இன்றி பிதற்றியவர்தான் இவர். இப்போது சமீபத்தில் பலரை வேறு உலகிற்கு அழைத்துச் சென்ற How to Name it நிகழ்ச்சி அவர் கையில் மாட்டியிருக்கிறது. 'How to name it' நிகழ்தியது ராஜா அல்ல; அவரே நடத்தினாலும் யார் வயலின் வாசிப்பது என்பதை தீர்மானிக்க அவருக்கும், நிகழ்வை நிகழ்த்தியவர்களுக்கும் எல்லா உரிமையும் உள்ளது. யாருக்கேனும் உரிமையுள்ளதை திருடினாலோ, பணம் தராமல் ஏமாற்றினாலோதான் குற்றம். நரசிம்மனை வயிலின் வாசிக்க வைக்கவில்லை என்பதில், என்ன எழவு மனிநேயம் குலைந்து போகிறது? உலகில் உள்ள குயுக்திகள் அத்தனையையும் சேர்த்தாலும் இதில் மனித நேயத்திற்கு ம், நேர்மைக்கும் என்ன சம்பந்தம் வந்தது என்று புரியவில்லை. நரசிம்மன் ராஜா படைத்த இசைக்கோர்வையை, எழுதிக்கொடுத்தப்படி மேற்பார்வைக்கு ஏற்ப வாசித்தவர். ஒருவேளை ஞாநி எழுதும் குப்பை நாடகங்கங்களில் எல்லாம் முதன்முறை நடித்த நடிகர்களைத்தான் எல்லாமுறையும் நடிக்கவைப்பாரா? ஒருவேளை ஞாநி அப்படி ஒரு பைத்தியக்கார நடைமுறையை பினபற்றினாலும் மற்றவர்களுக்கு என்ன தலையெழுத்து? அடுத்து கேஸட்டில் பெயர் போடாதது. ரஹ்மான் இசைக்கலைஞர்களின் பெயரை போட்டாராம்; ராஜா அன்று போடவில்லையாம். ஏன் M. S. விஸ்வநாதனும், நௌஷாத்தும், பர்மன்களும் கூட யார் தன் குழுவில் ட்ரம்ஸ் வாசித்தார்கள் என்ற செய்தியை ரெகார்டில் பதிவு செய்ததில்லை. ஜிகே வெங்கடேஷின் சில பாடல்களை இளையராஜா எழுதிக் கொடுத்ததாகவே நம்பிக்கைகள் உண்டு. எத்தனை கேசட்டில் ராஜாவின் பெயரை வெங்கடேஷ் பதிவு செய்திருக்கிறார். A.R.ரஹ்மான் செய்தது பாரட்டுக்குரியது என்றாலும், அதில் நேர்மையாக வேறு வழியில்லை என்பதுதான் உண்மை. ரஹ்மானின் இசை உருவாகும் விதத்தை அறிந்தவர்களுக்கு, அதில் மற்ற இசைக்கலைஞர்களின் கிரியேடிவான பங்கு உண்டு என்கிற விஷயம் நன்றாக தெரியும். ரஹ்மானும் மற்ற இசை கலைஞர்களும் அதை சொல்லியும் உள்ளனர். ராஜா இசையில் அவரன்றி படைப்புரீதியாக அங்கு யாருக்கும் எந்த பங்கும் இல்லை. முழுக்க அவர் தனிமையில் எழுதியது மற்றவர்களால் வாசிக்கப்படுகிறது. ஆயினும் ரஹ்மான் முன்னுதாரணம் காட்டிய நடைமுறையை பின்பற்றி இசைத்தவர்களின்பெயரை போடத் தொடங்கினார். அப்படியே போடாமல் விட்டாலும் அதில் எந்த மனிநேயத்திற்கு எதிரான செயலும், அயோக்கியத்தனமும் இல்லை. ஞாநி சொல்வதுபோல் 'தன் இசையை சிறப்பாக வெளிப்படுத்தி தனக்கு புகழ் சேர்த்துத் தரும் கலைஞர்களை எப்போதுமே அலட்சியப்படுத்தி இருட்டடிப்பு செய்து வருவ'தாக ஞாநி என்கிற சைக்கோவை தவிர இளையராஜாவிடம் பணியாற்றிய யாராவது சொல்லியுள்ளார்களா? எத்தனையோ இரக்கமற்ற சமூக நிகழ்வுகளுக்கு பயன்படுத்த வேண்டிய மனித நேயமின்மை என்கிற வார்த்தையை எந்த லாஜிக்கும் இல்லாமல் இளையராஜாவை நோக்கி இவர் பயன்படுத்தவேண்டிய காரணம் என்ன? இந்தியா முழுக்க யாருடனும் ஒப்பிட முடியாத இந்த மேதையின் மீதான இந்த வெறுப்பை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஞாநியிடம் வெளிபடுவது அரசியல் சார்ந்த மனநோயா, அல்லது சாதி சார்ந்த தலித் வெறுப்பா, வேறு ஏதாவது வெளிவராத பிரச்சனையா என்று புரியவில்லை. அது எப்படியிருந்தாலும் சமூகத்தில் ஒரு நேர்மையான கருத்தாளராக மதிக்கப்படும் இவர் ராஜா மீது காட்டும் இந்த வெறுப்பை அம்பலப்படுத்துவது முக்கியமானது. இவரின் லூஸுத்தனமான வாதங்களை முதிராத இணைய ஆவேசக்காரர்கள் தொடரப்போவதுதான் கவலைக்குரிய விஷயம். இளையராஜா போன்ற ஒருவர் பெங்காலில் பிறந்திருந்தால் தங்கள் அடையாளமாக கடவுளாக கொண்டாடியிருப்பார்கள். இங்கே இல்லாத பொல்லாத தர்க்கத்தை எல்லாம் கண்டுபிடித்து அவரை காலிபண்ணுவதில் ஈடுபட்டிருக்கிறார்கள். நம் அறிவு நோய்கூறுக்கு ராஜாமீதான இந்த வெறுப்பை விட சிறந்த உதாரணம் வேறு கிடையாது.

Monday, March 5, 2012

இரு குறிப்புகள்

குறிப்பு 1: கூடங்குளம் போராட்டத்தில் களத்தில் நிற்பவர்கள் தெளிவாகவும், உறுதியாகவும் இருக்கிறார்கள்; போரடுவதன் அணுகுமுறையும், முன்னெடுப்புகளும், அவர்கள் அளவிற்கு நமக்கு தெளிவிருக்காது. என் கரிசனம் அவர்கள் ஏதோ ஒரு நெருக்குதலில் வன்முறைக்கு மாறக்கூடாது என்பதே; இதுவரை வன்முறையற்று இருக்கும் போராட்டம் வன்முறையாவதை அரசாங்கம் மிக விரும்பும்; வன்முறையை சமாளிப்பதும், ஒடுக்குவதும், அந்த ஒடுக்குதலை நியாயப்படுத்துவதும் அரசுக்கு இலகுவானது. மேலும் இப்போதிருக்கும் சூழலில் வலிமை கொண்ட அரசு அதிகாரத்தை வன்முறை மூலம் பணிய வைக்கக்கூடிய சாத்தியம் இருப்பதாக தெரியவில்லை. வன்முறையில் இறங்குவதற்கான நெருக்குதல் எல்லவகையிலும் இருக்கிறது. ஆனால் இந்த இறுதி சந்தர்பத்திலும், இருக்கும் ஜனநாயக முறைகளில் தொடர்ந்து அரசை இழுத்தடிக்கும் வாய்ப்பு நிச்சயம் உள்ளது. அதற்கான உறுதியும் தளராமையும் போராடுபவர்களுக்கு இருப்பதையும் காணமுடிகிறது. என்ன நடக்கப்போகிறது என்று பார்போம்.


குறிப்பு 2: இன்று சென்னையில் நடக்கவிருக்கும் என்கவுண்டருக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெருமளவு தமிழ் தேசியம் பேசுபவர்கள் கலந்து கொள்கின்றனர்; இது வேறு எங்கும் பார்க்காத மிக ஆரோக்கியமான நிகழ்வு. ஒரு சபால்டர்ன் மக்கள் கூட்டத்தின் மீதான வன்முறையை, இடதுசாரிகளும் மற்ற மனித உரிமையாளர்களும் எதிர்ப்பது இயல்பாக நாம் காணக்கூடியது. ஆனால் இன்னொரு தேசிய அடையாளத்தின் மீது நிகழ்ந்த வன்முறைக்கு எதிராக, அதற்கு எதிரான தேசியம் பேசுவோர் திரள்வது என்பது (குறைந்த பட்சம் இந்திய அளவில்) நான் பார்த்ததில்லை. தேசியத்தின் பாசிசம் என்பது, அது குறிவைத்து எதிர்க்கும் தேசிய அடையாளத்தைக் கொண்ட எளிய மக்களின் மீதான வன்முறையாகத்தான் முதலில் இருக்கும். மும்பை மற்றும் கர்நாடகாவில் தாக்கப்பட்ட தமிழர்களில் பெரும்பான்மையானவர்கள் சேரிகளின் வசித்தவர்கள். இப்போது முல்லை பெரியார் விவகாரத்திலும் கூலிக்கு சென்ற மக்களும், ஐயப்பன் கோவிலுக்கு போகும் எளிய மக்களும்தான் கேரளாவில் தாக்கப்பட்டு உள்ளனர். இயல்பாக பேசவேண்டிய மனித உரிமையாளர்களின் குரலும், இடதுசாரி செயல்பாடும் இந்த வன்முறைக்கு எதிராக நிகழ்ந்து நான் அறியவில்லை. இந்த யதார்த்தத்தில் வட இந்தியர்கள் மேலான இந்த வன்முறையை தமிழ்தேசியர்கள் எதிர்ப்பது தமிழக அரசியல் சூழல் குறித்து நாம் பெருமிதம் கொள்ளவேண்டிய விஷயம். இது திடீரென நிகழ்ந்து விடவில்லை. ஏராளமான அரசியல் விவாதங்களின் விளைவாகவே இப்படி ஒரு அரசியல் சூழல் இங்கே முகிழ்ந்திருக்கிறது.

இன்று சென்னையில் இருக்கக்கூடிய (அல்லது இருப்பதாக சொல்லக்கூடிய) வட இந்தியர்களுக்கு எதிரான மனோபாவம் என்பது, போலிஸ் வழிமுறைக்கு ஆதரவான பொதுப்புத்தியும், அரசியலற்ற அரசு வன்முறையுமே தவிர, எந்த அரசியல் சார்ந்தும் நிகழ்வில்லை. இந்த நிலையில் தமிழ் தேசியம் உட்பட எல்லா எதிர்ப்பு அரசியல் பேசும் அனைவரும் இந்த மனோபாவத்திற்கு எதிராக இருப்பது மிக ஆரோக்கியமானது. இந்த ஆரோக்கிய சூழல் குறித்த பிரஞ்ஞை கூட இல்லாமல் தமிழகத்தை பாசிச பூமியாக சிலர் சித்தரிக்க முயலும் போது, இதை நாம் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டியுள்ளது. மற்றபடி தமிழ்தேசியம் மீது எப்போதும் இருக்கும் விமர்சனங்கள் இப்போதும் உள்ளது.

Tuesday, January 24, 2012

காலாமின் யோசனையும், அரசியலும், தீர்வும்.

அப்துல் கலாமின் இலங்கை பயணத்திற்காக அவர் பலவாறு திட்டபட்டார். அந்த கோபத்தில் நியாயம் இருந்தது. இப்போது அவர் மீனவர் பிரச்சனைக்கு தீர்வாக ஒன்றை சொல்கிறார். அப்படி ஒன்றும் சிக்கலாக யோசித்து, நுண்ணறிவு கொண்டு வந்தடைந்த யோசனை அல்ல; சாதாரண பொது அறிவுக்கு தோன்றும் ஒரு யோசனைதான். ஆனால் அதில் தவறான உள்நோக்கமோ, சதித் திட்டமோ எதுவும் இருப்பதாக தெரியவில்லை. தமிழ்நாடு மற்றும் ஈழத்து மீனவர்களிடையே இருக்கும் தீவீரமான பிரச்சனையில் தீர்வை நோக்கி நகர்வதற்கு இந்த யோசனை உதவும்.

காலாமின் யோசனை சிங்களப்படை தமிழ் மீனவர்கள் மீது நடத்தும் இனவெறி கலந்த தாக்குதலுக்கு எந்த தீர்வையும் தரப்போவதில்லை. அந்த பிரச்சனைக்கு இந்தியா மனது வைத்து தீவிர கறாரான நடவடிக்கைகள் எடுத்தால்தான் உண்டு. ஆனால் மீனவர் பிரச்சனையின் இன்னொரு பரிமாணமாக இருப்பது தமிழ்நாட்டு மீனவர்களுக்கும் ஈழத்து மீனவர்களுக்கும் இடையிலான மீன்பிடி பிரச்சனை. இந்த பிரச்சனையின் ஆதாரமே தமிழ் நாட்டு மீனவர்களின் மீன்பிடி முறையால் கடல் வளம் நாசமாவதுடன், ஈழத்து மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தையும் இழப்பதுதான். இந்த பிரச்சனைக்கான தீர்வை இருதரப்பும் பேசித்தான் நெருங்க முடியும். ஆனால் பேசத்தயாராக இல்லாத தமிழ்நாட்டு தரப்பு, பேசுவது -குறைந்த பட்சமாக பிரச்சனையை எழுப்புவது கூட- ஏதோ துரோகம் என்பது போல் பேசும் தமிழ் தேசிய தரப்பு இதற்கான சாத்தியங்களை உருவாக்கப் போவதில்லை.

கலாம் முன்வைப்பது போல், மூன்று நாட்கள் தமிழ்நாட்டு மீனவர்கள் மீன்பிடிப்பதும், மூன்று நாட்கள் ஈழத்து மீனவர்கள் மீன்பிடிப்பதும் இப்போதைக்கு சமரச தீர்வாக ஒப்புகொண்டு தொடங்கலாம் என்று தோன்றுகிறது. இந்த யோசனையும் தமிழ்நாட்டு மீனவர்களுக்கு சாதகமானதே. தமிழக மீனவர்களின் கடல்சொத்தை மொத்தமாக அறுவடை செய்யும் மீன்பிடி முறையால், இது தங்களுக்கு சாதகமானது அல்ல என்றே ஈழத்து மீனவர்களின் தரப்பு நினைக்கிறது. ஆனால் இப்போதைக்கு இதைவிட மேலான தீர்வுக்கான யோசனை இருப்பதாக தெரியவில்லை. தமிழ்நாட்டு மீனவர்களின் எண்ணிக்கையையும், ஈழத்து மீனவர்களின் எண்ணிக்கையையும் மனதில் கொண்டு இந்த யோசனையை ஈழத்தவர்கள் ஏற்க வேண்டும். உரையாடல், பிரச்சனைக்கான தீர்வு நோக்கி நகர்தல் ஒருதரப்பை மற்றவர்கள் புரிந்து கொள்ளுதல் என்பதற்கு எந்த அறிகுறிகளும் இல்லாத இன்றய நிலையில் இங்கே தொடங்குவது சரியாக இருக்கும். கலாம் போன்ற அதிகாரத்துடன் தொடர்புடையவர் இதை முன்வைப்பது இந்த யோசனையை நடைமுறையில் சாத்தியப்படுத்தும் வாய்ப்பு உள்ளது.

மீனவர்களின் வாழ்வாதாரம் குறித்த கவலையுடன் தீர்வுகளை பற்றி கவலைப்படாதவர்கள், இந்த முறையும் வழக்கம் போல கலாமை திட்டி அரசியல் சார்ந்து மனநிறைவடையலாம். அதனால் மீனவர்களுக்கு எந்த லாபமும் இல்லை. இந்த அரசியல் ஆவேசப் பிடிவாதத்தை மீறி, மீனவர்கள் நலன் பற்றி கவலைப்படுபவர்கள் யோசிக்க வேண்டும்.

கலாமின் யோசனையை ஏற்பதால் சிங்களப்படை தமிழ்நாட்டு மீனவர்கள் மீது நடத்தும் தாக்குதலை நிறுத்த முடியாது. அதற்கான போராட்டங்களும், எதிர்ப்பும், அரசியலும் தொடரத்தான் வேண்டும். ஆனால் தமிழ்நாட்டு மீன்பிடி முறையால் ஈழத்தவர்கள் பாதிப்பதால்தான் அவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படுகிறார்கள் என்கிற பொய்பிரச்சரத்தை, இந்த இருதரப்பிற் கிடையிலான மீன்பிடிப் பிரச்சனையை தீர்ப்பதன் மூலம் முறியடிக்க முடியும். எப்படி இருந்தாலும் இது காலப்போக்கில் இரு தரப்பின் நியாயத்தையும் கணக்கில் கொண்டு ஏற்று தீர்க்கப்படவேண்டிய ஒரு பிரச்சனைதானே.

Tuesday, November 15, 2011

NO COMMENTS!

(தேவதேவனின் 'நுழைவாயிலிலேயே நின்று விட்ட கோலம்' தொகுப்பிற்கு தேவ தேவன் எழுதிய முன்னுரையிலிருந்து).

ஒரு இலக்கிய கூட்டத்தில் பிரமீள் தனது கவிதைகள் குறித்து கேட்கப்பட்டபோது "அவைகள் ரத்தினங்கள்" (gems) என்றார். அதற்கு ஒரு வாசகர் "அப்படியானால் அது ஒரு வெறும் அணிகலன்தானா?" என்று எதிர்வினை செய்ததற்கு அவர் "ரத்தினம் அது சக்தி மிக்க ஆயுதம் (weapon)" என்றார். பிரமீள் தனது வாசகனுக்கு தான் சென்றடைந்த உயரத்திற்கு அவனை அழைத்துச் செல்ல அடிவாரத்திலிருந்து உச்சி வரை படிக்கட்டுகளை அமைத்துக் கொண்டிருப்பதில்லை. அவனது ஆர்வத்திலும் திராணியிலும் நம்பிக்கை வைத்தபடி வெகுவேகமாகமாயும் லாவகமாயும் தாவித் தாவிச் செல்வது அவர் சிந்தனை.

'கானகவாசி'யில் வைரத்தைத் (ரத்தினம்) தேடிச் செல்கிறது ஒரு கூட்டம். ரத்தினம் இயற்கையின் ஓர் அற்புத சிருஷ்டி. அது இங்கே பேராசை ஒன்றின் குறியீடாகிறது. ஒரு தேர்ந்த வாசகரை திடுக்கிடச் செய்தது.

ஓர் சந்தர்ப்பத்தில் "அப்படியானால் கவிதை இந்த வாழ்கைக்கு ஒன்றும் செய்யாதா?" என்று கேட்கப்பட்டபோது நான் சொன்னேன். "ரத்தினம் இயற்கையின் ஓர் அற்புத சிருஷ்டி என்ற நிலையில் நம்மிடம் கேட்டு நிற்கும் விலை என்ன? மனித சமூக அளவுகோல்களால் நாம் அதற்கு அளித்திருக்கும் மதிப்பு, விலை, மனிதனை படுகுழிக்குள் தள்ளிவிடக் கூடியதானது. நமக்கு இன்று உணர்த்துவதுதான் என்ன? ரத்தினம் ஒரே சமயத்தில் சிருஷ்டிகரத்தின் குறியீடாகவும் பேராசையின் குறியீடாகவும் திகழ்வதன் சிக்கலை அவிழ்த்து வாழ்வை மீட்சி கொள்ளும் வாழ்வே கவிதை..."

(மேலே பிரமீள் சொன்னதை முன்வைத்து தேவதேவன் சொன்னதை ஜெயமோகன் மொழிபெயர்த்தது கீழே. )

சிலகாலம் முன்பு தமிழின் தலைசிறந்த கவிஞரான பிரமிள் தன்னுடைய கவிதைகள் அரசியலற்றவை என்று சொன்னார். அவர் வைரங்கள் போல என்றார். அதைக்கேட்டு ஒரு முற்போக்கு விமர்சகர் கொதித்தார். அப்படியானால் அக்கவிதைகளுக்கு பயன்மதிப்பு என ஒன்றும் இல்லையா? வெறும் அலங்காரமோ ஆடம்பரமோ மட்டும்தானா அவை?

அதற்கு தமிழின் மகத்தான கவிஞராகிய தேவதேவன் ஒரு கட்டுரையில் பதில் சொன்னார்.. ஆம் , அவை வைரங்கள்தான். ஆனால் வைரங்கள் பயனற்றவையா? நாம் உலகியல் சூழலில் பயன்படுத்துவதுபோன்ற பயன் அவற்றுக்கு இல்லை, அவ்வளவுதான். அவை ஒரு இட்லி போல ஒரு கோவணம் போல ஒரு பாய்போல நமக்கு பயன்படுபவை அல்ல. அவற்றின் பயன் குறியீட்டு ரீதியானது.

வைரம் நமக்கு சுட்டுவது எதை? நம்முடைய உலகியல்செயல்பாடுகள் அனைத்துக்கும் அப்பால் நின்று நம்முடைய உலகியலை மதிப்பிடக்கூடிய ஒரு அபூர்வப்பொருளாக அது உள்ளது. நம்முடைய உலகியலின் மதிப்பையும் மதிப்பில்லாமையையும் அது நமக்கு உணர்த்துகிறது.ஒரு வைரம் பல டன் சோற்றுக்குச் சமமாக இருப்பது அதனால்தான்.

(ஜெயமோகன் எழுதிய "வாசிப்பின் நாட்டிய சாஸ்திரம்"லிருந்து)

Monday, November 14, 2011

நிலைபாடும், அரசியலும், அதன் தீவிரமும்.

ஒரு பெண்ணை வன்புணர்ந்து கொன்ற குற்றத்திற்காக, கோவிந்தசாமி என்பவருக்கு மரண தண்டனை தீர்ப்பளிக்கப் பட்டிருக்கிறது. எல்லாவித மரண தண்டனைகளையும் எதிர்ப்பவன் என்கிற முறையில், கோவிந்தசாமிக்கான மரணதண்டனையையும் எதிர்க்கிறேன். ஆனால் எதிர்க்கும் எல்லாவற்றிற்கும் எதிராக முனைந்து போராடுவதில்லை; அதற்கான செயல்பாட்டை முன் எடுப்பதில்லை. ஆனால் அதற்கான சந்தர்ப்பம் என் குட்டி பூர்ஷ்வா வாழ்க்கையினுள் அமைந்தால் நிச்சயம் அதில் என்னை இணைத்துக் கொள்வேன்.

ஆனால் கோவிந்த சாமிக்கான தண்டனையை விட, பேரறிவாளனுக்கான தண்டனையையே இன்னமும் தீவிரமாக எதிர்க்கிறேன். பேரறிவாளன் குற்றமற்றவர் என்று நினைப்பது மட்டும் இதற்கு காரணமல்ல. ஒரு குறிப்பிட்ட அரசியலில் நம்பிக்கை வைத்ததற்காகவும், அதற்கு தன்னை அர்பணித்ததற்காகவும் பேரறிவாளன் தண்டிக்கபடுகிறார். ராஜீவ் கொலை என்கிற குற்றத்துடனான, இன்னமும் நிருபிக்கப் படாத அவரது பங்கு என்பதைவிட, இளம் வயதில் அவர் கொண்ட, அவருக்கு பெற்றோர் மூலமாகவும், தொடர்புகள் அறிதல்கள் மூலமாகவும் பெறப்பட்ட அரசியலுக்காக, அநியாயமாக பேரறிவாளனுக்கு தண்டனை வழங்கப்படுகிறது. அதனால் அதை தீவிரமாக எதிர்க்கிறேன். நேரடி சுயநலம் சாராத ஒரு அரசியலில் நம்பிக்கை வைத்து, அதற்கு வாழ்வில் ஏதோ ஒரு விலை கொடுக்க நேர்ந்த அனைவரும், பேரறிவாளன் தன் அரசியலுக்காக தண்டிக்கப் படும் அநியாயத்திற்கு எதிராக நிற்க வேண்டும்.

அப்சலுக்கு அளிக்கப்பட்ட மரண தண்டனையையும் எதிர்க்கிறேன். அப்சலின் தண்டனையும் அரசியல் காரணங்களால் அளிக்கப்பட்டிருக்கிறது; குற்றத்துடனான தொடர்பின் தீவிரம் தெளிவாக உறுதிப்படுத்தப் படாத நிலையிலேயே அளிக்கப்பட்டிருக்கிறது. மேலும் அப்சலுக்கு தண்டனை அளிக்கப்படுவதால் சிலரது தேசிய அரசியல் நியாயங்கள் மனதளவில் நிறைவு கொள்ளுமே தவிர, அது காஷ்மீர் பிரச்சனையை மேலும் கொந்தளிப்பான நிலைக்கு கொண்டுபோய், இன்னும் சிக்கலாக்கவே செய்யும். இந்த காரணங்களால் அப்சலின் தண்டனையையும் எதிர்க்கிறேன். அதை தீவிரமான கருத்து பிரயோகத்தில் என் பதிவுகளில் பின்னூட்டங்களில் எதிர்கொண்டிருக்கிறேன்.

ஆனால் ஊடகம் மட்டுமில்லாது, இடதுசாரி அரசியல் மனித உரிமை பேசும் அறிவுத்தளத்திலும் தமிழ்சார் அரசியலுக்கு பரவாலாக நிரம்பியுள்ள ஒரு பாரபட்சத்தினால், நான் அப்சலுக்கான தண்டனையை விட, பேரறிவாளனுக்கான தண்டனையில் கவனம் குவிப்பதே நியாமான அரசியலாக நினைக்கிறேன். இன்னமும் கூட காஷ்மீரிலிருந்து, சிறிய அளவில், ஒரு அரசியல் அணுகுமுறையாக கூட, மூன்று பேரின் தண்டனையை எதிர்த்து குரல் எழும்பவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும். இந்நிலையில் பேரறிவாளனின் தண்டனையையே என் இருப்புக்கான சவாலாக பார்க்கிறேன்.

ஆகையால் நிலவும் அரசியல் லயத்தின் மீதான மனக்குறையினாலும், நாம் மட்டுமே பேச நிர்பந்தப்படுத்தப் பட்டுள்ள கட்டாயத்தினாலும், தெளிவான அரசியல் காரணங்களினாலும், பேரறிவாளனின் தண்டனையை எதிர்ப்பதையே முதன்மை அரசியல் என்று நினைக்கிறேன். இதை சொல்லிவிட்டு கோவிந்தசாமியானாலும், தர்மபுரி குற்றவாளிகளானாலும் அதற்கான எதிர்ப்பு சத்தம் எழும்போது என் குரலையும் சேர்த்து ஒலிக்கவே செய்வேன்.

இதே போலவே ஒவ்வொருவருக்கும் முதன்மை கரிசனத்திற்கான அரசியல் என்று இருக்கும். குறிப்பிட்ட அரசியலுக்கான ஆதரவின் காரணமாக மூன்று பேருக்கான தண்டணயை எதிர்ப்பவர்கள், கோவிந்தசாமி விஷயத்தில் போராட்டத்தை முன்னெடுக்காததை, ஏதோ மாபெரும் ஹிபாக்ரசிபோல் பேசுவது எல்லாம், துக்ளக் தலையங்கவாதமாக இருக்குமே ஒழிய அதில் சத்து எதுவும் கிடையாது.

ஒரு அரசியல் நிலைபாட்டின் காரணமாக, வேறு (கொலைகள், விசாரணைகள், உரிமை மறுப்புகள் போன்ற) அநியாயங்களை நியாயப்படுத்துவது என்று வந்தால், அதை நிச்சயம் கேள்வி கேட்பதில் அர்த்தம் உண்டு. 'இதற்கு போராடும் நீ அதற்கு ஏன் போராடவில்லை' என்று கேட்பவர்கள், தங்களுக்கு கரிசனமானதை தங்களுக்கான முதன்மை அரசியலாக கொள்ள வேண்டியதுதான்.

(இந்த பதிவை நிச்சயம் ரவி ஶ்ரீனிவாசை மட்டும் மனதில் வைத்து எழுதவில்லை.)

Friday, October 7, 2011

Steve Jobs!

நேற்று காலை எழுந்து காப்பியுடன் ஸஃபாரியை கிளிக்கினால், தீர்க்கமாக பார்க்கும் ஸ்டீவ் ஜாப்ஸின் உருவம்; அருகில் 1955-2011 என்றது. இந்த பெயரை இதற்கு முன் கேள்வியுற்றிருந்தும், அடையாளம் காணும் வகையில் புகைப்படத்தில் பார்த்ததில்லை என்பதை வெட்கத்தோடுதான் இப்போது சொல்லவேண்டும். காலையின் முதல் வழக்கத்தின்படி, அப்படியே ட்விட்டர் சென்று, #RIP Steeves தவிர ட்விட்ட வேறு எந்த மேட்டருமே இல்லாதது போன்ற ஒரு சூழலில், ஓரளவு செய்தியை படித்து தெரிந்து கொண்டேன். கேன்சரால் ஒருவர் இறப்பது குறித்த பச்சாதாபம் தோன்றினாலும், அப்படி ஒரு வாய்ப்பு நமக்கும் இருப்பதை நினைவுபடுத்தும் மிரள் மின்னல்தான் மனதில் அலை ஏற்படுத்தியது.

நம்மால் உணரமுடியாத ஒரு விஷயத்திற்காக, இணையமே உருகி உணர்ச்சி கொந்தளிப்பது ஒருவகை எரிச்சல் உளவியலை ஏற்படுத்தியிருக்கலாம். உண்மையை அப்படியே சொல்லவேண்டுமானால், இப்போது ஒரு நாளில் தெரிந்திருப்பதில் ஆயிரத்தில் ஒரு பங்கு கூட நேற்று காலையில் எனக்கு ஸ்டீவ் ஜாப்ஸ் பற்றி தெரியாது. அப்போதும் தெரிந்தது ஆப்பிள் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் CEO என்று சில வார்த்தைகள் மட்டும். பில் கேட்ஸ் போன்ற இன்னொரு முதலீட்டிய குறியீடான ஒரு நபருக்கு இத்தனை மிகைபடுத்தப்பட்ட உணர்ச்சி தேவையா என்ற கேள்வியே உள்ளபடி வந்தது. அந்த நேரத்தில் கண்ணில் பட்ட, இரு தீவிர இடதுசாரி ட்வீட்டர்களின் சில ஸ்டீவிற்கு எதிரான கீச்சுகளை மறு கீச்சு செய்தேன். வேறு சில கீச்சுகளில் இருந்த வரிகள் எனக்கு ஒப்புதல் இல்லாததால் சுட்டிகளை நேரடியாக அளித்தேன். செந்தில் நாதன் அது குறித்த தன் வருத்தத்தை தெரிவித்த போதும் எனக்கு சரியாக புரியவில்லை.

ஆனால் ஆர்வம் தூண்ட அடுத்த சில மணி நேரங்கள் இது குறித்த ஏகப்பட்ட செய்திகளையும் கட்டுரைகளையும் வாசிப்பதிலேயே கழிந்தது. ஒரு பரந்த மக்கள் கூட்டத்தின் உணர்ச்சிகளை புரிந்து கொள்ளும் தேவையில் வாசித்ததில், வெட்கமும், காலை ட்விட்கள் குறித்த குற்றவுணர்வும் ஏற்பட்டது. பிற்பகலில் அதை நீக்கிய பிறகே மனம் சமநிலை அடைந்தது. இது தொடர்பான எனது பிரச்சனைகளை முன்வைப்பது சில புரிதல்களை வாசிப்பவர்களுக்கு அளிக்கலாம் என்கிற நோக்கத்திலேயே இந்த பதிவை எழுதுகிறேன்.

பள்ளி பருவத்திலிருந்து தொடர்ந்த பல ஆண்டுகளுக்கு தொழில் நுட்ப சமாச்சாரங்களில் பெரிய அளவிற்கு எனக்கு ஈடுபாடு உண்டு. மாவட்ட நூலகத்தில் சுயமான தேடலும், சுஜாதா எழுத்துக்களை வாசித்ததும் இந்த ஆர்வத்தை வளர்த்தன. வாக்கி டாக்கி, ரிமோட் கண்ட்ரோல் என்று நேரடி முயற்சிகளில் வெற்றி பெறவில்லையெனினும், அது மிக சுவாரசியமான விளையாட்டாக இருந்தது. கணினி குறித்து 80களின் மத்தியில் புதிய விஷயங்களை அறிவது ஒரு போதையாகவே இருந்தது. அப்போது பழக்கமாகியிருந்த ஆசிரியருக்காகவே, ஹயர் செகண்டரியில் 'ஃபர்ஸ்ட் குருப்'பிற்கு பதில், என் பள்ளியில் மட்டும் இருந்த 'எலெக்ட்ரானிக்ஸ் குரூப்' எடுக்கலாமா என்று ஒரு உத்வேகம் தோன்றியது. ஆனால் அது மிக குறைந்த மதிப்பெண்கள் எடுத்த 'உருப்படாத மாணவர்கள்' எடுக்கும் க்ரூப் என்று அறிந்ததும் கஷ்டமாக இருந்தது.

எனது சிறுவயது உத்வேகத்தை இங்கே முன்வைப்பது அல்ல நோக்கம்; அடிப்படையில் தொழில் நுட்பத்திற்கு ஆதரவான மனம் இருந்தது என்பதை சொல்வதுதான். பிறகு அறிவியல் சார்ந்த ஆர்வமும், அறிதலும் தொடர்ந்து இருந்தாலும், தொழில் நுட்ப விஷயங்களை தேடி அறிவது என்கிற தேடலும் ஆர்வமும், கிட்டதட்ட மறைந்து போனாலும், அடிப்படையில் தொழில் நுட்பத்திற்கு எதிரான கருத்து நிலை பொதுவாக இருந்ததில்லை; ஆட்டோமொபைலில் இருந்து அணு உலைவரை நம்மை அழிவுக்கு தெளிவாக இட்டு செல்லும் என்று கருதும் இன்றைக்கும், எனக்கு அடிப்படையில் தொழில் நுட்ப படைப்பாக்கத்திற்கு எதிரான பார்வை கிடையாது என்றே நினைத்து வருகிறேன்.

ஆனால் கேபிடலிசம் நமக்கு அளிக்கும் தொழில் நுட்பத்தின் வழிமுறை என்ன? வீட்டில் ஒரு கடிகாரத்தை வாங்கினால் கூட, ஒருவர் கைபட சாவி கொடுக்கப்பட்டு, பல ஆண்டுகளுக்கு பத்திரப்படுத்தி பயன் பெறும் நமது பரம்பரை சமூகப் பழக்கம், இன்றய முதலீட்டிய சந்தைக்கு ஒத்துவாரது. இன்றைக்கு கிடைக்கப் பெறும் எந்த பொருளையும், அதன் பயனாக சாத்தியமுள்ள அதன் வாழ்நாளின், மிக மிக சிறுபகுதியை மட்டுமே துய்க்க வேண்டியுள்ளது. ஒருவருடத்திலேயே அது வழக்கொழிந்ததாக மாற்றப்படுகிறது. ஒரு காலத்தில் ஒரு ரேடியோவை பயன்படுத்தியது போல, ஒரு ஐபாட் 10 வருடங்கள் பயன்படுத்தப்படும் சாத்தியம் இல்லை. இன்னமும் சொல்லபோனால் உங்கள் ஐபாட் நன்றாக செயல்படும்போதே, மேலும் மேலும் புதிய அவதாரங்களை வாங்க நீங்கள் கட்டாயப்படுத்தப்படுகிறீர்கள். அதிலும் திட்டமிட்டு குறிப்பிட்ட இடைவெளியில் மேம்படுத்தல் செய்யப்படுவதும், பிரபலமும் பரவலும் ஆக்கப்படுவதை உணரலாம். ஒரு சிறிய பிரச்சனை உங்களின் எந்த பொருளில் ஏற்பட்டாலும், அதை சரி செய்ய கூடியது எல்லாவகையிலும் தொழில் நுட்பரீதியாக சாத்தியம் இருந்தும், அதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டு, புதிதாக ஒன்றை வாங்கவே நாம் அனைவரும் கட்டாயப்படுத்தப் படுகிறோம். இதன் விளைவுகள் தனிப்பட்டவரின் பொருளாதாரம் சம்பந்தப்பட்டது மட்டுமல்ல; குப்பைகளாக பொருள்களை மாற்றுவதும் தான். முதலீட்டியத்திற்கு தொடர்ந்து தனக்கான உபரியை உருவாக்கும் கட்டாயம் உள்ளது. அதற்கான சந்தை இயல்பாக நிலவும் நிலையில் தொய்வு நேரும்போது, செயற்கையாக உருவாக்கும் நிலை ஏற்படுகிறது. ஒரு கட்டத்தில் இந்த சந்தைக்காக எந்த வன்முறையையும் உருவாக்க முதலீட்டியம் தயங்குவதில்லை.

இன்றுவரைக்கும் இன்றய முதலீட்டிய தொழில் நுட்பம் உருவாக்கும் குப்பைகளை, பொய் சொல்லாமல், யாருக்கும் எதிர்கால தீங்கின்றி யோக்கியமாக சமாளிக்கும் முறை எதுவும் இல்லை. இந்த நிலையில் அணுக்கழிவுகளையும் நாம் சமாளித்துவிடமுடியும் என்றெல்லாம் நம்பும் 'அறிவியல் மனம்' மத நம்பிக்கைகளை விட விபரீதமானது. (அது உண்மையான பொருளில் அறிவியல் மனம் அல்ல என்பது வேறு விஷயம்). முதலீட்டியத்தின் இன்னொரு கபளீகரம் அது தனி மனித அறிவு பாய்சல்களை முற்றாக தனக்குள் விழுங்கிக் கொள்வது. (ஸ்டீவ் விஷயம் வேறு.)

அடுத்து முதலீட்டியத்தின் சுரண்டல் என்பது நேரடியாக சைனாவிலோ, ஆப்பிரிக்காவிலோ, லத்தீன் அமேரிக்காவிலோ மலைவு விலைக்கு உழைப்பை பெற்று, பெரும் லாபம் பெறுவது என்பது மட்டுமல்ல. காலம் காலமாக நம் உள்ளூர் வியாபாரிகள் கூட ஒருவகையில் அத்தகைய சுரண்டலை செய்து வந்தார்கள். புதிய பொருளாதார விதிகளையும், பொருளாதார நெருக்கடிகளையும், தேவைகளையும், தட்டுபாடுகளையும் எல்லோருக்கும் ஏற்படுத்துவதன் மூலமும், வளங்களை கொள்ளையடிப்பதன் மூலமும், அழிப்பதன் மூலமும், சாக்கடையாக்குவதன் மூலம் இந்த சுரண்டலின் பரிமாணம் விரிகிறது. முதலீட்டியம் மனித இனம் வந்தடைந்த அமைப்புகளிலேயே மிக மோசமான சுரண்டல் அமைப்பாக நான் பார்க்கிறேன். ஏனெனில் முதலீட்டியம் தன் அமைப்பின் இயங்குதலை தெளிவாக புரிந்து கொண்டிருப்பதும், அதை துல்லியமாக திட்டமிட்டு ஈவு இரக்கம் சார்ந்த மதிப்பிடுகளுக்கு அப்பாற்பட்டு செயல்படுத்துவதுமே காரணம்.

ஆனால் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் தொழில் நுட்ப வளர்ச்சி, நுகர்வு கலச்சாரத்துடன் சேர்ந்து ஏற்படுத்தும் கட்டாயங்களுக்கு ஏற்ப நம்மை மேம்படுத்திக் கொள்ளவே வேண்டியுள்ளது. இது காலம் ஏற்படுத்தும் சுமை அல்ல, நமது சுதந்திரத்தை விரிவு படுத்தும் செயல் ஆகும். ஆனால் இந்த வளர்ச்சியில் முதலீட்டிய நுகர்வு அழுத்தங்களை எவ்வளவு இயலுமோ அவ்வளவு தவிர்ப்பதே, நுகர்வு கலாச்சாரத்திற்கு தனி மனித அளவிலான எதிரான நடவடிக்கையாக இருக்க முடியும். நான் என்னளவில், என் பொருளாதார வசதி வாய்ப்பளித்தாலும், தொழில் நுட்பரீதியாக என்னை எல்லாவிதத்திலும் அப்டேட் செய்துகொள்வது கிடையாது. அந்தவகையில் 2000த்தில் நடந்த ஐ-மாற்றங்களை நான் அறியாமலே இருந்திருக்கிறேன். பல மாற்றங்களை முதலீட்டியம் அளிக்கும் நிர்பந்தங்களாகவும், ஹைபர் வசதிகளாகவும், ஹைபர் விடுதலையாகவும் மட்டுமே என்னால் பார்க்க முடிந்தது. ஆனால் அவை பயன்பாடு என்பதன் அர்த்தத்தையும், அது குறித்த புரிதலையும் காலாகாலத்துக்கும் மாற்றிய சமாச்சாரமாக நேற்றுதான் வாசித்து புரிந்து கொண்டேன்.

ஒரு முதலீட்டிய நிறுவனத்தின் ஒரு நிறுவனருக்கு, வந்த மிகையுணர்சி அஞ்சலிகள், மேலே சொன்ன காரணங்களால் அதீதமாக பட்டு எதிர்வினையாக ஏதாவது செய்ய என்னை தூண்டியது. பில் கேட்ஸை போல முதலீட்டியத்தின் அநியாய விதிகளை சாதமாக்கிகொண்ட ஒருவராக மட்டுமே ஸ்டீவை பற்றி என்னளவில் இருந்த பிம்பமே இதற்கு காரணம். ஆனால் அவர் அவரளவில் சிறந்த தொழில் நுட்பவாதி மட்டுமின்றி, காலத்தில் மனித இனததை முன்னெடுத்து சென்ற கலைஞன் என்பதான அறிதல் நேற்றய வாசிப்பிற்கு பிறகே ஏற்பட்டது. இது ஒரளவு வெட்கமாக இருந்தாலும், அதை வெளிப்படையாக சொல்வதுதான் இதை தாண்டி வரும் வழியாக எனக்கு தெரிகிறது. நமக்கான அரசியல் பார்வை, சில சந்தர்ப்பங்களில் மூர்க்க எதிர்வினை செய்ய தூண்டுவதை விளங்கிக் கொள்ளவும், அது குறித்த சுயவிமர்சனத்தை முன்வைக்கவும் இது ஒரு நல்ல சந்தர்ப்பமாக எனக்கு இருந்தது. இந்த தெளிவில், இப்போதும் நேரடியாக அறிதலாக எனக்கு அவரது மேதமை புரியாவிட்டாலும், வாசித்து அறிந்தவரையில் நானும் ஸ்டீவுக்கு அஞ்சலி செலுத்த விரும்புகிறேன்.

நுகர்வு கலாச்சாரம் ஏற்படுத்தும் போலி தொழில்நுட்ப நெருக்குதல்களையும், தேவைகளையும் எதிர்க்கும் காரணத்தால் தொழில் நுட்ப பாய்ச்சல்களை புறக்கணிக்க முடியாது. தொழில் நுட்பம் சமூகத்தில் மேலாண்மை செய்பவர்களுக்கு மட்டுமின்றி, அடித்தளத்தில் உள்ளவர்களுக்கும் பெரியதொரு வாழ்வியல் விடுதலையை எல்லா தளங்களிலும் தொடர்ந்து நிகழ்த்தி வருகிறது. எல்லா தொழில் நுட்பப் புரட்ச்சியும் ஒட்டுமொத்த சமுதாய வாழ்க்கையை புரட்டி போட்டியிருக்கிறது. ஆனால் தேவைக்கும், பேராசை இட்டுச் செல்லும் பெருந்தேவைக்குமான வித்தியாசத்தை உணராத வரையில், அது நம்மை இட்டுச் செல்லும் அழிவு தவிர்க்க முடியாது.

பின் குறிப்பு: எம்டிஎம் ஸ்டீவை 'எதிர்கலாச்சாரத்தின் தொழில் நுட்ப முகமாக' பார்க்க விரும்பி ஒரு பதிவு போட்டிருந்தார். (அதை உந்துதலாக கொண்டு, 'தொழில் நுட்பத்தின் எதிர்கலாச்சார முகமாக' அவரை அடுத்த கட்டத்திற்கு நண்பர்கள் எடுத்து செல்வது சுவாரசியமானது.) இது எனக்கு கொஞ்சமும் தெளிவாக இல்லை. முதலில் ஸ்டீவின் மற்ற முகங்கள் என்பது நோபல் பரிசு வாங்கிய விஞ்ஞானி எழுதிய கவிதையும் கவனம் பெறுவது போலத்தான் இருக்கிறதே தவிர, அதற்கான தனித்துவமான முக்கியத்துவம் கேள்விக்குரியது.

ஹிப்பி கலாசாரம், பௌத்தம், ஹரே ராமா ஹரே கிருஷ்ணா கோவில் உண்டக்கட்டி என்று ஒரு கடந்த கால வாழ்க்கை இருந்ததால், அவரது தொழில் நுட்பத்தை அதன் நீட்சியாக பார்ப்பது சரியாகப் படவில்லை. எதிர்கலாச்சாரத்தின் தொழில் நுட்ப முகமாக அவரை நிறுவுவதற்கு, குறைந்தபட்சம் தெளிவு படுத்தி அமோதிக்க வைக்க, இன்னும் மெனக்கிட வேண்டும். எம்டிஎம் கடிக்கப்பட்ட ஆப்பிள் கடவுளின் ஆணையை மீறிய அறிவின் பாதையை தேர்ந்தெடுப்பதன் குறியீடாக கொள்வது சரியாக படவில்லை. ஆதாமின் ஆப்பிளை சிற்றின்பத்தின் குறியிடாக கொள்ள முடியுமா, அறிவின் குறியீடாக கொள்ள முடியுமா? பௌத்தத்திற்கும் சிற்றின்ப ஆப்பிளுக்குமான தொடர்பு என்ன? ஆதாமின் ஆப்பிள் மதச்சட்டகத்தில் எதிர்கலாச்சார குறியீடுதான்; ஆனால் முதலீட்டிய சட்டகத்தில் ஆதாமின் ஆப்பிள் எதிர்கலாச்சாரத்தன்மையை பெற்றிருப்பதாக கொள்ளமுடியவில்லை; முதலீட்டிய நுகர்வுக்கு சாதகாமானதன்மையையே கொண்டிருக்கிறது. 'மனித பரிணாம வளர்ச்சி என்பது கூட்டாகவே சாத்தியம் என்ற எதிர் கலாச்சார விழுமியமே கணிணிகள் எல்லோரையும் சென்றடையவேண்டும் எல்லோரும் பயனர்களாக வேண்டும் என்ற பாதையை ஜாப்ஸிற்குக் காட்டக்கூடியதாக இருந்திருக்கிறது' என்று சொல்வது வலிந்து தரப்படும் அர்த்தமாக எனக்கு தெரிகிறது. அது என் பார்வையின் பிரச்சனையாகவும் இருக்கலாம்.

பேராசைகளினால் தோற்றுவிக்கப்படும் தேவைகளை கொண்டு, புதிது புதிதாக நெருக்கும் முதலீட்டிய நுகர்வு கலச்சாரத்திற்கு ஏதாவது ஒருவகையில், அந்த சட்டகத்தினுள் இருந்து கொண்டே எதிர்வினை புரிவதுதான், ஸ்டீவ் செய்திருக்கக் கூடிய எதிர்கலாச்சார செயல்பாடாக என் பார்வையில் நினைக்கிறேன். வலிந்து ஒரு இடதுசாரி முகமாக சிலர் கட்டமைப்பதை தவிர, அப்படி எதையும் உருப்படியாக நான் கேள்விப்படவில்லை.

ஆனால் ஒருவரின் மேதமையை போற்ற, அவர் நமக்கு உவப்பான சட்டகத்தில் இருக்க வேண்டிய அவசியம் அல்ல; வலிந்து அவரை நம் சட்டகத்தில் கற்பிதம் செய்ய வேண்டிய தேவையும் இல்லை என்று தோன்றுகிறது.

Monday, October 3, 2011

கணிதத்தின் பரிமளம்.

எஸ்ராவின் 'யாமம்' வாசித்துக் கொண்டிருக்கிறேன்; பிரமாதமாக போய்கொண்டிருக்கிறது. ஆங்காங்கே 'வெயில் அவரை பின் தொடர்ந்தது' 'இருள் லண்டனிலும் கமிழ்ந்தது' 'நதி தீர்க்கமாக உற்றுப் பார்த்தது' போன்ற எஸ்ராவின் பழக்கப்பட்டுவிட்ட அலுப்பூட்டும் விவரிப்புகளை தவிர, நாவலின் விஸ்தாரமும், பயணிப்பும் பிரமிப்பூட்டுகிறது. நாவல் குறித்த என் மதிப்பீட்டை இப்பொழுது எழுதும் நோக்கம் இல்லை.

நடுக்கதையில் திருசிற்றம்பலம் என்று ஒரு கணிதவியாலாளன் 'உயர் கணிதம்' படிக்க லண்டன் போகும்போது, கப்பலில் சற்குணத்திடம் சொல்கிறான்.

"பூஜ்யம் என்பது அறுதியான உண்மை, முடிவின்மையது. அது ஒரு தீர்க்கப்படாத ரகசியம். நான் பூஜ்யத்திற்குள் என்னவிருக்கிறது என்றுதான் தேடிக்கொண்டிருக்கிறேன். உனக்கு ஒரு ரகசியம் சொல்கிறேன். எண்களுக்கு தனியான குணநலன்கள் இருக்கின்றன. அவை உயிரோடுதானிருக்கின்றன"

இவையெல்லாம் தத்துவமா கவிதையா என்று தீர்மானிப்பதில் எனக்கு குழப்பம் இருந்தாலும், கணிதத்துடன் தொடர்புடையது அல்ல என்பதில் எனக்கு எந்த சந்தேகமில்லை. பூஜ்யம் என்கிற கருத்தாக்கம் உருவான காலத்தில் புதிரானது. ஆனால் பிறகும், இப்போதும் அதை சார்ந்து இப்படி ஒரு தேடல் கணிதத்தின் தளத்தில் இருந்ததில்லை. கணிதவியலாளன் கவிஞனாகவும், தத்துவவியலாளனாகவும் இருக்க முடியாது என்று நானே சொல்ல முடியாது. அதனால் திருசிற்றம்பலம் கவிஞன் என்ற நிலையில் இருந்து, தன் தொழில் குறித்து கவித்துவமாக விவரித்திருக்கலாம் என்று எடுத்துக் கொள்கிறேன்.

ஆனால் அடுத்து விளையாடும் சீட்டாட்டத்தில், சற்குணம் தன் சீட்டை இறக்கியதும் கண்ணிமைக்கும் நேரத்தில் திருசிற்றம்பலம் ஜெயித்துவிடுகிறான். (ஆமாம், கண்ணிமைக்கும் நேரம்தான்.) எட்டு முறை தோற்ற பிறகு எப்படி அவன் இவ்வளவு வேகமாக ஜெயித்து விடுகிறான் என்று சற்குணம் கேட்டதும், " எண்கள் சிதறிக்கிடந்தாலும் அதற்குள் ஒரு ஒழுங்கை கொண்டிருக்கிறது. அது உனக்கு புரியாது" என்றதோடு "அடுத்த முறை நீ சீட்டை கலைத்து போட்டதுமே உன் கைகளில் என்னென்ன சீட்டுகள் இருக்கின்றன என்று சொல்லிவிடவா" என்று கேட்டான்.

நம்பமுடியாத சந்தேகத்துடன் சற்குணம் சீட்டை கலைத்துப் போட்டுவிட்டு தனக்குரிய சீட்டுகளைக் கைகளில் எடுத்து அடுக்கியதும் திருசிற்றம்பலம் அவன் கைகளில் என்னென்ன சீட்டுகள் இருக்கின்றன என்பதையும் சொல்லிவிட்டான். சற்குணம் ஆச்சரியத்துடன் "உனக்கு எப்ப கணிதத்தில் ஆர்வம் உண்டானது?" என்று கேட்டான்.

இப்போது வாசகனான எனக்கு, திருசிற்றம்பலம் இப்படி சீட்டுகளை கண்டுபிடிக்கும் சீன் நாவலில் வரக்கூடாது என்று ஆட்சேபணை எதுவும் இல்லை; அந்த அளவிற்கு யதார்த்தவாத இலக்கிய அடிபடைவாதி அல்ல நான். ஆனால் எந்த கதை, எந்தவகை யதார்த்தங்களை தாண்டினாலும், கதைக்கான ஒரு உள்தர்க்கம் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அந்த வகையில் எந்த எண்கணித கொம்பனாலும், எதிராளியின் சீட்டுக்களை பார்க்கவே பார்க்காமல், கணிதத்தை வைத்து கண்டுபிடிக்க முடியாது. எண் கணிதத்தில் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத மேதை ராமனுஜத்தால் கூட அது சாத்தியமல்ல. ஒரு வேளை அப்படி கண்டுபிடிக்க முடிந்தால், மாந்த்ரீகம் எதையாவது வைத்து அது சாத்தியமாகலாமே ஒழிய கணிதத்தினால் அல்ல. யதார்த்த கணிதத்தை மீறி அப்படி சாத்தியமாகக்கூடிய மாந்திரீக கணிதத்திற்கான கதையின் உள்சட்டகத்தையும் எஸ்ரா சமைக்காததால், இதை ஒரு மகாசொதப்பல் என்றுதான் என்னால் எடுத்துக் கொள்ள முடிகிறது.

Tuesday, August 30, 2011

இனி.

சென்னை உயர்நீதிமன்றம் விதித்துள்ள இடைக்காலத்தடை பலருக்கு மிகுந்த உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் தந்துள்ளது. இது ஒரு இடைக்காலத் தடைதான் என்றாலும், இது தரும் நம்பிக்கையும், கால அவகாசமுமே, திகிலுடன் நடப்பதை பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளது. இன்று காலையில், இளம் வழக்கறிஞர் ஒருவர் ஓடி வந்து செய்தியை அறிவித்தவுடனே, நீதிமன்ற‌ வளாகம் முழுக்க பரவிய பெரியதொரு சந்தோஷ ஆர்ப்பாட்டத்தில் கைதட்டி முழுமையாக‌ என்னை அடையாளம் கண்டேன்.

நீதிமன்ற உதவியுடன், மேலும் சில தடைகள் வாங்கி இழுத்த பின்னாவது, இந்த தண்டனையை ரத்து செய்துவிட முடியும் என்று பலர் நம்புகின்றனர்; அப்படியே நடக்க வேண்டும். மத்திய காங்கிரஸ் அரசு தன் இறுக்கமான நிலைபாட்டிலிருந்து இறங்கி வர தயாராக இல்லை என்பதை தெளிவாக, தமிழக சட்டமன்ற தீர்மானத்திற்கான பதிலறிக்கை மூலம் காட்டிக் கொண்டிருக்கிறது. ஆகையால் நீதிமன்றம் மூலம் ரத்தாவது, சாத்தியம் என்றால், இன்னமும் நீண்டகாலத்திற்கு முடிவு குறித்த தெளிவில்லாது இழுத்தடித்த‌ பின்னர் நடக்கலாம்.

ஜெயலலிதா நிகழ்த்திய பேரவை தீர்மானம் பல விதங்களில் முக்கியமானது. குறிப்பாக அது ஜெயலலிதாவின் இந்த தண்டனைக்கு எதிரான நிலைபாட்டை வெளிப்படையாக்குகிறது. அவரது விருப்பமும், உண்மை நிலைபாடும் என்னவாக இருந்தாலும், இதுதான் அறிவிக்கப்பட்டுள்ள நிலைபாடு. இதிலிருந்து அவர் பின்வாங்குவது கடினம் என்ற வகையில் முக்கியமானது. இந்த தண்டனையை ரத்து செய்ய அவருக்கு அதிகாரம் இருக்குமானால், அதை அவருக்கு தர்க்க பூர்வமாக நிறுவ முடியுமானால், முடிவு எடுக்க அவரை அவரது நிலைபாட்டை வைத்தே நிர்பந்தப்படுத்தக் கூடியது என்கிற வகையில் இத்தீர்மானம் முக்கியமானது. கிருஷ்ணய்யர் போன்றவர்கள் கூட சொல்கிறார்கள் என்றால், சட்ட வாதங்கள் மூலம் அதிகாரத்தை சாத்தியப்படுத்த முடியும் என்றுதான் எடுத்துக் கொள்ள வேன்டியுள்ளது.

எந்தவகையிலும் இது நமக்கு-அதாவது மரண தண்டனையை எதிர்ப்பவர்களுக்கு- நிம்மதியையும், ஆசுவாத்தையும், நம்பிக்கையையும் தருவது. ஆனால் குரல் ஒலிப்பதையும், போராட்டம் தொடர்வதையும் இன்னும் தீவிரமாக செய்ய வேண்டியுள்ளது. அதே நேரம், நாம் நம்பியுள்ளது நீதிமன்றமும், ஜெயலலிதாவும் என்பதால் மிகுந்த பொறுப்புணர்வும் தேவைப்படுகிறது. இதுவரையான தமிழுணர்வாளர்களின் போராட்டம்தான் ஜெயலலிதாவிற்கு நிர்பந்தத்தை ஏற்படுத்தியது என்றாலும், போராட்ட முறைகளில் பல முதிர்ச்சியற்றவையாக இருப்பதாக எனக்கு தோன்றுகிறது. எல்லாவற்றையும் பட்டியலிடும் நோக்கம் எனக்கு இல்லை. ஆனால் இன்று காலையில் நீதிமன்ற வளாகத்தில் எழுப்பப்பட்ட பல கோஷங்கள், இந்த நோக்கத்திற்கு உதவப்போவது இல்லை. அதுவும் இடைக்காலத் தடை வந்த பிறகு எழுப்பபட்ட கோஷங்களை பதிவு செய்து, தமிழ் எதிர்ப்பை அணுகுமுறையாக கொண்டுள்ள ஊடகங்கள் சில‌ பரப்பினால் அது நேர்மறை விளைவுகளை ஏற்படுத்தப் போவதில்லை.

இந்த விஷயங்களை முதிர்ச்சியுடன் பேச, அணுக ஆள் இல்லை என்றே தோன்றுகிறது. வைகோ பொறுப்புடன் தொடர்ந்து பேசுபவர், திடீரென நேர் எதிராக அவரே பேசுகிறார். இருக்கும் நிலமைகளையும் கட்டாயங்களையும் உணர்ந்து, பொறுப்புடன் இந்த போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய தலைமை இல்லை என்றே நினைக்கிறேன். தன்னிச்சையாய் நிகழ்ந்ததற்கே பலன் உள்ள நிலையில், பொறுப்பும் சாதூர்யமும் கொண்ட தலைமை நிச்சயம் வெற்றிக்கு எடுத்து செல்லும். யார் என்பதுதான் கேள்வி.

அடுத்து இன்னமும் தமிழுணர்வை தாண்டி மற்ற தளங்களில் இந்த மரண தண்டனைக்கான எதிர்ப்பு விரிவடையவில்லை. இறுதி வெற்றி அடைய அது மிக அவசியம். அதற்கு முயற்சிக்கும் கடமை, அடையாளங்களை தாண்டி மனிதாபிமானமாக சிந்திப்பதாக சொல்லும் தரப்பினரிடம்தான் உள்ளது; அவர்களின் எதிர்ப்பு தனியாக உருவெடுக்காவிட்டால், அதற்கான பழி அவர்களையே சாரும். கால அவகாசம் இருக்கிறது; பார்போம்

Saturday, August 27, 2011

மரணதண்டனைக்கு எதிராக‌.

இன்று பகலில் கோயம்பேட்டில் அங்கையற்கண்ணி, வடிவாம்பாள், சுஜாதா உண்ணாநோன்பில் இருந்த இடத்தில் சுமார் 4-5 மணி நேரம் கழித்தேன்; மாலையிலிருந்து இரவு 10 மணிவரை Save Tamils இயக்கம் நடத்திய 'ஈழ இனப்படுகொலையும், மரண தண்டனையும்' கூட்டத்தில் இருந்தேன்.

கோயம்பேட்டில் கூட்டம் பெரிதாக இருந்தது என்று சொல்லமுடியாது. அதாவது இப்போதிருக்கும் இக்கட்டான சூழலில் திரளவேண்டியது என்று நான் நினைக்கும் எண்ணிக்கையில் இல்லை. நூற்றுக்கு மேல் இருக்கும், ஆனால் நிச்சயமாக 250ஐ தாண்டாது என்றே கணிக்கிறேன். வைகோ காலையில் இருந்தார். இதுவரை பல பொறுப்பற்ற பேச்சுக்களை அவர் பேசியதாக கருதியிருந்த நான், இன்று அவர் மிகுந்த பொறுப்புடன் பேசியதாக கருதினேன். குறிப்பாக 'கோபத்தாலோ, வேதனையாலோ கடினமான வார்த்தைகளை நாம் பேசக்கூடாது; அவைகள் மேலும் திரிக்கப்பட்டு நம் நோக்கத்துக்கு எதிராக திரும்பக்கூடாது' என்று சொன்னது முக்கியமானது. ஆனால் அங்கிருந்த தோழர்கள் அதை கண்டு கொண்டார்களா என்று தெரியவில்லை.

இன்று நாம் போராடக்கூடிய நிலையில் இல்லை; அதிகாரத்திடம் இறைஞ்ச வேண்டிய நிலையில் உள்ளோம். குறிப்பாக தமிழ்தேசியவாதிகள் கொண்டிருக்கும் எல்லா கொள்கைகளுக்கும் எதிராகவும், இடையூராகவுமே இருந்த ஜெயலலிதா என்ற முதல்வரிடம் கெஞ்சும் நிலையில் உள்ளோம். இப்போது நாம் செய்ய வேண்டியது சட்டபபூர்வமான நடவடிக்கைகளும், லாபி செய்வதும், வெகுஜன உணர்வை இந்த மரண தண்டனைக்கு எதிராக கிளப்புவதும்; இதில் வீராவேச பேச்சுக்களும், மற்ற இந்திய எதிர்ப்பு சொல்லாடல்களும், வெளிப்படையான புலி ஆதரவும் எதிரான விளைவுகளையே ஏற்படுத்தும். உதாரணமாக 'கொலையாளி வழக்கில் நிரபாரதிக்கு தூக்கு' என்று கோஷம் எழுப்பியபடி சென்றனர். இதன் அர்த்தத்தை விளக்க வேண்டியது இல்லை.

நான் சொல்வது ஜெயமோகன் சொல்வது போல தோன்றுவதற்கு நான் எதுவும் செய்யமுடியாது. ஆனால் அடிப்படை வித்தியாசம் உண்டு. அவர் இந்திய அரசும், நீதித்துறையும் செய்த அநியாயங்களை நியாயப்படுத்திவிட்டு சொல்கிறார். நான் அந்த அநியாயங்களையும், தமிழரல்லாத அறிவுஜீவிகளை அலட்சியத்தையும் கண்டித்து விட்டு நடைமுறை சார்ந்து எனக்கு தோன்றுவதை சொல்கிறேன்.

தமிழ் தேசிய உணர்வாளர்கள், ம.க.இ.க போன்ற புரட்சிகர தோழர்கள் போராட்டம் நடத்துகின்றனர். அவை முக்கியமானது. ஆனால் இன்றய அரசியல் அதிகார சூழலில் இது போதாது. ஒரு வெகுஜன உணர்வை எழுப்பவேண்டிய தேவையுள்ளது; தமிழ் தேசியம் உதிர்க்கும் தீவிர சொல்லடல்கள் பல பல காரணங்களால் நைந்து இன்று வெகுஜன உணர்விற்கு நெருக்கமாக இல்லை. ஆனால் இன்றைக்கும் 'தமிழர்க்கு இழைக்கக்கூடிய அநீதி' என்கிற உணர்விற்கு வெகுஜன வெளியில் இடம் உண்டு. அதை பரவலாக செய்வதற்கு மைய அரசியல் கட்சிகளும், நம் எல்லா ஊடகங்களும், (கொச்சையானாலும் சினிமாத்துறையும்) கலந்து, ' நிராபராதிக்கு அநியாயமான மரண தண்டனை'' என்கிற வாதத்தை பரப்பினால்தான் உண்டு. இவை தவிர அறிவு ஜீவிகள், பிரமுகர்கள் என்று அறியபட்ட கூட்டமும் எதிராக பேச வேண்டிய உள்ளது. அதற்கான முயற்சிகளும் எடுக்க வேண்டும். அத்தகைய உணர்வுகள் ஜெயலலிதாவை கட்டாயப்படுத்தக் கூடும். அவ்வாறு நடப்பதற்கான சாத்தியங்கள் கண்ணில் தெரியாத நிலையில், எனக்கு தனிப்பட்ட முறையில் மிகுந்த அவ‌நம்பிக்கையே உள்ளது.

மாலை நடந்த கூட்டம் மிக சிறப்பானது. முன்னாள் மும்பை நீதிபதி சுரேஷும், இரு தலித் குற்றவாளைகளின் மரணதண்டனையை நிறுத்திய ஹைதராபாத்தை சேர்ந்த சந்திரசேகரும் பேசியது மிக அருமை; மிக முக்கியமானது. ஆனால் இது நாம் பொதுவாக மரணதண்டனைக்கும் (ஈழ இன அழிப்புக்கும்) எதிராக நடத்தகூடிய ஒரு அறிவு சார்ந்த கூட்டம் மட்டுமே. போராட்டங்கள் என்கிற வகையில் சேராது.

இந்த வகையில் நம்பிக்கை தரும் நடவடிக்கைகளாக எதை செய்வது என்று தெரியவில்லை; எந்த சரியான தொடர்புகளும் இல்லாத என்னால் ஆலோசனைகளை கூட உரிய இடத்தில் தருவது சாத்தியமில்லை. என்னளவில் அடுத்த இரு வாரங்களில் இந்த மரண தண்டனைக்கு எதிரான எல்லா பிரயத்தனக்களுக்கும் ஆதரவை தருவதை மட்டும் என் கடமையாக செய்யமுடியும்.