Saturday, August 27, 2011

மரணதண்டனைக்கு எதிராக‌.

இன்று பகலில் கோயம்பேட்டில் அங்கையற்கண்ணி, வடிவாம்பாள், சுஜாதா உண்ணாநோன்பில் இருந்த இடத்தில் சுமார் 4-5 மணி நேரம் கழித்தேன்; மாலையிலிருந்து இரவு 10 மணிவரை Save Tamils இயக்கம் நடத்திய 'ஈழ இனப்படுகொலையும், மரண தண்டனையும்' கூட்டத்தில் இருந்தேன்.

கோயம்பேட்டில் கூட்டம் பெரிதாக இருந்தது என்று சொல்லமுடியாது. அதாவது இப்போதிருக்கும் இக்கட்டான சூழலில் திரளவேண்டியது என்று நான் நினைக்கும் எண்ணிக்கையில் இல்லை. நூற்றுக்கு மேல் இருக்கும், ஆனால் நிச்சயமாக 250ஐ தாண்டாது என்றே கணிக்கிறேன். வைகோ காலையில் இருந்தார். இதுவரை பல பொறுப்பற்ற பேச்சுக்களை அவர் பேசியதாக கருதியிருந்த நான், இன்று அவர் மிகுந்த பொறுப்புடன் பேசியதாக கருதினேன். குறிப்பாக 'கோபத்தாலோ, வேதனையாலோ கடினமான வார்த்தைகளை நாம் பேசக்கூடாது; அவைகள் மேலும் திரிக்கப்பட்டு நம் நோக்கத்துக்கு எதிராக திரும்பக்கூடாது' என்று சொன்னது முக்கியமானது. ஆனால் அங்கிருந்த தோழர்கள் அதை கண்டு கொண்டார்களா என்று தெரியவில்லை.

இன்று நாம் போராடக்கூடிய நிலையில் இல்லை; அதிகாரத்திடம் இறைஞ்ச வேண்டிய நிலையில் உள்ளோம். குறிப்பாக தமிழ்தேசியவாதிகள் கொண்டிருக்கும் எல்லா கொள்கைகளுக்கும் எதிராகவும், இடையூராகவுமே இருந்த ஜெயலலிதா என்ற முதல்வரிடம் கெஞ்சும் நிலையில் உள்ளோம். இப்போது நாம் செய்ய வேண்டியது சட்டபபூர்வமான நடவடிக்கைகளும், லாபி செய்வதும், வெகுஜன உணர்வை இந்த மரண தண்டனைக்கு எதிராக கிளப்புவதும்; இதில் வீராவேச பேச்சுக்களும், மற்ற இந்திய எதிர்ப்பு சொல்லாடல்களும், வெளிப்படையான புலி ஆதரவும் எதிரான விளைவுகளையே ஏற்படுத்தும். உதாரணமாக 'கொலையாளி வழக்கில் நிரபாரதிக்கு தூக்கு' என்று கோஷம் எழுப்பியபடி சென்றனர். இதன் அர்த்தத்தை விளக்க வேண்டியது இல்லை.

நான் சொல்வது ஜெயமோகன் சொல்வது போல தோன்றுவதற்கு நான் எதுவும் செய்யமுடியாது. ஆனால் அடிப்படை வித்தியாசம் உண்டு. அவர் இந்திய அரசும், நீதித்துறையும் செய்த அநியாயங்களை நியாயப்படுத்திவிட்டு சொல்கிறார். நான் அந்த அநியாயங்களையும், தமிழரல்லாத அறிவுஜீவிகளை அலட்சியத்தையும் கண்டித்து விட்டு நடைமுறை சார்ந்து எனக்கு தோன்றுவதை சொல்கிறேன்.

தமிழ் தேசிய உணர்வாளர்கள், ம.க.இ.க போன்ற புரட்சிகர தோழர்கள் போராட்டம் நடத்துகின்றனர். அவை முக்கியமானது. ஆனால் இன்றய அரசியல் அதிகார சூழலில் இது போதாது. ஒரு வெகுஜன உணர்வை எழுப்பவேண்டிய தேவையுள்ளது; தமிழ் தேசியம் உதிர்க்கும் தீவிர சொல்லடல்கள் பல பல காரணங்களால் நைந்து இன்று வெகுஜன உணர்விற்கு நெருக்கமாக இல்லை. ஆனால் இன்றைக்கும் 'தமிழர்க்கு இழைக்கக்கூடிய அநீதி' என்கிற உணர்விற்கு வெகுஜன வெளியில் இடம் உண்டு. அதை பரவலாக செய்வதற்கு மைய அரசியல் கட்சிகளும், நம் எல்லா ஊடகங்களும், (கொச்சையானாலும் சினிமாத்துறையும்) கலந்து, ' நிராபராதிக்கு அநியாயமான மரண தண்டனை'' என்கிற வாதத்தை பரப்பினால்தான் உண்டு. இவை தவிர அறிவு ஜீவிகள், பிரமுகர்கள் என்று அறியபட்ட கூட்டமும் எதிராக பேச வேண்டிய உள்ளது. அதற்கான முயற்சிகளும் எடுக்க வேண்டும். அத்தகைய உணர்வுகள் ஜெயலலிதாவை கட்டாயப்படுத்தக் கூடும். அவ்வாறு நடப்பதற்கான சாத்தியங்கள் கண்ணில் தெரியாத நிலையில், எனக்கு தனிப்பட்ட முறையில் மிகுந்த அவ‌நம்பிக்கையே உள்ளது.

மாலை நடந்த கூட்டம் மிக சிறப்பானது. முன்னாள் மும்பை நீதிபதி சுரேஷும், இரு தலித் குற்றவாளைகளின் மரணதண்டனையை நிறுத்திய ஹைதராபாத்தை சேர்ந்த சந்திரசேகரும் பேசியது மிக அருமை; மிக முக்கியமானது. ஆனால் இது நாம் பொதுவாக மரணதண்டனைக்கும் (ஈழ இன அழிப்புக்கும்) எதிராக நடத்தகூடிய ஒரு அறிவு சார்ந்த கூட்டம் மட்டுமே. போராட்டங்கள் என்கிற வகையில் சேராது.

இந்த வகையில் நம்பிக்கை தரும் நடவடிக்கைகளாக எதை செய்வது என்று தெரியவில்லை; எந்த சரியான தொடர்புகளும் இல்லாத என்னால் ஆலோசனைகளை கூட உரிய இடத்தில் தருவது சாத்தியமில்லை. என்னளவில் அடுத்த இரு வாரங்களில் இந்த மரண தண்டனைக்கு எதிரான எல்லா பிரயத்தனக்களுக்கும் ஆதரவை தருவதை மட்டும் என் கடமையாக செய்யமுடியும்.

3 comments:

 1. இந்தக் கட்டுரையின் மைய நிலைப்பாட்டோடு ஒத்துப் போகிறேன். ஆனாலும்...

  ஐயோ, எவ்வளவு எழுத்துப் பிழைகள்!

  போராடக்கூடிய நிலையில் இல்லை, இரைஞ்சக்கூடிய நிலையில் இருக்கிறோம் என்றால் என்ன அர்த்தம்? இறைஞ்ச ‘வேண்டிய’ நிலையில் இருக்கிறோம் என்றாவது எழுதக்கூடாதா?

  ReplyDelete
 2. இரவு வந்து களைப்பு மற்றும் சிறு ஜுரம்; அவசரத்தில் எழுதியது. நீங்கள் சுட்டியதை மாற்றியாகிவிட்டது. வேறு பிழைகள் இருந்தால் சுட்டவும்.

  ( தமிழில் நேரடியாக எழுத வசதியாக என் லேப்டாப் கைவசம் இல்லை. கன்வர்ட்டரில் எழுதி வெட்டி ஒட்ட வேண்டியுள்ளது. பிழைகளை பொறுத்து வாசிக்க வேண்டுகிறேன்.)

  ReplyDelete
 3. எதார்த்தமான பதிவு... உண்மைதான் இதுவரை நம்பிக்கை ஒளி எதுவும் இல்லை..

  ReplyDelete