Monday, October 3, 2011

கணிதத்தின் பரிமளம்.

எஸ்ராவின் 'யாமம்' வாசித்துக் கொண்டிருக்கிறேன்; பிரமாதமாக போய்கொண்டிருக்கிறது. ஆங்காங்கே 'வெயில் அவரை பின் தொடர்ந்தது' 'இருள் லண்டனிலும் கமிழ்ந்தது' 'நதி தீர்க்கமாக உற்றுப் பார்த்தது' போன்ற எஸ்ராவின் பழக்கப்பட்டுவிட்ட அலுப்பூட்டும் விவரிப்புகளை தவிர, நாவலின் விஸ்தாரமும், பயணிப்பும் பிரமிப்பூட்டுகிறது. நாவல் குறித்த என் மதிப்பீட்டை இப்பொழுது எழுதும் நோக்கம் இல்லை.

நடுக்கதையில் திருசிற்றம்பலம் என்று ஒரு கணிதவியாலாளன் 'உயர் கணிதம்' படிக்க லண்டன் போகும்போது, கப்பலில் சற்குணத்திடம் சொல்கிறான்.

"பூஜ்யம் என்பது அறுதியான உண்மை, முடிவின்மையது. அது ஒரு தீர்க்கப்படாத ரகசியம். நான் பூஜ்யத்திற்குள் என்னவிருக்கிறது என்றுதான் தேடிக்கொண்டிருக்கிறேன். உனக்கு ஒரு ரகசியம் சொல்கிறேன். எண்களுக்கு தனியான குணநலன்கள் இருக்கின்றன. அவை உயிரோடுதானிருக்கின்றன"

இவையெல்லாம் தத்துவமா கவிதையா என்று தீர்மானிப்பதில் எனக்கு குழப்பம் இருந்தாலும், கணிதத்துடன் தொடர்புடையது அல்ல என்பதில் எனக்கு எந்த சந்தேகமில்லை. பூஜ்யம் என்கிற கருத்தாக்கம் உருவான காலத்தில் புதிரானது. ஆனால் பிறகும், இப்போதும் அதை சார்ந்து இப்படி ஒரு தேடல் கணிதத்தின் தளத்தில் இருந்ததில்லை. கணிதவியலாளன் கவிஞனாகவும், தத்துவவியலாளனாகவும் இருக்க முடியாது என்று நானே சொல்ல முடியாது. அதனால் திருசிற்றம்பலம் கவிஞன் என்ற நிலையில் இருந்து, தன் தொழில் குறித்து கவித்துவமாக விவரித்திருக்கலாம் என்று எடுத்துக் கொள்கிறேன்.

ஆனால் அடுத்து விளையாடும் சீட்டாட்டத்தில், சற்குணம் தன் சீட்டை இறக்கியதும் கண்ணிமைக்கும் நேரத்தில் திருசிற்றம்பலம் ஜெயித்துவிடுகிறான். (ஆமாம், கண்ணிமைக்கும் நேரம்தான்.) எட்டு முறை தோற்ற பிறகு எப்படி அவன் இவ்வளவு வேகமாக ஜெயித்து விடுகிறான் என்று சற்குணம் கேட்டதும், " எண்கள் சிதறிக்கிடந்தாலும் அதற்குள் ஒரு ஒழுங்கை கொண்டிருக்கிறது. அது உனக்கு புரியாது" என்றதோடு "அடுத்த முறை நீ சீட்டை கலைத்து போட்டதுமே உன் கைகளில் என்னென்ன சீட்டுகள் இருக்கின்றன என்று சொல்லிவிடவா" என்று கேட்டான்.

நம்பமுடியாத சந்தேகத்துடன் சற்குணம் சீட்டை கலைத்துப் போட்டுவிட்டு தனக்குரிய சீட்டுகளைக் கைகளில் எடுத்து அடுக்கியதும் திருசிற்றம்பலம் அவன் கைகளில் என்னென்ன சீட்டுகள் இருக்கின்றன என்பதையும் சொல்லிவிட்டான். சற்குணம் ஆச்சரியத்துடன் "உனக்கு எப்ப கணிதத்தில் ஆர்வம் உண்டானது?" என்று கேட்டான்.

இப்போது வாசகனான எனக்கு, திருசிற்றம்பலம் இப்படி சீட்டுகளை கண்டுபிடிக்கும் சீன் நாவலில் வரக்கூடாது என்று ஆட்சேபணை எதுவும் இல்லை; அந்த அளவிற்கு யதார்த்தவாத இலக்கிய அடிபடைவாதி அல்ல நான். ஆனால் எந்த கதை, எந்தவகை யதார்த்தங்களை தாண்டினாலும், கதைக்கான ஒரு உள்தர்க்கம் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அந்த வகையில் எந்த எண்கணித கொம்பனாலும், எதிராளியின் சீட்டுக்களை பார்க்கவே பார்க்காமல், கணிதத்தை வைத்து கண்டுபிடிக்க முடியாது. எண் கணிதத்தில் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத மேதை ராமனுஜத்தால் கூட அது சாத்தியமல்ல. ஒரு வேளை அப்படி கண்டுபிடிக்க முடிந்தால், மாந்த்ரீகம் எதையாவது வைத்து அது சாத்தியமாகலாமே ஒழிய கணிதத்தினால் அல்ல. யதார்த்த கணிதத்தை மீறி அப்படி சாத்தியமாகக்கூடிய மாந்திரீக கணிதத்திற்கான கதையின் உள்சட்டகத்தையும் எஸ்ரா சமைக்காததால், இதை ஒரு மகாசொதப்பல் என்றுதான் என்னால் எடுத்துக் கொள்ள முடிகிறது.

No comments:

Post a Comment