Sunday, December 7, 2014

அறிவே ஆயுதமாக மட்டுமின்றி கேடயமாகவும்!

எம்.எஸ்.எஸ் பாண்டியன் இறந்த பிறகு அவரை பற்றி நிறைய எழுதப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை நடந்த கூட்டத்தில் விடுதலை ராஜேந்திரன் குறிப்பிட்டது போல், இவ்வளவுதூரம் கவனிக்கப்படுவோம் என்று அறிந்திருந்தால் அவர் இன்னும் கொஞ்ச காலம் வாழ்ந்திருக்க க் கூடும். அறிவுலகில் தனித்துவமான பங்களிப்பை கொண்டவர் இறந்த பிறகாவது சரியான வகையில் கொண்டாடப்படுவது மகிழ்சிக்குரியதுதான். 

திராவிட  மற்றும் விளிம்புநிலை அரசியல் சார்ந்து பாண்டியனின் பங்களிப்பை பற்றி பலரும் சொல்லியாகிவிட்டது; அவை அனைத்தும் அவரின் தனித்துவமான அறிவு சார்ந்த பங்களிப்புகள்தான். குறுகிய கால அளவில் பாண்டியனுடம் பழகிய, விவாதித்த வகையில் அவரின் தனித்தன்மையாக ஒரு முக்கிய பண்பை பதிவு செய்ய நினைக்கிறேன்.  ̀அறிவை ஆயுதமாக்கியவர்' என்று நான் வாசித்த பலவற்றில் ஒருவர் எழுதியிருந்தார். ஆயுதமாக மட்டுமின்றி, கேடயமாகவும் அறிவை மட்டுமின்றி வேறு எதையும் அவர் பயன்படுத்தியதாக தோன்றவில்லை. வேறு மனநிலையில் ஃபேஸ்புக்கில் சில ஒருவரி சில்லறை கமெண்டுகளை அளித்திருந்தாலும், ஒரு அறிவுரீதியான விவாதத்தில் முத்திரை குத்தல்களையோ, குறிப்பாக பதில் சொல்ல முடியாத சிக்கலை சமாளிக்க அடிமடி தாக்குதலை அவர் செய்வதில்லை. 

ஒரேவகை இலக்கை கொண்ட எதிர்ப்பு அரசியலை முன்வைக்கும் இருவர், ஒருவரை ஒருவர் மிக மோசமான அவதூறுகளுடன் திட்டிக்கொள்வதை -குறிப்பாக இணையம் சார்ந்த கருத்து பரவலாக்கம் நிகழ்ந்த பின்- சர்வ சாதாரணமாக அனுதினம் காண்கிறோம். இதை முதிராத இளைஞர்கள் மட்டும் செய்யவில்லை; பண்பட்டுவிட்ட முதிர்ந்த அரசியல் எழுத்தாளர்களும், வெகு காலமாக தான் சார்ந்த மாற்று அரசியலையும் தன்னையும் ஆதரித்த ஒருவரை, தனக்கு உவப்பில்லாத மாற்று நிலைபாடு காரணமாக, மிக எளிதாக பார்ப்னிய இந்துத்வ முத்திரை குத்தல் செய்து எதிர்கொள்வதை காணலாம். இதற்கு விதிவிலக்கான அரசியல் எழுத்தாளர் ஒருவரை என்னால் உதாரணிக்க முடியவில்லை. 

தனது வாய்ப்பாடுகளில் அடங்காத கருத்தைச் சொல்பவர், உள்ளே உறைந்திருக்கும் இந்துத்வ அல்லது பார்பனிய மனோபாவத்தால்தான் அதை சொல்வதாக சொல்லிவிட்டு தாண்டி செல்வது மிக எளிது; இவ்வாறு சுயலாபத்திற்காக மட்டும் சொல்வதில்லை; குதிரை தட்டை பார்வையில் தென்படுவதை கொண்டு அதை உண்மையாக நம்பி சொல்பவர்களே பலர்.  ̀இன்னொரு பூனை வெளிவந்துவிட்டது' என்கிற பத்து பைசா பெறாத கண்டுபிடிப்பின் மூலம் ஒப்புக்கு ஒரு  பூனைப்படையை கூட உருவாக்க முடியாது. மாறாக தனக்கு உவபில்லாத நட்புத்தரப்பை (அல்லது எதிர்தரப்பை) வேறுபட்ட நிலைபாடாக அங்கீகரித்து எதிர்கொள்வதே அறிவுச் செயல்பாடாக இருக்கமுடியும். நான் அவதானித்த அளவில் தமிழ் சூழலில் பலருக்கு இல்லாத இந்த அறிவு போர்முறை பாண்டியனிடம் உள்ளதாக கருதுகிறேன். 

பார்பனியம், இந்துத்வம் என்ற சொல்லாடல்களை முத்திரைகளை பயன்படுத்தக்கூடாது என்று நான் சொல்லவரவில்லை. பார்ப்னியம், இந்துத்வம் இன்னும் குறிப்பாக முற்போக்கு நிறம் காட்டும் பார்பனியம் மற்றும் இந்துத்வம் என்பது நம் சூழலின் நிலவும் ஒரு கருத்தியல். அதை வெளிப்படையாக சொல்வதில் எந்த தவறும் இல்லை என்பது மட்டுமல்ல, அது மிக அவசியமான அடையாளம் காணும் வேலையும் கூட.  எதிர்கொள்ளும் வசதிக்காகவும், தர்க்கம் தொலைந்த தருணங்களில் வசை மருந்தாக கொள்வதை பற்றியும் மட்டுமே இங்கே குறிப்பிடுகிறேன். கட்டுரையின் போக்கிலோ, தனித்த ஒரு தாக்குதலிலோ சிலவற்றை பாண்டியன் சொல்லியிருக்கலாம்; ஆனால் ஒரு விவாதத்தின் போக்கில் இதற்கு மாறான அணுகுமுறையை பாண்டியன் கொண்டதாக நானறிந்த வரையில் மனப்பதிவு கொண்டிருக்கிறேன். நான் அவரிடம் கற்று பின்பற்ற முயலும் பாடமாகவும் இதை கொள்கிறேன். அவருக்கு என் அஞ்சலிகள்.

Thursday, July 25, 2013

அரசியல் கருதுகோளும் அறிவு நிஜமும்

ஐஐடியில் நிலவும் பார்பனிய அரசியல் பற்றியும், அதே நேரம் அதற்கான எதிர்பரசியலை வசந்த கந்தசாமியை முன்வைத்து முன்னெடுக்க முடியாது என்கிற வாதத்தையும் கடந்த 10 வருடங்களாக வேறு வேறு இடங்களில் இணையத்தில் நான் முன்வைத்து இருக்கிறேன். 

வசந்தா கந்தசாமி இந்தியாவில் வேறு யாருடனும் ஒப்பிடமுடியாத மாபெரும் கணிதமேதை என்று அவரை சார்ந்தவர்கள் பொய்யாகவும், அவரை சாரத கணிதத்திற்கு சம்பந்தமில்லாதவர்கள் தவறாகவும் செய்தி பரப்பிக்கொன்டிருக்கிறனர். அவரது ஆரய்ச்சி கட்டுரைகளின் எண்ணிக்கைக்காக ஒருவேளை நீதிமன்றம் கூட அந்த பொய்யை உண்மையாக ஏற்று அவருக்கு ஆதரவாக தீர்ப்பு தரகூடும். அப்படி நடந்தால் கூட அவரது ஆய்வு கட்டுரைகள் குப்பை என்ற உண்மையை எந்த தயக்கமும் இல்லாமல் நான் சொல்லுவேன். குப்பைகள் எவ்வளவு எழுதி குவித்தாலும் ஒரே ஒரு உண்மையான இரண்டு பக்க பேப்பரின் அருகில் வரமுடியாது. ஆகையால் ஒரு மாபெரும் கணித மேதைக்கு பதவி உயர்வே தராமல் வஞ்சிக்கபடுவதாக சொல்லப்படும் செய்தி பொய்யானது. பதிவி நியமனத்தில் அவருக்கு ஏதேனும் தனிப்பட்ட அநீதி நிகழ்ந்திருக்கலாம். அது என்ன வகை அநீதி என்று கேள்விப்பட்டவைகளை மட்டும் வைத்து என்னால் முடிவுக்கு வரமுடியவில்லை; அவர் தரப்பு வாதத்தை மட்டும் வைத்தும் முடிவுக்கு வரமுடியாது; எதிர்தரப்பின் வாதத்தை நான் முழுமையாக அறியவுமில்லை. ஆனால் அது பார்பனரல்லாத ஒரே காரணத்திற்காக நடந்தது என்பதற்கு ஆதாரம் இருப்பதாக தோன்றவில்லை. அதே கணிதத்துறையில் இருக்கும் மற்ற பார்ப்பனரல்லாதவர்கள் எல்லாம் பார்பனியத்துக்கு கூஜா தூக்கியவர்கள் அல்ல. எந்த விஷயத்தையும் சிக்கல்கள் இல்லாமல் புரிய முனைவது வசதியாக இருக்குமே ஒழிய அரசியல் பாதுகாப்பானது அல்ல. 

இது தவிர ஐஐடி மீது குறிப்பாக இட ஒதுக்கீடு அரசியல் சார்ந்து விமர்சனமும் எதிர்ப்பும் கொண்ட அரசியல் நியாயமானது என்பதுதான் என் நிலைபாடு; அதற்காக தவறான உதாரணத்தை கொண்டாடுவது அந்த அரசியலுக்கு நண்மை பயக்கும் என்று எனக்கு தோன்றவில்லை. அவர் பெரியார் குறித்து ("Fuzzy and Neutrosophic analysis ofPeriyar's views on untouchability") எழுதியுள்ள நூல் எந்த பயனும், அறிவு உள்ளடக்கமும் அற்ற குப்பை மட்டுமல்ல, முழுக்க ஒரு ஏமாற்று வேலை. இதை என்னால் விரிவாக எழுதமுடியும்; ஆனால் என் அரசியல் முன்னுரிமை இதை எழுதுவதற்கு இல்லை. சமஸ்கிருதம் கணிணிக்கு ஏற்ற மொழி என்று வரும் ஒரு ஆர்.எஸ்.எஸ்.தனமான கட்டுரைக்கு எதிர்வாதம் வைப்பதே எனக்கான முன்னுரிமையாக இருக்கும். ஆனால் provoke செய்யப்படும் சவால் வந்து அவசியம் என்று தோன்றினால் இதற்காக வீணாகும் நேரத்தை ஒதுக்கி இந்த செயலில் ஈடுபட நேரலாம்.

Monday, May 27, 2013

இன்று இப்படித்தான் யோசிக்க முடிகிறது!

ஜெயமோகன் கருத்தியல்ரீதியாக எதிர்க்கப்பட வேண்டியவர் என்பதுதான் என் நிலைபாடும்; என்னால் ஆன அளவு நானும் எதிர்த்திருக்கிறேன்; எதிர்க்கிறேன். ஆனால் ஜெமோ சொன்னதன் எதிர்வினையாக தமிழ் வெகுசமூகத்தின் ஆழ்நோயை புறக்கணிக்கவோ, அப்படி ஒன்று இல்லையென்று மறுக்கவோ முடியாது. சமத்துவம் சார்ந்ததாக தன் நிலைபாட்டை கற்பித்துக் கொண்ட ஞாநியின் பதிவு வழக்கம் போல அபத்தமானது. அதற்கு ஜெமோவின் (அவரது வார்த்தையில்) தமிழ் 'பரப்பியல் கலாச்சார' சாடுதலே மேல். அறிவுபூர்வத்தை மலினப்படுத்துவதை எதிர்ப்பது பாசிசமாகாது. இந்த மலினப்படுத்தலை தமிழ் சமூகத்தில் எல்லா தளங்களிலும்-பல்கலைகழக்த்திலிருந்து, ட்விட்டர்வரை- காண்கிறோம். கேரளத்தில் இப்படி இல்லையா, கர்நாடகத்தில் இல்லையா என்கிறார்கள். நிச்சயம் தமிழ்நாட்டு சாலைகளில் கேட்கும் ஹார்ன் ஒலிபோல இவ்வளவு நாராசமாக வேறு எங்கும் இல்லை என்பதுதான் என் திடமான மனப்பதிவு. ஜெமோ சொல்லிவிட்டார் என்பதற்காக, அறிவுக்கு எதிரான அதிகாரம் கொண்ட பாமரத் திமிருக்கு கருத்தியல் நியாயம் கற்பிப்பது அறிவுடமை ஆகாது.

ஜெமோவிற்கு இதை சொல்ல அருகதை இல்லை என்றால் இருந்துவிட்டு போகட்டும். தமிழ் சமூகம் மீது அக்கறை உள்ளவர்கள் ஜெமோவை புறக்கணித்து விட்டாவது இந்த நோயை அணுகித்தான் ஆகவேண்டும். இதற்கு திராவிட இயக்கமும் திரைப்பட கலாச்சரமும்*தான்* காரணம் என்று நான் ஜெமோ போல் எண்ணவில்லை; ஒருவேளை அவைதான் காரணம் என்றால், ஜெமோ முன்வைக்கும் அறிவியக்கத்தை விட திராவிட அரசியலும், தமிழ் வெகுஜன கலாச்சாரமும் முக்கியம் என்பதுதான் என் எண்ணம். ஆனால் இவை இரண்டிற்கும் பங்கில்லை என்றும் உறுதியாக சொல்லி காலத்தின் தேவையான விமர்சனத்தையும் மறுக்க முடியாது.

திமுகவின் எல்லவகை ஊழலுக்கும், பிஜேபியுடன் கூட்டுச் சேர்ந்தது உடப்பட்ட எல்லாவகை சந்தர்ப்பவாத அரசியலுக்கும், துரோகங்களுக்கும் அளிக்ககூடிய கருத்தியல் நியாயத்தை, தமிழ் சமூகத்தின் தீராத நோய்களுக்கும் மருந்து என்று எண்ணி இடலாகாது.

Saturday, May 4, 2013

அன்புள்ள குழலிக்கு...

அன்புள்ள குழலி, இதை கொலை அல்ல என்று நான் ஒரு போதும் சொல்லவில்லை. கொலை செய்தவர்களை வண்மையாக கண்டிக்கிறேன். நாட்டில் நடக்கும் ப்ரொஃப்ஷனல் கொலைகளை எல்லாம் நான் கண்டிப்பதில்லை; நீங்கள் என் பெயரை குறிப்பிட்டு கருத்து கேட்பதால் நேரடியான வார்த்தைகளில் கண்டிக்கிறேன். 

ஆனால் நீங்கள் குறிப்பாக யாரையோ கண்டிக்க என்னை அழைப்பதாக தெரிகிறது. யாரை என்று தெளிவாக சொல்லுங்கள். திருமாவளவனையா? அவர் இந்த கொலைக்கு பின்னால் ஒரு திட்டமிட்டவாரக இருப்பதாக நீங்களும், வன்னிய ஜாதிவெறி தரப்பை மட்டும் ஒலிக்கும் ஒரு குழு மட்டுமே சொல்கிறது. வேறு வகையில் இதற்கு ஆதரமாக நம்பும்படி எந்த செய்தி வந்தாலும் அந்த நேரத்து கருத்தை பதிவுகிறேன். மற்றபடி இந்த கொலைக்கு தூண்டுதலாக திருமா எந்த பேச்சையாவது முன்வைத்தாரா என்றால் நிச்சயமாக இல்லை. மறைமுகமாக தூண்டினார் என்று நீங்கள் சொன்னால் அதை நாங்கள் நம்ப ஆதாரம் என்ன? சிறிதும் விமர்சனம் இன்றி ஜாதி சார்பான நிலை எடுக்கும் நீங்கள் சொல்வதை மட்டும் எதை வைத்து நம்புவது? நம்பினால் அது திருமாவிற்கு செய்யும் அநீதியாக இருக்கும். திருமா இதுவரை பொதுவில் தெரிய பேசிய அனைத்தும் மிகுந்த பொறுப்புணர்வுடன் நான் ஆதரிக்கும் அரசியலாக இருக்கிறது என்றுதான் என்னால் என் கருத்தை பதிவு செய்ய முடியும். ஆகையால் திருமாவை கண்டிக்க ஏதுமில்லை.

திட்டமிட்டதாக அல்லாமல், ஆனால் விடுதலை சிறுத்தையை சேர்ந்தவர்கள் செய்திருந்தால் கூட செய்தவர்களை நிச்சயம் கண்டிக்கிறேன். இப்போது கொலை என்று சொல்லியுள்ள போலிஸோ, வேறு ஏதாவது ஆதரத்துடன் (உங்கள் தரப்பை தவிர) யார் சொன்னாலும் தீவிரமாக பரிசீலித்து கருத்தை முன்வைக்கிறேன்.

அல்லது அங்கிருக்கும் தலித் மக்களை கண்டிக்க வேண்டும் என்கிறீர்களா? பாமக ரௌடிகளிடம் அடிவாங்கி குடிசைகள் எரிந்தவர்களை கண்டிக்க சொல்கிறீர்களா? 'இரண்டு உயிரை விட குடிசை முக்கியமா' என்று உங்களை போல நான் கேட்கமுடியாது. தலித்களின் குடிசைகள் இரண்டு உயிர்களை விட முக்கியமாக இருக்கலாம். கலவரத்தை தூண்டிய தாக்கிய தரப்பை சார்ந்தவரை விட, தாக்கப்பட்டவர்கள் வாழும் குடிசைகள் முக்கிமானதாக படலாம். ஆனாலும் இங்கே தலித்கள்தான் தொடங்கினார்கள் என்று நம்ப ஆதரம் எதுவும் கிட்டவில்லை. நீங்கள் வழக்கம் போல போது புது புது தர்க்கங்களை உருவாக்குவதை தவிர வேறு ஆதாரம் கிடைக்கவில்லை. 

மாறாக ராமதாஸும் ஒட்டு மொத்த பாமகவும் தமிழகம் இதுவரை காணாத ஜாதிவெறியை முன்வைத்திருக்கிறது. இதுவரை காணாத என்று ஏன் சொல்கிறேன் என்றால், இவ்வளவு தீவிரமாக அமைப்புரீதியாக எல்லா ஆதிக்க ஜாதிகளையும் திரட்டி தலித் சமுதாயத்திற்கு எதிராக யாரும் அணிதிரட்டியதில்லை. (தலித்துக்கு எதிரான பொதுப்புத்தி எப்போதுமே உண்டு என்றாலும் அதை பொதுவில் ஒரு பெரும் அரசியல் குரலாக நியாயம் கற்பித்து அணி திரட்டி யாரும் முன்வைக்கவில்லை.) வன்முறையை தூண்டும் வகையில் எவ்வளவோ பேசியுள்ளது. வன்முறையில் இறங்குவோம் என்று பகிரங்கமாக அறைகூவியிருக்கிறது.'அமைதியாக அறவழியில் போராடுங்கள்' என்றாலே தொண்டர்கள் என்னவகை வன்முறையில் இறங்குவார்கள் என்று தெரிந்த நிலையில், இதற்கான விளைவு என்னவென்று சொல்லவேண்டியதில்லை. எந்த சந்தேகமும் இன்றி பலதரப்பட்ட வன்முறையை பாமக செய்திருக்கிறது. இப்படி வெளிப்படையாக தெரிந்த ஜாதிவெறி அரசியலையும், வன்முறை அரசியலையும்தான் மனித நேயமாக அறிவுபூர்வமாக, சிந்திப்பவர்கள் கண்டிக்கமுடியும். அதைத்தான் நான் கண்டிக்கிறேன். அதைத்தான் மரக்காணம் சம்பங்களுக்கு காரணமாக்குகிறேன். இன்னம்மும் நான் நம்பும் நல்லவர்கள் எனக்கு தெரிந்து இதை தீவிரமாக எதிர்க்கவில்லை என்றுதான் நினைக்கிறேன். 

எல்லா கொலைகளையும் நாம் கணக்கு வைத்து கண்டித்து கொண்டிருப்பதில்லை; நீங்களும் கண்டிப்பதில்லை. கண்டிபதற்கு பின் அரசியல் காரணம் உள்ளது. வன்னிய உயிர்கள் போய்விட்டதே என்று நீங்கள் துடிக்கிறீர்கள். வன்னிய ஜாதிவெறி வன்முறை அரசியலுக்கு தலித் மக்களும் இந்த இரண்டு உயிர்களும் பலியானதாக நான் கருதுகிறேன். அதையே கண்டிக்கிறேன். 

'கண்டித்தாயா.. கண்டித்தாயா..'' என்று இவ்வளவு நீளாமாக கேட்கும் நீங்கள் எதையாவது கண்டித்தீர்களா? மரக்காணம் கொலைகளை முற்போக்காளர்கள் கண்டிக்காததால் கண்டிக்கவில்லை என்று அநியாயமா க சொல்லாதீர்கள். அதை பற்றி பேசத்தொடங்கும் முன், சித்திரை திருவிழா பற்றி ரன்னிங் கமெண்டரி கொடுத்த போது, எங்காவது ராமதாஸ் + மற்றவர்களின் ஜாதிவெறி பேச்சை வன்முறையை எங்காவது கண்டித்தீர்களா? ஏதோ ஐபிஎல் பார்த்தது போலத்தானே நிலைத்தகவல் போட்டீர்கள். அந்த ஜாதிவெறி வன்முறை பேச்சை கண்டிக்காத நீங்கள் இப்போது அதை நியாயப்படுத்தும் நீங்கள் 'கண்டித்தீர்களா?' என்று மற்றவர்களை கேட்பதே பெரும் அநியாயம். நான் கண்டிக்கிறேன். நடந்த அனைத்திற்கும் ராமதாஸையும் கூட இருந்தவர்களையும் கண்டிக்கிறேன். மாறான புதிய தகவல்கள் நம்பகத்தன்மையுடன் வரும்வரை வேறு எதுவும் சொல்வதற்கில்லை.

Wednesday, May 1, 2013

தந்திர அரசியல் நேர்மை.


2004-2006இல் குழலி நேரடியான சாதி சார்புடன், ஆனால்  பூடகமாக வன்னிய ஜாதிவெறி தீவிரத்திற்கு ஆதரவாக எழுதிக்கொண்டிருந்தபோது, அதை எதிர்த்து நான் எழுதியதை  நண்பர்கள் பலர் எதிர்த்தார்கள்; மாறுபட்டார்கள்; சிலர் மென்மையாக கண்டிக்க கூட செய்தார்கள்.  தங்கமணி நீண்ட விளக்கம் எனக்கு எழுதினார். அதற்கு 'வாவ்..' என்று பாராட்டுக்கள். சங்கரபாண்டி கண்டனமே செய்தார். 

இப்போது குழலி நேரடியாக மிக வெளிப்படையாக ஜாதிவெறி நிலைபாடு எடுத்திருக்கும்போது இவர்கள் யாராவது தங்களது அன்றய நிலைபாட்டுக்கு வருத்தம் தெரிவிப்பார்கள், குறைந்த பட்சம் குழலியின் இப்போதய ஜாதிவெறி நிலைபாட்டை கண்டிப்பார்கள், சின்ன எதிர்ப்பு குரலாவது ஒலிப்பார்கள்  என்று பார்த்தால் .. வாயையே திறக்கவில்லை. (என் கணிப்பு முழு மெய்யாவதில் எனக்கு எந்த பெருமையும் இல்லை; ஆற்றைமையான கோபம் மட்டுமே). ஏதோ ஜாதிவெறி பதிவுகளை பார்க்காமல் வேறு வேலையில் இருக்கிறார்களோ என்றும் கொள்ள முடியாது. அவரோ மானாங்கண்ணியாய் பதிவு போடுகிறார். இவர்கள்  கண்டும் காணாமல் வேறு ஏதோ பேசுகிறார்கள். எல்லாம் வேறெங்கோ அல்ல, அருகருகில் ஃபேஸ்புக்கில். இதற்கு நடுவில் சுந்தரமூர்த்தி முனிரத்தினம் குழலியின் பதிவுகள் இரண்டை லைக் வேறு செய்கிறார். நான் நிலமை இவ்வளவு கேவலமாகும் என்று எதிர்பார்க்கவில்லை. இந்த சூழலில் புழங்குவதை விட, காலக்கொடுமையை இங்கே பதிவு செய்துவிட்டு,  கிரீயேடிவாக நான்  செய்ய காத்திருக்கும் வேலைகளை முழுகவனத்துடன்  தொடர்வது மட்டுமே எனக்கிருக்கும் வழியும் வெளியும்.

Monday, March 18, 2013

அறச்சீற்றச் சந்தை நிலவரம்.


ஞாநி பாலாவின் 'பரதேசி'யை முன்வைத்து எழுதியதற்கு எதிர்வினையாக, ஜெயமோகன் ஞாநியை துவத்து அலசியிருப்பதை வாசித்தேன். ஜெமோ எழுதியது சரியா என்று ஆராய்வதிலும், ஞாநி பக்கம் நியாயம் என்று ஏதாவது இருந்தால் கூட அதை எழுதுவதிலும் எனக்கு ஆர்வமில்லை. ஆனால் இந்த விஷயத்தில் ஜெமோவின் இவ்வளவு தீவிர ஆத்திரத்திற்கான நியாயமும் பின்னணியும் என்ன என்பதுதான் கேள்வி.

இசை குறித்து எதுவுமே தெரியாமல், இசை சார்ந்த எந்த அறிவும் இல்லாமல், இளையராஜாவை பற்றி அவ்வளவு மோசமாக, பொய்யாக, நேர்மையின்றி மீண்டும் எழுதி, அதற்கான எதிர்வினைகளை யோக்கியத்துடன் எதிர்கொள்ளாததை விட என்ன ஸ்டாலினிச வேலையை இப்போது ஞாநி செய்துவிட்டார்? அவ்வளவு பெரிய கலைஞனை, மனச்சங்கடம் கிஞ்சுத்தும் இன்றி, 'அற்மான மனிதன்' என்று திட்டியதை விட, என்ன பெரிய போல்பாட்டிச காரியம் இப்போது ஆற்றியிருக்கிறார்? ஞாநியின் அந்த அறிவு ஊழலை, கலைப்படுகொலையை .. ஃபாலசி  பாரடாக்ஸ் என்று என்னன்னவோ வார்த்தைகளால் நியாயப்படுத்திவிட்டு, இப்போது பாலாவிற்காக மட்டும்  இத்தனை ஆத்திரம் ஜெமோவிற்கு ஏனோ? ஜெமோ அப்போது முன்வைத்த வாதம் உளரல் என்று பிய்த்து முன்வைத்திருக்கிறேன்; எதிர்கொண்டால் விவாதிக்கவும் நான் தயார்.   இந்த முறையும் ஞாநியின் மொண்ணைத்தனம் வழக்கம்போல வெளிபட்டாலும், இப்போது பாலா மீது விமர்சனம் வைக்க ஞாநிக்கு சில நியாயங்கள் உண்டு; அவை வேறு சிலரும் சொல்லும் விமர்சனங்கள்தான். அதை இன்னொருவர் ஏற்பதும் வேறுபடுவதும் சாத்தியம்; ஆனால் ஞாநி தர்க்கமே இல்லாமல் வெற்றாக பாலாவை விமர்சிக்கவில்லை. ஆனால்  ராஜா விஷயத்தில் ஞாநிக்கு தர்க்க நியாயம் என்று எதுவும் இருக்கவில்லை; அறிவு சூனியம் நிறைந்த, நேர்மையின்மை ஆதாரபூர்வமாக நிறுவப்பட்ட மன வக்கிரம் மட்டுமே இருந்தது. (இதை ஏற்கனவே விளக்கியுள்ளதால் மீண்டும் விளக்க முனையவில்லை.) அப்போது அதை கருத்தாக்க தலைசுற்றலில் நியாயப்படுத்திய ஜெமோவிற்கு, இப்போது அறச்சிற்றம் பிரவகிக்கிறது.

ஆகையால் அன்பர்களே தர்மாத்திரமும், விமர்சன நுணுக்கமும், பாராட்டும் பரந்த மனமும், வார்த்தை விளம்பரமளிக்கும் மனச்சாய்வும்  தன்னிச்சையான அறவுணர்வால் அறிவு நேர்மையால் கலைப்பற்றால் உந்தப்பட்டு வருவதாக தெரியவில்லை. எப்படி உந்தப்படுகிறது என்கிற பின்னணியை, எல்லாம் ஒய்ந்த வயதான காலத்தில் அவர்களாகவே நேர்மையாக விளக்கினால்தான் நமக்கு முழுசாக புரியும். அதுவரை ஊகத்தில்தான் அடிக்க முடியும். அதை அவதூறு என்று எதிர்கொண்டு முன்னே செல்வது சம்பிரதாயம்.

Tuesday, February 26, 2013

(சில நாட்கள் முன் ட்வீட்லாங்கற்றில் எழுதியது)

பொதுவாக ஃபேஸ்புக்கில் அச்சுபிச்சு விம்ர்சனங்களை கண்டு கொள்ளாமல் தாண்டி செல்வதுதான் வழக்கம். இன்று எழுதிய ட்வீட்டை படித்து, உடனே இரைச்ச்சல் செல்லா பிரியா தம்பி எழுதிய வழக்கமான மொக்கை ' ஆர்டிகிளை' பாரட்டியதை பார்த்ததும் ஏதோ தோன்றியது. மற்றபடி கடைசி வரியில் சொல்வது போலத்தான். ராஜாவை பற்றி நாம் புரிந்து கொள்ளவும் பேசவும் ஆயிரம் ஆண்டுகள் உள்ளன. இப்போதே வழங்கும் தீர்ப்புகள் சொல்பவரின் அகந்தையைத்தான் காட்டுகின்றன. கீழே ஃபேஸ்புக்கில் எழுதியது:

இளையராஜா யாருடனும் ஒப்பிடமுடியாத இசை மேதை மட்டுமல்ல, எந்த வித சமரசமும் இல்லாத, தனக்கு தோன்றியதை அப்படியே சொல்ல எந்த தயக்கமும் இல்லாத விமர்சகனும் கூட. மாபெரும் கலைஞனாக இருப்பதன் இன்னொரு பரிமாணம்தான் இது. இந்த பண்பிலும் ராஜாவுடன் ஒப்பிடக்கூடிய கலைஞர் யாருமில்லை. எம்எஸ்வி தமிழகம் தந்த மாபெரும் கலைஞர்தான்; ஆனால் இசை மேதமையில் மட்டுமல்ல, இசை சார்ந்த தத்துவ ரீதியாக தன்னை முன்வைப்பதிலும் ராஜாவுடன் எந்த விதத்திலும் ஒப்பிட முடியாதவர். தன்னை பற்றிய அகந்தை அவருக்கு இல்லாமல் இருப்பது இயல்பானதும் போற்றுதலுக்கு உரியதும் ஆகும். ராஜா அல்பங்களுக்கு நடுவில் அகந்தையுடன் இருப்பது அதை விட போற்றுதலுக்கு உரியது ஆகும். அரையும் குறையுமான அரசியல் அறிவை மட்டும் வைத்து விமர்சனங்கள் எழுதி குவிப்பவர்களுக்கு இந்த அகந்தையின் சரித்திர முக்கியத்துவம் புரியப்போவதில்லை. பெரும் phenomenonகளை குறித்து தங்களது அற்ப அறிவு விசாலத்தினால் புரிந்து கொண்டுவிட முடியும் என்று நினைப்பவர்கள் ராஜாவை விமர்சிக்கிறார்கள். சரித்திரம் இப்படிப்பட்ட அற்பத்தனங்களுடனேயே பயணிக்கும்; வேறு வழியில்லை. ஆனால் ராஜா என்ற மாபெரும் கலைஞனை பற்றி பேசிக்கொண்டே இருக்க இன்னமும் (உலகம் இருந்தால்) பல ஆயிரம் ஆண்டுகள் உள்ளன.

Thursday, January 31, 2013

அரசியல் அடிப்படைவாதம்.


தேசியவாதிகளானாலும் மதவாதிகளானாலும், அவர்கள் தங்கள் பிரதான எதிரிகளை விட அதிகமாக வெறுப்பது, தங்கள் அடையாளத்தை கொண்ட, ஆனால்  அடையாள அரசியலில் இருந்து விலகி ஒலிப்பவர்களையே; இவர்கள் பொதுவாக 'துரோகிகள்' என்று அடையாளப் படுத்தப்படுகிறார்கள். துரோகிகள் என்று ஒரு அடையாளம் இவ்வாறே எப்போதும் கற்பிக்கப்படுகிறது என்று நான் சொல்லவரவில்லை. சுயநலன்களுக்காகவும், வேறு கோபங்களினாலும் அரசியலை காட்டிகொடுப்பவர்கள் உண்டு.  அவ்வாறானவர்களை துரோகிகள் என்று அழைக்கத் தொடங்கி, பின் விலகி ஒலிக்கும் எல்லா குரல்களையும் துரோகி என்று கற்பிக்கும் நடைமுறையே எல்லா அடையாள அரசியலிலும் தொடர்கிறது.

எதிரிகளின் தாக்குதல் அடையாள அரசியலை மேலும் பலப்படுத்துகிறது; எதிரியை எதிர்கொள்வதே அரசியலின் முக்கிய செயல்பாடாக இருப்பதால், எதிரியின் இருப்பு அடையாள அரசியலுக்கு முக்கியமாகிறது. ஆனால் உள்ளிருந்து விலகி ஒலிக்கும் மிதவாதியின் குரல், அடையாள அரசியலின் தீவிரத்தை கேள்விக்கு உட்படுத்துகிறது. தாங்கள் முன்வைக்கும் தீவிரமான அரசியல் நிலையை தங்களின் ஒட்டுமொத்த கூட்டமும் பேண வேண்டும் என்று அடிப்படைவாதிகள் நினைக்கிறார்கள்; அவ்வாறு பேணுவதே கூட்டத்தின் இயல்பாக இருப்பதற்கு, இந்த விலகி ஒலிக்கும் குரல்கள் பெரும் இடைஞ்சலாக இருக்கிறது. திவிரவாத அடிப்படைவாதிகள் இதன் காரணமாகவே மிதவாதிகளையும் மாற்று பார்வை கொண்டவர்களையும் எதிரிகளை விட மோசமாக வெறுக்கின்றனர். இதற்கான உதாரணங்களை எல்லா அடையாள அரசியலிலும் தட்டுப்பாடின்றி காணலாம்.

தற்போதுள்ள சந்தர்ப்பத்தில் மனுஷ்யபுத்திரன் அப்படிப்பட்ட மிதவாத குரலை ஒலிக்கிறார். இஸ்லாம் என்ற பெயரில் நடக்கும் நடைமுறைகள் அனைத்திற்கும், நியாங்களையும், வக்காலத்துக்களையும், சாக்குபோக்குகளையும் சொல்லி, விமர்சனமின்றி அதரிக்கும் மனநிலையை மட்டுமே முஸ்லீம்களிடம் விரும்பும் அடிப்படைவாதிகளுக்கு அவர் பெரும் கோபத்தை விளைவிக்கிறார். இதன் ஒரு வெளிபாடே ஜெய்னுலாபிதீனின் மிருகத்தனமாக தாக்குதல்.

சுமார் 8 ஆண்டுகளுக்கு முன் தொலைகாட்சியில் 'இஸ்லாம் இனிய மார்க்கம்'  நிகழ்ச்சியை மிகவும் ரசித்து நான் பார்த்த காலம்;  'மற்ற மதத்தவர்களை அழைத்து, அவர்களின் அடையாளங்களுடன் அமரவைத்து, அவர்களின் கேள்விகளுக்கு இப்படி நிதானமாக பதில் சொல்லும் ஜனநாயகம் இந்து மதத்தில் சாத்தியம் இல்லை' என்று அந்த  நிகழ்ச்சியை முன்வைத்து என் அம்மாவிடன் வாதிட்டிருக்கிறேன். அதே ஆள் இன்னொரு சந்தர்ப்பத்தில் தன்னை எப்படி வெளிபடுத்துகிறார் என்பதை இன்று பார்த்து வருகிறோம்.

அடையாள அரசியலை விட மோசமான விசித்திரமாக  வெளிபடுவது அரசியலுக்கான அரசியல். அ.மார்க்ஸ், சுகுமாரன் போன்றவர்கள் தங்கள் அடையாளத்திற்காக இஸ்லாமிய அடிப்படைவாத அரசியலை ஆதரிக்கவில்லை; அரசியல் சார்ந்து வந்தடைந்த நிலைபாடுகளின் தொடர்ச்சியாக ஆதரிக்கிறார்கள்.

முஸ்லீம்கள் மீதான முன்முடிவுகளும், முன் நம்பிக்கைகளும், வெறுப்பு சார்ந்த சொல்லாடல்களும் நம் சமூகத்தில் எப்போதும் உண்டு. அண்மைக்கால நிலவரங்களால் அது வேறு பரிமாணத்தை எட்டியுள்ளதும் ஒரு யதார்த்தம்தான். அந்த யதார்த்ததின் வெளிபாடாக பொதுவான ஒரு  இஸ்லாமியருக்கு இருக்கும் அச்சுறுத்தலும், ஒதுக்கமும், பாதுகாப்பின்மையும், மனித உரிமை சார்ந்த அரசியலை விழுமியமாக பேணும் அனைவரும் கவலைகொண்டு எதிர்க்கவேண்டிய ஒன்று. அவ்வாறான எதிர்ப்பை கொண்ட அரசியல்,  நடைமுறையில் அவ்வறான அச்சுறுத்தல் நிகழ்வதை எதிர்ப்பதாகவும், முன்முடிவுகளை விமர்சித்து இயங்குவதாகவும் நிச்சயம் செயல்படவேண்டும். அந்த வேலையை அ.மார்க்சும் சுகுமாரனும் செயல்பாடாக கொண்டுள்ளதை, மனித உரிமை அரசியலை கொண்ட அனைவரும்  ஆதரிப்பது என்ற நிலையில் நிச்சயம் இருக்கவேண்டும்.

மாறாக, இஸ்லாமிய வெறுப்பை எதிர்க்கும் அரசியல் என்பது, இஸ்லாமிய அடிப்படைவாதத்தை நியாயப்படுத்துவதிலோ, அடைப்படைவாதத்தின் எல்லா வெளிபாடுகளையும் ஏதோ ஒரு அட்டு தர்க்கத்தை சொல்லி நியாயப்படுத்துவதிலோ  இருக்க முடியாது. ரிசானாவின் அநியாயமான கொலையை முன்வைத்து, என்னத்த  சொல்ல வருகிறார் என்றே யாருக்கும் புரியாமல் அ.மார்க்ஸ் எழுதிய பதிவை வாசித்து ஏற்பட்ட குமட்டலுணர்வு கொஞ்ச நஞ்சமல்ல. இதில் இவர் வெளிப்படையான மரண தண்டனை எதிர்ப்பு நிலைபாட்டிலிருந்து ஏதாவது சொல்வார், மனுஷ்யபுத்திரன் மீதான தாக்குதலை கண்டிப்பார் என்ற எதிர்பார்ப்பு, இலங்கை அரசிடம் தமிழர்களுக்கான சுயநிர்ணய உரிமையை எதிர்ப்பார்ப்பதைவிட குறைவான நிகழ்தகவு கொண்டது.

'விஸ்வரூபம்' பிரச்சனையிலும் தான் இதுவரை எடுத்து வந்துள்ள நிலைபாடுகளுடன் எந்த இயைவும் இல்லாமல், நிபந்தனையற்ற இஸ்லாமிய அரசியல் ஆதரவு என்ற நிலையிலேயே உள்ளார். விஸ்ரூபம் படத்தின் மீது (பார்த்தவர்கள் பார்க்காதவர்களின்) முக்கிய விமர்சனம்தான் என்ன? தாலிபான்கள் பற்றிய (யதார்த்தமான) சித்தரிப்பு முஸ்லீம்கள் பற்றி குறிப்பிட்ட ஒரு எதிர்பிம்பத்தை பார்ப்பவர்களிடம் ஏற்படுத்தும் என்பதுதான். அப்படி ஒன்று நேரவே நேராது என்று நிச்சயமாக சொல்லமுடியாதுதான். ஆனால் இப்போதய எதிர்ப்புகளினாலும், அரசியல்களினாலும் ஏற்படாத எந்த முன்முடிவை படம் பொதுப்புத்தியில் ஏற்படுத்தியிருக்க போகிறது என்கிற சாதரண சிந்தனை கூட இவர்களிடம் இல்லை. ஏனெனில் இவர்களுக்கு பொதுப்புத்தி மீதான பாதிப்பை விட தாங்கள் பேணும் அரசியல்தான் முக்கியம்.

இந்த சூழலில் மனுஷ்யபுத்திரன் போன்றவர்கள் 'விஸ்வரூப' தடைக்கு எதிராக பேசுவது முக்கியமான மாற்று உதாரணமாகும். இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கு அவர் உண்டாக்கும் எரிச்சலைப் போலவே,  அ.மார்க்ஸ், சுகுமாரன் போன்றவர்களுக்கும் எரிச்சலை உண்டாக்குகிறார். இந்துத்வ அரசியலை தீவிரமாக எதிர்க்கும், சமீபத்தில் சின்மயி விவகாரத்தில் கூட பார்பன ஆதிக்கத்திற்கு எதிராக பேசிய, இஸ்லாமிய அடையாளத்தை கொண்ட  மனுஷ்யபுத்திரனை, கூசாமல் 'இந்துத்வ குரல்' என்கிறார்கள். அதாவது இஸ்லாமிய அடையாளத்துடன், இஸ்லாமியர்கள் மீதான கரிசனத்துடன்  தாராளவாத குரல் ஒலிக்க முடியாது என்கிற முன்முடிவு இவர்களிடமும் வெளிபடுகிறது.

அப்துல் கலாமை இந்துத்வவாதி என்று திட்டினார்கள். அவர் பாஜகவால் ஜனாதிபதியாக்கப்பட்டார்; குஜராத் படுகொலைகளின் போது வாய்மூடி இருந்தார்; அணுகுண்டு வெடித்தார்; இன்னும் பலவகைகளில் இந்திய நவீன  தேசிய அரசியலுக்கு உறுதுணையாக இருந்தார். (ஆனாலும் அவரை இந்துத்வா என்று அடையாளப்படுத்த முடியாது என்று நான் நினைத்தாலும்) அவரை இந்துத்வா என்று சொல்வதிலாவது நியாயமுண்டு. இந்துத்வ அரசியலையும், இந்திய தேசிய வெறி அரசியலையும் எதிர்க்கும் மனுஷ்யபுத்திரனையும் இவர்கள் இந்துத்வா என்கிறார்கள். மத அடிப்படைவாதத்தை போன்ற அரசியல் அடிப்படைவாதம் இது; அடையாளம் சார்ந்து தங்களைப்போலவே ஒலிக்க வேண்டியதாக கருதும் ஒரு குரல், விலகி ஒலிப்பதை ஏற்காத அரசியல் அடிப்படைவாதம். தமிழ் சூழலில் பின்நவீனத்துவம் வழங்கிய அரசியல் கொடையாகத்தான் இதை பார்க்கலாம்.

Thursday, November 8, 2012

வரலாற்றாறு.

(ட்விட்டர் விவாதத்தினிடையில் எழுதியது)


ரஹ்மான் நேரடியாக இளையராஜாவிடம் என்ன கற்றார், பெற்றார் என்பது தெளிவில்லை; அது குறித்த விவரிப்பை அவர் நேர்மையாக முன்வைப்பார் என்று எனக்கு தோன்றவில்லை. ஒருவேளை ரஹ்மான் ராஜாவுடன் பணியாற்றியிருக்கவே இல்லையென்றே வைத்துகொண்டாலும்கூட, ராஜாவின் 16 வருட பயணமின்றி ரஹ்மானின் இசை தோன்ற வாய்ப்பில்லை. ராஜாவின் பாணியை ரஹ்மான் பின் பற்றினார் என்று சொல்லவரவில்லை (ஒரளவு சிலவற்றை பின்பற்றினார் எனினும், பின்பற்றுவது சாத்தியமில்லை என்பது வேறு விஷயம்). ரஹ்மான் தந்த இசையை 80கள் இசையின் நாம் முற்றிலும் விளங்கிகொள்ளகூடிய இயல்பான பரிணாம மாற்றமாகவே பார்க்கமுடியும் (வளர்ச்சி என்று நான் இங்கு வேண்டுமென்றே சொல்ல விரும்பவில்லை). ரஹ்மான் தனக்கே தனித்துவமான பல சோதனைகளையும் புதுமைகளையும் செய்தார். அவை முன்னதின் தொடர்ச்சியாகயே நிகழ்ந்தது . மாறாக ராஜா செய்தது குவாண்டம் இயற்பியலின் தோற்றம் போன்ற ஒரு புரட்சி; அது அதற்கு முன்னான தமிழ் திரையிசையின் தொடர்ச்சியயாவும், தொடர்பறுந்த பாய்ச்சலாகவும் ஒரே நேரத்தில் நிகழ்ந்தது. இதை பற்றியெல்லாம் விரிவாக பேசலாம். இதை புரிந்துகொண்டவர்கள் ஏற்றுக்கொண்டவர்களுடன் மட்டுமே இப்போதைக்கு பேச விழைகிறேன். 

இங்கே கவனிக்க வேண்டியது ராஜா தொடர்ந்து தனக்கு முந்தய இசை முன்னோர்களை தெளிவான வார்த்தைகளில் அக்னாலெட்ஜ் செய்துள்ளது. ஜீகே வெங்கடேஷை குரு என்கிறார்; எமெஸ்வியும் ராமமூர்த்தியும் துப்பிய எச்சிலாக தன் இசையை சொல்கிறார். இது மட்டுமில்லாது தன்னுடய எல்லா உந்துதல்களையும், நம்மால் எளிதில் கண்டுபிடிக்க இயலாத பல உந்துதல்களையும் நேர்மையாக முன்வைத்திருக்கிறார். மாறாக ரஹ்மான் திரையிசையில் தான் ஏறி நிற்கும் தோள்களையும் தூண்களையும் முறையாக அக்னாலெட்ஜ் செய்து நானறியேன். ஏதோ அங்கொன்று இங்கொன்றாக சம்பிரதாயமாக சொன்னது மட்டுமே. 

ரஹ்மான் புயலாக நுழைந்து, பூகம்பமாக புகழ் பெற்ற பின், ஒரு குமுதம் பேட்டியில் தனக்கு பிடித்த தன்னை பாதித்த இசையமைப்பாளர்களாக எம்மெஸ்வியையும் டி.ராஜேந்தரையும் குறிப்பிட்டார். அதை வாசித்து அன்று கொதிப்படைந்தேன். (இந்த தகவலை அண்மையில் ராஜேந்தர் சொல்லியிருப்பார்; பலர் ராஜேந்தர் உடான்ஸ் விடுவதாக எடுத்து கிண்டலடித்திருப்பார்கள். ஆனால் ரஹ்மான் சொன்னதான செய்தி உண்மை.) இந்நிலையில் நேரடியாக ராஜாவுடன் பணியாற்றியதன் மூலம் பெற்றதை எல்லாம் ரஹ்மான் ஒருநாளும் நேர்மையாக முன்வைக்க போவதில்லை. 

ராஜாவின் செல்வாக்கை ஒழிக்க பாலசந்தர் மணிரத்தினம் போன்றவர்களால் ரஹ்மான் உருவாக்கப்பட்டதான கதை இன்று நமக்கு தெரியும். அது அப்படியே உண்மையெனில் அன்று ரஹ்மானுக்கு ஒரு தொழில் சார்ந்த நிர்பந்தம் இருந்திருக்க கூடும். ஆனால் அதற்கு பின்னும் அவர் வெற்று உபசார வார்த்தைகளை தவிர பெரிதாக பேசியதாக தெரியவில்லை; தெரிந்தால் மகிழ்வேன்.

Tuesday, May 1, 2012

ஞானத்தின் மடத்தனம்.

நேர்மையற்ற குதர்க்க புத்தியை தர்க்க அடைப்படையாக கொண்டு, தனக்கு மட்டுமே சாத்தியமாகக் கூடிய மடத்தனத்தை, ஏதோ ரொம்ப தர்மாவேசம் போல ஞாநி முன்வைப்பது இது முதல் தடவை அல்ல. திருவாசகம் வெளிவந்த போதே கேனத்தனமான பல கேள்விகளை, அரசியல் ஆவேசமாக முன்வைத்தவர்தான். இந்திய இசைச்சூழலில் யாருக்கும் சாத்த்தியம் ஆகாத சாதனையை நிகழ்த்திய மேதையை 'அரசு பணத்தை திருடினார்' என்று எந்த லாஜிக்கும் இன்றி பிதற்றியவர்தான் இவர். இப்போது சமீபத்தில் பலரை வேறு உலகிற்கு அழைத்துச் சென்ற How to Name it நிகழ்ச்சி அவர் கையில் மாட்டியிருக்கிறது. 'How to name it' நிகழ்தியது ராஜா அல்ல; அவரே நடத்தினாலும் யார் வயலின் வாசிப்பது என்பதை தீர்மானிக்க அவருக்கும், நிகழ்வை நிகழ்த்தியவர்களுக்கும் எல்லா உரிமையும் உள்ளது. யாருக்கேனும் உரிமையுள்ளதை திருடினாலோ, பணம் தராமல் ஏமாற்றினாலோதான் குற்றம். நரசிம்மனை வயிலின் வாசிக்க வைக்கவில்லை என்பதில், என்ன எழவு மனிநேயம் குலைந்து போகிறது? உலகில் உள்ள குயுக்திகள் அத்தனையையும் சேர்த்தாலும் இதில் மனித நேயத்திற்கு ம், நேர்மைக்கும் என்ன சம்பந்தம் வந்தது என்று புரியவில்லை. நரசிம்மன் ராஜா படைத்த இசைக்கோர்வையை, எழுதிக்கொடுத்தப்படி மேற்பார்வைக்கு ஏற்ப வாசித்தவர். ஒருவேளை ஞாநி எழுதும் குப்பை நாடகங்கங்களில் எல்லாம் முதன்முறை நடித்த நடிகர்களைத்தான் எல்லாமுறையும் நடிக்கவைப்பாரா? ஒருவேளை ஞாநி அப்படி ஒரு பைத்தியக்கார நடைமுறையை பினபற்றினாலும் மற்றவர்களுக்கு என்ன தலையெழுத்து? அடுத்து கேஸட்டில் பெயர் போடாதது. ரஹ்மான் இசைக்கலைஞர்களின் பெயரை போட்டாராம்; ராஜா அன்று போடவில்லையாம். ஏன் M. S. விஸ்வநாதனும், நௌஷாத்தும், பர்மன்களும் கூட யார் தன் குழுவில் ட்ரம்ஸ் வாசித்தார்கள் என்ற செய்தியை ரெகார்டில் பதிவு செய்ததில்லை. ஜிகே வெங்கடேஷின் சில பாடல்களை இளையராஜா எழுதிக் கொடுத்ததாகவே நம்பிக்கைகள் உண்டு. எத்தனை கேசட்டில் ராஜாவின் பெயரை வெங்கடேஷ் பதிவு செய்திருக்கிறார். A.R.ரஹ்மான் செய்தது பாரட்டுக்குரியது என்றாலும், அதில் நேர்மையாக வேறு வழியில்லை என்பதுதான் உண்மை. ரஹ்மானின் இசை உருவாகும் விதத்தை அறிந்தவர்களுக்கு, அதில் மற்ற இசைக்கலைஞர்களின் கிரியேடிவான பங்கு உண்டு என்கிற விஷயம் நன்றாக தெரியும். ரஹ்மானும் மற்ற இசை கலைஞர்களும் அதை சொல்லியும் உள்ளனர். ராஜா இசையில் அவரன்றி படைப்புரீதியாக அங்கு யாருக்கும் எந்த பங்கும் இல்லை. முழுக்க அவர் தனிமையில் எழுதியது மற்றவர்களால் வாசிக்கப்படுகிறது. ஆயினும் ரஹ்மான் முன்னுதாரணம் காட்டிய நடைமுறையை பின்பற்றி இசைத்தவர்களின்பெயரை போடத் தொடங்கினார். அப்படியே போடாமல் விட்டாலும் அதில் எந்த மனிநேயத்திற்கு எதிரான செயலும், அயோக்கியத்தனமும் இல்லை. ஞாநி சொல்வதுபோல் 'தன் இசையை சிறப்பாக வெளிப்படுத்தி தனக்கு புகழ் சேர்த்துத் தரும் கலைஞர்களை எப்போதுமே அலட்சியப்படுத்தி இருட்டடிப்பு செய்து வருவ'தாக ஞாநி என்கிற சைக்கோவை தவிர இளையராஜாவிடம் பணியாற்றிய யாராவது சொல்லியுள்ளார்களா? எத்தனையோ இரக்கமற்ற சமூக நிகழ்வுகளுக்கு பயன்படுத்த வேண்டிய மனித நேயமின்மை என்கிற வார்த்தையை எந்த லாஜிக்கும் இல்லாமல் இளையராஜாவை நோக்கி இவர் பயன்படுத்தவேண்டிய காரணம் என்ன? இந்தியா முழுக்க யாருடனும் ஒப்பிட முடியாத இந்த மேதையின் மீதான இந்த வெறுப்பை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஞாநியிடம் வெளிபடுவது அரசியல் சார்ந்த மனநோயா, அல்லது சாதி சார்ந்த தலித் வெறுப்பா, வேறு ஏதாவது வெளிவராத பிரச்சனையா என்று புரியவில்லை. அது எப்படியிருந்தாலும் சமூகத்தில் ஒரு நேர்மையான கருத்தாளராக மதிக்கப்படும் இவர் ராஜா மீது காட்டும் இந்த வெறுப்பை அம்பலப்படுத்துவது முக்கியமானது. இவரின் லூஸுத்தனமான வாதங்களை முதிராத இணைய ஆவேசக்காரர்கள் தொடரப்போவதுதான் கவலைக்குரிய விஷயம். இளையராஜா போன்ற ஒருவர் பெங்காலில் பிறந்திருந்தால் தங்கள் அடையாளமாக கடவுளாக கொண்டாடியிருப்பார்கள். இங்கே இல்லாத பொல்லாத தர்க்கத்தை எல்லாம் கண்டுபிடித்து அவரை காலிபண்ணுவதில் ஈடுபட்டிருக்கிறார்கள். நம் அறிவு நோய்கூறுக்கு ராஜாமீதான இந்த வெறுப்பை விட சிறந்த உதாரணம் வேறு கிடையாது.

Monday, March 5, 2012

இரு குறிப்புகள்

குறிப்பு 1: கூடங்குளம் போராட்டத்தில் களத்தில் நிற்பவர்கள் தெளிவாகவும், உறுதியாகவும் இருக்கிறார்கள்; போரடுவதன் அணுகுமுறையும், முன்னெடுப்புகளும், அவர்கள் அளவிற்கு நமக்கு தெளிவிருக்காது. என் கரிசனம் அவர்கள் ஏதோ ஒரு நெருக்குதலில் வன்முறைக்கு மாறக்கூடாது என்பதே; இதுவரை வன்முறையற்று இருக்கும் போராட்டம் வன்முறையாவதை அரசாங்கம் மிக விரும்பும்; வன்முறையை சமாளிப்பதும், ஒடுக்குவதும், அந்த ஒடுக்குதலை நியாயப்படுத்துவதும் அரசுக்கு இலகுவானது. மேலும் இப்போதிருக்கும் சூழலில் வலிமை கொண்ட அரசு அதிகாரத்தை வன்முறை மூலம் பணிய வைக்கக்கூடிய சாத்தியம் இருப்பதாக தெரியவில்லை. வன்முறையில் இறங்குவதற்கான நெருக்குதல் எல்லவகையிலும் இருக்கிறது. ஆனால் இந்த இறுதி சந்தர்பத்திலும், இருக்கும் ஜனநாயக முறைகளில் தொடர்ந்து அரசை இழுத்தடிக்கும் வாய்ப்பு நிச்சயம் உள்ளது. அதற்கான உறுதியும் தளராமையும் போராடுபவர்களுக்கு இருப்பதையும் காணமுடிகிறது. என்ன நடக்கப்போகிறது என்று பார்போம்.


குறிப்பு 2: இன்று சென்னையில் நடக்கவிருக்கும் என்கவுண்டருக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெருமளவு தமிழ் தேசியம் பேசுபவர்கள் கலந்து கொள்கின்றனர்; இது வேறு எங்கும் பார்க்காத மிக ஆரோக்கியமான நிகழ்வு. ஒரு சபால்டர்ன் மக்கள் கூட்டத்தின் மீதான வன்முறையை, இடதுசாரிகளும் மற்ற மனித உரிமையாளர்களும் எதிர்ப்பது இயல்பாக நாம் காணக்கூடியது. ஆனால் இன்னொரு தேசிய அடையாளத்தின் மீது நிகழ்ந்த வன்முறைக்கு எதிராக, அதற்கு எதிரான தேசியம் பேசுவோர் திரள்வது என்பது (குறைந்த பட்சம் இந்திய அளவில்) நான் பார்த்ததில்லை. தேசியத்தின் பாசிசம் என்பது, அது குறிவைத்து எதிர்க்கும் தேசிய அடையாளத்தைக் கொண்ட எளிய மக்களின் மீதான வன்முறையாகத்தான் முதலில் இருக்கும். மும்பை மற்றும் கர்நாடகாவில் தாக்கப்பட்ட தமிழர்களில் பெரும்பான்மையானவர்கள் சேரிகளின் வசித்தவர்கள். இப்போது முல்லை பெரியார் விவகாரத்திலும் கூலிக்கு சென்ற மக்களும், ஐயப்பன் கோவிலுக்கு போகும் எளிய மக்களும்தான் கேரளாவில் தாக்கப்பட்டு உள்ளனர். இயல்பாக பேசவேண்டிய மனித உரிமையாளர்களின் குரலும், இடதுசாரி செயல்பாடும் இந்த வன்முறைக்கு எதிராக நிகழ்ந்து நான் அறியவில்லை. இந்த யதார்த்தத்தில் வட இந்தியர்கள் மேலான இந்த வன்முறையை தமிழ்தேசியர்கள் எதிர்ப்பது தமிழக அரசியல் சூழல் குறித்து நாம் பெருமிதம் கொள்ளவேண்டிய விஷயம். இது திடீரென நிகழ்ந்து விடவில்லை. ஏராளமான அரசியல் விவாதங்களின் விளைவாகவே இப்படி ஒரு அரசியல் சூழல் இங்கே முகிழ்ந்திருக்கிறது.

இன்று சென்னையில் இருக்கக்கூடிய (அல்லது இருப்பதாக சொல்லக்கூடிய) வட இந்தியர்களுக்கு எதிரான மனோபாவம் என்பது, போலிஸ் வழிமுறைக்கு ஆதரவான பொதுப்புத்தியும், அரசியலற்ற அரசு வன்முறையுமே தவிர, எந்த அரசியல் சார்ந்தும் நிகழ்வில்லை. இந்த நிலையில் தமிழ் தேசியம் உட்பட எல்லா எதிர்ப்பு அரசியல் பேசும் அனைவரும் இந்த மனோபாவத்திற்கு எதிராக இருப்பது மிக ஆரோக்கியமானது. இந்த ஆரோக்கிய சூழல் குறித்த பிரஞ்ஞை கூட இல்லாமல் தமிழகத்தை பாசிச பூமியாக சிலர் சித்தரிக்க முயலும் போது, இதை நாம் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டியுள்ளது. மற்றபடி தமிழ்தேசியம் மீது எப்போதும் இருக்கும் விமர்சனங்கள் இப்போதும் உள்ளது.