Tuesday, February 26, 2013

(சில நாட்கள் முன் ட்வீட்லாங்கற்றில் எழுதியது)

பொதுவாக ஃபேஸ்புக்கில் அச்சுபிச்சு விம்ர்சனங்களை கண்டு கொள்ளாமல் தாண்டி செல்வதுதான் வழக்கம். இன்று எழுதிய ட்வீட்டை படித்து, உடனே இரைச்ச்சல் செல்லா பிரியா தம்பி எழுதிய வழக்கமான மொக்கை ' ஆர்டிகிளை' பாரட்டியதை பார்த்ததும் ஏதோ தோன்றியது. மற்றபடி கடைசி வரியில் சொல்வது போலத்தான். ராஜாவை பற்றி நாம் புரிந்து கொள்ளவும் பேசவும் ஆயிரம் ஆண்டுகள் உள்ளன. இப்போதே வழங்கும் தீர்ப்புகள் சொல்பவரின் அகந்தையைத்தான் காட்டுகின்றன. கீழே ஃபேஸ்புக்கில் எழுதியது:

இளையராஜா யாருடனும் ஒப்பிடமுடியாத இசை மேதை மட்டுமல்ல, எந்த வித சமரசமும் இல்லாத, தனக்கு தோன்றியதை அப்படியே சொல்ல எந்த தயக்கமும் இல்லாத விமர்சகனும் கூட. மாபெரும் கலைஞனாக இருப்பதன் இன்னொரு பரிமாணம்தான் இது. இந்த பண்பிலும் ராஜாவுடன் ஒப்பிடக்கூடிய கலைஞர் யாருமில்லை. எம்எஸ்வி தமிழகம் தந்த மாபெரும் கலைஞர்தான்; ஆனால் இசை மேதமையில் மட்டுமல்ல, இசை சார்ந்த தத்துவ ரீதியாக தன்னை முன்வைப்பதிலும் ராஜாவுடன் எந்த விதத்திலும் ஒப்பிட முடியாதவர். தன்னை பற்றிய அகந்தை அவருக்கு இல்லாமல் இருப்பது இயல்பானதும் போற்றுதலுக்கு உரியதும் ஆகும். ராஜா அல்பங்களுக்கு நடுவில் அகந்தையுடன் இருப்பது அதை விட போற்றுதலுக்கு உரியது ஆகும். அரையும் குறையுமான அரசியல் அறிவை மட்டும் வைத்து விமர்சனங்கள் எழுதி குவிப்பவர்களுக்கு இந்த அகந்தையின் சரித்திர முக்கியத்துவம் புரியப்போவதில்லை. பெரும் phenomenonகளை குறித்து தங்களது அற்ப அறிவு விசாலத்தினால் புரிந்து கொண்டுவிட முடியும் என்று நினைப்பவர்கள் ராஜாவை விமர்சிக்கிறார்கள். சரித்திரம் இப்படிப்பட்ட அற்பத்தனங்களுடனேயே பயணிக்கும்; வேறு வழியில்லை. ஆனால் ராஜா என்ற மாபெரும் கலைஞனை பற்றி பேசிக்கொண்டே இருக்க இன்னமும் (உலகம் இருந்தால்) பல ஆயிரம் ஆண்டுகள் உள்ளன.

2 comments:

  1. மனம் போகிற போக்கில் தோன்ற எழுதியது…

    அப்போது வீட்டில் டேப் ரெகார்டர் கிடையாது; காதல் ஓவியம் பாடல்களை கேட்க எத்தனையோ நாட்கள் டீக்கடைகள் முன்னே மணிக்கணக்கில் (8 பாடல்கள்) நின்றிருக்கிறேன். பள்ளியில் இருந்து வரும் வழியில் தெருவில் யார் வீட்டிலிருந்தோ ஒலிக்க, அங்கேயே அடுத்த அரை மணி நேரம். அந்த காலத்தில் பாட்டை கேட்கவென்றே மொக்கை படங்களை பார்க்க போவதுண்டு. 'காதல் ஓவியம்' அதற்கு வாய்ப்பு தராமல் படுதோல்வியில் பெட்டிக்குள் உடனடியாக சுருண்டு கொண்டது. ஆனால் பாடல்கள் பெரிய ஹிட். ஒரு முறை கூட பாடல்காட்சியை பார்த்ததில்லை. கேட்டுக்கேட்டு மனதில் காட்சிகள் படிமங்களாக அமைந்து கொண்டன. பல வருடங்கள் கழித்து வீட்டில் டேப் ரெகார்டர் வந்த போது வாங்கிய முதல் கேசட் 'காதல் ஓவியம்'. பாடும் பழக்கமும், பயிற்சியும் அற்று போய்விட்ட இன்று கூட காதல் ஓவியம் பாடல்களை அன்று போலவே உணர்ச்சியுடன் பாட முடிகிறது. இத்தனை ஆண்டுகள் கழித்து பாட்டை யூட்யூபில் படிமங்கள் சிதைய பார்த்திருக்க வேண்டாம். அற்புதமான இசைக்கு சிறிய நியாயம் கூட செய்யத் தெரியதவனெல்லாம் என்ன மயித்துக்கு இசை சார்ந்த திரைக்கதை அமைக்கிறான் என்ற கேள்வி எழுந்தாலும்.. அப்படி எல்லாம் நாம் திட்டக்கூடாது, இப்படி ஒரு திரைக்கதை அமைந்ததால்தான் இப்படி ஒரு பாட்டை ராஜா கொடுத்தார். ஆனால் இவர்கள் எப்படி தன்னை சிகரம், இமயம் என்று நினைக்கிறார்கள், மற்றவர்கள் அப்படி அழைக்கும்போது மனதிற்குள் எப்படி கூசாமல் இருக்கிறார்கள் என்பதுதான் புரியவில்லை. அதைவிட ராஜாவின் 'அகங்காரம்' இவர்களின் ஈகோவை தூண்டி வரலாற்றுத் திருப்பங்களை ஏற்படுத்தியது என்ற அபத்தம்தான் ஜீரணிக்க கஷ்டமாக உள்ளது.

    காட்சி அமைப்பு அன்ற வகையில் பாலசந்தர், பாரதிராஜாவை விட மணிரத்தினம் ராஜாவின் இசைக்கு நியாயம் செய்துள்ளதாக தோன்றுகிறது.

    ReplyDelete