Saturday, May 4, 2013

அன்புள்ள குழலிக்கு...

அன்புள்ள குழலி, இதை கொலை அல்ல என்று நான் ஒரு போதும் சொல்லவில்லை. கொலை செய்தவர்களை வண்மையாக கண்டிக்கிறேன். நாட்டில் நடக்கும் ப்ரொஃப்ஷனல் கொலைகளை எல்லாம் நான் கண்டிப்பதில்லை; நீங்கள் என் பெயரை குறிப்பிட்டு கருத்து கேட்பதால் நேரடியான வார்த்தைகளில் கண்டிக்கிறேன். 

ஆனால் நீங்கள் குறிப்பாக யாரையோ கண்டிக்க என்னை அழைப்பதாக தெரிகிறது. யாரை என்று தெளிவாக சொல்லுங்கள். திருமாவளவனையா? அவர் இந்த கொலைக்கு பின்னால் ஒரு திட்டமிட்டவாரக இருப்பதாக நீங்களும், வன்னிய ஜாதிவெறி தரப்பை மட்டும் ஒலிக்கும் ஒரு குழு மட்டுமே சொல்கிறது. வேறு வகையில் இதற்கு ஆதரமாக நம்பும்படி எந்த செய்தி வந்தாலும் அந்த நேரத்து கருத்தை பதிவுகிறேன். மற்றபடி இந்த கொலைக்கு தூண்டுதலாக திருமா எந்த பேச்சையாவது முன்வைத்தாரா என்றால் நிச்சயமாக இல்லை. மறைமுகமாக தூண்டினார் என்று நீங்கள் சொன்னால் அதை நாங்கள் நம்ப ஆதாரம் என்ன? சிறிதும் விமர்சனம் இன்றி ஜாதி சார்பான நிலை எடுக்கும் நீங்கள் சொல்வதை மட்டும் எதை வைத்து நம்புவது? நம்பினால் அது திருமாவிற்கு செய்யும் அநீதியாக இருக்கும். திருமா இதுவரை பொதுவில் தெரிய பேசிய அனைத்தும் மிகுந்த பொறுப்புணர்வுடன் நான் ஆதரிக்கும் அரசியலாக இருக்கிறது என்றுதான் என்னால் என் கருத்தை பதிவு செய்ய முடியும். ஆகையால் திருமாவை கண்டிக்க ஏதுமில்லை.

திட்டமிட்டதாக அல்லாமல், ஆனால் விடுதலை சிறுத்தையை சேர்ந்தவர்கள் செய்திருந்தால் கூட செய்தவர்களை நிச்சயம் கண்டிக்கிறேன். இப்போது கொலை என்று சொல்லியுள்ள போலிஸோ, வேறு ஏதாவது ஆதரத்துடன் (உங்கள் தரப்பை தவிர) யார் சொன்னாலும் தீவிரமாக பரிசீலித்து கருத்தை முன்வைக்கிறேன்.

அல்லது அங்கிருக்கும் தலித் மக்களை கண்டிக்க வேண்டும் என்கிறீர்களா? பாமக ரௌடிகளிடம் அடிவாங்கி குடிசைகள் எரிந்தவர்களை கண்டிக்க சொல்கிறீர்களா? 'இரண்டு உயிரை விட குடிசை முக்கியமா' என்று உங்களை போல நான் கேட்கமுடியாது. தலித்களின் குடிசைகள் இரண்டு உயிர்களை விட முக்கியமாக இருக்கலாம். கலவரத்தை தூண்டிய தாக்கிய தரப்பை சார்ந்தவரை விட, தாக்கப்பட்டவர்கள் வாழும் குடிசைகள் முக்கிமானதாக படலாம். ஆனாலும் இங்கே தலித்கள்தான் தொடங்கினார்கள் என்று நம்ப ஆதரம் எதுவும் கிட்டவில்லை. நீங்கள் வழக்கம் போல போது புது புது தர்க்கங்களை உருவாக்குவதை தவிர வேறு ஆதாரம் கிடைக்கவில்லை. 

மாறாக ராமதாஸும் ஒட்டு மொத்த பாமகவும் தமிழகம் இதுவரை காணாத ஜாதிவெறியை முன்வைத்திருக்கிறது. இதுவரை காணாத என்று ஏன் சொல்கிறேன் என்றால், இவ்வளவு தீவிரமாக அமைப்புரீதியாக எல்லா ஆதிக்க ஜாதிகளையும் திரட்டி தலித் சமுதாயத்திற்கு எதிராக யாரும் அணிதிரட்டியதில்லை. (தலித்துக்கு எதிரான பொதுப்புத்தி எப்போதுமே உண்டு என்றாலும் அதை பொதுவில் ஒரு பெரும் அரசியல் குரலாக நியாயம் கற்பித்து அணி திரட்டி யாரும் முன்வைக்கவில்லை.) வன்முறையை தூண்டும் வகையில் எவ்வளவோ பேசியுள்ளது. வன்முறையில் இறங்குவோம் என்று பகிரங்கமாக அறைகூவியிருக்கிறது.'அமைதியாக அறவழியில் போராடுங்கள்' என்றாலே தொண்டர்கள் என்னவகை வன்முறையில் இறங்குவார்கள் என்று தெரிந்த நிலையில், இதற்கான விளைவு என்னவென்று சொல்லவேண்டியதில்லை. எந்த சந்தேகமும் இன்றி பலதரப்பட்ட வன்முறையை பாமக செய்திருக்கிறது. இப்படி வெளிப்படையாக தெரிந்த ஜாதிவெறி அரசியலையும், வன்முறை அரசியலையும்தான் மனித நேயமாக அறிவுபூர்வமாக, சிந்திப்பவர்கள் கண்டிக்கமுடியும். அதைத்தான் நான் கண்டிக்கிறேன். அதைத்தான் மரக்காணம் சம்பங்களுக்கு காரணமாக்குகிறேன். இன்னம்மும் நான் நம்பும் நல்லவர்கள் எனக்கு தெரிந்து இதை தீவிரமாக எதிர்க்கவில்லை என்றுதான் நினைக்கிறேன். 

எல்லா கொலைகளையும் நாம் கணக்கு வைத்து கண்டித்து கொண்டிருப்பதில்லை; நீங்களும் கண்டிப்பதில்லை. கண்டிபதற்கு பின் அரசியல் காரணம் உள்ளது. வன்னிய உயிர்கள் போய்விட்டதே என்று நீங்கள் துடிக்கிறீர்கள். வன்னிய ஜாதிவெறி வன்முறை அரசியலுக்கு தலித் மக்களும் இந்த இரண்டு உயிர்களும் பலியானதாக நான் கருதுகிறேன். அதையே கண்டிக்கிறேன். 

'கண்டித்தாயா.. கண்டித்தாயா..'' என்று இவ்வளவு நீளாமாக கேட்கும் நீங்கள் எதையாவது கண்டித்தீர்களா? மரக்காணம் கொலைகளை முற்போக்காளர்கள் கண்டிக்காததால் கண்டிக்கவில்லை என்று அநியாயமா க சொல்லாதீர்கள். அதை பற்றி பேசத்தொடங்கும் முன், சித்திரை திருவிழா பற்றி ரன்னிங் கமெண்டரி கொடுத்த போது, எங்காவது ராமதாஸ் + மற்றவர்களின் ஜாதிவெறி பேச்சை வன்முறையை எங்காவது கண்டித்தீர்களா? ஏதோ ஐபிஎல் பார்த்தது போலத்தானே நிலைத்தகவல் போட்டீர்கள். அந்த ஜாதிவெறி வன்முறை பேச்சை கண்டிக்காத நீங்கள் இப்போது அதை நியாயப்படுத்தும் நீங்கள் 'கண்டித்தீர்களா?' என்று மற்றவர்களை கேட்பதே பெரும் அநியாயம். நான் கண்டிக்கிறேன். நடந்த அனைத்திற்கும் ராமதாஸையும் கூட இருந்தவர்களையும் கண்டிக்கிறேன். மாறான புதிய தகவல்கள் நம்பகத்தன்மையுடன் வரும்வரை வேறு எதுவும் சொல்வதற்கில்லை.

3 comments:

  1. குழலிக்கு பதிலாக ஃபேஸ்புக்கில் எழுதியது.

    ReplyDelete
  2. ராமதாஸை வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கூட கைது செய்ய எல்லா ஆதாரங்களும், நியாயங்களும் இருந்தன; செய்திருக்க முடியும். ஆனால் நியாயமான நடவடிக்கையை உறுதியாக எடுக்கும்போது ஏதேச்சதிகாரத்தனமாக நடக்காவிட்டால் தன் பிம்பத்திற்கு இழுக்கு நேரிடுமே என்ற கவலையில், வேறு என்னவெல்லாமோ நியாயமற்ற முறைகளில் வேறு வழக்குகளில் ராமதாசை உள்ளே தொடர்ந்து வைத்திருக்கிரார்கள். இவ்வாறு நடந்து கொள்ள என்ன காரணம், ஜெயலலிதாவிற்கான அரசியல் லாபங்கள் என்ன என்று தெளிவில்லை. அப்படி நாம் ஊகிக்க கூடிய காரணங்கள் எதுவும் எல்லாம் இல்லாமலே கூட இவ்வாறு செய்யக்கூடியவர்தான் அவர். இதன் மூலம் ஜாதிவெறி வன்முறையை பற்றவைத்தவர்களுக்கு அறச்சிற்றதுடன் பேச, அதை சிலர் சீரியசாக எடுக்க வாய்ப்பை ஜெயலலிதா தந்திருக்கிறார். ஆனால் அறிவு பூர்வமான தளத்தில் ஜெயின் எதேச்சதிகாரம் ஜாதிவெறி அரசியலை எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது.

    ReplyDelete
  3. (ஃபேஸ்புக்கில் எழுதியது)

    பாமகவின் வளர்ச்சிக்கு நிறப்பிரிகையை காரணமாக சொல்லும் 'கீற்று' கட்டுரை அபத்தம். அதற்கு ராஜன்குறை அளித்த சிறிய பதில் மிக பொருத்தமானது. அதற்கு மேலாக பாமகவை பாசிடிவாக பார்த்து ஆதரித்ததை ஒரு தவறான கணிப்பாக, பிழையான நிலைபாடாக சொல்லி வருந்துவது அறிவுநேர்மையாக இருக்கும். (அறிவு நேர்மை என்பதெல்லாம் இன்றய சூழலில் அர்த்தமிழந்துவிட்டதாக ராஜன்குறை கருதலாம். அதற்கெல்லாம் அர்த்தம் என்றும் இருப்பதாக நான் கருதுகிறேன்).

    ஆனால் சுகுணா திவாகர் எழுதியுள்ள பதிவு பாமக தொடர்ந்து ஆதரிக்க கூடிய அரசியல் பண்புகளையும் கொண்டிருந்ததாக விளக்கி அன்றய ஆதரவுக்கு நியாயம் இருந்தது என்பது போல் எழுதியுள்ளார். பாமக விமர்சனமாக ரொம்ப அல்ப விஷயங்களே அவரது பதிவில் உள்ளது. ஏதோ பாமக தேர்தல் அரசியலில் பாதை மாறிவிட்டது போன்ற விமர்சனமே உள்ளது. முக்கியமாக கடந்த காலத்தில் இரண்டு முக்கிய கட்டங்களில் வருடக்கணக்கில் தலித் வெறுப்பை கொண்டு, தலித் மக்கள் மீது பல வன்முறைகளை செய்துள்ளதை பற்றி ஒரு வரி கூட விமர்சனமில்லை. எவ்வளவு அழகாக சீரியசாக ஒரு 'நிறப்பிரிகை பாணி' பிரச்சார கட்டுரை எழுதி பல லைக்குகளை பெறமுடியும் என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம். அன்றய நிறப்பிரிகை செயல்பாட்டில் பங்கில்லாத சுகுணாவிற்கான இதற்கான தேவை என்ன என்று புரியவில்லை.

    ReplyDelete