Thursday, July 1, 2010

பிச்சைக்காரர்களின் சென்னை.

'பிச்சைக்காரர்கள் இல்லாத சென்னை' தொடர்பான சென்னை மாநகராட்சியின் நடவடிக்கைகள் குறித்து, அ.மார்க்ஸ் பங்களிப்பில் உண்மை அறியப்பெற்று, லும்பினி தளத்தில் வெளியாகியுள்ள அறிக்கை முக்கியமானது. இப்படி ஒரு நடவடிக்கை உண்மையான தீவிரத்துடன் எடுக்கப்பட்டு, பிச்சைக்காரர்களை இல்லாமலாக்குவது என்ற நோக்கத்தையும் உண்மையிலேயே அது நிறைவேற்றுமானால், அதை ஒரு இன அழிப்பு (ethnic cleansing) என்கிற வகையில்தான் பார்க்க முடியும். கேட்கவோ பிரதிநிதிக்கவோ யாரும் இல்லாத அதிகாரமற்ற மக்கள் மீதான பெரும் வன்முறையாகத்தான் இது முடியும். மனித உரிமைகள் பற்றிய அறிவும் சுய உணர்வும் ஊட்டப்பட்டிராத, சாதிய மனோபாவமும் கொண்ட பணியாளர்களை எல்லா தளங்களில் கொண்ட, நம் அரசினால் மேற்கொள்ளப் படும் இப்படிப்பட்ட ஒரு பணி, நாய்களை இல்லாமலாக்கும் அதே மனநிலையுடனேயே நிகழ வாய்ப்பிருக்கிறது.

ஆனால் நாய்களை ஒழிக்கும் பணியையும் நமது அரசு துல்லியமாக நிகழ்த்தவில்லை என்கிற யதார்த்தம்தான், இப்படி ஒரு இன அழிப்பு பணி அதன் உண்மையான பொருளில் இங்கே நிகழாது என்று தோன்றுகிறது. நமது அரசு பணியாளர்களின் செயல்திறனின்மையோ, ஒளிந்து கொண்டிருக்கும் 'மூன்றாம் உலகத்து' மனிதாபிமானமோ கூட இது முழுமையாக நடைபெறாமல் போக காரணமாக அமையலாம். பிச்சைக்காரர்களை இல்லாமலாக்கும் பணி துவங்கப்பெற்று, அறிக்கையில் விவரிக்கப்பட்டது போன்ற மனித உரிமை மீறல்களுடன் சில நாட்கள் தொடர்ந்து, மேலும் சில நடைமுறை போலிஸ் சார்ந்த வன்முறைகளுடன் இது கைவிடப்பட கூடும் என்று நினைக்கிறேன். அது எப்படி நிகழ்ந்தாலும் இதை எதிர்ப்பதும், இதற்கு எதிராக பேசுவதும் முக்கியமானது. அதை இந்த அறிக்கையை தயாரித்தவர்கள் செய்ய தொடங்கியிருப்பது நல்ல விஷயம்.

பிச்சை தொழிலை அழிக்க அரசு உண்மையில் எடுக்க வேண்டிய துரித நடவடிக்கை வேறு; திட்டமிட்டு பிச்சைக்கார்களை உருவாக்கி பணியிலிட்டு, அதை ஒரு தொழில்களமாக மாற்றி, சுரண்டி கொண்டிருக்கும் மாஃபியாக்கள் மீது நடவடிக்கை எடுப்பது. இந்த மாஃபியாவோ ஆளுங்கட்சி, எதிர்கட்சி தொடங்கி அரசு மற்றும் தன்னார்வ நிறுவனங்களுடன் தொடர்புகளை பேணும் பின்னலை கொண்டது. இதை அழிக்கும் நடவடிக்கையில் இறங்கவோ, தொடரவோ நிச்சயமாக அரசு முன்வராது. ஆகையால் பிச்சைக்காரர்களை ஒழிப்பது என்பது அரசு நமக்களிக்கும் யதார்த்தத்தின் படியே சாத்தியமில்லை. சாத்தியமில்லாத ஒன்றை இவர்கள் செய்யதொடங்கி, சாத்தியமாக்கப் போவது மற்ற விளிம்பு நிலை மனிதர்கள் மீதான வன்முறையை மட்டுமே.

இந்த அறிக்கையின் ஒரு வரி முக்கியமானது.

/எனினும் பிச்சைக்காரர்களை ஒழித்துக்கட்டப்பட வேண்டியவர்களாக பொதுமக்கள் கருதவில்லை என்பதற்கு நமது கோயில்கள் மற்றும் புனிதத்தலங்களில் குவிந்துள்ள பிச்சைக்காரர்களே சான்று./

இங்கே புனித தலங்கள் என்று சர்ச் மசூதிகளை குறிப்பிடுகிறார்கள் என்று நினைக்கிறேன். ஒரு பக்கம் சாதியம் சார்ந்த உயர்வு தாழ்வை நம்பும் அழுகிய மனநிலை கொண்ட நம்மக்களின் இன்னொரு நெகிழ்வான பக்கத்தை இந்த வரி சொல்வதாக நான் நினைக்கிறேன். இந்த இழையில் மேலும் சிந்தனையை வளர்த்தெடுத்தால் நம் சமூகத்தின் சிக்கலான ஒரு முடிச்சை புரிந்து கொள்ள முடியலாம் என்று எனக்கு தோன்றுகிறது.

கடைசியாக உறுத்துகிற ஒரு விஷயத்தை சொல்ல வேண்டும். அ.மார்க்ஸ் இப்போது இந்த வன்முறையை எதிர்த்த ஒரு சரியான நிலைபாட்டிலும், நடவடிக்கையிலும் இருப்பது நல்ல விஷயம். ஆனால் ஜெயமோகனுக்கு எதிரான ஒரு எதிர்வினையில், அ.மார்க்ஸ் 'பாகிஸ்தானில் பிச்சைக்காரர்களே இல்லை' என்று ஒரு போடு போட்டதை எப்படி விளங்கிக் கொள்ள வேண்டும் என்று புரியவில்லை. அ.மார்க்சின் அந்த தகவல் பிழையானது என்பதும், பாகிஸ்தான் நாடே மற்ற நாடுகளிடம் ஒரு ஒட்டு மொத்த பிச்சைக்காரன் தான் என்பதும், ஐரோப்ப்பாவின் முக்கிய நகரங்களின் பிச்சைக்காரர்களின் பெரும் விழுக்காடு பாகிஸ்தானின் பங்களிப்பு என்பதும் முற்றிலும் வேறு விஷயம். அதை பற்றி பேசுவது இங்கே நோக்கமல்ல. உண்மையிலேயே ஒரு நாடு பிச்சைக்காரர்களை ஒழித்திருந்தால், அதுவும் பாகிஸ்தான்/இந்தியா போன்ற ஒரு நாடு ஒழித்திருந்தால் (அல்லது இல்லாத ஒரு தோற்றத்தை ஏதோ ஒரு வகையில் உருவாக்கியிருந்தால்), அது பெரும் வன்முறையின் பின்னணியிலே நிகழ்ந்திருக்கும் என்பதை, அ.மார்க்ஸ் போன்ற பலவகை அனுபவங்கள் கொண்ட அறிஞருக்கு எப்படி சுய உணர்வில் உதைக்காமல் போயிற்று என்று வியப்பாக உள்ளது. இவ்வாறாக சில சந்தர்ப்பங்களில் தான் எடுக்கும் சரியான நிலைபாடுகளை வேறு சந்தர்ப்பங்களில் சொதப்புபவராக அ.மார்க்ஸ் இருப்பதை எந்த மாதிரி எடுத்துக் கொள்வது என்று குழப்பமாகத்தான் இருக்கிறது.

இவை இப்படியிருக்க நமது அரசால் பிச்சைக்காரர்களை, குறிப்பாக அதன் பின்னணியில் உள்ள மாஃபியாவை சிறு அளவில் கூட ஒழிக்க முடியாது. ஒழிக்க மனமும் கிடையாது. அது ஊழலை ஒழிப்பது போல சிக்கலானது. இந்த நிலைமையில் இப்படி ஒரு நடவடிக்கை நம் சமுதாயத்தின் தினநிகழ்வான விளிம்பு மக்கள் மீதான உதிரி வன்முறையாக மட்டுமிருந்து கிடப்பிற்கு போகும், ஒன்று சேர்த்து இறுக்கப்பட்ட ஒரு பெரும் வன்முறையாக உருவெடுக்காது என்று நம்புவோமாக. அவ்வாறு உருவாகாமல் தடுப்பதும், உதிரி வன்முறைகளையும் எதிர்த்து குரல் கொடுப்பதும் மனித உரிமை குறித்து கவலை கொண்டவர்களின் கடமை.

7 comments:

  1. பிச்சைக்காரர்களுக்கு மறுவாழ்வு கொடுத்து உதவலாமே தவிர, அவர்களை வன்முறையின் மூலம் அழிப்பது என்பது அவ்வளவு நல்லா இருக்காது...

    ReplyDelete
  2. தமிழக அரசின் நோக்கமும் பிசைக்காரரகளுக்கு மறு வாழ்வு கொடுத்து நல்வழி படுத்துவது மற்றும் புதிதாக பிச்சைக் காரர்கள் உருவாவதையும் தடுத்தல்.

    நடைமுறையில் செயல் படுத்தும் பொழுது சில இடங்களில் காவல் துறை, அரசு அதிகாரிகள் வன்முறை, கட்டாயப் படுத்துதல் போன்ற வழிமுறைகளை கடை பிடித்து இருப்பார், அது கண்டிக்க தக்கது. அதற்காக இந்த திட்டமே தவறு, இந்த நோக்கமே தவறு என்று சொல்வது சரி அல்ல.

    நாமும் அரசின் நோக்கம் நிறைவேற நம்மால் ஆன உதவிகளை செய்ய வேண்டும். குற்றம் கண்டு பிடித்தல் என்பது உலகில் மிக எளிதான வேலை.

    ReplyDelete
  3. லக்கியின் கட்டுரையை படித்த பின் இதை படித்தேன் ! அவர் தனக்கு தான் எல்லாம் தெரியும் என்பது போல் பேசுகிறார் ...நீங்கள் என்னவென்றால் தெளிவாக எதையும் சொல்லாமல் மேலும் குழப்புகிறீர்கள் ! பிச்சைக்காரர்கள் இல்லாத சமுதாயம் ..எல்லோருடைய கனவும் தான் ! நம் அரசு சாதிக்க முடியாவிட்டாலும் முயற்சிப்பதே வரவேற்க வேண்டியது தான் ! பிச்சைக்காரர்களில் பலர் வாய்ப்பு இருந்தும் வேலை செய்யாமல் சோம்பேறிகளாய் இருக்கின்றனர் !
    நீங்கள் சொல்வது போல் அயல் நாட்டிலும் பிச்சைக்காரர்கள் உள்ளனர் ! ஆனால் பாட்டு பாடியோ,நடனம் ஆடியோ,இசை கருவிகளை உபயோகித்தே பிச்சை கேட்கின்றனர் ! பிச்சைக்காரர்களில் அவர்கள் மேலானவர்கள் என்று சொல்லவில்லை ...ஆனால் நம்ம ஊரில் எரிச்சல் மூட்டும் வகையில் ...வேலை தருகிறேன் வருவாயா என்று கேட்டாலும் தொடர்ந்து பிச்சை எடுப்பதையே விரும்புகின்றனர் ! பாவம் வயதான பெரியவர் என்று பிச்சை போட்டால் டாஸ்மாக்இல் பத்து நிமிடத்தில் இருக்கிறார் ! ஆகவே ,அரசு என்ன செய்ய போகின்றது என்று கவனித்து பின் இதை பற்றி விவாதிக்கலாம் போராடலாம் இத்யாதி இத்யாதி...

    ReplyDelete
  4. தனுசுராசி, ராம்ஜி, Bizaree கருத்துக்கு நன்றி. இரவு வந்து பதில் தருகிறேன்.

    ReplyDelete
  5. அரசின் தற்போதய திட்டம் பிச்சைக்காரர்களை 'மறுவாழ்வு' அளிப்பதோ, பிச்சைக்காரர்கள் இல்லாத சமூகத்தை உருவாக்குவதோ அல்ல. அப்படி ஒரு நோக்கில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளே வேறு. அவர்கள் செய்வது பிச்சைக்காரர்களை அப்புறப்படுத்துவது. சரியாக சொன்னால் பிச்சைக்காரர்களுக்கு இருக்கும் சுதந்திரங்களுக்கும் தளையிடுவது. நகருக்கு வெளியே கொண்டு விடுவதை வேறு எப்படி புரிந்து கொள்வது. இப்போதிருக்கும் நிலையில் பிச்சைக்காரர்கள் இல்லாத நிலைவரும் சமுதாயத்தை உருவாக்கும் நடவடிக்கை எதிலும் அரசால் இறங்க முடியாது.

    பிச்சைக்கார மாஃபியா குறித்து எழுதியுள்ளேன். அது குறித்து எந்த நடவடிக்கையிலும் அரசு இறங்கும் என்று தோன்றவில்லை. பிச்சைக்கார மாஃபியா இருப்பது அனவருக்கும் தெரிந்த ஒன்று. ஒரு உதாரணாமக CRY போன்ற தன்னாரவ நிறுவன ஊழியர்களுடன் பேசி பார்கலாம். இந்த மாஃபியாக்களிடம் இருந்து தப்பியவர்களுக்கு, மறுவாழ்வு அளிப்பது போன்ற செய்லகளில் ஈடுபடுவதற்கு CRYயின் செயல்பாடுகள் குறித்து அவர்களுடன் பேசியுள்ளேன். தொடர்ந்து அவர்கள் செய்ய வேண்டியது மறுவாழ்வு அளிப்பது அல்ல, இந்த மாஃபியா குறித்து எழுதுவதும், உண்மைகளை வெளிகொணர்வதும், அமைப்புரீதியாக போரடுவதும் போன்ற ஆபத்தான வேலைகளை செய்ய வேண்டும் என்று அவர்களுடன் பலமுறை பேசியுள்ளேன். அவர்களுக்கு ஆர்வம் இல்லை என்பது மட்டுமல்ல, அவர்களது இருப்பிற்கே இது போன்ற மாஃபியாவும், தப்பிப்பவர்களின் மறுவாழ்வும் தேவைப்படுவதாக எனக்கு தோன்றுகிறது. கடந்த ஒரு வருடமாக அவர்களுக்கு காசு அனுப்புவதைவதும் நிறுத்தியுள்ளேன். ஆகையால் நான் அறிந்த வகையில் இந்த மாஃபியாவை ஒழிபது ஊழலை நம் நாட்டில் ஒழிப்பது போன்று சிக்கலானது ஆகும்.


    மேலே எழுதியுள்ளது விரிவான பதிவு அல்ல. வெளிவந்த அறிக்கையை முன்வைத்து என் சுருக்கமான எதிர்பலிப்பு மட்டுமே.

    ReplyDelete
  6. நீங்கள் சொல்வது புரிகிறது. பிச்சைக் காரர்களில் இருந்து கிடைக்கும் மாமூல் நின்று விடும் என்ற தடை இந்த நோக்கம் நிறைவேற தடுக்கிறது போல.

    சரி மேயருக்கோ, கட்சிக்கோ இந்த திட்ட அறிவிப்பால் என்ன நன்மை என கருதுகிறீர்கள்.

    இந்த திட்ட அறிவிப்பு, வாக்குகளை அதிகரிக்கும் என தோன்ற வில்லை எனக்கு. இரட்டை இலைக்கோ, முரசு சின்னதிற்கோ வாக்கு அளிக்க எண்ணி இருந்த எந்த ஒரு வாக்காளரும் இந்த திட்ட அறிவிப்பால் , விளம்பரத்தால் உதய சூரியனுக்கு தனது வாக்கை மாற்றுவாரா?

    கட்சிக்குள்ளும் மேயருக்கு, இந்த அறிவிப்பால் புதிய பதவியோ, இடமோ, பணமோ கிடைக்கும் என யூகிக்க முடிய வில்லை.
    உலக வங்கி, ஜப்பான் வங்கிகளை திருப்தி படுத்த எடுத்த விளம்பரமும் இது இல்லை என நினைக்கிறேன்.
    இந்த திட்டத்திற்கு அறுநூறு கோடிகள் செலவு செய்தோம் என்று கூறி அந்த பணத்தை எடுக்க வேண்டிய அவசியம் இல்லை, ஸ்பெக்ட்ரம் ஒன்றே போதும் . ஸ்பெக்ட்ரம் இந்த மாதிரி திட்டங்களை விட நூறு மடங்கு பெரிய திட்டம்.
    '

    ReplyDelete
  7. ஒரு பக்கம் இந்த நகர வாழ்வின் ஒரு பகுதியும் விளை பொருளும்தான் பிச்சைக்காரர்களும், சேரிகளும் -குறிப்பாக நமது இந்திய சமுதாயத்தில். ஆனால் பிச்சைக்காரர்களின் இருப்பு சமூகத்தின் பலருக்கும். நகரின் அழகியலுக்கும் நெருடலாக இருக்கிறது. மேயரும் ஸ்டாலினும் ரொம்ப நாட்களாக சிங்கார் எழில் மிகு சென்னை பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள். சென்னையை 'நவீன'மாக்கும் திட்டத்தின் ஒரு பகுதிதான் பிச்சைக்காரர்களை அப்புறப்படுத்துவது. இதில் ஊழல் இருக்கலாம், ஆனால் ஊழலுக்காகவே இதை துவங்கியுள்ளதாக சொல்லமுடியது. அதாவது பாலங்கள், OMR போல , இன்னொரு பக்கம் இந்த அப்புறப்படுத்துதல்.

    ReplyDelete