Monday, April 19, 2010

இறுதியாக சில.

நடந்து முடிந்த கருத்து சுதந்திர பிரச்சனை, கண்டனம், கலாட்டா குறித்து எனக்கு மிக சிக்கலான முறையில் பலர் மீதும் பலவகையான விமர்சன கருத்துக்கள் இருந்தாலும், இதையெல்லாம் வேலை மெனக்கிட்டு பதிவு செய்யவேண்டியது முக்கியமாக தோன்றவில்லை. சில முடிச்சுகளை மட்டும் இங்கே பதிகிறேன்.

அதற்கு முன் சம்பிரதாயமாக சில. லீனாவின் கவிதை எந்த வித தகுதியும் இல்லாமல் ஒரு அதிகப்படியான முக்கியத்துவத்தையும் விளம்பரத்தையும் அடைந்துள்ளது. இப்போதாவது நேரடியாக சொல்வதென்றால் கவிதை என்ற அளவில் அதை ஒரு குப்பையாகவே கருதுகிறேன். மீண்டும் சொல்கிறேன், ஆபாசம் என்ற பார்வையில் அல்ல. பா.விஜயின் கவிதையை குப்பை என்று ஏன் சொல்வேனோ அதை ஒத்த காரணங்களால் சொல்கிறேன். அதை உலக கலக ரேஞ்சுக்கு இட்டு சென்றதில் வினவு குழுவினரின் பங்கு மறுக்கவியலாதது. அதே நேரம் வினவில் வெளிபட்ட ஆணாதிக்க எதிர்வினைகள், பெண் என்பதாலேயே அவர்கள் இன்னமும் காட்டும் பிடிவாதம், அடிக்கவும் தயாராக இருந்ததை வெளிப்படையாக ஒப்புக்கொள்வது, சமூக மதிப்பிடுகளை இந்துத்வ இயக்கங்களை போலவே இவர்களும் பயன்படுத்துவது, தர்க்கப்படுத்துவது ... இவை அனைத்தையும் எதிர்க்கிறேன். அவர்களிடம் ஏதோ ஒரு நேர்மை வெளிப்படுவதாக கருதி கூட ஆதரிக்க முடியாது. அந்த நேர்மையை நான் இன்னமும் ஆபத்தானதாக கருதுகிறேன் -போல்பாட்டிடம் வெளிபட்ட நேர்மையை போன்றது. இதைவிட நான் ஹிபாக்கரசியையே மேலானதாக கருதுவேன்.

நாகம்மையை 'தேவிடியா' என்று காங்கிரஸ் தெருவில் எழுதியதை பெரியார் எதிர்கொண்டது போல எதிர்கொள்ள வேண்டும் என்று இவர்கள் பேசுவது இருக்கும் பல அபத்த தர்க்கங்களில் ஒரு உதாரணம். சமூக மதிப்பிடுகளை ஆயுத மாக்குவதுதான் பிரச்சனையே ஒழிய, அதை எதிர்த்தாலோ எதிர்வினை செய்தாலோ, அந்த மதிப்பீடுகள் சார்ந்து செய்வதாக கொள்ள முடியாது. என்ன இருந்தாலும் பெரியாருக்கு ஆண் என்ற வசதியும் சுதந்திரமும் இருந்ததையும், அவ்வளவு எளிதில் அதை புரியாதவர்களுக்கு விளக்க முடியாது. மதிப்பிடுகள் ஆணாதிக்கமாக இருக்கும் யதார்த்தத்தில் அதை பயன்படுத்துவதும், நிராகரிப்பதுவும் இரண்டுமே ஆணுக்குதான் சாதகமானது. இன்னொரு பார்வையில் பெண்ணீயம் பேசுவதும், எதிர்ப்பதும் இரண்டுமே வேறு வேறு தளங்களில் ஆண்களுக்கு சாதகமானதே. இது பெரியாருக்கும் பொருந்தும்; எனக்கும் பொருந்தும். ஆணாதிக்க மதிப்பீடுகளை நிராகரிப்பதாலும், பெண்ணியம் பேசுவதாலும் ஆண் எதிர்கொள்ளும் தாக்குதல்கள் மிஞ்சி போனால் மனைவியை, அம்மாவை உதாரணம் காட்டுவதற்கு மேல் எதுவுமில்லை. அதை எதிர்கொள்ளும் உரம் உள்ளவர்களுக்கு அது பிரச்சனையில்லை. ஆனால் அந்த அம்மாவிற்கும், மனைவிக்கும் அது அத்தனை எளிய பிரச்சனையில்லை. இதையெல்லாம் போல்பாட்டின் பொலிடிகலி கரெக்ட்னெஸ்ஸை சுய பிரஞ்ஞையாக கொண்டவர்களிடம் விளக்க முடியாது.

இவை இப்படியிருக்க NDTV-Hindu செய்த பதிவையும், அதில் லீனாவும், அ,மாவும் அளித்த சிறு பேட்டியை மோசமான ஒன்றாக கருதுகிறேன். ஒரு ஜனநாயக அடிப்படையில் எதிர்கருத்தாக எதையும் சின்னதாக அவர்கள் பதிவு செய்யவில்லை. குறைந்த படசம் (ஹுசேன் சரஸ்வதியை நங்காவாக வரைந்தார் என்பது போல கூட அல்லாமல்) எதிர்ப்பு வந்த லீனாவின் கவிதையை பற்றி எந்த தகவலையும் தராமல் ஒருதலை பட்சமான செய்தி அது. லீனா (காரல்)மார்க்சையும், லெனினையும் metaphoricalஆக பயன்படுத்தியதாக மட்டும் விடுகிறார். மெடாஃபாரிக்கலாக பயன்படுத்தியது மார்க்ஸ் லெனினையா, யோனி, விந்து, புணர்தல் போன்றவற்றையா? தமிழ்நாட்டில் ஏதோ கலாச்சார பாசிசம் தலை விரித்தாடுவதாக சொல்வதெல்லாம் தன் கோபத்தை ஒட்டுமொத்த சமூகத்தின் மீது கொட்டும் விஷம் மட்டுமே. மற்ற இந்திய மாநிலங்களைவிட தமிழகம் இன்னமும் ஆரோக்கியமாக இருப்பதாகவே நான் கருதுகிறேன். NDTV தமிழ்நாட்டை ஒரு பாசிச பூமியாக காட்டும் நோக்கத்துடன் இந்த செய்திக்கு முக்கியத்துவம் தருவது லீனாவிற்கு பிரச்சனையாக இல்லாதது குறித்து நான் கவலைப்படவில்லை, அ.மார்க்ஸும் துணை போவதுதான் எனக்கு பிரச்சனை. இறுதிவரை ஈழப்போரில் zero civilian casualties நிகழ்ந்ததாக இந்து ஊடக கும்பல் சொல்லி வந்ததை விட அயோக்கியத்தனமும், பாசிசமும் வேறு கிடையாது. அ.மார்க்ஸ் கூட்டத்தில் செய்த பிரச்சனையை, ஈழப்பிரச்சனையில் தங்கள் கையாலாகாத்தனத்திற்கு அவர்கள் தேடிக்கொள்ளும் வடிகாலாக கூட கருதலாம். இப்படி சொல்லி அதை நியாயப்படுதவில்லை. ஆனால் அது பாசிசம் அல்ல. ஒரு பெரும் இனப்படுகொலையை நியாயப்படுத்துவதும், அதை மறுப்பதும்தான் பாசிசம். அதை விட மனிதநேயத்தில் அக்கறையுள்ளவர்கள் முக்கியமாக கொள்ளவேண்டிய விஷயம் வேறு கிடையாது.

அ.மார்க்ஸ் லயோலாவில் நடந்ததையும், கண்டன ஒன்று கூடலில் நடந்ததையும் தமிழ் சேனல் ஒன்றிலோ, அல்லது தமிழ் சூழலில் வேறு எங்கிலோ பகிர்ந்தால் நான் பிரச்சனையாக பார்க்க மாட்டேன். தமிழ்நாட்டில் யாரோ ஒரு புருசன் பொண்டாட்டியை அடிப்பதை கூட தமிழ்பாசிசமாக மாற்றும் கூட்டத்தின் பிரச்சரத்திற்கு ஒத்து ஊதியிருக்க வேண்டாம். ஒருவேளை அதுதான் அ.மார்க்சின் நோக்கம் என்றால் வேறு எதுவும் சொல்வதற்கு இல்லை.

5 comments:

  1. //...அந்த இரண்டு கவிதைகள் திரள்வதற்கு காரணமான சில சலனங்களைச் நினைவுபடுத்திப் பார்க்கிறேன்......என் தோழிகளில், 80 சதவிகிதம் பேர் தன் சொந்த குடும்பத்து ஆண்களின் பாலியல் அத்துமீறலுக்கு ஆளாகியிருக்கிறார்கள், எனக்கும் அந்த அனுபவம் உண்டு. source from http://innapira.blogspot.com/2010/04/blog-post_20.html//

    லீணாவின் இந்தக் கருத்து பற்றி ஐயன்மீர் தங்களது கருத்தை அறிய ஆவல்.

    ReplyDelete
  2. ஐயா தாங்கள்தான் அ.மார்க்சு மைக் முன் நிற்கையில் பின்னால் வந்து ஒளிந்து கொண்டு குரல் கொடுத்தவர் என்பதை அறிந்து கொண்டேன். இது என்ன விழுமியம் அல்லது சமூக மதிப்பீடு அய்யா...

    பெண் என்பதற்காக வினவு பிடிவாதம் காட்டுவதாக சொலவது அபத்தம். அதற்கான வெளியை கேடாக ஜெயா போல கவிதாயிணிதான பயன்படுத்துகிறார். பெண் என்பதால்தான் அடிக்காமல் வந்தார்கள் என நினைக்கிறேன். சமூக மதிப்பீட்டை நம்பிக்கையுடன் குழப்பும் தங்களது அறிவாளி மோசடித்தனம் பற்றி ஐயன்மீர் என்ன கருதுகிறீர். இப்போ அப்படி இந்துத்வா இயக்கமும் ஒரு மா லெ இயக்கமும் ஒரே மதிப்பீட்டை தங்களது கொள்கைக்காக பயன்படுத்தினால் இருவரும் ஒன்றா... இந்து மத வெறியனும், ஒரு இலக்கியவாதி ரோசா வசந்தும் கால் கழுவ தண்ணீரை பயன்படுத்துவதால் இருவரும் ஒன்று என்பது பொல உள்ளது இந்த சொத்தை வாதம்.

    நேர்மையை விட கிப்போகிரசி எப்படி சரியானது என தர்க்கரீதியாக நிறுவுவதுத்தானே ஒரு கணிதப் பேராசிரியரின் சரியான வேலை தாங்கள் எ ஏன் மெட்டா பிசிக்ஸ் பிரியர் அ. மார்க்சு போலவே சிந்திக்கின்றீர்கள்

    நாகம்மை விசயம் தொடர்பான தங்களது பாராவில் நீங்கள் ஒரு ஆணின் எளிய கருணைக்கு கீழ் ஒரு பெண்ணியவாதியின் தார்மீக நிலைப்பாட்டை வரையறுக்கிறீர்கள். உங்களால் பெரியாரைக் கூட புரிந்து கொள்ள முடியாது. இது பொலிட்டிக்கல் கரக்ட்னெசை விட இண்டிவஜிவல் கரக்ட்னசில் கானிசியசாக உள்ளவர்களுக்குதான் புரிய வரும்.

    ReplyDelete
  3. இரண்டு விஷயங்கள் மட்டும்

    1. எதற்காக அ.மார்க்சின் பின்னால் நின்று நான் குரல் கொடுக்க வேண்டும்? எதிராளியின் அம்புகளை அ.மார்க்ஸ் பெற்று கொண்டு என்னை காப்பாற்ற போகிறாரா?

    தமாசாக கருதிய கூட்டத்தை வேடிக்கை பார்க்கவே நான் அங்கு வந்தேன். மகஇகவினர் பிரச்சனையை கிளப்பிய துவக்கத்திலும் வேடிக்கை மட்டுமே பார்த்தேன். பின் ஒரு கட்டத்தில் எல்லோரும் சமாதானம் பேசியது போல் ' 'கூட்டத்தை நடத்த விடுவதுதானே நியாயம்?' என்ற வகையில் நானும் சிலரிடம் பேசினேன். 'எனக்கும் கவிதை குறித்த விமர்சனம் இருக்கிறது' என்று ஒருவரிடம் சொன்னேன். 'இதே போல ஒரு RSS நடத்தும் கூட்டத்தில் பிரச்சனை செய்ய முடியுமா?' என்று ஒருவரிடம் கேட்டேன். ('முடியும், பிரச்சனை செய்திருக்கிறோம்' என்றார் ஒரு தோழர். நான் அதை நம்புவதாக சொன்னேன்.) இவைகள் குழப்பமாக நடந்த விஷயங்கள். இதற்கு பின்னால் முன் யோசனை எதுவும் கிடையாது. பின்னர் பிரச்சனை க்ளைமாக்ஸ் கட்டத்தை அடைந்த போது மகஇகவினர் செய்வது அராஜகம் என்ற நிலைபாட்டை நான் அடைந்தேன். அதற்கு எதிர்ப்பை தெரிவிக்கும் நிலையில்தான் இருந்தேன். மகஇகவினர் கோஷம் போடுவதற்கு எதிர்நடவடிக்கையாக மற்றவர்களுடன் நானும் கோஷம் இட்டேன். மகஇகவினரை வெளியேறச்சொல்லி கேட்ட பிறகும் வெளியேராமல் கோஷம் போட்ட நிலையில் நானும் எதிர்கோஷம் (மற்றும் கூச்சல்) இட்டவர்களுடன் கலந்து கொண்டேன். மைக்கின் முன் சென்று 'மதியாதார் தலைவாசல் மிதியாதே' என்று நான் சொன்னது அந்த கூச்சலில் யாருக்கும் கேட்டிருக்க வாய்ப்பில்லை. அதை ஏதோ அ.மார்க்சின் முதுகுக்கு பின்னால் மறைந்து நான் செய்ததாக தோழருக்கு தோன்றினால் நான் சொல்ல எதுவுமில்லை. அப்படி யார் பார்வையிலிருந்தும் மறைந்து கொள்ள அவசியம் இல்லை; அது சாத்தியமும் இல்லை. முதுகுக்கு பின்னால் சொன்னதாக சொன்னதை, யாருக்கும் சரியாக கேட்டிருக்க வாய்பில்லாததை, நேரடியாக இங்கே பதிவும் செய்கிறேன்.

    2. மகஇகவும் இந்து மக்கள் கட்சியும் ஒன்று என்ற கருத்தின் அடைப்படையில் அந்த பதிவு எழுதப்படவில்லை. இரண்டையும் ஒப்பிடுவதும் பதிவின் நோக்கம் அல்ல. இதை ஒரு சிறு விளக்கமாக பின்னூட்டத்தில் எழுதினேன். 'வீட்டிற்கு வருவோம்' என்று மிரட்டல் விடுத்துள்ள நிலையில், அதற்கு பயந்து அந்த பின்னூட்டம் எழுதப்பட்டதான தோற்றம் இருந்ததாலும், பகடி ஒன்றிற்கு விளக்கம் தருவது அபத்தமாக தோன்றியதாலும் அந்த பின்னூட்டத்தை நீக்கிவிட்டேன். மற்றபடி அந்த பதிவு யாரை பகடி செய்கிறது என்று கூட (கடைசி இரண்டு பாராக்களை படித்து) புரியாதவர்களுக்கு விளக்கம் தருவது வீண்.

    ?யின் மற்ற கேள்விகளுக்கு விளக்கம் தர தேவை என்று நான் நினைக்கவில்லை.

    ReplyDelete
  4. மதியாதார் தலைவாசல் மிதியாதே என்று சொன்னசொல்லுக்கு எதாவது அர்த்தம் இருக்கிறதா... கூட்டம் போடுகிறீர்கள். இமக கொடுத்த புகார் உங்களது ஜனநாயக உரிமையை பறிக்கிறதா... சரி வெளிப்படுத்உவதற்கான உரிமையை தடுக்கிறது என்று கூட வைத்துக் கொள்வோம். இணையத்தில் கலாச்சார அடிப்படைவாதிகள் வந்து விமர்சனம் செய்வதை அல்லது உங்களது மொழியில் அவதூறு செய்வதை எதிர்த்தும்தானே கூட்டம் நடந்த்து. அப்படியானால் இணைய சுதந்திரம் இருக்க கூடாது என்பதற்காகத்தானே அந்த கூட்டம். ஜனநாயகத்தின் பெயரால் ஜனநாயக உரிமைக்கு எதிராகத்தானே கூட்டம் கூட்டப்பட்டது. இணையத்தில் நானும் பின்னூட்டம் என்ற பெயரில் எனது விமர்சனங்களை வைப்பவன். எனது ஜனநாயக உரிமையை தடுக்கவும்தானே இந்தக் கூட்டம் நடக்கிறது. அப்புறம் இத எதிர்ப்பதுதானே எனது ஜனநாயகத்தை காப்பதற்கான வழிமுறை. இந்த தங்களது வாக்கியத்திற்காக தங்களை நேரில் சந்திக்கலாம் எனக்கருதுகிறேன். நீங்கள் வேலை பார்க்கும் கல்வி நிறுவனத்திற்கு நேரில் வரவும் விவாதிக்கவும் விருப்பம். உங்களது ஜனநாயக உரிமைப்படி முடிவெடுங்கள். இதில் நீங்கள்மறுத்தால் நான் மதியாதார் தலைவாசில் மிதிக்க மாட்டேன். இதில் பேசப் போவது எனது உரிமைப் பறிப்பு ஃக்காக இருக்காதுதேனே•.

    அ.மா பேசிய போது இதனை ம•க•இ.க கார்ர்கள் வந்து இருக்கிறார்கள் என்பதற்காக பயந்து குறிப்பிடாமல் இருந்தாரே. உங்களுக்கு ஏன் இப்படி பச்சோந்திதனமாகவும் கோழையாகவும் செயல்படும் கூட்டத் தலைவர் மேல் கோபம் வரவில்லை.

    அப்புறம் நான் வேறு பதிவுக்கு இங்கு விமர்சனம் எதுவும் எழுதவில்லை என்பதையும் இங்கு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
    ப‌கடியா அல்லுத பன்முக பார்வையின்மையா என்பதற்கு அடுத்த கூட்டங்களில் நேரில் சந்திக்கையில் பேசலாம்.

    ReplyDelete