Wednesday, August 24, 2011

ஊழலும், சுரண்டலும்.

ஜெமோ அருந்ததியின் கட்டுரை முன்னிலைப்படுத்தும் கேள்விகளை கண்டுகொள்ளவில்லை, அல்லது உள்வாங்கவில்லை என்பது மட்டுமல்ல; அதை திரித்து, அவதூறு மூலம் வெறுப்பை மட்டும் வெளிப்படுத்தி எதிர்கொண்டார். 'எதுவுமே உருப்படியான கேள்வி இல்லை' என்று ஜெமோ சொல்வது, அவரது வசதியும், அணிந்திருக்கும் கண்ணாடியையும் சார்ந்து அமைகிறது. 'பதில் சொல்லிவிட்டார்கள்' என்று ஜெமோ சுட்டி அளிக்கும் கட்டுரை, ஜெமோ வெறுக்கும் போலமிக்ஸ் பற்றி பேசுகிறதே ஒழிய, அருந்ததி முன்வைக்கும் முக்கிய கேள்வி பற்றி அல்ல.

அருந்ததி அன்னாவை அவதூறு செய்யவில்லை; மாறாக ஜெயமோகன்தான் ஊகங்கள், கற்பனைகள், வசைகள் அடிப்படையில் அருந்ததியை அவதூறு செய்கிறார். அருந்ததி அன்னாவை பற்றிய எழுதியவைகள் அவரது அரசியல் நிலைபாடு, அதிகாரம்/ஊழல் குறித்த புரிதலை முன்வைத்தது மட்டுமே

ஒரு உதாரணமாக 'Who is this Anna?' என்று அருந்ததி கேட்ட கேள்வியை ஜெமோ பெரிதுபடுத்துகிறார். அருந்ததியின் கேள்வி அன்னாவின் அதற்கு முந்தய வாழ்க்கை, தகுதி அனுபவம் பற்றிய கேள்வி அல்ல என்பதை தொடரும் வரிகளை வைத்து ஒருவர் புரியமுடியும். ஜெமோ அவ்வாறு அதை வசதியாக எடுத்து ' நீ யார்' என்று திருப்பி கோபமாக கேள்வி கேட்டு அடிக்கிறார். அருந்ததியின் 'அன்னா யார்?' என்ற கேள்வி, அன்னாவின் அரசியல் நிலைபாடு, அதுவரை அன்னா வெளிப்படுத்திய கருத்துக்கள் பற்றிய‌ கேள்வி; நாட்டின் தலைபோகும் பிரச்சனைகள் குறித்த அன்னாவின் நிலைபாடு பற்றியது.

ஒரு உதாரணம் எடுக்கலாம். மோடியின் அரசை முன்னுதாரணமாக சொல்பவர் காந்தியவாதியாக எப்படி இருக்க முடியும்? எந்த மாதிரி முன்மாதிரியை அவர் தன் சட்டகத்தில் கொண்டுள்ளார்? 2001இல் இஸ்லாமியர் மீது நடந்த தாக்குதலில் மோடியின் பங்கு குறித்து பேசவே வேண்டாம்; அதை பொதுபுத்தியில் பதிலீடு செய்யும் விதமாக, மோடியை குறியீடாக காட்டும் டெவலப்மெண்ட் அரசிலுக்கும் காந்தியத்திற்கும் என்ன தொடர்பு? நர்மதா பிரச்சனை குறித்து அன்னாவின் நிலைபாடு என்ன? அணு ஆயுதம், 'வல்லரசு இந்தியா' இதை பற்றிய கருத்து என்ன? ஊழலை எதிர்க்க காந்திய வழியில் மென்முறை போராட்டம் ஒன்றை கையிலெடுத்ததால் மட்டும் அன்னா காந்தியவாதியா என்பதுதான் கேள்வி. அருந்ததி எழுப்பிய கேள்விகள் (ராஜன்குறை சொல்வதுபோல) அதிகாரம் மையம் கொள்வது, முதலீட்டிய சுரண்டல், மற்றும் இந்துத்வ எதிர்ப்பு, இட‌ஒதுக்கீட்டிற்கு ஆதரவான அரசியல் இவற்றுடன் தொடர்பு கொண்டது.

ஜெயமோகன் புரிந்து கொள்ளாவிட்டாலும் மற்றவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். நடுத்தர வர்க்கத்தின் போராட்டமாக இது இருப்பது அல்ல பிரச்சனை. பொதுவான நடுத்தர வர்க்க அரசியலை -உதாரண‌மாக இட ஒதுகீட்டிற்கு எதிரான அரசியலை கொண்டிருக்கும் ஒரு பெரும்பான்மை மக்கள், திடீரென சமுக பிரஞ்ஞை கொண்டு குதித்துள்ள போராட்டத்தை, எதிர் அரசியல் என்பதாக பேசிக்கொண்டிருக்கும் யாரும் விமர்சனமின்றி ஆதரிக்க முடியாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஒரு விவாதம் வளர்வதற்காவது பல தரப்பட்ட விமர்சனங்களும், கருத்துரீதியான எதிர்தாக்குதல்களும் தேவை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

எவ்வளவு கச்சாவாக இருந்தாலும், வினவு போன்ற‌வர்கள் கேட்கும் கேள்விகளும் அபத்தமானது இல்லை; ஆதிவாசி நிலங்களின் வளங்களை, அங்கீகரிக்கப்பட்ட வழிகளின் மூலம் சுரண்டும் கார்பரேட் சுரண்டல் பரவாயில்லை, அதற்கு ஒரு அரசியல்வாதி லஞ்சம் வாங்குவதுதான் பிரச்சனை என்று நினைக்கும் நடுத்தர வர்க்க பொதுப்புத்தியை விமர்சிக்காமல், இந்த 'மக்கள் இயக்கத்தை' ஆதரிப்பது, கார்ப்பரேட் சுரண்டலை பேசிவரும் பலருக்கு சாத்தியமில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

அன்னாவை எதிர்ப்பவர்களில் பலர் மட்டும் அவதூறும் வசையும் பேசுவதாக சொல்ல முடியாது (அதுவும் உண்மைதான் எனினும்). அருந்ததியை வசைபாடி (ஜெயமோகன் உட்பட) இணையத்தில் எழுதப்பட்டுள்ளவைகளையும் பார்க்க வேண்டும். அதில் மிகச் சில அறிவு பூர்வமான அணுகல் கொண்டவை; பல வெறும் வசை குப்பைகள். ஆகையால் ஏதோ வசைக்கு ஒரு அணி மட்டும் உரிமை கொண்டாடுவதாக சித்தரிக்கக் கூடாது.

ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் நான் அன்னாவை மூர்க்கமாக எதிர்க்கவில்லை. குறைந்த பட்சம் தீவிரமான எதிர்ப்பை காட்ட வேண்டிய ஆபத்தான பரிமாணம் எனக்கு பிடிபடவில்லை. ஆனால் அன்னாவிற்கு ஆதரவாக பேசுவதென்பதில் பல பிரச்சனைகள் இருக்கிறது. ஊழல் மிக தீவிரமான பிரச்சனைதான் எனினும், என்னைப்போன்றவர்களின் ஊழல் பற்றிய புரிதலும், அரசியல் கரிசனங்களும் வேறு. ஊழலை அரசியல்வாதிகள், அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பிரச்சனையாக மட்டும் பார்க்க முடியாது; ஊழலை மற்ற பிரச்சனைகளிடம் இருந்து வேறு படுத்தியும் பார்க்க முடியாது.

நான் அருந்ததியின் ரசிகனோ ஆதரவாளனோ அல்ல; அவரை எதிர்த்து வருபவன். அவர் மீதான ஓர்மைசார் நம்பிக்கையும், அறிவுசார் மதிப்பும் கலைந்து போய்விட்டதை ட்விட்டரில் பதிவு செய்துள்ளேன். நாம் எழுத முடியாத இடத்தில், நாம் எழுப்ப விரும்புவதை ஒரு செலிபிரிடியாக அவர் எழுதுவதால், அவருக்கு ஆதரவாக எழுத வேன்டியுள்ளது. இவை இப்போதைக்கான கருத்துக்கள், இதை மேலே எடுத்துச் செல்ல முடியுமா என்று பார்க்கலாம்.

Friday, August 19, 2011

அரசியல் தூய்மையும், அரசியல் செயல்பாடும், உரையாடலும்.

ஃபேஸ் புக்கில் ஷோபாசக்தி எழுதிய பதிவை தொடர்ந்து, நடந்த குறுவிவாத்தை (நண்பர் அனாதை கேட்டுக் கொண்டதாலும், ராஜன்குறையின் இந்த‌ கருத்துக்களை தற்போதய தமிழ் சூழலில் மிக முக்கியமான ஒன்றாக நான் கருதுவதாலும்) இங்கே பதிவு செய்கிறேன்.

'அரசியல் நேர்' என்பதன் பிரச்சனைகள் குறித்து, என்னளவில் அமச்சூர் பாணியில், தொடர்ந்து ட்விட்டரிலும், சில பதிவுகளிலும் எழுதியுள்ளேன். ரவிகுமாரும், வேறு சில தலித்தியவாதிகளும் முன்வைக்கும் அரசியல் தூய்மைவாதம் குறித்து 2006 தேர்தலின் போது எழுதியிருந்தேன். ரவிக்குமார் தேர்தல் அரசியலில் ஈடுபடுவதன் மூலம் அவரது அரசியல் தூய்மைவாதம் மாசுபடும், அது மிக வரவேற்கத்தக்கது என்று எழுதியிருந்தேன். பெரியார் சிலை உடைக்கப்பட்ட போது ரவிக்குமார் கிளர்ந்து கைதானதை, அவரின் அரசியல் தூய்மைவாதம் மாசடைந்ததன்முக்கிய குறியீட்டு உதாரணமாக சொல்லலாம். நான் கணித்த‌தை விட எதிர்வேகத்தில் ரவிக்குமார் பயணித்தார் என்பது வேறு விஷயம்.
அன்று ரவிக்குமார் பாணியில் பேசிக்கொண்டிருந்த (உதாரணம் சாக்யா மோகன்) இன்னமும் தங்கள் அரசியல் தூய்மைவாதத்தை தொடர்வதை காணலாம்.

இந்த பிரச்சனைகளை நன்கு அறிந்த ராஜன்குறை, எந்த விமரசனத்தையும் பல சந்தர்ப்பங்களில் முன்வைக்காததே அவர் மீதான விமர்சனமாக எனக்கு இருந்தது; ட்விட்டரில் ஒருமுறை குறிப்பிட்டிருந்தேன். இப்போது அவர் வெளிப்படையாக, ஷோபாசக்தியை விமர்சித்திருப்பதை நல்ல துவக்கமாக பார்க்கிறேன். அவர் இன்னும் வெளிப்படையாக சில விமர்சனங்களை முன்வைக்க தேவை இருக்கிற‌து என்பது என் அபிப்பிராயம். குறிப்பாக அ.மார்க்ஸ் குறித்த முக்கிய விமர்சனங்களை, காலத்தேவையான பொறுப்புணர்வு கலந்து ராஜன்குறையால் முன்வைக்க முடியும் என்று நம்புகிறேன்.

அரசியல் நேர், அரசியல் தூய்மைவாதம் இவற்றை எதிர்ப்பதையே, ஒரு தூய்மைவாதமாக ஜெயமோகனைப் போல (அதுவும் சந்த்ர்ப்பத்திற்கு ஏற்ப) முன்னிறுத்த இயலும் என்கிற எச்சரிக்கையுடன் இந்த முன் குறிப்பை முடிக்கிறேன்.


சோபாசக்தியின் பதிவு: பேரறிவாளனுக்கு உறுதிப்படுத்தப்பட்ட மரணதண்டனையைக் கடுமையாக எதிர்க்கிறேன். 'குற்றத்தைவிட அதற்கு வழங்கும் தண்டனையே வெறுக்கத்தக்கது' என்பார் காம்யூ. பேரறிவாளனுக்கு உறுதி செய்யப்பட்ட மரணதண்டனை மட்டுமல்லாமல் அல்பிரட் துரையப்பா முதற்கொண்டு அமிர்தலிங்கம் ,பத்மநாபா, சிறீ சபாரத்தினம், சரோஜினி, சபாலிங்கம் ,கேதீஸ், சின்னபாலா, ராஜினி திரணகம, செல்வி ,விமலேஸ், தில்லை, புதியதோர் உலகம் கோவிந்தன், மாத்தையா, முள்ளிவாய்காலிலிருந்து தப்பிக்க முயன்ற பொதுமக்கள் வரைக்கும் வழங்கப்பட்ட மரணதண்டனைகள் குறித்தும் சிந்திக்க வேண்டிய தருணமிது. அப்போதுதான் 'மரண தண்டனை எதிர்ப்பு 'என்ற குரலுக்கு நேர்மையான பொருளிருக்கும். புலிகளால் வழங்கப்பட்ட ஆயிரக்கணக்கான மரண தண்டனைகளை எதிர்த்து ஒரு சொல்லும் பேசாத பேஸ்புக், ட்விட்டர் கருத்துப் போராளிகள் சற்றே சிந்திக்க தண்டனிட்டு வேண்டுகிறேன்.


Prakash Venkatesan: உட்பொருளில் உடன்பாடுண்டு. ஆனால் மரண தண்டனை=கொலை சமன்பாடு ஏற்புடையதல்ல. கொலையை சட்டப்பூர்வமாக ஆக்குவதில் உள்ள ஆபத்துகள் பற்றிய விவாதமும்/ மனித உரிமை மீரல்களுக்கு எதிரான விவாதமும் ஒன்றென்று எனக்கு தோன்றவில்லை.

Shoba Sakthi ‎@prakash venkatesan,தமிழீழ ஒறுப்புச் சட்டம், தமிழீழ நீதிமன்றம், தமிழீழ காவற்துறை,தமிழீழ சிறை எல்லாம் அப்போ என்னவாம்? அவையெல்லாம் வெறும் கொலை நிறுவனங்கள் என்றே 'நீங்களும்' கருதுகிறீர்களா?

Prakash Venkatesan: ”நீங்கள்” தமிழீழத்தை நாடாக ஒப்புக்கொள்ளும் வகையில் நானும் இப்படி கருதிவிட்டுப்போகிறேன்.

இலங்கையை நாடாக கருதுகிறீர்கள் என்றே நினைக்கிறேன். அங்கே இரானுவம் செய்த கொலைகளும் மரண தண்டனைகளல்ல, கொலைகள். துரையப்பா தமிழீழ காவற்துறையினரால் கைது செய்ப்பட்டு தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டவரா?

ஜனநாயக நாட்டில், உலகநாடுகளில் எந்த நாட்டின் சாசனத்துக்கும் குறைவில்லாத நாட்டில், சட்டப்படி கொலையை தண்டனையாக அனுமதிப்பது ஏற்கவியலாதது. ஆகவே மரண தண்டனை என்ற ஒன்றே நீக்கப்படவேண்டியது.

போர் சூழலில் செய்யப்பட்ட கொலைகள், மரண தண்டனைகள் அல்ல (அவற்றை நான் ஞாயப்படுத்தவில்லை, சமனான விஷயத்தை நீங்கள் பேசவில்லை என்கிறேன்)


Shoba Sakthi: ‎//ஜனநாயக நாட்டில், உலகநாடுகளில் எந்த நாட்டின் சாசனத்துக்கும் குறைவில்லாத நாட்டில், சட்டப்படி கொலையை தண்டனையாக அனுமதிப்பது ஏற்கவியலாதது// அப்படியானால் புலிகளின் சிவில் நிர்வாகம் நிலவிய தமிழீழப் பகுதியை சனநாயகமற்ற நிலப்பரப்பு எனக் கொள்ளலாமா? தயவு செய்து உங்களோடு மல்லுக்கு நிற்கிறேன் எனக் கருதாதீர்கள்.உங்களது பாயின்டுகளை தெளிவான அறிந்து கொண்டு விரிவாக கருத்தெழுத விரும்புகிறேன். அவ்வளவே.

Shoba Sakthi: ‎//துரையப்பா தமிழீழ காவற்துறையினரால் கைது செய்ப்பட்டு தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டவரா? //இல்லை! ஆனால் தமிழீழ காவற்துறையால் கைது செய்யப்பட்டு நாயிலும் கீழாக வதைக்கப்பட்டு தமிழீழ நீதிமன்றில் நிறுத்தப்பட்டு மரண தண்டனை ( புலிகளின் சட்டச் சொல்லில் சாவொறுப்பு) வழங்கப்பட்டு ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்

Prakash Venkatesan: நீங்கள் மல்லுக்கு நிற்கிறீர்களாத்தெரியாது, ஆனால் நீங்கள் சொல்லியதை அதனளவில் நான் ஏற்றப்பின்னும் நான் சொல்வதை கணக்கிலேயே எடுத்துக்கொள்ளாமல் கடந்து செல்கிறீர்கள்.

”கொலையின் சட்ட ரீதியான அங்கீகாரம் ஆபத்தானது”, அது புலிகள் நிறைவேற்றினாலும் தான். மற்றபடி, “நிலபரப்பில் ஜனநாயகம்” எல்லாம் சுவாரசியமானது. காஷ்மீரிலே, நந்திக்ராமிலே, இப்பொழுது அளவெட்டியிலே பூத்துக்குலுங்குவது கூட ஜனநாயகமல்ல, அது விவாதப்பொருளென்றும் தோன்றவில்லை.

Institutionalizing murder என்பதே என்னளவில் மாற்றப்பட வேண்டிய ஒன்று. அதற்கான முயற்ச்சிகளை மாற்றுக்கருத்துடையோரும் இணைந்து எடுக்கவேண்டும்.

Shoba Sakthi: ராமன் எத்தனை ராமனடி என்பதுபோல கொலையில் எத்தனை வகை என விவாதிப்பது துயரமே. கொலை எனில் கொலைதான். ஒரு அரசு வழங்கும் மரணதண்டனையைவிட விடுதலைப் போihட்ட இயக்கம் வழங்கும் மரணதண்டனையே தார்மீகரீதியாக மோசமானது. நீதி என்பது அரசின் வன்முறை என்பது நமக்குத் தெரிந்ததுதானே. ஆனால் அதை ஒரு போராட்ட அமைப்புச் செய்யும்போதுதான் அறவீழ்ச்சி நேரிடகிறது. தமிழீழ நீதிமன்றத்தால் கொல்லப்பட்டவர்கள் 20 பேர்கள என்பது சரிதான். ஆனால் துணுக்காய் இராணுவ நீதிமன்றத்தையும் நீங்கள் கணக்கில் எடுக்க வேண்டும். நீதி வழங்கப்படும் இடமென்வோ வேறுவேயாயிருக்கலாம்.. ஆனால் நீதிதேவனாக சூரியதேவன் தானேயிருந்தார்!

Rajan Kurai Krishnan: ஷோபா சக்தி மரண தண்டனை எதிர்ப்பின் அடிப்படைகளை கவனத்தில் கொள்ளாமல் பேசுகிறார். மக்களாட்சியில் அமைந்த ஒரு அரசு, அணைத்து மக்களின் அதாவது தேசத்தின் சார்பாக ஒருவரைக் கொல்வது மரண தண்டனை. அதனையும் ஒரு ராணுவமயமான அரசியல் இயக்கமான புலிகளின் அரசியல் கொலைகளையும் இணைத்துப் பேசிக் குழப்புவது தவறு. இந்திய மரண தண்டனை எதிர்ப்புப் போராளிகள் பேரறிவாளனுக்கு வழங்கப்படும் தண்டனைக்கு எதிராக போராடுவதை இலங்கை அரசியலுடன் தொடர்புபடுத்துவது அனாவசியமானது என்று நினைக்கிறேன். பிறகு, இனிவரும் எல்லாக் காலங்களிலும் எல்லா நாடுகளிலும் எல்லா அநீதிகளையும் எதிர்ப்பவர்கள் முதலில் புலிகளை கண்டித்துவிட்டுதான் எதிர்க்கவேண்டும் என்று சொல்வதும் பொருத்தமல்ல. இலங்கையை பொறுத்தவரை வேண்டுமானால் ஷோபா அதை எதிர்பார்ப்பது அவர் பார்வையில் தேவையாயிருக்கலாம்.

Mss Pandian: Mahinda Rajapakshe would have just loved Shoba Sakthi's comment.

Shoba Sakthi: இங்கே இப்படியொரு சிறு விவாதம் நடந்திருப்பது சற்று முன்னர் பிரகாஷ் வெங்கடேசன் சொல்லித்தான் அறிந்து படித்தேன். ராஜன்குறை உங்களது கருத்துகள் எனக்கு மிகவும் ஏமாற்றத்தை அளிக்கின்றன.

வாங்க வாங்க எம். எஸ்.எஸ்.பாண்டியரே..பேஸ்புக்கில் விளையாடும் விடலைப் பயல்கள் ரேஞ்சுக்கு நீங்கள் comment செய்திருப்பது உங்களது வயதுக்கும் கல்விசார் தகமைக்கும் சற்றும் பொருத்தமில்லாமலிருப்பது வருத்தமே. எனினும் தமிழகத்தின் இரு முதன்மையான அறிவுஜீவிகளின் கருத்துகள் இதுகுறித்து சற்று விரிவாக எழுத என்னைத் தூண்டியிருக்கின்றன. விரைவில் எழுதுவேன். இடம், காலம் பார்த்து பேசவேண்டிய தேவை அரசியல்வாதிகளுக்கு வேண்டுமானால் இருக்கலாம். உண்மையைப் பேசுபவனுக்கு அது இழுக்கு. பேசுவேன்..


Shoba Sakthi: தோழர்களே! இந்தியாவில் மரணதண்டனை ஒழிப்புக்காக குரல் கொடுக்கும் நாம் முருகன், சாந்தன், பேரறிவாளன் மற்றும் அப்சல் குருவுடன் அதை நிறுத்திவிடக் கூடாது. அஜ்மல் கசாப்,தர்மபுரியில் மூன்று மணவிகளைக் எரித்த வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்டிருக்கும் நெடுஞ்செழியன், ரவீந்திரன், முனியப்பன் மற்றும் இந்திய சிறை 'கண்டங்களில்' மரணதண்டனையை எதிர்நோக்கிக் காத்திருப்பவர்கள் அனைவரையும் உள்ளடக்கி அவர்களுக்காகவும் நமது குரலை ஒலிப்போம். நாம் அனுப்பும் பெட்டிஷன்களிலும் நாம் எழுதும் கட்டுரைகளிலும் நிலைத் தகவல்களிலும் வெளியிடும் சுவரொட்டிகளிலும் துண்டுப் பிரசுரங்களிலும் இவர்கள் எல்லோரையும் குறித்து நாம் பேசியாக வேண்டிய தருணமிது. ஒரு உயிர் கூட மரணதண்டனையாலோ அல்லது அரசியற் கொலையாலோ அல்லது அழித்தொழிப்பாலோ பறிக்கப்பட கூடாது என்று கூட்டாக ஒலிப்போம்.

Rajan Kurai Krishnan: மரணதண்டனையை பற்றி மட்டும் பேச ஒருவருக்கு உரிமை இருக்கிறது. அத்துடன் அரசியற் கொலை, அழித்தொழிப்பு எல்லாவற்றையும் இணைப்பது ஷோபா சக்திக்கு தேவை என்றால் அது அவரது விருப்பம்.ஆனால் அனைவரும் அப்படி செய்யவேண்டும் என்பது வேண்டுமென்றே விஷயத்தைக் குழப்பும் செயலாக கணிக்கப்பட வாய்ப்பு உண்டு. மேலும், மரண தண்டனை யாருக்கு வழங்கப்பட்டாலும் எதிர்க்க வேண்டும் என்பது சரிதானென்றாலும், அது முற்றிலும் அநீதியாக வழங்கப்படும் தருணத்தில் (பேரறிவாளன்) அந்த எதிர்ப்பு கூர்மைப்படுவது இயல்பானதுதான். இந்த தருணத்தில் மரண தண்டனைக்கெதிராக மக்களை திரட்டுவது போல தர்மபுரி வழக்கின் தருணத்தில் செய்ய இயலாது என்பதுதான் யதார்த்தம். மேலும் பேரறிவாளன் தமிழன் என்ற காரணத்திற்காகவும் அவரது தமிழ்த்தேசிய உணர்வுக்காகவும் மட்டும் இந்திய மைய அரசால் தண்டிக்கப்படும்போது அதற்கான அரசியல் எதிர்வினை தமிழகத்தில் தமிழ்த்தேசிய உணர்வினை ஒட்டி அமையாமல் வேறெப்படி இருக்க முடியும்? அரசு மையமான தேசிய உணர்விற்கும் ஒடுக்கப்படும் மக்களின் எதிர்நிலை தேசிய உணர்விற்கும் வித்தியாசமுண்டு என்பதை ஏற்றுக்கொள்ளாமல் அரசியலை புறிந்து கொள்வது சாத்தியமல்ல. வெறும் அரசியல் சரி சூத்திரங்களை வைத்துக்கொண்டு இயங்குவது தன்னையே முற்றிலும் தூய்மையான புரட்சியாளனாக சொல்லிக்கொள்ளத்தான் உதவுமே தவிர பிர்ச்சினைகளை முன்னெடுக்க உதவாது. ஷோபா சக்தி விரிவாக எழுதினால் அதினினும் விரிவாக எழுதுவேன்

Rajan Kurai Krishnan: ஒவ்வொரு அரசியல் தருணத்தையும் அதன் தனிப்பட்ட வரலாற்று சந்தர்ப்பங்களை கணக்கில் கொண்டுதான் எதிர்கொள்ள முடியுமே தவிர பொத்தாம்பொதுவில் எல்லா ராணுவ, தற்காலிக நீதிமன்றங்கள் அனைத்தையும் எதிர்த்தால்தான் பேரறிவாளன் தீர்ப்புக்கு எதிராக பேச வேண்டும் என்றெல்லாம் கூறிக்கொண்டிருப்பது எதற்காக என்று எனக்குப் புரியவில்லை. மாநில சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்பதை ஏற்றுக்கொண்டவன் என்ற முறையில் எனக்கு தமிழுணர்வும், தமிழ் தேசிய உணர்வும் இந்திய "இறையாண்மைக்குள்" தமிழின் வித்தியாசத்தை தக்க வைத்துக்கொள்ள அவசியமானவை என்பதில் தீவிர நம்பிக்கையுண்டு. அந்த உணர்வினை தண்டிப்பதற்காக ஒருவன் தூக்கிலிடப்படுவானென்றால் அதற்காக பிறருடன் இணைந்து எதிர்ப்பைத் தெரிவிக்கத்தான் வேண்டும். அவ்வாறு செய்பவர்களிடம் பிரபாகரன், இடி அமீன், போல் பாட் எல்லோரையும் கண்டித்தீர்களா என்று கேட்பதன் அவசியம் புரியவில்லை. அவர்களையும் கண்டிப்பது அவசியம் என்று கூறுவதில் தவறில்லை. ஆனால் எல்லோரையும் குற்றவுணர்ச்சியில் ஆழ்த்திவிட்டு குறையற்ற அரசியல் ஜோதியாக பிரகாசிக்க முனைவது ரசிக்கத்தக்கதல்ல


தூவானம்: மரணதண்டனை குறித்து சில துளிகள். -
ரோஸாவசந்த்

Shoba Sakthi: ‎@Rajan Kurai Krishnan, ஏன் ராஜன் இந்தக் கொலைவெறி? புலிகளின் கொலைகளைக் கண்டித்தால்தான் பேரறிவாளனின் கொலையைக் கண்டிக்க வேண்டுமென்றெல்லாம் நான் நிபந்தனை ஏதும் விதிக்கவில்லையே. புலிகளின் கொலைகளை நியாயப்படுத்தகிகொண்டிருந்தவர்கள் அல்லது கண்டுகொள்ளாமலிருந்தவர்கள் இந்தத் தருணத்தில் அவை குறித்தும் சிந்திக்க வேண்டும் எனத்தானே சொல்லியிருக்கிறேன். சிந்திக்கச் சொல்லுவது ஒரு குற்றமா என்ன? குற்றவுணர்ச்சிக்கு யாராவது ஆட்பட்டால் அதற்கு நான் பொறுப்பாளியல்லவே. தவிரவும் குற்றவுணர்வு கொள்வதும் தன்னளவில் முன்னோக்கிய அரசியல் நகர்வுக்கு ஒரு ஊக்கியல்லவா. உங்களது கருத்துகளிற்கும் ரோஸா வசந்தின் கருத்துகளுக்கும் நன்றிகள். எனினும் உங்களிருவரது கருத்துகளோடும் எனக்கு ஒவ்வாமையே உண்டு. எம்.எஸ.எஸ். பாண்டியனின் கமென்டின் மீது கடுப்பே உண்டு.சில நாட்களில் விரிவாக எழுதுவேன்.


Shoba Sakthi: ‎@Rajan Kurai Krishnan, தமித் தேசியவாதிகள் கூட்டங்களில் "ராஜீவ் படுகொலை செய்யப்படவில்லை..அவருக்கு மரணதண்டனையே வழங்கப்பட்டது" என்றெல்லாம் பேசுவதைக் கேட்டுள்ளீர்களா? ஒரு தரப்பு அநீதிகளை ஆதரித்துக்கொண்டு இன்னொரு தரப்பு அநீதிகளை எதிர்ப்பதாகச் சொல்பவர்களிடமிருப்பது அரசியல் குயுக்தியே தவிர அறம்சார்ந்த முனைப்பல்ல என்பதில் நான் உறுதியாகவேயுள்ளேன். குறிப்பான தருணம் குறிப்பான விடயம் என்றெல்லாம் நீங்கள் சொல்வதுவும் சரியே. ஒவ்வொரு குறிப்பான தருணங்களையும் பொதுவாக இணைத்திருக்கும் கண்ணியையும் பார்க்க வேண்டுமென்கிறேன் நான். முக்கியமாக எனது நிலைத் தகவல் கிருஷ்ணய்யரையோ பாலகோபாலையோ நோக்கி எழுதப்பட்டதல்ல என்பது உங்களுக்குப் புரிந்துதானேயிருக்கும்!!!

Rajan Kurai Krishnan: ஷோபா, இப்படி சிந்திக்க முயற்சி செய்து பாருங்கள். முதலில் நீதி என்ற கருத்தாக்கத்தையும், தண்டனை என்ற கருத்தாக்கத்தையும் பிரித்துக்கொள்ளுங்கள். நீதியைப் பற்றிய சிந்தினையின் விளைவாக அதை நடைமுறைப்படுத்த தண்டனை என்ற செயல் பயன்படுகிறது. நாம் தூக்கு தண்டனை என்ற செயல் வடிவம் எப்போது நடைமுறைக்கு வந்தாலும் எதிர்க்கிறோம். அந்த செயல் வடிவத்தை பொறுத்தவரை எல்லா வழக்குகளும் சமம்தான். ஆனால் அந்த செயல் வடிவத்தை நியாயப்படுத்தும் நீதியைப் பற்றிய சிந்தனை எல்லா வழக்குகளிலும் சமமானவை அல்ல. வங்காளத்தில் எட்டு அல்லது ஒன்பதாண்டுகளுக்கு முன்னால் ஒரு பள்ளிச் சிறுமியை வன்புணர்ச்சி செய்த (அவள் மரணத்திற்கு காரணமான) லிஃப்ட் ஆப்பரடேரை தூக்கில் போடச்சொல்லி வெகுமக்கள் இயக்கமே நடந்தது. முதலமைச்சர் புத்ததேப் பட்டாச்சார்யாவின் மனைவியே அதற்கு தலமை தாங்கினார். அப்போதும் நான் இணைய தள ஆங்கில வலைப்பின்னல் ஒன்றில் மரண தண்டனையை கண்டித்துத்தான் எழுதினேன். ஆனால் இந்த வங்காள வழக்கின் பின்னாலுள்ள நீதி பற்றிய கருத்தாக்கமும், பேரறிவாளன் வழக்கின் பின்னாலுள்ள நீதி பற்றிய கருத்தாக்கமும் வேறு வேறானவை. இதை கருத்தில் கொண்டுதான் "முற்றிலும் அநீதியான" மரண தண்டனை என்று எழுதிவிட்டேன். முற்றிலும் அநீதியான காரணங்களால் விதிக்கப்படும் மரண தண்டனை என்று அதற்கு பொருள் கொள்ளவும். பேரறிவாளன் வழக்கு நீதியைப் பற்றிய பல கருத்தாங்களை, கற்பிதங்களை அம்பலப்படுத்தும் வழக்கு. உங்கள் இடையீடுகள் அசந்தர்ப்பமானவை என்பதே என் கருத்து மேலும் குற்றவுணர்ச்சி என்பது அவரவர்களாக உணரவேண்டியது. அதை வெளியிலிருந்து திணிக்க யத்தனிப்பது பயன் தரும் செயலல்ல. குதிரையை நீர்நிலைக்கு கொண்டு செல்லலாம். தண்ணீரை அதுதான் குடிக்க வேண்டும். அதைத்தாண்டி பிறரை சாடி தன்னுடைய நிலைபாட்டை உயர்த்திக்கொள்ளும் மனோபாவமே முற்போக்கு சக்திகளை எல்லா காலத்திலும் பிளவு படுத்தி வந்திருக்கிறது. அதற்கு மாறாக நம்முடைய சுயவிமர்சனத்தை முன்மாதிரியாக்கி உரையாடலை வளர்ப்பதே இவ்வளவு பாரிய இழப்புகளுக்குப்பின் நாம் மேற்கொள்ள வேண்டிய அரசியல் அறம்

Rajan Kurai Krishnan: ஷோபா, தமிழ்த் தேசியவாதிகளுடனான சம்வாதமே ("polemics") நமது அரசியல் அக்கறைகளின் எல்லையாக இருக்க முடியாது. மேலும் இலங்கை தமிழ்த்தேசியமும், இந்தியத் தமிழ்தேசியமும் முற்றிலும் வித்தியாசமான வரலாற்றுப்பின்புலம் கொண்டவை என்பது வெளிப்படையானது. இந்த உண்மை நீங்களும் அறிந்ததுதான் என்றாலும் முழுமையாக கோட்பாட்டு ரீதியாக உள்வாங்காமல் திணறுவது உங்கள் பல இடையீடுகளில் தெளிவாகிறது. இன்று பல இந்திய தமிழ்த்தேசியவாதிகள் இலங்கைத் தமிழ்த்தேசியத்தை தங்களுடைய அவாக்களின் முன்னெடுப்பாக பார்த்துப் பேசுவதை மட்டும் வைத்து நாமும் இரண்டையும் ஒன்றாக்கி எதிர்ப்பது சாத்தியமல்ல. என்னைப்பொறுத்தவரை "மாநில சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி" என்ற அடிப்படையில் இந்தியத் தமிழ்த் தேசிய உணர்வு அகண்ட பாரத கற்பிதங்களுக்கு எதிராக பாதுக்காக்கப்படுவதை ஒரு வரலாற்றுத் தேவையாக நினைப்பவன். பெரியார்-"இய"-"வாதியாக" பல சமயம் வெளிப்படும் உங்களுக்கு "இந்தியா ஒரு நேஷனா?" என்ற பெரியாரின் பிர்சுரம் எப்படி வரலாற்றில் இன்றியமையாததானது என்பதை காண்பது கடினமல்ல. இன்று இந்தியத் தமிழ் தேசீயம் பேசி இலங்கைத் தமிழ்த் தேசீய் போராட்டத்தில் நிகழ்ந்த தவறுகளை எந்த விமர்சனமுமின்றி மூடி மறைப்பவர்களின் கண்ணாடி பிரதிலிப்பாக நீங்கள் இந்தியத் தமிழ்த் தேசியத்தின் பரவலான நியாயங்களை உணராததுபோல பேசுவது ஒரே மொழியை பகிர்ந்துகொள்ளும் இந்த இரண்டு நிலப்பரப்புகள் ஒன்றையொன்று புரிந்துகொள்ள உதவாது.

Shoba Sakthi: ராஜன் அகன்ற இந்து பாரதத்திற்கு எதிராக நிறுத்த்ப்பட்ட தமிழகத் தமிழ்த் தேசியத்தினை அதன் வரலாற்று சூழல்களுடன் நான் உள்வாங்கியிருக்கிறேன் என்றுதான் நம்புகிறேன். பெரியாரிலிருந்து அறுபதுகளின் முற்பகுதி வரை தி.மு.கவும் ஒலித்த தமிழ்த் தேசியத்திற்கும் இன்றைய மணியரசன், குணா, சீமான் வகையான தமிழ்த் தேசியத்திற்குமான உள்ளடக்கம் ஒன்றல்ல என்பது நீங்கள் அறிந்ததுதானே. பெரியார் மரபுத் தமிழ்த் தேசியவாதிகள் இப்போது எங்காவது தமிழகத்திலிருக்கிறார்களா என நான் அறியேன். கடைசிப் பெரியாரிஸ்டும் 1973ல் இறந்ததாகத்தான் பேசிக்கொள்கிறார்கள்.

தவிரவும் நான் ஈழத் தமிழ்த் தேசியத்தின்மீது கொண்டுள்ள கசப்பால் அதை அவ்வாறே தமிழகச் சூழலில் பொருத்திப் பார்க்கிறேன் என நீங்கள் கருதுவதாகத் தெரிகிறது. நான் எந்தக் காலத்திலும் ஈழத் தமிழ்த் தேசியத்தையோ அதன் சுயநிர்ணய உரிமையையோ (கவனிக்கவும் மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி அல்ல) மறுத்ததில்லையே. புலிகளையோ வேறு தமிழீழப் போராட்ட இயக்கங்களையோ எதிர்த்தால் அதை ஈழத் தமிழ்த் தேசிய மறுப்பு எனக் கொள்ளத் தேவையில்லை. அதை யுத்தப் பிரபுக்களை எதிர்த்தாகவே நீங்கள் கொள்ள வேண்டும். சுத்தத் தமிழில் பெயரும் வைத்து புலிக்கொடியும் ஏந்தி சிங்களவர்களிற்கு எதிராக யுத்தம் செய்தால் மட்டும் அது தேசிய பிரதிநிதித்துவம் ஆகிவிட முடியாது. எனவே நான் புலிகளுடனான அனுபவத்தை வைத்து தமிழகத் தேசியத்தை எதிர்க்கிறேன் எனக் கருதிவிடாதீர்கள். இன்னும் சொல்லப் போனால் சாதியொழிப்பு, கடவுள் மறுப்பு போன்ற பணபுகளின் காரணமாக கொளத்தூர் மணி, தியாகு போன்றவர்கள் ஈழவிடுதலைப் போராட்டத் தலைவர்களைக் காட்டிலும் (பிரபாகரனையும் சேர்த்தத்தான்) பன்மடங்கு மேலானவர்கள். அந்த மதிப்பு எனக்கு என்றுமுண்டு.

Shoba Sakthi: Rajan Kurai Krishnan, வங்காள எடுத்துக்காட்டு நாம் பேசும் விடயத்திற்கு சற்றே தூரமானது. நெருங்கிய எடுத்துக்காட்டு அஜ்மல் கசாப்புடையது. முருகனும் சாந்தனும் பேரறிவாளனும் தாங்கள் நேசித்த ஓர் அரசியல் இயக்கத்திற்காக வேலை செய்திருக்கிறார்கள். இதில் பேரறிவாளனின் பங்கு குறைவாக இருந்திருக்கலாம். கசாப்பும் தான் நேசித்த ஓர் இயக்கத்திற்காக வேலை செய்கிறார். இந்த நால்வருக்கும் தாக்குதல் இலக்கு எதுவென்றே கடைசிவரை தெரிந்திருக்காமலிருக்க எல்லாவித தர்க்கமும் உண்டு. இரகசிய பயங்காரவாத இயக்கங்களின் நடைமுறையது. நீங்கள் சொல்லும் நீதி என்பது கசாப்புக்கும் பேரறிவானுக்கும் இடையில் எங்கு வேறுபடுகிறது?

Shoba Sakthi: ‎Rajan Kurai Krishnan//குற்றவுணர்ச்சி என்பது அவரவர்களாக உணரவேண்டியது. // அதற்கு முதலில் குற்றத்தை உணர்த்த வேண்டியிருக்கிறதல்லாவா. குற்றம் உணர்த்தப்படாத போது குற்றவுணர்வு தோன்றுவதில்லை. குற்றத்தையும் தானேகவே உணரவேண்டும் எனச் சொல்லமாட்டடீர்கள் என நம்புகிறேன்.

Rajan Kurai Krishnan: ஷோபா சக்தி, உங்களுடன் உரையாடும் தருணத்தில்தான் வார்த்தைகள் எவ்வளவு வியர்த்தமானவை என்பதே புரிகிறது. பிறரை புரிந்துகொள்வது என்ற அடிப்படையில் ஒரு அரசியல் இருக்கிறது. உண்மையில் அதுதான் அரசியலின் சாராம்சம். அது உங்களுக்கு சித்திக்க பிரார்த்தனை செய்ய முடிவு செய்து விடைபெறுகிறேன். முடிவாக ஒரு வார்த்தை. நீங்கள் இந்த நிலைத்தகவலில் என்ன சொல்கிறீர்கள் என்பது "தர்க்கரீதியாக" சரியென நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் சொல்லலாம்; உங்களது அரசியல் பார்வைகளுடன் பெரிதும் உடன்பாடுள்ள நானும் ஆமோதிக்கலாம். ஆனால் இந்த நிலைத்தகவல் அசந்தர்ப்பமானது, வேண்டுமென்றே தமிழ்நாட்டு அரசியல் உணர்வாளர்களை சீண்டிப்பாற்பது என்பதை நீங்களாக முயற்சி செய்துதான் புரிந்துகொள்ள வேண்டும். அது தர்க்கத்தின் உயர்நிலை. முயற்சி செய்து பாருங்கள். தூய எண்ணங்களால்தான் நரகத்தின் பாதை உருவாக்கப்படுகிறது என்பதை இலங்கையின் சோகத்திலிருந்து நான் புரிந்துகொள்கிறேன். உங்களுக்கும் அது சாத்தியமாகத்தான் இருக்க வேண்டும். ஆனால் இலங்கையின் கொடுமையான அரசியல் சகாப்தத்தில் உருவான உங்கள் மொழியால் "நன் சொல்வதே சரி- நான் அதிகச் சரியானவன்" என்ற தர்க்க வகைமையைத் தாண்டி செயல்பட முடியாததை வருத்ததுடன் பதிவுசெய்கிறேன். அரசியலிலும் தூய்மையற்றவற்றை நேசிக்கப் பழகவேண்டும் என்ற எனது நிலைப்பாட்டை வலியுறுத்தி விடைபெறுகிறேன்.


Shoba Sakthi: ‎Rajan Kurai Krishnan,//அரசியலிலும் தூய்மையற்றவற்றை நேசிக்கப் பழகவேண்டும் என்ற எனது நிலைப்பாட்டை வலியுறுத்தி..// அது எனக்குச் சுட்டுப் போட்டாலும் வராது என்பதை நானும் வலியுறுத்தி இப்போதைக்கு விடைபெறுகிறேன். நான் சொல்வதே சரி என்ற இறுமாப்பல்ல,
நான் ஈழத்து அரசியலில் நசுக்கப்பட்ட ஒரு தரப்பின் குரல் என்ற பொறுப்புணர்வே என்னிடமிருப்பது. # ஆதியில் வார்த்தை இருந்தது.

Rajan Kurai Krishnan: பின்குறிப்பாக ஒரு விளக்கம்:

அரசியல் தூய்மைவாதம் என்றால் என்ன?

தூய்மை என்ற வார்த்தை “கறை””அழுக்கு””ஆரோக்கியமற்றது” போன்ற வார்த்தைகள் சுட்டும் பொருள்களுக்கு எதிரானது, அவற்றைக் களைந்தது.

அரசியலில் ஒருவர் அல்லது ஒரு இயக்கம் எடுக்கும் நிலைப்பாடு முற்றிலும் சரியானது, சமரசமற்றது என்று வலியுறுத்துவதும், நம்புவதும் அதற்கு மாற்றான கருத்துள்ளவர்களை ஓயாமல் சாடித்திரிவதும் அரசியல் தூய்மைவாதம் என அழைக்கப்படுவது பொருத்தமென நினைக்கிறேன். ஆங்கிலத்தில் “political correctness” என்றழைக்கப்படும் “அரசியல் சரித்தன்மை” இந்த தூய்மைவாதத்தின் ஒரு பகுதியாக அமையலாம்.

பொதுவாக ஒரு அரசியல் நிலைபாடு இன்னொரு அரசியல் நிலைபாட்டை தூய்மையற்றதாகத்தான் பார்க்க நேரும். ஆனால் அவற்றிற்கிடையிலான உரையாடலே அரசியலை சாத்தியப்படுத்தும் என்பதால் தூய்மைவாதிகள் முதலில் உரையாடலை சாத்தியமற்றதாகச்செய்து விடுவார்கள். எனவே நாம் அரசியலில் நிகழும் பிழைகள், நாம் தூயமையற்றதாகக் கருதும் மாற்றுக் கருத்துக்கள், போக்குகள் ஆகியவற்றுடன் உரையாடும் சந்தர்ப்பங்களை இழக்காமல் அவர்கள் தரப்பு நியாயங்களை எப்போதும் கவனத்தில் கொண்டிருக்கத்தான் வேண்டும்; அந்த நியாயங்களை ஏற்றுக்கொள்ளாத போதும். அதுவே அரசியல் தூய்மையின்மையின்மையை நேசிப்பது. அதாவது அரசியல் தூய்மை என்பது சாத்தியமில்லை என்று உணர்வது.

Vasanth Srinivasan: ‎'நீதி என்பது கசாப்புக்கும் பேரறிவாள‌னுக்கும் இடையில் எங்கு வேறுபடுகிறது?' என்று ஒரு வெடிகுண்டுக் கேள்வியை கேட்பவர், தன் 'நோஞ்சான் எதிரி'களின் தர்க்க அபத்தங்களை பிரித்து மேய்வது ஒரு இலக்கிய பிரதியில் நிகழ்திருந்தால் சிரிப்பதோடு சிந்திக்கவும் செய்திருக்கலாம்

Saturday, August 13, 2011

மரணதண்டனை குறித்து சில துளிகள்.

(ட்விட்டரில் எழுதியது; எதிர்கால வசதி கருதி இங்கேயும்.)

யாருக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டிருந்தாலும் அதை நான் எதிர்க்கிறேன்; ஏற்கனவே ஒருமுறை என்பதிவில் சொன்னதுபோல், வீரப்பனுக்கானாலும், சிறுமியை பலாத்காரம் செய்து கொன்னவனாலும், ஒரே இரவில் 20 பேரை கொன்றவனுக்கும் இதே நிலைபாடுதான். ஏனெனில் மரண தண்டனை என்பது அந்த செய்த குற்றங்களை விட கொடுமையானது. நாகரீக சமூகத்தில் ஏற்க இயலாதது. இது குறித்த என் கருத்தை விரிவாக என் வலைப்பதிவில் எழுதியிருக்கிறேன். ஆகையால் கொள்கையளவில் எல்லாவித மரணதண்டனைக்கும் எதிராகவும்தான் குரல் கொடுக்க வேண்டும்.

ஆனால் நடைமுறை அரசியல் என்பதன் எல்லைகள் வேறு. மரணதண்டனை என்பதையே ஒழிக்கும் அளவிற்கு நம் சமூகமும், அதை ஆதரிக்கும் அளவிற்கு நம் பொதுபுத்தியும் நாகரீகம் அடைவதை எதிர்ப்பார்த்திருப்பதை விட, இன்றய சூழலில் செய்யக்கூடியதை நாம் யோசித்தும் பேச வேண்டும். ஒரு பக்கம் கொள்கையளவில் எல்லா மரண தண்டனைகளையும் எதிர்த்தாலும், நடைமுறையில் குற்றத்துடனான தொடர்பையும், தீவிரத்தையும் முன்வைத்தும் பேசவேண்டும். அஃபசல் பற்றிய என் பதிவில் இந்த கருத்தை பதிவு செய்துள்ளேன். நடைமுறையில் ஒன்றை முன் எடுப்பதால் கொள்கையளவில் அதையே எல்லையாக ஏற்பதாகாது. எதிர்கால லட்சியமாகவோ, அடுத்த கட்ட நோக்கமாகவோ அதை கொள்வதாக மட்டுமே ஆகும்.

அந்த வகையில் கஸாப் நேரடியாக ஒரு பெரும் பயங்கராவத குற்றத்துடன் தொடர்புடையவாராகிறார். அஃப்சல் நாம் அறிந்தவரையில் சில சந்தர்ப்ப சாட்சியங்களால் மட்டும் குற்றத்துடன் தொடர்பு படுத்தப்பட்டுள்ளார். பேரறிவாளன் மிக மிக அல்ப காரணத்திற்காக, பேட்டரி விற்றதாக சொல்லப்படும் காரணத்திற்காக, எல்லாவகையிலும் அவர் முழுக்க முழுக்க நிரபராதியாக இருக்கக் கூடிய சாத்தியத்துடன், (பயங்கரவாதத்தை ஒழிக்க வந்ததாக சொல்லப்படும்) ஒரு பயங்கரவாத சட்டத்தால் அநியாயமாக தொடர்பு படுத்தப்பட்டவர். அவருக்கான மரண தண்டனையையே நாம் அதிகமாக எதிர்க்க வேண்டும். பொதுப்புத்தியும் அதற்கு உதவக்கூடும் எனில் அதை பயன்படுத்தவும் முயலவேண்டும்; இதற்கான வெகுஜனக் கருத்தை உருவாக்குவது எளிது என்றால், அதில் கவனம் செலுத்தி முன்னெடுப்பதே சரியான நடைமுறை அரசியலாக இருக்கும்.

நிராபராதிக்கு மரண தண்டனை அளிப்பதை தடுப்பது என்பது, சந்தர்ப்பவாத சாட்சியங்களால் குற்றம் சாட்டபட்டவரிலிருந்து, பெருங்குற்றம் செய்தவர் வரை, எல்லாவற்றிற்குமான மரணதண்டனையை ஒழிப்பதற்கான முதல் படியாக இருக்கும்.

இந்த நீள் ட்வீட்டை எழுத உந்துதாலாய் இருந்தவர் சோபாசக்தி. அவருக்கு அதற்கு நன்றி.

Sunday, December 5, 2010

மழையின் இசை.

பத்து வருடங்களுக்கு முன்பு அலகாபாதில் கழிக்க நேர்ந்த ஒன்றரை வருடம், பல தனிப்பட்ட காரணங்களால் மறக்க முடியாதது. பின் பனிக்காலம் அல்லது வசந்த காலம் என்று சரியாக பிரிக்க முடியாத ஃபிப்ரவரியில், கங்கையும், யமுனையும் வற்றிய சங்கம நிலப்பரப்பில், 'மாக்மேளா' ஒவ்வொரு வருடமும் அலகாபாதில் நடைபெறும். (12 வருடங்களுக்கு ஒருமுறை இதுவே கும்பமேளாவாகும். நான் கிளம்பி வந்த அடுத்த வருடம் கடந்த கும்பமேளா நடந்தது).

அந்த காலகட்டத்தில் கொண்டிருந்த மூர்க்கமான இந்துமத எதிர்ப்பின் பக்கவிளைவாக அலகாபாதின் வசந்த மேளாவில் நான் தீவிர கவனம் செலுத்தாமல், பல முக்கிய அனுபவங்களை இழந்திருக்கிறேன் என்று இப்போது தோன்றுகிறது. ஆனாலும் மாக்மேளாவின் ஒரு மாலையில் பிஸ்மில்லாகானின் கச்சேரிக்கு சென்றேன்; எண்பதுகளின் இறுதியில் இருந்த அந்த மேதை, நள்ளிரவு வரை தன் பரிவாரங்களுடன், பெரும் கூட்டத்தை கட்டிபோட்டு வாசித்த இசை மேடைக்கு பின்னால் நதியில் படகு வெளிச்சங்கள்; சாகும் தருவாயிலும் மறக்க முடியாத இசை காட்சி அனுபவம் அது.

அந்த அனுபவத்தின் நிழல் உங்களுக்கும் கிடைக்க, வரும் ஃபிப்ரவரி அலகாபாத் போய், பிஸ்மில்லாகானின் சீடர் யாராவது வாசிக்கும் இரவு ஒன்று உங்களுக்கு வாய்க்க அல்லாவையும், ராமரையும் வேண்டிக்கொள்வதை தவிர வேறு வழியில்லை. (உஸ்தாத் பிஸ்மில்லாகான் 2006இல் மறைந்தார்.) அதற்கு எந்த வாய்ப்புமே இல்லாதவர்கள் இங்கே சென்று பிருந்தாபனி சாரங்கை பனாரஸ் கங்கையின் காட்சியுடன் கேட்டு களித்து ஆறுதல் கொள்ளவும்.

இன்று சென்னையில் தொடர்மழையும், காற்றும்; வீட்டில் ஜன்னல் வழியாக அனுபவிக்கவும், சூடாக பஜ்ஜி செய்து சாப்பிடவும் ஏற்றது. வேலை இருப்பவர்களுக்கு மழை அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது. மழை தரும் நடுத்தர வாழ்வு கஷ்டங்களை சின்ன வயதில் அனுபவித்திருக்கிறேன். ஏழை மக்களுக்கு அது தரும் வாழ்க்கைப் போராட்டம், கேள்வி ஞானத்தை வாசிப்பு அனுபவமாக மாற்றிய வகையில்தான் தெரியும். இதன் சில தீவிர காட்சிகள் டூமிங் குப்பத்திலும், திருச்சி ஶ்ரீரங்கத்தில் காணக் கிடைத்திருக்கிறது.

பல மக்களின் இருப்பையும், வாழ்க்கையையும் கேள்விக்குறியாக்கும் மழையை, எல்லாவித பாதுகாப்புடன் ரசிப்பது, சிலருக்கு குற்ற உணர்வு தரும் இருத்தல் முரண். ஆதவன் தீட்சண்யா மழையை பற்றி கவிதை எழுதியவனை திட்டி எழுதிய கவிதை ஒன்றை பலர் வாசித்திருக்கலாம். ஆதவன் ரொம்ப நேர்மையும், நியாயமும் கலந்துதான் தன் கோபத்தை காட்டியிருக்கிறார். ஆனால் பிரசனை என்னவெனில் வீட்டில் உட்கார்ந்து மழையை ரசிப்பவன், ஆதவன் திட்டுவாரே என்று வேறு ஒரு முற்போக்கு கவிதை எழுதினால் அது நேர்மையாகுமா? அல்லது தன் இருப்புக்கும் உறவுக்கும் அப்பால் வாழும் மக்களை நினைத்து கண்ணெதிரே உள்ள காட்சியை ரசிக்க மாட்டேன் என்று கற்பித்து கொள்ள முடியுமா?

என்னை பொறுத்த வரை நம்சமூகத்தில் சம்பளம் வாங்குவதும், வாழ்வதும், ஒரு அங்கத்தினனாக இருப்பதும் கூட பெரும் குற்றம்தான். தற்கொலை செய்யாமல் அதை விதியாக ஏற்றுகொண்ட நிலையில், மழையை ரசிப்பதில் எல்லாம் முற்போக்கு போலி முகமுடி அணியமுடியாது. மேலும் வாழ்வின் போராட்டத்தின் நடுவே, ரசிப்பதற்கான அழகு ஒன்றை, புயல் நேரத்து மழை கொண்டிருப்பதனால்தான், மீனவ குப்பத்திலிருந்து அலையை வேடிக்கை பார்க்க சிலர் இன்று கடற்கரைக்கு வந்திருந்ததாக தோன்றியது.

இன்று மதியம் காரை எடுத்துக் கொண்டு குடும்பத்துடன் மெரினா கடற்கரைக்கு சென்றேன். மழை தூறலாக மாறிய ஒரு இருபது நிமிடங்களுக்கு அலைகளை பார்த்து விட்டு வந்தோம். கொண்டு சென்ற குடை எதிர்பக்கம் குவிந்து அதன் வாழ்பயனற்ற சாமானாகி போனது. புயலின் போதான கடலை திரைக்காட்சியில்தான் பார்த்திருக்கிறேன். ஒரு கேமெரா காட்சியில் அடக்க இயலாத, அப்படி ஆர்பரித்த கடலை இன்றுதான் வாழ்க்கையில் பார்த்தேன். பித்து பிடித்து சுழன்று சுழன்று கூத்தாடிய கடல்; சிலே பல்கலைகழகத்தில் ஒரு மதியத்தில் சில மாணவர்கள் ஆடிக்காட்டிய ஒரு ஆட்டம் சில நொடிகளுக்கு நினைவுக்கு வந்தது. தூறல் பலமான பின்பு காருக்கு திரும்பினோம்.

காரில் பிஸ்மில்லாகானை ஓடவிட்டேன். எதிரே கடலின் ஆர்பரிப்பு, மழை, பாதுகாப்பான காரின் வெது வெதுப்பில், பிஸ்மில்லா சாஹிபின் தோடி, பிம்பலாஸி, மால்கௌன்ஸ், பிருந்தாபனி சாரங்க.. பின் கிளம்பி பட்டின பாக்கம், ஃபோர் ஷோர் எஸ்டேட் கடற்கரை சாலையில் வண்டியை நிறுத்தி, மிக அருகில் தெரிந்த கடலின் அலைத்தாண்டவத்தின் எதிரே, மீண்டும் பிஸ்மில்லாகான் ஒருமணி நேரம் எங்களுக்காக வாசித்தார். அந்த அலகாபாத் இரவு அனுபவத்திற்கு பிறகு வாழ்வில் மறக்கப் போகாத அனுபவம் இன்று.

அன்றய பின்பனிக்கால குளிருடன், கங்கை/யமுனையின் அமைதியுடன், விழாக்கால ஈடுபாட்டுடன், படகு வெளிச்சத்தின் காட்சியுடன் பிஸ்மில்லாக்கானின் இசை இயைந்து இருந்தது. இன்று கார் கண்ணாடியின் ஊடாக தெரிந்த ஊழித் தாண்டவம் ஆடும் அலைகள், யாருமற்ற பட்டினப்பாக்கம் மீன் மார்க்கெட், குப்பை தொட்டி, மழையின் சத்தம் அனைத்துடன் முரணான இசைவை கொண்டிருந்தது முற்றிலும் புதிய அனுபவமாக இருந்தது. வேறு இசையை கேட்டு கொண்டிருந்திருக்கலாம் என்கிற உணர்வை தூண்டவில்லை.

Saturday, November 6, 2010

KOMA

இந்த விழாவில் பார்த்த சிறந்த படங்களில் ஒன்று இது. மற்ற படங்கள் பார்த்த கண்ணயற்சிக்கு பிறகு, கடைசியாக பார்த்ததால், நிறைவாக படத்தை உள்வாங்கினேன் என்று சொல்லமுடியாது. வாய்ப்பு கிடைத்தால், தனியாக உட்கார்ந்து காட்சி காட்சியாக மீண்டும் பார்க்க விரும்புகிறேன்.

கதையை தெரிந்து கொள்வது (இன்னும் சரியாக சொன்னால் படத்தை பார்ப்பது) விமர்சனத்தை வாசிக்க அவசியம்; ஒருவகையில் சரியாக கதையை சொல்வது கூட இந்த படத்தை பொறுத்தவரை ஒரு விமர்சனம்தான். அழகான, அமைதியான, ஓவியம் போன்று காட்சியளிக்கும் நீர்ப்பரப்பின் கீழ் ஓடும், அமளி நீரோட்டம் போன்ற வாழ்க்கை பற்றியது கதை.

ஹன்ஸ் ஒரு டாக்சி ஓட்டுனர். 'Taxi' என்று போட்ட காரில் அலைவதை தவிர, வேறு வழியில் இந்த தகவலை படத்தில் அறிய வாய்ப்பில்லை. படம் முழுவதும் ஒரு சவாரி கூட ஏற்றுவதில்லை. வெளிப்பார்வைக்கு ஹன்ஸின் வாழ்க்கை எல்லா ஐரோப்பிய நடுத்தர வாழ்க்கை போலவே அழகாகவும், அமைதியாகவும் இருக்கிறது. ஒரு டாக்ஸி ஓட்டுனரும் வாழக்கூடிய வளமான ஐரோப்பிய வாழ்க்கை; அன்பு கொண்ட, குடும்ப பிடிப்புள்ள மனைவி; ஹன்ஸின் 50வது பிறந்த நாள் விழாவிற்கான ஏற்பாடுகளை அவன் மனைவி மும்முரமாக செய்வதில் படம் தொடங்குகிறது. ஹன்ஸின் பையன் சில ஒத்தாசைகளை அம்மாவிற்கு அரைகுறையாக செய்கிறான். நண்பன் ரிச்சியை பார்க்க போவதிலேயே அவன் ஆர்வம் இருக்கிறது. அப்பாவின் 50ஆவது பிறந்த நாள் அன்றும், வீட்டில் இல்லாமல் ரிச்சியை பார்க்க போவதை அம்மா கடிந்து கொள்கிறாள்.

அவனும், ரிச்சியும் அமர்ந்து மடிக்கணிணியில் இணைய போர்னோ தளங்களுக்கு சென்று பார்கின்றனர். பாத்ரூமில் ஒரு வயதான பெண் ஆடையை களைந்து நிர்வாணமாகிறாள்; குளிக்கும் தொட்டியில் அவள் இறங்க, சாடிஸ பாணியில்அடித்து துன்புறுத்தும், Sado-Masochist வீடியோ காட்சிகள், திரையில் வந்து போகிறது. இப்போதும், பின்னால் வரும் காட்சிகளிலும், அடிக்கும் நபரின் முகம் காட்டப்படுவதில்லை.

பிறந்த நாள் விழா மெள்ள சூடு பிடிக்கிறது. ஐரோப்பிய கொண்டாட்ட கலாச்சாரத்தை காண்பிக்கும் ஒரு பார்ட்டி; ஜோக் அடிக்கிறார்கள். ஒருவர் அகார்டியன் வாசித்தபடியே வருகிறார்; நாடக பாணியில் பாடியபடி வந்து கலந்து கொள்கிறார்; சிரிக்கிறார்கள். பானங்கள், பேச்சுக்கள் என்று விருந்து மும்முரமாக நடக்க, விருந்தின் முக்கிய நபர் மட்டும் வரவில்லை.

ஹன்ஸ் விருந்தை புறக்கணித்து, டாக்சியை நதிக்கரையில் நிறுத்தி, புகைத்து கொண்டே இருக்கிறான். எங்கோ காட்டுக்குள் போகிறான்; போய்கொண்டே இருக்கிறான். மனைவி அவனை அழைக்க மீண்டும், மீண்டும் முயற்சித்தும் தொடர்பு கிடைப்பதில்லை. அவளுக்கு மிகவும் தர்ம சங்கடமாகிறது.

ஐரோப்பிய பண்பின்படி, யாரும் தவறாக எடுத்து கொண்டதாக வெளி காட்டிக் கொள்ளாமல் அவளை தேற்றுகின்றனர். தங்கள் சம்பாஷணைகளை இயல்பாக தொடர்கின்றனர். 'நிச்சயம் வந்துவிடுவான்' என்கிறார்கள். வெகு நேரமாகி, ஹன்ஸ் வரப்போவதில்லை என்று உறுதியான பின், மனைவி ஹன்சிற்கு அலைபேசியில் செய்தியை பதிவு செய்கிறாள். எல்லோரும் அலைபேசியை நோக்கி 'ஹாப்பி பெர்த்டே டூ யூ' பாடுகிறார்கள். கேக் விநியோகம் நடக்கிறது.

இடையில் ஹன்சின் மகனும் விருந்தில் கலந்து கொள்கிறார்கள். ரிச்சி அந்த சாடோ மசாக்கிச போர்னோ சிடியை அளிக்க,'ஓ.. தட் பிட்ச்' என்று வாங்கி கொள்கிறான். விருந்தின் போக்கில், அந்த போர்னோ சிடியை மறதியாக மேஜையில் வைக்கிறான். ஹன்சின் மனைவி, அதை ஹன்சிற்கான மகனின் பிறந்த நாள் பரிசு என்று தவறாக எண்ணி, வண்ண தாளில் சுற்றி மற்ற பரிசுகளுடன் வைக்கிறாள். ஹன்ஸ் காட்டில் அலைந்து, மீண்டும் நதிக்கரையில் அமர்ந்து புகைத்து தனக்குள் சிந்தித்தபடி, பதிவான பிறந்த நாள் செய்தியை பிறகு நிதானமாக கேட்கிறான். எல்லாம் முடிந்து இரவில் வீடு திரும்புகிறான்.

வீடு விருந்து முடிந்த குழப்பத்தில் இருக்கிறது. ஈக்கள் மொய்க்கும் கேக்கை எடுத்து பாதி சாப்பிடுகிறான்; மீதமிருக்கும் வொயினை குடிக்கிறான்; குளிக்கிறான்; பியர் சாப்பிடுகிறான்; பரிசு பொருட்களை ஒவ்வொன்றாக பார்க்கிறான். மகன் பெயர்போட்டு வைக்கப்பட்டிருந்த பலான சிடியையும் பார்கிறான். சாடோ மஸாக்கிஸ காட்சிகள் திரையில் வந்து போகின்றன. சோபாவில் தூங்கி கொண்டிருக்கும் மகனையே பார்த்துக் கொண்டிருக்கிறான். அவன் விழித்து பார்த்ததும், கன்னத்தில் அறைகிறான். மகன் அதே போல அப்பாவை திருப்பி அறைந்துவிட்டு போகிறான்.

ஹன்ஸ் தனது அறைக்கு சென்று, படத்தில் ஆரம்ப காட்சி ஒன்றில் செய்வது போல், மேல் தளத்தில் துளை போடுகிறான். இந்த முறை தூக்கு கயிறு போல நாடாவை வைத்து செய்து, கழுத்தை சுற்றி நிதானமாக அளவெடுக்கிறான். ஆனால் அவன் தற்கொலை செய்து கொள்வதில்லை. மறுநாள் டாக்சியை எங்கோ நகருக்கு வெளியே நிறுத்தி புகைக்கிறான். கார் கண்ணாடியில் தாடியை மழிக்கிறான். பின் பாலியல் தொழிலாளி ஒருத்தியை தேடி போகிறான்.

பாலியல் தொழிலாளியிடம் 'வேறு எதுவும் தேவையில்லை, சும்மா பேசிக்கொண்டிருந்தால் போதும்' என்கிறான். பொதுவாக வசனமே இல்லாமல் காட்சிகளாக கடந்து வந்த படத்தில், நீண்ட வசனம் கொண்ட காட்சி இது. ஹன்ஸ் ஓரிரு வார்த்தைகளில் மட்டும் விசாரிக்க, அந்த பாலியல் தொழிலாளி மட்டும், ஹன்ஸ் விசாரித்த ஜெர்ட்ரூட் என்ற இன்னொரு பாலியல் தொழிலாளி பற்றி, நீளமாக உணர்ச்சிகளுடன் பேசிக் கொண்டிருக்கிறாள். இந்த காட்சிகளில் பார்ப்பவர் கதையில் ஊன்றி, புத்திசாலித்தனமாக, படத்தில் இதுவரை காட்டப்பட்டு வந்த சாடோ மசாக்கிச காட்சிகளில் நடித்த பெண்ணை பற்றித்தான் அவள் பேசுகிறாள் என்பதையும், அந்த காட்சியில் நடித்தவன் ஹன்ஸ்தான் என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். படத்தில் நேரடியாக சொல்லப்படாத இந்த தகவலை புரிந்து கொள்ளவில்லையெனில் மொத்த படமும் சிக்கலாகிவிடும்.

ஸாடோ மசாக்கிச படக்காட்சிகளுக்காக மாறி மாறி கம்பால் அடிக்கப்பட்ட அந்த பெண்மணியின் இப்போதய நிலையை பற்றி அவள் விவரிக்கிறாள். கிட்டதட்ட ஒரு பிணம் போல, சுற்றி நடக்கும் எதை பற்றிய சுயநினைவும் இல்லாமல், நெருங்கிய தோழியான தன்னைகூட அடையாளம் தெரியாமல் இருப்பதை சொல்கிறாள். இந்த நிலைமைக்கு அவளை கொண்டு வந்த அந்த மனிதனை கண்டபடி திட்டுகிறாள். இப்படி எப்படி நடக்கிறது என்று தன்னால் புரிந்து கொள்ள முடியாததை சொல்கிறாள்.

அந்த நீண்ட காட்சிக்கு பிறகு, ஜெர்ட்ரூட் இருக்கும் மருத்துவமனைக்கு ஹன்ஸ் செல்கிறான். சக்கர நாற்காலியில், காற்றாட ஒரு பணியாளனால் வெளியில் அழைத்து வரப்பட்டிருந்த அவளை பார்கிறான். பின்னணி இசையற்ற இந்த நீண்ட காட்சிகளில் அவன் உணர்ச்சி எதையும் வெளிப்படையாக காட்டவில்லை. அடுத்த காட்சியில் ஜெர்ட்ரூடுடன் ஒரு அபார்ட்மெண்டில் ஹன்ஸ் இருக்கிறான். அவளை அவன் தன்னுடன் அழைத்து வந்துவிட்டது தெரிகிறது. எப்படி அழைத்து வந்தான் என்று சொல்லப் படவில்லை. உயிர் மட்டும் இருக்கும் நடைபிணம் போன்ற அவளுக்கு, ஹன்ஸ் பல் தேய்த்துவிட்டு, குளிப்பாட்டி, சாப்பாடு ஊட்டி எல்லாம் செய்துவிடுகிறான். நிர்வாணமாக படுக்கையில் இருக்கும் அவளுடன், ஹன்ஸும் நிர்வாணமாகி உறவு கொள்கிறான். மிக நீண்டு பல நிமிடங்களுக்கு, பின்னணி இசையும், பேச்சும் இல்லாமல் காண்பிக்கப்படும் காட்சி. அவசரம் காட்டாமல் மிக மென்மையாக அவளை கையாண்டு, அவள் மேல் படர்கிறான். ஒரு கட்டத்தில் அவள் கைகளும் செயல்பட்டு, அவனை அணைத்துக் கொள்கிறது. படம் முடிகிறது.

ஐரோப்பாவில் வாழ நேர்ந்தவர்கள், அங்குள்ள வாழ்க்கைமுறையின் ஒரு குறிப்பிட்ட தன்மையை அவதானித்திருக்கலாம். மேல் பார்வைக்கு எல்லாம் ஒழுங்குடன் காட்சியளிக்கும்; சற்று விலக்கி, உள் நுழைந்து பார்த்தால், நோய்காரணியாக எதையாவது காணமுடியும். மிக வடிவாக பேப்பர்கள் ஒட்டபட்ட ஒரு அறையில், ஒரு பேப்பரை விலக்கி, பின்னால் உள்ள சுவரில் நீங்கள் பூஞ்சக் காளானை காண்பது போன்றது. ஐரோப்பிய நவீன வாழ்க்கையில், பூஞ்சம் பிடித்த சுவரை சுத்தப்படுத்துவதை விட, ஒரு அழகான பேப்பரை ஒட்டி அதை எளிதாக மறைப்பதை விரும்புவார்கள்.

ஹன்ஸ் தன்னை சுற்றி உள்ள மக்களால் மதிக்கப்படும் ஒரு நடுத்தர குடும்பத்தினன். ஐம்பதாவது பிறந்த நாளுக்கு அவனை வாழ்த்த, சுற்றி இருப்பவர்கள் திரண்டு வருகிறார்கள். அவனை நேசிக்கும், அவன் அருகாமையை விரும்பும் அமைதியான மனைவி. ஐரோப்பிய வாழ்க்கையின் மேலோட்டமான அழகையும், பண்பையும், மகிழ்ச்சியையும் படத்தின் ஆரம்ப காட்சிகளில் வரும் பிறந்த நாள் விருந்து காட்டுகிறது. அந்த ஐரோப்பிய வாழ்வின் பின்னால் இருக்கும் பிரச்சனை ஹன்ஸினுடையது மட்டுமல்ல.

மிக மோசமாக பாலியல் தொழிலாளியை, கேமெரா முன்னால் சாடிச முறையில் அடித்து துன்புறுத்தும் ஹன்ஸ், சமூகத்தில் இருந்து எந்த விதத்திலும் பிறழ்ந்தவனாக படத்தில் காட்டப்படவில்லை. அந்த பிறந்த நாள் விருந்தில் வரும் அனைவரையும் போல இயல்பான ஒரு சமூக உறுப்பினன். ஹன்ஸை எந்த இடத்திலும் கொடூரமானவனாக, அவனிடம் அதீத கொடூரம் வெளிபடுவதற்கான அறுகுறியாக எதுவும் காட்டப்படவில்லை. அதே நேரம் அவன் எந்த இடத்திலும், ஒரு பெண்ணை நடைபிணமாக மாற்றியதற்கு, தான் துன்புறும் குற்ற உணர்சியையும் படத்தில் வெளிகாட்டவில்லை; எல்லாவற்றையும் அமைதியாகவே செய்கிறான். பாதிக்கப்பட்ட அந்த பெண்ணும் ஒப்புகொண்டே அந்த நிஜ காட்சிகளில் நடிக்கிறாள். ஒரு மசாக்கிஸ்டாக தன் மீதான அடிகளை அவள் இன்பமாக அனுபவித்ததாகவே, அவள் தோழியான அந்த பாலியல் தொழிலாளியும் சொல்கிறாள். ஹன்ஸ் அந்த பலான காட்சிகளில் நடித்ததன் பின்னணி எதுவும் படத்தில் சொல்லப்படவில்லை.

மகன் எதிர்கால ஹன்சாக மாறக்கூடிய சாத்தியத்தை அறிந்தபின், அவன் தன்னால் ரணமாக்கப்பட்டு, இன்பம் துய்த்து, நடைபிணமாக்கப் பட்டவளை தேடி செல்கிறான். நிதானமாக தற்கொலைக்கு உத்திரத்தில் துளை போடுபவன், எப்போது அந்த முடிவை மாற்றிகொள்கிறான் என்பது தெளிவாக இல்லை.

ஜெர்ட்ரூடை அவன் கவனித்து கொள்ளும் காட்சிகள் கவித்துவமானவை. அவள் உதட்டோரத்தில் ஒட்டியிருப்பதை விரலால் எடுத்து உண்கிறான். உறவு கொள்ளும் போது, உறவுக்கான வேகம் எதுவுமின்றி மிக மெதுவாக படர்கிறான். அவள் அவனை அணைத்து கொள்வது, அவனை அடையாளம் கண்டு கொண்டதன் அறிகுறியாக தெரிகிறது. சாடிஸ இன்பத்தின் வன்மையுடன் உறவு கொண்டவன், அதே பெண்ணுடன் அதற்கு நேர்மாறான மென்மையுடன் படர்கிறான். இந்த மாற்றத்திற்கான சம்பவங்கள், மனமாற்றத்திற்கான தர்க்கம், மனம் மாறிய வாழ்க்கை திருப்பம் என்று எதுவும் படத்தில் முன்வைக்கப்படவில்லை. இரண்டு செய்கைகளும் ஒரே மனிதன் இயல்பாக அமைதியாக வெளிபடுத்துவதாகவே எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது. ஐரோப்பிய சமூகத்தின் முரணான இரண்டு முகங்களை அது குறிப்பதாக படுகிறது.

படத்தில் பின்னணி இசை கிட்டதட்ட கிடையாது அல்லது முழுவதும் கிடையாது என்று நினைக்கிறேன். காட்டில் ஹன்ஸ் செல்லும்போது, மருத்துவமனை வளாகத்தில் ஜெர்ட்ரூடை சந்திக்கும் நீண்ட காட்சியில், உறவு கொள்ளும் இறுதி காட்சியில்.. என்று உணர்ச்சி கொந்தளிப்பாக இருக்க வேண்டிய பல இடங்களில் பின்னணி இசை நம் வாசிப்பில் உட்புகுவது இல்லை. எந்த வித உணர்ச்சியும், காட்சி யதார்த்தத்தை மீறி நம்மிடம் தூண்டப்படுவதில்லை. அந்த யதார்த்தம் சில இந்திய கலைப்படங்கள் போல் மொண்ணை யதார்த்தமாக இல்லை என்பதுதான் கவனிக்க வேண்டியது.

இந்த படத்தை பார்க்கும் போது நினைவுக்கு வந்த Blue Velvet திரைப்படம் பற்றி பிறகு எழுத வேண்டும்.

Friday, November 5, 2010

என் பேட்டி.

தமிழ் பேப்பர் கேட்டதற்கு இணங்க முதன் முதலாக நான் அளித்த பேட்டியயை இங்கு வாசிக்கலாம். பேட்டி கொடுக்கும் அளவிற்கு என்ன செய்திருக்கிறேன் என்கிற கேள்வி எழுந்தால் அது நியாயமே. எனக்கும் அந்த சந்தேகம் பலமாக இருக்கிறது.

Sunday, October 31, 2010

DRAUBEN AM SEE

இந்த விழாவில் பார்த்த முக்கிய படங்களில் ஒன்று இது. நான்குபேர் கொண்ட சந்தோஷமும் அமைதியுமான குடும்பத்தில், கணவன் திடீரென வேலை இழப்பதால் வரும் குழப்பங்கள்; 14 வருடங்களாக வேலைக்கு போகாத மனைவி வேலை கிடைத்து, கணவனுக்கு பதில் போக தொடங்கும் போது, பொறுப்பு நிலையும், அதன் மூலம் அதிகார சமநிலையும் மாறுவதால் வரும் சிக்கல்கள்; இவ்வாறாக குடும்ப சிக்கல்களை சித்தரிப்பதாக கதையை வாசித்து இந்த படத்தை பார்க்கலாம்.

நான் படத்தின் மையப்பாத்திரமான மகள் ஜெஸிகாவின் இருத்தல் பிரச்சனை சார்ந்த படமாக பார்த்தேன். ஜெஸிகாவின் குரலில் படம் முழுவதும் விஞ்ஞானம்/மனிதவியல் சார்ந்த தத்துவத்தனமான தகவல்கள் தரப்பட்டு கொண்டே இருக்கின்றன. மீன்கள் முட்டையிடுவதோடு சரி, தங்கள் குழந்தைகளை அதற்கு பின் பார்ப்பதில்லை, பார்த்தால் அடையாளம் காணவும் முடியாது; big bang நிகழ்ந்த போது சத்தமே இல்லை (சத்தம் எப்படி இருக்க முடியும் என்பது என் சந்தேகம்); பல பழங்குடிகளின் நமக்கு விநோதமாக தோன்றும் பல பழக்க வழக்கங்கள் (இறந்தவருக்கு துணையாக செல்ல, சிலர் தற்கொலை செய்து கொள்வது); இவ்வாறு பல தகவல்கள் கதை நிகழ்வுகளுக்கு இடையில்வந்து, கதையுடன் தொடர்பு படுத்த நம்மை தூண்டுகின்றன.

குடும்பத்தில் குழப்பமும் கசப்பும் மெள்ள தோன்ற, ஜெஸிகா பக்கத்து வீட்டில் புதிதாக குடிவருபவனுடன் நெருங்கி பழகுகிறாள். ஒரு இரவு முழுவதும் அவனுடன் பைக்கில் சுத்துகிறாள். தந்தை அவளை ஜாக்கிரதையாக, பாதுகாப்பாக இருக்க சொல்கிறான்.

வேலைக்கு போகும் அம்மா ஜோக்குகள் பல சொல்பவனுடன் பொதுவெளியிலும் நெருக்கமாகிறாள். கணவன் கிதார் வாசித்து, இயல்பில்லாமல் விநோதமாக பல பேசி, பெரிதாக சிரித்து, பாத்ரூமில் ஷேவ் செய்து, மிளகு பல தூவிய மிளகாய் இடையில் வைத்த பான் சாப்பிட்டு தன் மன அழுத்தத்தை போக்கிகொள்ள முயல்கிறான். ஜெஸிகா இந்த குழப்பங்களை சமாளிக்கும் பாலமாக இருக்க முயல்கிறாள்.

குழப்பங்களுடன் செல்லும் குடும்ப வாழ்க்கையில், யாரும் இல்லாத போது மனைவி ஒரு குழந்தையை பெற்று, அழும் சத்தம் கேட்கும் முன் அதை கொன்று, வீடு முழுக்க ரத்தமாக இருக்கும் நிலையில், ஜெஸிகாவும் தந்தையும் வீடு திரும்புகிறார்கள். யாருடைய குழந்தை என்கிற சந்தேகமும் அவனுக்கு உண்டு. கணவன் ரத்தத்தை கழுவுகிறான். ஜெஸிகாவிடம் 'இந்த விஷயத்தை வீட்டின் உள்ளேயும் விவாதிக்க கூடாது, வெளியே யாருடனும் பேசக்கூடாது' என்கிறான். இங்த சம்பவத்திற்கு பிறகு ஜெஸிகாவிற்கு அந்த குடும்பத்தில் இருப்பது பெரும் பிரச்சனையாகிறது.

ஜெஸிகா மணிக்கட்டை அறுத்து சிலமுறை குளியலறையில் தற்கொலை செய்துகொள்ள முயல்கிறாள். சிறு பிணக்கின் விளைவாக எதிர்வீட்டு காதலன் கழண்டுகொள்கிறான்.

ஒரு நாள் சைக்கிளில் இறக்கத்தில் வரும்போது, பறப்பது போல் கைகளை விரித்து கண்களை மூடிக்கொண்டு வேகமாக வருகிறாள். விபத்து நிகழ்ந்து மண்டையில் அடிபட்டு மயக்கமாகிறாள். ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்ட மயக்கமான ஜெஸிக்காவுடன், அம்மாவும் அப்பாவும் போக பயப்படுகிறார்கள். ஜெஸிகாவின் தங்கை அவளுடன் சென்று, தான் மட்டும் முழுவதுமாக அவளை பார்த்து கொள்கிறாள். 'ஏன் இப்படி செய்தாய்?' என்று கேட்கிறாள். 'நான் பறக்க முயற்சி செய்தேன்' என்கிறாள் ஜெஸிகா. 'உன்னால் பறக்க முடியாது' என்கிறாள். காதலன் வந்து அவளை பார்கிறான். ஹெல்மெட் ஒன்றை பரிசளிக்கிறான்.

சிகிச்சை முடிந்து, வீட்டிற்கு வந்த பிறகு, ஒரு நாள் வேறு அறைகளில் ஜெஸிகாவை காணாமல் பதறி, அம்மா அவளை பாத்ரூமில் கண்டு, கையை அறுத்து கொண்டாளா என்று தேடுகிறாள். இனி அந்த வீட்டில் இருக்க முடியாது என்று ஜெஸிகா முடிவெடுக்கிறாள். அப்பா நீளமாக பேசி தடுத்ததை, வற்புறுத்தியதை மீறி தங்கையுடன் தனியாக குடியேறுகிறாள். இருவரின் பாய்ஃப்ரெண்டுகளும் உதவுகிறார்கள். இருவரும் தங்கள் வாழ்விடத்தை உருவாக்க முயல்கிறார்கள். அப்பா குடியேற்றத்திற்கு உதவ முன்வருவதை, பிறவகைகளில் உறவை பேண முயல்வதையெல்லாம் ஜெஸிக நிராகரிக்கிறாள். கதவை, ஜன்னல்களை மூடி அவனை வெளியே நின்று அழவைக்கிறாள். தொடர்ந்து புகைத்தபடி அவன் செய்த தொலைப்பேசி அழைப்புகளை எடுக்காமல் தவிக்க விடுகிறாள்.

குடும்ப குழப்பங்கள் பற்றியதாக அல்லாமல், பெற்றோர்களுக்கும் மகள்களுக்குமான உறவு முரண்களை, தங்கள் சுயநலம் அதில் ஏற்படுத்தும் சிக்கல்கள் பற்றியதாகவே என்னால் திரைப்படத்தை பார்க்க முடிகிறது. குடும்ப சமனை நிலை நிறுத்த பாடுபடும் ஜெஸிகா ஏன் ஒரு கட்டத்தில் வெளியேறுகிறாள்? பெற்றோர்களின் பாசம், அக்கறை, பொறுப்பு என்பது மீறி, அந்த உறவு சுயநலன்களிலான சார்ந்திருத்தலாகவும், அதிகாரமாகவும் குழப்பமடைகிறது. நம் சூழலில், பல கூறுகளால் உருவான பெற்றோர்களின் அதிகாரத்திற்கு, பிள்ளைகள் வாழ்நாள் முழுவதற்குமான விலையை பின்னாளில் தருவதை காணலாம். ஜெஸிகா அந்த விலை தருவதை மறுத்தும், வீட்டின் சூழலை மேலும் சகிக்க இயலாமலும் வெளியேறுகிறாள். இன்னும் படத்தை முன்வைத்து குடும்ப உறவுகள் மட்டுமின்றி, குடும்ப அமைப்பு பற்றியும் பலவிதங்களில் யோசிக்கலாம்.

Sweaty Beards.

(திரைப்பட விழாவில் பார்த்த சுமார் பத்து படங்களுக்கு இங்கே குறு விமர்சனம் எழுதலாம் என்று இருக்கிறேன். பார்க்கலாம்.)

'Experimental movie' என்று Synopsisஇல் போட்டிருந்தார்கள். புனைவிலும், திரையிலும் என்னென்னவோ பரிசோதனைகள் பற்றி கேள்விப்பட்ட பின்பு, அப்படி எந்த புது சோதனை முயற்சியையும் இந்த படத்தில் காணமுடியவில்லை.

கிபி 900களில் நிகழும் கதை. பேண்ட் சட்டை போட்ட ஒரு நவீன கதை சொல்லியையும் கதையில் கலந்துவிட்டிருந்தார்கள். அவனும் ஒரு வாள்குத்து வாங்கிகொண்டு, வயிற்றில் இறங்கி, முதுகில் வெளிவந்தததுடன் கதையாடிக் கொண்டிருந்தான். இதன் மூலம் கதைக்கு புது பரிமாணம் எதுவும் கிடைத்ததாக தெரியவில்லை. நிறய நுட்பமான வன்முறை, தீமை/நண்மை பிரச்சனை, நிறைய காமெடி;

பல விஷயங்களை கிண்டலடிக்கிறார்கள் என்றும், அடிக்கிறார்களோ என்றும் தோன்றுகிறது; எதை என்று பிடிபடவில்லை. ('தமிழ் படம்' மாதிரி) சம்பந்த பட்ட பிரதிகளை ஒருவேளை தெரிந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அந்த வகையில் பழம்/புது பாத்திரங்களை கலப்பதில் சோதனை ஏதாவது இருக்கலாம்; என் அறிவு/அனுபவ நிறைவின்மையால் அவைகளை உள்வாங்க முடியவில்லையோ என்னவோ.

இந்த கதையை மட்டும் தனியாக எடுத்துக் கொண்டால், ஓரிரு இடங்களில் சிரித்ததை தவிர, வேறு விதங்களில் தேறாததாக, சாதாரண மொக்கையாக இருந்தது. bizarreஆன அதீத வன்முறை காட்சிகள் (யதார்த்ததை மீறியதாக இருப்பதால்) ரசிக்கலாம். விஷம் தடவிய வாளால் கீறப்பட்டு, ஒரு பெரும் பரப்பளவிற்கு சுற்றி துள்ளி குதித்து துடித்து இறப்பது; கடைசி காட்சியில், தன் தந்தையை கொன்ற கொலைகாரனை, (அசட்டு) ஹீரோ மார்பில் வெட்ட, ரத்தம் ஊற்றாக புறப்பட்டு, பின் மழையாக கொட்டுகிறது. ரத்த மழையில் நனைந்தபடி நாயகன்-நாயகி முத்தத்தில் ஆழ்கிறார்கள்.

அநாகரிகத்தை கண்டித்தல்.

பொதுவெளியில் (தனக்கு முன்பின் தெரியாத) அடுத்தவர் சுதந்திரத்தை மதிப்பதை, தமிழர்கள் கற்றுகொள்ளவில்லை என்பதற்கு பல உதாரணங்கள் உண்டு; அடுக்கிக் கொண்டே போகலாம். நம் சூழலை பொறுத்தவரை, நவீன வசதிகள் நம் சுதந்திரத்தை அதிகரிக்கும் அதே நேரத்தில், மற்றவர்கள் சுதந்திரத்தில் எந்த கவலையும் இல்லாமல் குறுக்கிடக்கூடியது. இதற்கான உடனடி உதாரணம் அலைபேசி. பல ஐரோப்பிய நாடுகளில், ஜப்பானில் அலைபேசியை பொது இடங்களில் பயன்படுத்துவதில் ஒரு கவனம் இருக்கும். அரங்கில் நுழைந்தவுடன் முதல் வேலையாக மௌனநிலையில் அலைபேசியை ஆழ்த்துவதை காணலாம். நம் ஊரில் ரயிலில் இரவில் பயணிக்கும் போது, நம் ஆழ்ந்த தூக்கத்தை பற்றி எந்த கவலையும் கொள்ளாமல், பக்கத்து பெர்த்தில் அலைபேசி அலறி, அவர் 'ஹலோ' என்று தொடங்கி, (அந்த காலத்தில் எஸ்டிடியில் சத்தமாக பேசவேண்டும் என்கிற பிரஞ்ஞை மிக )கத்தி கொண்டே இருப்பது சர்வ சாதாரண அனுபவம்.

கடந்த 4 நாட்களாக ஃபிலிம் சேம்பரில் நடந்த திரைப்படவிழாவில் அலைபேசி சத்தங்கள் செய்த அக்கிரமங்கள் கொஞ்ச நஞ்சம் அல்ல. அலை பேசியை அணைத்து வைக்கச் சொல்லி ஒருவர் கேட்டும் தொடர்ந்து ரிங்..ங்கி கொண்டிருந்தது.

சனிக்கிழமை திரைப்பட ஓட்டத்தின் நடுவே ஒருவருக்கு அலைபேசி அழைப்பு. திரைப்படத்தின் பின்னணி இசை, வசனங்களை மீறி சுமார் 5 வரிசை தள்ளியிருந்த எனக்கு எல்லாம் தெளிவாக கேட்கும் வண்ணம் பதிலளித்து கொண்டிருந்தார். ஓரிருவருடன் நானும் திரும்பி 'வெளியே போய் பேசுங்க' என்றேன். அவர் கவனிக்காமல், திரைப்படத்தின் சத்தம் அவரின் உரையாடலுக்கு தொந்தரவாக இருந்ததோ என்னவோ, இன்னும் சத்தமாக தொடர்ந்தார். பிறகு தொடர்ந்தது கூட்டத்தின் அர்ர்சனை. 'டேய் ..வெளியே போய் பேசுடா' என்று ஒரு சத்தம். இன்னும் தொடர்ந்து சில வசவு வார்த்தைகள். அவர் 'அப்புறம் பேசறேன்' என்று மீண்டும் பேசும் சத்தம் கேட்க, 'டேய் ..ஒன்ன செருப்பாலையே அடிபேண்டா' என்று மறு ஒலி.

உண்மையில் அவரின் அலைபேசி சம்பாஷணையை விட இந்த சத்தங்கள் இன்னும் திரைப்படம் பார்பதற்கு இடைஞ்சலானது. பலர் தீவிரமான கவனத்துடன் படம் பார்க்கும் போது, அலைபேசிய ஆசாமி செய்தது அநாகரிகம்தான். ஆனால் அதற்கு நடந்த எதிர்வினை நம் மக்கள் பொதுவெளியில் கொண்டிருக்கும் பொறுமையின்மையை காட்டுவதாகவே தோன்றியது. கத்தியவர்களுக்கு தங்களின் வசவு வார்த்தைகள், திரைப்படம் பார்ப்பவர்களின் கவனத்தை இன்னமும் குலைக்கும் என்றும் தோன்றவில்லை. சாலையில், போக்குவரத்து நெரிசலில் காட்டும் பொறுமையின்மைதான் அந்த அலைபேசியவரின் அநாகரிகத்தை கண்டிக்கும் போது வெளிப்பட்டதாக தோன்றியது. இதே நபர்கள் பல நேரங்களில் -ஒரு கையெழுத்து வாங்க, ரேஷன் கார்டுக்கான வரிசையில், ஒரு மந்திரிக்காக நெடுநேரமாக நிறுத்தப்பட்ட போக்குவரத்து நெரிசலில் பொறுமை காட்டுவதை காணலாம். ஆனால் தனக்கு பழக்க மில்லாத சாதரண அடுத்த நபரிடம் இல்லாத பொறுமையின்மையே இங்கு வெளிபட்டதாக தோன்றியது. (பிறகுதான் கவனித்தேன் அலைபேசிய நபருக்கு வயது 50-60 இருக்கலாம்.) அந்த நபர் அலைபேசியது, அதற்கான மக்களின் எதிர்வினை இரண்டும் நம் சமூக நோயின் ஒரு வெளிபாடாகவே எனக்கு பட்டது.

Sunday, August 8, 2010

கோப்பையிலே குடியிருப்பு.

'கேணியில்' ஷாஜியின் உரையும், பின்விவாதமும் சுவாரசியமாக இருந்தது. முன்தீர்மானிக்கப் பட்ட வலுவான கருத்துக்களை நம்மில் பலர் வந்தடைந்திருக்கும் நிலையில், கருத்து மாற்றம் என்பது ஒரு குறிப்பிட்ட உரையை கேட்ட பின்பு நிகழ்வது என்பதற்கான சாத்தியம் மிகக்குறைவே. ஆனால் முரண்படும் கருத்துக்களை கேட்பது என்பது மாற்றத்திற்காக என்று இருக்க முடியாது. வந்தடைந்த கருத்துக்களை தனக்குள் விவாதித்து கொள்வதற்கும், புதுபித்து கொள்வதற்கும்தான். அந்த வகையில் ஷாஜி உரையாற்றிய கூட்டம் பலருக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று தோன்றுகிறது. அந்தவகையிலான பயன்கள் பற்றியன்றி, நிரடலாக இருக்கும் விஷயங்கள் பற்றி மட்டுமே இங்கே பதிகிறேன். இதை மனதில் வைத்து வாசிக்கவும்.

பல முறை 'உலகின் மூலையில் சின்ன ஒரு இடத்தில் இருக்கிறோம்; நமக்கு பழகிப்போன விஷயங்களை மட்டும் உலகின் உன்னதங்களாக கருதக்கூடாது; உலகின் எட்டுதிக்கிலிருந்தும் கலைத்தாகம் கொண்டு பருகவேண்டும்.' என்கிற கருத்தை வலியுறுத்தினார். அவ்வாறு பருகிக்கொண்டிருப்பவர்களுக்கு இதை திரும்ப திரும்ப கேட்க சற்று எரிச்சலாக இருந்திருக்கும் என்றாலும், தேவையான ஒரு நினைவுபடுத்தலாக இதை கொள்ளலாம். ஆனால் லோக்கல் கலைகளின் அருமையை உணரமுடியாத தன் குறைகளுக்கான சால்ஜாப்பாக இதை சொல்லிவிடகூடாது என்பதுதான் பிரச்சனை. இதற்கு ஒரு உதாரணமாக ஷாஜி பொருந்துவாரா என்கிற கேள்விக்குள் இறங்கவில்லை. ஆனால் சாருவை விட இதற்கு பொருத்தமான உதாரணம் வேறு உண்டா? அந்த வகை உதாரணங்களின் உதார்களை, உலக கலைத்தாகமாக பார்க்கும் அபத்தத்தை ஷாஜி செய்கிறாரா என்பதுதான் தெரியவில்லை.

ஷாஜியின் சில புரிதல்கள் மிகவும் மேலோட்டமானவை என்பது என் கருத்து. உதாரணமாக சலீல் சௌத்ரியின் பாணியை இளையராஜா கைகொள்வதாக சொல்வது. அதற்கு அவர் முன்வைக்கும் ஒரே வாதம், நாட்டிசையையும், மேற்கத்திய இசையையும் சலில்தா இளையராஜாவிற்கு முன்பே கலவை செய்தது. இளையராஜா திரை இசையாக செய்தது எதுவும் கலவை (fusion) அல்ல என்கிற ஆதார அறிவுதான் இளயராஜாவின் இசையை புரிந்து கொள்ள தேவையான ஆரம்ப படி என்பது என் கருத்து. அந்தவகையில் இளையராஜா அளித்த இசைக்கு-உதாரணமாக 'செந்துரபூவே' பாடலுக்கு அதற்கு முன் எந்த முன்னோடி இசையும் கிடையாது, ஷாஜியின் இந்த கூற்று மிக மேலோட்டமான புரிதலை மேதாவித்தனம் என்று நம்பும் தன்மை கொண்டது என்பது என் கருத்து.

நௌஷாத், எம்.எஸ்.வி. இருவரில் யாரையோ ஒருவரை 'லோகிளாஸ் ம்யூசிக் டைரக்டர்' என்றார். நான் அது குறித்த சந்தேகத்தை கேட்டும் எனக்கு தெளிவாகவில்லை. இருவரில் யாரை சொல்லியிருந்தாலும் அது ஒரு அதிரடி அபத்தம் என்பது மட்டுமே என் கருத்து. முகேஷ் ஸ்ருதி இல்லாமல் பாடக்கூடியவர் என்கிற 'தகவலை' வேறு ஒரு விஷயத்தை பற்றி விளக்க முற்படும் போது சொன்னார். (அந்த வேறு விஷயம் வேறு. அதை பற்றி இங்கு பேசவில்லை.) எனக்கு மிக அதிர்ச்சியாக இருந்தது. உதாரணம் தரமுடியுமா என்று கேட்ட போது குறிப்பாக இன்ன பாடலில் விலகியிருக்கிறது என்று சொல்லவில்லை. பொதுவாக சொன்னார். நான் மீண்டும் குறிப்பாக கேட்டபின்பும் எதையும் குறிப்பிட்டு சொல்லவில்லை. சுருதி என்றால் என்ன என்று அடுத்த கேள்வியை நான் கேட்க வேண்டியிருந்திருக்கும். முகேஷ் குரலின் ஒரு குறிப்பிட்ட (தனி)தன்மையை ஸ்ருதியின்மை என்று சொல்ல முடியும் என்று எனக்கு தோன்றவில்லை. இன்னொரு உதாரணமாக இளையராஜா பற்றி கூட சிலர் அவ்வாறு சொல்வது உண்டு. நானும் ஒருமுறை 'மெட்டி ஒலி காற்றோடு..' பாடலை ராஜா சுருதியே இல்லாமல் பாடி அருமையானதாக்கிவிட்டதாக எழுதியிருக்கிறேன். அந்த குறிப்பிட்ட பாடும்தன்மையை ஸ்ருதிவிலகல், ஸ்ருதியின்மை என்று சொல்ல முடியும் என்று எனக்கு இப்போது தோன்றவில்லை. பழகிபோன சட்டகத்தில் தொடர்ந்து சிந்திக்க கூடாது என்று தான் பலமுறை சொன்னதை ஷாஜி நடைமுறைபடுத்த வேண்டும் என்று சொல்ல தோன்றியது.

இதை விட எல்லாம் ஒரு அபத்தம் இளையராஜா நாயின் குரைப்பிலும் சங்கீதம் உண்டு என்று சொன்னது குறித்து பேசியது. இசை என்பது பண்பட்ட ஒலி மட்டுமே, எல்லா ஒலியும் சங்கீதம் என்று தன்னால் ஏற்கமுடியாது என்று சொன்னார். ஞாநியும் நாய்ஸுக்கும், சவுண்டிற்கும் வித்தியாசம் உள்ளது பற்றி விளக்கினார். எல்லா ஒலியும் சங்கீதம் என்று யாரும் எங்கும் சொன்னதாக தெரியவில்லை. எல்லா ஒலியிலும் சங்கீதம் உண்டு என்றுதான் சொன்னது உண்டு. நாயின் குரைப்பை பதிவு செய்தால் அது சங்கீதம் ஆகிவிடும் என்றோ, ஒரு வடிவேலு காமெடியில் சொன்னது போல் எல்லா இடத்திலும் இசையை காண்பதோ அல்ல. இசையின் புனிதத்தை உடைக்கும், எல்லாவற்றிலும் இசையை தேடி அடையாளம் காணும் மனநிலை குறித்தது அது. இன்று இளயராஜாவை சனாதனத்தை இசைத்ததாக சொல்வதற்கு எதிர் உதாரணமாக உள்ளது அவரது கூற்று. நாயின் குரைப்பிலும் இசையை கண்டு அறிவது ஒரு உன்னத மனநிலை. இசையின் மேதை ஏன் அவ்வாறு சொன்னார் என்று கொஞ்ச யோசித்தால் ஏதேனும் புலப்படகூடும். மேலோட்டமாக புரிதல் வந்த பின், பண்பட்ட ஒலி மட்டுமே இசை என்று ஒரு வாக்கியம் அமைத்த உடன் இசை சூட்சுமம் அகப்பட்டதாக நினைத்தால், ராஜா சொன்ன இசை ரகசியம் புலப்பட வாய்பில்லை. மனதை திறந்து வைக்க வேண்டியதை பலமுறை வலியுறுத்திய ஷாஜிதான் கோப்பையை காலியாக வைக்க வேண்டும்.

'பாப் டைலான்' குப்பை என்று ராஜா எப்போது சொன்னார் என்பதை மேற்கோள் காட்ட முடியுமா என்று கேட்கலாமா என யோசித்து, அபஸ்வரம் வேண்டாம் என்று கைவிட்டேன். தமிழில் திரையிசை பற்றிய விமர்சனம் இல்லை என்றார். ஞாநியும் அதற்கான அணுகுமுறைகளை ஷாஜி உருவாக்குவதாக குறிப்பிட்டார். எனக்கு என்ன அணுகுமுறை என்பது சரியாக விளங்கவில்லை. ஆனால், தமிழ் பத்திரிகைகளில் இல்லாவிட்டாலும், திரையிசை பற்றிய பல விமர்சனங்கள் இணையத்தில் தீவிரமான அளவில் உள்ளதாகவே எனக்கு தோன்றுகிறது. அதில் பல போதாமைகள் இருக்கலாம். ஆனால் அதே போன்ற பல பிரச்சனைகள் ஷாஜியின் விமர்சனங்களிலும் உண்டு என்பதே என் கருத்து.

Thursday, July 1, 2010

பிச்சைக்காரர்களின் சென்னை.

'பிச்சைக்காரர்கள் இல்லாத சென்னை' தொடர்பான சென்னை மாநகராட்சியின் நடவடிக்கைகள் குறித்து, அ.மார்க்ஸ் பங்களிப்பில் உண்மை அறியப்பெற்று, லும்பினி தளத்தில் வெளியாகியுள்ள அறிக்கை முக்கியமானது. இப்படி ஒரு நடவடிக்கை உண்மையான தீவிரத்துடன் எடுக்கப்பட்டு, பிச்சைக்காரர்களை இல்லாமலாக்குவது என்ற நோக்கத்தையும் உண்மையிலேயே அது நிறைவேற்றுமானால், அதை ஒரு இன அழிப்பு (ethnic cleansing) என்கிற வகையில்தான் பார்க்க முடியும். கேட்கவோ பிரதிநிதிக்கவோ யாரும் இல்லாத அதிகாரமற்ற மக்கள் மீதான பெரும் வன்முறையாகத்தான் இது முடியும். மனித உரிமைகள் பற்றிய அறிவும் சுய உணர்வும் ஊட்டப்பட்டிராத, சாதிய மனோபாவமும் கொண்ட பணியாளர்களை எல்லா தளங்களில் கொண்ட, நம் அரசினால் மேற்கொள்ளப் படும் இப்படிப்பட்ட ஒரு பணி, நாய்களை இல்லாமலாக்கும் அதே மனநிலையுடனேயே நிகழ வாய்ப்பிருக்கிறது.

ஆனால் நாய்களை ஒழிக்கும் பணியையும் நமது அரசு துல்லியமாக நிகழ்த்தவில்லை என்கிற யதார்த்தம்தான், இப்படி ஒரு இன அழிப்பு பணி அதன் உண்மையான பொருளில் இங்கே நிகழாது என்று தோன்றுகிறது. நமது அரசு பணியாளர்களின் செயல்திறனின்மையோ, ஒளிந்து கொண்டிருக்கும் 'மூன்றாம் உலகத்து' மனிதாபிமானமோ கூட இது முழுமையாக நடைபெறாமல் போக காரணமாக அமையலாம். பிச்சைக்காரர்களை இல்லாமலாக்கும் பணி துவங்கப்பெற்று, அறிக்கையில் விவரிக்கப்பட்டது போன்ற மனித உரிமை மீறல்களுடன் சில நாட்கள் தொடர்ந்து, மேலும் சில நடைமுறை போலிஸ் சார்ந்த வன்முறைகளுடன் இது கைவிடப்பட கூடும் என்று நினைக்கிறேன். அது எப்படி நிகழ்ந்தாலும் இதை எதிர்ப்பதும், இதற்கு எதிராக பேசுவதும் முக்கியமானது. அதை இந்த அறிக்கையை தயாரித்தவர்கள் செய்ய தொடங்கியிருப்பது நல்ல விஷயம்.

பிச்சை தொழிலை அழிக்க அரசு உண்மையில் எடுக்க வேண்டிய துரித நடவடிக்கை வேறு; திட்டமிட்டு பிச்சைக்கார்களை உருவாக்கி பணியிலிட்டு, அதை ஒரு தொழில்களமாக மாற்றி, சுரண்டி கொண்டிருக்கும் மாஃபியாக்கள் மீது நடவடிக்கை எடுப்பது. இந்த மாஃபியாவோ ஆளுங்கட்சி, எதிர்கட்சி தொடங்கி அரசு மற்றும் தன்னார்வ நிறுவனங்களுடன் தொடர்புகளை பேணும் பின்னலை கொண்டது. இதை அழிக்கும் நடவடிக்கையில் இறங்கவோ, தொடரவோ நிச்சயமாக அரசு முன்வராது. ஆகையால் பிச்சைக்காரர்களை ஒழிப்பது என்பது அரசு நமக்களிக்கும் யதார்த்தத்தின் படியே சாத்தியமில்லை. சாத்தியமில்லாத ஒன்றை இவர்கள் செய்யதொடங்கி, சாத்தியமாக்கப் போவது மற்ற விளிம்பு நிலை மனிதர்கள் மீதான வன்முறையை மட்டுமே.

இந்த அறிக்கையின் ஒரு வரி முக்கியமானது.

/எனினும் பிச்சைக்காரர்களை ஒழித்துக்கட்டப்பட வேண்டியவர்களாக பொதுமக்கள் கருதவில்லை என்பதற்கு நமது கோயில்கள் மற்றும் புனிதத்தலங்களில் குவிந்துள்ள பிச்சைக்காரர்களே சான்று./

இங்கே புனித தலங்கள் என்று சர்ச் மசூதிகளை குறிப்பிடுகிறார்கள் என்று நினைக்கிறேன். ஒரு பக்கம் சாதியம் சார்ந்த உயர்வு தாழ்வை நம்பும் அழுகிய மனநிலை கொண்ட நம்மக்களின் இன்னொரு நெகிழ்வான பக்கத்தை இந்த வரி சொல்வதாக நான் நினைக்கிறேன். இந்த இழையில் மேலும் சிந்தனையை வளர்த்தெடுத்தால் நம் சமூகத்தின் சிக்கலான ஒரு முடிச்சை புரிந்து கொள்ள முடியலாம் என்று எனக்கு தோன்றுகிறது.

கடைசியாக உறுத்துகிற ஒரு விஷயத்தை சொல்ல வேண்டும். அ.மார்க்ஸ் இப்போது இந்த வன்முறையை எதிர்த்த ஒரு சரியான நிலைபாட்டிலும், நடவடிக்கையிலும் இருப்பது நல்ல விஷயம். ஆனால் ஜெயமோகனுக்கு எதிரான ஒரு எதிர்வினையில், அ.மார்க்ஸ் 'பாகிஸ்தானில் பிச்சைக்காரர்களே இல்லை' என்று ஒரு போடு போட்டதை எப்படி விளங்கிக் கொள்ள வேண்டும் என்று புரியவில்லை. அ.மார்க்சின் அந்த தகவல் பிழையானது என்பதும், பாகிஸ்தான் நாடே மற்ற நாடுகளிடம் ஒரு ஒட்டு மொத்த பிச்சைக்காரன் தான் என்பதும், ஐரோப்ப்பாவின் முக்கிய நகரங்களின் பிச்சைக்காரர்களின் பெரும் விழுக்காடு பாகிஸ்தானின் பங்களிப்பு என்பதும் முற்றிலும் வேறு விஷயம். அதை பற்றி பேசுவது இங்கே நோக்கமல்ல. உண்மையிலேயே ஒரு நாடு பிச்சைக்காரர்களை ஒழித்திருந்தால், அதுவும் பாகிஸ்தான்/இந்தியா போன்ற ஒரு நாடு ஒழித்திருந்தால் (அல்லது இல்லாத ஒரு தோற்றத்தை ஏதோ ஒரு வகையில் உருவாக்கியிருந்தால்), அது பெரும் வன்முறையின் பின்னணியிலே நிகழ்ந்திருக்கும் என்பதை, அ.மார்க்ஸ் போன்ற பலவகை அனுபவங்கள் கொண்ட அறிஞருக்கு எப்படி சுய உணர்வில் உதைக்காமல் போயிற்று என்று வியப்பாக உள்ளது. இவ்வாறாக சில சந்தர்ப்பங்களில் தான் எடுக்கும் சரியான நிலைபாடுகளை வேறு சந்தர்ப்பங்களில் சொதப்புபவராக அ.மார்க்ஸ் இருப்பதை எந்த மாதிரி எடுத்துக் கொள்வது என்று குழப்பமாகத்தான் இருக்கிறது.

இவை இப்படியிருக்க நமது அரசால் பிச்சைக்காரர்களை, குறிப்பாக அதன் பின்னணியில் உள்ள மாஃபியாவை சிறு அளவில் கூட ஒழிக்க முடியாது. ஒழிக்க மனமும் கிடையாது. அது ஊழலை ஒழிப்பது போல சிக்கலானது. இந்த நிலைமையில் இப்படி ஒரு நடவடிக்கை நம் சமுதாயத்தின் தினநிகழ்வான விளிம்பு மக்கள் மீதான உதிரி வன்முறையாக மட்டுமிருந்து கிடப்பிற்கு போகும், ஒன்று சேர்த்து இறுக்கப்பட்ட ஒரு பெரும் வன்முறையாக உருவெடுக்காது என்று நம்புவோமாக. அவ்வாறு உருவாகாமல் தடுப்பதும், உதிரி வன்முறைகளையும் எதிர்த்து குரல் கொடுப்பதும் மனித உரிமை குறித்து கவலை கொண்டவர்களின் கடமை.