Tuesday, March 9, 2010

'Disgrace'

disgrace திரைப்படம் குறித்த 2 விமர்சனங்களை இன்று படித்தேன். ஒன்று எஸ். ராவினுடையது, மற்றது ராஜசுந்தராஜனுடையது. இரண்டுமே சிறந்த நுட்பமான விமர்சன பார்வைகளை கொண்டது; வாசிக்க சுவராசியமாக இருந்ததாகவே கருதுகிறேன். சற்று வேறு வகையில் தோன்றும் சில கருத்துக்கள் மட்டும் இங்கு. இருவரது விமர்சனங்களிலும் சில தகவல் பிழைகள் இருப்பதாக எனக்கு படுகிறது. (உதாரணமாக, 1. எஸ்ரா சொல்வது போல லூசி மீதான பாலியல் வல்லுறவு பேராசியர் டேவிட்டின் கண்ணெதிரே நடைபெறவில்லை. இது முக்கியமான ஒரு முடிச்சு என்பதாகவே நான் கருதுகிறேன். படத்திலும் இதை வலியுறுத்தி இரண்டு இடங்களில் வசனங்கள் வருகிறது; 2. ராஜசுந்தர்ராஜன் சொல்வது போல மெலனி என்ற மாணவி கருப்பின பெண்மணி கிடையாது; கலப்பின பெண்மணி. அவள் நடிக்கும் ஒரு பகடி நாடத்தில் `here comes the coffee' என்று ஒரு வசனம் வருகிறது.)

எஸ்ராவின் விமர்சனம் என்னை சற்று ஆச்சர்யத்திலாழ்தியது. 'கசக்கும் காமம்' என்ற தலைப்பில் பாலியல் சார்ந்த பிரச்சனைகளை கையாளும் திரைப்படமாக அவர் வாசித்திருப்பது. அத்தோடு ஆப்பிரிக்க குற்றவுலகம் சார்ந்த புறச்சூழலை கதைப்பின்னணியாக மட்டும் கொண்டிருப்பதாக அவர் சொல்வதாக தோன்றுகிறது. படம் முடிந்தவுடன், விவாதத்தை துவக்கிய பைத்தியக்காரன் இதை காமம் சார்ந்த பிரச்சனைகளை அணுகும் படமாக பார்க்க முடியுமா என்று கேட்டார். என் கருத்தாக அப்படி பார்க்க முடியாது என்றேன். பாலியல் தொடர்பான பிரச்சனைகளை படம் தீவிரமாக அணுகினாலும் படத்தின் பிரச்சனைகள் கருப்பின, வெள்ளையின கலாச்சாரங்களின், நியாயங்களின், மதிப்பீடுகளின், சுதந்திரம் போன்ற கருத்தாக்கங்களின் முரண்களும், மோதல்களுமாகவே இருப்பதாக எனக்கு பட்டது.

அதே நேரம் படம் வெள்ளையர்களின் வன்முறை பற்றி காட்சிப்படுத்தாமல் கதை பேசுகிறது என்பது என் கருத்து. குறிப்பாக எஸ்ரா "அதே நேரம் கறுப்பர்களை விட வெள்ளையர்களே அதிகம் வன்முறையால் பாதிக்கபடுகிறார்கள் என்று கூட்ஸி சுட்டிக்காட்டுகிறாரோ என்ற உள்அரசியலும் புரிகிறது. படம் முழுவதும் கறுப்பர்கள் வன்முறையின் அடையாளங்கள் போலவும் வெள்ளைக்கார்கள் சமாதானப்புறாக்கள் போலவும் சித்திரிக்கபடுகிறார்கள். அது தான் படத்தின் முக்கிய உறுத்தல்." என்பது போல என்னால் பார்க்க முடியவில்லை. தென்னாப்பிரிக்க பின் apartheid படங்களை அது குறித்த (ஏதோ) ஒரு அரசியல் கூற்றாக பார்க்காமல் இருக்கவியலாது என்றே தோன்றுகிறது. படம் மிக subtle ஆக அதை அணுகியிருக்கிறது என்பது என் கருத்து.

ராஜசுந்தர்ராஜன் பேராசிரியர் டேவிட் மாணவி மெலானியை வேட்டையாடியதாக கதைசொல்கிறார். அது சரியான வார்த்தையாக எனக்கு தோன்றவில்லை. நேரடியான பொருளில் அவர் செய்தது ரேப் எனப்படும் பாலியல் வன்முறை அல்ல. ஒப்புதலுடந்தான் அது நடந்தது என்று ஒருவர் வாதம் செய்யும் சாத்தியமுடைய ஒரு செயல்தான். அதே நேரம் அந்த மூன்று கருப்பிளைஞர்கள் செய்தது நேரடியான பொருளில் கூட்டு பாலியல் வல்லுறவு. இவ்வாறு சொல்வதன்- அதற்கு பின்னான ஜனநாயம், ஒப்புதல் என்ற வார்த்தைகளின்-முரண்களை படம் பார்பவர்களின் உள் விவாதத்திற்கு விடுவதாக எனக்கு தோன்றுகிறது.

படம் இவ்வாறாக பல கேள்விகளை நம்முள் விவாதமாக்குகிறது. இது குறித்து விரிவாக எழுத விரும்புகிறேன் என்றால் அது என்னை நானே செய்துகொள்ளும் நக்கலாகிவிடும். எனினும் விருப்பம் யதார்த்தமானால் நல்லது; ஆகாவிட்டால் இங்கே மீண்டும் ஒரு குட்டி பதிவை குறிப்புகளாக எழுதுவேன்.

No comments:

Post a Comment