Saturday, March 13, 2010

ஊழலும் தமிழகமும்.

தமிழ்நாட்டின் பல விதமான சீர்கேடுகளை சகிக்கவியலாமல், தமிழ்நாட்டை விட்டு வெளியேறியதாக, வெங்கட்சுவாமிநாதன் தொடர்ந்து பல கட்டுரைகளில் பேட்டிகளில் சொல்லி வந்திருக்கிறார். இந்த தொடர்சியில் மீண்டும் தமிழ் நாட்டுக்கு வந்தபின் ஒரு ரேஷன் கார்டு பெறுவதில் எதிர்கொண்ட ஊழல் சார்ந்த பிரச்சனைகளை முன்வைத்து திண்ணையில் எழுதியிருந்தார். அந்த கட்டுரையை முன்வைத்து நான் இட்ட ட்விட்களை சேர்த்து மாற்றி இங்கே குட்டி பதிவாக்குகிறேன்.

தமிழ்நாட்டை விட லஞ்ச லாவண்யம் ஒரிசாவில் குறைவு என்று வேசா சொன்னால், அதை அவர் மனைவி கூட மனதாரா நம்புவாரா என்று எனக்கு சந்தேகமாக இருக்கிறது. ஒரிசாவின் ஊழல் சிக்கல்கள் எனக்கு சரியாக தெரியாது. ஆனால் உத்தர பிரதேசத்தின் சிக்கல்கள் தமிழ்நாட்டைவிட அதிகம் மட்டுமில்லாமல் அவமதிப்பும், சில இடங்களில் வன்முறையும் கொண்டது என்றறிவேன். திராவிட இயக்க ஆட்சிகள் மீதான தீராத வெறுப்பு இல்லாவிடின் இந்த விஷயம் எளிதில் புரியும்.

லாஞ்சா லாவண்யத்தை விட ஒரிசாவில் எதிர்கொள்ள வேண்டிய அப்பட்டமான பிரச்சனை ஜாதி வெறி. ஒரு ஒரிசா பல்கலை கழகத்தில் இரண்டு மாதங்கள் தங்கியிருந்ததே எனக்கு தாங்கவில்லை. ஒருவேளை இன்னும் நான் கால் வைக்காத குஜராத்தை விட மேலாக இருக்கலாம். `Mandal deserves sandals' என்கிற சுவர் வாசகங்களுடன் பல்கலை கழகம் வரவேற்றது. பல்கலை கழகத்தில் (வேலைக்காரர்கள் தவிர) டிபார்ட்மெண்டில் சந்தித்த அத்தனை பேரும் பார்பனர்கள். ஜாதியின் இருக்கத்தை/ஒழுங்கை நகர் முழுவதும் உணரலாம்.

இந்தியாவிலிருந்து வெளியே சில ஆண்டுகள் வாழ நேர்ந்த போது லஞ்சம், மூன்றாம் உலகம் என்ற வாழ்நிலையுடன் அதற்கு இருக்கும் உறவு, நமது சாதிய அமைப்புடன் அதற்கு இருக்கும் உறவு என்று நிறைய யோசித்திருக்கிறேன். அதை பற்றி விரிவாக எழுத வேண்டும். ஆனால் தமிழ்நாட்டில் எதிர்கொள்ளும் (குறிப்பாக எளிய மக்கள் எதிர்கொள்ளும்) ஊழலை எந்த வகையிலும் நியாயப்படுத்தவியலாது. அதன் மீதான கோபம் என்னை இந்தியன் படத்திற்கு கூட ஆதரவாக்குகிறதுதான்.

இந்தியன் படத்தை பற்றி ஒரு விர்மர்சனம் வந்தது. அரசியல்வாதிகள், உயரதிகாரிகளின் ஊழலை பற்றி படம் பேசாமல் சாதாரண ஊழல்களை பற்றி படம் பேசுவதாக சொன்னார்கள். விமர்சனம் வைத்தவர்கள் ஒரு விஷயத்தை தவற விட்டு விட்டார்கள். முன்னேறிய நாடுகள் என்று சொல்லப்படும் நாடுகளிலும் அரசியல்வாதிகளின், உயரதிகாரிகளின் ஊழல் என்பது யதார்த்தமாக உள்ள ஒரு விஷயம்தான். அங்கே இல்லாமல் நம் நாட்டில் இருக்கும் விஷயம் சாதாரன அரசு ஊழியர்கள் தங்கள் கடமையாக செய்ய வேண்டிய வேலைகளுக்கு கூட வாங்கும் லஞ்சமும், அதற்கான கறாரான வழிமுறைகளும். இதுதான் உண்மையில் ஏழை எளிய மக்களின் அன்றாட வாழ்வை பாதிப்பதாகவும், வாழ்வதையே ஒரு போராட்டமாக மாற்றுவதாக உள்ளது. இந்த பிரச்சனையை முன்வைத்து நிகழ்வதுதான் இந்தியன் திரைப்படத்தின் கதை.

ஆகையால் நான் ஏதோ ஒரு கட்டத்தில், வேறு காரணங்களுக்காக லஞ்சத்தையும் ஊழலையும் சகஜமாக்கி கொண்டு போவதை ஆதரிக்கவில்லை. ஜாதி சார்ந்த வேறு அரசியல்களை முன்வைத்து ஊழலின் தீவிரத்தை உணர்ந்து கொள்வதை மழுங்கடிப்பதிலும் ஒப்புதல் இல்லை.

ஆனால் மூன்றாம் உலகம் என்ற சூழலில், வேறு பல பாதிப்புகளின் நிர்பந்தங்களால், ஊழல் என்பது ஒரு தவிர்க்க முடியாத சமூக யதார்த்தம் என்றாகி போகிற நிலையில், லஞ்சம் வாங்கும் உரிமையை சாதிகளுக்குள் ஒருவகையில் திமுக ஜனநாயகப்படுத்தியுள்ளதாக சொல்வேன். அக்கிரகாரத்தில் மற்றவர்கள் வீடுவாங்க தொடங்கிய பிறகு தமிழ்நாட்டை விட்டு வெளியேறியவர்களுக்கு இதெல்லாம் விளங்க கூடிய விஷயமில்லை.

No comments:

Post a Comment