Thursday, November 8, 2012

வரலாற்றாறு.

(ட்விட்டர் விவாதத்தினிடையில் எழுதியது)


ரஹ்மான் நேரடியாக இளையராஜாவிடம் என்ன கற்றார், பெற்றார் என்பது தெளிவில்லை; அது குறித்த விவரிப்பை அவர் நேர்மையாக முன்வைப்பார் என்று எனக்கு தோன்றவில்லை. ஒருவேளை ரஹ்மான் ராஜாவுடன் பணியாற்றியிருக்கவே இல்லையென்றே வைத்துகொண்டாலும்கூட, ராஜாவின் 16 வருட பயணமின்றி ரஹ்மானின் இசை தோன்ற வாய்ப்பில்லை. ராஜாவின் பாணியை ரஹ்மான் பின் பற்றினார் என்று சொல்லவரவில்லை (ஒரளவு சிலவற்றை பின்பற்றினார் எனினும், பின்பற்றுவது சாத்தியமில்லை என்பது வேறு விஷயம்). ரஹ்மான் தந்த இசையை 80கள் இசையின் நாம் முற்றிலும் விளங்கிகொள்ளகூடிய இயல்பான பரிணாம மாற்றமாகவே பார்க்கமுடியும் (வளர்ச்சி என்று நான் இங்கு வேண்டுமென்றே சொல்ல விரும்பவில்லை). ரஹ்மான் தனக்கே தனித்துவமான பல சோதனைகளையும் புதுமைகளையும் செய்தார். அவை முன்னதின் தொடர்ச்சியாகயே நிகழ்ந்தது . மாறாக ராஜா செய்தது குவாண்டம் இயற்பியலின் தோற்றம் போன்ற ஒரு புரட்சி; அது அதற்கு முன்னான தமிழ் திரையிசையின் தொடர்ச்சியயாவும், தொடர்பறுந்த பாய்ச்சலாகவும் ஒரே நேரத்தில் நிகழ்ந்தது. இதை பற்றியெல்லாம் விரிவாக பேசலாம். இதை புரிந்துகொண்டவர்கள் ஏற்றுக்கொண்டவர்களுடன் மட்டுமே இப்போதைக்கு பேச விழைகிறேன். 

இங்கே கவனிக்க வேண்டியது ராஜா தொடர்ந்து தனக்கு முந்தய இசை முன்னோர்களை தெளிவான வார்த்தைகளில் அக்னாலெட்ஜ் செய்துள்ளது. ஜீகே வெங்கடேஷை குரு என்கிறார்; எமெஸ்வியும் ராமமூர்த்தியும் துப்பிய எச்சிலாக தன் இசையை சொல்கிறார். இது மட்டுமில்லாது தன்னுடய எல்லா உந்துதல்களையும், நம்மால் எளிதில் கண்டுபிடிக்க இயலாத பல உந்துதல்களையும் நேர்மையாக முன்வைத்திருக்கிறார். மாறாக ரஹ்மான் திரையிசையில் தான் ஏறி நிற்கும் தோள்களையும் தூண்களையும் முறையாக அக்னாலெட்ஜ் செய்து நானறியேன். ஏதோ அங்கொன்று இங்கொன்றாக சம்பிரதாயமாக சொன்னது மட்டுமே. 

ரஹ்மான் புயலாக நுழைந்து, பூகம்பமாக புகழ் பெற்ற பின், ஒரு குமுதம் பேட்டியில் தனக்கு பிடித்த தன்னை பாதித்த இசையமைப்பாளர்களாக எம்மெஸ்வியையும் டி.ராஜேந்தரையும் குறிப்பிட்டார். அதை வாசித்து அன்று கொதிப்படைந்தேன். (இந்த தகவலை அண்மையில் ராஜேந்தர் சொல்லியிருப்பார்; பலர் ராஜேந்தர் உடான்ஸ் விடுவதாக எடுத்து கிண்டலடித்திருப்பார்கள். ஆனால் ரஹ்மான் சொன்னதான செய்தி உண்மை.) இந்நிலையில் நேரடியாக ராஜாவுடன் பணியாற்றியதன் மூலம் பெற்றதை எல்லாம் ரஹ்மான் ஒருநாளும் நேர்மையாக முன்வைக்க போவதில்லை. 

ராஜாவின் செல்வாக்கை ஒழிக்க பாலசந்தர் மணிரத்தினம் போன்றவர்களால் ரஹ்மான் உருவாக்கப்பட்டதான கதை இன்று நமக்கு தெரியும். அது அப்படியே உண்மையெனில் அன்று ரஹ்மானுக்கு ஒரு தொழில் சார்ந்த நிர்பந்தம் இருந்திருக்க கூடும். ஆனால் அதற்கு பின்னும் அவர் வெற்று உபசார வார்த்தைகளை தவிர பெரிதாக பேசியதாக தெரியவில்லை; தெரிந்தால் மகிழ்வேன்.

4 comments:

  1. இளையராஜா மீதான குறைபாடுகள், குற்றச்சாட்டுகள் தாக்குதல்கள் என்று இதுவரை நான் கேள்விப்பட்ட சிலவற்றை கடந்த அரைமணி நேரத்தில் நினைவு கூற முடிந்ததை கீழே தொகுத்துள்ளேன். இவை இப்போதைக்கு எழுதும் போக்கில் நினைவுக்கு வந்தவை மட்டுமே.

    ReplyDelete
  2. ஆணவம் மிகுந்தவர்; இவரது ஆணவத்தினாலேயே பல இயக்குனர்கள் இவரை அழைப்பதில்லை. ஒரு இயக்குனரிடம் வாயை கொடுத்து கன்னத்தில் அறை வாங்கினார்; அவரது ஈகோ அடிவாங்கிய அந்த நிகழ்விலிருந்து அவரது சரிவு தொடங்கியது. வைரமுத்து மீது காரணமின்றி தீராத வன்மம் கொண்டிருப்பவர். மாறாக வைரமுத்து இன்னமும் ராஜா மீது அன்பு கொண்டு கவிதை எழுதுபவர். தன் நிகழ்ச்சியின் மேடையில் தன் படம் மட்டுமே இருக வேண்டும் என்று சொன்னார்; தன் நிகழ்ச்சிக்கு முன் வேறு நிகழ்ச்சிகள் எதுவும் நடத்தப்படக்கூடாது என்று நிபந்தனை விதித்தவர்; அதனால் அல்பமானவர். பணத்தை ஆடம்பரமாக செலவழித்தார்; படாடோபமாக பிறர் பணத்தில் வாழ்ந்தார்; வங்கிகளிடம் இருந்து வாங்கிய கடனை திருப்பி தரவில்லை; அது மக்களின் பணம். ஜவுளிக்கடைகள் பலவற்றில் கடன் வைத்து திருப்பித் தரவில்லை. இன்னும் எத்தனையோ பேருக்கு பணம் திருப்பி தரவில்லை. தொலைத்த காசை கண்டு பிடித்து கொடுத்தவருக்கு ஒரு நன்றி கூட சொல்லவில்லை. ரசிகர் எழுதிய கடிதத்திற்கு பதில் போடவில்லை. திருவாசகம் சிம்ஃபனியில் ஜெகத் காஸ்பரிடம் நன்றியில்லாமல் நடந்து அவமரியாதை செய்தவர்; திருவாசகம் விற்பனையில் பெரும் நஷ்டம் ஏற்பட காரணமாக இருந்தவர். திருவாசகத்திற்காக அரசு உதவியை பெற்று மறைமுகமாக அரசு பணத்தை திருடினார். ஆன்மீகம் பேசுபவர்; போலி ஆன்மிகம் பேசுபவர்; பிரமண அடிவருடி; அசைவம் உண்ணாதவர்; அசைவ உண்ணும் பழக்கத்தை மதிகாதவர். புகழ்மோகம் கொண்டவர்; அதற்காக பல ஸ்டண்டுகளை நடத்துபவர். பாவலர் வரதராஜன், பாப் மார்லெயை குப்பை என்றார்; கதாரை குப்பை என்றார்; அடுத்து பாப் டைலனை கூட குப்பை என்றார். மலையாள கவிஞர் ஒன்வி குருப்பை பற்றி மோசமாக பேசினார். தன் பாட்டு காப்பியடிக்கப்பட்டதற்கு கோபப்பட்டார். ஆனால் அவரே சில காப்பிகள் அடித்தார். உதாரணமாக 'பா' திரைப்படத்தில் 'கும்சும்..' பாட்டு "இஸ்தான் புல்..' என்ற பாட்டிலிருந்து காப்பியடிக்கப் பட்டது. ஆபா, போனிஎம் இசையை திருடினார்.

    ReplyDelete
  3. அவர் ஒரு தலித் பார்ப்பனர்; பூணூல் அணியாவிட்டாலும் நரம்பையே பூணுலாக கொண்டவர். முல்லை பெரியார் நிகழ்வின் போது ஜாய் ஆலுக்காஸ் ஆதரவுடன் இசை நிகழ்ச்சி நடத்தினார். மாவீரர் மாதத்தில் வேண்டுமென்றே சிங்கள அரசிடம் கைக்கூலி பெற்று கனடா நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தார். பெரியார் படத்திற்கு இசையமைக்க மறுத்தார்; பெரியாரை சிலைக்கு மாலையிட மறுத்தார். ரமணரை பற்றி பாடினார்; புருஷசுக்தத்திற்கு இசை வடிவம் தந்தார். இவ்வாறு இந்துத்வ ஆதரவாளராக திகழ்ந்தார். யுவனுக்கு ஏதோ ஒரு விலை உயர்ந்த கார் வாங்கி தந்தார். ('யுவனுக்கு இந்த கார் வாங்கி தர்ரான்.. திருவாசகம் இசையமைக்க பணம் இல்லைன்றான்..") தன் பழைய வாழ்க்கையை நினைத்து பார்க்காதவர். தான் ஜாதி பற்றிய உணர்வு இல்லாதவர். தலித்களுக்காக குரல் கொடுக்காதவர். ஒரு கழுகின் உயரத்திற்கு பறந்து கழுகாகவே மாறி விட்டவர். சனாதனத்தை அசைக்காமல் இசைத்தவர். தன் ஜாதியை குறிப்பிட்டதற்காக கே ஏ குணசேகரன் மீது வழக்கு தொடுத்தவர். 'ஆசை நூறுவகை..' பாட்டை தான் அனுமதித்ததை விட அதிகமாக பயன்படுத்தியதற்காக ராம் கோபால் வர்மா மீது வழக்கு போட்டவர். விஞ்ஞானம் என்றால் என்னவென்று அறிவில்லாதவர். அதை முடம் மூடம் என்பவர். எஸ்பிபி மீது பொறாமை கொண்டவர். அவரை ஒழித்துக் கட்ட முயற்சித்தவர். பிள்ளை பாசத்தால் 'நீதானே என் பொன் வசந்தம்' படத்தில் யுவனை பாடவைத்தவர். பாரதிராஜாவை பற்றி மோசமாக பேசியவர். ரஹ்மானை மதிக்காதவர். ரஹ்மானின் சாதனைகளை அங்கீகரிக்காதவர். ரஹ்மானுக்கு பத்மபூஷன் கிடைத்த போது பாராட்டாமல்' 'I can only feel for myslelf' என்றவர். தன் சிம்பனியை வெளியிடவில்லை; சிம்ஃபனி எழுதினாரா என்பதே சந்தேகம்; எழுதியதற்கான ஆதாரம் இல்லை. சிம்ஃபனி எழுதியதாக பொய் சொல்லி ஃப்ராடு வேலை செய்தவர். அவரது திருவாசகம் உண்மையில் ஆரட்டோரியா இல்லை. ஹிந்தி இசையமைப்பாளர்கள் பற்றி தவறான செய்தியை மேடையில் சொன்னவர். மலேசியா வாசுதேவனை அவரது கடைசி காலத்தில் போய் பார்க்காதவர்; மலேசிய வாசுதேவனுக்கு உதவாதவர். தம்பி கங்கை அமரனுடன் கோபம் கொண்டு பேசாதவர். அவரையும் அவர் குடும்பத்தையும் ஒதுக்கி வைத்திருப்பவர். கங்கை அமரனுக்கு தர வேண்டிய காம்பையர் வேலையை பார்திபனுக்கும், பிரகாஷ்ராஜுக்கும் தன் நிகழ்ச்சிகளில் கொடுத்தவர். தன்னிடம் வேலை பார்க்கும் இசை கலைஞர்களுக்கு ஒழுங்காக சம்பளம் தராதவர்; தன்னிடம் வேலை பார்ப்பவர்கள் பற்றி அவர்களின் முதுகுக்கு பின்னால் கேவலமாக பேசுபவர். கேஸட்டுகளில் சிடிக்களில் வாத்தியங்களை இசைத்தவர்களின் பெயர்களை (ரஹ்மான் செய்வதுபோல்) குறிப்பிடாதவர். பாட்டுக்கு மெட்டு என்று இல்லாமல் தன் இசைக்கு பாட்டு போடும் வழக்கத்தை கொண்டு வந்தவர். திருவாசகத்திலேயே முதலில் மெட்டை தேர்ந்தெடுத்து விட்டு, பின்பு அதற்கு ஏற்ப பாடல்களை கண்டுபிடித்தவர். பல பாடல்களை பவதாரிணியை பாடவைத்து கெடுத்தவர். மேலும் பல பாடல்களை சுருதி இல்லாமல் தான் பாடி கெடுத்தார். மாண்டு ராகம் ஒரு கர்நாடக ராகம் என்று தவறான தகவலை தந்தவர்; அவருக்கு கர்நாடக இசை ஒழுங்காக தெரியாது. இன்றய திரை இசை தரம்குறைந்தது என்றார்; ஆனால் யுவன் சங்கர் ராஜா இசை பற்றி குறை சொல்லவில்லை. திரையிசையில் ஆன்மா இல்லை என்றார். அவரது பல பாடல்களுக்கு உண்மையில் இசையமைத்ததே ரஹ்மான்தான். 'How to name it' 25வது ஆண்டு விழாவிற்கு நரசிம்மனை அழைக்கவில்லை; அதன் ஒரிஜினல் கேஸட்டில் நரசிம்மன் பெயரை போடவில்லை. அற்பமான மனிதர்; மனிததன்மை இல்லாதவர். மூகாம்பிகை கோவிலுக்கு காசு கொடுத்தார்; ஆனால் திருவாசகத்திற்கு காசு இல்லை என்றார். எம் எஸ் விஸ்வநாதன் இசை குறிப்புகள் எழுதி இசையமைப்பதில்லை என்று குறை சொன்னார். நவபார்ப்பனர்; தன்னை பார்பனர்களை விடவும் உயந்தவராக கருதிக்கொள்பவர். கவிதையைவிட இசையே சிறந்தது என்று நினப்பவர். அதை நிறுவ படாதபாடுபடுபவர். "தாமரை மலரில் மனதினை வைத்து.." என்ற கண்ணதாசனின் வரிகளில் அர்த்தமில்லை என்று சொன்னார். கவிதை என்பதே குப்பை என்று நிறுவ படாதபாடு பட்டார். அதனால் மனப்பிறழ்வு கொண்டவர்…. இன்னமும் ஏகபலது உண்டு. இப்போதைக்கு இவ்வளவுதான் நினைவுக்கு வந்தது.

    ReplyDelete

  4. இதற்கெல்லாம் விரிவான பதில் சொல்வதும், விமர்சன பூர்வமாக அணுகுவதும் சாத்தியம். ஆனால் அதுவல்ல விவேகமான அணுகுமுறை. நாம் கேட்க வேண்டியது, உலகின் எந்த மூலையிலாவது, எந்த சமுகத்திலாவது ஈடு இணையற்ற தங்களின் மேதையை பற்றி இப்படி பேசி கேட்க முடியுமா? அப்படி இளையராஜாவை விட தமிழகம் தந்த மேதை என்று வேறு யாராவது இருக்கிறார்களா? இந்திய அளவில் யாருடனும் ஒப்பிட முடியாத ஒரு மேதையை, அதுவும் எந்த வாய்ப்பும் வசதியும் அற்ற, இளையராஜா என்று ஒருவர் பிறந்திருக்காவிட்டால் ஏனையோர் கேள்விப்பட்டிருக்க வாய்ப்பில்லாத ஒரு கிராமத்தில், ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்து, தமிழகம் முழுக்க அலைந்து, கடின உழைப்பில் முன்னேறி, பட்டினி கிடந்து, வாய்ப்புக்காக காத்திருந்து, வாய்ப்பு வந்த பின் பிரபஞ்ச கூத்தாடிய (இதை எழுதும் போது கண்ணீர் வருகிறது) ஒருவனை வெறும் வம்புகளாலும், வசைகளாலும் எதிர்கொள்ளும் சமூகம் உருப்பட ஏதேனும் துளி சாத்தியம் உள்ளதா? உள்வாங்க முடியாத விஷயத்தை, அளவிட முடியாததை, ஒரு சட்டகத்தில் புரிந்து கொள்ள முடியாததை பற்றி இவ்வளவு தன்னம்பிக்கையுடன் சின்னதனமாக விமர்சனங்களால் அணுகும் ஒரு சமூகம், தன்னை பற்றி மற்றவர்களின் முன்முடிவுகள் குறித்து கழிவிரக்கம் கொள்வதில் ஏதேனும் நியாயம் உள்ளதா?

    http://www.twitlonger.com/show/l4lobs

    ReplyDelete