Thursday, January 31, 2013

அரசியல் அடிப்படைவாதம்.


தேசியவாதிகளானாலும் மதவாதிகளானாலும், அவர்கள் தங்கள் பிரதான எதிரிகளை விட அதிகமாக வெறுப்பது, தங்கள் அடையாளத்தை கொண்ட, ஆனால்  அடையாள அரசியலில் இருந்து விலகி ஒலிப்பவர்களையே; இவர்கள் பொதுவாக 'துரோகிகள்' என்று அடையாளப் படுத்தப்படுகிறார்கள். துரோகிகள் என்று ஒரு அடையாளம் இவ்வாறே எப்போதும் கற்பிக்கப்படுகிறது என்று நான் சொல்லவரவில்லை. சுயநலன்களுக்காகவும், வேறு கோபங்களினாலும் அரசியலை காட்டிகொடுப்பவர்கள் உண்டு.  அவ்வாறானவர்களை துரோகிகள் என்று அழைக்கத் தொடங்கி, பின் விலகி ஒலிக்கும் எல்லா குரல்களையும் துரோகி என்று கற்பிக்கும் நடைமுறையே எல்லா அடையாள அரசியலிலும் தொடர்கிறது.

எதிரிகளின் தாக்குதல் அடையாள அரசியலை மேலும் பலப்படுத்துகிறது; எதிரியை எதிர்கொள்வதே அரசியலின் முக்கிய செயல்பாடாக இருப்பதால், எதிரியின் இருப்பு அடையாள அரசியலுக்கு முக்கியமாகிறது. ஆனால் உள்ளிருந்து விலகி ஒலிக்கும் மிதவாதியின் குரல், அடையாள அரசியலின் தீவிரத்தை கேள்விக்கு உட்படுத்துகிறது. தாங்கள் முன்வைக்கும் தீவிரமான அரசியல் நிலையை தங்களின் ஒட்டுமொத்த கூட்டமும் பேண வேண்டும் என்று அடிப்படைவாதிகள் நினைக்கிறார்கள்; அவ்வாறு பேணுவதே கூட்டத்தின் இயல்பாக இருப்பதற்கு, இந்த விலகி ஒலிக்கும் குரல்கள் பெரும் இடைஞ்சலாக இருக்கிறது. திவிரவாத அடிப்படைவாதிகள் இதன் காரணமாகவே மிதவாதிகளையும் மாற்று பார்வை கொண்டவர்களையும் எதிரிகளை விட மோசமாக வெறுக்கின்றனர். இதற்கான உதாரணங்களை எல்லா அடையாள அரசியலிலும் தட்டுப்பாடின்றி காணலாம்.

தற்போதுள்ள சந்தர்ப்பத்தில் மனுஷ்யபுத்திரன் அப்படிப்பட்ட மிதவாத குரலை ஒலிக்கிறார். இஸ்லாம் என்ற பெயரில் நடக்கும் நடைமுறைகள் அனைத்திற்கும், நியாங்களையும், வக்காலத்துக்களையும், சாக்குபோக்குகளையும் சொல்லி, விமர்சனமின்றி அதரிக்கும் மனநிலையை மட்டுமே முஸ்லீம்களிடம் விரும்பும் அடிப்படைவாதிகளுக்கு அவர் பெரும் கோபத்தை விளைவிக்கிறார். இதன் ஒரு வெளிபாடே ஜெய்னுலாபிதீனின் மிருகத்தனமாக தாக்குதல்.

சுமார் 8 ஆண்டுகளுக்கு முன் தொலைகாட்சியில் 'இஸ்லாம் இனிய மார்க்கம்'  நிகழ்ச்சியை மிகவும் ரசித்து நான் பார்த்த காலம்;  'மற்ற மதத்தவர்களை அழைத்து, அவர்களின் அடையாளங்களுடன் அமரவைத்து, அவர்களின் கேள்விகளுக்கு இப்படி நிதானமாக பதில் சொல்லும் ஜனநாயகம் இந்து மதத்தில் சாத்தியம் இல்லை' என்று அந்த  நிகழ்ச்சியை முன்வைத்து என் அம்மாவிடன் வாதிட்டிருக்கிறேன். அதே ஆள் இன்னொரு சந்தர்ப்பத்தில் தன்னை எப்படி வெளிபடுத்துகிறார் என்பதை இன்று பார்த்து வருகிறோம்.

அடையாள அரசியலை விட மோசமான விசித்திரமாக  வெளிபடுவது அரசியலுக்கான அரசியல். அ.மார்க்ஸ், சுகுமாரன் போன்றவர்கள் தங்கள் அடையாளத்திற்காக இஸ்லாமிய அடிப்படைவாத அரசியலை ஆதரிக்கவில்லை; அரசியல் சார்ந்து வந்தடைந்த நிலைபாடுகளின் தொடர்ச்சியாக ஆதரிக்கிறார்கள்.

முஸ்லீம்கள் மீதான முன்முடிவுகளும், முன் நம்பிக்கைகளும், வெறுப்பு சார்ந்த சொல்லாடல்களும் நம் சமூகத்தில் எப்போதும் உண்டு. அண்மைக்கால நிலவரங்களால் அது வேறு பரிமாணத்தை எட்டியுள்ளதும் ஒரு யதார்த்தம்தான். அந்த யதார்த்ததின் வெளிபாடாக பொதுவான ஒரு  இஸ்லாமியருக்கு இருக்கும் அச்சுறுத்தலும், ஒதுக்கமும், பாதுகாப்பின்மையும், மனித உரிமை சார்ந்த அரசியலை விழுமியமாக பேணும் அனைவரும் கவலைகொண்டு எதிர்க்கவேண்டிய ஒன்று. அவ்வாறான எதிர்ப்பை கொண்ட அரசியல்,  நடைமுறையில் அவ்வறான அச்சுறுத்தல் நிகழ்வதை எதிர்ப்பதாகவும், முன்முடிவுகளை விமர்சித்து இயங்குவதாகவும் நிச்சயம் செயல்படவேண்டும். அந்த வேலையை அ.மார்க்சும் சுகுமாரனும் செயல்பாடாக கொண்டுள்ளதை, மனித உரிமை அரசியலை கொண்ட அனைவரும்  ஆதரிப்பது என்ற நிலையில் நிச்சயம் இருக்கவேண்டும்.

மாறாக, இஸ்லாமிய வெறுப்பை எதிர்க்கும் அரசியல் என்பது, இஸ்லாமிய அடிப்படைவாதத்தை நியாயப்படுத்துவதிலோ, அடைப்படைவாதத்தின் எல்லா வெளிபாடுகளையும் ஏதோ ஒரு அட்டு தர்க்கத்தை சொல்லி நியாயப்படுத்துவதிலோ  இருக்க முடியாது. ரிசானாவின் அநியாயமான கொலையை முன்வைத்து, என்னத்த  சொல்ல வருகிறார் என்றே யாருக்கும் புரியாமல் அ.மார்க்ஸ் எழுதிய பதிவை வாசித்து ஏற்பட்ட குமட்டலுணர்வு கொஞ்ச நஞ்சமல்ல. இதில் இவர் வெளிப்படையான மரண தண்டனை எதிர்ப்பு நிலைபாட்டிலிருந்து ஏதாவது சொல்வார், மனுஷ்யபுத்திரன் மீதான தாக்குதலை கண்டிப்பார் என்ற எதிர்பார்ப்பு, இலங்கை அரசிடம் தமிழர்களுக்கான சுயநிர்ணய உரிமையை எதிர்ப்பார்ப்பதைவிட குறைவான நிகழ்தகவு கொண்டது.

'விஸ்வரூபம்' பிரச்சனையிலும் தான் இதுவரை எடுத்து வந்துள்ள நிலைபாடுகளுடன் எந்த இயைவும் இல்லாமல், நிபந்தனையற்ற இஸ்லாமிய அரசியல் ஆதரவு என்ற நிலையிலேயே உள்ளார். விஸ்ரூபம் படத்தின் மீது (பார்த்தவர்கள் பார்க்காதவர்களின்) முக்கிய விமர்சனம்தான் என்ன? தாலிபான்கள் பற்றிய (யதார்த்தமான) சித்தரிப்பு முஸ்லீம்கள் பற்றி குறிப்பிட்ட ஒரு எதிர்பிம்பத்தை பார்ப்பவர்களிடம் ஏற்படுத்தும் என்பதுதான். அப்படி ஒன்று நேரவே நேராது என்று நிச்சயமாக சொல்லமுடியாதுதான். ஆனால் இப்போதய எதிர்ப்புகளினாலும், அரசியல்களினாலும் ஏற்படாத எந்த முன்முடிவை படம் பொதுப்புத்தியில் ஏற்படுத்தியிருக்க போகிறது என்கிற சாதரண சிந்தனை கூட இவர்களிடம் இல்லை. ஏனெனில் இவர்களுக்கு பொதுப்புத்தி மீதான பாதிப்பை விட தாங்கள் பேணும் அரசியல்தான் முக்கியம்.

இந்த சூழலில் மனுஷ்யபுத்திரன் போன்றவர்கள் 'விஸ்வரூப' தடைக்கு எதிராக பேசுவது முக்கியமான மாற்று உதாரணமாகும். இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கு அவர் உண்டாக்கும் எரிச்சலைப் போலவே,  அ.மார்க்ஸ், சுகுமாரன் போன்றவர்களுக்கும் எரிச்சலை உண்டாக்குகிறார். இந்துத்வ அரசியலை தீவிரமாக எதிர்க்கும், சமீபத்தில் சின்மயி விவகாரத்தில் கூட பார்பன ஆதிக்கத்திற்கு எதிராக பேசிய, இஸ்லாமிய அடையாளத்தை கொண்ட  மனுஷ்யபுத்திரனை, கூசாமல் 'இந்துத்வ குரல்' என்கிறார்கள். அதாவது இஸ்லாமிய அடையாளத்துடன், இஸ்லாமியர்கள் மீதான கரிசனத்துடன்  தாராளவாத குரல் ஒலிக்க முடியாது என்கிற முன்முடிவு இவர்களிடமும் வெளிபடுகிறது.

அப்துல் கலாமை இந்துத்வவாதி என்று திட்டினார்கள். அவர் பாஜகவால் ஜனாதிபதியாக்கப்பட்டார்; குஜராத் படுகொலைகளின் போது வாய்மூடி இருந்தார்; அணுகுண்டு வெடித்தார்; இன்னும் பலவகைகளில் இந்திய நவீன  தேசிய அரசியலுக்கு உறுதுணையாக இருந்தார். (ஆனாலும் அவரை இந்துத்வா என்று அடையாளப்படுத்த முடியாது என்று நான் நினைத்தாலும்) அவரை இந்துத்வா என்று சொல்வதிலாவது நியாயமுண்டு. இந்துத்வ அரசியலையும், இந்திய தேசிய வெறி அரசியலையும் எதிர்க்கும் மனுஷ்யபுத்திரனையும் இவர்கள் இந்துத்வா என்கிறார்கள். மத அடிப்படைவாதத்தை போன்ற அரசியல் அடிப்படைவாதம் இது; அடையாளம் சார்ந்து தங்களைப்போலவே ஒலிக்க வேண்டியதாக கருதும் ஒரு குரல், விலகி ஒலிப்பதை ஏற்காத அரசியல் அடிப்படைவாதம். தமிழ் சூழலில் பின்நவீனத்துவம் வழங்கிய அரசியல் கொடையாகத்தான் இதை பார்க்கலாம்.

2 comments:

  1. ரிசானா படுகொலையை எதிர்த்து அ.மார்க்ஸ் ஒரு பதிவு எழுதியதாக இப்போது அ.மார்க்ஸ் மூலமும், மனுஷ்யபுத்திரன் பதிவு மூலமும் கேள்விப்படுகிறேன். இடையில் சில காலம் நான்தொடர்ந்த இணைய இணைப்பில் இல்லை. ரிசானா பற்றி அ.மார்க் ஏதாவது எழுதியிருக்கிறாரா என்று இரண்டு முரை அவரது ஃபேஸ்புக் பதிவில் என் கண்பார்வைக்கு இயலும்வரை தேடினேன்; இப்போது மீண்டும்; கிடைக்கவில்லை. ஒருவேளை எழுதிவிட்டு நீக்கிவிட்டாரா? இன்னமும் இருக்கிறதா? தெரிந்தவர்கள் சொல்லவும்.

    ReplyDelete
  2. 1992இல் சுபமங்களா பத்திரிகையில் அ.மார்க்ஸ் கலந்து கொண்ட சில விவாதங்கள் எனது விவாதிக்கும் முறைக்கு உந்துதலாக இருந்ததாக நான் இன்றுவரை நினைத்து வருகிறேன்; இதே போல உந்துதல் வேறு சிலருக்கும் அ.மார்க்சிடம் உண்டு என்று அறிவேன்.

    20 ஆண்டுகள் கழித்து இப்போது அவர் விவாதிக்கும் முறை காண சகிக்கவில்லை. பல வருடங்களாக தான் பயன்படுத்தி நைந்து போன முத்திரை குத்தும் வாக்கியங்கள், ரெடோரிக்கான வாதங்கள், அடுத்தவர் சொன்னதை எளிமைபடுத்தி உள்நோக்கம் கற்பித்தல், உள்நோக்கம் காட்டி மிரட்டுதல்.. என்ற வகையிலேயே உள்ளது. அடுத்தவர் எதை சொன்னாலும் ரெடிமேடாக அவரிடம் என்ன பதில் இருக்கும் என்று அறியலாம். அரசியல் பார்வையிலும் மதிமாறனை விட அதிகமாக சொல்ல அவரிடம் சொல்ல ஏதுமில்லை. அவர் மட்டுமல்ல அவரது வழிதோன்றல்களாக பலரும் இதையே செய்யபோவதுதான் இதன் நஷ்டம். இந்த இடத்தில் விலகி ஒலிக்கும் ஷோபா சக்தியை (அப்படியே நான் ஏற்காவிட்டாலும்) பாராட்டுகிறேன். மற்றபடி நாம் மதித்த ஆளுமை பற்றிய வருத்தத்தை பதிவு செய்துவிட்டு வேறு வேலையை பார்க்கவேண்டியதுதான்.

    ReplyDelete