சென்னை உயர்நீதிமன்றம் விதித்துள்ள இடைக்காலத்தடை பலருக்கு மிகுந்த உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் தந்துள்ளது. இது ஒரு இடைக்காலத் தடைதான் என்றாலும், இது தரும் நம்பிக்கையும், கால அவகாசமுமே, திகிலுடன் நடப்பதை பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளது. இன்று காலையில், இளம் வழக்கறிஞர் ஒருவர் ஓடி வந்து செய்தியை அறிவித்தவுடனே, நீதிமன்ற வளாகம் முழுக்க பரவிய பெரியதொரு சந்தோஷ ஆர்ப்பாட்டத்தில் கைதட்டி முழுமையாக என்னை அடையாளம் கண்டேன்.
நீதிமன்ற உதவியுடன், மேலும் சில தடைகள் வாங்கி இழுத்த பின்னாவது, இந்த தண்டனையை ரத்து செய்துவிட முடியும் என்று பலர் நம்புகின்றனர்; அப்படியே நடக்க வேண்டும். மத்திய காங்கிரஸ் அரசு தன் இறுக்கமான நிலைபாட்டிலிருந்து இறங்கி வர தயாராக இல்லை என்பதை தெளிவாக, தமிழக சட்டமன்ற தீர்மானத்திற்கான பதிலறிக்கை மூலம் காட்டிக் கொண்டிருக்கிறது. ஆகையால் நீதிமன்றம் மூலம் ரத்தாவது, சாத்தியம் என்றால், இன்னமும் நீண்டகாலத்திற்கு முடிவு குறித்த தெளிவில்லாது இழுத்தடித்த பின்னர் நடக்கலாம்.
ஜெயலலிதா நிகழ்த்திய பேரவை தீர்மானம் பல விதங்களில் முக்கியமானது. குறிப்பாக அது ஜெயலலிதாவின் இந்த தண்டனைக்கு எதிரான நிலைபாட்டை வெளிப்படையாக்குகிறது. அவரது விருப்பமும், உண்மை நிலைபாடும் என்னவாக இருந்தாலும், இதுதான் அறிவிக்கப்பட்டுள்ள நிலைபாடு. இதிலிருந்து அவர் பின்வாங்குவது கடினம் என்ற வகையில் முக்கியமானது. இந்த தண்டனையை ரத்து செய்ய அவருக்கு அதிகாரம் இருக்குமானால், அதை அவருக்கு தர்க்க பூர்வமாக நிறுவ முடியுமானால், முடிவு எடுக்க அவரை அவரது நிலைபாட்டை வைத்தே நிர்பந்தப்படுத்தக் கூடியது என்கிற வகையில் இத்தீர்மானம் முக்கியமானது. கிருஷ்ணய்யர் போன்றவர்கள் கூட சொல்கிறார்கள் என்றால், சட்ட வாதங்கள் மூலம் அதிகாரத்தை சாத்தியப்படுத்த முடியும் என்றுதான் எடுத்துக் கொள்ள வேன்டியுள்ளது.
எந்தவகையிலும் இது நமக்கு-அதாவது மரண தண்டனையை எதிர்ப்பவர்களுக்கு- நிம்மதியையும், ஆசுவாத்தையும், நம்பிக்கையையும் தருவது. ஆனால் குரல் ஒலிப்பதையும், போராட்டம் தொடர்வதையும் இன்னும் தீவிரமாக செய்ய வேண்டியுள்ளது. அதே நேரம், நாம் நம்பியுள்ளது நீதிமன்றமும், ஜெயலலிதாவும் என்பதால் மிகுந்த பொறுப்புணர்வும் தேவைப்படுகிறது. இதுவரையான தமிழுணர்வாளர்களின் போராட்டம்தான் ஜெயலலிதாவிற்கு நிர்பந்தத்தை ஏற்படுத்தியது என்றாலும், போராட்ட முறைகளில் பல முதிர்ச்சியற்றவையாக இருப்பதாக எனக்கு தோன்றுகிறது. எல்லாவற்றையும் பட்டியலிடும் நோக்கம் எனக்கு இல்லை. ஆனால் இன்று காலையில் நீதிமன்ற வளாகத்தில் எழுப்பப்பட்ட பல கோஷங்கள், இந்த நோக்கத்திற்கு உதவப்போவது இல்லை. அதுவும் இடைக்காலத் தடை வந்த பிறகு எழுப்பபட்ட கோஷங்களை பதிவு செய்து, தமிழ் எதிர்ப்பை அணுகுமுறையாக கொண்டுள்ள ஊடகங்கள் சில பரப்பினால் அது நேர்மறை விளைவுகளை ஏற்படுத்தப் போவதில்லை.
இந்த விஷயங்களை முதிர்ச்சியுடன் பேச, அணுக ஆள் இல்லை என்றே தோன்றுகிறது. வைகோ பொறுப்புடன் தொடர்ந்து பேசுபவர், திடீரென நேர் எதிராக அவரே பேசுகிறார். இருக்கும் நிலமைகளையும் கட்டாயங்களையும் உணர்ந்து, பொறுப்புடன் இந்த போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய தலைமை இல்லை என்றே நினைக்கிறேன். தன்னிச்சையாய் நிகழ்ந்ததற்கே பலன் உள்ள நிலையில், பொறுப்பும் சாதூர்யமும் கொண்ட தலைமை நிச்சயம் வெற்றிக்கு எடுத்து செல்லும். யார் என்பதுதான் கேள்வி.
அடுத்து இன்னமும் தமிழுணர்வை தாண்டி மற்ற தளங்களில் இந்த மரண தண்டனைக்கான எதிர்ப்பு விரிவடையவில்லை. இறுதி வெற்றி அடைய அது மிக அவசியம். அதற்கு முயற்சிக்கும் கடமை, அடையாளங்களை தாண்டி மனிதாபிமானமாக சிந்திப்பதாக சொல்லும் தரப்பினரிடம்தான் உள்ளது; அவர்களின் எதிர்ப்பு தனியாக உருவெடுக்காவிட்டால், அதற்கான பழி அவர்களையே சாரும். கால அவகாசம் இருக்கிறது; பார்போம்
Subscribe to:
Post Comments (Atom)
இன்று டைம்ஸ் நவ் தொலைக்காட்சியில் வைகோ - சுப்ரமணியம் சுவாமி பேசவந்தனர். வைகோவின் தீவிர விசிறிகள் மட்டுமே அவர் பேசியதை ரசித்திருக்கமுடியும். எனக்கு அவர் உளறித்தள்ளியதாகப் பட்டது. தெளிவாகத் தன் வாதங்களை எடுத்து வைக்கவில்லை. இறுதியில் மைக்கைப் பிடுங்கி எறிந்துவிட்டு வெளியேறினார்.
ReplyDeleteசில அமெரிக்க அல்லது ஐரோப்பியவாழ் தமிழ் உணர்வாளர்கள் ஆசைப்படுவதுபோல இந்தியாவிலிருந்து தமிழகம் பிரிந்துசெல்லப்போகிறது என்றால் இதைப்பற்றியெல்லாம் கவலைப்படவேண்டாம். இல்லையென்றால், தமிழர்கள் தங்கள் நிலைப்பாட்டைப் பிற இந்தியர்களுக்கு விளக்க கொஞ்சம் நம்பகமான சில முகங்களை உருவாக்கவேண்டும்.
வரும் நாட்களில் வைகோ, சீமான், தொல் திருமா, ராமதாஸ், வினவு, மார்க்சீய இயக்கங்கள் என அனைவரும் ஒரே மேடையில் போராட வேண்டும்.
ReplyDelete/தமிழர்கள் தங்கள் நிலைப்பாட்டைப் பிற இந்தியர்களுக்கு விளக்க கொஞ்சம் நம்பகமான சில முகங்களை உருவாக்கவேண்டும்./
ReplyDeleteசந்தேகமில்லமல் அப்படி ஒரு தேவை தற்போதய வெற்றிடத்தில் இருக்கிறது.
If we think only articulate person should become the leader (which I hope is not the argument here) then it shows the naivety. Leaders don't have to be articulate in a Foreign Language. Not everyone is born with that silver spoon. Vaiko is articulate in Tamil which is good for him to be a leader. Vaiko or even DMK for that matter should find a good spokesperson to counter the pathetic North Indian Media which simply refuses to understand the ground realities or just ignores them to put forth their agenda.
ReplyDeleteWhen North Indians, especially the English TV watching Audience never showed any ability in understanding the North Indian problems such as Maoists or Kashmir issues, I am not sure whether they will understand the Tamils issues. Even though other capable people are available in Tamilnadu, North Indian channels are only projecting people like N.Ram or Cho Ramaswamy as Political Analysts in spite of their partisan stands. So it’s Hilarious to read comments which says Tamils needs new faces to take our message to North Indians. There are people, but they simply don’t get the deserved opportunity. Same like Gani’s who get every space available in every media even though we have many others who still write on Small Magazines…
Nevertheless, I agree that Tamils need better lobbying and better PR in the era of 24x7 television channels to articulate our thoughts properly.
I agree with Ramji. It’s a collective victory as we stood together as Tamils cutting across caste and political parties and ideologies. As saajid Lone said in NDTV, we conducted the protest and agitation in a more civilized manner highlighting the Human rights and legal angles and largely desisted from the Political issues surrounding it. Obviously there are things we learned and mistakes that have to be corrected. But we don’t have to reinvent wheels.
-Sasi
(Pardon me for typing in English)
தமிழ் பிரச்சனைகளை தலைமையேற்று முன்னெடுக்க ஆங்கிலமோ, பிற மொழிகளிலோ வல்லுனராக இருக்க வேண்டும் என்று நான் சொல்லவரவில்லை. சாதூர்யமும் முதிர்ச்சியும் கொண்டு நடைமுறை அரசியலை செயல்படுத்துபவராக இருக்க வேண்டும் என்பதே. வைகோ உடபட யாரையும் என்னால் அப்படி பார்க்க முடியவில்லை.
ReplyDeleteஹெட்லைன்ஸ் டுடே நிகழ்வை பார்த்து விட்டு ட்விட்டரில் எழுதிய விமர்சனம் வேறு. அது தலைமை பற்றிய பிரச்சனை அல்ல. ஒரு ஆங்கில மீடியாவில் குறைந்த பட்சம் எதிர் தாக்குதலை சமாளித்து பேச வேண்டிய திறமை பற்றியது.
சோ என் ராம் பற்றிய கருத்தை ஏற்கிறேன். ஞாநி பற்றிய கருத்திற்கு பதில் சொல்ல அலுப்பாக உள்ளது.
ஆங்கில ஊடகங்கள் மற்றும் சுப்ரமணிய சாமி கும்பல் முன்வைக்கும் வாதம், வழக்கு முடிந்து இவர்கள் குற்றவாளிகள் என்று இந்திய தண்டனைச் சட்டத்தால் அறிவிக்கப் பட்டவர்கள். இதை மறு பரிசீலனை செய்ய இயலாது என்பதே. வழக்கை ஆரம்பத்திலிருந்து விசாரித்த கார்த்திகேயனும் கூட இதைத்தான் முன்வைக்கிறார். பதினோரு ஆண்டுகள் கால தாமதத்திற்கான விசாரணை மட்டுமே என்றும் அதற்கான விளக்கத்தைப் பெற மத்திய அரசுக்கு கால அவகாசம் கொடுக்கப் பட்டிருப்பதுவும் மட்டுமே பொருட்படுத்தக் கூடியது என்றும் இவர்கள் முன்வைக்கிறார்கள்.
ReplyDeleteராம்ஜெத்மலானியும் கூட இதே அடிப்படையில் தான் வழக்கு நடைபெறும் என்றும் இது முழுக்க முழுக்க மனிதாபிமான அடிப்படையில் தூக்கு தண்டனை மீண்டும் பரிசீலிக்கப் பட வேண்டும் என்ற விதத்தில் தான் இந்த வழக்கை முன் நகர்த்துவார் என்பதும் தெளிவான உண்மைகள். மரண தண்டனை ரத்து செய்யப் பட்டு இந்த மூவரும் விடுவிக்கப் பட வேண்டும் என்றும் நம்மைப் போன்றவர்கள் விரும்பினாலும் கூட, இவர்கள் நிரபராதிகள் என்று நம் வாதத்தை, அனுமதிக்கப்பட்ட நீதிமன்ற ஜனநாயக வழிமுறைகளில் நம்மால் முன்னெடுத்து செல்வது எவ்வளவு தூரம் சாத்தியம் என்பதும் தெளிவாகவில்லை.
இப்போது நம் முன்னிருக்கும் ஒரே நேர்கோட்டு அணுகுமுறை, மரண தண்டனையை முற்றாக எதிர்ப்பதன் மூலமும் பதினோரு ஆண்டுகள் கால தாமதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதுவுமே. ஒரு வேலை ஆதிக்க சக்திகள் ஏற்றுக் கொண்டு விடலாம், மூவரும் திருந்தி வாழ்வதாக ஏற்றுக் கொண்டால். ஆனால் இவர்கள் குற்றமற்றவர்கள் என்று நாம் முன்வைக்கும் வாதம் இவர்களை தண்டனையை நோக்கி தள்ளிவிடும் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தலாம் என்று கார்த்திகேயன் கூறுவதையும் பொருட்படுத்தாமல் இருக்க முடியவில்லை.
மேலும்,தமிழர்களின் மேல் அக்கறையுள்ள தமிழர்களும் சரியான தலைவர்களும் நமது உண்மையான உணர்வுகளை ஆங்கில "அறிவுஜீவி"களுக்கு கடத்துவதன் மூலமும் அந்த உணர்வுகளை சரியான பாதையில் நெறிப்படுத்துவதன் மூலமும் இந்த வழக்குக்கு வலுசேர்க்க முடியும். இதற்கு நாம் அனைவரும் ஒன்று பட்டுக் குரல் கொடுத்தால் சாத்தியக் கூறுகள் அதிகம் என்றே நினைக்கிறேன்.
ஸ்ரீதர்,
ReplyDeleteஉங்கள் அக்கறை நியாயமானது. நீதி மன்றம் சார்ந்த சட்டரீதியான அணுகுமுறையில் 'இவர்கள் நிரபராதிகள்' என்று சொல்லும் வாதம் எடுபடாது, எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் என்பது சரி. எனக்கு தெரிந்து நீதிமன்றம் சார்ந்த அணுகுமூறையில் அப்படி யாரும் எதையும் முன்வைக்கவில்லை. நீங்கள் குறிப்பிடுவது போல ராம்ஜெத்மிலானி 11 வருட காலதாமதம் போன்ற பிரச்சனைகளைத்தான் முன்வைத்தார். வழக்கு அவ்வறுதான் மேல் எடுத்து செல்லப்படும்.
'குற்றத்தை ஒப்புகொண்டு வருத்தம் தெரிவிப்பது ரொம்ப முக்கியம், இல்லையேல் பெரும் ஆபத்து' என்று கார்த்திகேயன் சொல்லும் வாதத்தை எவ்வளவு சீரியசாக எடுப்பது என்று தெரியவில்லை. அப்படி ஒரு அவசியம் வரும்போது, ராம்ஜேத்மிலானி போன்றவர்கள் அதைத்தான் அறிவுறுத்துவார்கள். அதற்கு எதிராக பிடிவாதம் காட்டக்கூடிய நிலை இல்லை. ஜெயலலிதாவை 'புரட்சி தலைவி' என்று விளிக்கும் அளவிற்கு வளைந்து கொடுப்பவர்களுக்கு, இந்த நீதிமன்ற அணுகுமுறை சார்ந்த நெகிழ்ச்சியும் சாத்தியப்படும்.
இவர்களுக்கு இந்த தண்டனை மிகப் பெரிய அநீதி என்று மனதார நம்பும் தமிழ் தேசியவாதிகளும், பல மனித உரிமையாளர்களும் ( நானும்) அதற்கு நேர்மாறாக பொதுவெளியில் எப்படி பேச முடியும்? அப்படி பேசவேண்டிய அவசியமும் என்னவென்று தெரியவில்லை. நாம் பொதுவெளியில் பேசுவது நீதிமன்றத்தில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் என்பது ஒரு வாதமாக தெரியவில்லை. ஒரு தொலைகாட்சி விவாதத்தில் ' நிரபராதி' என்று சொல்லக்கூடாது என்பது வெறும் வொயிட் மெயில் மிரட்டல் மட்டுமே.
நீதிமன்ற அணுகுமுறையுடன் தேவையாக இருக்கும் இன்னொரு விஷயம் வெகுமக்களின் உணர்வு. அதற்கு 'நிரபராதி' என்று நம்புகிற விஷயத்தை சொல்வது சரியும், அவசியமும் மட்டுமல்ல அதில் ஆபத்து என்ன இருக்கிறது என்றும் புரியவில்லை.
/இவர்களுக்கு இந்த தண்டனை மிகப் பெரிய அநீதி என்று மனதார நம்பும் தமிழ் தேசியவாதிகளும், பல மனித உரிமையாளர்களும் ( நானும்) அதற்கு நேர்மாறாக பொதுவெளியில் எப்படி பேச முடியும்?/
ReplyDeleteநானும் மனதார நம்புகிறேன் ரோசா வசந்த்.இதை வைத்துத் தான் பொதுமக்கள் ஆதரவு திரட்ட முடியும் என்பதுவும் உண்மை, யதார்த்தமும் கூட.ஆனால் தேசிய அளவிலான எதிர்ப்பும், நம்முடைய தலைவர்களின் உணர்ச்சி மிகுந்த பேச்சுக்களும் நம்மை இந்த முறையாவது சிதைத்து விடாமல் இருக்க வேண்டும் என்ற கவலை அன்றி வேறொன்றும் இல்லை. இதில் எனக்கிருந்த கருத்து சிக்கலைத் தான் வெளிப்படுத்தி இருந்தேன். தெளிவான விளக்கத்திற்கு நன்றி.இந்த இரண்டு மாத கால அவகாசத்தில் நமக்கும் ஆங்கில ஊடக பொதுக் கருத்தாக்கதிற்குமான இடைவெளியை சற்றேனும் குறைக்க முயல வேண்டும்.
I share your concern.
ReplyDelete