Wednesday, August 24, 2011

ஊழலும், சுரண்டலும்.

ஜெமோ அருந்ததியின் கட்டுரை முன்னிலைப்படுத்தும் கேள்விகளை கண்டுகொள்ளவில்லை, அல்லது உள்வாங்கவில்லை என்பது மட்டுமல்ல; அதை திரித்து, அவதூறு மூலம் வெறுப்பை மட்டும் வெளிப்படுத்தி எதிர்கொண்டார். 'எதுவுமே உருப்படியான கேள்வி இல்லை' என்று ஜெமோ சொல்வது, அவரது வசதியும், அணிந்திருக்கும் கண்ணாடியையும் சார்ந்து அமைகிறது. 'பதில் சொல்லிவிட்டார்கள்' என்று ஜெமோ சுட்டி அளிக்கும் கட்டுரை, ஜெமோ வெறுக்கும் போலமிக்ஸ் பற்றி பேசுகிறதே ஒழிய, அருந்ததி முன்வைக்கும் முக்கிய கேள்வி பற்றி அல்ல.

அருந்ததி அன்னாவை அவதூறு செய்யவில்லை; மாறாக ஜெயமோகன்தான் ஊகங்கள், கற்பனைகள், வசைகள் அடிப்படையில் அருந்ததியை அவதூறு செய்கிறார். அருந்ததி அன்னாவை பற்றிய எழுதியவைகள் அவரது அரசியல் நிலைபாடு, அதிகாரம்/ஊழல் குறித்த புரிதலை முன்வைத்தது மட்டுமே

ஒரு உதாரணமாக 'Who is this Anna?' என்று அருந்ததி கேட்ட கேள்வியை ஜெமோ பெரிதுபடுத்துகிறார். அருந்ததியின் கேள்வி அன்னாவின் அதற்கு முந்தய வாழ்க்கை, தகுதி அனுபவம் பற்றிய கேள்வி அல்ல என்பதை தொடரும் வரிகளை வைத்து ஒருவர் புரியமுடியும். ஜெமோ அவ்வாறு அதை வசதியாக எடுத்து ' நீ யார்' என்று திருப்பி கோபமாக கேள்வி கேட்டு அடிக்கிறார். அருந்ததியின் 'அன்னா யார்?' என்ற கேள்வி, அன்னாவின் அரசியல் நிலைபாடு, அதுவரை அன்னா வெளிப்படுத்திய கருத்துக்கள் பற்றிய‌ கேள்வி; நாட்டின் தலைபோகும் பிரச்சனைகள் குறித்த அன்னாவின் நிலைபாடு பற்றியது.

ஒரு உதாரணம் எடுக்கலாம். மோடியின் அரசை முன்னுதாரணமாக சொல்பவர் காந்தியவாதியாக எப்படி இருக்க முடியும்? எந்த மாதிரி முன்மாதிரியை அவர் தன் சட்டகத்தில் கொண்டுள்ளார்? 2001இல் இஸ்லாமியர் மீது நடந்த தாக்குதலில் மோடியின் பங்கு குறித்து பேசவே வேண்டாம்; அதை பொதுபுத்தியில் பதிலீடு செய்யும் விதமாக, மோடியை குறியீடாக காட்டும் டெவலப்மெண்ட் அரசிலுக்கும் காந்தியத்திற்கும் என்ன தொடர்பு? நர்மதா பிரச்சனை குறித்து அன்னாவின் நிலைபாடு என்ன? அணு ஆயுதம், 'வல்லரசு இந்தியா' இதை பற்றிய கருத்து என்ன? ஊழலை எதிர்க்க காந்திய வழியில் மென்முறை போராட்டம் ஒன்றை கையிலெடுத்ததால் மட்டும் அன்னா காந்தியவாதியா என்பதுதான் கேள்வி. அருந்ததி எழுப்பிய கேள்விகள் (ராஜன்குறை சொல்வதுபோல) அதிகாரம் மையம் கொள்வது, முதலீட்டிய சுரண்டல், மற்றும் இந்துத்வ எதிர்ப்பு, இட‌ஒதுக்கீட்டிற்கு ஆதரவான அரசியல் இவற்றுடன் தொடர்பு கொண்டது.

ஜெயமோகன் புரிந்து கொள்ளாவிட்டாலும் மற்றவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். நடுத்தர வர்க்கத்தின் போராட்டமாக இது இருப்பது அல்ல பிரச்சனை. பொதுவான நடுத்தர வர்க்க அரசியலை -உதாரண‌மாக இட ஒதுகீட்டிற்கு எதிரான அரசியலை கொண்டிருக்கும் ஒரு பெரும்பான்மை மக்கள், திடீரென சமுக பிரஞ்ஞை கொண்டு குதித்துள்ள போராட்டத்தை, எதிர் அரசியல் என்பதாக பேசிக்கொண்டிருக்கும் யாரும் விமர்சனமின்றி ஆதரிக்க முடியாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஒரு விவாதம் வளர்வதற்காவது பல தரப்பட்ட விமர்சனங்களும், கருத்துரீதியான எதிர்தாக்குதல்களும் தேவை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

எவ்வளவு கச்சாவாக இருந்தாலும், வினவு போன்ற‌வர்கள் கேட்கும் கேள்விகளும் அபத்தமானது இல்லை; ஆதிவாசி நிலங்களின் வளங்களை, அங்கீகரிக்கப்பட்ட வழிகளின் மூலம் சுரண்டும் கார்பரேட் சுரண்டல் பரவாயில்லை, அதற்கு ஒரு அரசியல்வாதி லஞ்சம் வாங்குவதுதான் பிரச்சனை என்று நினைக்கும் நடுத்தர வர்க்க பொதுப்புத்தியை விமர்சிக்காமல், இந்த 'மக்கள் இயக்கத்தை' ஆதரிப்பது, கார்ப்பரேட் சுரண்டலை பேசிவரும் பலருக்கு சாத்தியமில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

அன்னாவை எதிர்ப்பவர்களில் பலர் மட்டும் அவதூறும் வசையும் பேசுவதாக சொல்ல முடியாது (அதுவும் உண்மைதான் எனினும்). அருந்ததியை வசைபாடி (ஜெயமோகன் உட்பட) இணையத்தில் எழுதப்பட்டுள்ளவைகளையும் பார்க்க வேண்டும். அதில் மிகச் சில அறிவு பூர்வமான அணுகல் கொண்டவை; பல வெறும் வசை குப்பைகள். ஆகையால் ஏதோ வசைக்கு ஒரு அணி மட்டும் உரிமை கொண்டாடுவதாக சித்தரிக்கக் கூடாது.

ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் நான் அன்னாவை மூர்க்கமாக எதிர்க்கவில்லை. குறைந்த பட்சம் தீவிரமான எதிர்ப்பை காட்ட வேண்டிய ஆபத்தான பரிமாணம் எனக்கு பிடிபடவில்லை. ஆனால் அன்னாவிற்கு ஆதரவாக பேசுவதென்பதில் பல பிரச்சனைகள் இருக்கிறது. ஊழல் மிக தீவிரமான பிரச்சனைதான் எனினும், என்னைப்போன்றவர்களின் ஊழல் பற்றிய புரிதலும், அரசியல் கரிசனங்களும் வேறு. ஊழலை அரசியல்வாதிகள், அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பிரச்சனையாக மட்டும் பார்க்க முடியாது; ஊழலை மற்ற பிரச்சனைகளிடம் இருந்து வேறு படுத்தியும் பார்க்க முடியாது.

நான் அருந்ததியின் ரசிகனோ ஆதரவாளனோ அல்ல; அவரை எதிர்த்து வருபவன். அவர் மீதான ஓர்மைசார் நம்பிக்கையும், அறிவுசார் மதிப்பும் கலைந்து போய்விட்டதை ட்விட்டரில் பதிவு செய்துள்ளேன். நாம் எழுத முடியாத இடத்தில், நாம் எழுப்ப விரும்புவதை ஒரு செலிபிரிடியாக அவர் எழுதுவதால், அவருக்கு ஆதரவாக எழுத வேன்டியுள்ளது. இவை இப்போதைக்கான கருத்துக்கள், இதை மேலே எடுத்துச் செல்ல முடியுமா என்று பார்க்கலாம்.

2 comments:

  1. வசந்த், நன்றி...அருந்ததியைப் படித்த வரையில் அவரின் அண்ணாவுக்குத் திரளும் ஆதரவைப் பதற்றமுடன் பார்க்கிறார் என்ற தொனி இருந்ததாக நினைக்கிறேன். நிற்க.
    1 ) அன்னாவின் இந்தப் போராட்டம் உங்களால் ஏன் ஒரு முதல் படியாகக் கொள்ள முடியவில்லை?
    2) பல எரியும் பிரச்சனைகளின் அடிநாதம் ஊழல் இல்லையா?
    3) இதன் வெற்றி ஏன் மற்ற பிரச்சினைகளில் பரவாது என்று நினைக்கிறீர்கள்?
    நன்றி.
    பி.கு. அலுவலகத்தில் இருப்பதால் விரிவாக எழுத முடியவில்லை.

    ReplyDelete
  2. ராஜ் சந்திரா, கேள்விகளுக்கு நன்றி. என் கருத்தை சற்று நேரம் எடுத்து ஆனால் விரைவில் எழுதுகிறேன்.

    ReplyDelete