Monday, May 17, 2010

சுய முரணும், அறிவு நேர்மையும்.

சந்தனமுல்லை அவர்கள் எழுதிய, இஸ்லாமிய பெண்கள் சுயமாக சம்பாதிப்பதற்கு எதிரான பத்வா ஒன்றை பற்றி பேசும் பதிவொன்றை முன்வைத்து, நண்பர் சுகுணா திவாகர் எழுதிய பதிவை படித்து உடனடியாக கீழுள்ள கருத்துக்களை ட்விட்டியிருந்தேன்.

// சந்தனமுல்லை பதிவை முன்வைத்த சுகுணாவின் பதிவு முழு உளறலன்றி வேறில்லை. சுய முரண்பாட்டை அறிந்தும் தெரியாமல் நடிப்பவர்களுக்கு விளக்கமுடியாது. 8:36 PM May 15th via web

அமா மற்றும் அவர் சிஷ்யர்கள்+தார்மீக ஆதரவாளர்களுக்கு சில விஷயங்களில் குறைந்த பட்ச அறிவு+நேர்மையுடன் இயங்க இயலாது என்பது வெளிப்படை.
8:37 PM May 15th via web

இவர்கள் ஆதர்சமான பெரியாரிடம் இந்த நேர்மையின்மை கிடையாது, அவர் வாதங்கள் வெளிப்படையான அறிவு நேர்மை கொண்டது. இதுதான் புரியாதது+ஆச்சரியமானது. 8:40 PM May 15th via web

ஒருவேளை பெரியாரை தாண்டி சிந்திக்கும் பின்பெரியாரிசம் இதுதானோ?
8:41 PM May 15th via web//


நான் எழுதியது ஒரு உடனடி துளி எதிர்வினை. மேலே சொன்னவற்றின் அடிப்படை பார்வையில் மாற்றமில்லை என்றாலும், சற்று நேரம் கழித்து எழுதியிருந்தால் கடுமை குறைவான வேறு வார்த்தைகளில் என் விமர்சனத்தை சொல்லியிருக்க கூடும்.

இதில் நான் குறிப்பிட்டுள்ள 'சுயமுரண்' என்பதை தன்னால் கண்டுகொள்ள முடியவில்லை என்று நண்பர் அனாதை என்னிடம் மேல் விளக்கம் கேட்டுள்ளதற்கு பதிலாக இந்த பதிவு எழுதப்படுகிறது. டிவிட்டரில் எழுத நினைத்த பதிலையே இங்கே அளிப்பதால் பதிவு கருத்து துண்டுகளாக இருக்க வாய்ப்புண்டு, முதலில் சுயமுரண் என்று நான் குறிப்பிடுவதன் விளக்கம்.

ஒரு அரசியல் சட்டகம் என்பதை நாம் ஏற்றுகொண்டால், சமூக பிரச்சனைகளை அணுக/எதிர்க்க/ஆதரிக்க நாம் கொள்ளும் முன் அனுமானங்கள் என்று சில உண்டு. இந்த முன் அனுமானங்களை இடத்திற்கு ஏற்ப மாற்றிக் கொள்வதையும், பிரச்சனைகளின் நுட்பத்திற்கு ஏற்ப அல்லாமல் நிறத்திற்கு ஏற்ப வேறு படுவதையும், முன் அனுமானங்களை கொண்டு தீர்மானிக்கப்படும் தர்க்கம் சந்தர்ப்பத்திற்கு ஏற்ப மாறு படுவதையும் சுயமுரண் என்று சொல்லலாம். இது மற்ற சட்டகத்துடனான முரண் அல்ல; தன் சட்டகத்துனுள்ளேயே, தானே குண்டக்க மண்டக்க முரண்படுவது. முன் அனுமானங்கள் மூலம் தீர்மானிக்கப்பட்டு குறிப்பிட்ட (குறைந்த பட்சம்) இரு பிரச்சனைகளில் எழுத்தின்/எதிர்ப்பின் தீவிரம், முற்றிலும் மாறுபடுவதை சுயமுரண் என்று இந்த சந்தர்ப்பத்தில் மேலுள்ள ட்விட்களில் குறிக்கிறேன்.

சமூகம், மதம், இதர ஆண்களால் தீர்மானிக்கப்படும் நிறுவனங்கள் பெண்கள் மீது செலுத்தும் அதிகாரம், மற்றும் பெண்களின் செயலை/இருப்பை கட்டுப்படுத்துவது குறித்த சுகுணாவின் கருத்துக்களை முன் அனுமானங்கள் என்று இங்கே சொல்லலாம். அவை என்ன கருத்துக்கள் என்று விளக்க வேண்டியதில்லை. இப்போது இரண்டு பிரச்சனைகளை எடுத்துக் கொள்ளலாம். முதலாவது அண்மையில் லீனா எழுதிய கவிதையை முன்வைத்து நடந்த பிரச்சனைகள். இதில் லீனாவின் கவிதை எழுதும் உரிமை மட்டுமில்லாது, அதையும் தாண்டி சுகுணா அளித்த ஆதரவு பதிவாகியுள்ளது. இரண்டாவது மேலே குறிப்பிட்டுள்ள ஃபத்வா பிரச்சனை. இந்த இரண்டில் ஒன்றில் சுகுணா கலகவாதியாகவும்,எல்லையற்ற சுதந்திரம் கொண்ட மனித விடுதலையை ஆதரிப்பவராகவும் இருக்கிறார். இன்னொன்றில் வழவழ கொழகொழக்கிறார். இதைத்தான் சுயமுரண் என்று குறிப்பிட்டுள்ளேன். என்ன சொல்ல வந்தேன் என்பதை இதற்கு மேல் விளக்க தேவையில்லை என்று நினைக்கிறேன்.

பெரியாரை நான் இழுத்தது சுய முரண் பற்றி பேசும் போது அல்ல, அறிவு நேர்மை என்பதை பற்றி பேசும் போது. சுய முரண் என்பதே இல்லாமல் அரசியல்ரீதியாக இயங்குவது சாத்தியமல்ல; வாழ்வது நிச்சயமாக சாத்தியம் அல்ல. இந்த இடத்தில் முதல் பிரச்சனை இந்த சுய முரணின் தீவிரம்; அடுத்தது சுயமுரணை சமாளிப்பது அல்லது மழுப்புவது.

மார்க்சிய திருவுருக்கள், மார்க்சிய கருத்தியல்களை பாலியல் சொல்லாடல்களுடன் கலந்த கவிதை என்று ஒன்றை சமைப்பதற்கான உரிமை என்பது நானும் ஆதரிக்கும் ஒரு விஷயம். ஆனல் இது நாம் முதன்மையாக கரிசனம் கொள்வதற்கான ஆதார உரிமை அல்ல. மாறாக பொருளீட்டுவது என்பது ஆதார உரிமை. தன் இருப்பையும், சுதந்திரத்தையும் குறைந்த பட்ச அளவில் தக்கவைக்க தேவையான அடிப்படை உரிமை. இந்த இரண்டு பிரச்சனைகளில் சுகுணாவின் கரிசனமும் தீவிரமும் நேர்மாறான தலைகீழ் விகிதத்தில் உள்ளது. அடுத்து அறிவு நேர்மை என்பதை சுயமுரண் என்று எதுவுமே இல்லாமல் இயங்குவது என்று நான் குறிப்பிடவில்லை. சுயமுரண் என்று இருப்பதை acknowledge செய்து வெளிப்படையாக ஒப்புகொள்வதையே அறிவு நேர்மை என்கிறேன். பெரியார் இஸ்லாத்தையும் சில சந்தர்ப்பங்களில் தீவிரமாக விமர்சித்தார். ஆனால் அவர் இஸ்லாத்துடன் பொதிவான உறவு கொண்ட சந்தர்பங்களில் தனது சுய முரண்கள் குறித்து மிகுந்த சுய உணர்வடன் இருந்ததையும், அதை வெளிப்படையாக முன்வைக்கும் நேர்மையும் அவரிடம் இருந்ததை காணலாம்.

இந்த பிரச்சனை குறித்து நான் கருத்து கூற ஒரே காரணம் சமூக யதார்த்தத்தில் மத கண்காணிப்பில் நடந்து வரும் மாற்றங்கள். கடந்த 10 ஆண்டுகளில் உலக வஹாபிய பாதிப்பில் தமிழ் இஸ்லாமிய சூழலில் நடக்கும் மாற்றங்கள், பெண்கள் மீதான புதிய கண்காணிப்புகள், கட்டுப்பாடுகள். இவை எங்கோ உலக மூலையில் நடப்பவை அல்ல, நம் கண் எதிரே தமிழ் சூழலில் சமூக புழக்கத்தில் காணக்கூடிய விஷயங்கள் இவை. இது குறித்த அக்கறையிலேயே என் நிலைபாட்டை குறைந்த பட்சமாக பதிவு செய்ய ட்விட்டினேன்.

இவைகள் ஒரு பிரச்சனையே அல்ல; இந்த பிரச்சனைகளை விட முதலீட்டியமும், தமிழ் தேசியமும்தான் இன்றய ஒரே பிரச்சனை என்று சிலர் நினைக்கலாம். தாராளமாக நினைக்கட்டும். முக்கியமில்லாத பிரச்சனைகள் குறித்து -குறிப்பாக மத அடக்குமுறைகளுக்கு ஆதரவாக வாவது குறைந்த பட்சமாக - கருத்து சொல்லாமலாவது இவர்கள் இருக்கும் வரை பிரச்சனையில்லை. அ.மார்க்ஸ் போன்றவர்கள் இஸ்லாமிய மத அடிப்படைவாதத்திற்கு தார்மீக நியாயங்களை கட்டமைத்து வழங்குவார். ராஜன்குறை போன்றவர்கள் அதற்கு நடைமுறை அரசியல் என்று ஒரு நியாயம் வழங்குவார்கள். அ.மார்க்ஸை அப்படியே நகலெடுக்கும் நடையிலேயே சுகுணாவின் பதிவும் எழுதப்பட்டுள்ளது. குறைந்த பட்சம் விமர்சன பூர்வமான கேள்விகளை எழுப்பவாவது வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

இறுதியாக நாம் வெளியில் இருந்து கொண்டு (இஸ்லாமியராக இல்லாமல்) இஸ்லாத்தை விமர்சிப்பதன் சிக்கல்களை முன்வைத்து நான் பல முறை கருத்து சொல்லியுள்ளேன். மீண்டும் அதை பதிவு செய்யலாம். ஆனால் இங்கே அந்த கேள்வி பொருத்தமில்லாதது. வெளியில் இருந்து பேசுவதில் பிரச்சனை என்றூ தோன்றினால் பேசாமலாவது இருக்க வேண்டும். தீவிர பிரச்சனைகளில் மத அடிப்படைவாதத்திற்கு வக்கலத்தாக இவர்கள் பேசுவதுதான் பிரச்சனை, அதற்குதான் விமர்சனமே தவிர 'அல்லாமல் பேசுவதில்' உள்ள பிரச்சனைகள் வேறு விஷயம். (என் கருத்தை சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில், உள்ளிருந்து எதிர்ப்பும், போராட்டமும் யதார்த்தத்தில் இல்லாத, வர வாய்பில்லாத நிலையில் வெளியிருந்து பேசவாவது வேண்டும். அதாவது பேச மட்டுமாவது செய்ய வேண்டும்.)

சுகுணாவின் பதிவை விட முக்கியமாக கொள்ள வேண்டிய அரசியல் பிரச்சனைகள் உண்டு. ஆனால் இந்த விஷயத்தை பற்றிய என் நிலைபாட்டை வெளிப்படுத்துவது எனக்கு முக்கியமானது. அதனால் சின்னதாக ட்விட்டரில் எழுதினேன். அனாதை கேட்டுகொண்ட காரணத்தால் இந்த பதிவை எழுதினேன். சுகுணாவின் மேற்படி பதிவை வழவழ கொழகொழத்தல் என்று சொன்னது குறித்து எதுவும் விளக்கம் தரவில்லை. அதை சுகுணா என்னை கேட்டுகொண்டால் (அல்லது தேவையான எதிர்வினயைை வைத்தால்) மட்டும் செய்வேன்.

6 comments:

  1. ஹ்ம்ம்... நான் சுகுணாவின் அந்த பதிவிலேயே எதாவது முரண் இருக்கிறதா என்று தேடிக்கொண்டிருந்தேன்... ட்விட்டரில் கருத்துரைப்பதால் வரும் விளைவோ? மேலும் அந்த பதிவை மட்டுமே கணக்கில் கொண்டதால் நான் கண்டடைந்தது ஒரு மதத்தின் மீதான விமர்சனத்தை வைக்கும் போது ஏன் மற்றொரு மதத்தோடு அதை ஒப்பீடு செய்ய வேண்டும்? அதனால் சில வாதங்கள் நீர்த்துவிடுகின்றது...

    ReplyDelete
  2. நான் அந்த பதிவில் பத்வாவையோ இஸ்லாமிய ஆணாதிக்கத்தையே ஆதரிக்கவில்லையே?

    ReplyDelete
  3. ஆதரித்ததாக நான் மேலே எங்காவது சொல்லியிருக்கிறேனா?

    ReplyDelete
  4. /முக்கியமில்லாத பிரச்சனைகள் குறித்து -குறிப்பாக மத அடக்குமுறைகளுக்கு ஆதரவாக வாவது குறைந்த பட்சமாக - கருத்து சொல்லாமலாவது இவர்கள் இருக்கும் வரை பிரச்சனையில்லை. அ.மார்க்ஸ் போன்றவர்கள் இஸ்லாமிய மத அடிப்படைவாதத்திற்கு தார்மீக நியாயங்களை கட்டமைத்து வழங்குவார். ராஜன்குறை போன்றவர்கள் அதற்கு நடைமுறை அரசியல் என்று ஒரு நியாயம் வழங்குவார்கள். அ.மார்க்ஸை அப்படியே நகலெடுக்கும் நடையிலேயே சுகுணாவின் பதிவும் எழுதப்பட்டுள்ளது/

    /தீவிர பிரச்சனைகளில் மத அடிப்படைவாதத்திற்கு வக்கலத்தாக இவர்கள் பேசுவதுதான் பிரச்சனை, /

    இந்த வரிகள் அப்படித்தானே சொல்கின்றன? இருந்தபோதிலும் ‘மார்க்சிய திருவுருக்கள், மார்க்சிய கருத்தியல்களை பாலியல் சொல்லாடல்களுடன் கலந்த கவிதை என்று ஒன்றை சமைப்பதற்கான உரிமை என்பது நானும் ஆதரிக்கும் ஒரு விஷயம். ஆனல் இது நாம் முதன்மையாக கரிசனம் கொள்வதற்கான ஆதார உரிமை அல்ல. மாறாக பொருளீட்டுவது என்பது ஆதார உரிமை. தன் இருப்பையும், சுதந்திரத்தையும் குறைந்த பட்ச அளவில் தக்கவைக்க தேவையான அடிப்படை உரிமை’ என்று நீங்கள் சொல்வதை ஏற்றுக்கொள்கிறேன்.

    ReplyDelete
  5. சுகுணா, இப்போது பதில் எழுத நேரமில்லாத நிலை. திங்கள் திரும்ப பெங்களூர் வந்த பிறகு, அடுத்த வாரம் உங்களுக்கு பதில் விரிவாக அளிக்கிறேன்.

    ReplyDelete
  6. அன்புள்ள சுகுணா, ஒரு வார காலத்தில் உங்களுக்கான பதிலையும், தொடர்பான மற்ற பிரச்சனைகள் குறித்தும் ஒரு பதிவாக எழுதவிருக்கிறேன். நன்றி!

    ReplyDelete