Monday, January 5, 2015

'பாப்பான்'னு திட்டலாமா?



என்னிடம் @AmmU_MaanU  கேட்டதற்கு சுருக்கமான பதில்: விரிவான எல்லா பிரச்சனைகளையும் தொட்டு பதில் வேண்டுமெனில் விரிவாக நான் எழுதத் தொடங்கும் காலம் வரை காத்திருக்க வேண்டும்.

//சு.சாமி ஒரு பயஸ்ட் உளறுவாயர் என்பது ஊர் அறிந்த விஷயம். ̀பாப்பான்' என்று திட்டுவது பற்றி உங்கள் கருத்தென்ன? ஓக்கேயா, தவறா ?//

முதலில் சுப்பிரமணியசாமி உளரல்கள் பற்றி நான் எதுவும் கருத்து இப்போது சொல்லவில்லை; பத்ரி திருவாய் மலர்ந்தருளியது பற்றி மட்டுமே சொன்னேன். என் குட்டி ஃபேஸ்புக் பதிவை எதிர்கொள்ள விரும்பினால் அது பற்றிதான் நீங்கள் பேசவேண்டும். சு.சாமி சொன்னதை முன்வைத்து பத்ரி சொன்னதும் உளரல் என்கிறீர்களா?

அடுத்து பாப்பான் என்று திட்டலாமா என்பது முக்கியமான கேள்வி. திட்டுவது என்பதே பிரச்சனைக்குரியதுதான்; ஆனால் திட்டுவது என்பதை பலரும் பல நேரங்களில் செய்கிறோம். குறிப்பாக எழுதும்போது கட்டுரைகளில், விவாதங்களில், எதிர்வினைகளில் திட்டுவது மிகவும் பிரச்சனைக்குரியது. ஆனால் எந்த கட்டத்திலும் யாரையும் திட்டவே திட்டியிராத ஒரு எழுத்தாளரை சொல்வது கடினமாயிருக்கிறது. திட்டுவது என்று வந்தபின் திட்டும் காரணங்கள் அது சார்ந்த மனநிலை பொறுத்தது வசைச்சொல். திருடன், அயோக்கியன் என்பதுபோல போல பாப்பன் என்பது ஒரு வசைதான். திட்டுவதன் பின்னுள்ள கருத்து நிலைபாடு திட்டும் வார்த்தைகளை விட முக்கியம். திட்டுதல் என்ற நிலையில் இல்லாமலே கூட ஊழல் செய்பவனை திருடன் என்றும், அநியாயம் செய்தவனை அயோக்கியன் என்றும் சொல்வதில்லையா! அதே போல பார்பனிய கருத்துக்களை முன்வைப்பவரை பாப்பான் என்று ஒருவர் சொல்லக்கூடடும். நான் பார்ப்பனியம் என்று ஒன்று கருத்தாக்கமாகவும், சமூக ஒழுங்காகவும், நடைமுறையாகவும், அரசியலாகவும் (இன்றும்) இருக்கிறது, அது (மற்ற எத்தனையோ விஷயங்களை போல) மனித குல விரோதமானது என்று நினைக்கிறேன். இந்த நிலைபாடுதான் முக்கியமே ஒழிய திட்டுவது என்பது எல்லோரையும் போல அந்தந்த சமய சந்தர்ப்பங்களை சார்ந்தது. 

மற்றபடி வாதங்களை எதிர்கொள்ள முடியாமல் சந்தர்ப்பவாதமாக ̀பாப்பான்' என்பதையும், விவாதத்தில் தர்க்க அடிபட்ட கோபத்தில் வாய்க்கு வந்தபடி கண்டதையும் பார்பனியம் என்பதையும் எதிர்த்து நான் பலமுறை கருத்து சொல்லியுள்ளேன். MSS பாண்டியனுக்கு அஞ்சலியாக எழுதிய பதிவிலும் இதை சொல்லியுள்ளேன். 

இவை இப்படியிருக்க இந்த சயம சந்தர்ப்பங்களுக்கு ஏற்ப பாப்பான் என்று முத்திரை குத்துவதை வேறு வழிகளில் ஜெயமோகன், அரவிந்தன் நீலகண்டன் போன்றவர்களும் கூட செய்துள்ளனர். அது என்னமோ அந்த நேரத்தில் உங்களை போன்றவர்கள் இப்படி கருத்துக்கு எதிர்வினையாக ஜாதி பற்றி பேசலாமா என்று வருவதில்லை. சமீபத்தில் கூட ராஜன்குறையை அப்படி (அச்சுபிச்சுத்தனமாக) தாக்கிவிட்டு அவர் வாதங்களை எதிர்கொள்ளாமல் ஜெயமோகன் அழுகுணி ஆட்டம் ஆடவில்லையா? ஆகையால் இதெல்லாம் அரசியல் விவாதத்தில் சாதாரணம் என்று சொல்லி இப்போதைக்கு நிறுத்திக் கொள்கிறேன்.

1 comment: