எம்.எஸ்.எஸ் பாண்டியன் இறந்த பிறகு அவரை பற்றி நிறைய எழுதப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை நடந்த கூட்டத்தில் விடுதலை ராஜேந்திரன் குறிப்பிட்டது போல், இவ்வளவுதூரம் கவனிக்கப்படுவோம் என்று அறிந்திருந்தால் அவர் இன்னும் கொஞ்ச காலம் வாழ்ந்திருக்க க் கூடும். அறிவுலகில் தனித்துவமான பங்களிப்பை கொண்டவர் இறந்த பிறகாவது சரியான வகையில் கொண்டாடப்படுவது மகிழ்சிக்குரியதுதான்.
திராவிட மற்றும் விளிம்புநிலை அரசியல் சார்ந்து பாண்டியனின் பங்களிப்பை பற்றி பலரும் சொல்லியாகிவிட்டது; அவை அனைத்தும் அவரின் தனித்துவமான அறிவு சார்ந்த பங்களிப்புகள்தான். குறுகிய கால அளவில் பாண்டியனுடம் பழகிய, விவாதித்த வகையில் அவரின் தனித்தன்மையாக ஒரு முக்கிய பண்பை பதிவு செய்ய நினைக்கிறேன். ̀அறிவை ஆயுதமாக்கியவர்' என்று நான் வாசித்த பலவற்றில் ஒருவர் எழுதியிருந்தார். ஆயுதமாக மட்டுமின்றி, கேடயமாகவும் அறிவை மட்டுமின்றி வேறு எதையும் அவர் பயன்படுத்தியதாக தோன்றவில்லை. வேறு மனநிலையில் ஃபேஸ்புக்கில் சில ஒருவரி சில்லறை கமெண்டுகளை அளித்திருந்தாலும், ஒரு அறிவுரீதியான விவாதத்தில் முத்திரை குத்தல்களையோ, குறிப்பாக பதில் சொல்ல முடியாத சிக்கலை சமாளிக்க அடிமடி தாக்குதலை அவர் செய்வதில்லை.
ஒரேவகை இலக்கை கொண்ட எதிர்ப்பு அரசியலை முன்வைக்கும் இருவர், ஒருவரை ஒருவர் மிக மோசமான அவதூறுகளுடன் திட்டிக்கொள்வதை -குறிப்பாக இணையம் சார்ந்த கருத்து பரவலாக்கம் நிகழ்ந்த பின்- சர்வ சாதாரணமாக அனுதினம் காண்கிறோம். இதை முதிராத இளைஞர்கள் மட்டும் செய்யவில்லை; பண்பட்டுவிட்ட முதிர்ந்த அரசியல் எழுத்தாளர்களும், வெகு காலமாக தான் சார்ந்த மாற்று அரசியலையும் தன்னையும் ஆதரித்த ஒருவரை, தனக்கு உவப்பில்லாத மாற்று நிலைபாடு காரணமாக, மிக எளிதாக பார்ப்னிய இந்துத்வ முத்திரை குத்தல் செய்து எதிர்கொள்வதை காணலாம். இதற்கு விதிவிலக்கான அரசியல் எழுத்தாளர் ஒருவரை என்னால் உதாரணிக்க முடியவில்லை.
தனது வாய்ப்பாடுகளில் அடங்காத கருத்தைச் சொல்பவர், உள்ளே உறைந்திருக்கும் இந்துத்வ அல்லது பார்பனிய மனோபாவத்தால்தான் அதை சொல்வதாக சொல்லிவிட்டு தாண்டி செல்வது மிக எளிது; இவ்வாறு சுயலாபத்திற்காக மட்டும் சொல்வதில்லை; குதிரை தட்டை பார்வையில் தென்படுவதை கொண்டு அதை உண்மையாக நம்பி சொல்பவர்களே பலர். ̀இன்னொரு பூனை வெளிவந்துவிட்டது' என்கிற பத்து பைசா பெறாத கண்டுபிடிப்பின் மூலம் ஒப்புக்கு ஒரு பூனைப்படையை கூட உருவாக்க முடியாது. மாறாக தனக்கு உவபில்லாத நட்புத்தரப்பை (அல்லது எதிர்தரப்பை) வேறுபட்ட நிலைபாடாக அங்கீகரித்து எதிர்கொள்வதே அறிவுச் செயல்பாடாக இருக்கமுடியும். நான் அவதானித்த அளவில் தமிழ் சூழலில் பலருக்கு இல்லாத இந்த அறிவு போர்முறை பாண்டியனிடம் உள்ளதாக கருதுகிறேன்.
பார்பனியம், இந்துத்வம் என்ற சொல்லாடல்களை முத்திரைகளை பயன்படுத்தக்கூடாது என்று நான் சொல்லவரவில்லை. பார்ப்னியம், இந்துத்வம் இன்னும் குறிப்பாக முற்போக்கு நிறம் காட்டும் பார்பனியம் மற்றும் இந்துத்வம் என்பது நம் சூழலின் நிலவும் ஒரு கருத்தியல். அதை வெளிப்படையாக சொல்வதில் எந்த தவறும் இல்லை என்பது மட்டுமல்ல, அது மிக அவசியமான அடையாளம் காணும் வேலையும் கூட. எதிர்கொள்ளும் வசதிக்காகவும், தர்க்கம் தொலைந்த தருணங்களில் வசை மருந்தாக கொள்வதை பற்றியும் மட்டுமே இங்கே குறிப்பிடுகிறேன். கட்டுரையின் போக்கிலோ, தனித்த ஒரு தாக்குதலிலோ சிலவற்றை பாண்டியன் சொல்லியிருக்கலாம்; ஆனால் ஒரு விவாதத்தின் போக்கில் இதற்கு மாறான அணுகுமுறையை பாண்டியன் கொண்டதாக நானறிந்த வரையில் மனப்பதிவு கொண்டிருக்கிறேன். நான் அவரிடம் கற்று பின்பற்ற முயலும் பாடமாகவும் இதை கொள்கிறேன். அவருக்கு என் அஞ்சலிகள்.
No comments:
Post a Comment