Saturday, November 6, 2010

KOMA

இந்த விழாவில் பார்த்த சிறந்த படங்களில் ஒன்று இது. மற்ற படங்கள் பார்த்த கண்ணயற்சிக்கு பிறகு, கடைசியாக பார்த்ததால், நிறைவாக படத்தை உள்வாங்கினேன் என்று சொல்லமுடியாது. வாய்ப்பு கிடைத்தால், தனியாக உட்கார்ந்து காட்சி காட்சியாக மீண்டும் பார்க்க விரும்புகிறேன்.

கதையை தெரிந்து கொள்வது (இன்னும் சரியாக சொன்னால் படத்தை பார்ப்பது) விமர்சனத்தை வாசிக்க அவசியம்; ஒருவகையில் சரியாக கதையை சொல்வது கூட இந்த படத்தை பொறுத்தவரை ஒரு விமர்சனம்தான். அழகான, அமைதியான, ஓவியம் போன்று காட்சியளிக்கும் நீர்ப்பரப்பின் கீழ் ஓடும், அமளி நீரோட்டம் போன்ற வாழ்க்கை பற்றியது கதை.

ஹன்ஸ் ஒரு டாக்சி ஓட்டுனர். 'Taxi' என்று போட்ட காரில் அலைவதை தவிர, வேறு வழியில் இந்த தகவலை படத்தில் அறிய வாய்ப்பில்லை. படம் முழுவதும் ஒரு சவாரி கூட ஏற்றுவதில்லை. வெளிப்பார்வைக்கு ஹன்ஸின் வாழ்க்கை எல்லா ஐரோப்பிய நடுத்தர வாழ்க்கை போலவே அழகாகவும், அமைதியாகவும் இருக்கிறது. ஒரு டாக்ஸி ஓட்டுனரும் வாழக்கூடிய வளமான ஐரோப்பிய வாழ்க்கை; அன்பு கொண்ட, குடும்ப பிடிப்புள்ள மனைவி; ஹன்ஸின் 50வது பிறந்த நாள் விழாவிற்கான ஏற்பாடுகளை அவன் மனைவி மும்முரமாக செய்வதில் படம் தொடங்குகிறது. ஹன்ஸின் பையன் சில ஒத்தாசைகளை அம்மாவிற்கு அரைகுறையாக செய்கிறான். நண்பன் ரிச்சியை பார்க்க போவதிலேயே அவன் ஆர்வம் இருக்கிறது. அப்பாவின் 50ஆவது பிறந்த நாள் அன்றும், வீட்டில் இல்லாமல் ரிச்சியை பார்க்க போவதை அம்மா கடிந்து கொள்கிறாள்.

அவனும், ரிச்சியும் அமர்ந்து மடிக்கணிணியில் இணைய போர்னோ தளங்களுக்கு சென்று பார்கின்றனர். பாத்ரூமில் ஒரு வயதான பெண் ஆடையை களைந்து நிர்வாணமாகிறாள்; குளிக்கும் தொட்டியில் அவள் இறங்க, சாடிஸ பாணியில்அடித்து துன்புறுத்தும், Sado-Masochist வீடியோ காட்சிகள், திரையில் வந்து போகிறது. இப்போதும், பின்னால் வரும் காட்சிகளிலும், அடிக்கும் நபரின் முகம் காட்டப்படுவதில்லை.

பிறந்த நாள் விழா மெள்ள சூடு பிடிக்கிறது. ஐரோப்பிய கொண்டாட்ட கலாச்சாரத்தை காண்பிக்கும் ஒரு பார்ட்டி; ஜோக் அடிக்கிறார்கள். ஒருவர் அகார்டியன் வாசித்தபடியே வருகிறார்; நாடக பாணியில் பாடியபடி வந்து கலந்து கொள்கிறார்; சிரிக்கிறார்கள். பானங்கள், பேச்சுக்கள் என்று விருந்து மும்முரமாக நடக்க, விருந்தின் முக்கிய நபர் மட்டும் வரவில்லை.

ஹன்ஸ் விருந்தை புறக்கணித்து, டாக்சியை நதிக்கரையில் நிறுத்தி, புகைத்து கொண்டே இருக்கிறான். எங்கோ காட்டுக்குள் போகிறான்; போய்கொண்டே இருக்கிறான். மனைவி அவனை அழைக்க மீண்டும், மீண்டும் முயற்சித்தும் தொடர்பு கிடைப்பதில்லை. அவளுக்கு மிகவும் தர்ம சங்கடமாகிறது.

ஐரோப்பிய பண்பின்படி, யாரும் தவறாக எடுத்து கொண்டதாக வெளி காட்டிக் கொள்ளாமல் அவளை தேற்றுகின்றனர். தங்கள் சம்பாஷணைகளை இயல்பாக தொடர்கின்றனர். 'நிச்சயம் வந்துவிடுவான்' என்கிறார்கள். வெகு நேரமாகி, ஹன்ஸ் வரப்போவதில்லை என்று உறுதியான பின், மனைவி ஹன்சிற்கு அலைபேசியில் செய்தியை பதிவு செய்கிறாள். எல்லோரும் அலைபேசியை நோக்கி 'ஹாப்பி பெர்த்டே டூ யூ' பாடுகிறார்கள். கேக் விநியோகம் நடக்கிறது.

இடையில் ஹன்சின் மகனும் விருந்தில் கலந்து கொள்கிறார்கள். ரிச்சி அந்த சாடோ மசாக்கிச போர்னோ சிடியை அளிக்க,'ஓ.. தட் பிட்ச்' என்று வாங்கி கொள்கிறான். விருந்தின் போக்கில், அந்த போர்னோ சிடியை மறதியாக மேஜையில் வைக்கிறான். ஹன்சின் மனைவி, அதை ஹன்சிற்கான மகனின் பிறந்த நாள் பரிசு என்று தவறாக எண்ணி, வண்ண தாளில் சுற்றி மற்ற பரிசுகளுடன் வைக்கிறாள். ஹன்ஸ் காட்டில் அலைந்து, மீண்டும் நதிக்கரையில் அமர்ந்து புகைத்து தனக்குள் சிந்தித்தபடி, பதிவான பிறந்த நாள் செய்தியை பிறகு நிதானமாக கேட்கிறான். எல்லாம் முடிந்து இரவில் வீடு திரும்புகிறான்.

வீடு விருந்து முடிந்த குழப்பத்தில் இருக்கிறது. ஈக்கள் மொய்க்கும் கேக்கை எடுத்து பாதி சாப்பிடுகிறான்; மீதமிருக்கும் வொயினை குடிக்கிறான்; குளிக்கிறான்; பியர் சாப்பிடுகிறான்; பரிசு பொருட்களை ஒவ்வொன்றாக பார்க்கிறான். மகன் பெயர்போட்டு வைக்கப்பட்டிருந்த பலான சிடியையும் பார்கிறான். சாடோ மஸாக்கிஸ காட்சிகள் திரையில் வந்து போகின்றன. சோபாவில் தூங்கி கொண்டிருக்கும் மகனையே பார்த்துக் கொண்டிருக்கிறான். அவன் விழித்து பார்த்ததும், கன்னத்தில் அறைகிறான். மகன் அதே போல அப்பாவை திருப்பி அறைந்துவிட்டு போகிறான்.

ஹன்ஸ் தனது அறைக்கு சென்று, படத்தில் ஆரம்ப காட்சி ஒன்றில் செய்வது போல், மேல் தளத்தில் துளை போடுகிறான். இந்த முறை தூக்கு கயிறு போல நாடாவை வைத்து செய்து, கழுத்தை சுற்றி நிதானமாக அளவெடுக்கிறான். ஆனால் அவன் தற்கொலை செய்து கொள்வதில்லை. மறுநாள் டாக்சியை எங்கோ நகருக்கு வெளியே நிறுத்தி புகைக்கிறான். கார் கண்ணாடியில் தாடியை மழிக்கிறான். பின் பாலியல் தொழிலாளி ஒருத்தியை தேடி போகிறான்.

பாலியல் தொழிலாளியிடம் 'வேறு எதுவும் தேவையில்லை, சும்மா பேசிக்கொண்டிருந்தால் போதும்' என்கிறான். பொதுவாக வசனமே இல்லாமல் காட்சிகளாக கடந்து வந்த படத்தில், நீண்ட வசனம் கொண்ட காட்சி இது. ஹன்ஸ் ஓரிரு வார்த்தைகளில் மட்டும் விசாரிக்க, அந்த பாலியல் தொழிலாளி மட்டும், ஹன்ஸ் விசாரித்த ஜெர்ட்ரூட் என்ற இன்னொரு பாலியல் தொழிலாளி பற்றி, நீளமாக உணர்ச்சிகளுடன் பேசிக் கொண்டிருக்கிறாள். இந்த காட்சிகளில் பார்ப்பவர் கதையில் ஊன்றி, புத்திசாலித்தனமாக, படத்தில் இதுவரை காட்டப்பட்டு வந்த சாடோ மசாக்கிச காட்சிகளில் நடித்த பெண்ணை பற்றித்தான் அவள் பேசுகிறாள் என்பதையும், அந்த காட்சியில் நடித்தவன் ஹன்ஸ்தான் என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். படத்தில் நேரடியாக சொல்லப்படாத இந்த தகவலை புரிந்து கொள்ளவில்லையெனில் மொத்த படமும் சிக்கலாகிவிடும்.

ஸாடோ மசாக்கிச படக்காட்சிகளுக்காக மாறி மாறி கம்பால் அடிக்கப்பட்ட அந்த பெண்மணியின் இப்போதய நிலையை பற்றி அவள் விவரிக்கிறாள். கிட்டதட்ட ஒரு பிணம் போல, சுற்றி நடக்கும் எதை பற்றிய சுயநினைவும் இல்லாமல், நெருங்கிய தோழியான தன்னைகூட அடையாளம் தெரியாமல் இருப்பதை சொல்கிறாள். இந்த நிலைமைக்கு அவளை கொண்டு வந்த அந்த மனிதனை கண்டபடி திட்டுகிறாள். இப்படி எப்படி நடக்கிறது என்று தன்னால் புரிந்து கொள்ள முடியாததை சொல்கிறாள்.

அந்த நீண்ட காட்சிக்கு பிறகு, ஜெர்ட்ரூட் இருக்கும் மருத்துவமனைக்கு ஹன்ஸ் செல்கிறான். சக்கர நாற்காலியில், காற்றாட ஒரு பணியாளனால் வெளியில் அழைத்து வரப்பட்டிருந்த அவளை பார்கிறான். பின்னணி இசையற்ற இந்த நீண்ட காட்சிகளில் அவன் உணர்ச்சி எதையும் வெளிப்படையாக காட்டவில்லை. அடுத்த காட்சியில் ஜெர்ட்ரூடுடன் ஒரு அபார்ட்மெண்டில் ஹன்ஸ் இருக்கிறான். அவளை அவன் தன்னுடன் அழைத்து வந்துவிட்டது தெரிகிறது. எப்படி அழைத்து வந்தான் என்று சொல்லப் படவில்லை. உயிர் மட்டும் இருக்கும் நடைபிணம் போன்ற அவளுக்கு, ஹன்ஸ் பல் தேய்த்துவிட்டு, குளிப்பாட்டி, சாப்பாடு ஊட்டி எல்லாம் செய்துவிடுகிறான். நிர்வாணமாக படுக்கையில் இருக்கும் அவளுடன், ஹன்ஸும் நிர்வாணமாகி உறவு கொள்கிறான். மிக நீண்டு பல நிமிடங்களுக்கு, பின்னணி இசையும், பேச்சும் இல்லாமல் காண்பிக்கப்படும் காட்சி. அவசரம் காட்டாமல் மிக மென்மையாக அவளை கையாண்டு, அவள் மேல் படர்கிறான். ஒரு கட்டத்தில் அவள் கைகளும் செயல்பட்டு, அவனை அணைத்துக் கொள்கிறது. படம் முடிகிறது.

ஐரோப்பாவில் வாழ நேர்ந்தவர்கள், அங்குள்ள வாழ்க்கைமுறையின் ஒரு குறிப்பிட்ட தன்மையை அவதானித்திருக்கலாம். மேல் பார்வைக்கு எல்லாம் ஒழுங்குடன் காட்சியளிக்கும்; சற்று விலக்கி, உள் நுழைந்து பார்த்தால், நோய்காரணியாக எதையாவது காணமுடியும். மிக வடிவாக பேப்பர்கள் ஒட்டபட்ட ஒரு அறையில், ஒரு பேப்பரை விலக்கி, பின்னால் உள்ள சுவரில் நீங்கள் பூஞ்சக் காளானை காண்பது போன்றது. ஐரோப்பிய நவீன வாழ்க்கையில், பூஞ்சம் பிடித்த சுவரை சுத்தப்படுத்துவதை விட, ஒரு அழகான பேப்பரை ஒட்டி அதை எளிதாக மறைப்பதை விரும்புவார்கள்.

ஹன்ஸ் தன்னை சுற்றி உள்ள மக்களால் மதிக்கப்படும் ஒரு நடுத்தர குடும்பத்தினன். ஐம்பதாவது பிறந்த நாளுக்கு அவனை வாழ்த்த, சுற்றி இருப்பவர்கள் திரண்டு வருகிறார்கள். அவனை நேசிக்கும், அவன் அருகாமையை விரும்பும் அமைதியான மனைவி. ஐரோப்பிய வாழ்க்கையின் மேலோட்டமான அழகையும், பண்பையும், மகிழ்ச்சியையும் படத்தின் ஆரம்ப காட்சிகளில் வரும் பிறந்த நாள் விருந்து காட்டுகிறது. அந்த ஐரோப்பிய வாழ்வின் பின்னால் இருக்கும் பிரச்சனை ஹன்ஸினுடையது மட்டுமல்ல.

மிக மோசமாக பாலியல் தொழிலாளியை, கேமெரா முன்னால் சாடிச முறையில் அடித்து துன்புறுத்தும் ஹன்ஸ், சமூகத்தில் இருந்து எந்த விதத்திலும் பிறழ்ந்தவனாக படத்தில் காட்டப்படவில்லை. அந்த பிறந்த நாள் விருந்தில் வரும் அனைவரையும் போல இயல்பான ஒரு சமூக உறுப்பினன். ஹன்ஸை எந்த இடத்திலும் கொடூரமானவனாக, அவனிடம் அதீத கொடூரம் வெளிபடுவதற்கான அறுகுறியாக எதுவும் காட்டப்படவில்லை. அதே நேரம் அவன் எந்த இடத்திலும், ஒரு பெண்ணை நடைபிணமாக மாற்றியதற்கு, தான் துன்புறும் குற்ற உணர்சியையும் படத்தில் வெளிகாட்டவில்லை; எல்லாவற்றையும் அமைதியாகவே செய்கிறான். பாதிக்கப்பட்ட அந்த பெண்ணும் ஒப்புகொண்டே அந்த நிஜ காட்சிகளில் நடிக்கிறாள். ஒரு மசாக்கிஸ்டாக தன் மீதான அடிகளை அவள் இன்பமாக அனுபவித்ததாகவே, அவள் தோழியான அந்த பாலியல் தொழிலாளியும் சொல்கிறாள். ஹன்ஸ் அந்த பலான காட்சிகளில் நடித்ததன் பின்னணி எதுவும் படத்தில் சொல்லப்படவில்லை.

மகன் எதிர்கால ஹன்சாக மாறக்கூடிய சாத்தியத்தை அறிந்தபின், அவன் தன்னால் ரணமாக்கப்பட்டு, இன்பம் துய்த்து, நடைபிணமாக்கப் பட்டவளை தேடி செல்கிறான். நிதானமாக தற்கொலைக்கு உத்திரத்தில் துளை போடுபவன், எப்போது அந்த முடிவை மாற்றிகொள்கிறான் என்பது தெளிவாக இல்லை.

ஜெர்ட்ரூடை அவன் கவனித்து கொள்ளும் காட்சிகள் கவித்துவமானவை. அவள் உதட்டோரத்தில் ஒட்டியிருப்பதை விரலால் எடுத்து உண்கிறான். உறவு கொள்ளும் போது, உறவுக்கான வேகம் எதுவுமின்றி மிக மெதுவாக படர்கிறான். அவள் அவனை அணைத்து கொள்வது, அவனை அடையாளம் கண்டு கொண்டதன் அறிகுறியாக தெரிகிறது. சாடிஸ இன்பத்தின் வன்மையுடன் உறவு கொண்டவன், அதே பெண்ணுடன் அதற்கு நேர்மாறான மென்மையுடன் படர்கிறான். இந்த மாற்றத்திற்கான சம்பவங்கள், மனமாற்றத்திற்கான தர்க்கம், மனம் மாறிய வாழ்க்கை திருப்பம் என்று எதுவும் படத்தில் முன்வைக்கப்படவில்லை. இரண்டு செய்கைகளும் ஒரே மனிதன் இயல்பாக அமைதியாக வெளிபடுத்துவதாகவே எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது. ஐரோப்பிய சமூகத்தின் முரணான இரண்டு முகங்களை அது குறிப்பதாக படுகிறது.

படத்தில் பின்னணி இசை கிட்டதட்ட கிடையாது அல்லது முழுவதும் கிடையாது என்று நினைக்கிறேன். காட்டில் ஹன்ஸ் செல்லும்போது, மருத்துவமனை வளாகத்தில் ஜெர்ட்ரூடை சந்திக்கும் நீண்ட காட்சியில், உறவு கொள்ளும் இறுதி காட்சியில்.. என்று உணர்ச்சி கொந்தளிப்பாக இருக்க வேண்டிய பல இடங்களில் பின்னணி இசை நம் வாசிப்பில் உட்புகுவது இல்லை. எந்த வித உணர்ச்சியும், காட்சி யதார்த்தத்தை மீறி நம்மிடம் தூண்டப்படுவதில்லை. அந்த யதார்த்தம் சில இந்திய கலைப்படங்கள் போல் மொண்ணை யதார்த்தமாக இல்லை என்பதுதான் கவனிக்க வேண்டியது.

இந்த படத்தை பார்க்கும் போது நினைவுக்கு வந்த Blue Velvet திரைப்படம் பற்றி பிறகு எழுத வேண்டும்.

5 comments:

  1. படத்தை விட அதை காம்ப்லக்சா நீங்க பார்க்குறீங்களோன்னு சந்தேகம் வரும் அளவுக்கு இருக்கு.

    ஐரோப்பிய நவீன வாழ்க்கை முறையை பற்றிய உங்கள் அவதானிப்பை குழப்பத்துடன் வாசிக்கிறேன்.

    ReplyDelete
  2. அன்புள்ள பிரகாஷ், தெளிவை விட குழப்பம் நல்லது.

    ReplyDelete
  3. ஐரோப்பிய நவீன வாழ்க்கையாக மட்டும் குறுக்க முடியாது என்று தோன்றுகிறது. இந்திய இரட்டை வாழ்க்கையையும் (பெண் வணங்கத்தக்கவள்/போகப் பொருள்) இதில் சேர்க்கலாம். ஒரு விதத்தில் (மிகைப்படுத்துகிறேன்) எந்த சமூகத்திலும் இந்த முரண்பாடு தெரிகிறது.

    Blue Velvet: Koma-வை நீங்கள் விமர்சித்த வகையில் Blue Velvet அதன் எதிர். அதன் வன்முறையும், குரூரமும் ரொம்ப practical & abstract (டென்னிஸ் ஹாப்பரினால் அது சாத்தியமாயிற்று). அதுவும், Natural Born Killers-ம் கொஞ்ச நாட்கள் என்னை சங்கடப்படுத்தியது.

    ReplyDelete
  4. //இப்போதும், பின்னால் வரும் காட்சிகளிலும், அடிக்கும் நபரின் முகம் காட்டப்படுவதில்லை.//

    இந்த வரிகளைப் படிக்கும் போது அது ஹன்ஸ் என்றே தோன்றியது. ஒருவேளை பட சித்தரிப்பு அப்படி இல்லாமல் இருக்கலாம். ஐரோப்பிய உள்மனதா அல்லது பொதுப்படையாக மானுடம் முழுவதிலும் உள்ள சிக்கலா என்பது தெரியவில்லை. பொதுவாக பாலியல் திரிவுணர்ச்சிகளும் - ஏற்ப்பு உணர்ச்சிகளும் (accepted and deviations) தனி வகைப்பாடுகள் அல்ல. மாறாக தொடர்ச்சியே (continuum). காலம்-அனுபவம்-குடும்ப உறவுகள் உறவுகளின் போதாமை இவை அனைத்துமாக செதுக்கும் ஒரு மனிதனின் முழுவடிவத்தை - இறுதியாக அவனே கண்டடையும் ஒரு அறத்தை திரைபப்டம் காட்டுவதாகத் தோன்றுகிறது. படம் பார்க்கும் உணர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறீர்கள். கதையோட்டத்தையே நல்ல விமர்சனமாகவும் தந்திருக்கிறீர்கள். நன்றி. belated தீபாவளி வாழ்த்துக்கள்.
    அநீ

    ReplyDelete
  5. ராஜ் சந்த்ரா,

    எல்லா சமூகங்களிலும் உள்ளிருக்கும் நோய் உண்டு. இந்த படம் ஐரோப்பிய சமூகத்தை பற்றியது அவ்வளவே. இந்திய சமூகத்தின் பிரச்சனைகள் வேறு மாதிரியாக இருக்கும் வேறு படம் அதை வைத்து எடுக்க வேண்டும். Blue velvet முற்றிலும் வேறு தளத்தில் செயல்படுவது என்றாலும், அமேரிக்க சமூகத்தின் இரட்டை நிலை பற்றியது. அந்த இரட்டை நிலையை புரிந்து கொள்ளும் பட நாயகனின் தேடலாகவும் உள்ளது. இந்த படத்துடன் ஒப்பிட்டு பார்க்க கூடியது என்றே நினைக்கிறேன். பிறகு எழுதுகிறேன்.

    அரவிந்தன் நீலகண்டன்,

    தீபாவளை வாழ்த்துக்களுக்கு நன்றி. மேலே ராஜ் சந்திராவிற்கு சொன்னதிலேயே என் கருத்தை சொல்லியிருக்கிறேன். உங்களுக்கும் தாமதமான தீபாவளி வாழ்த்துக்கள். (என் பையன் ஈடுபாட்டுடன் கொண்டாடும் முதல் தீபாவளி. தீபாவளி முடிந்து விட்டது என்பதை ஏற்க மனம் ஒப்பவில்லை. 'இன்னிக்கும் தீபாவளிதான்' என்று சொல்லிவருகிறான்.)

    ReplyDelete